பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / உடல்நலம் / தெரிந்து கொள்ள வேண்டியவை / பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள்

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளில் தேவைப்படும் முக்கிய குறிப்புகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் பற்றியதான தகவல்களை பகிர்ந்து, நடைமுறைப் படுத்துவதின் அவசியம் என்ன?

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள் மிகமோசமாக உடல்நலக்குறைவு மற்றும் கடும் மனத்தாக்கத்திற்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு தனி பராமரிப்பு மற்றும் கவனமும் தேவை.

உலகின் மதிப்பீடு செய்யப்பட்ட 27 மில்லியன் அகதிகள் மற்றும் 30 மில்லியன் இடம் பெயர்ந்தோர்களில்,80 சதத்தினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர். 1990 லிருந்து 1999 வரை ஏற்பட்ட பேரழிவுகளால் ஏறக்குறைய 2 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பேரழிவுகள் ஈடில்லாதளவு ஏழைகளையே மிகவும் பாதிக்கிறது. 90 சதத்திற்கும் மேற்பட்ட பேரழிவுகளால் ஏற்படும் மரணம் வளர்ந்து வரும் நாடுகளில் நிகழ்கிறது. உலகம் முழுவதும் (சில) 90 மில்லியன் குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், காயப்பட்டுள்ளனர், அநாதைகளாக்கப்பட்டுள்ளனர் அல்லது அவர்களுடைய பெற்றோரிடமிருந்து தனிமைப்படுதப்பட்டுள்ளனர்.

முக்கிய குறிப்புகள்

ஒவ்வொரு குடும்பமும் மற்றும் சமுதாயமும் பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகளை பற்றி அறிந்து கொள்ள வேண்டியவைகள் என்ன?

  1. பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள், அவசியம், முக்கியமான உடல் நலப் பராமரிப்பான தட்டம்மை தடுப்பூசி, போதுமான உணவு மற்றும் கூடுதல் நுண் ஊட்டச்சத்து போன்றவற்றை பெற வேண்டும்.
  2. நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம்.
  3. சண்டை நடக்கும் சூழ்நிலைகளின் போது, எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் பராமரிக்கப்படுவது விரும்பப்படத்தக்கது. ஏனென்றால், இது பிள்ளைகளுக்கு தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரச் செய்கிறது.
  4. ீடுகளில் நடக்கும் வன்முறைகள், போர்கள் மற்றும் பிற பேரழிவுகள் பிள்ளைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, சிறுவர்களுக்கு தனி கவனிப்பு, அதிகப்படியான அன்பு மற்றும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்றபடி அவர்களின் அனுபவத்தை விவரிக்க போதுமான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.
  5. நிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை கண்டிப்பாக தொடவும் மற்றும் மிதிக்கவும் கூடாது. பிள்ளைகள் விளையாட பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும். தெரியாத பொருட்களை தொடக்கூடாது என அவர்களை எச்சரிக்க வேண்டும்.

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமைகள் குறித்த உபதகவல்கள்

தகவல் குறிப்பு 1

பேரழிவுகள் மற்றும் நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் சிறுவர்கள், அவசியம், முக்கியமான உடல் நலப் பராமரிப்பான தட்டம்மை தடுப்பூசி, போதுமான உணவு மற்றும் கூடுதல் நுண் ஊட்டச்சத்து போன்றவற்றை பெற வேண்டும்.

மக்கள் நெருக்கமாக ஒன்று சேர்ந்திருக்கும்போது நோய்கள் மிகவிரைவாகப் பரவக்கூடும். இடநெருக்கமான சூழலில் வாழும் அனைத்து குழந்தைகளுக்கும், குறிப்பாக அகதிகள் முகாம் அல்லது பேரழிவு சூழல்களில் வாழும் குழந்தைகளுக்கு, அவசியம் உடனடியாக தடுப்பூசி போடப்பட வேண்டும். மிக குறிப்பாக தட்டம்மை தடுப்பூசி முதலில் போடப்பட வேண்டும். கூடுதல் வைட்டமின் ஏ-ம் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்.

நெருக்கடி நிலைமை சூழல்களில் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளையும் ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தப்பட்டு பின் தானாக செயலிழக்கும் சிரின்ஞ்சுகள் பயன்படுத்தப் பட வேண்டும்.

குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறையும்போதும் மற்றும் துப்புறவு இல்லாத சூழலில் வாழும்போதும், தட்டம்மை நோய் அதிகளவு பாதிப்புகளை ஏற்படுத்தும்.

• தட்டம்மை நோய் மிகவிரைவாக பரவுவதால், தட்டம்மை நோய் கொண்ட குழந்தையை மற்ற குழதைகளிடமிருந்து தனிமைப்படுத்தி, பயிற்சி பெற்ற சுகாதாரப் பணியாளரால் சோதிக்கப்பட வேண்டும். கூடுதல் வைட்டமின் ஏ கொடுக்கப்பட வேண்டும்.

• தட்டம்மை நோய் அடிக்கடி வயிற்றுப் போக்கை ஏற்பத்தும். பிள்ளைகளுக்கு தட்டம்மை நோய் தடுப்பூசி போடுவது வயிற்றுப்போக்கு ஏற்படுவதை தடுத்து நிறுத்தும் மற்றும் நிமோனியா நோயை எதிர்த்து பாதுகாக்கும்.

• எந்த காரணத்திலாவது ஒரு குழந்தை ஒரு வருடத்திற்குள் அனைத்து தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாவிட்டால், அக்குழந்தை எவ்வளவு விரைவாக அனைத்து தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக பெற்றுக் கொள்து மிகவும் முக்கியம்.

தகவல் குறிப்பு 2

நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில் தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம்.

குடும்ப நபர்கள், மற்ற தாய்மார்கள் மற்றும் திறமை மிக்க சுகாதார பணியாளர்கள் போன்றோர் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலூட்டுவதின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, குழந்தைகளுக்கு தாய்ப்பால் மாத்திரம் முதல் ஆறு மாதங்களுக்கு தரவேண்டும் மற்றும் தாய்ப்பாலூட்டுவதை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வரை கொடுக்க வேண்டு என்று ஊக்கப்படுத்த வேண்டும். ஆறு மாதங்கள் நிறைவுற்ற சிறு குழந்தைகளுக்கு, தாய்ப்பாலுடன் கூடுதலாக போதுமான நிரப்பீட்டு உணவு அவசியம் வழங்கப்பட வேண்டும்.

மன அழுத்தத்தில் உள்ள தாய்மார்கள், மன அழுத்தம் தாய்ப்பாலூட்டுவதை நிரந்தரமாக பாதிக்கிறது என்ற பொய்யான நம்பிக்கையிலிருந்து விடுபட அவர்களுக்கு தனி கவனிப்பு மற்றும் உதவி தேவைப்படுகிறது.

ஆறு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் உடல்நலக்கேடு மற்றும் இறப்பு ஏற்படுவதைத் தடுக்க, முதல் ஆறுமாதங்களுக்கு தாய்ப்பால் மாத்திரம் தரவேண்டும் என்பதை அவசியம் வலியுறுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கான உணவு தேவைப் படின், அவற்றை தாய்மார்கள் அல்லது குழந்தைகளை பராமரிப்பவர்கள் எவ்வாரு சுகாதாரமான முறையில் தயாரிப்பது என்பதை கூறுதல் வேண்டும். செயற்கை முறையில் ஊட்டப்படும் உணவினை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு அதிகமான அரவணைப்பு மற்றும் பற்றுதல் தேவைப்படுகிறது. அவர்களை தாங்களாகவே பாட்டில்களில் உள்ள உணவை உட்கொள்ளும்படி தனிமையில் விட்டுவிடக்கூடாது. கிண்ணங்களிலிருந்து சாப்பிடுவதை பரிந்துரைக்க வேண்டும்.

தகவல் குறிப்பு 3

சண்டை நடக்கும் சூழ்நிலைகளின் போது, எப்பொழுதும் சிறுவர்கள் தங்கள் பெற்றோர்களால் அல்லது நன்கு தெரிந்த நபர்களால் பராமரிக்கப்படுவது விரும்பப்படத்தக்கது. ஏனென்றால், இது பிள்ளைகளுக்கு தாங்கள் பத்திரமாக இருப்பதாக உணரச் செய்கிறது.

இக்கட்டான நிலை மற்றும் நெருக்கடி / அவசரகால சூழ்நிலைகளில், சிறுபிள்ளைகள் தங்கள் பெற்றோர் அல்லது பராமரிப்பவர்களிடமிருந்து தனிமைப்படுத்தப்படாதவாரு பார்த்துக் கொள்வது அரசாங்கம், பொறுப்பிலுள்ள அதிகாரிகள் அல்லது பன்னாட்டு கூட்டமைப்பின் (அரசாங்கம் இல்லாதபோது) கடமையாகும்.

ஒரு வேளை தனிமைப்பட நிகழ்ந்தால், அக்குழந்தைக்கு தனிப்பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு கொடுப்பது அரசு மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் பொறுப்பாகும். அதே போல், தனிமைப்படுததப்பட்ட குழந்தையின் குடும்பத்தை தேடி, அக்குழந்தையை அவன் அல்லது அவள் குடும்பத்துடன் மீண்டும் இணைப்பதும், அரசு மற்றும் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும்.

நெருக்கடி நிலைமை சூழ்நிலைகளில், தங்கள் குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட சிறுபிள்ளைகளுக்கு தற்காலிகமான இடைக்கால பராமரிப்பு வழங்கப்பட வேண்டும். கூடுமானால் இந்த இடைக்கால பராமரிப்பை அக்குழந்தை தங்கள் குடும்பத்துடனோ அல்லது வளர்ப்புக் குடும்பங்களிலோ வைத்து வழங்கப்படுவது மிக முக்கியம்.

நெருக்கடி நிலைமை சூழலில் தனிமைப்படுத்தப்பட்ட சிறுவர்களை ஆனாதையாக்கப்பட்டவர்கள் என கருதி, தத்து கொடுக்கப்படக் கூடாது. ஒரு குழந்தையின் பெற்றோர் அல்லது மற்ற நெருங்கின உறவினர்களுக்கு என்னவாயிற்று என்பது உறுதி செய்யப்படாதவரைக்கும், ஒவ்வொரு தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைக்கும் இன்னும் கண்டடையக்கூடிய நெருங்கின உறவினர் உயிருடன் இருக்கிறார்கள் என கருத வேண்டும். பெற்றோர் அல்லது உறவினர்களை கண்டுபிடிக்க முடியாதபோது, அக்குழந்தை, தன் சமூகத்தை சேர்ந்த குடும்பத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவது சிறந்ததாகும். மேற்கூற்று கூடாமற்போனால், பிள்ளை மற்ற கலாசாரத்திலிருந்து வந்த குடும்பம் அல்லது பிற நாடுகளில் உள்ளவர்கள் தத்தெடுப்பதினை கருதலாம்.

புதிய வீட்டிற்கோ அல்லது நாட்டிற்கோ குடிபெயர்ந்து செல்வது மனவருத்தம் மிகுந்தது ஆகும். மிக குறிப்பாக வன்முறை நிறைந்துள்ள குடும்பமாக இருந்தால், அகதிகளாக விடப்பட்ட சிறுபிள்ளைகள் சில நேரம் புதிய மொழி மற்றும் கலாசாரத்தினை கற்றுக்கொள்ள வேண்டியது கூடுதல் சுமையை கொடுக்கிறது.

தகவல் குறிப்பு 4

வீடுகளில் நடக்கும் வன்முறைகள், போர்கள் மற்றும் பிற பேரழிவுகள் பிள்ளைகளுக்கு பயத்தை உண்டாக்குகிறது. இது போன்ற நிகழ்வுகள் நடக்கும்போது, சிறுவர்களுக்கு தனி கவனிப்பு, அதிகப்படியான அன்பு மற்றும் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த மற்றும் அவர்களின் வயதிற்கு ஏற்றபடி அவர்களின் அனுபவத்தை விவரிக்க போதுமான சந்தர்ப்பம் கொடுக்கப்பட வேண்டும்.

நன்கு அறிந்த மக்கள், இடங்கள் மற்றும் பொருட்களை இழக்க நேரிடும்போது அல்லது பெரியவர்கள் சோகத்துடன் மாறுபட்ட நிலையில் காணப்படும்போது, பிள்ளைகளுக்கு பயத்தையும் புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் உணரத் தோன்றும்.

நெருக்கடி சூழ்நிலைகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கும் அன்பு மற்றும் பாதுகாப்பு கொடுப்பது கடினம் என கண்டுணரலாம்.

பீதி மற்றும் கொடுமையான அனுபவங்களுக்கு பிறகு, சிறுபிள்ளைகள் மன அழுத்தத்தின் எதிர்விளைவு மற்றும் மாறுப்பட்ட நடத்தை போன்றவற்றை காண்பிப்பது பொதுவானது. சில பிள்ளைகள் சிறிது காலத்தில் மீண்டுவிடுகின்றனர். மற்ற பிள்ளைகள் அதிக தாக்கத்துக்குள்ளாகின்றனர். அவர்களின் பயம் நீங்காத போதும், சில சிறுவர்கள் நன்கு சமாளித்துக் கொண்டு நடப்பது போல் தோன்றும். சிறுவர்கள் தங்களை நீண்டகால வன்முறைகளுக்கு ஏற்றாற்போல் தங்களை மாற்றி அமைத்துக் கொண்டாலும, இது அவர்களை புண்படுத்தும்.

சிறுவர்கள் தங்கள் எண்ணங்களை/உணர்வுகளை புரிந்துகொள்ள உதவி பெற்றுக்கொள்ளாவிடில் அவர்களுடைய நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்படும்.

• ஒழுங்கான அன்றாட பணிமுறைகள் - பள்ளிக்குச் செல்லுதல் மற்றும் ஒழுங்கான உணவுகளை உட்கொள்ளுதல் மற்றும் உறங்குதல் போன்ற பணிமுறைகள், சிறுவர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் பாதுகாப்பான உணர்வுகளை கொடுக்கின்றன.

• சந்தோஷத்தை ஏற்படுத்தும் செயல்கள் சிறுபிள்ளைகளுக்கு மன அழுத்தத்தினை சமாளிக்க உதவுகிறது. ஒழுங்குபடுத்தப்பட்ட வன்முறை இல்லாத விளையாட்டு, விளையாட்டு போட்டிகள் ஆகியவை ஒரே வயதினரிடையே நல்ல தொடர்பு ஏற்பட ஊக்குவிக்கிறது. ஓவியம் வரைதல் மற்றும் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்/பொம்மை அல்லது பொம்மலாட்டத்தில் பயன்படுத்தப்படும் பொம்மையுடன் விளையாடுவது, சிறுவர்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தவும் மற்றும் மன அழுத்தம் நிறைந்த அனுபவங்களை சரிசெய்து கொள்ளவும் உதவுகிறது. நாடகத்தின் மூலம் நடந்த சூழ்நிலைகளை திரும்ப நடித்துக் காட்டுவது, சிறுபிள்ளைகளுக்கு அந்நிலையிலிருந்து மீண்டுவர உதவியாயிருக்கும்.

• எந்த விஷயம் தங்களை துன்பப்படுத்துகிறது என்பதை வெளிப்படையாக கூற, சிறுவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் தாங்களாகவே தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த ஊக்குவிக்க வேண்டும். ஆனால் அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. அவர்கள் பார்த்தது அல்லது அனுபவப்பட்டது என்ன என்பதனை அவர்கள் வெளிப்படுத்த, மற்றவர்கள் கவனிக்க வேண்டும்

• மூன்று முதல் ஆறுவயதிற்குட்பட்ட சிறுவாகள், தாங்கள் தான் பிரச்சினைக்குப் பொறுப்பானவர்கள் என எண்ணலாம். இது போன்ற எண்ணங்கள் அவர்களுக்குள் குற்ற உணர்வினை ஏற்படுத்தலாம். இப்பிள்ளைகளுக்கு, தங்களை பராமரிக்கும் வளர்ந்தவர்களிடமிருந்து உதவியும் கண்காணிப்பும் தேவைப்படுகிறது.

• சிறுவர்களுக்கு மாறாத உறுதியான நம்பிக்கையூட்டட வேண்டியுள்ளது. அவர்களை திட்டவோ மற்றும் தண்டிக்கவோ கூடாது. ஒரு நெருங்கின குடும்ப நபர் தூரமாக செல்ல வேண்டியிருந்தால், அக்குழந்தை அவசியம் முன்பாகவே அறிவிக்கப்பட வேண்டும். அந்த நபர் எங்கே செல்கிறார், அவர் எப்பொழுது திரும்ப வருவார், மற்றும் அவர் இல்லாத நேரத்தில் யார் அக்குழந்தையை கவனித்துக் கொள்வார் என்ற விவரத்தினை அக்குழந்தைக்கு சொல்ல வேண்டும்.

• விடலைப்பருவத்தினர் போர் மற்றும் அதிர்ச்சியான சம்பவங்களை தெளிவாக புரிந்துகொள்ளக் கூடியவர்கள். இவர்கள் சிறுபிள்ளைகளை காட்டிலும், சில வழிகளில், மிக அதிகளவு மன ரீதியாக பாதிக்கப்படக்கூடியவர்கள். மேலும், இந்நிகழ்வுகளை தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற குற்ற உணர்வு ஏற்படக்கூடும். அவர்கள் நிலைமையை சமாளித்துக் கொண்டவர்கள் போல காணப்படலாம். மனமுதிர்ச்சி குறைவுள்ள விடலைப்பருவத்தினர் சில வேளைகளில் கோபம் மற்றும் மனச்சோர்வு உணர்வுகளை சமாளிக்க, அதிகார வர்க்கத்தினருக்கு எதிராக கிளர்ச்சி செய்வர், போதைப்பொருளை பயன்படுத்துவர் அல்லது திருடுவர். அல்லது, தங்களை தனிமை படித்துக்கொள்வர், பயமடைவர் அல்லது கெட்டதே தனக்கு நடக்கும் என கருதுவர். விடலைப்பருவத்தினருக்கு தங்கள் அனுபவங்களினூடே கடந்து சென்ற வாலிப வயதினரின் உதவி தேவைப்படுகிறது. விடலைப் பருவத்தினரை சமுதாய வாழ்வில் உட்படுத்தி, அவர்களை சமுதாய நலனிற்காக பயன்படுத்துவது மிகவும் பயனுள்ளதாகும்.

• நண்பர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள், விடலைப்பருவத்தினரை தாங்க மற்றும் பாதுகாக்க முக்கிய மூலாதாரங்களாகும். விடலைப்பருவத்தினரை தங்கள் வயதுடையவர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய வாலிபர்களிடம் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும்.

• குழந்தைகளின் மனஅழுத்த எதிர்விளை செயல்கள் மோசமாக மற்றும் நீண்டகாலம் இருக்கும்போது, அவர்களுக்கு மனநல ஆலோசனைகளின் சிறப்பு உதவி தேவைப்படுகிறது

தகவல் குறிப்பு 5

நிலக்கண்ணி வெடிகள் மற்றும் வெடிக்காத வெடிமருந்துகள் மிகவும் ஆபத்தானவை. அவற்றை கண்டிப்பாக தொடவும் மற்றும் மிதிக்கவும் கூடாது. பிள்ளைகள் விளையாட பாதுகாப்பான இடங்களை அமைக்க வேண்டும். தெரியாத பொருட்களை தொடக்கூடாது என அவர்களை எச்சரிக்க வேண்டும்.

நிலக்கண்ணி வெடிகள் பல வித்தியாசமான வடிவங்கள் அளவுகள் மற்றும் நிறங்களில் வருகின்றன. கண்ணிகளை நிலத்திற்கு அடியில் புதைத்து வைக்கலாம் அல்லது புல்தரை, மரங்கள் அல்லது தண்ணீரில் மறைத்து வைக்கலாம். துருப்பிடித்த கண்ணி வெடிகளை அடையாளம் கொள்வது கடினமாக இருக்கலாம், ஆனால் அவை ஆபத்தானவை.

நிலக்கண்ணி வெடிகள் வெளிப்படையாக காணக்கூடியவை அல்ல. ராணுவ செயல்கள் நடைபெறும் இடங்கள், உபயோகப்படுத்தப்படாத இடங்கள் அல்லது புதர்நிறைந்த இடங்களில் செல்லும்போது சிறப்பு எச்சரிக்கை தேவை. கண்ணிகள் வைக்கப்பட்டுள்ள இடங்களை ஆபத்து குறிகள் (மண்டை ஓடு மற்றும் பெருக்கல் குறி, பெருக்கல்குறி, முடிச்சுப்போட்ட கட்டப்பட்ட புல்) வைத்து குறிக்கப்பட வேண்டும். ஒருவரும் இவ்வாறு குறிக்கப்ட்ட பகுதிக்குள் செல்லக்கூடாது.

கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத மருந்துகளை ஒருபோதும் தொடக்கூடாது. பெரும்பாலான இவ்வகை பொருட்கள் நிலத்தில் விழும் போது வெடிக்கும் வண்ணம் திட்டமிட்டு வைக்கப்பட்டும். ஆனால், சிலவேளைகளில், இவை வெடிப்பதில்லை. அவை இன்னமும் ஆபத்தானவை. நிலப்பகுதிகளை தீயிட்டு எரிப்பது கண்ணிகளை வெடிக்கச் செய்வதுமில்லை, அப்பகுதியை பாதுகாப்பானதாகச் செய்வதுமில்லை.

சில கண்ணிகள் சுமை பட்டதும் வெடிக்கக் கூடியவை. சில, கம்பிகளை இழுக்கும் போது, மற்றவை தொடுவதால் அல்லது அதை சாய்ப்பதால் வெடிக்கும். ஒருவரும் ஆங்காங்கே காணப்படும் கம்பிகளின் மேல் கால் வைக்கக்கூடாது. நிலத்தடி கண்ணிகள் அருகாமையில் இருக்கலாம். எங்கேயாவது ஒரு கண்ணிவெடி இருந்தால், அடுத்தடுத்து அங்கே பல கண்ணிகள் இருக்கலாம். யாராவது ஒருவர் ஒரு கண்ணிவெடியினை பார்த்தால் கண்டிப்பாக மேற்கொண்டு நடப்பதை நிறுத்த வேண்டும் மற்றும் அவன் அல்லது அவளுடைய பாதச்சுவடுகளைக் கண்டறிந்து வந்தவழியே செல்ல வேண்டும். அல்லது அசையாமல் அங்கேயே நின்று உதவி கோரவேண்டும்.

நிலக்கண்ணிவெடியினால் காயம் ஏற்பட்டால்

• இரத்தக்கசிவு ஏற்படும் இடத்தில், இரத்தக்கசிவு நிற்கும் வரை திரமாக அழுத்த வேண்டும்.

• இரத்தக்கசிவ குறையாததுபோல் காணப்பட்டால், ஒரு துண்டுத்துணியைக் கொண்டு கூடுமானால் காயத்திற்கு அருகில் அல்லது காயத்திற்கு மேல் கட்டுப்போட வேண்டும். மருத்துவ உதவிக்கு உடனடியாக அனுப்ப வேண்டும். உதவி ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதமானால், ஒவ்வொரு மணிநேரமும் போட்ட கட்டினை தளர்த்தி இரத்தக்கசிவினை சரிபார்க்க வேண்டும். இரத்தக்கசிவு நின்றிருந்தால் போடப்பட்ட கட்டினை எடுத்துவிட வேண்டும்.

• குழந்தை சுவாசிக்கிறது ஆனால் சுயநினைவு இல்லை எனில், அவள் அல்லது அவனை ஒருபக்கமாக ஒருக்களித்து படுக்கும் வண்ணம் உருட்ட வேண்டும். அப்படிச் செய்வதால் நாவு சுவாசத்தை தடை செய்யாது. அப்பகுதியில் பாதுகாப்பை நிச்சயப்படுத்த கண்ணிவெடிகளைப் அப்புறப்படுத்தும் நிபுணர்களை அழைத்து கண்ணிகளை அகற்றுவதே சிறந்த தீர்வ ஆகும்.

2.9649122807
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top