பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

மனிதனின் உடற்செயலியல்

மனிதனின் உடற்செயலியல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

உடலின் உள்ளுறுப்புகளின் செயல்திறன்களைப் பற்றி அறிதல் உடற்செயலியலாகும். அனைத்து உடற்செயல் நிகழ்ச்சிகளும் உயிரிகள் தன்நிலை காத்தல், வாழ்தல், இனப்பெருக்கம் செய்தல் எனும் இயக்கங்களின் செயல்பாடுகளாகும். தன்நிலை காத்தலால் உயிரிகள் பிற உயிரற்ற பொருட்களிலிருந்து தங்களை முற்றிலுமாக வேறுபடுத்திக் காண்பிக்கின்றன. மேலும் தன்நிலை காத்தல், தங்களை இனப்பெருக்கத்தால் அதிகரித்துக் கொள்ளும் மரபணு அடிப்படையிலான உயிரினங்களுக்குரிய தனித்தன்மையினை அளித்துள்ளது. உடலின் நீரளவு, உப்பு மூலங்களின் அடர்த்தி, வெப்ப அளவீடுகள் ஆகியவற்றைப் பாதுகாத்தல் தன்நிலை காத்தலின் பண்பாகும். இப்பண்பு உயிர் வேதியியல் செயல்கள் மற்றும் ஹார்மோன்கள் சுரப்பு ஆகியவற்றால் ஏற்படுகிறது.

பரிணாம மாறுபாடுகளால் தோன்றியுள்ள பலவகைப்பட்ட உறுப்புகளும் அவ்வுறுப்புகளின் ஒருமித்த செயல் திறன்களுமே உயிர் வாழ்தலுக்கு ஆதாரமாகின்றன. இரத்தத்தினை உந்தி ஓடச் செய்யும் இதயம் உள்ளத்தின் உணர்ச்சிகளாலும் இயக்கப்படுவது வியப்பான நிகழ்ச்சி. எளிய உயிர்வாழ்தல் நிகழ்ச்சிக்கென, இரத்த நிறமிகள் ஆக்ஸிஜனுடன் இணைதலும் பிரிதலும் ஒரு சில மூலக்கூறுகள் அளவில் தோன்றும் ஹார்மோன்கள் சிறிய தூண்டுதல்களால் மிகப்பெரிய வேதிய மாற்றங்களைத் தோற்றுவிப்பதும் நரம்புகளின், உணர்வுக் கடத்துதல் திறன் மற்றும் நினைவுத் தன்மையுடன் செயல்படும் மூளையின் பயன்பாடுகளும், பார்வை உணர்வால் பலவற்றை உணர்த்தும் கண்களின் செயல்பாடுகளும் இயற்கை நமக்களித்துள்ள அற்புதக் கண்டுபிடிப்புகளாகும்.

பாரம்பரியப் பண்புகளைக் கடத்துதல் எனும் மிகச் சிக்கலான செயல்பாட்டினை இனப்பெருக்கச் செல்களை உற்பத்தி செய்வதன் மூலம் நடைபெறச் செய்து எளிய முறையாகத் தென்படும் இனப்பெருக்கமும் உயிரினத் தொகை அதிகரிப்பும் ஏற்படுவது வியப்பூட்டும் நடைமுறைகள். மேலும், பல்வேறு உயிரிகளின் இனப்பெருக்க முறைகள் சமுதாய, சுற்றுச்சூழல் மற்றும் முன்னோக்கிய தன்மைகள் கொண்டிருப்பது சிறப்புடையது.

உணவூட்டம் உயிரிகளின் உயிர் வாழ்விற்குப் பலவகை உணவூட்ட முறைகள் காரணமாகின்றன. உணவூட்டமென்பது உணவை உள்ளிழுத்தல், செரித்தல், உட்கிரகித்தல், தன்மயமாக்குதல் எனப் பல நிலைகளுடையது. பல்வேறு ஊட்டமுறைகளில் உணவுகளின் பகுதிப் பொருட்கள் வேறுபடும். இருப்பினும் அனைத்து உணவு வகைகளும் பொதுவாக கார்போஹைட்ரேட்டு, புரோட்டீன், கொழுப்பு, வைட்டமின்கள், தாது உப்புக்கள், நீர் எனும் வேதியப் பொருட்களால் ஆனவை. இவை ஒவ்வொன்றுக்கும் குறிப்பிட்ட பணிகள் உண்டு. அனைத்துப் பொருட்களையும் சரியான அளவில் கொண்ட உணவினை உட்கொள்ளுவது அவ்வுயிரியின் வளர்ச்சி, பால், உடல்நலம், உடற்செயல்கள், சுற்றுச்சூழல் தன்மைகள் ஆகியவற்றைச் சார்ந்தது.

கார்போஹைட்ரேட்டுகள் (பாலிஹைட்ராக்சி ஆல்டிஹைடுகள்)

கார்போஹைட்ரேட்டுகள், கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன் போன்றவற்றை 1:2:1 [(CH,O)n] எனும் விகிதத்தில் கொண்டுள்ளன. இவை ஒற்றைச் சர்க்கரை, இரட்டைச்சர்க்கரை, கூட்டுச்சர்க்கரை என மூன்று வகைப்படும்.

ஒற்றைச் சர்க்கரைகள்

இவை தனித்த மூலக்கூறினால் ஆன எளிய கார்போஹைட்ரேட்டுகள் இவற்றிலுள்ள கார்பன்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் டையோஸ், டிரையோஸ், டெட்ரோஸ், பென்டோஸ், ஹெக்சோஸ் எனப் பல வகைகளாக அமைந்துள்ளன.

டிரையோசுகள் : (Trioses, C,H,O) வளர்சிதை மாற்றத்தில் இடைநிலைப் பொருட்களாகத் தோன்றுபவை. உயிர் மூலக்கூறுகளை இடைமாற்றம் செய்வதில் இவற்றிற்கு முக்கிய பங்குண்டு (உ-ம் கிளிசரால்டிஹைடு).

பென்டோசுகளில் : (Pentoses, C,H, O) முக்கியமானவை ரைபோஸ், டியாக்சிரைபோஸ் போன்றவை. இவைகள் RNA, DNA மூலக்கூறுகளின் முக்கிய அங்கங்கள்.

ஹெக்சோசுகள் : (Hexoses, CH,O.) குளுக்கோஸ், ஃப்ரக்டோஸ் மற்றும் காலக்டோஸ் எனும் பொருட்களாக உணவில் உள்ளன.

கார்போஹைட்ரேட்டுகள் செல்களில் சக்தி தோன்றுதலுக்கு உதவுகின்றன. சக்தி உற்பத்திக்கான வளர்சிதை மாற்றம் ஆக்ஸிகரண நிகழ்ச்சியாகிய சிட்ரிக் அமிலச் சுழற்சியினால் ஏற்படும். உற்பத்தியாகும் சக்தி ATP (Adenosine triphosphate) மூலக்கூறுகளாகச் சேமிக்கப்படும். ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டும் 4.1 கலோரி அளவிற்குச் சக்தியினைத் தரும்.

இரட்டைச்சர்க்கரைகள்

இவை இரண்டு ஒற்றைச் சர்க்கரைகளின் இணைப்பால் ஆனவை. இச்சர்க்கரைகள் பால், சர்க்கரையில் உள்ளன. மூன்று வகை இரட்டைச் சர்க்கரைகள் உண்டு. அவை,

மால்ட்டோஸ்- குளுக்கோஸ் + குளுக்கோஸ் முளைத்த தானியங்கள்)

சுக்ரோஸ் (கரும்பச் சர்க்கரை) - குளுக்கோஸ் + ஃப்ரக்டோஸ்

லாக்டோஸ் (பால்)- குளுக்கோஸ் + காலக்டோஸ்

கூட்டுச்சர்க்கரைகள்

இவை பல ஒற்றைச் சர்க்கரைகளின் ஒன்றிணைப்பால் ஆனவை.

இயற்கையில் பல கூட்டுச்சர்க்கரைகள் அதிக அளவில் தோன்றுகின்றன. இவற்றில் பல உடல் கட்டுமான பொருட்களாகிய கைட்டின், செல்லுலோஸ் எனும் பொருட்களாக உள்ளன. அதிக அளவில் சக்தியைக் கொண்டு, சேமிப்பு உணவாக ஸ்டார்ச் அமைந்துள்ளது. உணவுத் துகள்களில் ஸ்டார்ச்சானது பெக்டின், அமைலோபெக்டின் மூலக்கூறுகளாக உள்ளது. விலங்குகளின் கல்லீரலிலும் தசைகளிலும் கிளைக்கோஜன் எனும் கூட்டுச்சர்க்கரை அமைந்துள்ளது.

புரோட்டீன்கள் (பாலிபெப்டைடுகள்)

புரோட்டீன் மூலக்கூறுகள் கார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், நைட்ரஜன் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இவற்றில் கந்தகமும் உண்டு. உயிரிகளில் செல்சவ்வு, உரோமங்கள், நகங்கள், மற்றும் தசைகளைத் தோற்றுவிப்பதில் இவற்றிற்கு (அமைப்புப் புரதங்கள்) முக்கிய பங்குண்டு. பல புரோட்டீன்கள் என்சைம்களாகச் செயல்புரிகின்றன. அவற்றிற்குச் செயல் புரதங்கள் என்று பெயர்.

புரோட்டீன் மூலக்கூறுகள், அமினோ அமிலங்களால் ஆனவை. கிளைசின், அலனின், சிரைன், வாலின், லியூசின், புரோலின் ஆகியவற்றைப் போன்று 20 வகையான அமினோ அமிலங்கள் உள்ளன. இவை அவசியமான, அவசியமற்ற அமினோ அமிலங்கள் என இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவசியமான அமினோ அமிலங்களை நமது உடலில் உற்பத்தி செய்ய முடியாது. இவற்றினை உணவின் மூலமாக நேரடியாகப் பெறுதல் வேண்டும். அர்ஜினைன், வாலின், ஹிஸ்டிடின், ஐசோலியூசின், லியூசின், லைசின், மீதியோனின், பினைல் அலனின், திரியோனின், டிரிப்டோபேன் போன்றவை அவசியமான அமினோ அமிலங்களாகும். அவசியமற்ற அமினோ அமிலங்கள் உணவில் அமைந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. ஏனெனில், இவற்றினை நமது உடல் தயாரித்துக் கொள்ள இயலும்.

பல அமீனோ அமிலங்கள் பெப்டைடு இணைப்புகளால் இணைவதால் ஓர் புரோட்டீன் அல்லது பாலிபெப்டைடு உருவாகும். இவ்வகை நீண்ட சங்கிலித் தொடர் அமைப்பிற்குப் புரோட்டீனின் முதல்நிலை அமைப்பு என்று பெயர். பல புரோட்டீன்களில் சிக்கலான அமைப்பில் இரண்டு அல்லது மூன்றாம் நிலைப் புரோட்டீன்களாக அமைந்திருக்கும். நான்காம் நிலையிலும் புரோட்டீன்கள் உண்டு.

இந்நிலை பல வேதிய இணைப்புகளால் ஏற்படும். ஓர் குறிப்பிட்ட தொழிலுக்கான புரோட்டீன் அதற்குரிய முறையில் சிக்கலான அமைப்புக் கொண்டிருக்கும். ஓர் புரோட்டீனில் அமினோ அமிலங்களின் அடுக்கு முறையும் மூலக்கூற்றின் அமைப்பும் மரபுப் பண்பு அடிப்படையிலானது. எனவே தான் 'ஜீனோம்கள்' எனப்படும் ஜீன் அமைப்புத் தன்மைகள் இன்று முக்கியத்துவம் பெற்றுள்ளன.

1CMR ன் உணவு நிபுணர் குழுவின் கருத்துப்படியும் WHO வின் நிலைப்படியும் ஒரு தனிநபருக்கு ஒரு நாளில் தேவைப்படும் புரோட்டீனின் அளவானது ஒவ்வொரு கிலோகிராம் உடல் எடைக்கும் 1 கிராம் ஆகும். உணவில் புரோட்டீன் குறைந்தால் மராசுமஸ், குவாஷியார்கர் போன்ற குறைபாட்டு நோய்கள் தோன்றும். மராஸ்மசில் குழந்தையின் உடல் எடை குறையும். கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படும். உடல் தசைகள் மெலியும். எலும்பின் மீது தோல் மூடியுள்ளது போன்ற நிலை தோன்றும். குவாஷியார்கரில் தசைகள் மெலிந்து முகம், கால்களில் வீக்கம் ஏற்படும். வயிறு, உப்பியிருக்கும்.

கொழுப்பு (லிப்பிடுகள்)

இவை செல்களின் மிக முக்கியமான மூலக்கூறுகள். இவை சக்திமிகுந்த மூலக்கூறுகள். உடலின் மிக முக்கிய சேமிப்பு உணவுப் பொருட்கள். தோலுக்கு அடியில் உள்ள கொழுப்பு உடலுக்கு அழகு சேர்க்கிறது. சிலவகை ஸ்டீராய்டு ஹார்மோன்களை உற்பத்தி செய்தலுக்கும் கொழுப்புத் தேவை. எளிய கொழுப்பு அல்லது டிரைகிளிசரைடுகள் இயற்கையில் அதிகம் காணப்படும் கொழுப்பு வகைகளாகும். இவை விலங்குகளின் அடிப்போசு திசுக்களில் உள்ளன. ஓர் டிரைகிளிசரைடானது கிளிசரால் மற்றும் கொழுப்பு அமிலங்களால் ஆனது.

கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகைகளுண்டு. அவை நிறைவுற்ற, நிறைவுறாத கொழுப்பு அமிலங்களாகும். நிறைவுறாத கொழுப்பு அமிலங்கள் எளிதில் ஆக்ஸிகரணமடையும். எனவே தான் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்குப் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (PUFA) உள்ள சூரியகாந்தி எண்ணெய் சாஃப்ளவர் எண்ணெய் போன்றவை சிறந்தது எனக் கூறுகின்றனர்.

ஒரு கிராம் கொழுப்பில் 9.3 கலோரி அளவிற்குச் சக்தியுண்டு. நாம் உணவில் பெறும் கலோரிகளில் 25-30% கொழுப்பிலிருந்து பெறவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

வைட்டமின்கள்

இவை கூட்டு அங்கக மூலக்கூறுகள். உணவில் மிகக்குறைவான அளவில் உள்ளன. இருப்பினும் உடல் வளர்ச்சி உடற்செயல் நிகழ்ச்சிகளுக்கு இவை அவசியமானவை. வைட்டமின்களால் நேரடியாகச் சக்தி தர இயலாது. ஆனால் சக்தியளிக்கும் உடற்செயலியல் மாற்றங்கள் நடைபெற இவை தேவை. வைட்டமின்கள் A, B, C, D, E, K எனப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வைட்டமின்கள் B, C நீரில் கரைபவை. இவை மிகுந்துள்ள காய், கனிகளை நறுக்கிய பின் நீரில் கழுவினால் நீரில் கரைந்து சென்றுவிடும். வைட்டமின்கள் A, D, E, Kயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் உடலில் தங்கி வைட்டமினோசிஸ் எனும் மிகு வைட்டமின் நோய்கள் ஏற்படும்.

வைட்டமின் D அல்லது கால்சிஃபெரால் நமது தோலுக்கடியில் உள்ள எர்கோஸ்டிரால் எனும் பொருளின் மீது சூரிய ஒளி படுவதால் தோன்றக்கூடியது. எனவே இதற்குச் 'சூரிய ஒளி வைட்டமின்' என்று பெயர்.

வைட்டமின்களின் முக்கிய வேலைகள்

  1. உடற்செயல் நிகழ்ச்சிகள் : கண்பார்வை உணர்வில் வைட்டமின் A முக்கிய பங்கு வகிக்கிறது. விலங்குகளின் இனப்பெருக்கத் திறனுக்கு வைட்டமின் E அவசியம். இரத்தம் உறைதல் வைட்டமின் K யால் நிகழும். வைட்டமின் C நோய்த் தடுப்பாற்றல் அளிப்பதுடன் வளர்ச்சியினை ஊக்குவிக்கும்.
  2. உடல் திசுக்களைப் பாதுகாத்தல் : உடலின் எபித்தீலிய திசுக்கள் வைட்டமின் A மற்றும் B,வால் பாதுகாக்கப்படுகின்றன. எலும்பு வளர்ச்சிக்கு வைட்டமின் D தேவை. திசுக்களுக்கான புத்துணர்ச்சியளிப்பதில் வைட்டமின் E பங்களிக்கும். நரம்பு செல்கள் உணவினைப்பெற வைட்டமின் B, தேவை. வைட்டமின் B, இரத்தச் சிவப்பணுக்களை முதிர்ச்சியடையச் செய்யும்.
  3. வளர்சிதை மாற்ற நிகழ்ச்சிகள் : கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றம் வைட்டமின் D யால் நிகழும். வைட்டமின் E ஒரு ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும். திசு வளர்சிதை மாற்றத்தில் வைட்டமின் B, ஒரு கோ- என்சைமாகப் பயன்படும். மைய நரம்பு மண்டலத்தில் குளுக்கோஸ் ஆக்ஸிகரணத்தில் உதவும். வைட்டமின் B, குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் உதவும். நயசின் (வைட்டமின் B) ஓர் கோ- என்சைமாக ஆக்ஸிகரண குறைப்பு நிகழ்ச்சிகளில் தேவைப்படும். இயல்பான அமினோ அமிலங்கள், கொழுப்பு வளர்சிதை மாற்றங்களுக்கு வைட்டமின் B தேவை.
  4. பயோட்டின் எனும் B வைட்டமின் ஆக்ஸிகரண வளர்சிதை மாற்றங்களில் ஓர் துணை என்சைமாக உதவும். செல்லினுள் நடைபெறும் என்சைம் நிகழ்ச்சிகளை வைட்டமின் C, தூண்டிவிடும்.

வைட்டமின் குறைபாடுகள்

வைட்டமின் A

  1. கண்ணீர்ச் சுரப்பி பாதிப்படைந்து கண்ணீர்ச் சுரப்புக் குறையும்.
  2. விழிப்படல எபித்தீலியம் உலர்ந்து சிவப்பு நிறமடையும் (Xerosis). படலம் சுருங்குதலடைந்து கடினப்படும் (Xeropthalmia). கண்ணின் கருமைப் பகுதியில் வெண்புள்ளி (Bitot’s spot) தோன்றும்.
  3. விழிப்படலத்தில் புண்கள் தோன்றி நோய் தொற்று ஏற்படும் (Keratomalacia).
  4. மாலைக் கண் நோய் ஏற்படும் (Nyctalopia).

வைட்டமின் D :

எலும்புகளில் கால்சியம் படிதல் பாதிக்கப்படும். வளரும் குழந்தைகளுக்கு ரிக்கட்ஸ் நோயும், முதியவர்களுக்கு ஆஸ்டியோமலேசியா எனும் நோயும் தோன்றும்.

வைட்டமின் E :

மனிதனில் இக்குறைபாடு நோய் கண்டறியப்படவில்லை. சோதனை விலங்குகளில் மலட்டுத்தன்மை ஏற்படும்.

வைட்டமின் K :

  1. இதன் குறைபாட்டால் இரத்தம் உறைதல் பாதிப்படையலாம்.
  2. மனிதனில் இரத்தக் கசிவு குறைபாடுகள் தோன்றலாம்.

வைட்டமின் B1 :

வைட்டமின் B1 முற்றிலுமாகக் குறைவதால் 'பெரி பெரி' எனும் நோய் ஏற்படலாம். இதனால் நரம்பு மற்றும் இதய- சுற்று மண்டலங்கள் பாதிப்படையும். சிறுவர்களில் இப்பாதிப்பு சற்று அதிகமிருக்கும்.

வைட்டமின் B :

பசியின்மை ஏற்படும். இரைப்பை - குடல் குறைபாடுகள், உதடு, வாய், நாக்குப் புண்கள் தோன்றும்.

வைட்டமின் நயசின் :

இதன் குறைபாட்டால் பெல்லக்ரா எனும் நோய் தோன்றும். இதில் மறதி தோன்றும். தோல் பாதிப்பு, வாய்ப்புண் ஏற்படும். நாக்குச் சிவந்து வலி ஏற்படும்.

பைரிடாக்ஸின்

கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய உறுப்புகளைச் சுற்றிலும் தோல் பாதிப்புகள் ஏற்படும். உதட்டிலும் வாயின் ஓரங்களிலும் வெடிப்புகள் தோன்றும்.

வைட்டமின் C :

இதன் குறைபாட்டால் 'ஸ்கர்வி' எனும் நோய் தோன்றும். இதில் பல் ஈறில் இரத்தக் கசிவு, பல் விழுதல், தசைகளில் இரத்தக் கசிவு போன்றவை ஏற்படலாம். இணைப்புத்திசு புரதங்கள் தயாரிப்பு பாதிப்படையும்.

தனிமங்கள்

அங்கக உணவுப் பொருட்களாகிய கார்போஹைட்ரேட்டுகள், புரோட்டீன்கள், கொழுப்பு ஆகியவற்றுடன் நமது உடலுக்குத் தனிமங்கள், வைட்டமின்கள், நீர் போன்றவை தேவைப்படும்.

தனிமங்களில் சில மிக அதிக அளவில் தேவைப்படுகின்றன. அவை சோடியம், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்ஃபர் மற்றும் குளோரின் ஆகும். பிற தனிமங்கள் சற்று குறைந்த அளவில் தேவை. அவை இரும்பு, செம்பு, துத்தநாகம், கோபால்ட், மாங்கனீஸ், அயோடின், ஃபுளூரின் ஆகும். இவற்றில் சில தனிமங்கள் அதிக அளவில் உடல் கட்டுவித்தலுக்கு உதவுகின்றன. குறிப்பாக எலும்பு, பற்களைத் தோற்றுவிக்கத் தேவை (கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ்). சில நுண் தனிமங்கள் ஆக்ஸிஜன் கடத்துதல் (இரும்பு), ஹார்மோன் தயாரிப்பு (அயோடின்) மற்றும் வளர்சிதை மாற்றங்களுக்கு (மாங்கனீஸ், செம்பு, துத்தநாகம்) தேவை. சில தனிமங்கள் உடல் திரவத்தின் பகுதிகளாகவுள்ளன (குளோரின், சோடியம், பொட்டாசியம்). சில தனிமங்கள் (மக்னீசியம், சோடியம், பொட்டாசியம்) நரம்புதசைத் தூண்டுதல்களுக்கு தேவை. கால்சியம் இரத்தம் உறைதலுக்கு உதவும். பொட்டாசியமும் கால்சியமும் இதய இயக்கங்களில் துணை செய்யும்.

நீர்

அனைத்துப் பாலூட்டிகளின் உடலிலும் நீர் ஓர் முக்கிய அங்கம். கொழுப்பற்ற உடல் எடையில் (உடல் எடை - கொழுப்பளவு) மனிதன் உட்படப் பெரும்பாலான பாலூட்டிகளிலும் நீரின் அளவு 71 - 78% எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

உடலின் உள்ள நீரின் அளவு வயது, பால், உடல் எடை போன்ற காரணிகளால் மாறுபடும். பிறந்த குழந்தையின் உடல் எடையில் 85 - 90% நீர் மிகுந்திருக்கும். இளைஞர்களின் உடலில் 55 - 60% நீர் உண்டு.

உடலின் மொத்த நீரில் 2/3 பங்கானது செல் உள் திரவமாக செல்களினுள்ளும் (Intracellular fluid) 1/3 பங்கு செல்வெளியிலுமாக (Extra cellular fluid) அமைந்திருக்கும். செல் வெளியில் உள்ள நீரில் 25% இரத்தப் பிளாஸ்மாவில் உள்ளது.

உடலினுள் நுழையும் நீருக்கும், வெளியேறும் நீருக்குமிடையில் உள்ள சமன்பாட்டால் உடல் நீர் பாதுகாக்கப்படுகிறது. நீர் அருந்துதல், பிற திரவப்பொருட்களை அருந்துதல், உணவுடன் நுழையும் நீர் ஆகிய வழிகளில் உடலினுள் நீர் நுழைகிறது. உணவுப்பொருட்களின் வளர்சிதை மாற்ற நிகழ்ச்சிகளிலும் நீர் உற்பத்தியாகும். அன்றாடம் நாம் பெறும் நீரின் அளவு 2500 மிலி ஆகும்.

இதில் 1400 மிலி நேரடியாக நீராகவே நுழைகிறது. உடல் நீரிழப்பு நான்கு வழிகளில் நேரிடும். அவை

  1. சிறுநீர் (1400 மிலி),
  2. வெளிச்சுவாசம் (400 மிலி),
  3. தோலின் வழியே (600மிலி),
  4. மலப்பொருளுடன் (100 மிலி).

நீரின் பயன்கள்

  1. உடலின் அனைத்துச் செல்களின் முக்கிய அங்கமாகும்.
  2. உணவு மற்றும் கழிவுப்பொருட்களைக் கடத்துதலுக்கு உதவும்.
  3. வேதிய மாற்றங்கள் நடைபெறுதலுக்கான தடமாக அமையும்.
  4. என்சைம்கள், ஹார்மோன்கள், வைட்டமின்கள், எலக்டிரோலைட்டுகளின் கரைப்பானாகிறது.
  5. உடல் வெப்பத்தைப் பாதுகாக்கும்.
  6. உடல் திசுக்களின் அமைப்பினை உறுதி செய்யும்.

சரிவிகித உணவு

உடலுக்குத் தேவையான அனைத்து உணவுப் பொருட்களையும் உரிய அளவுகளில் கொண்ட உணவே சரிவிகித உணவாகும். இவ்வகை உணவு, இயல்பான உடல் வளர்ச்சி, செயல்புரிதல் திறன், நைட்ரஜன் சமன்பாடு, கலோரி அளவு ஆகியவற்றைப் பாதுகாப்பதாக அமைதல் வேண்டும். ஒருவருக்குத் தேவையான சரிவிகித உணவினைத் தீர்மானம் செய்கையில் அவரது மொத்தக் கலோரித்தேவை கணக்கிடப்பட்டு அதன்பின் பல உணவுப் பகுதிப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்படும். பொதுவாக மொத்த கலோரி தேவையில் 10 - 15% புரதங்களிலிருந்தும் 25 - 30% கொழுப்பிலிருந்தும் எஞ்சிய கலோரி கார்போ ஹைட்ரேட்டிலிருந்தும் பெறுவதாகக் கொள்ளப்படுகிறது.

கலோரி அளவுகள்

உணவூட்டம் மற்றும் உணவியல் துறையில் ஓர் கலோரி என்பது 1 கி.கிராம் நீரை 1°C உயர்த்துவதற்குத் தேவையான வெப்ப அளவாகக் கொள்ளப்படுகிறது. இந்திய மருத்துவ ஆய்வுக் கவுன்சிலின் (ICMR) உணவு சிறப்புக் குழு (Nutrition Expert Committee) (1968) பின்வரும் தகுதிகளுடைய ஓர் மாதிரி இந்திய ஆணுக்கும் (Indian Reference Man - IRM), பெண்ணிற்கும் (Indian Reference Woman - IRW) தேவைப்படும் அளவுகளைக் கணக்கிட்டுத் தந்துள்ளது.

இறுதியில் ஒவ்வொரு உணவுப்பொருளின் கலோரி மதிப்பையும் கணக்கில் கொண்டு உணவுத் தேவை தீர்மானிக்கப்படும். அவ்விதம் தீர்மானம் செய்கையில் உணவின் சுவை, சமுதாயப் பழக்கங்களும் கருத்தில் கொள்ளப்படும்.

குண்டாதல் (அ) உடல் பருமனாதல் (Obesity)

அளவிற்கு அதிகமான கொழுப்பு உடலில் சேகரிக்கப்படுவதால் உடல் பருமன் அதிகரிக்கும். இதனால் இரத்த அழுத்த அதிகரிப்பு, இரத்தக் குழாய் அடைப்பு, இதய நோய், நீரிழிவு நோய் போன்ற குறைபாடுகள் நேரிடும். குறிப்பிட்ட வயதிற்குரிய எடையினை விட 10% அதிகரிப்பு உடல் பருமன் அதிகரிப்பு எனப்படும்.

உடல் பருமனை உடல் எடைக் குறியீட்டால் (Body mass index - BMI) குறிப்பிடலாம். கிலோகிராம் கணக்கிலுள்ள உடல் எடையை மீட்டர்க் கணக்கிலுள்ள உடல் உயரத்தின் மடங்கினால் வகுத்தலால் BMI கிடைக்கும். உதாரணமாக 70 கிலோகிராம் எடையும் 180 செ.மீட்டர் உயரமும் உடைய ஒருவரின் BMI (70/1.83) ஆகும். பெரியவர்களின் BMI யானது 19 - 25 எனும் அளவில் இயல்பாக அமைந்திருக்கும். இதற்கு மேல் BMI உள்ள ஆண்களும், பெண்களும் குண்டானவர்களாகக் கருதப்படுவர்.

குண்டாதல் நிலை பாரம்பரியக் காரணங்கள், அதிகப் பசியும் அதனால் மிதமிஞ்சிய உண்ணுதலும், நாளமில்லா சுரப்பிகளின் சுரப்புகள் மற்றும் வளர்சிதை மாற்றக் குறைபாடுகளால் ஏற்படலாம்.

உணவுச் செரிமான உறுப்புகள்

உணவுச் செரிமான உறுப்புகளாக உணவுப் பாதையும் (வாய் முதல் மலத்துவாரம் வரை) செரிமானச் சுரப்பிகளும் அமைந்துள்ளன. இவ்வமைப்புகள் உணவின் மூலம் உடல் பெறும் அங்கக மூலக்கூறுகள், உப்புக்கள், நீர் போன்றவற்றை உடலினுள் பரவச் செய்ய உதவுகின்றன. வாயின் வழியாக நுழையும் உணவில் பெரும்பகுதியாகப் பெரிய மூலக்கூறுகளான பாலிசாக்கரைடுகளும் புரோட்டீன்களும் அமைந்துள்ளன. இவற்றை அந்நிலையிலேயே குடற்சுவரின் வழியாக உள்ளிழுக்க இயலாது. இவை கரைக்கப்பட்டு சிறிய மூலக்கூறுகளாக உடைபடுதல் வேண்டும். இந்நிகழ்ச்சியே செரித்தல் எனப்படும். செரித்தல், செரிமானச் சுரப்பிகளின் என்சைம்கள் உணவு செரித்தலில் கிரியா ஊக்கிகளாக செயல்படக் கூடியவை.

உணவுச் செரித்தல் முறை

வாய் : செரித்தலில் முதல் செயல் உணவைச் சுவைத்தல் அல்லது மெல்லுதல் ஆகும். இச்செயலால் உணவு மிகச்சிறிய துணுக்குகளாக அரைபடும். இதனால் தொண்டையில் உணவு சிக்காமல் விழுங்க இயலும். இச்செயல் பற்கள், நாக்கு, தாடைகள் மற்றும் உமிழ்நீரால் நடைபெறும். வாய், தாடையின் எலும்புத் தசைகளுடன் இணைந்துள்ள சோமாட்டிக் நரம்புகளால் சுவைத்தல் அல்லது மெல்லுதல் ஏற்படும். உணவானது பல் ஈறுகள், மேல் அண்ணம், நாக்கு போன்ற பகுதிகளில் அழுத்தத்தை ஏற்படுத்துவதால் தொடர்ந்த சீரான மெல்லுதல் நிகழ்ச்சி தூண்டி விடப்படும்.

உமிழ் நீர் : மேல் அண்ணச் சுரப்பிகள் (Parotid) கீழ்த்தாடைச் சுரப்பிகள் (Submandibular), நாவடிச் சுரப்பிகள்(Sublingual) போன்ற மூன்று இணைச் சுரப்பிகள் உமிழ்நீரைச் சுரக்கின்றன. தினந்தோறும் 1000 முதல் 1500 மிலி உமிழ்நீர்ச் சுரக்கப்படுகிறது. உமிழ்நீரில் அமைலேஸ், மியூசின் எனும் அங்ககப் பொருட்கள் உள்ளன. உமிழ்நீரின் அமிலேஸ் (அ) டயலின் ஸ்டார்ச்சின் மீது செயல்படக்கூடியது. இவை சமைத்த உணவிலுள்ள ஸ்டார்ச்சினை மால்டோஸ் எனும் இரட்டைச் சர்க்கரையாக மாற்றும். மியூசின் ஓர் கிளைக்கோபுரோட்டீனாகும். இப்பொருள் உணவிற்கு வழவழப்புத் தன்மையைத் தரும். இந்நிலையில் உணவிற்கு எளிதில் விழுங்கும் தன்மையுடைய உணவுத் திரள் (Bolus) என்று பெயர். உமிழ்நீர்ச் சுரப்பு ஓர் அனிச்சைச் செயலாகும்.

விழுங்குதல் : விழுங்குதல் ஓர் சிக்கலான அனிச்சைச் செயலாகும். இதனை முகுளத்தில் உள்ள விழுங்குதல் மையம் கட்டுப்படுத்துகிறது. விழுங்குதலில் மென்மையான மேலண்ணமும், குரல்வளையும் (Larynx) உயர்த்தப்படும். நாக்கு, உணவைத் தொண்டையினுள் திணிக்கும்.

மூச்சுக்குழல்: மூடியானது மூச்சுக்குழலை மூடியவுடன் உணவு மெதுவாக, உணவுக் குழலினுள் இறங்கும். உணவுக் குழலில் உணவு இறங்குதல் மேல்புறத்திலுள்ள உணவுக் குழல் சுருக்குத் தசைகளின் தளர்ச்சியால் ஏற்படும். பின் உணவு மெதுவாக இரைப்பையை நோக்கி இறங்கும். இதற்கென உணவுக்குழலில் கீழ் நோக்கி இறங்கும் அலை இயக்கங்கள் ஏற்படும். உணவுக் குழலில் அடுத்தடுத்துச் சுருக்கம் - தளர்ச்சிகளாகத் தோன்றும் குழல் சுவர் இயக்கத்திற்குக் குடல் அலைவு என்று பெயர். மேலிருந்து தோன்றும் ஓர் அலைவு இரைப்பையை வந்தடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு 9 செகண்டுகள் ஆகும். குடல் அலைவு தோன்றுதலால் ஒருவர் தலைகீழ் நிலையிலும் உணவினை விழுங்க இயலும்.

இரைப்பை : இது ஓர் அகன்ற அறை. உதரவிதானத்திற்குக் கீழாக உள்ளது. இதன் வடிவமும் அளவும் உள்ளிருக்கும் உணவின் அளவினைப் பொறுத்து அமையும். உணவு உள்நுழையும் வேளையில் அதிகபட்சமாக 1.5 லிட்டர் அளவிற்குப் பெரிதாகும். இரைப்பையின் இயக்கம் குடல் அலைவுகளை ஏற்படுத்தும். ஒவ்வொரு அலைவும் இரைப்பையின் மைய உடற்பகுதியிலிருந்து தோன்றிப் பின்னோக்கிச் செல்லும். பின்னோக்கிச் செல்லும் முதல் அலைவு இரைப்பைக்கும் டியோடினம் பகுதிக்கும் இடையில் உள்ள பைலோரஸ் சுருக்குத் தசைகளைச் சுருங்கச் செய்யும்.

இரைப்பையின் உள்சுவற்றில் பல இரைப்பை நீர்ச் சுரப்பிகள் உண்டு. ஏறக்குறைய 40 மில்லியன் நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. இவற்றில் Chief cells எனப்படும் முக்கிய செல்கள் என்சைம்களையும், சுவர் செல்கள் (Parietal cells) எனப்படும் ஆக்ஸின்டிக் (Oxyntic) செல் HCI அமிலத்தையும் சுரந்து என்சைம் செயல்பாட்டிற்கு தேவையான அமிலத்தன்மை கிடைக்கிறது.

இரைப்பையின் என்சைம்களாக பெப்சின், ரெனின் சுரக்கப்படுகிறது. பெப்சின் செயலற்ற நிலையில் பெப்சினோஜன் எனும் பொருளாகச் சுரக்கப்படும். HCI ன் இயக்கத்தால் பெப்சினோஜனானது பெப்சினாக மாறும். பெப்சின் நீரால் பகுத்தல் முறையில் புரோட்டீன்களை உடைத்து பெப்டோன்களாக மாற்றும். அமிலத்தன்மையில் இச்செயல்பாடு மிகச் சிறப்பாக அமைந்திருக்கும்.

புரோட்டீன்கள் + பெப்சின் -> பாலிபெப்டைடுகள் + பெப்டோன்கள்

ரெனின் : என்சைம் பால் புரோட்டீனாகிய கேசினோஜனை கரையா தன்மை கொண்ட கேசின் எனும் பொருளாக மாற்றும். கால்சியம் அயனிகளின் முன்னிலையில் கேசினானது கரையாத கால்சியம் - கேசின் கூட்டுப் பொருளாகும். இதற்குத் தயிர் என்று பெயர்.

தொடரும் குடல் அலைவு இயக்கங்களால் இரைப்பையில் உணவு மென்மையாகிறது. சுவர் இயக்க வேகமானது மின் தூண்டல் சீர் இயக்கத்தினைப் பொறுத்து அமையும். மேலும் இவ்வியக்கம் நரம்பு மற்றும் ஹார்மோன்களால் கட்டுப்படுத்தப்படும். இரைப்பையிலிருந்து கீழிறங்கும் உணவிற்கு இரைப்பைப் பாகு என்று பெயர். இப்பாகு குறிப்பிட்ட இடைவெளிகளில் சிறு குடலினுள் நுழையும்.

சிறுகுடல் : 5-7 மீட்டர் நீளமுடைய சிறுகுடல், மூன்று பகுதிகளுடையது. அவை டியோடினம் (முன்சிறுகுடல்), ஜீஜீனம் எனும் இடைச் சிறுகுடல், இலியம் என்னும் பின் சிறுகுடல் ஆகும். இரைப்பையின் குடல் அலைவு விசையால் உணவானது முன்சிறு குடலினுள் நுழையும். இவ்வியக்கத்தினை பைலோரிக் சுருக்குத் தசைகள் கட்டுப்படுத்தும். முன் சிறுகுடல் பகுதியில் பித்தநீர், கணைய நீர், முன் சிறுகுடல் நீர் என மூன்று பொருட்கள் கொட்டப்படுகின்றன.

பித்தநீர் : இந்நீர்ப் பழுப்புடன் பச்சை நிறமுடையது. இது கல்லீரலிருந்து தோன்றும் காரப்பொருளாகும். பித்தப்பையில் சேகரிக்கப்பட்டுப் பித்தநாளத்தின் வழியே முன் சிறுகுடலை அடையும். பித்த நீரில் நீர், கோழைப் பொருள், உப்புகள், கொலஸ்ட்ரால், பித்த நிறமிகள், பித்த நீர் உப்புகள் போன்றவையுள்ளன. பித்த நீர் உப்புகள் பெரிய கொழுப்புப் பொருட்களைச் சிறிய கொழுப்புத் திவலைகளாக மாற்றுகின்றன.

உட்கிரகித்தலும் தன்மயமாதலும் : உணவுச் செரிமானத்தில் கார்போ ஹைட்ரேட்டுகள் உடைபட்டு குளுக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோசாகும். புரோட்டீன்கள் நீரால் பகுக்கப்பட்டு அமினோ அமிலங்களாகும். கொழுப்பு உடைபட்டு கிளிசரால் மற்றும் கொழுப்பு அமிலங்களாகும். குடலின் உட்சுவரில் உள்ள குடல் உறிஞ்சிகள் மிக நுண்ணியவை. இவை உணவை உறிஞ்சும் உறுப்புகள். இவற்றினுள் லாக்டியல் நாளம் எனும் நிணநீர் நாளமும் அதனைச் சுற்றி இரத்தத் தந்துகிகளும் உள்ளன.

எளிய அங்க மூலக்கூறுகள், தாது உப்புகள், வைட்டமின்கள், நீர் போன்றவை குடல் உறிஞ்சிகளின் வழியே உடலினுள் நுழைகின்றன. இவ்வுறிஞ்சிகளின் நிணநீர் நாளத்தால் கொழுப்பு அமிலங்கள் உள்ளிழுக்கப்படும். பிற பொருட்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ குடல் உறிஞ்சிகளின் இரத்தத் தந்துகிகளால் உள்நுழையும்.

செரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் உறிஞ்சப்பட்டு கல்லீரல் போர்ட்டல் சிரையின் மூலம் கல்லீரலைச் சென்றடைகின்றன. கல்லீரலிருந்து உடலின் பிற பகுதிகளுக்கு உணவுப்பொருட்கள் கடத்தப்படுகின்றன. அங்கு அவை பயன்படுத்தப்படும். இவ்விதம் உணவானது சக்தியாகவும், செல் அமைப்பாகவும் மாறுதல் பெறுவது தன்மயமாக்கம் எனப்படும்.

உணவுப் பாதை குறைபாடுகள்

பற்சொத்தை (Dental Caries) : பல் - ன் மீது பாதுகாப்பிற்கென உள்ள எனாமல், டென்டைன் எனும் பல்லெலும்பு (பற்தந்தம்) சிறிது சிறிதாகத் தேய்மானம் அடைவதால் பற்சொத்தை ஏற்படும். காரைப் படிந்துள்ள இடங்களில் எளிதில் தேய்மானம் நிகழும். பல்லின் மேற்பகுதி (அரைத்தல் இடம்) பக்கங்கள், அருகிலுள்ள பற்கள், ஈறுகளில் எஞ்சிய உணவுகள், உமிழ்நீரின் கோழைப் பொருள், பாக்டீரியங்கள் ஆகியவை உள்ளன. அவ்விடங்களில் உணவின் கார்போஹைடிரேட்டுகளில் கிரியை செய்யும் பாக்டீரியங்கள் அமிலத்தன்மையை ஏற்படுத்தி எனாமலைப் பாதிப்படையச் செய்கின்றன. இதனைத் தடுக்காவிடின் டென்டைன் எனும் பல்லெலும்பும் பாதிப்படையும். இதனால் தோன்றும் பற்குழி பெரிதாகி பாக்டீரியங்கள் தங்கும். பின் பல்லினுள் உள்ள பற்கூழ்குழி பாதிப்படைந்து நோய் தொற்று தோன்றும்.

  • பற்சொத்தை தோன்றுதல்
  • பற்கூழ்குழி

பற்சொத்தை நோய் அறிகுறிகள் : பற்சொத்தையின் துவக்கத்தில் அறிகுறிகள் இல்லை. பற்சொத்தை நன்கு ஏற்பட்டுள்ளதற்கு முதல் அறிகுறி பல்வலியாகும்.

இனிப்பு மற்றும் சூடு அல்லது குளிர்ச்சி மிகுந்த உணவால் வலி அதிகமாகும். வாய் துர்நாற்றமும் ஏற்படலாம்.

சிகிச்சை : பல் மருத்துவர்கள் பற்சொத்தை உள்ள இடத்தைச் சிறிய துளைப் பொறியால் (Drilling) சற்று பெரிதாக்குவர். பின் சுத்தம் செய்து தந்த ரசக்கலவை (Dental amalgam - ஓர் மெர்குரி உலோகக் கலப்பு) அல்லது சிமெண்ட் பொருளால் நிரப்பி விடுவர். பற்கூழ் குழியில் நோய் தொற்று அதிகமிருப்பின் அப்பகுதியினை அப்புறப்படுத்திச் சுத்தம் செய்து நிரப்பலாம் அல்லது பல்லைப் பிடுங்கி எடுத்துவிடலாம்.

பற்கால்வாய் சிகிச்சை (Root canal treatment) : பல் பிடுங்குதலைத் தவிர்த்து இயற்கைப் பல்லைத் தக்கவைத்துக் கொள்ள, இப்புதிய சிகிச்சை உதவும்.

சிகிச்சைப் படிநிலைகள்

  1. பல்லின் மேலிருந்து சிறிய துளைப் பொறியால் ஓர் துளை இடப்படும்.
  2. இத்துளை பற்கூழ் குழிவரை அமையும். பற்கூழ் பொருட்கள் அனைத்தும் நுண்ணிய கருவிகளைப் பயன்படுத்தி நீக்கப்படும்.
  3. இச்சிகிச்சையின் முன்னேற்றம் X கதிர் நிழற்படத்தில் கண்காணிக்கப்படும். குழி நன்கு சுத்திகரிக்கப்படும். நுண்ணுயிரெதிரி (antibiotic) மருந்துள்ள பசையால் அக்குழிவு நிரப்பப்பட்டுத் தற்காலிகமாக மேலே மூடப்படும்.
  4. ஒரு சில நாட்களுக்கு பின் நிரப்பிய பொருளை நீக்கிக் குழிக்கால்வாயில் கிருமிகளற்ற நிலையுள்ளதா எனச் சோதிக்கப்படும். நோய்த் தொற்று இல்லையெனில் அக்கால்வாய் மரப்பால் பிசினுடன் (Gutta - percha) துத்தநாக ஆக்ஸைடு, பிஸ்மத் ஆக்ஸைடு சேர்ந்த கலவைக் கொண்டு நிரப்பப்படும். குழிவின் மேல்வாய்ப் பகுதி ஓர் வகை சிமெண்ட்டினால் சீல் செய்யப்படும்.
  5. குடல் புண் இரைப்பை, முன்சிறுகுடல் பகுதிகளின் உள்சுவரில் திசுத்தோல் அரிமானம் அடைந்து காயம் தோன்றுதலே குடல் புண் எனப்படும். இயற்கையில் இப்பகுதிகள் Hcl அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கென ஓர் கோழைப் பொருளைக் கொண்டுள்ளன. இப்பொருள் அழிக்கப்பட்டால் அங்கு திசுக்களில் வீக்கம் ஏற்படும். உள்தோல் பாதிப்படையும்.
  6. இப்புண்கள், முன் குடல்புண், இரைப்பைப் புண் என இருவகைப்படும். இவற்றில் முன் குடல் புண் அதிகம் தோன்றுகிறது. 25-45 வயதுடையவர்களுக்கு இப்புண் அதிகம் தோன்றுகிறது. 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரைப்பைப் புண்ணால் பாதிக்கப்படலாம்.

காரணங்கள்

குடல் புண்கள் ஹெலிக்கோபேக்டர் பைலோரி (Helicobacter pylori) எனும் பாக்டீரியங்களால் தோன்றுகின்றன. ஆஸ்பிரின் மற்றும் வேறு சில வலி நிவாரண மருந்துப் பொருட்களைத் தேவைக்கு அதிகமாக உட்கொள்ளுவதாலும் புண்கள் தோன்றலாம். புகை பிடித்தல், மது அருந்துதல், காஃபீன் மற்றும் உளவியல் அழுத்தங்களாலும் புண்கள் ஏற்படும். குடல் புண் தொல்லை அதிகமிருப்பின் endoscopy எனும் உள்நோக்குக் கருவியால் ஆய்வு செய்து பாதிப்பின் அளவு தீர்மானிக்கப்படுகிறது. குடல் புண்ணில் துவாரம் அல்லது இரத்தக் கசிவு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சை செய்தல் வேண்டும். பொதுவாகச் சிகிச்சை முறைகள் புண் ஆறுவதற்கான முறைகளாகவும் திரும்ப ஏற்படாதனவாகவும் அமையும். வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல், புகைபிடித்தலைத் தவிர்த்தல், ஆல்கஹால் அருந்தாதிருத்தல் ஆகியவை தேவை. கவலை, மனஅழுத்தம் போன்றவற்றையும் தவிர்த்தல் வேண்டும்.

குடலிறக்கம் (அல்லது) குடல் பிதுக்கம்

குடலிறக்கத்தினைப் பொதுவாகக் கீறல்கள்' என்பர். வயிற்றுப்புறத் தசைகளில் வலிமை குன்றிய இடங்களில் இக்குறைபாடு நேரிடலாம். இந்நிலை திடீரென எடை மிகுந்த பொருட்களைத் தூக்குவதால் ஏற்படும். இதனால் ஓர் பிதுக்கம் வெளியாகத் தென்படும். அதனுள் கொழுப்புத் திசுக்களோ அல்லது குடலின் பகுதியோ பிதுங்கியிருக்கும். கடின உடலுழைப்பு மேற்கொள்ளும் ஆண்களில் கீழ்வயிற்று குடலிறக்கம் தோன்றும்.

குடலிறக்கத்தில் குடலின் ஒரு பகுதி திருகலடைந்து பிதுக்கத்தினுள் நுழைந்துவிடும். அப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படலாம். இதற்குக் குடலிறுக்க குடல் பிதுக்கம் என்று பெயர். மிக அதிக வலி இருப்பின் உடனடி அறுவைச் சிகிச்சை தேவை. இவ்வகை பிதுக்கங்கள் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படலாம்.

குடல் பிதுக்க வகைகள் :

  1. கவட்டைப் பிதுக்கம் (Inguinal hernia) : குடலின் ஒரு பகுதி அடிவயிற்றுப் பகுதியில் வலிமைக் குறைவு காரணமாகக் கீழிறங்கி விடும்.
  2. மேல்தொடை பிதுக்கம் (Femoral hernia) : வயிறு தொடை சேருமிடத்தில் துடைத்தமனியும் சிரையும் கீழ்வயிற்றிலிருந்து துடைப்பகுதிக்கு இறங்கும். இங்கு குடல் பிதுக்கம் ஏற்படலாம். அதிக உடல் எடை அல்லது பல குழந்தைகளைப் பெறல் ஆகிய காரணங்களால் பெண்களுக்கு இக்குறை நேரிடலாம்.
  3. கொப்பூழ் குடல் இறக்கம் (Umbilical hernia): இக்குறைபாடு சிறு குழந்தைகளுக்கு ஏற்படும். நாபி (Navel) யைச் சுற்றியுள்ள பகுதியில் வயிற்றுத் தசைகள் தளர்ச்சியடைவதால் இவ்விறக்கம் தோன்றும்.
  4. குடல் இறக்கம் சரி செய்தல்: எளிய அறுவை சிகிச்சைகளால் சரி செய்யலாம். மையப்படுத்தப்பட்ட அல்லது பொதுவான உணர்வறுப்பினால் (Anaesthesia) இதனைச் சரி செய்யலாம்.

குடல்வால் அழற்சி (Appendicitis)

குடல்வாலில் வீக்கம் ஏற்பட்டுக் கடுமையான வயிற்றுவலி தோன்றலாம். பெருங்குடல் துவங்கும் இடத்தில் ஓர் சிறிய குழலாகக் குடல்வால் உள்ளது. இக்குடல்வால் அழற்சி வளர் இளம் பருவத்தினரிடையே (Adolescents) பொதுவாகத் தோன்றும். நார்ப்பொருள் குறைவாகவுள்ள உணவுண்ணும் வளர்ச்சியடைந்த நாட்டினரிடையே இந்நோய் அதிகம் காணப்படும். குடல்வால் வீக்கத்தால் தடுப்பு (Blockage), நிலை ஏற்படும். தடுப்பு உள்ள பகுதியினை அடுத்தடுத்துள்ள இடங்களில் பாக்டீரியங்களால் நோய்த் தொற்று ஏற்படலாம்.

துவக்கத்தில் திடீரென மேல் வயிற்றில் வலியும், வாந்தியுணர்வும் தோன்றும். காய்ச்சலும் தோன்றலாம். சிகிச்சை காலதாமதமானால் நோயுற்ற குடல்வால் வெடித்து வயிற்றறையில் தொற்று நேரிடலாம். இவ்வகையில் தோன்றும் பாதிப்பிற்கு உதரப்பையுறை அழற்சி (Peritonitis) என்று பெயர். அறுவைச் சிகிச்சையால் குடல்வாலை நீக்கம் செய்யலாம்.

பித்தக் கற்கள்

பித்தப் பையில் தோன்றும் பித்தக் கற்கள் பல அளவுகளில் அமையலாம். 40 வயதிற்கு மேற்பட்ட பத்தில் ஒருவருக்கு (1/10) இக்கற்கள் தோன்றலாம். இக்கற்கள் பித்த நீரில் தோன்றும். பித்த நீரில் கொலஸ்டிரால், நிறமிகள் மற்றும் சில உப்புகள் உள்ளன. பித்த நீரின் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் கல் தோன்றுதல் நிகழலாம். இக்கற்கள் கொலஸ்ட்ராலால் ஆனவை. கல் தோன்றுதலுக்கான மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை . இருப்பினும் உடற்பருமன் அதிகரிப்பு ஓர் காரணமாகக் கருதப்படுகிறது உணவில் கொழுப்பு அதிகமிருந்தாலும் கல் தோன்றுதல் ஏற்படலாம். மிகுந்த பாதிப்பு நிலையில் கற்களால் பித்த நீர் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை தோன்றும்.

கல்லீரல் அழற்சி (Hepatitis)

கல்லீரல் அழற்சி, பல காரணங்களால் ஏற்படலாம். இந்நோயில் கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்நிலை வைரஸ்களின் தாக்குதலால் ஏற்படலாம். தொற்று நோயற்ற கல்லீரல் அழற்சி அதிக அளவு மது அருந்துதலால் ஏற்படும். ஆரம்ப நிலைகளில் தானறிகுறிகள் தெளிவாக இருப்பதில்லை. பொதுவாக இந்நோயால் உடற்சோர்வு, வாந்தியெடுத்தல், காய்ச்சல், வலது மேல் வயிற்றுப் பகுதியில் ஓர் வசதியற்ற உள்ளுணர்வு போன்றவை ஏற்படும். இதற்கெனக் குறிப்பிட்ட சிகிச்சை இல்லை. இந்நிலையுள்ளோருக்கு நல்ல ஓய்வு தேவை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.25
கரீம் கனி Jul 02, 2018 10:27 PM

நன்று மிக எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top