অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

யோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்

யோகா பயிற்சியாளர்களை மதிப்பிடுதலும் சான்றளித்தலும்

நோக்கம்

  • பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் முனிவர்கள் யோகா பயிற்சிகளை மேற்கொண்டு, அதனை ஒரு வாழ்க்கை முறையாகவே ஆக்கி விட்டதாக ஸ்மிருதிகள் மூலமாக அறிகிறோம். பண்டைய இந்தியாவின் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவற்றில் யோகாவைப் பற்றி இன்று நாம் அறியும் செய்திகள் யாவும் பெறப்பட்டுள்ளன. யோகா பயிற்சி மேற்கொள்வதால் மனிதர்களின் மனதிலும் உடலிலும் ஏற்படும் அனுகூலமான பயன்கள் பற்றி உலகம் எங்கிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது. எனினும் மனித வாழ்க்கையையே புரட்டிப்போட்டு, மிகவும் உன்னத நிலைக்கு எடுத்துச் செல்லக்கூடிய வாய்ப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் என்பதைப் பலரும் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
  • சமஸ்கிருதச் சொல்லான யுஜ் என்பதில் இருந்தே யோகா என்ற சொல் பிறந்தது. யுஜ் என்றால் ஒன்று சேர்த்தல் அல்லது ஒன்றிணைத்தல் என்று பொருள். இந்தியப் பண்பாட்டிலும் அறநெறியிலும் ஆன்மீகம் சார்ந்தது எனவும் எளிமையாகப் பிரதிபலிப்பது என்றும் யோகாவுக்கு ஒர் அடையாளம் உண்டு. மூச்சுப்பயிற்சி, எளிய தியானம், சில வகையான யோகாசனங்கள் போன்றவற்றை உலகம் முழுவதும் பலரும், இறுக்கமான மனநிலையைத் தளர்த்திக் கொள்ளவும், சில வகையான நோய்களில் இருந்து விடுபடவும் பயிற்சி செய்து வருகின்றனர். பதஞ்சலி முனி மனநிலை மாற்றத்தைத் தடுக்கும் வழி என்று வரையறை செய்கிறார்.
  • யோகாவின் தோற்றம் குறித்தும், எத்தனை ஆண்டுகளுக்கு முன்பாக இருந்து அது பயிற்சி செய்யப்படுகிறது என்பது குறித்தும், பலவாறான அனுமானங்கள் உள்ளன. நமது இதிகாசங்களில் ஒன்றான மகாபாரத்தில் இடம் பெற்றுள்ள கீதோபதேசத்தில் யோகாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. கர்ம யோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று யோக நிலைகள் பற்றி பகவத்கீதை பேசுகிறது. நம்முடைய வேதங்களில், யோகா என்பது ஒரு வாழ்வு நெறி என்று கூறப்பட்டுள்ளது. அந்த வேதங்கள் கி.மு.1900 ஆண்டு முதல் கி.மு.1100ஆம் ஆண்டுக்குட்பட்ட காலத்தில் எழுந்தவை என்று சொல்லப்படுகிறது. பதஞ்சலி முனிவரின் யோகா சூத்திரம் என்ற நூல், யாமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், ப்ரத்யாகாரம், தாரணம், தியானம், சமாதி என்று எட்டு வழிகளை யோகா நிலையை எட்டுவதற்கானவை என்று குறிப்பிடுகிறது.

தற்கால நிலைமை

  • இசிரிய பயிற்சிகளான இவை ராஜயோகம் என்று சொல்லப்படுகின்றன. அஷ்டாங்க யோகம் என்றும் இவற்றைச் சொல்லுவர். யோகா மரபின் தத்துவம் பற்றி கபில முனிவரின் சாம்கிய தத்துவத்தில் காணப்படுகிறது. பதஞ்சலியின் இரண்டாம் சூத்திரம் யோகாவை, மனநிலையின் எல்லாவிதமான மாற்றங்களையும் நிறுத்தி அலைபாயும் மனதை ஒரு நிலைப்படுத்துவதாகும் என்று வரையறுக்கிறது. ஆனால், பிற்கால யோகா நெறிகளான ஹத யோகா போன்றவை, பலவிதமான சிக்கலான உடல் இருப்பு நிலைகளை யோகா என்று கூறுகின்றன.
  • தற்காலத்தில், பிரபஞ்ச வெளியில் உள்ள உயிர் ஆற்றலான குண்டலினி சக்தியை, மேலேற்றுவதற்கும் யோகாவைப் பலர் கைக்கொண்டுள்ளனர். உடலைப் பொறுத்த மட்டில் 'ஆசனங்கள் என்ற ஆசனம் மற்றும் உடல் நிலைகளை மாற்றி ஆரோக்கியமாக வாழும் முறையையும், மனதைப் பொறுத்த மட்டில், பிராணாயாமம், தியானம் போன்ற மூச்சுப் பயிற்சிகளும் பலரும் தற்காலத்தில் பின்பற்றும் வழிகளாகும்.

யோகா படிப்புகள்

சீரிய நல்வாழ்வு வாழும் நோக்கில், உலகெங்கிலும் பலரும் யோகாவின்பால் ஈர்க்கப்பட்டுள்ளனர். உலகிற்கு இந்தியா அளித்துள்ள பெறும் கொடையை முறையாகக் கற்றுத்தருவது மிகவும் அவசியமானது. யோகாவின்பால் நம்பிக்கை கொண்டு அதனை நாடி கைக் கொள்பவர்களுக்கு யோகாவை நாம் கற்றுத்தரவேண்டும். அதற்கு, யோகா ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும். ஏன் யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும். எவ்வாறு யோகாவைப் பயிற்சி செய்ய வேண்டும் என்று சரியாகக் கற்றுத் தரும் திறமையான யோகா ஆசிரியர்களுக்கு மட்டும் யோகா கல்வியில் ஈடுபடும் அனுமதி அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு யோகா ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டம் உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பல நடைமுறைகளைப் பின்பற்றியே செயல்படுத்தப்படுகிறது. யோகா பற்றிய அறிவு, திறன், முதிர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் யோகா சொல்லித்தரும் ஒரு நபரை, பயிற்றுநர், ஆசிரியர், மாஸ்டர், ஆச்சார்யர் என்று நான்குவிதமாக வகைப்படுத்துகின்றனர்.

சரியான பயிற்சி நிறுவனங்களுக்குச் சான்று

  • இவ்விஷயத்தில் இன்னொரு முயற்சி, யோகா பயிற்சி பெறுபவர்களுக்கு சான்றிதழ், பட்டயம், பட்டம் போன்றவற்றை வழங்கும் நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் திட்டமாகும். யோகா பயிற்சி அளிக்கின்ற அல்லது கற்றுத் தருகின்ற நிறுவனங்கள் அனைத்தும் ஒரே தரத்தில் இருப்பதில்லை. பாரம்பரியமான இந்த அறிவியலை வணிக நோக்கில் பொருளீட்டுவதற்காகப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஆதரவு கூடாது.
  • யோகா கல்வி நிறுவனங்களுக்குத் தரச் சான்று நான்கு வெவ்வேறு நிலைகளில் வழங்கப்படுகிறது. முதல் நிலை என்பது அடிப்படை நிலை. யோகா பயிற்றுநர், யோகா ஆசிரியர் என்ற இரு நிலைகளில் யோகா கற்றுத் தருபவர்களைத் தயார்ப்படுத்தும் திறன்கொண்ட நிறுவனங்கள் முதல் நிலை தரச்சான்று பெறும்.
  • இரண்டாவது நிலை தரச்சான்று பெறும் நிறுவனங்கள், முதல் நிலை தரச்சான்று பெறுவதற்கான தகுதிகளைப் பூர்த்தி செய்வதுடன், ஐ.எஸ்.ஒ. 29990:2010 நிர்ணயித்துள்ள தகுதிகளை நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டாம் நிலைச்சான்று ஸ்திர நிலைச்சான்று எனப்படும்.
  • மூன்றாவது நிலை தரச்சான்று முதிர்ச்சி நிலை எனப்படும். இதற்கு 'ஸ்திரநிலை சான்று பெருவதற்கான தகுதிகளோடு, பயிற்சி பெற விரும்புவோரின் தேவைக்கு ஏற்றவாறு பிரத்யேகப் பயிற்சித் திட்டங்களை உருவாக்கி அளிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • நான்காவது நிலை ஆசிரம நிலை ஆகும். இந்தச் சான்றுபெற முதிர்ச்சி நிலை சான்று பெருவதற்கான தகுதிகளோடு, ஆசிரமம் போன்ற சூழ்நிலையில் 200 மணி நேரத்திற்குக் குறையாமல் பயிற்சி அளிக்க வசதிகள் இருக்க வேண்டும்.
  • இவ்வாறு சான்று பெற்ற நிறுவனங்களில் இருந்து வெளிவரும் யோகா பயிற்சியாளர் களுக்கு வாய்மொழித் தேர்வு மட்டும் நடத்திச் சான்றிதழ் / பட்டயம்/பட்டம் அளிக்கப்படும். சான்று பெற்ற பயிற்சி நிறுவனங்களின் மூலமாக அன்றி நேரிடையாக சான்று ! பட்டயம் / பட்டம் பெற விரும்புவோருக்கு ஒருநாள் முழுக்க யோகா கோட்டாடுகள் பற்றி எழுத்துத் தேர்வும், யோகாசனப் பயிற்சித் தேர்வுகளும் நடத்தப்படும்.
  • மதிப்பிடுதலில் உள்ள சவால்: யோகா சொல்லித்தரக்கூடிய ஒருவரின் திறமையை, அவர் தன்னிடம் இருந்து மற்றவருக்கு எந்த அளவிற்கு சொல்லிக்கொடுத்திருக்கிறார் அல்லது மாற்றி விட்டிருக்கிறார் என்பதை எவ்வாறு மதிப்பிடுவது? ஒரு மனிதரின் மனநிலையை, அதாவது யோகா பயிற்சி பெற்றதால் அது கட்டுக்குள் உள்ளதா என்பதை எவ்வாறு அறிய முடியும்? என்ற கேள்விகள் எழுகின்றன.
  • யோகப் பயிற்சியாளர்களுக்குத் தரச் சான்றளிப்பது என்பது மிகவும் சவாலான ஒன்று. யோகா என்பது அனுபவத்தினால் உணரக்கூடியது. அகவயமான அதனைப் புறவய நோக்கில் மதிப்பிடுவது சரியானதாகவும் இருக்காது. இன்னொரு சவால், யோகா கல்வியையும் பயிற்சியையும் அளிக்கும் நிறுவனங்களுக்குத் தரச்சான்று அளிப்பது. நம் நாட்டில் மட்டு மின்றி உலக நாடுகள் பலவற்றிலும், யோகா ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும், தனிப் பட்டவர்களுக்கான யோகா பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. இந்த நிறுவனங்களின் கற்பிக்கப்படும் விஷயங்களும், கால அளவும் ஒன்றுபோல் இருப்பதில்லை. எனவே அந்த நிறுவனத்தின் ஆசிரியர்களின் திறமையும் ஆற்றலும், அறிவும் வெவ்வேறாக உள்ளன. மேலும் இந்த நிறுவனங்களின் யோகா முறைகளும் மாறுபட்டுள்ளன. எனவே யோகாவைக் கற்றுக்கொள்ள விரும்புகிறவர்களுக்கு, எந்த யோகா முறை சரியானது, யோகாவின் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் அல்லது முக்கியமான விஷயங்கள் யாவை என்பது பற்றி தீராத சந்தேகம் உள்ளது.
  • எந்த ஒரு கருத்தும் பரவலாகப் பலராலும் பேசப்படுகிறது அல்லது பின்பற்றப்பட வேண்டியது என்றாகிறபோது, ஒவ்வொரு பிரிவினரும் தமக்கே உரிய வகையில் அதற்கு விளக்கம் அளிக்கத் தலைப்படுவர். அதனால் அந்தக் கருத்தின் மூலம் நோக்கம் நீர்த்துப் போய்விடக்கூடும். சில சமயங்களில் எந்த நோக்கத்திற்காக அக்கருத்து முன்வைக்கப் பட்டதோ, அதிலிருந்து இந்த விளக்கங்கள் முற்றிலும் மாறுபட்டவையாகவும் போய்விடக் கூடும். யோகாவும் இதுபோன்ற நிலைக்கு ஆளாகி விடக்கூடிய அபாயம் உள்ளது.
  • பல ஆண்டுகளாகவே இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள யோகா பயிற்றுவித்த குருமார்கள் பலரும், தத்தமது விளக்கங்களை அளித்து வந்தனர். மக்கள் பெரிதும் நாடி ஒடிய அமைதியும், சாந்தமும், நலவாழ்வும் அவற்றால் கிடைத்தபோது மக்களும் அந்த விளக்கங்களை ஏற்றுக் கொண்டனர். பல சமயங்களில், அவ்வாறு அளிக்கப்பட்ட விளக்கங்கள், அந்தந்த யோகா குருமார்கள் தமது அனுபவத்தினால் பெற்றதாகவே இருந்தன. அதனால் ஒவ்வொரு நிறுவனமும் அளித்த விளக்கமும், மற்றவற்றோடு ஒத்துப் போகாமல் இருந்தது. யோகா என்பதை மேலும் மேலும் அறிவியல் பூர்வமானதாக ஆக்கும் முயற்சியில், அகவயமான மதிப்பீடுகளை விட்டொழித்து அனுபவப்பூர்வமான, பிரத்யேகக் கூறுகளை வரையறுக்க இயலுமா என்ற கேள்வி எழுகிறது.
  • இந்தச் சவால்களை எதிர்கொள்ளும் விதமாக, பயிற்சிகளுக்கான சில அடிப்படையான விதிகள் வகுக்கப்பட்டன. யோகாவிற்குத் தரச்சான்று வழங்கும்போது, அதனைப் பயிற்றுவிக்கும் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் தனித்தன்மை அழியபடாமல் காக்கப்படுகிறது. அறிவியல், தத்துவம், அனுபவம், ஆன்மீகம் ஆகிய கூறுகளை யோகாவில் இருந்து போக்கிவிடாமல் காக்கப்படுகிறது. உலகளாவிய ஏற்புக்கு யோகாவின் அகவய நிலையும் அனுபவ நிலையும் விட்டுக் கொடுக்கப்படுவதில்லை.
  • யோகாவின் மெய்யான தரத்தை நீர்த்துப் போய்விடாமல், அதனைப் பேணிக்காத்து, எல்லாத்தரப்புக்கும் வழங்கும் பெரும் பொறுப்பு நமக்குள்ளது.

இந்தியத்தரக் கவுன்சில்

  • 2015ஆம் ஆண்டில் சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்ட பின்னர், மத்திய ஆயுஷ் அமைச்சகம், யோகா பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், யோகா பயிற்றுவிக்கும் நிறுவனங்களுக்கும் தரச்சான்று வழங்குவதற்காக இந்தியத்தரக் கவுன்சில் மூலம் ஒரு திட்டத்தைத் தயாரித்தது.
  • சர்வதேச தர நிர்ணயம் ஐ.எஸ்.ஓ 17024:2012 குறிப்பிட்டுள்ள படி, பயிற்றுநர், ஆசிரியர், மாஸ்டர், ஆச்சாரியர் என்ற நான்கு விதமான யோகா கற்றுக் கொடுப்பவர்களுக்கான தர நிலை வகுக்கப்பட்டுள்ளது. சர்வதேச தர நிர்ணயம் தனிநபர்களின் திறனைச்சான்றளிக்க வகுத்துள்ள விதிமுறைகளின்படியான இந்த ஏற்பாட்டில், யோகா கற்றுத்தரும் நபர்களின் திறனும் அறிவும் மட்டுமே கருத்தில் கொள்ளப் படுகின்றவே அன்றி, எந்த் நிறுவனத்தின்மூலம் அவர்கள் அந்த வித்தையைக் கற்றுக் கொண்டார்கள் என்று பார்ப்பதில்லை.
  • இதேபோல யோகாவை சொல்லித்தரும் நிறுவனங்களுக்கான சான்றளிப்பு முறையில், யோகாவின் அடிப்படையான தத்துவங்களை இணக்கமாக எடுத்துரைப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மனித உடலையும் மனதையும் ஒன்று சேர்க்கும் இந்த உயரிய சாஸ்திரத்தை வணிக நோக்கில் நீர்த்துப் போய்விடாமல் பார்த்துக் கொள்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. கற்றுக் கொள்பவரை முதன்மைப் படுத்துவதாகவும், நல்ல விளைவுகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்துவதாகவும் உள்ள நிறுவனங்களுக்குத் தரச்சான்றுகள் வழங்கப்படுகின்றன. யோகா பாடத்திட்டங்களை வடிவமைத்து, மேம்படுத்தி, சீரிய முறையில் பயிற்றுவித்து, பயின்றவர்களின் அறிவையும் திறனையும் மதிப்பிடுவதற்கான ஏற்பாடுகள் ஆகியவற்றை யோகா கற்றுத்தரும் நிறுவனங்கள் கொண்டிருக்க வேண்டும்.
  • இந்தியத்தரக் கவுன்சில், யோகா பயிற்சியாளர்களுக்க்கு, யோகா பயிற்சி அளிக்கும் நிறுவனங்களுக்கு தரச்சான்று அளிப்பதில், உலகளவில் ஏற்கப்பட்ட மூன்றாம் நபர் மதிப்பீட்டு நெறிகளைப் பின்பற்றும். இதற்கென பல்துறை நிபுணர் குழுக்கள் ஏற்படுத்தப்படும். இந்த நிபுணர் குழுக்களில், யோகா பயிற்றுவிட்போர், யோகா பள்ளிகள், ஆயுஷ் அமைச்சகம், வணிக அமைச்சகம், கல்வி நிறுவனங்கள், நுகர்வோர் அமைப்புகள், சான்றளிக்கும் நிறுவனங்கள் ஆகியவற்றின் சார்பாக பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள்.
  • தற்போது கீழ்க்காணும் பிரிவுகளோடு இந்தியத் தரக்கவுன்சில் செயல்படுகிறது

ஆட்சி அமைப்பு - அமைப்பு, உள்ளுறுப்புகள், பங்கேற்கும் அமைப்புகள் மற்றும் குழுக்களின் பணிகளும் பொறுப்புகளும்.

  1. சான்றளிப்புக்கான அடிப்படை - நிபுணர்கள் அடங்கிய குழுவின் விவாதங்களுக்குப் பின்னர் எட்டப்படும் சான்றளிப்புக்கான தர நிர்ணயம்.
  2. சான்றளிக்கும் செயல்முறை - ஆரம்ப மதிப்பீடு, எவ்வளவு கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும் என்ற நிர்ணயம், மதிப்பீட்டாளர்களுக்கான தகுதிகள்.

சான்றளிக்கும் அமைப்புகளுக்கு வேண்டியவை.

இதற்கென உள்ள http://yogacertification.qci.org.in/ என்ற பிரத்யேக இணையதளத்தில் அனைத்து விவரங்களும் கிடைக்கும்.

சான்று பெற்றவர்களுக்கான வாய்ப்புகள்

  • யோகா பயிற்றுவிப்போருக்கும், பயிற்று விக்கும் நிறுவனங்களுக்கும் சான்றளிக்கும் இந்தியத் தரக் கவுன்சில் திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்கிறது. சான்றிதழ்களில் மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் முத்திரை இருப்பதால், அவற்றுக்கு, அங்கீகாரமும் கெளரவமும் கிடைக்கும். இந்தியத்தரக் கவுன்சிலின் சான்றிதழ் பெற்றவர்களுக்கு மட்டும் யோகா ஆசிரியர்களாக அரசுத்துறைகளில் பணிவாய்ப்புப் பெறமுடியும் என்றும், தற்போது இந்தச் சான்றிதழ் இல்லாமல் பணி செய்வோர் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தமது திறமையையும் அறிவையும் இந்தியத் தரக் கவுன்சிலின் தொழில்முறை திறமைச் சான்று மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நிர்ணயிப்பது பற்றி அரசு ஆலோசித்து வருகிறது. கேந்திரிய வித்யாலயா சங்கதன், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் போன்றவை யோகா ஆசிரியர்களுக்கு இந்தியத் தரக் கவுன்சிலின் சான்றிதழைப் பெறுவதைக் கட்டாயமாக்கும்படி அரசு கேட்டுக்கொள்ள இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வந்து யோகா பயிற்சி சான்று பெறுவதையும் எளிதாக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கென விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தவும், விசாகட்டணத்தை ரத்து செய்யவும் வெளியுறவு அமைச்சகத்திற்குப் பரிந்துரைக்கப்படும். பண் பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் மூலம் வெளிநாடுகளில் யோகா ஆசிரியராக பணி நியமனம் பெறுவோரும் முறையான சான்று பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
  • யோகாவின் தரச்சான்று பெற்ற முதல் 2000 பேருக்கு, அவர்கள் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றால், இந்தியத்தரக் கவுன்சிலுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தை முற்றிலுமாகத் திரும்பித்தந்து விடுவது என்று ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • அண்மையில் இந்தியத்தரக் கவுன்சில், ஜப்பானில் யோகா பயிற்சியாளர்களை மதிப்பிட்டு, பதிமூன்று பேருக்குத் தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது என்பது குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய செய்தியாகும்.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

கடைசியாக மாற்றப்பட்டது : 5/5/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate