பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / செய்திகள் / சொத்துப்பதிவுக்கான ஆவணங்கள் தயாரிக்க, சான்றுகளை பெற வழக்கறிஞர்களுக்கு சிறப்பு வசதி
பகிருங்கள்

சொத்துப்பதிவுக்கான ஆவணங்கள் தயாரிக்க, சான்றுகளை பெற வழக்கறிஞர்களுக்கு சிறப்பு வசதி

இணையதளம் மூலம் சொத்துப்பதிவுக்கான ஆவணம் தயாரிக்கவும் சான்றிதழ்களை பெறுவதற்கும் வழக்கறிஞர்களுக்கு பிரத்யேக வசதிகளை பதிவுத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

வழக்கறிஞர்களின் பணிகளை எளிமைப்படுத்தும் வகையில் தேவையான சான்றுகளை உடனுக்குடன் தவறின்றி வழங்க, தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மென்பொருளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேவையான சில விவரங்களை மட்டும் பதிவு செய்து எளிமையாக ஆவணங்களை உருவாக்கலாம். முன் ஆவண எண்ணை பதிவு செய்து, அதில் இருந்து விவரங்களை நகல் எடுத்து சில விவரங்களை மட்டும் மாற்றி ஆவணங்களை எளிதில் தயாரிக்கலாம்.

கட்டுமான உடன்படிக்கை, பிரிக்கப்படாத சொத்து கிரையம், உரிமை ஆவணங்கள் ஒப்படைப்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் உருவாக்கவும், பதிவு செய்யவும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆவணப்பதிவு தொடர்பான எல்லா சேவைகளும் கணினி வழியாக இருப்பிடத்திலேயே வழங்கப்படுவதால் வழக்கறிஞர்கள் பதிவுத் துறை அலுவலகங்களுக்கு நேரடியாக செல்ல வேண்டியது குறைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பல்வேறு புதிய வசதிகளும் வழங்கப்படுகின்றன. ஆவணப்பதிவுக்கு முன்பு ஆவண வரைவை ஆதாரங்களுடன் அனுப்பி சரிபார்த்தல், பதிவு நேரத்தை இணையவழி முன்பதிவு செய்தல், மதிப்பு நிர்ணயித்தல், உடனுக்குடன் ஆவணப்பதிவு ஆகியவை முக்கியமான வசதிகளாகும்.

இணையதளம் வழியாக விண்ணப்பித்து, கட்டணத்தையும் செலுத்தி சம்பந்தப்பட்ட சார்பதிவாளரின் சான்றொப்பமிட்ட வில்லங்கச் சான்று, ஆவண நகலை மின்னஞ்சலில் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மோசடி பதிவுகளை தடுக்கும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. எனவே, வழக்கறிஞர்கள் ‘http://tnreginet.gov.in’ என்ற இணையதளத்தில் சென்று தங்களுக்கான உள்நுழைவு (login) ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஆதாரம் : தி இந்து

Back to top