பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பெண் சக்தி

பெண் சக்தி (உரிய அதிகாரங்கள் மற்றும் உரிமைகளுடன்), இந்தியாவில் பெண்களின் நிலை மற்றும் சமீபத்திய செய்திகள் போன்ற தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

பெண்களின் ஆற்றல்

பெண் சக்தி என்பது பெண்ணின் ஆன்ம ஆற்றல், அரசியல், சமுதாய மற்றும் பொருளாதார மேம்பாடு மற்றும் வலிமை ஆகியவற்றைக் குறிப்பதாகும். பெரும்பாலும், பெண் சக்தி என்பது அவர்களின் தன்னம்பிக்கையையும், ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதையே சுட்டுகிறது எனலாம்.
பெண் சக்தி என்பது பின்வருவனவற்றின் முழுமை அல்லது அவை போன்றன என்று கூறலாம்.

  • சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம்.
  • சரியான முடிவை எடுக்கத் தேவையான தகவல்களையும்,வாய்ப்புகளையும் பெற்றுள்ளமை.
  • “ஆம்” அல்லது “இல்லை” என்றும் “இது அல்லது அது” என்று கூறுவது போல இல்லாமல், தனது முடிவைத் தீர்மானிக்கத் தேவையான பரவலான வாய்ப்புகள்.
  • கூட்டு முடிவு எடுக்கும் சூழலில் தன் கருத்தை உறுதியாக நிலை நிறுத்தும் தன்மை.
  • மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து உறுதிமிக்க நேர்மறையான சிந்தனை.
  • தன்னுடைய அல்லது தன் குழுவினுடைய வலிமையைக் கூட்டத் தேவையான திறமைகளைக் கற்றுக்கொள்ளும் தன்மை.
  • மற்றவர்களின் எண்ணங்களை அல்லது கருத்துக்களை மாற்ற நேரிடும்பொழுது, ஜனநாயகமான முறையில் மாற்றும் திறன்.
  • சுய முன்னேற்றம் மற்றும் முடிவுகள் எடுக்கும் தருணங்களில் சமுதாய வளர்ச்சியையும் மாற்றங்களையும் கருத்தில் கொள்ளுதல் போன்றனவாகும்.
  • ஒருவரது நல்லியல்புகளை அதிகரித்து கறைப்பட்ட அல்லது குறைபட்ட குணங்களை நீக்குதல்.

இந்தியாவில் பெண்களின் நிலை

தற்பொழுது, இந்திய நாட்டுப் பெண்கள் கல்வி, அரசியல், ஊடகங்கள், கலை மற்றும் பண்பாடு, சேவை மையங்கள், அறிவியல் தொழில்நுட்பம் போன்ற பற்பல துறைகளில் பங்கு பெற்று வருகிறார்கள்.
இந்திய சட்டமானது, அனைத்து இந்தியப் பெண்களுக்கும் சம உரிமை (சட்டப்பகுதி 14), மாநிலப்பிரிவின் அடிப்படையில் பாகுபாடு இன்மை (சட்டப்பகுதி 15(1)), வாய்ப்புகள் வழங்குவதில் சம நிலை (சட்டப்பகுதி 16), சமமான வேலைக்குச் சமமான கூலி (சட்டப்பகுதி 39(d)) போன்றனவற்றுக்கு உறுதியளிக்கிறது. கூடுதலாக, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் ஆதரவான  சிறப்பு ஒப்பந்தங்களையும் கொள்கைகளையும் உருவாக்க மாநிலங்களுக்கு அனுமதி அளித்து வழிவகை செய்கிறது.மேலும், பெண்களின் கண்ணியத்திற்கெதிரான, அவர்களைச் சிறுமைப்படுத்துகின்ற செயல்களைக் கைவிட அறிவுறுத்துகிறது (சட்டப்பகுதி 51(A)(e)). அதுமட்டுமின்றி, நியாயமான மனிதாபிமான அடிப்படையில் உரிய பேறுகால விடுப்பு வழங்கவும் மாநில அரசு வழிவகுத்துள்ளது (சட்டப்பகுதி 42).
1970-களின் இறுதியில்தான் பெண்ணிய இயக்கங்கள் உத்வேகத்துடன் செயல்பட ஆரம்பித்தது எனலாம். காவல் நிலையத்தில் மதுரா என்ற பெண் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறையே, தேசிய அளவில் பல பெண்ணிய இயக்கங்களை ஒருங்கிணைத்தது. காவல் நிலையத்தில் மதுராவை மானபங்கப்படுத்திய காவலர்கள் குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்ட நிகழ்ச்சி 1979-1980இல் மிகப்பெரிய எதிர்ப்பினை உருவாக்கியது, அந்த எதிர்ப்பு, தேசிய அளவில் ஊடகங்களால் வெளிப்படுத்தப்பட்டது. இதனால், எவிடென்ஸ் ஆக்ட் (Evidence Act), கிரிமினல் புரொசீஜர் கோடு (Criminal Procedure Code) மற்றும் இந்தியன் பீனல் கோடு (Indian Penel Code) போன்ற சட்டங்களில் மாற்றம் செய்யவும், சிறைக் கைதிகளின் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைக்கு ஏற்ற தண்டனை குறித்த சட்டத்தை ஏற்படுத்தவும் அரசாங்கம் நிர்பந்தப்படுத்தப்பட்டது, பெண் சிசுக்கொலை, ஒடுக்குமுறை, பெண்களின் ஆரோக்கியம், பெண்கல்வி போன்றவைகளுக்காகப் பெண்ணியக்கங்கள் ஒன்றுபட்டுப் போராடுகின்றன.
இந்திய நாட்டில் குடிப்பழக்கம் பெண்களின் மீது ஏவப்படும் வன்முறைக்குப் பெரிதும் காரணமாக இருப்பதால் பல பெண்ணிய இயக்கங்கள் ஒன்றிணைந்து, ஆந்திரா, இமாச்சல பிரதேசம், ஹரியான, ஒரிசா, மத்திய பிரதேசம் போன்ற பல மாநிலங்களில் குடிப்பழக்கத்திற்கு எதிரான பல போராட்டங்களை நடத்தியுள்ளனர், இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் பெண்களின் அடிப்படை உரிமைப் பற்றி பல தலைவர்களின் விளக்கங்கள் குறித்துப் பல இந்திய இஸ்லாமியப் பெண்கள் வினா எழுப்பியுள்ளனர். மேலும் மும்முறை ‘தலாக்’ கூறி விவாகரத்து செய்யும் முறையினையும் இஸ்லாமியப் பெண்கள் எதிர்த்துள்ளனர்.
1990களில் அயல்நாட்டு நிறுவனங்கள் கொடுத்த நன்கொடைகளினால், பல புதிய அரசுசாரா தொண்டு நிறுவனங்கள் (NGO) பெண் முன்னேற்றத்தை மையமாகக் கொண்டு தோன்றின. சுய உதவிக் குழுக்களும், சுய தொழில் மகளிர் குழு (SEWA) போன்ற அரசு சாரா நிறுவனங்களும், இந்தியப் பெண்கள் உரிமைப் போராட்டத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் உள்ளுர் பெண்ணிய இயக்கங்களின் தலைவர்களாகப் பல பெண்கள் உருவாகினர். உதாரணமாக, நர்மதா பச்சாவ் அன்டோலான் (Narmada Bachao Andolan) இயக்கத்தின் தலைவராக உருவான மேதா பட்கரைக் (Medha Patkar) கூறலாம். இந்திய அரசாங்கம் 2001 ஆம் ஆண்டை பெண் முன்னேற்ற (Swashakti) ஆண்டாக அறிவித்தது. பெண் முன்னேற்றத்திற்கான தேசியக் கொள்கை 2001ஆம் ஆண்டு உருவானது.

3.0487804878
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top