பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

கடுகு - மருத்துவ குணங்கள்

கடுகின் மருத்துவ குணங்கள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பார்கள். அதுபோல ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது கடுகு. திரிகடுகம் என்னும் மூன்று மருத்துவ பொருட்களில், முதல் இடம் கடுகிற்கு உண்டு. அதனால் தான் எல்லா குழம்புகளிலும் கடுகை தாளித்து சேர்க்கிறார்கள்.

கோடை காலங்களில் உடலில் ஏற்படும் கட்டிகளுக்கு கடுகு அரைத்துப் பூசப்படுகிறது. கடுகு விதைகளில், உடலுக்கு அவசியமான எண்ணைச் சத்து உள்ளது. மேலும் சினிகிரின், மைரோசின், எருசிக், ஈகோசெனோக், ஆலிக், பால்மிடிக் போன்ற அத்தியாவசிய அமிலங்களும் நிறைந்துள்ளன.

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.

போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.

நியாசின் (விட்டமின் பி-3) ரத்தத்தில் கொழுப்பின் அளவை கட்டுக்குள் வைக்கும். கால்சியம், மாங்கனீஸ், தாமிரம், இரும்பு, செலினியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கடுகில் உள்ளது. கால்சியம் எலும்புகளின் உறுதிக்கும், தாமிரம், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், இரும்பு செல்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் ரத்த அணுக்கள் உற்பத்தியிலும் பங்கெடுக்கின்றன.

இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.

பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு உள் உறுப்புகளை தூண்டும் தன்மையை உடையது. பசியை தூண்டக் கூடியது.

மணத்துக்காகவும் சுவைக்காகவும் பயன்படுத்தும் கடுகை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சிறிது தேன் விடவும். இதனுடன் லேசாக வறுத்து பொடி செய்த கடுகை சேர்த்து சூடுபடுத்தினால் இளகிய பதத்தில் வரும். இது ஆறியவுடன் சுண்டைக்காய் அளவுக்கு எடுத்து சாப்பிட்டால் இருமல் கட்டுக்குள் வரும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.

கடுகை பயன்படுத்தி தொடர் விக்கலுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். கடுகு பொடியில் நீர் விட்டு குலைத்து, அதை மெல்லிய துணியில் வைத்து தொண்டைக்கு அருகே வைத்தால் விக்கல் சரியாகும்.

மஞ்சள் நிற பூக்களை உடைய கடுகு செடியை எளிதாக பயிர் செய்யலாம். கடுகு ஒற்றை தலைவலிக்கு மருந்தாகிறது.

ஜீரண கோளாறுகளை சரிசெய்யும் தன்மை உடையது. கடுகை குறைந்த அளவுக்கே உபயோகப்படுத்த வேண்டும்.

அதிகளவில் எடுத்துக் கொண்டால் குமட்டல், வாந்தி ஏற்படும். பூச்சி, வண்டு கடி விஷத்தை முறிக்கும் தன்மை கடுகுக்கு உண்டு.

புளி ஏப்பம், வயிறு உப்புசத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கடுகு பொடி, சீரகப் பொடி, பூண்டு, இஞ்சி, பெருங்காயப் பொடி, உப்பு. பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் விடவும். இதில் 2 பல் பூண்டு தட்டி போடவும்.

சிறிதளவு இஞ்சி, கால் ஸ்பூன் சீரகப் பொடி, சிறிது பெருங்காயம். சிறிதளவு கடுகுப் பொடி, 2 சிட்டிகை உப்பு ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர புளி ஏப்பம் சரியாகும். அஜீரணம் கோளாறு, வயிறு உப்புசம் குணமாகும்.

கடுகு செடியை பயன்படுத்தி ஒற்றை தலைவலிக்கான மருந்து தயாரிக்கலாம். கடுகு செடியை சிறுதுண்டுகளாக வெட்டவும். இதில் போதுமான அளவு நீர்விட்டு கொதிக்க வைத்து நீராவி பிடித்தால் ஒற்றை தலைவலி,  தலைபாரம், இருமல், நெஞ்சக சளி, மூக்கடைப்பு சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கடுகு ரத்தத்தை சுத்தப்படுத்தும். வலி நிவாரணியாக பயன்படுகிறது. வலியை குறைக்கும். மாதவிலக்கு பிரச்னையை தீர்க்கிறது.

கடுகை பயன்படுத்தி வறட்டு இருமலுக்கான தேனீர் தயாரிக்கலாம். கால் ஸ்பூன் கடுகு எடுத்து லேசாக வறுக்கவும். இதை இடித்து எடுக்கவும். இந்த பொடியில் ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். வடிகட்டி தேன் சேர்த்து குடிப்பதால் சளி, காய்ச்சல், இருமல், உடல் வலி, கண்களில் நீர் வழிதல் போன்ற பிரச்னைகள் இல்லாமல் போகும். இந்த தேனீரை 50 முதல் 100 மில்லி வரை குடிக்கலாம்.

இருமலுக்கு கடுகு உன்னதமான மருந்தாகிறது. பல்வேறு நன்மைகளை கொண்ட கடுகு காரம் மிக்கது, உடலுக்கு உஷ்ணத்தை தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. காய்ச்சலை தணிப்பதுடன் வலியை குறைக்கும். வீக்கத்தை கரைக்கிறது. எளிதில் கிடைக்கூடிய விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வயிற்று வலியை போக்கும் முறையை பார்க்கலாம். வீட்டில் இருக்கும் சமயத்தில் திடீரென வயிற்று வலி ஏற்பட்டால், சுமார் 6 சொட்டு அளவுக்கு விளக்கெண்ணெய் எடுத்து, தொப்புளை சுற்றி போடவும். இவ்வாறு செய்தால் சிறிது நேரத்தில் வயிற்று வலி இல்லாமல் போகும்.

ஆதாரம் - தினகரன் நாளிதழ்

2.97959183673
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top