பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / நோய்கள் / வயிறு / குடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

குடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று)

குடற்புழுநோய் (மண் மூலம் பரவும் குடற்புழு நோய்த் தொற்று) பற்றிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

குடற்புழுத் தொற்று நோய் வகையில் அடங்கும் ஒரு உள் வகையே மண் மூலம் பரவும் குடற்புழுநோய்த் (STH) தொற்று ஆகும். மனித மலத்தால் அசுத்தமான மண்ணில் இருக்கும் குடற்புழு மூலம் இத்தொற்று பரவுகிறது.

வெப்ப மண்டல மற்றும் சார் வெப்ப மண்டலப் பகுதியில் இந்நோய் ஒரு மாபெரும் பொது சுகாதாரப் பிரச்சினை ஆகும்.  சமுதாயத்தின் மிகவும் பின் தங்கிய ஏழை மக்களையே இந்நோய் பாதிக்கிறது. உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் அல்லது 24% மக்கள் இத்தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். உலக சுகாதார நிறுவனத்தின் புள்ளி விவரப்படி இந்தியாவில் 1-14 வயதுடைய 24.10 கோடி குழந்தைகள் குடல் ஒட்டுண்ணி புழுத்தொற்று ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. மனித மலத்தில் உள்ள இப்புழுக்களின் முட்டை மூலம் சுகாதாரம் குறைவாக உள்ள ஏழை மக்களுக்கு இத்தொற்று பரவுகிறது.

நோயறிகுறிகள்

 • இலேசாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிகுறிகள் இருப்பதில்லை.
 • கடுமையான தொற்று ஏற்பட்டால், வயிற்றுப்போக்கும் வயிற்றுவலியும், பொதுவான சோர்வும் பலவீனமும், அறிவு மற்றும் உடல் வளர்ச்சியில் குறைபாடும் உண்டாகும்.
 • கொக்கிப் புழுவால் நீடித்த குடல் குருதி இழப்பு ஏற்பட்டு இரத்தச்சோகை உண்டாகும்.

ஊட்ட நிலை பாதிப்பு

 • பாதிப்புக்குள்ளான மக்களின் ஊட்டச்சத்து நிலையை இந்நோய் பல வழிகளில் முடக்குகிறது.
 • ஓம்புயிரின் இரத்தம் உள்ளடங்கிய திசுக்களை புழுக்கள் உண்ணுவதால் இரும்பு மற்றும் புரத இழப்பு ஏற்படுகிறது.
 • ஊட்டச்சத்து குறையுறிஞ்சலை இப்புழுக்கள் அதிகரிக்கின்றன. மேலும், வட்டப்புழுக்கள் குடலில் உயிர்ச்சத்து ஏ-யைப் பெற போட்டி இடுகின்றன.
 • சில மண்ணால் பரவும் குடற்புழுக்கள் பசியின்மையை ஏற்படுத்துவதால் ஊட்டச்சத்து உள்ளெடுப்பு குறைந்து உடல்தகுதி குறைகிறது. டி. டிரைச்சியூரா வகைப் புழு வயிற்றுப்போக்கையும் வயிற்றுக் கடுப்பையும் உண்டாக்கும்.
 • ஊட்டச்சத்து உள்ளெடுப்புக் கோளாறுகளினால் வளர்ச்சியிலும் உடல் மேம்பாட்டிலும் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை இந்நோய் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்

 • மக்களுக்குத் தொற்றும் முக்கியப் புழு இனங்கள் வட்டப்புழு (அஸ்காரிஸ் லும்ப்ரிகாய்ட்ஸ்), சாட்டைப்புழு (டிரைசூரிஸ் டிரைசுய்யுரா) கொக்கிப்புழு (நெகேட்டர் அமெரிக்கானஸ் மற்றும் அன்சைலோஸ்டோமா டியோடெனேல்) ஆகியவையாகும்.
 • பரவல்: பாதிக்கப்பட்ட மக்களின் மலத்தில் இருக்கும் முட்டைகளின் மூலம் நோய் பரவுகிறது. முதிர்ச்சி அடைந்த புழு குடலில் வாழ்ந்து ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான முட்டைகளை உருவாக்குகிறது. போதுமான சுகாதார வசதி இல்லாத இடங்களில் இம்முட்டைகள் மண்ணை அசுத்தமாக்குகின்றன.
 • காய்கறிகளைக் கவனமாகக் கழுவி, தோலகற்றி சமைக்காத போது அவற்றில் இருக்கும் முட்டைகள் உடலுக்குள் செல்லுகின்றன.
 • அசுத்த நீரின் மூலமும் முட்டைகள் உடலுள் புகுகின்றன.
 • மண்ணில் விளையாடும் குழந்தைகள் தங்கள் கைகளைக் கழுவாமல் வாயில் வைக்கும் போதும் முட்டைகள் குடலுக்குள் செல்லலாம்.
 • மேலும், கொக்கிப்புழுவின் முட்டைகள் மண்ணில் பொரித்து வெளிவரும் நுண்புழுக்கள் தோலுக்குள் துளைத்துச் செல்லும் ஒரு வடிவமாக முதிர்ச்சி அடைகின்றன. அசுத்த மண்ணில் வெறுங்காலுடன் நடந்து செல்லும் மக்களுக்கு இவ்விதமாகக் கொக்கிப்புழு தொற்று ஏற்படுகிறது.
 • மனிதருக்கு மனிதரோ அல்லது மலத்தின் மூலமோ நேரடிப் பரவல் இல்லை. ஏனெனில் மலத்தின் வழியாக வெளியேறும் முட்டைகள் தொற்று ஏற்படுத்தும் வலிமையைப் பெற மண்ணில் மூன்று வாரங்கள் முதிர்ச்சி அடைய வேண்டும்.

நோய்கண்டறிதல்

 • மலத்தை நுண்ணோக்கி மூலம் சோதிக்கும் போது முட்டைகளின் இருப்பை வைத்து மண் மூலம் பரவும் குடற்புழு நோய் கண்டறியப்படுகிறது.
 • வளர்ந்துவரும் நாடுகளில் தொற்று ஏற்படும் ஆபத்துள்ள குழுக்களுக்கு மலப் பரிசோதனை இன்றியே சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தடுப்பு சிகிச்சை எனப்படுகிறது.
 • மலத்தின் வழியாக அல்லது இருமும் போது புழு வெளியேறுவதைக் கொண்டு சிலர் தொற்று இருப்பதைக் கவனிக்கிறார்கள். இவ்வாறு நிகழ்ந்தால் புழு மாதிரியை சுகாதார நிலையத்துக்குக் கண்டறிதலுக்காகக் கொண்டு வர வேண்டும்.

நோய்மேலாண்மை

குடற்புழுவை வெளியேற்றும் மருந்துகள் கொண்டு இந்நோய்க்கு மருத்துவம் அளிக்கப்படுகிறது.

ஓரிட நோய் உள்ள இடத்தில் உள்ள நோய் ஆபத்துடைய மக்களுக்கு தனிநபர் கண்டறிதல் இல்லாமலேயே புழு அகற்றும் மருந்து கொடுக்குமாறு உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது. குடற்புழு நோய் இருக்கும் சமுதாயங்களில், 20% நோய் இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையும், 50% மேல் இருந்தால் இருமுறையும் சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்புமுறை

 • ஓரிட நோய் பரவலாக உள்ள இடங்களில் வாழும் மக்களுக்கு முறையாக மருத்துவம் அளித்து நோயை தடுத்து நோயிருப்பைக் கட்டுப்படுத்துவதே மண் மூலம் பரவும் குடற்புழு நோயைக் கட்டுப்படுத்தும் உத்தியாகும். நோய் ஆபத்தில் இருக்கும் மக்கள் வருமாறு:
 • பள்ளிக்குச் செல்வதற்கு முன்பருவக் குழந்தைகள்;
 • பள்ளிப்பருவக் குழந்தைகள்;
 • குழந்தை பெறும் வயதுப் பெண்கள் (இரண்டாம் மூன்றாம் மும்மாத நிலைக் கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்).
 • மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை மூலமும் தொற்றைக் கட்டுப்படுத்த முடியும். அவற்றில் அடங்குவன:
 • உணவைக் கையாளும் முன் கையை சோப்பு மற்றும் நீரால் கழுவுதல்,  பாதுகாப்பான கலணிகளை அணிதல், உண்ணும் முன் காய்கறிகளையும் பழங்களையும் சுத்தமான நீரால் நன்கு கழுவுதல் ஆகிய ஆரோக்கியம் மற்றும் சுத்தம் பற்றிய சுகாதார நடத்தைகளைக் கற்பித்து ஊக்கப்படுத்துவதன் மூலம் நோய் பரவலைக் குறைக்க முடியும்.
 • மலத்தைச் சுகாதாரமான முறையில் அகற்றுதல்.
 • குழந்தைகள் நல நாட்கள் அல்லது பள்ளி முன்பருவக் குழந்தைகளுக்கான உயிர்ச்சத்து- ஏ அளிக்கும் திட்டம் அல்லது பள்ளி சார் சுகாதாரத் திட்டம் ஆகியவற்றுடன் குடற்புழு நீக்கும் மருந்தளித்தலை இணைத்தல்.
 • இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தேசிய புழுநீக்கும் தினத்தை 12 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இது அனைத்து மாநிலம்/யூ.பிரதேசங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
 • 1-19 வயதுக்குள்ளான அனைத்து முன்பள்ளி மற்றும் பள்ளிப் பருவ குழந்தைகளுக்கும் புழுநீக்கம் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். அரசு/உதவி பெறும் மற்றும் அங்கன்வாடி மையங்கள் மூலம் இது நிறைவேற்றப்படும். இதன் மூலம் பொதுவான ஆரோக்கியம், ஊட்டச்சத்து நிலை, கல்வி வசதி மற்றும் வாழ்க்கைத் தரம் மேம்படுத்தப்படும்.

ஆதாரம் : தேசிய சுகாதார இணையம்

2.94915254237
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top