பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஆடை அணிகலன்கள் உற்பத்தி / ஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் - பகுதி 2
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் - பகுதி 2

ஆடைகளை பாதுகாத்தல் மற்றும் பராமரித்தல் பற்றி தெரிந்துக் கொள்ள படிக்கவும்.

அமோனியா (அம்மோனியம் ஹைட்ராக்ஸைடு அல்லது லிக்கர் அம்மோனியா)

இது ஒரு வீரியம் மிகுந்த காரம். எண்ணெய் பசை கரைகளை மற்றும் விலங்கின ரோம் இழைகளில், ஸ்கார்ச்சிங் விளைவை நீக்க பயன்படுகிறது. (4 தேக்கரண்டி திரவத்தில் 500 மி.லி. தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது). எவ்வாறாயினும் அதிக அடர்வுடனோ அல்லது தேவைக்கு அதிகமாகவோ இந்த இரசாயனம் பயன்படுத்தப்படும். பட்டு மற்றும் கம்பளியில் மஞ்சள் நிறத்தை ஏற்படுத்துகிறது. நிறத்தை வெளிர செய்கிறது. துணிகளில் டென்டரிங் ஏற்படுகிறது.

அதிக அடர்வுள்ள அம்மோனியா ஆவியாக கூடியது. அதிகமான அம்மோனியா வாயுவை வெளியேற்றி மூச்சடைப்பு மற்றும் கமரலை அதன் மரணத்தினால் ஏற்படுத்தும். ஆகவே நீர்த்த அமோனியா கரைசலை தயாரிக்கலாம் அல்லது வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் அமோனியாவை பயன்படுத்தலாம். பயன்படுத்தாத சமயங்களில் நீர்த்த அம்மோனியா மற்றும் அடர்வு மிகுந்த அமோனியாவை குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்க வேண்டும்.

வாஷிங் சோடா (சோடியம் கார்பனேட்)

இது பொதுவாக சலவைக்காக பயன்படும் இரசாயனமாகும். நீரில் கரையக்கூடிய படிகங்களாக விற்கப்படுகிறது. சோப்புகளுடன் சேர்த்து பயன்படுத்துவதால் சலவை சக்தி மேம்படுகிறது. கடின நீரை மென்மையாக்கவும், அமிலத்தை நடுநிலைப்படுத்தவும், பருத்தி, லினன் துணிகள், வெளுக்கப்பட்ட பின் அமிலக் கரைகளை நீக்கவும், எண்ணெய் பசையை கரைக்கவும் பல்வேறு வகைகளில் இந்த இரசாயனம் பயன்படுகிறது.

தாவர கரைகள் மற்றம் ஸ்கார்ச்சிங்கை நீக்குவதற்கு வாஷிங் சோடா பயன்படுகிறது. இதற்கு 1-4 தேக்கரண்டி இரசாயனம் 500 மி.லி. கொதிநீரில் கரைக்கப்படுகிறது. இந்த கரைசலில் சூடான நிலையில் துணியானது 15 நிமிடங்கள் மூழ்கி வைக்கப்படுகிறது. பின்னர் நீரில் அலசப்படுகிறது.

மேல் கூறப்பட்டுள்ள தரமான பயன்பாடுகள் இருந்தாலும் வாஷிங் சோடா சில நேரங்களில் வெள்ளைத் துணிகளில் மஞ்சள் நிறத்தினை ஏற்படுத்திவிடுகிறது. மேலும் தோலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே நேரடியாக துணிகளை கைகளால் சலவை செய்ய பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

போராக்ஸ் (சோடியம் டெட்ராபோரேட்)

லேசான கார தன்மை மிக்க நீரில் கரையும் இரசாயனம். இது அனைத்து வகையான இழைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வெள்ளை நிற படிக குருணைகளாக கடைகளில் கிடைக்கிறது.

பயன் :

கரை நீக்கப்பட்ட பிறகு அமிலத் தன்மையை சமன்படுத்த பயன்படுகிறது.

பருத்தி மற்றும் லினன் துணிகளில் வெளுப்பானாக பயன்படுத்தப்பட்டாலும் மீண்டும் மீண்டும் சலவை செய்வதால் மஞ்சள் நிறமாகி விடுகிறது. இந்த துணிகள் போராக்ஸ் கரைசலில் கொதிக்க வைக்கப்படும் பொழுது வெண்மையாகிறது.

கஞ்சியில் போராக்ஸ் சேர்ப்பதால் அதிக வெப்பநிலையில் சட்டையின் கலர்கள் மற்றும் பழுப்பாதல் தவிர்க்கப்படுகிறது.

அமில ரியேஜென்டுகள்

அசிட்டிக் அமிலம்

வீட்டில் அசிட்டிக் அமிலத்தை வினிகராக பயன்படுத்துகிறோம் வினிகர் 6%, அசிட்டிக் அமிலம்) பல்வேறு வீரியங்களில் கடைகளில் கிடைக்கிறது. கிலேசியல் அசிட்டிக் அமிலம் மிகவும் சுத்தமானதும், வீரியமானதும் ஆகும். இந்த அமிலத்தை உலோகங்களில் பயன்படுத்தக்கூடாது. ஆனால் கண்ணாடி, பிளாஸ்டிக் எனாமல் அல்லது மண்பாண்டங்களில் பயன்படுத்தலாம்.

பயன்கள் :

 • சக்தி குறைந்த வினிகர் கரைசலில் (இரண்டு தேக்கரண்டி 1லிட்டர் தண்ணீரில்) அதிகபடியாக துணிகளில் நீலம் ஏறுவதை தடை செய்யவும், சமநிலைப்படுத்தும் காரணியாகவும் இருக்கிறது.
 • துணிகளை சலவை செய்தபின் கடைசியாக வீரியம் மிக குறைந்த அசிட்டிக் அமில கரைசலில் அலசும்போது நிறமாற்றம் ஏற்படுவதை தவிர்த்து துணி பளீரென மிளிரச் செய்கிறது.
 • வீரியம் குறைந்த அசிட்டிக் அமில கரைசலில் பட்டு மற்றும் ரேயான் துணியை அலசும்போது நிறம் மங்காமல் மிளிரும்.
 • பட்டில் சாயம் ஏற்றும் பொழுது பயன்படுத்தப்படும். சல்ஃபியூரிக் அமிலத்திற்கு பதிலாக அசிட்டிக் அமிலம் பயன்படுத்தப்படுகிறது.
 • செல்லுலோஸ் அசிட்டேட்டில் ஏற்படும் குறைகளை நிறைவு செய்ய அசிட்டிக் அமிலம் உதவுகிறது.
 • செல்லுலோஸ் அசிட்டேட் துணிகள் அதிக வெப்பநிலையில் நிறைவு பெறும்போது பளபளப்பான சில திட்டுக்கள் துணிகளில் ஏற்படுகிறது. அவை கிரீஸ் திட்டுக்கள் என தவறாக எண்ணப்படுகிறது. இந்த குறைப்பாடு துணியினை 20% அசிட்டிக் அமிலகரைசலில் 1 மணி நேரம் மூழ்கச் செய்வதன் மூலம் நீக்கப்படுகிறது.
 • இந்த கரைசலில் இருந்து துணியை வெளியே எடுத்து மற்றோரு துணியால் மூடி அந்த கரைசலை மெதுவாக வெளியேற்றவும். 140°F (60°C)ல் உலர்த்தப்படுகிறது.

முன்னெச்சரிக்கைகள் :

அதிகப்படியான அசிட்டிக் அமிலம் கம்பளி மற்றும் பட்டினை பாதிப்படைய செய்யும். தொடர் சலவையின்போது அதிகப்படியான அமிலம் அலசப்படாமல் இருந்தால் துணி எண்ணெய் பசை மிகுந்த தோற்றத்துடன் கொழுப்பு அமிலங்களுடன் சேர்ந்த ஒவ்வாத மணத்தை ஏற்படுத்தும்.

ஆக்சாலிக் அமிலம் :

இது அதிக நச்சுத்தன்மை வாய்ந்தது மற்றும் வெள்ளை படிகங்களாக விற்கப்படுகிறது.

பயன்

 • இரும்பு கரை மற்றும் பழக்கரைகளை அகற்றும்.
 • பொட்டாசியம் பெர்மாங்கனேட்டால் ஏற்பட்ட பழுப்பு கரையை வெளுக்கச் செய்யும்.
 • ஆக்சாலிக் அமிலம் ஹைட்ரஜன் பெராக்ஸைடுடன் சேர்ந்து, டேனினை அடிப்படையாக கொண்ட எழுதும் மையினை நீக்குவதற்கு பயன்படுகிறது.
 • வெள்ளை நிற வைக்கோல் தொப்பிகளை தூய்மை செய்வதற்கு.
 • 500 மி.லி தண்ணீரில் 1-4முதல் தேக்கரண்டி ஆக்சாலிக் அமிலம் கரைக்கப்பட்ட சூடான கரைசலில் 10 நிமிடங்கள் கரையுள்ள துணியை மூழ்கி வைப்பதன் மூலம் கரை நீக்கப்படுகிறது. பின் நன்றாக அலசப்படுகிறது.
 • போராக்ஸ் அல்லது அமோனியா (100% அதிகப்படியான அமிலத்தை குறைப்பதற்காக சேர்க்கப்படுகிறது.

முன்னெச்சரிக்கை

கம்பளி மற்றும் பட்டில் பயன்படுத்தினால் நிரந்தரமான பழுப்பு கரைகள் ஏற்படும். (140°F, 60°C) அதிக வெப்பநிலையில் அல்லது அதிக வீரியமான கரைசல் மற்றும் ரசாயனம் சேர்க்கப்பட்டு உலரச்செய்யும்போது துணி பழுதாகிவிடும். மரக்கரண்டிகளை பயன்படுத்தி ஆக்ஸாலிக் அமிலத்தை கையாளவும்.

ஓலியிக் அமிலம் (ஓலியின்)

இது கொழுப்பு அமில வகுப்பைச் சார்ந்தது. காரத்துடன் வினைபுரியும் போது சோப்பை உருவாக்கும்.

பயன்கள் :

கிரீஸ் மற்றம் எண்ணெய் கரைகளை கண்டுபிடிக்க உதவுகிறது. கரையில் ஓலியிக் அமிலத்தை போட்டால் 15 நிமிடங்களுக்குப் பின், அந்த கறை கரைந்திருக்கும். கறை நீக்க உட்படுத்தப்பட்ட பகுதி பிழிந்தெடுக்கப்பட்டு, வீரியம் குறைந்த அமோனியா கரைசலில் மூழ்கச் செய்யப்பட்டு சோப்பை உருவாக்குகிறது. கறையை அழுத்தி தேய்ப்பதால், நுரை ஏற்படுத்தப்பட்டு கறை நீக்கப்படுகிறது.

இந்த அமிலம் பருத்தி மற்றும் லினனில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அமிலம் உடனடியாக கம்பளி இளகச் செய்யும். பட்டில் நிறம் மங்கச் செய்யும் மற்றும் வண்ணத்துணிகளுக்கு உகந்தது அல்ல. துணிகள் நன்றாக அலசப்பட வேண்டும். இல்லாவிடில் சிக்குப்பிடித்த மணம் உருவாகிவிடும்.

ஆர்கானிக் கரைசல்கள்

குறிப்பிட்ட ஆர்கானிக் கரைசல்களை துணிகளில் பயன்படுத்தி கறைகளை நீக்கலாம் அல்லது உலர் சலவை செய்யலாம். ஆர்கானிக் கரைசல்கள் இழையையோ அல்லது வண்ணத்தையோ பாதிக்காது. எவ்வாறாயினும், அதிக விலை காரணமாக, வீடகளில் பயன்படுத்தப்படுவதில்லை . சலவை நிலையங்களில் பயன்படுத்தப்படும் முக்கிய கரைசல்கள் பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுத்தப்படுத்தும் பென்சீன் (பெட்ரோல்)

இதனை பெட்ரோலியப் பொருளை வடிகட்டும்போது பெறலாம். இது தீ பற்றக்கூடியது. வீடுகளில் சேமித்து வைக்கக்கூடாது மற்றும் நெருப்பின் அருகே பயன்படுத்தக்கூடாது.

பயன்கள் : கிரீஸ் கறைகளை கண்டுபிடிக்க மற்றும் உலர் சலவையில் பயன்படுகிறது.

கார்பன் டெட்ரா குளோரைடு

பெட்ரோல் போன்ற செயல்பாடு உடையது. ஆனால் விலை அதிகமானது. நெருப்பு பற்றாதது. ஆனால் நச்சுத்தன்மை வாய்ந்தது. ஆகவே, வெளிப்புறத்தில் அல்லது ஜன்னல் அருகே பயன்படுத்த வேண்டும். மேலும், விரைவில் ஆவியாகிவிடக்கூடியது.

பயன்கள் : பெயிண்ட்களை மற்றும் கிரீஸ் கறைகளை நீக்க பயன்படுத்தப்படும் கரைசல் ஆகும்.

அசிட்டோன்

பல கறைகளை நீக்க பயன்படும், ஒரு உகந்த கரைசல் ஆகும். நெருப்பு பற்றக்கூடியது. மேலும் செல்லுலோஸ் அசிடேட் ரேயானை கரைசலில் பயன்படுத்தினால் கரைந்துவிடும்.

பயன்கள் :

செல்லுலோஸ் அசிடேட் மற்றும் வினியான் இழைகள் தவிர பிற இழைகளில் பெயிண்ட், நகபாலிஷ், லிப்ஸ்டிக், வார்னிஷ், ஷூ பாலிஷ் முதலியவற்றை நீக்க அசிடோன் பயன்படுகிறது.

மிதைலேட்டட் ஸ்பிரிட் (ஆல்கஹால்)

செயற்கையாக நிறமேற்றப்பட்ட ஆல்கஹால், மீதைல் ஆல்கஹால் சேர்க்கப்பட்டு, நச்சுத்தன்மை ஏற்றப்பட்டு, குடிப்பதற்கு பயன்பாடற்றது.

பயன்கள் :

சீலிங் மெழுகு, சில்வர் நைட்ரேட் மற்றும் சில்வர் கறைகளை நீக்க பயன்படுகிறது. ஆனால் ஆர்கானிக் கறைகளுக்கு உகந்ததல்ல. சோப்புடன் பயன்படுத்தப்படும்போது நல்விளைவுகளை ஏற்படுத்தும். ஆல்கஹால் அசிடேட் ரேயானை கரைத்துவிடும். ஆனால் பிறவகை துணிகளில் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்.

பாராபின்

பெட்ரோலிய பொருட்களின் விளைபொருளாக பாராபின் மெழுகு கிடைக்கிறது.

பயன்கள் : கிரீஸ் மற்றும் சலவைகருவி ரப்பர் இணைப்புகளில் பெயிண்ட் கறைகளை நீக்க பயன்படுகிறது.

டர்பன்டைன்

பாராபினை விட அதிக விலை கொண்டது. தனிப்பட்ட மணமுடையது. நெருப்பு பற்றக்கூடியது மற்றும் ஆவியாகக்கூடியது.

பயன்கள் : துணிகளில் கிரீஸ், பெயிண்ட், வார்னிஷ் மற்றும் அச்சிடும் மைக்கறையை நீக்கப்பயன்படும் அசிடேட், நைலான் போன்ற துணிகளில் பாதுகாப்பாக பயன்படுத்தப்படுகிறது.

உறிஞ்சிகள்

பொதுவாக ஒரே சீராக அழுக்கான வெளிர்நிற துணிகள் மற்றும் கிரீஸ் கரைகள் நீக்க பல்வேறு உறிஞ்சிகள் வீடுகளிலும், சலவை நிலையங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. விலங்கின ரோமங்கள், அதிக அடர்வண்ண கையுறைகள், உறிஞ்சிகளால் சுத்தம் செய்யமுடியாதவை என்பனவற்றை இந்த உறிஞ்சிகள் சுத்தம் செய்யும். (உ.ம்) பிரெஞ்சு சாக்கு, சாதாரண உப்பு, உமி, ஃபுல்லர்ஸ் எர்த் (fullers earth), ரொட்டித் தூள்கள், மெக்னீசியா தூள், மற்றும் பிற வாணிப் உலர் சலவை தூள்கள்.

பயன்படுத்தும் முறை : கறை நீக்க அல்லது பொது சலவையில், முதலில் லேசான அழுக்கை புருசு கொண்டு நீக்கவும். பிறகு உறிஞ்சியை பரப்பவும். வட்டதிசையில் லேசாக தேய்க்கவும். அரைமணி நேரம் அப்படியே விடவும். பிறகு தூளை அனைத்து பகுதியிலும் படச்செய்து, புருசு பயன்படுத்தி சலவை செய்யவும்.

உமி, பாசிபருப்பு மாவு, ரொட்டிதுகள் லேசான உலர்தலுக்குப் பின் பயன்படுத்தப்படுகிறது. அதிக அடர்நிறமுள்ள ஃபெல்ட்கள், கோட்டுகள், விரல்கள் மற்றும் தொப்பிகள், ஒட்டக ரோமணி, கிரீஸ் பட்ட புடவைகளை சுத்தம் செய்ய பயன்படுகிறது.

பயன்கள் : உறிஞ்சிகள் வெளிர் மற்றும் அடர்நிற கிரீஸ் திட்டுக்கள் படிந்த அனைத்து ரக துணிகள், வெள்ளை நிற லேஸ்கள், கோட்டுகள், ஷால்கள், தொப்பிகளை சுத்தம் செய்ய பயன்படுகிறது. இவை துணிகளில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

கஞ்சி பசை இடுதல் / ஆடைகளை விரைப்பாக்குதல்

ஸ்டார்ச்சுகள் துணிகளை விரைப்பு, முடபடப்பு, முரமுரப்பு, மினுமினுப்பு அல்லது பளபளப்பான வெளிப்பரப்பை ஏற்படுத்தி தூசி, அழுக்கு போன்றவைகளை தடுக்கும்.

ஸ்டார்ச் என்பது நீண்டகாலமாக துணிகளை விரைப்பாக்க அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. ஸ்டார்ச்சில் கார்பன், ஹைட்ரஜன் மற்றும் பிராணவாயு அடங்கியுளள்து. இது சர்க்கரையைப் போன்ற கூட்டமைப்பை கொண்டுள்ளது. தாவரங்கள் ஸ்டார்ச்சை தயாரிக்கின்றன. ஸ்டார்ச்சுகள் பொதுவாக இரு வகைப்படும். காய்கறிகள் (வெள்ளைநிறக் காய்கள் மற்றும் சோளக்கலவை) மற்றும் பிளாஸ்டிக் (பிசின் கொண்டு தயாரிக்கப்படுவது) பிளாஸ்டிக் வகை தற்போது கண்டுபிடிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவது ஆகும். பிசின் ஒரு சில நேரங்களில் ஸ்டார்ச்சுக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது.

சில வகை தாவரங்களின் தண்டுகளில் இயற்கையாக தகுந்த ஸ்டார்ச்சுகள் சேமிக்கப்படுகிறது. உதாரணம் பனை. ஆனால் அநேகமாக தானியங்கள் அல்லது விதைகளில் சேமிக்கப்படுகிறது. உதாரணம்: அரிசி, கோதுமை, சோளம் போன்றவை மற்றும் வேர்கள் மற்றும் கிழங்குகளான உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு முதலியவை. ஸ்டார்ச் என்பது ஒரு கார்போஹைட்ரேட் மற்றும் வெவ்வேறு பொருட்களில் பல்வேறு அமைப்பில் இருந்தாலும் ஸ்டார்ச்சின் வெளிப்புறத் தோற்றம் ஒரே மாதிரியானதாகவே இருக்கும். இரசாயன சோதனைகளிலும் கூட மாறுபாடுகள் இருக்கிறது. ஆனால் நுண்ணோக்கி சோதனை மூலம் அணுக்களை பார்த்தால் அளவிலும், வடிவிலும் மாறுபாடுகள் இருப்பதை காணமுடியும்.

அரிசி ஸ்டார்ச் :

இந்த ஸ்டார்ச் அணுக்கள் மிகச் சிறியன. துணிகளை விரைப்பாக்கி, சுலபத்தில் மடிப்பதற்கு பொருத்தமான குழகுழப்பான திரவ கரைசல் தயாரிக்க உகந்தது. குளிர்ந்த நீரை பயன்படுத்தி கஞ்சியிடுதலுக்கும் இந்த ஸ்டார்ச் மிகவும் பொருத்தமானது. ஸ்டார்ச் அணுவின் அளவு மிகவும் சிறியதாக உள்ளதால் எளிதாக துணியினுள் ஊடுருவிச் செல்லும் தன்மையைப் பெற்றுள்ளது.

கோதுமை ஸ்டார்ச் :

ஸ்டார்ச் அணுக்கள் மிகவும் பெரிய அளவிலும், சிறிய அளவிலும் காணப்படும். அடர்த்தியான குழகுழப்புத் தன்மை உடைய திரவத்தினை தயாரிக்க முடிவதால் துணிகள் சுலபமாக மடிக்கக்கூடிய தன்மையுடன், விரைப்புத் தன்மையையும் பெற்று இருக்கும். ஆனால் இந்த ஸ்டார்ச் மிகவும் விலைமிக்கது. ஆகவே, இது சலவைத் தொழிலில் பொருளாதார சிக்கனத்திற்கு ஏற்றது அல்ல.

சோளம் :

இந்த ஸ்டார்ச் குழகுழப்பான திரவத்தை கொடுக்கும். ஆனால் அதிக விரைப்புடன் விரும்பத்தகாத முரடான தொடுதன்மையை அளிக்கும். இது விலை மலிவான ஸ்டார்ச் ஆகும். ஆனால் பிறவகை ஸ்டாரச்சுகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது.

உருளைக்கிழங்கு :

இந்த ஸ்டார்ச் அணுக்கள் மிகவும் பெரிய அளவினை கொண்டு இருக்கும். ஆகவே, இந்த ஸ்டார்ச் சலவைத் தொழிலுக்கு பொறுத்தமானது அல்ல.

வர்த்தக ஸ்டார்ச்சுகள் :

பல்வேறு டிரேட் மார்க்குகளில் வர்த்தக ஸ்டார்ச்சுகள் கிடைக்கின்றன. இந்த வகை ஸ்டாரச்சுகள் வழக்கமான இரண்டு, மூன்று பல்வேறு ஸ்டார்ச்சு வகைகளை கலந்து விற்கப்படுகின்றது. இந்த செயற்கையான ஸ்டார்ச்சின் முதன்மையான நன்மை என்னவெனில், துணிகளில் இடப்பட்ட ஸ்டார்ச் பல கலவைகளுக்கு பின்பும் கூட விரைப்புத் தன்மையோடு துணிகளில் ஒட்டிக் கொண்டு இருக்கும்.

ஸ்டார்ச்சுக்கு மாற்று / பதிலாக பயன்படுபவை அல்லது ஸ்டார்ச்சை துணியில் பரப்புபவை

ஸ்டார்ச் கிடைப்பது அரிதாகிவிடுவதால் பல்வேறு தயாரிப்புகள் ஸ்டார்ச்சுக்கு மாற்றாக அல்லது ஸ்டார்ச்சை பரப்புபவை சந்தையில் பெருகிவிட்டன.

உதாரணம் :

கால்சியம் ஆல்ஜினேட் மற்றும் பேரியம் சல்பேட்டை பேஸ்ட் போன்ற தன்மையில் துணிகளில் சிறிதளவு பயன்படுத்தும்போது அதிக விரைப்புத்தன்மை கிடைக்கிறது.

மலபார் மற்றும் இந்திய தென்மேற்கு மலைப்பகுதிகளில் பாலிஷ் செய்யப்பட்ட மரவள்ளிக்கிழங்கு தூள் மற்றும் புளியங்கொட்டை தூள் கலவை வர்த்தக ஸ்டார்ச்சுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறது.

கொதிக்கும் நீர் ஸ்டார்ச்

ஸ்டார்ச்சை நீரில் கொதிக்க வைக்கும்போது அணுக்கள் அளவில் பெரிதாகி, தெளிவாக இருக்கும். ஒட்டும் தன்மையின் தரம் பயன்படுத்தப்படும் ஸ்டார்ச்சின் வகையை பொறுத்து இருக்கும்.

ஸ்டார்ச் ஜெல்லி தயாரிக்கும் முறை

தேவையான பொருட்கள்

1 மேஜைக்கரண்டி ஸ்டார்ச்

தேக்கரண்டி பேராக்ஸ்

2 மேஜைக்கரண்டி குளிர்ந்த நீர்

1 பகுதி கொதிக்கும் தண்ணீர்

தயாரிக்கும் முறை

ஸ்டார்ச்சை குளிர்ந்த நீரில் கலந்து வழவழப்பான குழைமப் பொருளாக ஆக்கவும். கொதிக்கும் “நீரை மேலே ஊற்றி தொடர்ந்து கலக்கவும். தெளிவான திரவமாகும் வரை கலக்கி உடனடியாக சம அளவு சுடுநீரை சேர்த்து நீர்த்த நிலையில் வைக்கவும். சிறிதளவு ஃபார்மலினை ஸ்டார்ச்சுடன் சேர்த்து புளிப்பாவதை தடுத்துவிடலாம்.

பயன் : பருத்தி மற்றும் லினன் துணிகளில் ஸ்டார்ச் இடுதல் மிகவும் எளிது. ஸ்டார்ச் இடவேண்டிய துணிகளை ஸ்டார்ச் கரைசலில் மூழ்கவைத்து, மேலும் கீழுமாக எடுத்து துணிகளில் முழுவதுமாக ஸ்டார்ச் படர்ந்தபின், வெளியே எடுத்து நீர் வடிந்தபின் உலரவிட வேண்டும். ஸ்டார்ச் பல்வேறு துணிகளில் தேவைப்படும் அளவானது கீழ்வருவனவற்றை சார்ந்து உள்ளது.

1. துணியின் அடர்வு

2. துணிக்கு தேவைப்படும் விரைப்புத் தன்மை

3. ஒருவரது தனிப்பட்ட விருப்பம்

குளிர்ந்த தண்ணீர் ஸ்டார்ச்

தேவையான பொருட்கள்

1 தேக்கண்டி அரிசி ஸ்டார்ச்

½ தேக்கரண்டி போராக்ஸ் அதிக விரைப்பு ஏற்படுத்த)

3 துளிகள் டர்பென்டைன் மெழுகுக்கு பதிலாக)

½ பகுதி குளிர்ந்த நீர்

1 தேக்கரண்டி கொதிக்கும் நீர்

தயாரிக்கும் முறை :

போராக்ஸை கொதிக்கும் தண்ணீரில் கரைக்க வேண்டும். குளிர்ந்த நீர் மற்றும் டர்பென்டைன் சேர்க்கவும். வழவழப்பான குழைமப் பொருளாக ஆக்கவும். ஸ்டார்ச்சை பயன்படுத்துவதற்கு அரைமணி நேரத்திற்கு முன் மெல்லிய மஸ்லின் துணி மூலம் வடிகட்டி மூடி வைத்து விட்டு பயன்படுத்தினால் ஸ்டார்ச் அணுக்கள் மென்மையாகும்.

பயன் : இந்த ஸ்டார்ச்சை அதிக அளவு விரைப்பு தன்மை தேவைப்படும் போது பயன்படுத்தலாம். துணியானது இவ்வகை ஸ்டார்ச் பயன்படுத்தும்போது உலர்ந்து இருக்க வேண்டும். ஸ்டார்ச் கலவையானது துணியின் இழைகளுக்குள் உறிஞ்சப்பட்டு, பின் பிழியப்படுகிறது. மேல்பரப்பில் உள்ள ஸ்டார்ச் துகள்கள் குளிர்நீரில் நனைத்து, பிழியப்பட்ட மஸ்லின் துணியினை பயன்படுத்தி துடைத்து எடுக்கப்படுகிறது. பின்பு இஸ்திரி செய்யப்படுகிறது.

சலவை நீலங்கள்

பொதுவாக வெள்ளை நிற துணிகள் அதற்குரிய பிரகாசிக்கும் நிறத்தை, இழந்து மஞ்சள் பழுப்பு நிறத்தை பெறுகிறது. இந்த மஞ்சள் நிறத்திற்கான காரணம் கீழ்வருவனவற்றுள் ஒன்றாகும்.

1. அரைகுறை சலவை

2.துணியின்மீது படியும் சோப்பில் உள்ள சுண்ணாம்பு அல்லது இரும்புத்துகள்கள்

3.பல சலவைகளுக்குப்பின் வெளுப்பான் பயன்படுத்தாமையால் அல்லத சொரசொரப்பான கார சோப்பினால் துணியில் ஏற்பட்ட அதிக வெளுப்பானால் துணி பாதிப்படைந்து, இயற்கையான இழையின் நிறத்தை மீண்டும் பெறுதல் மூலம் மஞ்சள் நிறமாகிறது.

நம்பிக்கைக்கு எதிராக, வெளுப்பான்கள் துணிகளை வெண்மையாக்குவதில்லை. மேற்கூறப்பட்ட காரணங்களால் மஞ்சள் நிறமாதலை சரிசெய்கிறது.

நீலங்கள் என்பவை சலவை செயல்பாட்டின் போது வீடுகளிலும், சலவை நிலையங்களிலும், துணிகள் மஞ்சளாவதைத் தடுக்க பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் ஆகும். வீட்டில் பொதுவாக அல்ட்ரா மரைன் நீலம் பயன்படுத்தப்படுகிறது. இது நீரில் கரையக்கூடியது.

அநேக சலவை நிலையங்கள் கரையக்கூடிய நீலங்களை பயன்படுத்துகின்றன

அல்ட்ராமொரைன் என்பது பயன்டுத்த பாதுகாப்பானது. காரச்சோப்புகளால் பாதிப்படைவதில்லை. சில வேளைகளில் கொதிநீரில் சோப்புடன் நீலம் சேர்க்கப்படுவதால், நீலம் பாயில்டு இன் என கூறப்படுகிறது. அல்ட்ரா மரைன் நீலம் கொண்டு நீலமிடும் போது பெரிய துகள்களால் கோடுகள் அல்லது திட்டுகள் துணியில் ஏற்பட்டு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனை தவிர்க்க நீலத்தை கடைசி அலசலுக்கு முன்பு துணிகளுக்குப் போடுவது நல்லது.

அல்ட்ராமரைன் நீளம் போடுவதற்கு அதிக பராமரிப்பு தேவை ஏற்படுவதால் அநேக சலவை நிலையங்கள் கரையும் நீலங்கள் மற்றும் பளீராக்கும் சலவை துகள்களை பயன்படுத்தி சலவையை எளிதாக்கிக் கொண்டுள்ளன.

கரையக்கூடிய நீலங்கள் அனிலின் சாயங்கள் தான். இவை பல வழிகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தயாரிக்க, கட்டுப்படுத்த, செயல்படுத்த, துணிகளில் போட சமமாக நிறமேற்றி, கீழே எந்தவித படிவுமின்றி செயல்படுத்த முடிகிறது. அதிக அளவில் சலவை செய்யும் பவர் சலவை நிலையங்களில் அனிலின் சாயங்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை அடர்வான திரவமாகவோ அல்லது தூள்களாகவோ கிடைக்கின்றன. பர்ப்பிளிஷ் நீலம் மிகவும் பிரசித்தி பெற்ற நிறமாகும். ஏனெனில் இது வெண்மை நிறத்தோற்றம் கொடுக்கும். துணிகளில் கெட்டியாக பற்றிக்கொள்ளும் தன்மை அனிலின் சாயத்தின் பண்பாக இருந்தாலும், பாதுகாப்பாக பயன்படுத்த வேண்டும். அதிகமாக நீரில் கரையும் தன்மையால், தொடர்ந்து அலசுவதால் எளிதாக துணியை விட்டு நீங்கிவிடும். ஒரு வேளை அதிக அளவு நீலம் போட்டு இருந்தாலும் அலசுதல் மூலம் அகற்றி விடலாம்.

துணி சோப்பின்றி இருக்கும்போது நீலமிட வேண்டும். நீலமிடும் செயல்பாடு கடைசி அல்லது அதற்கு முந்தையை அலசலில் நடைபெறுவது உகந்தது. மஸ்லின் துணியில் நீலம் கட்டப்பட்டு குளிர்நீரில் தேவையான நீலநிறம் கிடைக்கும்வரை பிழியப்படுகிறது. கரையாத தன்மையுடைய அல்ட்ராமரைன் துணியில் கட்டி தொங்கவிடப்பட்டு பயன்படுத்துவதற்கு முன் ஒவ்வொரு முறையும் கலக்கிவிடப்படுகிறது. துணியானது தண்ணீரில் ஓரிரு முறைகள் மூழ்கி எடுக்கப்படுகிறது. பாக்கெட் மற்றும் பை போன்ற பகுதியில் தங்கிய நீலநீர் குலுக்கி எடுக்கப்படுகிறது. தண்ணீரிலிருந்து துணி வெளியேற்றப்பட வேண்டும். நீலம் கலந்த நீரில் துணியை போட்டுவிடக்கூடாது. நீலமிடுதல் மற்றும் கஞ்சியிடுதலை சில சமயங்களில் தேவையிருந்தால் இணைத்து செய்யலாம்.

மஞ்சள் நிறம் கொண்ட துணிகளில் நீலம் இடவேண்டும். இல்லையெனில் பச்சையாகிவிடும். அசிடிக் அமிலம் சேர்ப்பதால் அதிக அளவு நீலம் நீக்கப்படுகிறது. வருடத்தில் 9 மாதங்கள் அடர் சூரிய ஒளி இருக்கும். நம் இந்திய நாட்டில் நீலமிடுதலுக்கு அவசியமில்லை என்பதை கவனிக்கவும். ஒழுங்கான முறையில் சலவை செய்யப்பட்ட துணிகளுக்கு சூரிய ஒளி ஒரு சிறந்த இயற்கையான வெளுப்பானாகும்.

உலர்த்துதல் மற்றும் அழுத்துதல்

உலர்த்துதல் :

பண்டைகால முறையில் துணிகளில் உள்ள அதிகமான தண்ணீரை பிழிந்து, தரையில் சூரிய ஒளி படுமாறு விரித்து வைத்தல் அல்லது நீளமான கயிற்றுக் கொடிகளில் தொங்கவிட்டு உலர வைப்பதே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் இன்றைய நிலையில் தானியங்கி சலவை இயந்திரங்களில் நீர் அகற்றப்பட்ட உடன் உலர்ப்பான்களில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும். இல்லாவிடில் சுருக்கம், விரைப்புத்தன்மை அல்லது சுருங்கிவிடும். ஒரு நீளக் கயிற்றுக் கொடியில் துணி உலர வேண்டுமானால் கயிற்றுக்கொடி சுத்தமாக துடைக்கப்பட்டு இருக்க வேண்டும். துணிகளை நன்கு உதறி சுருக்கமின்றி ஒழுங்காக இணைப்புகளை நோக்கி தொங்கவிட வேண்டும். நன்கு உலரும் முன்பாக எடுத்துவிட வேண்டும். அப்போதுதான் இஸ்திரி அழுத்தம் கொடுப்பது சுலபமாகும்.

உலர வைக்கும் கருவி

வெளிப்புறத்தில் உலர வைத்தல் துணிகளை உலர வைக்கும் கயிறு) :

பருத்தி, சணல், தேங்காய் நார், கயிறு அல்லது முலாம் பூசப்பட்ட கம்பு திடமானது அல்லது முறுக்கப்பட்டதை துணி உலர்வதற்கான கொடியாக பயன்படுத்தலாம். கம்பிக்கொடிகள் நிரந்தரமானவை. அவற்றை பயன்பாட்டிற்கு முன் சுத்தமான துணி கொண்டு துடைத்து இரும்புத் துருவை நீக்கிவிட்டு துணிகளை உலர்த்த வேண்டும். துணிகளை உலர்த்த உகந்த இடம் வெளிப்புறத்தில் சுத்தமான காற்று மற்றும் சூரிய ஒளி படுகின்ற இடமே ஆகும்.

வீட்டின் உட்புறத்தில் உலர வைத்தல் :

வெளிப்புறத்தில் உலர வைக்க முடியாத நிலையில், மழை பருவ காலங்களில் உட்புறங்களில் உலர்த்துவதற்கு ஏற்றவாறு அமைப்பை உருவாக்க முடியும்.

1.ஒரு சிறு வீட்டிற்கு மரச்சட்டத்தால் ஆன ரேக்கை (rack) அமைத்து அதில் ராட்டினம் மற்றும் கயிறு இணைத்து மேலேற்றி மேற்கூரையில் அமைத்துவிட்டால் நல்லதொரு உலர வைக்கும் கருவி தயாராகிவிடும். நீண்ட மெல்லிய மூங்கில்கள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

2.மடக்கி வைக்கும் ரேக்குகள் சுலபமாக தயார் செய்யக்கூடியது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3.சூடுபடுத்தப்பட்ட உலர வைக்கும் பெட்டி மழைக்காலங்களில் உலர்த்துதலுக்கு இது ஒரு வரப்பிரசாதம். வெளிப்புறத்தில் உலர வைக்க முடியாத நிலையில் பெட்டிகளில் வெப்பத்தை மின்சாரம் மூலம் (கூட்டி, குறைத்து சரி செய்து இரு ஸ்விட்ச்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தலாம். ஒரு ஸ்விட்ச் வெப்பத்தில் உலரச்செய்யவும் மற்றொரு ஸ்விட்ச் ஆறுவதற்கும் பயன்படுகிறது. பெரிய நவீன ஹோட்டல்கள் அல்லது நிறுவனங்களில் ஒரு உலர்த்தும் பெட்டியானது வாயு அல்லது மின்சாரம் மூலம் வெப்பப்படுத்த பயன்படுகிறது.

வெளிப்புற உலர்த்துதல் மிகவும் சிறந்தது. வெள்ளை நிற துணிகள் சூரிய ஒளியில் உலர்த்தப்படும்போது வெளுத்தலுக்கு உதவியாக இருக்கும். சூரிய ஒளியில் உலர்வது விரைவாகும். கிருமிகள் நாசமடையும் மற்றும் துணிகள் புத்துணர்வு பெறும். நீண்ட கயிற்றுக் கொடிகளில் தொங்கவிடும்போது ஓரங்கள், மடிப்புகளை பிரித்து கிளிப்களால் பொருத்தி உலர வைக்க வேண்டும். சூரிய ஒளியில் நீண்ட நேரத்திற்கு உலர வைக்க வேண்டாம். ஆனால் உலர்ந்தவுடன் உடனடியாக எடுத்துவிட வேண்டும்.

உட்புறத்தில் உலர வைப்பது சிறந்தது. வண்ணத்துணிகள் நிறம் மங்காமல் இருக்க உட்புறத்தில் உலர வைப்பது சிறப்பானதாகும்.

அழுத்தம் கொடுத்தல் மற்றும் இஸ்திரி இடுதல்

அநேக ரக துணி வகைகள் சலவைக்குப்பின், அழுத்தம் கொடுத்தால் மட்டுமே அதன் உண்மையான தோற்றம் பெற முடியும். முடிவுறும் செயல்பாடு என்பது துணிகளை நேர்படுத்தி, அதன் தோற்றம் கவரக்கூடியதாகவும், நேர்த்தியானதாகவும் இருக்கச் செய்வதே ஆகும்.

சலவை செய்தலின் முடிவுறுதலில்

அ) பெட்டி இடுதல்,

ஆ. அழுத்துதல்,

இ) ஆவியிடுதல்,

ஈ) ஆடையை மழமழப்பாக்குதல்,

உ) பளபளப்பாக்குதல் ஆகிய முறைகள் பயன்படுகின்றன.

பெட்டி இடுதல் :

இச்செயல்பாட்டில் சூடான இரும்பு பெட்டியை முன்பக்கம் மற்றும் பின்பக்கமாக கரை ஓரங்களில் இருந்து அழுத்தம் கொடுத்து துணியின் மீது தேய்ப்பது ஆகும். இரும்புப் பெட்டியின் உஷ்ணம் மற்றும் அழுத்தம் துணியின் புறத்தோற்றம் மற்றும் துணியின் தன்மையைப் பொறுத்து கட்டுப்படுத்தப்படுகிறது.

இஸ்திரி இடும் முறை

1. உறுதியான பரப்புள்ள இடமும், சுத்தமான சூடான இரும்புப் பெட்டியும் சிறப்பாக இஸ்திரி இட இன்றியமையாதது.

2. புடவைகள் மற்றும் விரிப்பான்களுக்கு 4x2 1/2 அடி மற்றும் 3 அடி உயர மேஜை சிறந்தது.மற்ற பிற துணிகளுக்கு இஸ்திரி செய்யும் பலகையை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர், ஒரு மெல்லிய மஸ்லின் துணி மற்றும் ஒரு இஸ்திரி ஸ்டாண்டும் தேவைப்படும்.

3. பாதி உலர்ந்த ஈரத்துணியை பிரித்து, விரித்து சூடான இஸ்திரி பெட்டியை முன்னும் பின்னும்

மடிப்புக் கரையோரத்தில் இருந்து ஓடவிட வேண்டும்.

அழுத்துதல் :

துணியில் மடிப்புகள் உள்ள பகுதிகளில் சூடான இஸ்திரி பெட்டியை வைத்து எடுக்கும் செயல்பாடே அழுத்துதல் ஆகும். இச்செயல்பாட்டில் முன்னும் பின்னும் பெட்டியை துணியின் மீது தொடர்ச்சியாக ஓடவிடுவது கிடையாது.

ஆவியிடுதல் :

இச்செயல்பாட்டில் நீர் ஆவி துணியின் மேற்பரப்பில் பரவச் செய்யப்படுகிறது. பைல் நெசவு செய்யப்பட்ட வெல்வெட் மற்றும் வெல்வெட்டின் போன்ற துணிகளின் மேற்பரப்பில் ஆவியிடுதல் செயல்பாடு செய்யப்படுகிறது.

மழமழப்பாக்குதல் (Mangling) :

சொரசொரப்பான மேற்பரப்புள்ள துணிகளில் மழமழப்பு செய்யப்படுகிறது. மேற்பரப்பு நேர்த்தியாக இருந்தாலும், மழமழவென்று இல்லாதபோது மழமழப்பாக்கப்படும்.

பளபளப்பாக்குதல் (Calendering) : வர்த்தக, சலவை மையங்களில், நேரான பருத்தி மற்றும் லினன் துணிகளில் முடிவுறச் செய்யும்போது பளபளப்புச் செயல்பாடு செய்யப்படுகிறது.

மேஜை விரிப்புகள், திரைச்சீலைகள் மற்றும் படுக்கை விரிப்புகளில் பளபளப்பு செய்யப்படுகிறது. வெப்பப்படுத்தப்பட்ட இரு உலோக உருளைகள் தொடர்ந்து உருளும்போது துணி இடையில் செலுத்தப்படுகிறது. 13.4.2.2. இஸ்திரி இடுதல் :

பல்வேறு இஸ்திரி பெட்டிகள் தற்காலத்தில் கிடைக்கிறது. நிலக்கரி அல்லது மின்சாரம் மூலமாக வெப்பப்படுத்தப்படுகிறது.

நிலக்கரி இஸ்திரி பெட்டி :

பொதுவாக இஸ்திரி இதனை தொழில் செய்பவர்கள் பயன்படுத்துகின்றனர்.

மின்சார இஸ்திரி பெட்டி : தானே இயங்காதது, தானியங்கி மற்றும் நீராவி இஸ்திரி பெட்டிகள்

தற்காலத்தில் தானியங்கி மின்சார இஸ்திரி பெட்டியில் நேரம் வெப்பம். அழுத்தம் முதலானவற்றை குறிக்கும் கருவி பொருத்தி இருக்கும். அந்த கருவியில் தனி நபருக்கு தேவையான வெப்பத்தை தேர்வு செய்து இஸ்திரி செய்யலாம். பொதுவாக பட்டு மற்றும் மனிதன் தயாரிக்கும் இழைகளுக்கு குறைவான வெப்பம் தேவைப்படும். ஆனால் பருத்தி மற்றும் லினன்களுக்கு அதிகமான வெப்பம் தேவைப்படும். சரியான வெப்ப நிலையை கருவியில் தேர்ந்தெடுத்தால் துணிகள் கருகாமல், சுருக்கங்கள் அகற்றப்பட்டு இஸ்திரி செய்யலாம்.

துணிகளை பாதுகாத்தல்

துணிகளுக்கு அணிந்திருக்கும்போது மட்டுமின்றி, பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் போதும் பராமரிப்பு தேவை. வருடம் முழுவதும் தட்பவெப்ப பருவம் சீராக இல்லாமல் இருப்பதால் குறிப்பிட்ட பருவகாலத்தில் குறிப்பிட்ட துணிகளின் தேவை ஏற்படுகிறது. துணிகளின் பாதுகாப்பும், பராமரிப்பும் குறிப்பிட்ட காலத்திற்கு தேவைப்படுகிறது. அதிக அளவில் துணிகள் இருந்தால், சிறு அறையோ அல்லது பாதுகாக்கும் ஸ்டோரோ பயன்படுத்தலாம். அல்லது கப்போர்டு அல்லது ஷெல்ப்கள் பயன்படுத்தலாம்.

துணிகளை பாதுகாக்கும் இடம் சில உகந்த பண்புகள் பெற்று இருக்க வேண்டும்

- தெளிவாக, உலர்ந்து, ஈரப்பதம் இன்றி இருக்க வேண்டும்

- வெளிச்சமாக, இருளின்றி இருக்க வேண்டும்.

- ஷெல்ப்கள் அதிக அளவில் நன்றாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அதிக உயரத்தில் இருந்தால் துணியை பாதுகாப்பது மிகவும் சிரமம்

- ஷெல்ப்கள் ஆழமாக இருக்க வேண்டும்.

- காகிதங்களால் மூடப்பட்டிருக்க வேண்டும்.

- டிராயர்களும் துணிகளை பாதுகாக்க பயன்படும்.

- கப்போர்டு பயன்படுத்தினால், கதவுகளை சரியாக மூட வேண்டும்.

- பாதுகாக்கும் இடம் உலர்ந்து, பூச்சிகளின்றி, தூசி அழுக்குகள் இன்றி இருக்க வேண்டும்.

துணிகளை பாதுகாக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்

 1. துணியில் தூசி இல்லாமல் இருக்க வேண்டும். புருசு கொண்டு சுத்தம் செய்யப்பட்டு, பாக்கெட்டுல் சுத்தமாக, வெயிலில் உலர்த்தப்பட்டு பாதுகாக்க வேண்டும்.
 2. சலவை செய்ய வேண்டிய துணிகளை சலவை செய்து பாதுகாக்க வேண்டும். உலர் சலவை செய்ய வேண்டியவைகளை உலர்சலவை செய்ய வேண்டும்.
 3. பெட்டி அல்லது அலமாரியில் துணிகளை அடுக்கும்முன் காற்று புகுவதற்கு வழி செய்ய வேண்டும்.
 4. ஈர நிலையில் துணிகளை பாதுகாக்க கூடாது. ஈரப்பதம், பூஞ்சை வளர காரணமாகிவிடும், துணி சேதமடையும். ஆகவே உலர் நிலையில் பாதுகாக்க வேண்டும்.
 5. அலமாரியில் காகிதம் விரித்து அல்லது பழைய துணியை விரித்து அதன்மீது துணிகளை வைத்து பாதுகாக்க வேண்டும்.
 6. பாதுகாக்கும் இடத்தை பூச்சிகொல்லி ஸ்ப்ரே செய்து கரப்பான் போன்ற பூச்சிகள் வருவதை தடைசெய்ய வேண்டும்.
 7. புகையிலை, வேப்பஇலை போன்ற பூச்சிகொல்லிகளை பாதுகாக்கும் இடத்தில் பயன்படுத்தலாம். நாப்தலின் உருண்டைகள் ஓடோனில் போன்றவை சிறந்தவை. கற்பூரமும் சிறந்தததாக பயன்படுத்தப்படுகிறது.
 8. கம்பளி ஆடைகளை செய்திதாள் கொண்டு மூடி பாதுகாத்தால், பாச்சை போன்ற பூச்சிகள் அச்சிடும் மை இருப்பதால் கம்பளி துணியை பாதிக்காது.
 9. நச்சுப்புகை - ஹைட்ரோ சையனைட் புகையிடுதல் மூலம் பாச்சை, கரப்பான் அழிக்கப்படும். இது அபாயமானது தான் என்றாலும் தனிப்பட்ட முறையில் சிறப்பாக அநேக இடங்களில் கையாளப்படுகிறது.
 10. ஒரே இடத்தில் துணிகளை பாதுகாக்க வேண்டும். (உ.ம்) கோட்டுகள், மேல்கோட்டு, ஒரு இடத்திலும், கார்டிகான்கள், புல் ஓவர்கள் ஒரு இடத்திலும், புடவைகள் வேறு ஒரு இடத்திலும் பாதுகாக்க வேண்டும்.
 11. வெள்ளை துணி மஞ்சளாவதை தடுக்க பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.
 12. நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட வேண்டிய துணிகளை மடிப்புகளில் மாற்றி மடித்து வைக்க வேண்டும். இல்லையெனில் மடிப்பில் கிழிய வாய்ப்புள்ளது.
 13. பாலித்தீன் பைகளில் துணிகளை வைத்து பாதுகாப்பது சிறந்தது.
 14. கஞ்சியிட்ட துணிகளை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கக்கூடாது.
 15. எப்போதாவது பயன்படுத்தக்கூடிய துணிகளை மேல் ஷெல்ப்களில் வைக்கலாம். கனத்த துணிகளை கீழே வைக்கும்போது கையாள்வது சுலபம்.
 16. டிராயர்களை வெயிலில் உலர வைக்கும்போது ஈரம் அகற்றப்பட்டு, பூச்சிகளும் அகற்றப்படுகிறது.
 17. அழுக்கான துணிகளை பாதுகாப்பதால் பல தீமைகள் உள்ளன. துணிகளில் கறைகள் நிரந்தரமாக படிந்துவிடும். பாச்சை பூச்சிகள், மற்றும் பூஞ்சைகளால் எளிதாக பாதிப்படையும்.
 18. சிறிய கிழிசல்களை பெரிதாகும் முன் தைத்து சரிசெய்து பாதுகாப்பது சிறந்தது.

முடிவுரை

துணிகளுக்கு சரியான பராமரிப்பும், கவனிப்பும் இருந்தால், அணிபவரது அழகைக் கூட்டி துணியின் உழைக்கும் திறன் அதிகப்படுத்தப்படுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.07142857143
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top