অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

வாடகைத் தாய்

வாடகைத் தாய்

சரோகசி (Surrogacy) என்றால் என்ன?

ஒரு பெண் இன்னொருபெண்ணின் கர்ப்பத்தைத் தாங்கி குழந்தையைப் பெற்று எடுப்பது தான் சரோகசி. சரோகசி என்கிற இந்த சொல் surrogatus என்கிற இலத்தீன் மொழி வார்த்தையிலிருந்து வந்தது. இதன் அர்த்தம் ‘ஒருவருக்கு பதிலாக’ அல்லது ‘ஒருவரின் இடத்தில்’ என்பது. ஒரு பெண் தன் கர்ப்பப்பையை இன்னொருவரின் கர்ப்பத்தைத் தாங்குவதற்காக பயன் படுத்துவதுதான் இந்த சரோகசி. இப்படி இன்னொருவரது கர்ப்பத்தைத் தாங்கும் பெண்ணை சரோகேட்  மதர் அல்லது வாடகைத் தாய் என்கிறார்கள். மரபியல் மூலமாக வாடகைத் தாய்க்கும் அவர் பெற்றெடுக்கும் குழந்தைக்கும் எந்தவிதத் தொடர்பும் இருக்காது.

வாடகை கர்ப்பப்பையை ஏன் நாட வேண்டும்?

பல முறை ஐ.வி.எஃப் முறை செய்தும் ஒரு பெண்ணால் கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகிறது. சில சமயங்களில், பெண்ணின் கர்ப்பப்பை, கர்ப்பத்தை 10 மாதங்கள் தாங்க முடியாதபடி பலவீனமாக இருக்கும் போது, அல்லது கர்ப்பப்பை தொற்றுநோய் தாக்குதலுக்கு ஆளாகி கர்ப்பம் தரிக்கமுடியாமல் போகும் போதும் இன்னொரு பெண்ணின் உதவியுடன் தன் குழந்தையை பெற்றெடுக்க ஒரு பெண் விரும்பலாம்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இந்த சரோகசி முறைக்கு பல விதிமுறைகளை நடைமுறைப் படுத்தியுள்ளது

ஒரு பெண்ணால் உடல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் குழந்தை பெறமுடியாமல் போகும் போது மட்டுமே அந்தப் பெண்ணின் அனுமதியுடன் சரோகசி சிபாரிசு செய்யப்பட வேண்டும்.

வாடகைத் தாய் மூலம் பிறக்கும் குழந்தை, ‘Deoxyribo Nucleic Acid’ எனப்படும் டி. ஏன்.எ. பரிசோதனை மூலம் இன்னாரின் குழந்தை என்று நிரூபிக்கப் பட வேண்டும். இல்லாத பட்சத்தில் அந்தக் குழந்தை உருவாகக் காரணமாக இருந்த உயிரியல் பெற்றோர்கள் (biological parents) அக்குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

கர்ப்ப காலத்தில் வாடகைத் தாய்க்கு கொடுக்கப்படும் பண உதவிக்கு ஆவணச் சான்றுகள் இருக்க வேண்டும். அவருக்கு கர்ப்பத்தினால் ஏற்படும் செலவுகள் அனைத்தையும் ஈடு செய்யும் அளவுக்கு பண உதவி அளிக்கப் படவேண்டும்.

ஒரு பெண் மூன்று தடவைக்கு மேல் தன் கர்ப்பப்பையை வாடகைக்குக் கொடுக்கக் கூடாது.

வாடகைத் தாயை எப்படித் தேர்ந்தெடுக்கிறார்கள்?

நம் நாட்டில் சரோகசிக்கென்றே இருக்கும் பல அமைப்புகளும், மகப் பேறு மருத்துவர்களும்   குழந்தைப்  பேறு இல்லாமல் இருக்கும் பெண்களுக்கு இந்த சரோகசி முறையைப் பற்றி சொல்லுகிறார்கள். அவர்களின் சம்மதத்திற்குப் பிறகு இந்த அமைப்புகளின் கவுன்சிலர்கள்  வாடகைத் தாயாக ஆவதற்கு தயாராக இருக்கும் பெண்களிடம் பல முறை பேசுகிறார்கள். இந்த முறையை பற்றிய முழு விவரமும் அவர்களுக்கு சொல்லி அவர்களது சம்மதத்தை எழுதி வாங்குகிறார்கள். இரண்டு தரப்பும் ஒப்புக்கொண்ட பிறகே இம்முறை செயல் வடிவம் பெறுகிறது. இதில் இரு தரப்பினருக்கும் லாபம். ஒரு பெண்ணுக்கு குழந்தையும், இன்னொருவருக்கு பணமும் கிடைக்கிறது.

இந்த சரோகசி முறை இயற்கையில் கர்ப்பம் தரிக்க முடியாத, கர்ப்பப் பை பலவீனமாக இருக்கும்  பெண்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அதே போல வறுமையில் இருக்கும் பெண்களுக்கும் இப்படி கர்ப்பபையை வாடகைக்குக் கொடுப்பதில் நல்ல வருமானம் கிடைக்கிறது. கர்ப்ப காலம் முழுமைக்கும் ஆயுள் காப்பீடும், ஒரு மாதத்திற்கு 3000 ரூபாயும், குழந்தை பிறந்த பிறகு 2.5 லட்ச ரூபாயும் வாடகைத் தாய்மார்களுக்குக் கொடுக்கப்படுகிறது.

தற்சமயம் நம் நாட்டில் இந்த முறையை ஒழுங்கு படுத்த சட்டம் இல்லை. இந்திய ஜனத் தொகையில் கிட்டத்தட்ட 10 % மக்கள் மலட்டுத் தன்மையால் பாதிக்கப் பட்டுள்ளனர். சரோகசி முறையை சரிவரப் பயன்படுத்தினால் பல பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று மருத்துவர்கள் கருத்துத் தெரிவிக்கிறார்கள்.

இந்தியா போன்ற பழமையில் ஊறிய நாடுகளில் இம்முறை சிறிது தாழ்ந்த கண்ணோட்டத்துடனேயே பார்க்கப்படுகிறது. ஆமீர் கானைப் போன்ற பிரபலங்கள் வெளிப்படையாக தங்களுக்கு இம்முறையில் குழந்தை பிறந்ததைப் பற்றிக் கூறும் போது பழமையில் ஊறிய மனங்களும் மாறும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : ஏடூஜெட்தமிழ்நாடு

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate