பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / மருத்துவ முறைகள் / ஆயுஷ் / சித்த மருத்துவம் / அக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அக்கரகாரம் மூலிகைச்செடியின் மருத்துவ நன்மைகள்

அக்கரகாரம் மூலிகைச்செடியின் பல்வேறு மருத்துவப் பலன்கள் பற்றி படித்து பயன்பெறவும்.

அறிமுகம்

அக்கரம் என அழைக்கப்படும் அக்கரகாரம் மூலிகைச்செடி, கருமண் நிலங்களில் நன்கு வளரும், இளம் பச்சை நிறத்தில் பெரிய இலைகளைக் கொண்ட இந்தச் செடிகளின் மலர்கள், இள மஞ்சள் வண்ணத்தில் சிவப்பு நிறம் கலந்து காணப்படும். அதிக கிளை வேர்களைக் கொண்டு விளங்கும் அக்கர காரத்தின் வேர்களே, மிக்க மருத்துவப் பலன்கள் கொண்டவை.

தமிழகத்தில் அரிதாகக் காணப்படும் அக்கரகாரம், வட மாநில மலைப் பிரதேசங்களில் அதிக அளவில் வளர்க்கப்படுகிறது. மருத்துவ நன்மை மிக்க அக்கரகாரத்தின் வேர்கள், உடலில் ஏற்படும் வாத வியாதிகளைப் போக்குவதிலும், நரம்புத் தளர்ச்சி பாதிப்பால் ஏற்படும் காக்கா வலிப்பு போன்ற வியாதிகளைத் தீர்த்து, மூளையின் இயக்க ஆற்றலை மேம்படுத்தும் சக்தியும் மிக்கது.

உமிழ் நீரைப் பெருக்கி, தொண்டையில் ஏற்படும் உள் நாக்கு பாதிப்பை சரியாக்கும். அக்கரகார வேரை வெறுமனே நாவில் இட்டு சுவைக்க, உதடு, நாக்கில், விறுவிறுப்பும், சிறு எரிச்சலும் உண்டாக்கும் தன்மை படைத்தது. அக்கரகாரம் வேரில் இருந்து எடுக்கப்படும் "பைரித்திரின் ஆயில்" பல்வேறு மருத்துவப் பலன்கள் கொண்ட மருந்துகளில், சேர்க்கப்படுகிறது.

மருத்துவ நன்மைகள்

 • சிலருக்கு உள்நாக்கு வளர்ந்து, பேச முடியாமல் தொண்டை கட்டிக்கொண்டு வலிக்கும். இவர்கள் எல்லாம், சிறு அக்கரகார வேர்த் துண்டை, வாயில் இட்டுக் கொண்டு, உமிழ்நீரை விழுங்கி வர, தொண்டை உள்நாக்கு பாதிப்பு, குரல் கம்முவது, தாகமெடுப்பது போன்ற பாதிப்புகள் விலகும்.
 • சிறிய அளவு அக்கரகாரத்தை சற்றே அரைத்து, ஒரு பாத்திரத்தில் இட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, நன்கு கொதிக்க வைத்து, கால் லிட்டர் அளவில் தண்ணீர் வற்றியவுடன், எடுத்து ஆற வைத்து, தினமும், அதில் சிறிதளவு வாயில் இட்டு அதக்கிக் கொண்டு, சற்று நேரம் வைத்திருந்து கொப்புளித்து உமிழவும். இதுபோன்று, தினமும் இரண்டு மூன்று முறைகள் வீதம், மூன்று நாட்கள் கொப்புளித்து வர, வாயில் உண்டான புண்கள், தொண்டைப் புண், பல் வலி மற்றும் பல் ஆடுதல் போன்ற பாதிப்புகள் விலகி விடும். மேலும், பற்களில் ஏற்படும் சொத்தை மற்றும் புழுத்தொல்லை பாதிப்பும் நீங்கிவிடும்.
 • அக்கரகார வேர்களை குழித்தைல முறைப்படி காய்ச்சி, தைலம் எடுத்து, அந்தத் தைலத்தை உடலில் தொடுதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் இடங்களில் தினசரி மெதுவாக தடவி வர, விரைவில் அந்த இடங்களில், தொடுதலின் உணர்வை உணர முடியும். உடல் தளர்வையும் போக்கும்.
 • அக்கிரகார சூரணத்துடன் இந்துப்பு கலந்து, புளித்த நீர் அல்லது எலுமிச்சை சாறு விட்டு நன்கு மையாக அரைத்து, அதைத் தனியே எடுத்து வைத்துக் கொண்டு, உள் நாக்கில் தடவி வர, உள் நாக்கில் ஏற்பட்ட தொற்று வியாதி பாதிப்புகளால் ஏற்பட்ட புண்களால் தொண்டைக் கட்டி பேச முடியாமல், தண்ணீர் பருக முடியாமல், உணவு உண்ண முடியாமல், உடல் மன வேதனை அடைந்து வந்தவர்கள், அந்த பாதிப்புகள் யாவும் விரைவில் நீங்கி, அதன் பின்னர் நலமுடன் பேசவும், உணவு உண்ணவும் முடியும்.
 • திடீரென மயங்கி விழுந்து, பற்கள் கட்டிக் கொண்டவர்களுக்கு, அக்கிரகார சூரணத்தை, மூக்கில் வலுவாக உட்செலுத்த, உடனே மயக்கம் விலகி, பற்கள் கட்டிக் கொள்ளும் பாதிப்பு விலகி, சுய நினைவை அடைவர். காக்கா வலிப்பு வியாதியும் விலகும்.
 • மனிதர்களுக்கு நரம்புத் தளர்ச்சி பாதிப்பால் ஏற்படும் காக்கா வலிப்பு வியாதி, உடலுக்கு மிகவும் அதிக பாதிப்புகள் தருவதும், மனதுக்கு வேதனைகள் தருவதுமாக விளங்குகிறது. இந்த பாதிப்புகளைத் தடுக்க, அக்கரகாரத்துடன் துணை மருந்துகள் சேர்த்து செய்யும் சூரணம் ஒரு தீர்வாக அமையும்
 • அக்கிரகாரம், குங்குமப்பூ, ஜாதிக்காய், சந்தனம், கிராம்பு, சுக்கு, திப்பிலி மற்றும் அபின் சேர்த்து, நன்கு இடித்து, தூளாக்கி, பனங்கற்கண்டு சேர்த்து பத்திரப்படுத்தி, வைத்துக் கொண்டு, அந்த சூரணத்தில் சிறிதளவு எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வர, வயிற்று வியாதிகள் மற்றும் நரம்புத் தளர்ச்சி பாதிப்புகள் விலகி, உடல் வலுவாகும்.
 • அக்கிரகாரம், அதி மதுரம், சுக்கு மற்றும் சித்தரத்தை சேர்த்து அரைத்து, பொடியாக்கி, சிறிது எடுத்து பாலில் கலந்து, அதில், அரைத்து பாலில் வேகவைத்த பேரிச்சம் பழ விழுதைக் கலந்து, தேன் சேர்த்து, தனியே வைத்துக் கொள்ளவும். கடும் ஜுரம் மற்றும் குளிர் ஜுரம் உள்ள நேரங்களில், உடலில் உள்ள நீர்ச்சத்து எல்லாம் ஆவியாகி விடும். இதனால் உடலில் நீர்ச்சத்து இன்மையால், நாக்கில் ஏற்படும் வறட்சிக்கு, இந்தத் தேன் விழுதை சிறிதளவு நாக்கில் தடவ, நாவில் ஏற்பட்ட வறட்சி விலகி, உமிழ்நீர் சீராக சுரக்க ஆரம்பிக்கும், ஜுரத்தின் வேகமும் மட்டுப்படும்.
 • நா வறட்சி ஏற்படும் சமயங்களில் சிலருக்கு, மலச்சிக்கல் ஏற்படக்கூடும், அதற்கு தீர்வாக, இந்த அக்கரகார தேன் மருந்தில், கடுக்காய் சூரணமும் சேர்த்து, மேற்கண்ட முறையில் தயார் செய்து, பயன்படுத்த, நாவறட்சி பாதிப்புகள் நீங்கி, மலச்சிக்கலும் சரியாகி விடும்.
 • உடலின் இயக்கத்துக்கும், மனதின் ஆற்றலுக்கும் கட்டுப்பாட்டு மையமாக விளங்கும் மூளை, சரியாக இயங்கா விட்டால், சரியாக சிந்திக்க முடியாது, ஞாபக மறதி அதிகரிக்கும், உடலில் சோர்வு உண்டாகும், இது போன்ற நிலைகளில், பாதிப்பைக் களைந்து, மூளையின் ஆற்றல் சீராக, அக்கரகார வல்லாரை மருந்து உறுதுணை புரியும். அக்கரகாரம், வல்லாரை மற்றும் பூனைகாலி இவை மூன்றையும் சமமாக கலந்து தினமும், இருவேளை பாலில் கலந்து சாப்பிட்டு வர, மூளையின் செயல்பாட்டை சீராக்கும் ஹார்மோன் சுரப்பை அதிகரித்து, சிந்திக்கும் திறனை மேம்படுத்தும். ஞாபக சக்தி மீண்டும் இயல்பாகும்.
 • உடலில் மெட்டபாலிசம் எனப்படும் வளர்சிதை மாற்றம் அதிகரித்து, கெட்ட செல்கள் வெளியேறி, உடலில் புதிய செல்கள் உருவாகும். இதன் மூலம், உடலின் வனப்பும் பொலிவும் அதிகரித்து, மனதில் உற்சாகம் தோன்றும், செய்யும் செயல்களில் ஈடுபாடு ஏற்படும்.
 • அக்கிரகாரம், அதி மதுரம் மற்றும் கரிசலாங்கண்ணி இம்மூன்று மருந்துகளையும் தனித்தனியே இடித்துத் தூளாக்கி, பின்னர் அவற்றை சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து காலை வேளைகளில் தினமும் சாப்பிட்டு வர, குரலில் இனிமை கூடும். அக்கிரகார வேரைப் போலவே, அக்கிரகாரச் செடியின் தண்டின் பட்டையும் மருத்துவ குணங்கள் மிக்கதாகும்.
 • அக்கிரகாரப் பட்டையை சூரணம் செய்து, அதில் சிறிதளவு எடுத்து அரை லிட்டர் நீரில் கலந்து, சுண்டக் காய்ச்சி, மூன்றில் ஒரு பங்கு அளவில் வந்ததும், இறக்கி ஆற வைத்து, பருகி வர, அதிக தாகம், நாக்கு வறண்டு போவது, தலைவலி போன்ற பாதிப்புகள் விலகும்.
 • அக்கரகாரப் பட்டை சூரணத்தை தேனில் கலந்தும் அல்லது பனங்கற்கண்டு சேர்த்தும் தினமும் இரு வேளை சாப்பிட்டு வரலாம். மேற்கண்ட பாதிப்புகள் யாவும் சரியாகி விடும்.

ஆதாரம் - ஒன்இந்திய நாளிதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top