অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை

மருந்துகள் சாப்பிடும் முன் சிந்திக்க வேண்டியவை

  • நோயில் இருந்து காப்பதற்கும், நோய் வராமல் தடுப்பதற்கும் மருந்து சாப்பிடுகிறோம். ஆனால் டாக்டர் ஆலோசனைப்படி சரியான மருந்தை வாங்கி- நிர்ணயிக்கும் நேரத்தில்- சரியான அளவில்- டாக்டர் குறிப்பிடும் காலம் வரை சாப்பிடவேண்டும். இதில் அலட்சியம் காட்டினால் ஆபத்தாகிவிடும்.
  • பொதுவாக வலி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல், இருமல், தூக்கமின்மை போன்றவைகளுக்கு டாக்டரின் பரிந்துரையின்றி மருந்துகடைகளில் மருந்துகள் வாங்கி சாப்பிடுகிறார்கள். அத்தகைய மருந்துகளால் அவர்களுக்கு நோய் குறைந்ததுபோல் தோன்றினாலும், அவர்களுக்கு தெரியாமலே அவர்களது உடல் மெல்ல மெல்ல ஆரோக்கிய சிக்கலை சந்தித்துக் கொண்டிருக்கும்.
  • டாக்டரின் பரிந்துரை இல்லாத மருந்துகளை சுயமாக வாங்கி தொடர்ந்து உட்கொண்டால், உடலுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். டாக்டர்கள் நோயின் தன்மை, உடல்நிலை, வயது, ஏற்கனவே இருக்கும் நோய்கள் போன்ற பலவற்றையும் ஆராய்ந்து சரியான மருந்துகளை பரிந்துரைப்பார்கள். அதுவே முழு பலனைத்தரும்.
  • உலக நாடுகள் சிலவற்றில் டாக்டரின் பரிந்துரையின்றி சிலவகை மருந்துகளை மட்டும் சுயமாகவே மெடிக்கல் ஷாப் நடத்துபவர்கள் விற்பனை செய்யலாம் என்ற நடைமுறை உள்ளது. நம் நாட்டில் ஏராளமான வகை மருந்துகளை அவ்வாறு வாங்க முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது.
  • இதில் அரசு கவனம் செலுத்தி, என்னென்ன வகை எமர்ஜென்சி மருந்துகளை டாக்டர் பரிந்துரையின்றி பெறலாம் என்று வழி காட்டவேண்டும். மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்கி சாப்பிடும்போது, அதனால் ஏற்படும் பின்விளைவுகளுக்கு நோயாளி மட்டுமே பொறுப்பாவார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • காய்ச்சலோ, ஜலதோஷமோ ஏற்பட்டால் உடனே பயந்து விடவேண்டாம். முதல் நாள் ஓய்வெடுங்கள். மறுநாளும் காய்ச்சல் இருந்தால் டாக்டரை சந்தியுங்கள். உங்கள் மெடிக்கல் ஹிஸ்டரி தெரிந்த ‘பேம்லி டாக்டரிடம்’ சிகிச்சை பெறுவது நல்லது. மருந்து சாப்பிட்ட உடன் நோய் குணமாகவேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள்.
  • உடனே நோய் குணமாகாத போது, கொடுக்கும் மருந்தின் அளவை கூட்டலாமா என்றும் சிலர் யோசிக்கிறார்கள். டாக்டர் குறிப்பிடும் அளவைவிட அதிகமாக மருந்து சாப்பிட்டால் நோய் குணமாகாது என்பதை விட, பக்கவிளைவுகளை தோற்றுவிக்கும். பாதுகாப்பான மருந்தாக கருதப்படும் பாராசிட்டமாலை கூட அதிகமாக உட்கொண்டுவிட்டால் சிலநேரங்களில், சிலருக்கு பாதிப்புகள் உருவாகும்.
  • சிலர் டாக்டரிடம் செல்வார்கள். டாக்டர் அவரது நோய்த்தன்மைக்கு ஏற்ப ஒருவாரத்திற்கு மருந்துகள் எழுதிக்கொடுத்து, ‘சாப்பிட்டுவிட்டு வாருங்கள்’ என்பார். அவரோ அதே மருந்தை தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் சாப்பிட்டுவிட்டு, அதன் பிறகு டாக்டரிடம் வருவார். இது ஆரோக்கியத்தை மிக மோசமாக பாதிக்கும் செயல்முறையாகும்.
  • டாக்டர் குறிப்பிடும் காலம்வரை மட்டுமே குறிப்பிட்ட மருந்தை சாப்பிட்டுவிட்டு மீண்டும் டாக்டரை சந்தித்து ஆலோசனை பெறுவதே சரியான வழிமுறையாகும். சிலர் முதலில் இரண்டு நாட்கள் ஒரு டாக்டரிடம் காட்டி, அவர் வழங்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவார்கள். மூன்றாம் நாள் இன்னொரு டாக்டரிடம் செல்வார்கள்.
  • முதலில் வாங்கிய மருந்து சீட்டை காட்டாமலே ஆலோசனை பெற்று, அவர் வழங்கும் மருந்துகளையும் சாப்பிடுவார்கள். இது உடலுக்கு ஏற்ற, சரியான அணுகு சிகிச்சை பெறவேண்டும். நோய்க்கு மருந்து சாப்பிடும்போது, நோயாளிகளுக்கு உணவு சாப்பிட மனம் இருக்காது. ஆனால் அவர்களுக்கு கட்டாயம் உணவு தேவை.
  • அதில் அன்றாடம் உடலுக்கு தேவையான கலோரியும்,சத்தும் இருக்கவேண்டும். சாப்பிடாவிட்டால், உடல் மேலும் தளர்ந்து போகும். காய்ச்சல் இருக்கும்போது எளிதாக ஜீரணமாகும் உணவுகளை உட்கொள்ளவேண்டும். குளிர்ந்த, பழகிய உணவுகளை தவிர்க்கவேண்டும். வாந்தி, வயிற்றுப்போக்கு இருந்தால் உப்பு சேர்த்த கஞ்சி, ஓ.ஆர்.எஸ்.திரவம் போன்றவைகளை எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • டாக்டர் எழுதிக்கொடுத்த மருந்துகளை கடையில் வாங்கும்போது சீட்டை வைத்து மருந்துகளை சரிபாருங்கள். மருந்தின் காலாவதி மாதத்தை கவனியுங்கள். ஒருமுறை வாங்கி பயன்படுத்திய பாட்டில் மருந்துகளை, சிலர் ஒரு சில மாதங்கள் கழித்து மீண்டும் நோய் வரும்போதும் கொடுக்கிறார்கள்.
  • அது தவறு. ‘சிரப்’ வடிவில் உள்ள ஆன்டிபயாடிக் மருந்து பாட்டில்களை திறந்த சில நாட்களுக்கு பயன்படுத்தலாம். அதன் பின்பு அதன் சக்தி குறைந்துவிடும். அதனால் திறந்த பாட்டில் மருந்துகளை நோய் தீர்ந்த பின்பு சேமித்து வைக்கவேண்டாம். பாரசிட்டமால், இருமல் சிரப் போன்றவைகளை காலாவதி தேதிவரை பயன்படுத்தலாம்.
  • சில மாணவர்கள் அன்றாடம் பாடங்களை படிக்காமல், பாடங்களை சேர்த்துவைத்துக்கொண்டு பரீட்சை காலத்தில் அதிக சிரத்தை எடுத்து படிக்கிறார்கள். அப்போது தூக்கம் வந்துவிடக் கூடாது என்பதற்காக, தூக்கத்தை கலைக்கும் ‘ஆம்பிட்டமின்’ வகை மாத்திரைகளை, மருந்துகடைகளில் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.
  • இது அவர்கள் உடலுக்கு அவர்களே செய்துகொள்ளும் தீங்காகும். ஒருசில விளையாட்டு வீரர்கள் ‘ஸ்டீராய்டு’ மருந்துகளை ‘ஊக்கமருந்தாக’ பயன்படுத்துகிறார்கள். அது சட்ட விரோதமானது. உடலுக்கும் ஆபத்து. நீங்கள் நோய்வாய்ப்படும்போது, சிகிச்சைக்காக செல்லும் டாக்டர் முறையாக கற்றவரா? போலி டாக்டரா என்பதை கண்டறியும் பொறுப்பு உங்களை சார்ந்ததுதான்.
  • போலி டாக்டர்கள் தங்களுக்கு தெரிந்த விதத்தில், கேள்வி ஞானம் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மருந்துகளை அளிப்பார்கள். அதனால் ஆபத்தான பக்கவிளைவுகள் ஏற்படும். முறையாக கற்ற டாக்டர்கள் வழங்கும் மருந்துகளும் ஒருசில நேரங்களில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
  • அப்படி ஏற்பட்டால் உடனே, அதே டாக்டரிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும். வெளிநாடுகளில் டாக்டர்கள் மருந்துகளை எழுதும் போது கேபிட்டல் லெட்டரில்தான் எழுத வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. டாக்டர்கள் எழுதுவது புரியாத போது மருந்து மாறி விடக் கூடும். அதனால் வாங்கிய மருந்தை டாக்டரிடமோ, நர்சிடமோ காட்டிவிட்டு பயன்படுத்ததுவது நல்லது.
  • வீடுகளில் மருந்துகளை எப்போதுமே குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும். வீட்டில் பெரியவர் ஒருவருக்கும், குழந்தை ஒன்றுக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பெரியவர் டாக்டரைப் பார்த்து வாங்கிய மாத்திரையில் அரை அல்லது கால் பகுதியை குழந்தைக்கு கொடுக்கலாம் என்று நினைப்பது தவறு.
  • மருத்துவ சாஸ்திரம் குழந்தைகளை ‘சில்ரன் ஆர் நாட் ஸ்மால் அடல்ட்ஸ்’ என்று குறிப்பிடுகிறது. ‘குழந்தைகள் வயதுக்கு வந்தவர்களின் சிறிய   உருவம் அல்ல’ என்பது இதன் அர்த்தமாகும். சிறுவர்களின் ஈரல், கிட்னி போன்றவைகளின் செயல்பாடுகளிலும், இரைப்பையில் சுரக்கும் அமிலங்களிலும் வித்தியாசம் இருக்கிறது.
  • அதனால் பெரியவர்கள் தாங்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை, அளவு குறைத்து ஒருபோதும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது. கவனிக்காமல் இன்னொரு மருந்தை மாற்றி சாப்பிட்டுவிட்டால், உடனே கவனிக்கவேண்டும். மிகக் குறைந்த அளவே சாப்பிட்டிருந்தால் பெரிய பாதிப்பு எதுவும் நேராது. அளவு அதிகம் என்றால் தொந்தரவுதான்.
  • அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படும் போது வாந்தி வரச் செய்வதுதான் சிறந்த வழி. உப்பு கலக்கிய நீரை குடித்தோ, சிறிய துணியால் தொண்டையின் உள்பகுதியை தொட்டோ வாந்தி வரச்செய்யவேண்டும். வாந்தி வரச் செய்யும்போது அவர் முழு நினைவுடன் இருக்கவேண்டும். மண்ணெண்ணெய், ஆசிட் போன்றவைகளை குடித்தால் வாந்தி எடுக்கவைக்கக்கூடாது.
  • உடனே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுவிடவேண்டும். இருமல் சிரப் மற்றும் காய்ச்சலுக்கான சில மருந்துகளை சாப்பிட்டால் அதில் இருக்கும் ஆன்டி ஹிஸ்டமின் தூக்கத்தை வரவழைக்கும். சோர்வு, உற்சாகக்குறைவு போன்றவைகளும் தோன்றும். அதனால் அத்தகைய மருந்து, மாத்திரைகள் சாப்பிடும் நாளில் ஓய்வெடுப்பதே நல்லது.
  • வாகனங்கள் ஓட்டுவதையும் தவிர்க்கவேண்டும். முறையாகப் படித்த டாக்டரை தேர்ந்தெடுப்பது- மருந்து, மாத்திரைகளை முறையாக வாங்குவது- சாப்பிடுவது போன்ற விஷயங்களில் மக்கள் மிகுந்த   விழிப்புணர்வு பெறவேண்டும். இதில் டாக்டர்களின் பங்களிப்பு இன்றியமையாதது.
  • மருந்துகடை நடத்துபவர்களும், சமூகமும் இதில் இணைந்து செயல்பட வேண்டும். சில நாடுகளில் நோய்கள் மற்றும் மருந்துகள் வாங்கும் முறை, சாப்பிடும் முறை பற்றி பள்ளிப்பாடத்திட்டத்திலே சேர்த்திருக்கிறார்கள். அது போன்ற பாடத்திட்டங்களை அரசு இங்கும் நடைமுறைப்படுத்தினால், சமூகத்திற்கு மிகுந்த பலன் ஏற்படும்.

ஆதாரம் : மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குநர் அலுவலகம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate