பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

யோகா பயிற்சி

ஆரோக்கியமான, சமநிலையான, மன அழுத்தமற்ற வாழ்க்கையை நடத்துவதற்கு யோகா பயிற்சி

அறிமுகம்

உலகம் முழுவதும் யோகா இப்போது பிரபலமாகி இருக்கிறது. நிலப்பகுதிகள், மதம், சாதி, சம்பிரதாயங்கள், தேசம் ஆகிய எல்லைகளைக்கடந்து தனது தனித்தன்மையினாலும், உடல் நலத்தை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தகுந்த பங்களிப்பை வழங்குவதன் மூலமும், வாழ்க்கைமுறை மாற்றங்களால் ஏற்படக்கூடிய குறைபாடுகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கு உதவக்கூடிய பிணிநீக்கப்பங்கின் காரணமாகவும் உலகம் முழுவதும் அறியப்படக்கூடியதாக யோகா இருக்கிறது. யோகா என்பது ஒரு ஆன்மிக ஒழுக்கம். உடலுக்கும் மனதிற்கும் இடையே பரிபூரணமான நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதில் யோகா கவனம் செலுத்துகிறது.

தற்போதைய காலம் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும் காலம். இதன் காரணமாக வாழ்க்கை வசதிகள் கூடி இருக்கின்றன. ஆயினும் பொருத்தமற்ற வாழ்க்கை முறைகள், சுற்றுச்சூழல் நிலைமைகள், மாசுக்கள், நவீன காலத்தின் பணிமுறைகள் போன்றவை வாழ்க்கையைக் கடினமாக்கி இருக்கின்றன. உடல், மனம், அறிவு, உணர்ச்சி, சமூகம், ஆன்மிகம் போன்ற வாழ்க்கையின் அனைத்துப் பரிமாணங்களிலும் இவை பிரச்னைகளை உருவாக்கி இருக்கின்றன. பாரம்பரிய மருத்துவ முறைகள் உட்பட பிற மருத்துவமுறைகளும் கூட யோக சிகிச்சையைப் பரிந்துரைப்பதற்கு இந்த நிலை வழி செய்கிறது.

நம்முடைய பெருமைமிகுந்த பாரம்பரியம் தந்திருக்கும் விலைமதிப்பற்ற பரிசு யோகாவாகும். மனதையும், உடலையும் சிந்தனையையும், செயலையும், நிதானம், திருப்தி, இயற்கைக்கும் மனிதனுக்குமான ஒத்திசைவு ஆகியவற்றையும் உள்ளடக்கியதாக யோகா இருக்கிறது. உடல்நலம், சிறக்கவாழ்தல் ஆகிய இரண்டிற்குமான பரிபூரண அணுகுமுறையாகவும் இது உள்ளது. யோகா என்பது உடற்பயிற்சி பற்றியது அல்ல. உலகிற்கும் இயற்கைக்குமான ஓர் மையை அறிவதற்கும், நமக்குள்ளேயே ஒரு ஓர் மை உணர்வைக் கண்டுபிடிப்பதற்குமானது.

நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலமும், உணர்வு நிலையை உருவாக்கி கொள்வதன் மூலமும் பருவநிலை மாற்றங்களைச் சமாளிப்பதற்கு யோகா உதவி செய்யும்.

ஐக்கிய நாடுகள் சபை 177 நாடுகளின் ஆதரவுடன் ஜூன் 21ஆம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது. தற்போது ஒட்டுமொத்த உலகமும் சர்வதேச யோகா தினத்தை முழுமையான உற்சாகத்துடனும், வைராக்கியத்துடனும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சர்வதேச யோகா தினத்தைக்கொண்டாடும் பொறுப்பு ஆயுஷ் அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற அமைச்சகங்களும் பொருத்தமான வகைகளில் ஆதரவு அளித்து வருகின்றன.

யோகா - விளக்கம்

பழங்கால இந்திய முனிவர்களால் உருவாக்கப்பட்ட ஆன்மிக அறிவியலே யோகாவாகும். யோகா என்பது ஒரு முழுமையான வாழ்க்கை முறையாகும். இதன் வேர்கள் இந்தியப்பண்பாட்டிலும், பாரம்பரியத்திலும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன. ரிஷிகள், முனிவர்களால் ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இது வளர்த்தெடுக்கப்பட்டது. நம்முடைய பழமையான வேதங்கள் அனைத்திலும் யோகா பற்றிய பதிவுகள் காணக்கிடைக்கின்றன. இடைக்கால, நவீன கால, தற்கால இலக்கியங்களிலும் கூட யோகா காணப்படுகிறது. பதஞ்சலியின் யோக சூத்திரங்கள் (கி.மு.400) ஒழுங்குமுறைசார்ந்த மூல வாக்கியங்கள் என்று நம்பப்படுகின்றன. இவை பற்றி பல்வேறு உரைகளை உரையாசிரியர்கள் எழுதிஉள்ளனர். அஷ்டாங்க யோகா என்று பிரபலமாக அறியப்படும் யோகாவின் எட்டு பாதைகளை பதஞ்சலி தந்துள்ளார். இந்த அஷ்டாங்க யோகா ஒரு தனி மனிதனின் அனைத்துக் கூறுகளையும் கவனத்தில் எடுத்துக்கொள்கிறது.

யோகா மருந்தில்லாத ஒரு சிகிச்சை முறை. உடல் நலம் பேணும் ஒரு முறை, ஆரோக்கியமாக வாழ உதவும் முறை. உடல்நலம், நோய், ஆகியவை பற்றி தனக்கே உரிய கருத்துக்களை யோகா கொண்டிருக்கிறது. உடல் நலம் தொடர்பான முழுமையான அணுகுமுறையின் மீது யோகா முக்கியத்துவம் தருகிறது. உடல், மனம், ஒழுக்கம், உணர்ச்சிநிலைகள், ஆன்மிகக்கூறுகள் ஆகியவற்றை உள்ளடக்கியது யோகா. மிகவும் எளிமையாகப் பின்பற்றக்கூடிய பல எளிய ஆரோக்கிய வாழ்வியல் நடைமுறைகளை யோகா பரிந்துரைக்கிறது. இவை நல்ல உடல் நலத்திற்கும், நோய்களைத் தவிர்ப்பதற்கும் உதவக்கூடியவை. அன்றாட நடைமுறையில் வழக்கமான ஒன்றாக ஒருங்கிணைத்துக் கொள்ளப்படக்கூடியவை. மற்ற சிகிச்சைமுறைகளுடன் சேர்த்தும், அதற்குத்துணையாகவும் யோகாவை நடைமுறைப்படுத்த இயலும். மனிதகுலத்தின் நலவாழ்வுத் தேவைகளைச் சந்திக்கும் விதமாக, புதிய யோகா பயிற்சி முறைகள் ஆராய்ச்சியாளர்களாலும், பயிற்சியாளர்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுவருகின்றன. யோகா தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. பல்வேறு விதமான வாழ்க்கைப் பாதைகளில் பயணிப்போருக்கும் யோகா பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. நலத்தை மேம்படுத்தி அதனைப்பாதுகாப்பதற்கு மட்டுமில்லாமல் பல்வேறு விதமான நோய்களை நிர்வகிப்பதற்கும் கூட இந்த விழிப்புணர்வு உதவுகிறது. மன அழுத்ததால் தூண்டப்படும் குறைபாடுகள், உடலும் மனமும் சார்ந்த குறைபாடுகள் ஆகியவற்றைத் தவிர்ப்பதற்கான திட்டமாக குருமார்கள் பலரும், மருத்துவத் தொழில்முறையாளர்களும் யோகா வாழ்க்கை முறையை ஊக்குவித்துவருகின்றனர்.

யோகாப்பயிற்சிகள் நலவாழ்வு மேம்படவும், நோய்களைத்தவிர்க்கவும், உடல் மனம் சார்ந்த குறைபாடுகளை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கும், உயர்நிலை பிரக்ஞையை சிறப்புற புரிந்துகொள்வதற்கும் இட்டுச் செல்கின்றன. யோகா வழிமுறை ஒரு முழுமையான அணுகுமுறை உடையதாக, ஒருவரை முழுமையான நபராகக்கருதி அணுகும் முறையைக் கொண்டதாக உள்ளது.

யோகாவின் பிரபலமான பயிற்சி முறைகளில் கிரியா (தூய்மைப்படுத்தும் நடைமுறைகள்), சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், பிரணாயாமம் (மூச்சுப்பயிற்சிகள்), இறுக்கத்தளர்வு நுட்பங்கள், பந்தங்கள், முத்ராக்கள், தியானம் போன்றவை இடம்பெற்றுள்ளன.

சூரிய நமஸ்காரம்

சூரியனை வணங்கும் இந்த முறை மிகுந்த பயன் தரக்கூடிய பிரபலமான யோகப் பயிற்சி வழிமுறையாகும். இதில் தொடர்ச்சியான 12 தோற்றப்பாங்குகள் உள்ளன. இவை அனைத்தும் அதிகாலை நேரத்தில் சூரிய உதயத்தைப்பார்த்தபடி செய்யப்படவேண்டியவை. இந்தப்பயிற்சி நம்முடைய நரம்பு, சுரப்பி மண்டலங்களையும், நரம்பு தசைமண்டலத்தையும் அதிக ஆற்றல் பெற செய்யக்கூடியவை. தொடர்ச்சியாக இந்தப்பயிற்சியை செய்துவரும்போது, நம் உடலில் உயிர்க்காற்று நிரம்பிய இரத்தஓட்டம் சீராக இருப்பதற்கு உதவுகிறது. உடலில் உள்ள அனைத்து இயக்க மண்டலங்களின் கச்சிதமான ஒத்திசைவுக்கும் இது துணை செய்கிறது. இதனால் மனித உடல், மனஅமைப்பு முழுமையும் வலுப்பெற்று உற்சாகம் பெறுகிறது.

ஆசனங்கள்

உடல் அங்கங்களை நீட்டி மடக்கி ஆசனங்களைக் குறிப்பிட்ட நிலைகளில் குறிப்பிட்ட தோற்றப்பாங்குகளில் செய்வது உடலையும் மனதையும் நிலைபடுத்துவதற்கு உதவக்கூடியது. தசைநார்களின் பொதுவான தொனியை நிலை நிறுத்துவது ஆசனங்களின் நோக்கமாகும். அங்கஸ்திதிகளின் செயல்பாட்டை ஆளுகை செய்வது உடல் மட்டுமல்ல. மனம் நரம்பு ஆகியவற்றின் இயக்கமும் ஆகும். ஆசனங்களை மிகுந்த சிரமப்படாமல் செளகரியமான முறையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்ந்து செய்துவர வேண்டும்.

பிரணாயாணம்

பிரணாயாமப்பயிற்சிகள் சுவாசத் தூண்டல்களில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருவதற்கு உதவுகின்றன. மூச்சை வசதியாக நீண்ட நேரத்திற்கு அடக்குவது யோகா மூச்சுப்பயிற்சி முறையில் மிக அவசியமான ஒரு உத்தியாகும். இந்தப்பயிற்சியைக் கைகொள்ளுவதன் முக்கியமான நோக்கம் தன்னியக்க நரம்பு மண்டலத்தின் மீது கட்டுப்பாட்டைக் கொண்டு வந்து அதன் மூலம் மனம் சார்ந்த செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி ஒழுங்கு படுத்துவது ஆகும். தியானம் போன்ற உயர் யோகாப்பயிற்சிகளில் இது பயன்படக் கூடியதாக உள்ளது.

தியானம்

மனம் எதில் நிலைகொண்டுள்ளதோ அந்த திசை நோக்கி தொடர்ச்சியாகவும் இடையீடின்றியும் மன ஓட்டம் இருக்கும்படி செய்வதே தியானம் எனப்படுகிறது. தியானத்தின் அடிப்படைக் கொள்கை அக விழிப்புணர்வை வளர்ப்பது என்பதாகும். வெளி உலகப்பொருள்களில் இருந்து பொறி புலன்களை விலக்கிகொள்ளும் ஆரம்ப நிலையில் இருந்து தொடங்கி புறச்சூழலை முழுமையாக மறந்துவிடும் அளவுக்கு மனதின் செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொணர்வதை உள்ளடக்கியதாக இந்தப் பயிற்சி உள்ளது. ஒரு தனி நபரின் கவனம் என்பதிலிருந்து அனுபவம் என்பதை நோக்கி திரும்பக்கூடிய, முழு ஈடுபாட்டைப் பெறக்கூடிய வழிமுறையே தியானமாகும். முறையான தியானப்பயிற்சியின் மூலம் சிதறாத ஆழ்ந்த கவனத்தைச் செலுத்தும் சக்தியை ஒருவர் பெறுகிறார். இதன் மூலம் உடலாற்றல் பெருகுதல், மன உணர்வு சிறத்தல், திறன் கூடுவது, படைப்பாற்றல், அமைதி, நினைவாற்றல். அறிவாற்றல், மன ஆற்றல், உள்ளுணர்வுத்திறன் மிகுதல் போன்ற பலவிதமான பயன்களை ஒருவர் பெறுகிறார்.

ஆரோக்கியம்

ஆரோக்கியம் என்பதற்குப் பலவிதமான வரையறைகள் சொல்லப்படுகின்றன. அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நவீன வரையறையாக உலக சுகாதார நிறுவனத்தின் வரையறை உள்ளது. நியூயார்க்கில் 1946ஆம் ஆண்டு ஜூன் 19 முதல் 21 வரை நடைபெற்ற சர்வதேச ஆரோக்கிய மாநாட்டில் இந்த வரையறை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1946 ஜூலை 22ஆம் நாள் 61 நாடுகள் இதில் கையொப்பமிட்டன (உலக சுகாதார நிறுவனத்தின் அலுவல் பதிவுகள் எண்.2 பக்கம்.100). 1948ஆம் ஆண்டு ஏப்ரல் 7 முதல் இது நடைமுறைக்கு வந்தது. அந்த வரையறையாவது: ‘நோய்களும் தளர்ச்சியும் இல்லாமல் இருப்பது மட்டுமே ஆரோக்கியம் என்று ஆகிவிடாது. உடல், மனம், சமூகநலம் இவை சார்ந்த ஒரு முழுமையான ஆரோக்கிய நிலையே ஆரோக்கியம் எனப்படும்.

யோகாவும் இளைஞர்களும்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கான ஒரு கலையாகவும், அறிவியலாகவும் யோகா பார்க்கப்படுகிறது. ஆரோக்கியமாக இருக்க விரும்பும் ஒவ்வொருவருக்குமானது யோகா. நோய்களில் இருந்து விலகி இருக்க விரும்பும் அனைவருக்குமானது யோகா. உள்ளார்ந்த திறன்களையும், தன்னம்பிக்கையையும் பெருக்கிக்கொள்வதற்கு யோகா ஒரு வழி. இதனை வாழ்க்கைமுறையில் செய்துகொள்ளப் படும் ஒரு மாற்றம் என்று சொல்லமுடியும்.

இளைய சமுதாயத்திற்கு யோகா அவசியமானதாக உள்ளது. இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் ஏராளமான சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். யோகா நிச்சயமாக அவர்களுக்கு ஒரு மடைமாற்றாக இருக்கும். உண்மையான யோகி அன்றாடம் எழக்கூடிய சவால்களைத் திறம்படக் கையாளக்கூடியவராக இருப்பார். உடல், மனம், சமூகம், தார்மீகம், ஆன்மிகம் ஆகிய அதன் அனைத்துக்கூறுகளிலும் அளுமையை வளர்த்தெடுக்க யோகா முயல்கிறது. மனிதனை ஒரு புதிய ஆளுமையுடன் அது உருவாக்குகிறது. முழு அமைப்பிலும் மாற்றங்களை உருவாக்கி, கவனத்தை ஒருமுகப்படுத்தி, அமைதியை மிகுவித்து, யோகப்பயிற்சி செய்பவரை அமைதியாகவும் சலனமின்றியும் இருக்கச்செய்கிறது. தற்கால தினசரி வாழ்க்கைக்கு இது மிகவும் அவசியமானதாகும்.

இந்தியா 125 கோடிக்கும் மேல் மக்கள் வாழும் ஒரு பெரிய தேசம். இந்த தேசத்தின் வளர்ச்சி அதன் ஆரோக்கியத்தின் மீது தான் அமைந்திருக்கிறது. தேசத்தின் ஆரோக்கியம் தரித்திரமான நிலையில் இருந்தால் அதன் வளர்ச்சியும் மந்தமாகிவிடக்கூடும். ஆரோக்கியத்தைக் கையாளுவதற்கே ஏராளமான சக்தியும், பொருளும் செலவாகிவிடும். ஒரு தேசத்தில் உள்ள இளைஞர்கள் சிறப்பாகவும், வலுவாகவும் இருந்தால் தேசத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அந்த தேசம் நீண்ட தொலைவிற்கு சோர்வின்றிப் பயணிக்கவும் முடியும். எனவே இளைஞர்களின் ஆரோக்கியம் என்பது அதீதமான முக்கியத்துவம் உடையதாகிறது.

யோகா என்பது அடிப்படையில் ஆரோக்கிய வாழ்வு பற்றிய ஆன்மிக அறிவியலுமாகும். நோய்கள் வராமல் தவிர்ப்பதற்கும், ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குமான ஆற்றலை யோகா கொண்டிருக்கிறது. இதன் முழுமையான அணுகுமுறை அனைத்து வகையான வாழ்க்கைப்போக்குகளிலும் ஒத்திசைவை ஏற்படுத்தி நம்முடைய அன்றாட வாழ்வின் மீது செல்வாக்கை செலுத்துகிறது. யோகாவை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் நமது நடத்தையிலும், மனப்பாங்கிலும் சாதகமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. யோகா பயில்பவர் அவரது வீட்டிலும், சமூகத்திலும் மனித உறவுகளை மேம்படுத்திக்கொள்ள முடிகிறது. உலகம் முழுவதிலும் நடைபெற்ற பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் யோகாவிற்கு மருத்துவ ரீதியிலான குணங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடற்செயலியல், உடல் மனம் ஆகியவற்றோடு தொடர்புடைய குறைபாடுகள் உட்பட வாழ்க்கை முறையோடு தொடர்புடைய பல்வேறு குறைபாடுகளைத் தவிர்ப்பதற்கும், சமாளிப்பதற்கும் இருக்கும் இதன் வலிமை தான் யோகா இன்று பிரபலமாக இருப்பதற்கு காரணம்.

யோகாவும் ஆராய்ச்சியும்

உடல், மனம் சார்ந்த குறைபாடுகள், வாழ்க்கை முறையோடு தொடர்புடைய பல்வேறு குறைபாடுகள் ஆகியவற்றை சிறப்பாக மேலாண்மை செய்யக்கூடிய வல்லமை யோகாவிற்கு இருக்கிறது என்பதை பிணி சார்ந்த பல்வேறு ஆய்வுகள் நிறுவி இருக்கின்றன. தொற்றாநோய்களை மேலாண்மை செய்வதில் ஊடுருவல் இல்லாத சிகிச்சையை அளிக்கக்கூடிய ஒன்றாக யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆக்கப்பூர்வமான வழி முறைகளைக் கைக்கொள்வதன் மூலம் இத்தகைய நோய்கள் தவிர்க்கப்படலாம். இயற்கை சார்ந்த பயிற்சிகளான உண்ணாநோன்பு, உணவு மருத்துவம், சேறு மருத்துவம், நீர் மருத்துவம், மசாஜ் சிகிச்சை, காற்று சிகிச்சை போன்றவற்றுடன் ஷத்கர்மா, ஆசனங்கள், சூரியநமஸ்காரம், பிரணாயாமா, தியானம் போன்ற யோகப்பயிற்சிகள் இணைத்து செய்ய்யப்படும் போது நோய் இல்லாத ஆரோக்கியமான மகிழ்ச்சியான வாழ்க்கை அமைவது நிச்சயம்.

உயர் இரத்த அழுத்தம், இதயப்பிரச்னைகள், நீரிழிவு, மனஅழுத்தம், பதற்றம், தூக்கமின்மை போன்றவை இளைய சமுதாயத்தினரிடம் இப்போது காணப்படும் பிரச்னைகளில் சில வாகும். இதயத்தமனிகளில் ஏற்படக்கூடிய நோய்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக் கூறுகளைக் குறைப்பதில் யோகா ஆதாயம் தரக்கூடிய சில விளைவுகளைத்தருகிறது என்பது இது தொடர்பான ஆய்வுகள் மூலம் தெரியவந்திருக்கிறது. மன்சந்தாவும் மற்றவர்களும் 2000ஆம் ஆண்டில் செய்த ஆய்வில் இதயத்தமனி நோய் தீவிரமாக இருக்கும் நோயாளிகளின் வாழ்க்கை முறைகளில் யோகா மூலம் மாற்றத்தைக்கொண்டு வருவதில் மிக அதிக அளவிலான இணக்கம் தெரிகிறது என்பது கண்டறியப்பட்டது.

இதயத்தசைகளுக்குப் போதுமான ஆக்சிஜன் கிடைக்காத போது ஏற்படும் அசெளகரியம், நெஞ்சுவலி, உடல் எடை, கொழுப்பு அளவுகள் ஆகியவற்றில் உடற்பயிற்சி தரக்கூடிய அழுத்தம் பற்றிய ஆய்வுகளில் யோகா சாதகமான பலன்களைக் காட்டுகிறது. இரத்த வெள்ளை அணுக்களின் படையெடுப்பினாலும், அவற்றின் திரட்சியினாலும் தமனிரத்தக்குழாய்களின் சுவர் தடிமனாகிபோகும் நிலையில் உள்ளவர்களுக்கு இதனை நிலைப்படுத்தி, இதய மாற்றுப்பாதை அறுவை சிகிச்சை, ஆஞ்சியோ பிலா ஸ்ட்டி போன்ற அறுவை சிகிச்சை முறைகளின் தேவையை யோகா குறைக்கிறது. எனவே செலவில்லாத சாத்தியமான இடையீடாக யோகா வாழ்க்கை முறை இருக்கிறது. ஆகவே, யோகாவை தினசரி வாழ்க்கையில் இணைத்துக்கொள்வதன் மூலம் இதயத்தமனி நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற தொற்றாத நோய்களைத் தவிர்க்கவும், நிர்வகிக்கவும் முடியும்.

இளைஞர்களின் ஆரோக்கியத்தில் உணவு முக்கியமான பங்கு ஆற்றுகிறது. ஆச்சார்யா, ரஸ்தோகி இருவரும் 2016இல் வெளியிட்டிருக்கும் "ஆரோக்கியமான வாழ்க்கையையும் மனஅழுத்த மில்லா வாழ்க்கையையும் சமநிலைப்படுத்துதல்’ என்ற ஆய்வறிக்கை இளைஞர்கள் உணவுப் பழக்கங்கள் ஆரோக்கியமானதாக இல்லை என்று தெரிவிக்கிறது. பதப்படுத்தி வைக்கப்படும் உணவு, துரித உணவு, சத்தில்லாத உணவுகள், அதிக கலோரிகளைத்தரும் உணவுகள், புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப் பழக்கங்கள் போன்றவை இரத்த அழுத்தம், முடக்குவாதம், முதுகுவலி போன்ற பல நோய்களை உருவாக்கி நம்மை பொறுமை இழந்தவர்களாக ஆக்கி உடலும் மனமும் சார்ந்த பலவித நோய்கள் வருவதற்கு வழி செய்துவிடுகின்றன. இதனால், மனநோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. மனஅழுத்தம், எண்ணமும் செயலும் மாறுபடும் மனக்கோளாறு, மது, போதைப் பொருள்கள் போன்றவற்றால் ஏற்படும் குறைபாடுகள் ஆகியவற்றை உடையவர்களாக ஏராளமானவர்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. உடலுக்கும் மனதிற்கும் சிறப்பாக சிகிச்சை தரக்கூடியது யோகா, ஆசனங்கள், பிரணாயாமம், ஷத்கர்மா, சூரிய நமஸ்காரம், தியானம் ஆகியவற்றின் மூலம் யோகாவின் பயன்களைப் பெறமுடியும்.

ஆகவே உடல் நலப் பிரச்னைகளைத் தவிர்ப்பதற்கு இளைஞர்களுக்கான சரியான இடையீட்டுக்கருவி யோகாவாகும் என்ற முடிவுக்கு நாம் வரலாம். யோகா தேசத்தின் வளர்ச்சி வழிமுறையில் ஒரு பகுதியாக இருக்கிறது. யோகா உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சாதகமான மனப்போக்கையும் வளர்த்தெடுக்கிறது. உடலையும் மனதையும் மிகப் பொருத்தமான அளவில் ஒத்திசைவுடனும், நலத்துடனும் வைத்திருப்பதற்கு யோகப் பயிற்சிகளே சரியான வழியாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

Filed under:
2.93333333333
Sarath kumar May 26, 2019 10:18 AM

யோகா செய்த பிறகு உடற்பயிற்சி செய்யலாமா ?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top