অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

நாடாப்புழு நோய்

நாடாப்புழு நோய்

அறிமுகம்

வளர்ச்சி அடைந்த நாடாப்புழுக்களால் ஏற்படும் குடல் தொற்றே நாடாப்புழு நோய். மனிதர்களுக்கு இருவகை நாடாப்புழு வகையால் தொற்று உண்டாகலாம்: தேனியா சோலியம் (பன்றி இறைச்சி நாடாப்புழு) மற்றும் தேனியா சாஜினேட்டா (மாட்டிறைச்சி நாடாப்புழு). மாட்டிறைச்சி நாடாப்புழு மானிட உடல்நலத்தில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. ஆனால் பன்றியிறைச்சி, நரம்புள் நாடாப்புழு இடைப்பருவம் என்னும் நாடாப்புழு நோயின் கடுமையான வகையை உருவாக்குகிறது.

நரம்புள் நாடாப்புழு இடைப்பருவம் வலிப்பிற்கான ஒரு பொதுக் காரணம்; உலக அளவில் இது எளிதாகத் தடுக்கக்கூடிய காரணமும் ஆகும். இடம்சார் நோய் நாடுகளில் நிகழும் வலிப்பின் 30 சதவிகிதமும் உலக அளவிலான வலிப்பில் 3 சதவிகிதமும் நரம்புள் நாடாப்புழு இடைப்பருவ நோயால் உண்டாகிறது என உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரம் கூறுகிறது.

நாடாப்புழு நோய்/உட்தசை நாடாப்புழு, இடைப்பருவ நோய் வளரும் நாடுகளான ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் லத்தின் அமெரிக்க நாட்டு மக்களைத் தாக்குகிறது. மனிதக் கழிவுகள் படும் இடத்தில் வளர்க்கப்படும் கால்நடை மற்றும் பன்றிகள் வாழும் இடங்களில் நாடாப்புழு நோய் மற்றும் உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய்கள் ஏற்படுகின்றன. ஆனால் பன்றியிறைச்சி நாடாப்புழு ஒரு பொது சுகாதாரப் பிரச்சினை இல்லாமல் இருந்தாலும் வெளியிடங்களில் இருந்து ஏற்றுமதிப் பொருளோடு வரும் இவ்வகை நாடாப்புழுவும் நோய் நேர்வுகளை உருவாக்கக் கூடும்.

இந்நோய் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் பரவலாகக் காணப்பட்டாலும், மாநிலத்திற்கு மாநிலம் பரவல் வேறுபடும். பெங்களூரு தேசிய மனநலம் மற்றும் நரம்பு அறிவியல்கள் நிறுவனம் (NIMHANS), 2% தேர்வு செய்யாத நோயாளிகளில் உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய் (NCC)  இருந்ததாக அறிவித்தது. 2.5 % உள் மண்டையோட்டு இடைவெளிப் புண்கள் உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோயால் நிகழ்ந்தது என தில்லியில் இருந்து வெளியிடப்பட்ட ஓர் ஆய்வு கூறுகிறது. இந்தியாவில் நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோயாளிகளில் 95% பேர் காய்கறி உணவினர் என்பது ஓர் அசாதாரணமான அம்சம் ஆகும்.

உட்தசை நாடாப்புழு இடைப்பருவ நோய் வடக்கு மாநிலங்களான பீகார், ஒடிசா, உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாபில் அதிகம் காணப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ மாவட்டத்தில் மோகன்லால்கஞ்ச் வட்டத்தில் கிராம பன்றி வளர்க்கும் ஒரு சமுதாயத்தில் நாடாப்புழு நோய் 18.6 % உள்ளது. இதே சமுதாயத்தினரிடம் உறுதி செய்யப்பட்ட கால்கை வலிப்பு நோய் 5.8 %. வலிப்பு நோய் உள்ளவரில் 48.3 % பேருக்கு நிச்சயமாக  உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய் உள்ளது அல்லது இருப்பதற்கான சாத்தியக் கூறு உள்ளது.

நாடாப்புழு முட்டைகளைக் கொண்ட தொற்றுள்ள இறைச்சியை அல்லது உணவை சரிவர சமைக்காமல் உண்பதாலும் அல்லது நீரைப் பருகுவதாலும் அல்லது சுத்தமான பழக்கவழக்கங்களைக் கடைபிடிக்காத காரணத்தாலும் மனிதர்களுக்கு இந்நோய்த் தொற்று ஏற்படுகிறது. பன்றியிறைச்சி நாடாப்புழு வகையின் முட்டைப்புழு  உடலில் ஊடுறுவி உட்தசை நாடாப்புழு இடைப்பருவ நிலை என்னும் கடுமையான கட்டத்தை உருவாக்குகிறது. இந்த முட்டைப் புழுக்கள் நடுநரம்பு மண்டலம், தசை, தோல் மற்றும் கண்களில் புகுந்து உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவக் கட்டத்தை அடைகிறது.

உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய் வலிப்பு நோய்க்கு ஒரு தவிர்க்கக் கூடிய காரணம் ஆகும். வலிப்பு நோய் சமூக விலக்கம், ஊனம், வேலைத் திறன் இழப்பு போன்ற பல்வித தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. தென்கிழக்கு ஆசியாவில் பன்றியிறைச்சி நாடாப்புழுவால் உண்டாகும் நோய்க்கு தேசிய அல்லது உலக அளவிலான முக்கியத்துவம் அளிக்கப்படாமல் புறக்கணிக்கப்படும் வெப்பமண்டல நோயாக இது உள்ளது என உலக சுகாதார நிறுவனம் அறிவிக்கிறது.

நோய் அறிகுறிகள்

நாடாப்புழுத் தொற்று அனைத்து வேளைகளிலும் அறிகுறிகளை உண்டாக்குவதில்லை. சில சமயங்களில் அறிகுறிகள் இலேசாக வயிற்றுவலி, குமட்டல், வயிற்றுப்போக்கு அல்லது மலச்சிக்கல் போன்று குறிப்பற்றுக் காணப்படும். முட்டைப்புழுவைக் கொண்ட இறைச்சியை உண்டு 6-8 வாரங்களில் அறிகுறிகள் தோன்றும். இந்தக் காலகட்டத்தில் குடலுக்குள் நாடாப்புழு முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்கும். சிகிச்சைக்குப் பின் நாடாப்புழு செத்து விட்டால் இந்த அறிகுறிகள் அடங்கும். அல்லது நாடாப்புழு ஆண்டுகள் பல உயிரோடு வாழும்.

பன்றி இறைச்சி வகை முட்டைப்புழுவின் நோயரும்பும் காலம் வேறுபடும். பாதிக்கப்பட்டவர்கள் பல ஆண்டுகள் அறிகுறிகள் காட்டாமலே காணப்படலாம். சில  இடம்சார்நோய்ப் பகுதிகளில் (குறிப்பாக ஆசியா), பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணக்கூடிய அல்லது தொட்டுணரக் கூடிய முடிச்சுகள் (தொட்டு உணரக்கூடிய சிறு கட்டியான புடைப்பு அல்லது முடிச்சு) தோலுக்கு அடியில் உருவாகக் கூடும்.

உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோயில் பல்வேறு நோய்க்குறிகளும் அறிகுறிகளும் காணப்படும். நோயியல் மாற்றங்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் இடத்தைப் பொறுத்தும், ஓம்புயிரியின் நோய்த்தடுப்பு எதிர்வினையைப் பொறுத்தும், ஒட்டுண்ணியின் மரபினத்தைப் பொறுத்தும் இவை வேறுபடும். நீடித்தத் தலைவலி, பார்வையிழப்பு, வலிப்பு, முதுமைமறதி, போன்றவை அறிகுறிகளில் அடங்கும். தலைநீர்க்கோர்ப்பு, மூளைக்காய்ச்சல் மற்றும் நடு நரம்பு மண்டலத்தில் இடம் ஆக்கிரமிக்கும் புண்கள் ஆகியவற்றின் குறிகளும் அறிகுறிகளும் காணப்படும். கடும் நேர்வுகளில் உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய் உயிருக்கு ஆபதானது. மருத்துவ ரீதியாக அறிகுறிகள் காட்டாத நேர்வுகளையும் காணலாம்.

காரணங்கள்

பன்றியிறைச்சி வகை மற்றும் மாட்டிறைச்சி வகை என இரு வகையான நாடாப்புழுக்களால் நாடாப்புழுநோய் என்ற இந்தக் குடல் தொற்று உண்டாகிறது.

முட்டைப்புழுத் தொற்றுள்ள பன்றி அல்லது மாட்டிறைச்சியை அல்லது அசுத்த உணவு மற்றும்  நீரை உட்கொள்ளுவதால் இந்நோய் மனிதனுக்குத் தொற்றுகிறது. முட்டைப்புழு வளர்ந்து மனிதக் குடலுக்குள் முட்டை அடங்கிய முதிர் கண்டத்தை வெளியிடுகிறது. அது மலத்தின் வழியாக வெளியேறும்.

பயிர்பச்சைகளில் இருக்கும் இந்த முட்டைகள் கொண்ட முதிர் கண்டத்தை பன்றி அல்லது கால்நடைகள் உண்டு குடலுக்குள் செல்லும் போது முட்டைகள் பொரித்து குடல் சுவற்றில் வளை தோண்டிப் பதியும். மேலும் இவை சதைக்குள் ஊடுறுவி இடைப்பருவத் திரவக் கட்டிகளை  உருவாக்கும்.

பன்றி இறைச்சியால் ஏற்படும் நோயில் நடு நரம்பு மண்டலம் பாதிக்கப் படுகிறது. இந்தத் தொற்று உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோய் எனப்படும்.

மனித மலக்கழிவுகளுடன் தொடர்பு ஏற்படும் சாத்தியக் கூறு உள்ள பன்றி அல்லது கால்நடை வளர்ப்புப்  பகுதிகளில் நாடாப்புழு நோயும் உள்நரம்பு நாடாப்புழு இடைப்பருவ நோயும் ஏற்படும் வாய்ப்புண்டு.

நோய் கண்டறிதல்

(அ) மல மாதிரி சோதனை

மலப் பரிசோதனை செய்தே பன்றியிறைச்சி நாடாப்புழுக்கள் கண்டறியப்படுகின்றன. மூன்று வெவ்வேறு தினங்களில் மல மாதிரி சேகரிக்கப்பட்டு நாடாப்புழு முட்டை உள்ளதா என்று நுண்காட்டியால் சோதிக்கப்படும். நாடாப் புழு உடலில் புகுந்து 2-3 மாதங்களில் முட்டையைக் கண்டறியலாம்.

(ஆ) ஊனீர் கண்டறிதல்

உட்தசை நாடாப்புழு இடைப்பருவத்தைக் கண்டறிய நிரப்பிப் பொருத்தி சோதனைகள் (CFT) மற்றும் மறைமுகக் குருதித் திரட்சிச் சோதனைகளைப் (IHA)  பயன்படுத்தலாம். நொதியுடன் இணைந்த நோயெதிர்ப்புமின் மாற்று ஒற்று (EITB) மற்றும் மலவிளைவிய (Coproantigen) நொதியுடன் இணைந்த நோயெதிப்புறிஞ்சி மதிப்பீடு (ELISA) ஆகியவையும் நோய்கண்டறியப் பயன்படுத்தப்படுகின்றன.

நரம்பு பிம்ப கண்டறிதல்

மனித உட்தசை நாடாப்புழு இடைப்பருவத்தைக் கண்டறிய பிம்பமாக்கல் முறைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

காந்த அதிர்வு பிம்பம் (MRI)

சிதைக்கவும் தீங்களிக்கவும் கூடிய உட்தசை நாடாப்புழு இடைப்பருவத்தைக் கண்டறிய இதுவே சிறந்த நரம்பு பிம்பக் கருவி எனக் கருதப்படுகிறது.

கணினி வரைவி (CT)

சுண்ணக்கட்டி புண்களுக்கு இது சிறந்தது.

நோய் மேலாண்மை

ஒற்றை வேளை பிராசிக்யண்டால் (praziquantel) அல்லது நிக்ளோசாமைட் (niclosamide) ஆகிய மருந்துகளை நாடாப்புழு நோய் சிகிச்சைக்கு பயன்படுத்துகின்றனர். நோயாளிக்கு நாடாப்புழு நோயுடன் உட்தசை இடைப்பருவ நோய் இருந்தால் பிராசிக்யண்டால் மருந்தைக் கவனமுடன் பயன்படுத்த வேண்டும். பிராசிக்யண்டால் நீர்க்கட்டிக்குள் இருக்கும் இடைப்பருவ நாடாப்புழுவைக் கொல்வதால் செத்தக் கட்டியைச் சுற்றி அழற்சி உருவாகலாம். இதனால் வலிப்பும் பிற அறிகுறிகளும் உருவாகக் கூடும்.

இன அடையாளங் காணுதலுக்காக  சிகிச்சைக்குப் பின் மூன்றுநாட்கள் மல மாதிரி சேகரித்து கணுத்தொடர் ஆய்வு செய்யப்பட வேண்டும். மூன்று மாதத்துக்கு ஒரு முறை மல மாதிரி சேகரிக்கப்பட்டு நாடாப்புழு முட்டை அறவே இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மனித உட்தசை நாடாப்புழு இடைப்பருவ நோயை பிராசிக்யண்டால்  மற்றும்/அல்லது அல்பெண்டோசோல் (albendazole) மருந்துகள் கொண்டும் கோர்ட்டிக்கோஸ்டிராய்டு மற்றும்/அல்லது எதிர்வலிப்பு ஆதரவு சிகிச்சை மருந்துகள் கொண்டும்  நீண்ட கால மருத்துவ சிகிச்சைகளால் குணப்படுத்த வேண்டும்.

கண், மூளைக் கீழறை மற்றும் முதுகெலும்பு புண்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.  ஏனெனில் நுண்னுயிரி மருந்துகள் சீர்செய்ய முடியாத மருந்துகளால் ஏற்படும் அழற்சியைத் தூண்டக்கூடும்.

தடுப்புமுறை

விலங்கு மற்றும் மானிட சுகாதாரம், உணவு பாதுகாப்பு, சுத்தம் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளின் ஈடுபாட்டோடு கூடிய தகுந்த பொது சுகாதார அணுகு முறைகள் பன்றி இறைச்சி வகை நாடாப்புழு நோய்த் தொற்றைத் தடுக்க தேவைப்படுகிறது.

(அ) தடுப்பு வேதியற் சிகிச்சை அணுகல்

இடம் சார் நோயாக இருக்கும் பகுதிகளில் ஆபத்தில் உள்ள மக்களுக்கு ஒட்டுண்ணிப் புழுக்களை அழிக்கத்தக்கதாக முறையான இடைவெளிகளில் தடுப்பு மருந்துகளை விநியோகித்தல் இதில் அடங்கும். இதை மூன்று வழிகளில் நடைமுறைப்படுத்தலாம்:

மக்கள் கூட்டத்துக்கு மருந்தளித்தல்

தனிப்பட்ட மருத்துவ நிலையைக் கணக்கிடாமல் முன் வரையறுக்கப்படும் பகுதிகளில் வாழும் மக்கள் தொகுதிக்கே மருந்தளித்தல்.

இலக்குடனான வேதியற்சிகிற்சை

தனிப்பட்ட மருத்துவ நிலையைக் கணக்கில் எடுக்காமல் குறிப்பிட்ட ஆபத்துக்குள்ளிருக்கும் குழுக்களுக்குச் சிகிச்சை.

தேர்வு முறை வேதியற்சிகிச்சை

சந்தேகப்படும் தனிநபர்களைப் பரிசோதித்து சிகிச்சை அளித்தல்.

(ஆ) சுகாதாரக் கல்வி

பொதுமக்கள், சுகாதாரப் பணியாளர்கள், பன்றி வளர்ப்போர், மற்றும் இறைச்சிப் பணியாளர்கள் ஆகியோருக்கு சுகாதாரக் கல்வி போதித்தல்.  நோய் விலங்கியல், இறைச்சி உற்பத்தி மேம்பாடு, தனிநபர் சுத்தம், மற்றும் பன்றி வளர்ப்பில் மேம்பட்ட சுகாதார முறைகள் ஆகியவை இக்கல்வியில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

(இ) மேம்பட்ட சுத்தம்

சுத்தம் பேணுவதற்கான வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். இதனால் பன்றி இறைச்சி நாடாப்புழுவையும் வயிற்றுப் போக்கு போன்ற நோய்களையும் கட்டுப்படுத்த முடியும்.

(ஈ) பன்றி வளர்ப்பில் மேம்பாடு

பன்றிகள் மனித மலத்தை அணுகாத முறையில் தடுத்து  பன்றி வளர்ப்பில் சிறந்த முறைகளைக் கையாளுவதன் மூலம் நாடாப்புழுத் தொற்றைத் தடுக்க முடியும்.

(உ) பன்றிக்கு நுண்ணுயிர்க்கொல்லி சிகிச்சை

பன்றி உட்தசை நாடாப்புழு இடைப்பருவ நேர்வுகளைத் தடுக்க தடுப்பு மருந்துகளைப் பன்றிக்குக்  கொடுப்பது சிறந்த உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

(ஊ) பன்றிக்குத் தடுப்பு மருந்து

நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் தடுப்பு மருந்தும் பன்றிக்கு அளித்தால் நாடாப்புழு தொற்று மனிதனுக்குப் பரவுவது மிகவும் குறையும்.

(எ) மேம்படுத்தப்பட்ட இறைச்சிப் பரிசோதனை

மிகப் பரவலான உணவு வழிப் பரவும் ஒட்டுண்ணியான பன்றி இறைச்சி நாடாப்புழுவின் வாழ்வியல் சுழற்சியை உடைக்கும் நோக்கத்தோடு இறைச்சி சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆதாரம் : தேசிய சுகாதாரம் மற்றும் குடும்ப நல நிறுவனம்.

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate