অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மரண பயம் நீக்கும் ஹோமியோ மருந்துகள்

மரண பயம் நீக்கும் ஹோமியோ மருந்துகள்

அறிமுகம்

பொதுவாக பயத்துக்கு மனவலிமைக் குறைவுதான் காரணம். பிறக்கும் குழந்தைகள் எல்லோருமே தைரியசாலிகள் தான். உரிய பருவத்தில் உரிய மாற்றங்கள் ஏற்பட்டு வளரும் போது குழந்தைகளின் கால்களை முன்னேறவிடாமல் அச்ச விலங்குகள் பூட்டுவது வளர்ப்புச் சூழ்நிலையே. இதனால் குழந்தைகளின் இயற்கையான மனவலிமை சிதைக்கப்பட்டு அச்சத்தால் நிரப்பப்படுகிறது. வளர் பருவத்தில் மக்கள் அபிப்பிரயாங்களுக்கு அளவுக்கு அதிகமாக மதிப்பளிப்பது அச்சத்திற்கான மற்றொரு காரணமாகும்.

மரண பயம் (Death Phobia) – என்பது எண்ணற்ற அநாவசியமான துயரங்களுக்கு காரணமாகிறது. இதனால் மனித ஆரோக்கியமும் மன அமைதியும் பறிபோகிறது. மரண பயத்தின் கொடூரக் கரங்களில் சிக்கிக் கொண்ட யாவரும் உயிரோட்டமான சமுதாய வாழ்க்கையிலிருந்து தங்களைத் துண்டித்துக் கொள்கிறார்கள்.

மரணம் என்பது மனித வாழ்க்கையின் இயற்கையான ஒரு பகுதி. ஆயினும் மரணம் பற்றிய சிலரின் பார்வை பலவீனமாக பீதியூட்டக் கூடியதாக உள்ளது. விபத்துக்கள், கொலைகள், தற்கொலைகள், நோய்களின் இறுதித் தாக்குதல், திடீர் தொற்று நோய்த்தாக்குதல்கள் (காலரா, அம்மை, மஞ்சள் காமாலை, டெங்கு, பன்றி காய்ச்சல்) இடி, மின்னல், புயல், பெருமழை, சுனாமி போன்ற இயற்கைச் சீற்றங்களின் பேரழிவுத் தாக்குதல் போன்றவை காரணமாக நிகழும் மரணங்கள் தினசரி செய்திகளாக நேரிலும், ஊடகங்களிலும் காணுகிறோம். இந்த யதார்த்த அனுபவம் சிலரது மனங்களைப் பக்குவப்படுத்துகிறது. சிலரது மனங்களை மரண பீதிக்கு உள்ளாக்குகிறது.

இறந்துவிட்ட தன் மகனை புத்தரிடம் எடுத்துவந்த அன்புத் தாய் கவுதமி மகனை மீண்டும் உயிர்ப்பித்துத் தருமாறு மன்றாடினாள். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ஓர் எள் வாங்கி வருமாறு அதிலும் குறிப்பாக இதுவரை ஓர் இறப்பு கூட நடக்காத வீடுகளிலிருந்து எள் வாங்கி வர வேண்டும் என்றும் புத்தர் அவளிடம் கேட்டுக் கொண்டார். வீடுவீடாகச் சென்று விசாரித்த பின் தான் மானுட வாழ்வின் உண்மையை அவள் உணர்ந்தாள் என்று புத்தரின் வாழ்க்கை தொடர்புள்ள ஒரு கதை உண்டு.

ஓர் இறப்பு என்பது உடன் வாழ்வோருக்கு ஓர் இழப்பு மட்டுமல்ல, பெருந்துயரம்! ஆனால் ஒவ்வொருவருக்கும் அவரவர் இறப்பு என்பது இழப்பு அல்ல, இயற்கை! வாழ்வின் இறுதி அத்தியாயம். ஆயினும் ஒருமுறை இயற்கையாக இறப்பதற்கு முன்பு பல்லாயிரம் முறை மரண பயம் காரணமாக இறந்து கொண்டேயிருப்பது தவிர்க்கப்பட வேண்டிய துயரம்!

மரண பயத்திற்கான காரணங்களை ஆய்வு செய்தோமானால் அதன் வேர்கள் கடந்த காலத்தில் நிகழ்ந்த மரணங்கள், மரணம் தொடர்பான விஷயங்களில் தோன்றி மரண பயத்தின் தோற்றுவாய் அமைகிறது. இது வாழ்வின் எஞ்சிய பகுதி முழுவதையும் மரண பீதி எனும் மாபெரும் உணர்ச்சிக் குழப்பத்தினுள் மனிதனை மூழ்கடித்து மூச்சுத் திணறச் செய்து விடுகிறது.

பெரும்பாலோரின் மரண பயம் சிறு வயதிலிருந்தே துவங்கி விடுகிறது. பெற்றோரின் அறியாமையால் குழந்தைகளிடம் பேய், பூதம், பிசாசு, பூச்சாண்டி, இருட்டு என்று பலவித அச்சுறுத்தல்களை ஏற்படுத்துவதால் இனம்புரியாத பயத்தின் விதைகள் பிஞ்சு மனங்களில் விதைக்கப்படுகின்றன. இவையே மரண பயம் எனும் விருட்சமாக விரைவில் வளர்கின்றன. மரணம் குறித்த எந்தவித புரிதலும் இல்லாத வயதிலும் கூட தன்னை அழிக்கக் கூடியளவு ஏதோ ஒன்று நேர்ந்துவிடும் என்ற பேரச்சம் ஏற்பட்டு விடுகிறது.

வயதான காலத்தில் வரும் மரண பயம் அவர்களின் துணையின் மரணத்தின் போது அதிகரிக்கிறது. இதர முதியோரின் மரணத்தைப் பார்க்கிற போதும் அதிகரிக்கிறது. இச்சம்பவங்கள் இவர்களின் மரண நாளை நினைவூட்டுவதால், வயதால் முதுமை அடைந்த போதிலும் மனதால் முதிர்ச்சியடையாத காரணத்தால் மரண பயம் எனும் பள்ளத்தாக்கினுள் வீழ்ந்து தவிக்க நேர்கிறது.

அதீத மரண பயம் உள்ள சிலர் ஆங்கில மனநல மருத்துவர்களை அணுகிச் சிகிச்சை பெறுகின்றனர். ஆயினும் முழுத் தீர்வு கிட்டாமல் தவிப்பதைக் காணமுடியும். மாற்றுமருத்துவ முறைகளில் மரண பயத்திலிருந்து மனிதனை முழுமையாக மீட்க, மகிழ்ச்சியான மறுவாழ்வு அளிக்க ஹோமியோபதி மருந்துகளே தலைசிறந்தவை என்று உலகளவில் நிரூபணமாகியுள்ளன.

மரண பயங்களிலிருந்து முழுவிடுதலை அளிக்கும் சில ஹோமியோபதி மருந்துகள் : அகோனைட், ஆர்சனிகம் ஆல்பம், ஜெல்சிமியம்.

மரபணுக்கள், அச்சுறுத்தலூட்டும் சூழ்நிலைகள், போதை மருந்துப் பொருட்கள், கடந்தகால மோசமான அனுபவங்கள், நிகழ்கால பெரிய மாற்றங்கள் (கர்ப்பம், கருச்சிதைவு, வேலை இழப்பு, வேலைமாற்றம், வீடு மாற்றம், கடன் நெருக்கடி) போன்ற காரணங்கள் அச்சமெனும் பெருவெள்ளத்தை வரவழைத்து விடுகின்றன.

பாதிக்கப்பட்டவரின் உடல், மன ஆய்வுகளுக்குப் பின்னர் Constitutional Remedy எனப்படும் உடல்வாகு மருந்தையும், அச்சக் குறிகளுக்கு ஏற்ற இதர மருந்துகளையும் தேர்ந்தெடுத்து சிகிச்சை அளித்தால் வியக்கத்தக்க வகையில் அச்ச நோய்களிலிருந்து வெளியேறி மன ஆரோக்கியத்துடன் வாழ வழிபிறக்கும்.

பயத்தின் தன்மைகளுக்கேற்ப எப்படிப்பட்ட பயம் என்ற அடிப்படையில் இம்மருந்துகளை அணுகினால் நிச்சயமான பலன் உண்டு.

அகோனைட் (ACONITE)

குறிப்பிட்ட நாள், குறிப்பிட்ட மணி நேரத்தில் (குறிப்பாக இதயத் துயர் மற்றும் பிரசவ நேரம்) இறந்து போவோம் என்ற பயம் -  மக்கள் கூட்டத்திலும், நெருக்கடியான இடங்களிலும் மூச்சுத் திணறி இறந்து விடுவோமோ என்ற பயம், வீதியை, சாலைகளைக் கடக்கும் போதும் பயம்.

அர்ஜெண்டம் நைட் (ARG.NIT)

நிகழ்ச்சிகளுக்குப் புறப்படும் போதே பயம். நீண்ட சுவர்கள், உயர்ந்த கட்டிடங்கள் அருகில் செல்ல மாட்டார். அவை தன்மீது விழுந்து விடுமோ என்று பயம். வீதி, சாலை, பாலங்களைக் கடக்கும் போதும் பயம். மலை உச்சியிலிருந்து அல்லது மாடியிலிருந்து கீழே பார்க்கும் போது, விழுந்து விடுவோமோ என பயம். அந்த பயத்தினால் சுயகட்டுப்பாடு இழந்து விழுந்தும் விடுவார்.

ஆர்சனிகம் ஆல்பம் (ARSENICUM ALBUM)

சாவைப் பற்றிய பயம் - தனியாக இருக்க பயம் - நோய்த் துயர்களினால் செத்துப் போவோம் என்ற பயம் (குறிப்பாக புற்றுத் துயரினால்) கணக்கில் அடங்காத பயங்கள்.

பாரிடா கார்ப் (BARTTA CARB)

பிறர் தன்னை நெருங்கினாலே குழந்தைகள் பயப்படுவார்கள். புதியவர்களைக் கண்டு பயம் - தனியாக மூலையில் அமர்ந்திருப்பார்கள். (ஆனாலும் பிறரைச் சார்ந்தே வாழ்பவர்கள்).

பெல்லடோன்னா (BELLADONNA)

விலங்குகளிடம் குறிப்பாக நாயைக் கண்டாலே பயம். கற்பனையான பொருட்களை எண்ணிப் பயம். தூங்கி விழிக்கும் போதெல்லாம் படுக்கைக்கு கீழே ஏதோ ஒன்று இருப்பதாகப்  பயம். தன்னுடல் அழுகிக் கெட்டுப் போய் விடுமோ என்ற பயம்.

கல்கேரியா கார்ப் (CALCAREA CARB)

ஈ, கொசு, மூட்டைப்பூச்சி போன்ற சிற்றுயிர்களைக் கண்டாலே பயம். தொற்றும் கொள்ளை நோய்களைப் பற்றியும் புற்றுநோய் போன்ற பெருந்துயர்கள் பற்றியும் (அவை குணப்படுத்த இயலாதவை என்று) பயம். பேய், பிசாசு குறித்த பயம். பல் மருத்துவரிடம் செல்லும் போதும், காயங்களைக் காணும் போதும், அறுவைச் சிகிச்சைப் பற்றி எண்ணும் போதும் பயம்.

ஜெல்சிமியம் (GELSEMIUM)

புறப்படும் போதே பயம். பொது இடங்களிலும், மேடைகளிலும், கூட்டத்தில் பலர் முன்பும் நிற்கப் பயம். குழந்தையைத் தூக்கி வைத்திருக்கும் போதே விழுந்து விடுவோமென்று பயந்து தாயை இறுகப் பிடித்துக் கொள்ளும், அசையாதிருந்தால் இதயம் நின்று விடுமெனப் பயம், சுய கட்டுப்பாட்டை இழந்து விடுவோமோ என்ற பயம். பயம் காரணமாக உடல் நடுங்குதல்.

ஹையாசியாமஸ் (Hyosyomus)

காட்டிக் கொடுப்பார்களோ, துரோகமிழைப்பார்களோ என்று பயம், விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று பயம். யாரோ பின் தொடர்கிறார்கள் என்று பயம். தனியாக இருக்க பயம் – தண்ணீரைக் கண்டாலே பயம்.

இக்னேஷியா (Ignatia)

பிறர் தன்னை அணுகுவது கூட பயம் தரும். பறவைகளிடம் பயம். மருத்துவர்களிடம் பயம். தீராத வியாதி (குறிப்பாக புற்றுநொய்ய்) வர போகிறதென்று பயம். அதிலிருந்து மீள முடியாதென்றும் பயம். (Ars).

கிரியோசோட்டம் (Kreosotum)

உடலுறவை நினைத்தாலே பெண்களுக்கு பயம். உண்ணாவிரதம், நோன்பு, பட்டினி என்றாலே பயம்.

லாச்சஸிஸ் (Lachesis)

காலரா பற்றிய பயம், தூங்கப் போகும் போது தூக்கத்தில் மூச்சுத் திணறி இறந்து விடுவோமோ என்ற பயம், பாம்பு பற்றிய பயம். விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் எனப் பயம்.

லில்லியம் டிக் (Lilium Tig)

பாலுறவுத் தூண்டுதலால் நன்னடத்தை தவறிவிடுவோமோ என்ற பயம்.

பாஸ்பரஸ் (Phosphorus)

கரப்பான் பூச்சிக்குப் பயம். புயல் மழையைக் கண்டு பயம். விருப்பமில்லாத பொருளை எண்ணினாலே பயம். மருத்துவரைக் கண்டு பயம்.

ரஸ்டாக்ஸ் (Rhustox)

விஷம் வைத்துக் கொல்லப்படுவோம் என்ற பயம். மூட நம்பிக்கைகள் சார்ந்த பயம்.

சிலிகா (Silica)

குண்டூசி மற்றும் கூர்மையான பொருட்களை கண்டு பயம். கூட்டத்திலும், பொதுமேடையிலும் பயம். ஏதாவது புதிய முயற்சியை மேற்கொள்ளும்போது பயம்.

நன்றி : டாக்டர் வெங்கடாசலம்

ஆதாரம் : தினமணி

கடைசியாக மாற்றப்பட்டது : 7/6/2023



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate