பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

இயற்கை மருத்துவம்

இந்த தலைப்பு இயற்கை மருத்துவத்தின் அம்சங்கள், சிகிச்சைகள் மற்றும் அதன் விளைவுகள் போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியுள்ளது.

இயற்கை மருத்துவம் விளக்கம்

இயற்கை மருத்துவம் ஆக்கபூர்வமானது. மனிதனின் உடல் நலம், மன நலம், கட்டுபாடு, உணர்வு, ஆன்மீகம், ஆகியவற்றினை இயற்கையுடன் ஒன்றிணைத்து நோயை குணமாக்ககூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்த பின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்திடும்.

இயற்கை முறை மருத்துவம் என்பது இயற்கையிலேயே மனித உடல், தமக்கு தாமே சமன் செய்து நோயை குணமாக்கும் முறையாகும் என பிரிட்டிஷ் இயற்கை மருத்துவ குழு கூறியுள்ளது. இயற்கை மருத்துவம் உடலில் நோய் காரணிகள் மற்றும் விசத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதன் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது. இது சாத்தியமானதாகும்.

இயற்கை மருத்துவத்தின் சிறப்பம்சம்

இயற்கை மருத்துவத்தின் முக்கிய அம்சங்கள்:

 1. அடிப்பட்ட காயங்கள், சுற்று சூழல் சம்மந்தமான நோய்கள் தவிர பிற நோய்களுக்கான காரணங்களும், வைத்திய முறைகளும் ஒன்றேயாகும். தேவையில்லாத கழிவுகள் உடலில் தங்குவதே நோய்க்கான காரணமாகும். கழிவுகளை நீக்கி நோயை குணப்படுத்துவது இயற்கை மருத்துவத்தின் சிறப்பம்சம்.
 2. மனித உடலில் கழிவுகள் தங்குவதே நோய்க்கான மூலகாரணம் ஆகும். உடலில் கழிவுகள் தங்குவதால் கிருமிகள் உடலில் வாழ்வதற்கு ஏற்ற சூழல் உருவாகிறது.
 3. தீவிரமான நோய்களனைத்தையும் உடலே தன்னிச்சையாக சரி செய்து கொள்ளும். இது உடலுக்கு சாதகமானது, பாதகமானதல்ல, தவறான சிகிச்சையாலும், நீண்டகால சிகிச்சையின்மையாலும் நோய்கள், நாட்பட்ட நோய்களாக மாறுகிறது.
 4. இயற்கையே ஒரு மிகச்சிறந்த மருத்துவராகும். நோய் வராமல் தடுக்கவும், வந்தால் குணப்படுத்தவும், இழந்த சக்தியை மீண்டும் பெறக்கூடிய ஆற்றலை இய்றகையிலேயே நமது உடல் பெற்றுள்ளது.
 5. இயற்கை மருத்துவத்தில், சிகிச்சை என்பது நோயை சரி செய்தல் என்பது அல்ல. மாறாக நோயாளியை அத்தன்மையில் இருந்து விடுவித்து புதிய நிலைக்கு கொண்டு செல்வதாகும்.
 6. இயற்கை மருத்துவம் நோயாளியின் நாட்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது.
 7. வெளியே தெரியாத (அ) அழுத்தப்பட்ட நோய்கள் நிரந்தரமாக குணமாக்கப்படுகிறது.
 8. இயற்கை மருத்துவமானது உடல், மனம், சமூகம், ஆன்மா என அனைத்தையும் ஒன்று சேர்த்த மருத்துவ முறையாகும்.
 9. இயற்கை மருத்துவம் பாதிக்கப்பட்டுள்ள உறுப்புகளை மட்டும் பார்க்காமல் உடலின் அனைத்து பகுதிகளையும் சரி செய்கிறது.
 10. இயற்கை மருத்துவத்தில் உணவுதான் மருந்தாகிறது. வேறு மருந்து தேவையில்லை.
 11. இறை நம்பிக்கைக்கு ஏற்ற வகையில் வழிபாடு செய்து நோய் தீர்ப்பது மிக முக்கிய பங்காக உள்ளது.

உணவுக்கட்டுபாடு சிகிச்சை

இயற்கை தன்மையுடன் பருவக்காலத்திற்கேற்ற செழுமையான பழங்கள், காய்கறிகள், கிழங்குகள், கொட்டைகள் ஆகியவை சிறந்த பலனைத்தரும். இந்த உணவு முறையினை மூன்று வகைகளாக பிரிக்கலாம். அவை:

 1. திரவ உணவு: எலுமிச்சைபழச்சாறு, இளநீர், காய்கறிச்சாறு, கீரைச்சாறு, வெண்ணய், கோதுமை புல்சாறு ஆகியவை திரவ உணவாகும்.
 2. இனிமையான உணவு: பழங்கள், நீராவி மூலம் வேக வைத்த காய்கள், முளைகட்டிய தானியங்கள் பயிர்கள், காய், கீரைகளில் செய்த சட்னி, துவையல்கள்.
 3. ஆக்கபூர்வமான உணவுப்பழக்கம்: தேய்த்து பளபளப்பாக்காத அரிசி, சிறு தானியங்கள், முழுமையான மாவு, முளை கட்டிய தானியம், கிழங்குகள் தயிர் போன்றவை ஆகும்.

கார வகை உணவுகள், உடல் நலத்தை உயர்த்தி, உடலை தூய்மையாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. இதனை பெறுவதற்கு சரியான சரி விகித உணவு தேவையாகும். உடல் நலனை பேணிட உணவு வகைகளில் 20% அமிலத்தன்மையும் 80% காரத்தன்மையும் இருத்தல் வேண்டும். சம நிலை உணவு உடல் நலத்திற்கு தேவையானதாகும். இயற்கை முறை வைத்தியத்தில் உணவே மருந்தாக உள்ளது.

உண்ணாநிலை சிகிச்சைமுறை

உண்ணாநிலை என்பது குறிப்பிட்ட உணவு அல்லது அனைத்து உணவுகள், நீர் அல்லது இரண்டையும் விருப்பப்பட்டு, குறிப்பிட்ட நேரம்வரை உண்ணாமல் தவிர்ப்பது ஆகும். சமஸ்கிருதத்தில் “விரதம்” என்பது “உறுதியான” என பொருள்படும். ”உபவாசம்” என்பது கடவுளுக்கு அருகில் எனப்பொருள்படும். உண்ணா விரதம் என்பது ஒரு நாள் விட்டு ஒரு நாளோ, தொடர்ந்தோ அவரவர் தேவைக்கு ஏற்ப கடைப்பிடிப்பதாகும். உடல் நலம் சீர்பட உண்ணாநிலை சிறந்த பயன்தரும் சிகிச்சையாகும். உண்ணாநிலை கடைப்பிடித்திட மனதினை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். இயற்கை மருத்துவரின் ஆலோசனையின் அடிப்படையில் தான் நீண்ட நாள் உண்ணாநிலை மேற்கொள்ள வேண்டும். உண்ணா நிலையின் காலம் நோயாளியின் வயது, நோயின் தன்மை.

நோய்க்கு எடுத்துக்கொண்ட மருந்தின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் உண்ணா நோன்பிற்கான காலம் கடைபிடிக்கப்படுகிறது. தேவை ஏற்படும் போது தொடர்ச்சியாக குறைந் த அளவில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் அதிகபடுத்திக் கொள்ளலாம்.

உண்ணா நிலையில் இருக்கும் பொழுது அனுபவம் உள்ளவர்களின் வழிகாட்டுதலுடன், நல்ல ஓய்வுடன் நீர், பழச்சாறு, காய்கறிசாறு, இவற்றினை பயன்படுத்தலாம். சிறந்த பலனையும் , பாதுகாப்பையும், அளிக்ககூடியது எலுமிச்சை பழச்சாறு ஆகும். உண்ணா நிலையின் போது உடலில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் கழிவுகள் அதிகம் வெளியேறுகிறது. கார வகை சாறு மற்றும் சர்க்கரை கலக்காத (இயற்கையிலேயே பழங்களில் சர்க்கரை உள்ளது). இந்த பழச்சாறுகள் வலிமை தருகிறது. பழச்சாறுகள் தயாரித்திட செழுமையான பழங்களில் இருந்து தயாரிப்பது அவசியமானதாகும். உடனுக்குடன் தயாரிக்கப்பட்ட பழச்சாறையே பயன்படுத்த வேண்டும். தகரப்பெட்டிகள், பிரிட்ஜ்களில் (உறை நிலை பெட்டி)வைத்த பழங்களை பயன்படுத்த கூடாது. உண்ணா நிலைக்கு முன் எனிமா கொடுத்து வயிற்றை தூய்மை படுத்திக்கொள்ள வேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் எனிமா எடுத்துக்கொள்ள வேண்டும். 6 முதல் 8 டம்ளர் நீர் உட்கொள்ள வேண்டும். உடலில் தேங்கியிருக்கும் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றுவதற்கு அதிகப்படியான சக்தி தேவையாகிறது. என்வே இந்த சமயத்தில் உடல் ஓய்வு, மன அமைதி தேவைப்படுகிறது.

உண்ணா நிலையினை முடிக்கும் முறையில் தான் உண்ணாநிலையின் பயன்கள் அடங்கி உள்ளது. உணவு உட்கொள்ளும் முறையினை பொறுத்தும் உண்ணாநிலையின் பலன் அடங்கியுள்ளது. அதிகமாக சாப்பிடக்கூடாது. மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். உண்ணா நிலை முடிவிற்கு பிறகு சாதாரண உணவு முறைக்கு திரும்ப வேண்டும்.

உண்ணாநிலை – நன்மை – உடலியல் தாக்கம்

பழங்காலம் முதல் தற்காலம் வரை வரலாற்றில் மருத்துவர்கள் உண்ணா நிலை சிகிச்சையை பல்வேறு கட்டுபாடுகளுடன் முறைப்படி செயல்படுத்தினர். துவக்க காலத்தில் அறிவியல் பூர்வமான வழிகாட்டுதலின்றி, புரிதல் இன்றி நோயை குணபடுத்த உண்ணா முறையை கடைபிடித்து வந் தனர். ஆனால் தற்காலத்தில், உண்ணா நிலையில் விலங்குகளின் உணவு முறையைக்கொண்டு விலங்குகளில் ஏற்படும் மாற்றம், விளைவு, பலன்களை அறிந்து அதனடிப்படையில் உண்ணா நிலை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. உடலில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்கள் அடிப்படையில், அவர்களது வயது- - உடல் நலத்திற்கும் ஏற்றவாறு உண்ணா நிலையினை மேற்கொள்ளலாம்.

உண்ணாநிலையால் உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் - இன்சுலினின் செறிவு தன்மை, அதிகரிக்கும் இதனால் “பிளாஸ்மாவில்” உள்ள குளுகோஸின் அளவுகளை கட்டுப்படுத்தப்படும்.

மண் சிகிச்சை

மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயான கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும். மண் சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகள்.

இயற்கையின் ஐந்து கூறுகளில் மண் ஒன்றாகும். இது நலம் மற்றும் நோயிலும் மிகஉயர்ந்த நன்மையை ஏற்படுத்தவல்லது, மண்ணை உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்:

 1. சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
 2. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந் து உடல் சம் நிலை அடைகிறது.
 3. உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
 4. மலிவானது எளிதாக கிடைக்கக் கூடியது.

மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை

சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந் த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும்.

மண்கட்டியின் பயன்கள்
 1. மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சூட்டை குறைக்கிறது.
 2. மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிகப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது.
 3. இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சனைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.
முகத்திற்கு பயன்படுத்துதல்

சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

மண் குளியல்

நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் இரத்த சுழற்ச்சியும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். நோயாளியின் குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக்கொள்ளவேண்டும். 45 முதல் 60. நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.

மண்குளியலின் பயன்கள்
 1. உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.
 2. உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
 3. உடலில் உள்ள விசத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
 4. பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
 5. மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்திஜி மண்குளியலையே பயன்படுத்தினார்.

நீர்சிகிச்சை

நீர் சிகிச்சை இயற்கை வைத்தியத்தின் ஒரு பகுதியாகும். இந்த சிகிச்சையில் நீரை பல்வேறு வழிகளில் பல்வேறு விதத்தில் பயன்படுத்தலாம். இந்த நீர் சிகிச்சை முறையானது தொன்று தொட்டு பழங்காலம் முதலே பயன்பாட்டில் உள்ளது. நோயின் தன்மைக்கேற்றவாறு குளிர்ந்த நீரிலோ (அ)நீரின் வெப்பத்தை கூடுதலாக்கியோ குறைத்தோ சிகிச்சை மேற்கொள்ளலாம். சூடாக, குளிர்ச்சியாக, நீர்தன்மையாக ஆவியாக, ஐஸ் கட்டிகளாகவும் உட்புறம், வெளிப்புறமும் பயன்படுத்தலாம். நீர் சிகிச்சையானது பழங்காலம் முதற் கொண்டே நோய்களுக்கு தீர்வளிக்கும் முகவர் போல் செயல்படுகிறது.

வ. என்

வெப்பநிலை

oபாரன்கீட்

oசெல்சியஸ்

1.

அதிக குளிர்ச்சி(பனிக்கடி பயன்படுத்துதல்)

30-55

-1-13

2.

குளிர்ச்சி

55-65

13-18

3.

குளிர்

65-80

18-27

4.

இளஞ்சூடான

80-92

27-33

5.

வெதுவெதுப்பான

92-98
(92-95)

33-37
(33-35)

6.

சூடு

98-104

37-40

7.

அதிக வெப்பம்

104க்கு மேல்

40க்கு மேல்

நீரின் பயன்கள் விளைவுகள்
 1. குளிர்ந்த நீரில் குளிப்பது சிறந்த நீர்சிகிச்சையாகும். இது தோலின் சிறிய துளைகளை தூய்மையாக்குகிறது. உடலை புத்துணர்வுடனும், சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது. குளிர்ந்த நீரில் குளிப்பது உடல் தசைகளை ஊக்குவிப்பதுடன், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. முற்காலத்தின் முறைகளான ஏரி, குளம், ஆறுகள் மற்றும் நீர் அருவிகளில் குளிப்பது இயற்கையான நீர் சிகிச்சையாகும். இது மிகவும் எளிமையாகவும், உடலின் குறிப்பிட்ட பாகங்கள் அல்லது உடல் முழுவதும் தேவையான வகையில் நெகிழும் தன்மையுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 2. தேவையான குறிப்பிட்ட அல்லது உடல் முழுவதும் வெப்பத்தை மற்றும் தேய்த்துவிடலின் பலனை சுலபமாக பெறமுடியும்.
 3. எந்த தடங்கலும் இன்றி உடலில் உள்ள வெப்பத்தினை நீக்குகிறது. உடலில் வெப்பத்தினை சீராக கொண்டு செல்கிறது. உடல் வெப்பத்தை குறைப்பதற்காகவும், ஆதார சக்தியை அதிகப்படுதி அதன் மூலமாக இழந்த உடல் வெப்பத்தை விட கூடுதலாக வெப்பத்தை பெறவும் குளிர்ந்த நீர் பயன்படுதப்படுகிறது.
 4. அனைத்து பொருட்களுடன் கரையும் தன்மை கொண்டதால் நீர், உடலில் எனிமா போல குடல் வழியாக செல்வதால் உடலில் உள்ள யூரிக் அமிலம் யூரியா உப்புகள் அதிகப்பதியான சர்க்கரை மற்றும் உடல் இரத்தத்தில் உள்ள உணவுக்கழிவுகள் உடலை விட்டு வெளியேற உதவுகிறது.

இந்த முறையினை சரியாக பயன்படுத்த குறிப்பிட்ட அளவு சக்தி தேவைப்படுகிறது. சக்தி குறைவாக இருந்தால் பயன் இருக்காது, உடம்பு கட்டுப்பாடாக இருக்கும் பொழுது அதிக சக்தி இருக்கும். அது போன்ற சமயத்தில் சிகிச்சை நல்ல பலனைத்தரும். நாட்பட்ட நோய்கள் உடலில் இருக்கும் போது ஆதார சக்தி குறைவாக இருக்கும். அது போன்ற சமயங்களில் நீர் குளியல் முறையில் குறைவான பயனயே அளிக்கும். இச் சூழலில் குளியலுக்கு பதிலாக, நீர் பைகளை பயன்படுத்தும் சிகிச்சை முறை நல்ல பலனை அளிக்கும்.

நீர் சிகிச்சையின் வகைகள்:

 1. அழுத்தம் மற்றும் போர்த்துதல்
  • உடல் உறுப்புகளுக்கு அழுத்தம் தரக்கூடிய கட்டுத்துணியால் அழுத்தம் மற்றும் ஒத்தடம் தருவது.
  • குளிர்ச்சியை தரக்கூடிய கட்டுத்துணியை வயிற்றுப்பகுதியில் வைத்து அழுத்தம் கொடுத்து குளிர்ச்சி பெறச்செய்தல்.
  • சூடான கட்டுத்துணியை கொண்டு நெஞ்சு, அடிவயிறு, சிறுநீர்ப்பை, கல்லீரல், இடுப்பு மற்றும் அடி வயிற்றின் பகுதிகளில் ஒத்தடம், அழுத்தம் தருதல் வேண்டும்.
  • இளம் சூட்டில் ஒத்தடம், அழுத்தம் தருதல். (இருதயம், நுரையீரல், கிட்னி உள்ள பகுதி ஆகியபகுதிகளில்).
 2. குளியல் முறை
  • குளிர்ந்த நிலை இடுப்பு குளியல், இயற்கையான குளியல், சூடான மாறுபட்ட இடுப்பு குளியல்.
  • தண்டு வட குளியல் மற்றும் தண்டு வடத்தில் நீர் பரப்பி அதன் மூலம் தெளித்தல் முறை.
  • ஆவி பிடித்தல், ஆவி குளியல் முறை
  • நீராவி குளியல் முறை
  • கடற்பஞ்சால் ஒட்டி எடுத்தல் முறை
 3. நீர் பாய்ச்சும் மசாஜ்
  • குளிர்ந்த வெப்பமான நீரை மாறி மாறி பீய்ச்சி தெளித்து விடல்.
  • இயற்கையாக குளிர்ந்த நீர், சூடான நீரை பீய்ச்சி, தெளித்து சுழற்சி முறையில் பிடித்து விடல்.
  • நீர் தெளிப்பான்(ஷவர்)மூலம் குளிர்ந்த நீர் குளியல்.
 4. மூழ்கி குளியல்:
  1. குளிர்ந்த நீரில் மூழ்குதல்
  2. ஒரே சமயத்தில் வெந்நீரும், குளிர்ந்த நீரும் மாறி மாறி உடல் மீது பரவி குளிப்பது.
 5. எனிமா:
  1. குளிர்ந்த நீர் எனிமா
  2. வெந்நீர் எனிமா
  3. சிறுகசிறுக நீர் அளிக்கும் எனிமா
  4. பெண் பிறப்புறுப்புகளில் நீர் விட்டு எனிமா
 6. நீர் சிகிச்சை முறைகளில் கோலன் தெரப்பியும் ஒன்றாகும்.

கோலன் தெரப்பி (அடிவயிற்றுச் சிகிச்சை)

பெருங்குடல் அடிவயிற்று பகுதிகளில் சுத்தம் செய்திட கோலன் தெரபி பயன்படுத்தப்படுகிறது. கோலன் தெரபியும் – எனிமா முறையும் ஏற்த்தாழ ஒரே மாதிரியானது. ஆனால் கோலன் தெரபி எனிமாவை விட சற்று கூடுதலான செலவினம் கொண்டது. வடிக்கட்டிய தூய்மையான நீரை மிதமான அழுத்தத்துடன் குதப் பகுதிக்குள் அணுப்பப்படுகிறது. இது பயன்படுத்தும் நபரின் விருப்பத்திற்கு ஏற்ப மூன்றிலிருந்து ஆறுமுறை பயன்படுத்தலாம்.

நீர் சிகிச்சையின் பயன்கள் மற்றும் விளைவுகள்

ஒருவரின் தேவைக்கேற்ப ஆவிக்குளியலோ அல்லது நீரூற்றுக்குளியலோ பயன்படுத்தலாம். பயன்கள் அதன் அடிப்படையில் அமையும். இந்த குளியலால் உடலை வெப்பமாகவோ (அ)குளிர்ச்சியாகவோ மாற்றிட முடியும். இந்த குளியலால் உடலில் அழுத்த்ம் ஏற்படுகிறது. நரம்புகள் வலிமையடைகிறது. அழுத்தம் தரும் ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாகிறது. இரத்த ஓட்டத்தையும் ஜீரணத்தையும் ஊக்கப்படுத்துகிறது. வலி உணர்வுகளை குறைக்கச்செய்கிறது வெப்பத்தின் தன்மையால் உள்ளுறுப்புகளின் செயல்களை கட்டுப்படுத்தி உடலுக்கு ஓய்வு அளிக்கிறது. குளிரின் தன்மை உள்ளுறுப்புகள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த உடல்நிலையையும் ஊக்குவிக்கும்.

நீரூற்றில் அல்லது தண்ணீரில் மூழ்கும் போது 50% முதல் 90 % வரை எடை குறைவு உணர்வு ஏற்படும். நீருக்கும் உராய்வுத்தன்மை உள்ளது. ஷவரிலோ, நீரூற்றிலோ குளிக்கும் போது நீர் உராய்வு – மசாஜ் செய்யும் போது கிடைக்கும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் இறுக்கமான தசைகள் தளர்ந்து இயல்பு நிலைக்கு வரும்.

மசாஜ்

மசாஜ் முறையானது மற்ற உடற்பயிற்ச்சி போல் அல்லாமல் உடலின் அதிக நகர்த்தல் ஏதும் இல்லாமல் செய்யும் உடற்பயிற்ச்சியாகும். இதன் கிரேக்க வார்த்தையான “மாஸியன்” என்ற வார்த்தையில் இருந்து மருவி வந்ததாகும். இதுவே பிரஞ்சு மொழியில் “தேய்த்துவிடல்” என்றும், அதேபோல் அரேபிய வார்த்தையில் “மாஸா” எனப்படும். அதன் பொருள் “தொடுதல்” அல்லது உணர்தல், கையாளுதல் ஆகும். மஸாஜானது உடலையும், மனதையும் ஊக்குவிக்கிறது. இதனை முறையாக பயன்படுத்தும் பொழுது நல்ல பலனைத்தரும். மஸாஜ் இயற்கைமுறை மருத்துவத்தில் ஒன்றாகும். நல்ல ஆரோக்கியத்தை அளிக்க கூடியதாகும்.

மனித உடல் மீது அழுத்தம், பிடித்தல், நகர்த்தல், அதிர்வு அளித்தல் ஆகியவற்றை கைகளினாலோ அல்லது இயந்திரத்தின் துணைகொண்டோ செய்யப்படுவது மஸாஜ் ஆகும். உடலின் தசைகள், தசைநார்கள், இணைப்பு தசைகள், நாளங்கள் ஆகிய இந்த பகுதிகளை மையப்படுத்தி மஸாஜ் செய்யப்படுகிறது. இந்த மஸாஜானது கைகள், விரல்கள், கால்கள், முழங்கைகளை பயன்படுத்தி மஸாஜ் செய்யலாம். 80 வகையான அங்கீகரிகக்ப்பட்ட மஸாஜ்கள் உள்ளது மஸாஜ் செய்யும் போது உடல் உறுப்புகளை வலிமையடையச் செய்யும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்.

மஸாஜின் உடற்கூறு விளைவுகள் உடலின் நரம்பு மன்டலம் மூலம் செய்யப்படும் தன்னிச்சையான விளைவுகள்
 1. இரத்க்குழாயின் உள்விட்டம் அதிகரிக்கச்செய்தல்
 2. ஜீரணத்தை தூண்டுதல்
 3. தசைகளின் அடர்த்தியை அதிகரித்தல் மற்றும் குறைத்தல்
 4. அடிவயிற்றின் தசைகளின் வேலையை அதிகரிக்கச்செய்தல்
 5. தளர்வு நிலையை தூண்டுகிறது
 6. தசைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது
 7. இதய செயல்பாட்டை தூண்டுகிறது, சுருங்குதல் தன்மையை அதிகரிக்கிறது
 8. நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
செயல்களின் மூலம் ஏற்படுத்தும் விளைவுகள்
 1. இதயத்தின் இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்
 2. நிணநீர் ஓட்டத்தையும், நிண நீர் வடிகால்களையும் அதிகரிக்கிறது
 3. இரத்த ஓட்ட திறனை அதிகரிக்கிறது
 4. சளியின் கட்டித்தன்மையை உடையச் செய்கிறது
 5. உடல் உறுப்புகளில் பைபுரோஸிஸ் நோயை பரப்பும் இணைப்பை முறிக்கிறது
 6. தசை நார்களை நீட்டவும், தளர்த்தவும் உதவுகிறது
 7. தசைகளின் வெப்பத்தை கூட்டுகிறது
 8. வாயு பரிமாற்றம் மற்றும் வளர்சிதை மாற்றங்களை அதிகரிக்கிறது
 9. வடு திசுக்களை நீட்டுகிறது
 10. தோலின் அடர்த்தியை அதிகரிக்கவும், குறைக்கவும் செய்கிறது
 11. உடலினை அசைக்கும் போது அதன் வேகத்தினை அதிகரிக்கிறது
 12. மூட்டு இயக்கத்தினை சரியான முறையில் இயங்கச் செய்கிறது
 13. தசை சீரின்மையை நீக்குகிறது
 14. பலவீனமான திசுக்களை வலுப்படுத்துகிறது
மஸாஜின் பயன்கள்

பொதுவாக செய்யப்படும் மஸாஜ் உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பலனளிக்கும், மேலும் பல வழிகளிலும் உபயோகமாக உள்ளது. நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகின்றது. நாம் விடும் மூச்சினை பயன்படுத்தி உடலில் உள்ள கழிவுகளை நீக்கும் உறுப்புகளான சிறுநீரகம், நுரையீரல், தோல், மற்றும் குடல் ஆகிய உறுப்புகளின் துணையுடன் உடலில் உள்ள விஷத்தன்மை மற்றும் தேங்கியிருக்கும் அழுக்குகளை நீக்குகிறது. மேலும் இரத்த சுழற்சி மற்றும் வளர்சிதை செயல்களை தூண்டுகிறது. மஸாஜ் செய்வதினால் முகத்தில் தோன்றும் சுருக்கங்களை நீக்குகிறது. ஒடுக்கலான கன்னங்களை சரிசெய்கிறது. கழுத்து மற்றும் கன்னங்களை உறுதிபடுத்துகிறது. புண் மற்றும் உணர்ச்சியற்ற நிலையினை போக்குகிறது

திறனாய்வு மருத்துவர்களின் ஆராய்ச்சியின் படி மஸாஜ் வலிநிவாரணியாகவும், மற்றும் மனஅழுத்தத்தையும் குறைக்கிறது. தற்காலிகமாக இரத்த அழுத்தத்தினை குறைக்கின்றது. துடிப்பின் அளவையும் சீராக்குகிறது.

அக்குபிரசர்

அக்குபிரசர் மருத்துவ முறை பழங்காலத்திலிருந்து பயன்பாட்டில் உள்ள முறையாகும். இது விரல்கள் அல்லது மழுக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்தி உடலின் வர்ம புள்ளி உள்ள இடங்களை தூண்டி மனிதனின் நோய் எதிர்ப்புசக்தியினை வளர்ப்பதாகும். இந்த குறிப்பிட்ட இடங்களை தூண்டுவதால் தசைகளில் இறுக்கம் உருவாகும் அதனால் ஏற்படும் இரத்த ஓட்டம் அதிகரித்து உயிரோட்டத்தை சரிசெய்யும்.

இதில் அக்குபிரசர் முறை மற்றும் அக்குபஞ்சர் முறை ஆகிய இரு முறைகளிலும் ஒரே புள்ளிகள் பயன்படுத்தப்படுகிறது. அக்குபிரசர் மென்மையாக விரலையோ அல்லது பொருளையோ வைத்து உபயோகப்படுத்தும் முறையாகும், அக்குபஞ்சர் முறை ஊசியினைக்கொண்டு செய்வதாகும். சுமார் 5000 வருடங்களுக்கு முன்பிருந்து அக்குபிரசர் முறை பயன்படுத்தப்படுகிறது. இது உடலின் சுமார் 3000 நிலைகளை சரிசெய்வது பற்றி, பதிவு செய்யப்பட்டு முழுமையாக உள்ளது.

லேசர் கதிர்கள் வீசுவதன் மூலமும் சீர் செய்யப்படுகிறது. அழுத்தத்தின் மூலமாகவும், மின் ஆற்றலின் தூண்டுதல் மூலமாக ஊசிகளுக்கு பதிலாக கதிர்வீச்சினை பயன்படுத்துதல் மூலமாகவும் குறிப்பிட்ட நடுக்கோடுகளில் பலனளிக்கிறது. மொத்தம் 14 வழித்தடங்கள் உள்ளன அவை ஒவ்வொன்றும் தனிப்பட்ட உடல் உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புள்ளிகளை சமன் செய்வதன் மூலம் சிறந்த ஆரோக்கியத்தை பெற முடிகிறது. வலியோ அல்லது உடல்நலக்குறைவோ இருந்தால் உடலில் சக்தி தடைபடுதல் அல்லது வீன் ஆகுதலின் அறிகுறியாகும்.

சரியான புள்ளியை மிக மென்மையாக வர்மப் பகுதியில் உணர்வின் மூலம் கண்டறியும் வரை விட்டு பிறகு அழுத்தத்துடன் போதுமான அளவு புள்ளியை தொடர வேண்டும். ஐந்து நொடிகள் மற்றும் ஐந்து நொடிகள் விட்டு விட்டு அழுத்த வேண்டும். ஒரு நிலைக்கு ஒரு நிமிடம் போதுமானதாகும்.

தலைவலி, கண்வலி, புரை அழற்சி, கழுத்துவலி, முதுகு வலி, பிடறி வலி, மன அழுத்தம், வயிற்றுப்புண், மன இறுக்கம் இன்னும் பல வகையில் உடல் ஆரோக்கியத்தை தந்து சிறந்து விளங்குகிறது. மேலும் உடலினை இயல்பான நிலையில் வைத்திருக்க பயன்படுகிறது. உடலுக்கு ஆரோக்கியத்தையும் நோய் நீக்கும் வழிகளுக்கும் புள்ளியில் தொடும் சிகிச்சை சிறந்ததாகும்.

அக்குபஞ்சர்

அக்குபஞ்சர் முறையானது உடலில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள வலியை போக்குவதற்கு அதற்கென தாயார் செய்யப்பட்ட, சிறிய ஊசியை குறிப்பிட்ட பகுதியில் துளையிடுவர். அக்குபஞ்சர் வார்த்தை லத்தின் மொழியில் இருந்து வந்தது. அகுஸ் என்பது “ஊசி” மற்றும் பஞ்சர் என்பது “துளையிடுதல்” எனும் பொருளாகும்.

அக்கால சீன மருத்துவ கருத்துப்படி, அக்குபஞ்சர் புள்ளிகளானது உடலின் சக்தி ஓட்டப்பாதையில் அமைந்துள்ளது. இதற்கு உடல்ரீதியான மற்றும் வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உள்ளது. அக்குபஞ்சர் முறை கற்க்காலம் முதலே சீனாவில் பயன்பாட்டில் இருந்தது என நம்பப்படுகின்றது. கிமு 305-204ல் எழுதப்பட்ட “குவான்டி நெஜிங்” எனும் நூலில் முதன்முறையாக அக்குபஞ்சர் பற்றி எழுதப்பட்டுள்ளது. சில வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியின் மூலம் கிமு. 1000 வருடங்களுக்கு முன்பே அக்குபஞ்சர் பயன்படுத்தப்பட்டது என்பது கன்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சீன புராணத்தின் கூற்றுப்படி சீனாவில் போரின் போது அம்பினால் காயம்பட்ட ஒரு படைவீரர் உடலின் வேறு இடத்தில் வலி குணமடைவதை கவனித்தார். பின்னர் மக்கள் அம்புகளினால் தங்களை காயப்படுத்திப்பார்த்து இந்த சிகிச்சை முறையினை கற்றுக்கொண்டனர் பின்னாளில் அம்பிற்கு பதிலாக சிறிய ஊசியை பயன்படுத்தினர். சீனாவிலிருந்து கொரியா, ஜப்பான், வியட்நாம் முதலிய அனைத்து கிழக்கு ஆசிய நாடுகளுக்கும் பரவியது. பின் 16ம் நூற்றான்டில் அக்குபஞ்சரின் நூல்கள் போர்ச்சுகீசியர்களால் மேற்கத்திய நாடுகளுக்கு முதன்முதலாக கொண்டுசெல்லப்பட்டது.

அக்குபஞ்சரின் பாரம்பரிய கோட்பாடுகள்

உடலின் நேர் மற்றும் எதிர் விசை சீராக இருந்தால் ஆரோக்கியத்தை பெறமுடியும் என பாரம்பரிய முறை கூறுகிறது. ஒரு சிலர் உடலின் நேர் மற்றும் எதிர்விசையை மூளையில் இருந்து தோன்றும் தானியங்கி நரம்புகளான அன்ன சிறுநரம்புகள் மற்றும் பரிவு நரம்புகளுடன் ஒப்பிடுகிறன்றனர். அக்குபஞ்சர் முறை உயிர்சக்தி மற்றும் இரத்தத்தை சீர்ப்படுத்துகிறது, குறைபாடுள்ள இடத்தை சரிசெய்தல், அதிகமாக உள்ளதை சீர்செய்தல், சக்தி தேங்கியிருக்கும் இடத்தில் சீர்செய்தல் முதலிய பணிகளை செய்கிறது. அக்குபஞ்சர் கூற்றுப்படி

“வலிஇல்லையேல், தடையில்லை; தடைஇல்லையேல், வலியில்லை”
என்பது அக்குபஞ்சர் மருத்துவத்தின் அடிப்படை ஆதாரமாகும்.

பாரம்பரிய சீன மருத்துவம் மனிதஉடலை பல அமைப்புகளின் கூட்டாக கருதுகிறது. இதனை ஜாங், பூ என கூறுகின்றனர். ஜாங் என்பது இருதயம், நுரையீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளை குறிக்கின்றன்ர். பூ என்பது குடல்களை குறிக்கிறது. நோயானது நேர்மறை, எதிர்மறை, உயிர்ஆற்றல் மற்றும் இரத்தத்தின் விகிதங்கள் குறையும் பொழுது உருவாகிறது. அக்குபஞ்சர் புள்ளிகளில் ஊசி, அழுத்தம், உஷ்ணம் ஆகியவை கொண்டு உடல் அமைப்புகளின் செயல்பாடுகளை துளையிடுதல் மூலம் சீர்செய்யமுடிகிறது. இதனை “டி. சி. எம்” எனக்கூறுகின்றனர்.

பெரும்பாலான அக்குபிரசர் புள்ளிகள் 12 ஆதார தடங்கள், 8 கூடுதல் தடங்கள் . மொத்தமாக 14 தடங்களில் இரத்தம் மற்றும் உயிர்சக்திகள் பாய்வதாக மருத்துவம் கூறுகிறது. மேலும் ஆசி எனப்படும் பிற புள்ளிகளிலும் தேவைப்படும் பொழுது துளையிடுகின்றனர்.

கீழ்காணும் நோய்கள், அறிகுறிகள் மற்றும் நிலைகளுக்கு அக்குபஞ்சர் சிறந்த பலனைத்தருகிறது:
 • ஒவ்வாமை நாசியழற்சி
 • மன அழுத்தம்
 • தலைவலி
 • குமட்டல் மற்றும் வாந்தி
 • அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் கழுத்து, முகம், கீழ் இடுப்பு, மூட்டு வலி
 • முடக்கு வாதம்
 • கால்வலி
 • மூச்சுக்குழாய் ஆஸ்த்துமா
 • தூக்கமின்மை

வண்ண சிகிச்சை

சூரிய கதிர்களில் இருந்து வெளிப்படும் ஏழு வண்ணங்களும் ஒவ்வொரு பலனைஅளிக்கும். இந்த ஏழு வண்ணங்களில் நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு, புளு, இன்டிகா ஆகும். இந்த வண்னங்கள் நோய்களை தீர்க்கும் ஆற்றல் பெற்றவை ஆகும். தண்ணீர் அல்லது எண்ணெய் நிரம்பிய கண்ணாடி குடுவைகள் சூரிய ஒளியில் குறிப்பிட்ட நேரம் வைத்து எடுக்கிறார்கள். குடுவையில் உள்ள நீர் அல்லது எண்ணெய் சக்தி பெற்றதாக உள்ளது. இதனை நோய் தீர்க்க பயன் படுத்த்ப்படுகிறது. இது மிக எளிய முறையாகும்.

காற்று சிகிச்கை

நல்ல ஆரோக்கியத்திற்கு தூய்மையான காற்று அவசியமானது. காற்று குளியல் மூலம் காற்று சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது, காற்று சிகிச்சையினை 20 நிமிடம் அல்லது அதற்கு மேலும் எடுத்துக்கொள்ளலாம். அதிகாலையில் உடற்பயிற்சி செய்த பின் காற்று சிகிச்சை சிறந்த பலனை அளிக்கும். எங்கு தூய்மையான காற்று நிலவுகிறதோ அந்த பகுதியில் உடையின்றி, அல்லது தளர்வான மிருதுவான உடையணிந்து தினசரி தனிமையில் நடந்து வரல் வேண்டும். வேறு வழிகளிலும் காற்றுசிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக மேற்கூரையற்ற நான்கு புறமும் சுவர்போன்ற அறையில் இருந்து எடுத்துக்கொள்ளும் காற்றுசிகிசை நல்ல பயனைத்தரும்.

இயங்குமுறை

உடல் குளிர்ச்சியினை சீர்ச்செய்யும் விதமாக நரம்புகள் ரத்த ஓட்டமானது அதிகளவில் தோலின் மேற்புறத்திற்கு வருகிறது. இதனால் தோலில் படிந்திருக்கும் கழிவுகள்வெளியேற்றப்படுகிறது.

நன்மைகள்

கோடிக்கணக்கான நரம்பு முடிச்சினை சரிசெய்யவும், ஊக்குவிக்கவும் இந்த காற்று குளியல் பயன்படுகிறது. நாட்பட்ட நோய்களான தோல் நோய், மன நோய், கீழ்வாதம், உணர்ச்சியற்ற தன்மைகள் இவைகள் குணமாக்குகிறது.

காந்த சிகிச்சை

காந்த சிகிசையானது உடலின் பாகங்களுக்கு காந்தத்தினை பயன்படுத்துவதன் மூலம் பல நோய்களில் இருந்து விடுபட முடிகிறது. இது மிகவும் எளிமையான, மலிவான, வலியில்லாத , பின்விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாகும். :இந்த சிகிசையானது காந்தத்தை தவிர வேறு எந்த பொருளும் பயன்படுவதில்லை.

பல சக்திகளைக்கொண்ட குணமாக்கும் காந்தத்தை நேரடியாக உடலுறுப்புகளில் வைக்கப்படுகிறது. மேலும் காந்த பட்டைகள் உடலின் பல்வேறு பாகங்களில் பொறுத்தும் வகையில் உள்ளது. அடிவயிறு, மூட்டு, மணிக்கட்டு ஆகியவை ஆகும். மேலும் காந்த நெக்லஸ், கண்ணாடிகள், பிரேஸ்லட் ஆகியவையும் மருத்துவத்திற்கு பயன்படுகிரது.

நன்மைகள்: சக்தியை சமமாக வைத்துக்கொள்கிறது. காந்த பட்டைகள் அணிந்திருக்கும் இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. உடலின் மிதமான வெப்பத்தை அதிகப்படுத்துகிறது.

இயற்கை மருத்துவக்கல்வி

ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி இந்த மருத்துவமுறைகள் வளர்ந்த அளவிற்கு யோகா, இயற்கை மருத்துவ முறை வளரவில்லை. இதற்கான காரனம் இதில் தகுதி பெற்ற சிறந்த பயிற்ச்சியாளர்கள் யோகா-இயற்கைமருத்துவத்தில் இல்லாத காரணத்தினால், மக்களுக்கு சென்றுசேரவில்லை. ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி போன்றவை வளர்ந்தது போல இது வளராததற்கு காரணமாகும். அவ்வாறு இருந்தாலும் பல தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் முயற்சியாலும், ஆரோக்கியத்தை மேம்படுத்த வீடுகளிலும், கல்லூரிகளிலும் பட்டபடிப்புகளாகவும் கற்றுத்தரப்படுகிறது.

தற்ச்சமயம் இந்தியாவில் 12 கல்லூரிகள் உள்ளது, அவை
 1. ராஜீவ் காந்தி ஆரோக்கிய விஞ்ஞான பல்கலைகழகத்தின் இணைப்பை பெற்றுள்ளது பெங்களூரில் 3 கல்லூரி உள்ளது.
 2. சென்னை தமிழ்நாடு டாக்டர். எம். ஜி. ஆர். பல்கலைக்கழகத்துடன் இணைந்து – 4 கல்லூரி செயல்படுத்துகிறது.
 3. ஆந்திர பிரதேசம் விஜயவாடா விஞ்ஞான பல்கலைக்கழகத்துடன் இனைந்தது – 1 கல்லூரி செயல்பட்டு வருகிறது.
 4. ராய்ப்பூர் – சட்டீஸ்கர்- ஆயுஸ்பல்களைக்கல்கத்துடன் இனைந்து 1 கல்லூரி செயல்பட்டு வருகிறது.
 5. போபால் – பர்கத்துல்லா பல்கலைக்கழகத்துடன் இணைந்து 1 கல்லூரி செயல்பட்டு வருகிறது.
 6. ஆயுர்வேத பழ்கலைகழகம் – ஜலம் நகர் குஜராத்தி 1 கல்லூரி செயல்படுகிறது.

இயற்கை மருத்துவம் மற்றும் யோகாவில் உள்ள படிப்புகள் : பி. என். ஒஐ. எஸ் (BNYS)

இது 5 ½ ஆண்டுகள் பயிற்ச்சி காலமாகும். இக்காலத்தில் யோகா, இயற்கை மருத்துவ கல்வியுடன் மட்டுமல்லாது மருத்துவராக செயலாற்றிட, மருத்துவமனையை திறப்பட நிர்வகிக்க கற்றுத்தரப்படுகிறது.

இக்கல்லூரிகளில் பயிற்சிகள் மூலமாகவும், செய்முறை மூலமாகவும், சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும் கற்றுத்தரப்படுகிறது. இந்த வகுப்புகளில் எந்த முறையிலும் மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் கற்றுத்தரப்படுகிறது. வளர்ந்த மருத்துவ கல்லூரிகள் யோகாவின் பயனை நிரூபித்திட பல்வேறு முயற்சிகளை செய்து வருகின்றனர். மனிதர்களின் ஒட்டுமொத்த ஆளுமைகளை வளர்க்கும் விதமாக, பல்கலைகழகங்கள் ஒரு வருட யோகா ஆசிரியர் பயிற்சியை அளிக்கின்றனர். மொத்தமாக 18 பல்கலைகழகங்கள் பட்டயம், சான்றிதழ் கல்வி, டிப்ள்மோ ஆகியவற்றினை யோகா கல்விக்கு அளிக்கிறார்கள். யோகாவினை மேம்படுத்திடவும், பரப்பவும் அதிக பயிற்சிகளை அளிக்க, பல்கலைக்கழகங்களுக்கு நிதியுதவி அளிக்கிறது. சில பல்கலைகழகங்கள் சான்றிதழ் கல்வி முதல் ஆய்வு கல்வி வரை கற்றுத்தரப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பல்கலைகழங்களில் யோகா, இயற்கை மருத்துவத்திற்கான தனி துறைகள் துவங்கப்பட உள்ளது. வெளி நாடுகளில் யோகா-இயற்கை மருத்துவம் பிரபலமாகி உள்ளது. அதே சமயம் அங்கு ஆய்வுகளும் மேற்கொண்டு வருகிறார்கள், இந்தியாவில் சிலமாநிலங்களில் கல்வித்துறையும் யோகா மருத்துவ இயற்கை மருத்துவத்தினை இணைத்திட முயர்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டில்லி முன்சிபல் கார்ப்பரேசன் கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் ஏறத்தாழ 1000 யோகா ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இன்றும் பல நாடுகளில் மனப்பிரச்சனைகளை தீர்த்திட யோகாவினை கடைப்பிடித்து வருகிறார்கள். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, லண்டன் நாடுகளில் அங்கீகாரத்துடன் ஏராளமான கல்லூரிகள் இதற்கென இயங்கிவருகிரது.

இந்தியாவில் உள்ள இயற்கை முறை மருத்துவத்திற்கான சிறப்பு மையங்க்கள்

அரசு அனுமதி பெற்ற இயற்கைமுறை மற்றும் யோகா மருத்துவர்கள்

வ. எண்

இந்திய மருத்துவமுறையின் மாநில துறையின் பெயர்

இயற்கை மருத்துவர்களின் எண்னிக்கை

1.

இந்திய இந்தியமுறை மருத்துவ வாரியம் செக்ந்திரபாத் ஆந்திர அரசு

800

2.

கர்நாடகா ஆயுற்வேதம், யுனானி, இயற்கைமருத்துவர்கள் அமைப்பு பெங்களுரு, கர்நாடக அரசு

340

3.

தமிழ்நாடு இந்தியமுறை மருத்துவ கழகம் சென்னை. தமிழ்நாடு அரசு

670

4.

மத்தியபிரதேச ஆயுற்வேதம், யுனானி, பிராகிரிடிக் சிகிட்ஸா வாரியம், போப்பால், மத்தியபிரதேச அரசு

18

5.

சட்டிஸ்கர் ஆயுற்வேதம், யுனானி மற்றும் இயற்கைமருத்துவ துறை, ராய்பூர், சட்டிஸ்கர் அரசு

75

மருத்துவமனைகள், படுக்கை வசதிகள் மற்றும் மருந்து வைக்கும் இடம்:
 • உட்புற சிகிச்சை மருத்துவமனைகள்- 250 இயற்கை மருத்துவம் மற்றும் யோக மருத்துவமனைகளில் 10000 படுக்கைகள்.
 • வெளிப்புற சிகிச்சை மையங்கள் : இந்தியா முழுவது 300 இயற்கை மருத்துவம் மற்றும் யோக சிகிசை மையங்கள்.
 • 06 யோகா மருத்துவமனைகள்
 • இயற்கைமருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் உற்பத்தி நிலையங்க்கள் 40

மலர் மருத்துவம்

மலர் மருத்துவம் எப்படி தோன்றியது?

பிரபல ஆங்கில மருத்துவரான டாக்டர் எட்வர்ட் பாட்ச் என்பவர் லண்டனில் பிறந்து வளர்ந்தவர் . அவர் அலோபதி மருத்துவராக தொழில் புரிந்து வந்தார். ஆனால் அவர், தான் கொடுக்கும் அலோபதி மருந்துகள் நன்மையை விட தீமைகளே அதிகம் விளைவிக்கின்றன என்று அனுபவ ரீதியாக ஆய்ந்து உணர்ந்தார். அத னால் ஹோமியோபதி மருத்துவ முறையால் கவரப்பட்டு ஹோமியோபதி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து முறையாக பயின்று ஹோமியோ மருந்துகளை கையாண்டு வெற்றி கண்டார். நோயாளியை முழுமையாகக் குணமாக்குகிறோமென்ற மனமகிழ்ச்சி கொண்டார். இருப்பினும் ஹோமியோபதி முறையை இன்னும் சுலபமாக்க வேண்டுமென்று ஆராய்ச்சியில் ஈடுபட்டார் . எந்த ஒரு வியாதிக்கும் மூல காரணமே மனம்தான். மனதிலிருந்தே வியாதிகள் உருவாகின்றன என்று ஆய்வின் முடிவில் அறிந்து கொண்டார். அதனால் மனதைச் சரிப்படுத்தினால் உடல் நோயும் குணமாகிவிடும் என்ற உறுதிபாட்டினால் மனதில் வேலை செய்யக் கூடிய மருந்துகளை ஆராய்ந்தார். -மலைகள், காடுகள அலைந்து, அங்குள்ள மலர்களையும், மூலிகைகளையும் தாமே தின்று பரிசோதித்து உணர்ந்தார். அதன் பின் அவர் உண்டு பரிசோதித்தவைகளை மற்றவர்களுக்கும் கொடுத்து பரிசோதித்தார். அந்தவகையில் மனதை ஒழுங்குபடுத்தக் கூடிய 38 வகையான மலர் மருந்துகளை தயாரித்தார். இம்மலர் மருந்துகளை தனியாகவோ, அல்லது ஹோமியோபதி மருந்துகளுடனோ கொடுத்ததில் சிறப்பாக குணமளித்ததை உணர்ந்தார்.

மலர் மருந்தின் மகத்துவம்

ஹோமியோ மருந்தும் இந்த புதிய மலர் மருந்தும் சேர்த்து பயோ மருந்துகளோடு, இணைத்து மனித சமுதாயத்திற்கு பெரும் தொண்டாற்றுகின்றன. எந்தவித பின்விளைவு இல்லை , உணவு கட்டுப்பாடும் இல்லை இந்த மருந்துகள் எதுவும் நேரடியாக உடலின நோய்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. நோயாளியின் மனப்போக்கை அல்லது மன இயல்பை அறிந்தே கொடுக்கப்படுகிறது. உதாரணமாக மனத்தளர்ச்சி, பயம், வருத்தம், கோபம், விருப்பு, வெறுப்பு-போன்ற மனரீதியான பலவீனங்களின் அடிப்படையிலேயே தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் நோயாளியின் வேண்டத்தகாத , விரும்பத்தகாத குணங்குறிகளை நீக்குவதுடன், அந்நோயாளியின் வியாதிகளும் முமையாக நீங்குகின்றன. அவர் மனதிற்கும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையிலும் நல்லமுறையில் முன்னேறுகிறார்கள்.

மலர் மருந்து தயாரிக்கும் முறை

மருந்து தயாரிப்பிற்கான மலரை டிஸ்டில்ட் வாட்டரில் போட்டு ஒரு பகல் முழுவதும் வெய்யிலில் வைத்திருந்தால் இதில் சூரிய சக்தி ஊடுருவி நோயைக் குணப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது. அதன் பின் அந்நீரை வடிகட்டி-அதில் சமபாகம் சுத்த மது சாரத்தை விட்டு கலக்கி வைத்துக் கொண்டால் இதுவே தாய்த்திரவம் ஆகும். அல்லது இதில் ஒரு பங்கும், 99 பங்கு சுத்த மது சாரத்தை விட்டுக்குலுக்கினால் அது வீரியப்படுத்தப்பட்ட மருந்தாகிறது. இதுவே மனதில் நன்றாக வேலை செய்து உடல் வியாதிகளையும் போக்குகிறது.

எந்த ஒரு மனிதனுக்கும் ஒரு இணக்கமான, ஒத்தான மனசு இல்லாவிட்டால் அதுவே மன எழுச்சிகளாகவும், வெறுக்கத்தக்க குணங்களாகவும் மாறி பல்வேறு குணங்குறிகளை கொண்ட உடல் நோய்கள் உண்டாகிறது. தொடர்ந்து நீண்டகாலமாக இருக்கும் மனக்கவலை, மன வருத்தம், மனப்பயம், கோழைத்தனம், காதல் தோல்வி, வியாபார நஷ்டம், தேர்வில் தோல்வி – முதலியவைகள் சம்மந்தப்பட்டவரின் உயிர்சக்தியை கொஞ்ச கொஞ்சமாக உறிஞ்சி அவரை நோயாளியாக்குகிறது. தொடர்ந்து இவ்வாறு விரும்பத்தகாத குணங்களும், உணர்ச்சிகளும் உடல் இயக்கத்தை கெடுத்து, உடல் முழுவதும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தைக் கெடுத்துவிடுகிறது. அதன் விளைவாக அவரது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிடுகிறது. இதனால் அவ்வப்போது ஜலதோஷம், மூட்டு வலி, மலச்சிக்கல், ஜீரணக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் என இனம் காணமுடியாத நோய்க்குறிகள் ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. இவ்வியாதிகள் திரும்ப திரும்ப வந்து கொண்டேயிருக்கிறது. உதாரணமாக ஒருவருக்கு ஜலதோசம் பிடித்ததற்கு மருந்து கொடுத்தால் அது அப்போது சரியாகி மீண்டும் திரும்ப ஜலதோஷம் பிடிக்கிறது. இந்த ஜலதோஷத்திற்கு என்ன மூலக்காரணம் என்றால் – அதுதான் அவருடைய உளவியல் சார்ந்த பிரச்சனையாகும். இம்மன வியாதிக்கு மருந்து கொடுக்காத பட்சத்தில் அவர் நிரந்தர நோயாளியாகிவிடுகிறார்.

மலர் மருந்து தேர்வு பேசத்தெரியாத குழந்தைகளுக்கு மருந்து தேர்ந்தெடுப்பது எப்படி?

பேசத்தெரிந்தவர்களிடம் அவர்களின் மனக்கோளாறுகளை, உடல் கோளாறுகளை கேட்டறிந்து விடுகிறோம். ஆனால் பேசத்தெரியாத குழந்தைகளுக்கு எப்படி மருந்து கொடுப்பது? குழந்தைகள் பொய் சொல்லத் தெரியாதவர்கள் அவர்களின் நடவடிக்கைகளே , உடல் அசைவுகளே, அவர்களுடைய உண்மையான இயல்புகளை காட்டிவிடும். உதாரணமாக ஒரு குழந்தையை தூக்கிவைத்துக்கொண்டால், அதனிடம் விளையாடினால் பேசாமலிருக்கும். இது சிக்கரி என்னும் மருந்து கொடுக்கப்பட வேண்டிய குழந்தையாகும். மற்றொன்று குழந்தை, எதை கண்டாலும் பயந்து வீச்சென்று கத்தும், தன் வீட்டிலுள்ள பூனை, நாய், கன்றுபசு என எதைக் கண்டாலும் பயந்து நடுங்கும். யாரேனும் புதிய உறவினர்கள் வந்தாலும் அவர்களைக் கண்டதும் கதறி அழும் . இதற்கு “மிமுலஸ்”இதற்கு எனும் மருந்து கொடுக்கப்பட வேண்டும். மற்றொரு குழந்தை எந்த தொந்தரவும் யாருக்கும் கொடுக்காது. போட்டது போட்டவாக்கில் எந்த நேரமும் தூங்கிக்கொண்டேயிருக்கும். பசி எடுக்கும் ஆனால் பால் குடிக்க ஆர்வம் இருக்காது. இப்படிப்பட்ட குழதைக்கு “க்ளமாடிஸ்”என்னும் மருந்து கொடுத்தால்-நல்ல குணமாகும். எனவே இது போன்றே இம்மருந்துகள் ஒவ்வொருவருடைய மனநிலைக்கு ஏற்றவாறு கொடுக்கப்படுகிறது. மனநிலைக்கு மருந்து கொடுப்பதினால் உடல் நலமும் ஏற்படுகிறது.

மனிதரின் மனக்குறிகளுக்கேற்ற மலர் மருந்து

 1. அநியாயத்தால் ஏற்பட்ட துக்கத்தை மனதிற்குள் அடக்கிக் கொள்வோர் அநேகம் பேர் இவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “அக்ரிமனி”.
 2. எல்லாவற்றையும் இழந்து, அநாதையாகி விட்டோம் எறு உணர்ந்துள்ள மனிதர்களும் உள்ளனர். அவர்களுக்கும் உடல் உபாதைகள். அப்படிப்பட்ட மனநிலை உள்ளோருக்கு கொடுக்கப்பட வேண்டி மலர் மருந்து “ஆஸ்பென்”
 3. அநேகம் பேர் அநாவசியமாக உடல் பலத்தை செலவழித்து அதனால் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள் . அப்படிப்பட்டவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஆலிவ்”
 4. அறிவிருக்கும், அவர்களிடம் திறமையும் இருக்கும். ஆனால் பொறுமையிருக்காது. அதனால் மனநலம், உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பர்-அவருக்குரிய – மருந்து “இம்பேசன்”
 5. வீட்டிலும் சரி, அலுவலகத்திலும் சரி தனக்கு ஏற்கனவே ஒதுக்கிய வேலையை மட்டும் செய்வார். சமயம் சந்தர்ப்பத்துக்கு கூடுதலான சமயம் என பொறுப்பை கொடுத்தால் அதை ஏற்கமாட்டார். அதனால் அவருடைய உடல் நலம் மனநலம் பாதிக்கப்படும் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “எல்ம்
 6. ஒருவேலையும் ஒழுங்காக செய்யமாட்டார். இதில் கொஞ்சம் மற்றொன்றில் கொஞ்சம் என மனம் மாறி கொண்டேயிருக்கும். எதிலேயும் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி ஒரே வேலையில் கவனம் செலுத்த முடியாதவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயிட் செஸ்ட்நட்”
 7. இவருக்கு தன் தொழிலை மாற்றுவதுதான் தொழில் ஒவ்வொரு மணி, நாள், வாரம்-என தன் தொழிலை மாற்றிக்கொண்டு –அதனால் மனநலம் உடல் நலம் பாதிக்கப்பட்டவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “ஒயில்டு ஓட்”
 8. ஊதாரி என்றால் ஊர்சுற்றும் ஊதாரிதான் . எதற்கும் லாயக்கல்ல. எதிலும் கொஞ்சம்கூட அக்கறையில்லாதவராய் இருப்பார் அவரின் மனநிலையை மாற்றி-பொறுப்பானவராக மாற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “ஒயில்ரோஸ்”.
 9. கடினமாய் உழைப்பார் ஆனால் அதற்கான ஊதியம் கிடைக்காது விடாமல் படிப்பார், ஆனால் பரீட்சையில் பாஸ் பண்ணமாட்டார். உழைப்புக்கு உதாரணமாய் இருப்பார். அவர் வாழ்க்கையில் எந்த வெற்றியும் காணமாட்டார். அதனால் ஏற்பட்ட மனநிலை கோளாறுகளுக்கும், உடல்நிலை கோளாறுகளுக்கும் கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“ஓக்” .
 10. எதிலும் இவருக்கு அவநம்பிக்கைதான் -யாரையும் ம்பமாட்டார். அவநம்பிக்கை தான் அவரின் முதலீடு . அதனால் அன்றாடம் அநேக பிரச்சனை சந்திப்பார். அதிலிருந்து அவரை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கார்ஸ்”
 11. இவர் எந்த நேரமும் சந்தோசமாக இருப்பார்-அதற்கு காரணம் அவரது எண்ணங்களில் ஏற்படும் கற்பனை தான். அதை அப்படி செய்யலாம். இதை இப்படி செய்யலாம் என்று கற்பனையில் மிதந்தே தன் காலத்தை ஓட்டுபவர். இவரை உழைப்பில் ஈடுபடுத்த கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“கிளமாட்டிஸ்”.
 12. எங்கும் எதிலும் சுத்தம் பார்ப்பவர், இவர் எதை பார்த்தாலும் அருவருப்படைபவர். சுத்தமான பொருளையும் சுத்தம் செய்துதான் சாப்பிடுவார். இதனால் சமூகத்தில் இவர் சந்திக்கும் பிரச்சைனைகள் ஏராளம். அவரின் மனநிலை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“கிராப் ஆப்பிள்”.
 13. எதிலாவது ஏதாவது கிடைக்குமா?என ஏங்குபவர், அவரின் சுயநலமே அவரைச் சுற்றிசுற்றி வரும். அப்படிப்பட்டவரின் மனநிலையை மாற்ற கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து-“சிக்கரி”.
 14. மற்றவர்களுக்கு சேவை செய்தே ஏமாறும் ஏமாளி-தன் முன்னேற்றத்தைப் பற்றி கொஞ்சம் கூட நினைத்து பார்க்க மாட்டார். கவலைப்பட மாட்டார். இந்த ஏமாளிக்கு ஏற்ற மலர் மருந்து-“சென்டாரி”.
 15. தன்னிடம் நிறை திறமை இருக்கும் ஆனால் அத்திறமையைப் பற்றி அறியமாட்டார்-எதற்கெடுத்தாலும் பிறரின் ஆலோசனைப்படிதான் நடந்து கொள்வார். அதனால் பல துன்பங்களை அனுபவிப்பார். தன் திறமையை உணர –சாப்பிடவேண்டிய மலர் மருந்து-“செரட்டோ”.
 16. இவரின் மனநலத்தை , உடல்நலத்தை , இவரால் கட்டுப்படுத்த முடியாது. நரம்பு மண்டல கோளாறுகளுக்கு ஆளாவர். இவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“செர்ரிப்பளம்”.
 17. போதுமான வயது இருக்கும், ஆனால் அதற்கேற்ற அறிவு வளர்ச்சி இருக்காது. நிறைய படித்திருப்பார் ஆனால் பண்பாடு இருக்காது. அப்படிப்பட்டவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “செஸ்ட் நட் பட்”.
 18. தன் ஒழுக்கம், தன் கட்டுபாட்டை கடைபிடிப்பவர். மற்றவர்களுக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என விரும்புவர். அப்படியே மற்றவர்களும் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்ப்பார்ப்பவர். எதிர்பார்ப்பு ஏமாற்றமானால் என்னவாகும்-மனநிலை பாதிக்கும். அத்தகையோருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து “பீச்”.
 19. தன்னம்பிக்கை இல்லாதவர்களும் இவ்வுலகில் உண்டு. அவர்களுக்கேற்ற மலர் மருந்து-“லார்ச்”.
 20. தன்னையும், தன் ஆத்ம சக்தியை அறியாதவர்கள் அநேகம் பேர்-அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து –“மஸ்டார்டு”.
 21. பயப்படும் சூழ்நிலையில் வாழ்வோருக்கு கொடுக்கப்பட வேண்டிய மலர் மருந்து “மிமுலஸ்”.
 22. இயற்கை சீற்றங்களுக்கும், மற்றவர்களின் மிரட்டல்களுக்கும் பீதியடைபவர். சின்ன சின்ன விவசாயங்களுக்கெல்லாம் பீதியடைவார். அவரை தேற்ற கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“ராக்ரோஸ்”.
 23. தன்னளவில் கடுமையான ஆச்சாரங்களை கடைபிடிப்பவர். கல் மனம் என்பார்களே , அவர் மனமும் அப்படிதான். அவருக்குரிய மலர் மருந்து-“ராக் வாட்டர்”.
 24. தன் துயரம் கண்டுகொள்ளமாட்டார். ஆனால் தம் உற்றார் உறவிர்களின் துன்பம் கண்டு கலங்குபவர். என்னாகுமோ என பயப்படுபவர். இவருக்குரிய மலர் மருந்து “ரெட் செஸ்ட் நட்”.
 25. நோய் எதிப்பு ஆற்றல் அறவே அற்றவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வால் நட்”.
 26. தன்னைவிட யார் உயர்ந்தவர்-தனக்குள் அடக்கம் தான் யாவரும் என்ற எண்ணமுடையவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து-“வாட்டர் வயலட்”.
 27. பிறரை அடக்கியாள நினைக்கும் கர்வமுடைய சர்வாதிகாரி. இவருக்கேற்ற மலர் மருது “வைன்”.
 28. கொஞ்சம் கூட சளைக்கமாட்டார். ஓய்வே தேவைப்படாது. அதுவும் அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்துக் கொண்டேயிருப்பார். இவருக்கு கொடுக்கப்படவேண்டிய மலர் மருந்து ”வெர்கூஷவன்”.
 29. பிறரை குற்றம் சொல்வதே வேலை. ஆனால் தான் கற்றுக் கொள்ளாதவர். தன் தவறுகளை திருத்திக்கொள்ள மறுப்பவர். அவரை நியாயப்படுத்தி பேசுபவர் கொஞ்சம் கூட மாறமாட்டார். ”வில்லே” என்ற மலர் மருந்து கொடுத்தால் இவரை மாற்றி விடும்.
 30. தனக்கு ஏற்படும் சாதாரண தோல்விகளையும், தடைகளையும் கண்டு கலங்கி துவண்டு போய்விடுவார். ” ஜென்சியன்”என்ற மலர் மருந்தை இவருக்கு கொடுத்தால் தேறிவிடுவார்.
 31. கடந்தகால சம்பவங்களை நினைத்து வருந்தி கொண்டிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய மலர் மருந்து ”ஹனிசக்கிள்’.
 32. ”ஹார்ன்பீம்” என்ற மலர் மருது மிக அதிக அளவில் சக்தியை இழநதவர்களையும், மனச்சோர்வு உடையவர்களையும் தேற்றிவிடும்.
 33. எதிலும் முன்னெச்சரிக்கை உடையவர். கொஞ்சம் கசப்பு, வெறுப்புடன் பழகுபவர். இவருக்குரிய மலர் மருந்து”ஹால்லி”.
 34. சாவு இடத்திலே கூட தன்னைப்பற்றியே பேசுவார். ”ஹீதர்”என்ற மலர் மருந்து அவரை அற்புதமாக மாற்றி விடும்.
 35. இரண்டு மனதிற்கு சொந்தக்காரர். குழப்பத்திலே மிதப்பவர். ”ஸ்கிளராந்தஸ்” என்னும் மலர் மருந்து அவரை மாற்றிவிடும்.
 36. அதிர்ச்சிக்குள்ளானவரை “ஸ்டார் ஆப் பெத்லஹேம்” என்ற மலர் மருந்து அற்புதமாக மாற்றிவிடும்.
 37. உதவி செய்யத் தெரியாமல், உதவப்போய் தலைகுனிவை ஏற்படுத்திக் கொள்பவர்களை- “பைன்” என்ற மலர் மருந்து தேற்றிவிடும்.
 38. எந்த துயரம் வந்தாலும் யாரையும் அழைக்கமாட்டார். ஏன் இறைவனையும் அழைக்கமாட்டார். “ஸ்வீட் செஸ்ட்நட்”என்னும் மலர் மருந்து அவருக்கு ஆறுதல் சொல்லும்.

மலர் மருந்து உட்கொள்ளும் அளவு விகிதம், நேரம்

மலர் மருந்தில் ஒரு துளியை அரை அவுன்ஸ் தண்ணீரில் கலக்கி ஒரு வேளை மருந்தாக சாப்பிடலாம், இப்படி ஒரு நாளைக்கு பல முறை சாப்பிடுவதில் சிரமம் இருப்பின், மாத்திரையாகவும் உபயோகிக்கிலாம்.

பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட பால்சர்க்கரை உருண்டை (மாத்திரை) கடுகு அளவுகளிலிருந்து குண்டுமணி அளவு மாத்திரைகளும் கிடைக்கின்றன. குண்டுமணி அளவு மாத்திரை ஒரு வேளைக்கு இரண்டும், நடுத்தர மாத்திரைகள் நான்கும், கடுகளவுள்ள மாத்திரைகள் எட்டும் சாப்பிடுவது சரியானதாகும். சிறுவர்களுக்கு இதில் பாதி கொடுத்தாலே போதும். சகல மலர் மருந்துகளுக்கும் ஒரே அளவு தான். ஹோமியோ, பயோ மருந்துகளைப் போல் இம்மருந்துகளிலும் நச்சுத்தன்மையில்லை. எனவே அளவு அவ்வளவு முக்கியமல்ல. பிறந்த குழந்தை முதல் யாவரும் அவரவர் குணம் குறிகளுக்கு ஏற்ப மருந்து தேர்வு செய்து கொடுக்கப்படுகிறது. நீடித்த வியாதிகளில் தினம் 4 முறையும், தீவிர வியாதிகளில் 3 மணிக்கொரு முறையும், ஆபத்தான சமயங்களில் 5-நிமிடங்களுக்கொரு முறையும் கொடுக்கப்படுகிறது. இதுபோன்று இம்மலர் மருந்துகளை தனியாகவும் கொடுக்கலாம் அல்லது ஹோமியோபதி மருந்துகள் கொடுக்கும்போதே இதையும் சேர்த்துக் கொடுக்கலாம். இம்மருந்துகள் தாழ்ந்த வீரியம் என்பதால் இவற்றை முழு குணம் கிடைக்கும் வரை கொடுக்கலாம். ஆனால் அவசர நிலைமைகளில் ஒரு சில வேளைகளே போதும். மலர் மருந்து தேர்வு உட் கொள்ளும் அளவு, விகிதம், நேரம் இரண்டையும் ஒன்றாக்கவும்.

கட்டுரை: மேக்னம், தமிழ்நாடு

Filed under:
3.01801801802
நிஜாமுதீன் May 28, 2016 05:09 PM

மண்சிகிச்சை பற்றி சொன்னீங்க, அதற்கு எந்த வகையான மண்ணை பயன்படுத்தலாம். எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம். நிற்க வைத்தா இல்லை படுக்கவத்தா, சரியாக சொல்லவும்.

MEENA Aug 23, 2015 05:40 PM

SIR.I AM 38 YEARS OLD.I STUDIED DIPLOMA IN ARCHITECTURE.NOW AM VERY INTERESTED TO STUDY YOGA AND NATUROPATHY. IS THAT POSSIBLE?.KINDLY SEND ME THE DETAILS *****@gmail.com. ph.no.86*****69

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
Back to top