பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடைகளை வடிவமைத்தல்

ஆடைகளை வடிவமைத்தல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஒரு ஆடையை வடிவமைப்பதற்கு அல்லது அலங்கரிப்பதற்கு, தேவையான அம்சங்களை அறிந்திருத்தல் அவசியம் ஆகும். ஒரு ஆடையை பார்ப்பதற்கு ஈர்ப்பு மிகுந்ததாக வடிவமைக்க நமக்கு அரிதாக உள்ள வளங்களான நேரம், முயற்சி மற்றும் பணம் அல்லது வடிவமைத்தல் மற்றும் அலங்கரித்தலை பயன்படுத்த வேண்டும்.

கோடுகள், வடிவங்கள், வண்ணங்கள் மற்றும் நூல் நயங்களை நேர்த்தியாக கையாண்டு உருவாக்கும் வடிவத்தையே டிசைன் என்று வரையறுக்கிறோம். வடிவமைத்தல் என்பது தெளிவற்ற நிலையில் இருந்து உயர்ந்த உன்னத திருப்தி அளிக்கும் வகையில் ஒழுங்கு முறையான தனிப்பட்ட குணம் அல்லது தனித்து நிற்கும் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஒரு வடிவமைப்பு கவனமாக அறிவு பூர்வமாக கலை மூலப்பாருட்களை பயன்படுத்தி தனிப்பட்ட நபரின் எண்ணத்தை எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்க வேண்டும்.

ஆடை வடிவமைப்பில் அடிப்படையாக இரு முக்கிய பிரிவுகள் உள்ளன. இரு வடிவமைப்புகளும் பிரிக்க முடியாத பிரிவுகளாகும். ஆடை வடிவமைப்பில் இவை இரண்டும் வடிவமைப்பை ஏற்படுத்தும். காரணிகளாகும்.

*உருவ வடிவமைப்பு

*அலங்கார வடிவமைப்பு

உருவ வடிவமைப்பு

ஒரு ஆடை வடிவமைப்புக்கு தேவையான அனைத்தும் உருவ வடிவமைப்பில் அடங்கி உள்ளது. ஆடையின் உருவ வடிவத்தோடு, ஆடையின் பகுதிகளான பாாட்கள், மடிப்புகள், டக்குகள் மற்றும் தொடர்புடைய அம்சங்கள் இணைப்பது உருவ வடிவமைப்பில் அடங்கும். ஆடையின் எல்லைக் கோட்டுப் பகதியில் சற்று மாறுபட்ட வண்ண மேற்புறத் தையல் செய்வது உருவ வடிவமைப்பிற்கு மெருகூட்டி அலங்காரத் தரத்தினை கூடுதலாக்கிக் காட்டும். ஆடை உருவாக்கத்தில் உருவ வடிவமைப்பு மிகவும் முக்கியமானது. ஏனெனில் வடிவமைப்பிற்கு இது ஒரு அடிப்படை அங்கமாகும்.

அலங்கார வடிவமைப்பு

இந்த வடிவமைப்புகளில் அடிப்படையான உருவடிவமைப்புகள் தேவைப்படும். உருவடிவங்கள் மீது வடிவமைத்து வரையப்பட்டது தொங்கவிடப்படுகிறது. அது அதிகமாக கத்தரித்து சீர் செய்யப்பட்டு, அச்சு வேலைபாடுகள் மிகுந்து, சித்திரத் தையல், பொத்தான்கள், போக்களில் இழையோட்டம் போன்றவைகள் செய்யப்பட்டு இருக்கும். இந்த வடிவமைப்புகளில், துணி, நவீனம் மற்றும் நிறங்களின் சேர்க்கை விவரிக்கப்படுவதால் விரும்பிய வடிவமைப்பை எளிதாக தேர்ந்தெடுக்க முடிகிறது.

ஒருவரது அழகு மற்றும் தோற்றத்தை அதிகரித்துக் காட்டுவதற்கு கலையின் மூலப்பொருட்கள் மற்றும் அடிப்படைக் கொள்கைகளை தகுந்தவாறு பயன்படுத்த வேண்டும்.

வடிவமைப்பின் மூலக்கூறுகள் (Elements of Design)

ஒருவர் கலை மற்றும் வடிவமைப்பின் அடிப்படை மூலக்கூறுகளை முழுவதுமாக தெரிந்திருத்தால் அழகுணர்ச்சியுடன் கூடிய ஆடைகளை வடிவமைத்து உருவாக்க முடியும்.

அழகான ஆடைகளை உருவாக்க வடிவமைப்பின் மூலக்கூறுகளை தேர்ந்தெடுத்து, ஒருங்கிணைக்க ஒரு சில முக்கியமான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

ஒரு வடிவமைப்பை உருவாக்குவதில் வடிவமைப்பு மூலப்பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. வடிவமைப்பின் மூலப்பொருட்களும், கோட்பாடுகளும் இன்றைய நடைமுறை நாகரீகத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கும் தன்மை பெற்று இருக்க வேண்டும். கோடுகள், வடிவங்கள், நிறங்கள், நயம் அல்லது புறத்தோற்ற தன்மை (texture) ஆகியவை நல்ல தோற்றமளிக்கும் வகையில் அமைத்து இருப்பதே வடிவமைப்பு என வரையறுக்கப்பட்டுள்ளது.

கலை மூல பொருட்கள் எந்த விகிதத்தில் எவ்வாறு சேர்க்கப்பட்டுள்ளன என்பதே வடிவமைப்பின் கோட்பாடுகள் ஆகும். ஆகவே, மூலப்பொருட்கள் என்பன கலைக்கு தேவையான பொருட்களை சரியாக இணைத்து அமைப்பதாகும்.

கலையின் பலவித மூல பொருட்கள் பின்வருவன்,

*கோடு

*உருவம் மற்றும் வடிவம்

*வண்ணம்

*புறத்தோற்றத்தன்மை

கலை மொழியில் மேற்கண்ட மூல பொருட்கள் “பிளாஸ்டிக்குகள்” என கருதப்படுகின்றன. ஏனென்றால் இம்மூலக்கூறுகளை திறமையாகக் கையாண்டால் அல்லது அமைத்தால் ஒரு வடிவமைப்பாளரால் அவர் நினைத்த பொருளை கச்சிதமாக உருவாக்க முடியும்.

கோடு

கோடு பல்வேறு தோற்றங்களான திசை, கனம், பருமன், கூர்மையான ஓரங்கள் மற்றும் நீளத்தை உள்ளடக்கியுள்ளது. பார்வைக்கு அழகாக புலப்படும் வகையில் நீள, அகல அளவுகளை கோடு கொடுக்கிறது. கோடுகளை ஒன்று சேர்த்து சரியான இடைவெளி கொடுத்தால் பல உருவங்களையும், வடிவங்களையும் வரையறுக்கலாம். கோடுகள் உள்ள ஆடைகள் பார்ப்பவர்களது கண்களுக்கு அழகாக புலப்பட்டு மிளிரச் செய்யும் தன்மை வாய்ந்தது. ஆடை வடிவமைப்பில் கோடுகள் உண்மையான அளவைவிட பருமனாகவோ அல்லது ஒல்லியாகவோ தோற்றமளிக்குமாறு அமைக்கப்படுகிறது. கோடுகள் பல்வேறு பணிகளை செய்கின்றன.

*மனோநிலையை ஏற்படுத்துகிறது.

*வரையறுத்தல் மற்றும் உருவம் கொடுத்தல்

*திசைகளை காட்டுதல்

*கண்களுக்கு முன்னோடியாக உள்ளன

*வடிவமைப்பில் முக்கியத்துவத்தை ஏற்படுத்துகிறது

*மாயையை ஏற்படுத்துதல்

• நீள அகல அளவுகளை காட்டுதல்

• வெற்று இடங்களை உள்ளடக்குதல்

கோடுகளின் வகைகள்

கோடுகளில் இரு வகைகள் உண்டு நேர்கோடுகள் மற்றும் வளைவு கோடுகள். நேர்கோடுகள் நான்கு திசைகளிலும் செல்லலாம். செங்குத்து கோடுகள், சமதளக் கோடுகள், மூலைவிட்ட கோடுகள் அல்லது வளைந்து செல்லும் கோடுகள் ஆகும். வளைவு கோடுகள் மிதமிஞ்சி ஒரு வட்டத்தையே உருவாக்கும் கோடுகளாகவும் அல்லது நுண்ணிய (அ) மெல்லிய வளைவுகளைக் கொண்டு கிட்டத்தட்ட ஒரு நேர்க்கோடு போன்றும் இருக்கலாம்.

நேர்க்கோடுகள் :

மனித உடம்பின் இயற்கையான வளைவு, நெளிவுகளுக்கு எதிர்மறையானவை நேர்கோடுகள். நேர்க்கோடுகள் கம்பீரமாகவும், உறுதியுள்ளதாகவும் தோற்றமளிக்கும் தன்மை வாய்ந்தவை. துணி உருவடிமைப்பில் புறத்தோற்றத்தன்மையில் மென்மையான தேர்ந்தெடுக்கப்பட்ட துணிகளில் உருவாவதற்கு நேர்கோடுகள் பயன்படுத்துதலினால் ஆகும். உம் ஜெர்ஸி போன்ற மென்மையான துணியை பயன்படுத்தும்போது, நேர்கோடுகள் உடல் வளைவுகளில் படிந்து கட்டுப்பட்டு வளைந்து காணப்படும். ஆனால் விரைப்பான துணிகளான ஆர்கண்டி அல்லது டஃபேட்டா போன்றவை நேர்க்கோடுகளை நேர்த்தியாக வைத்திருக்கும். இவ்வகை துணிகள் விரைப்பு தன்மையால் மனித உடலில் இருந்து விலகியே இருக்கும்.

டார்ட்கள், இணைப்புகள் மற்றும் அலங்கரித்தல் மூலமாக ஆடைகளினுள் கோடுகள் உருவாக்கப்படுகின்றது. ஒவ்வொரு வகை கோடும் ஒரு விசேஷ தாக்கத்தை ஏற்படுத்தும் தன்மை வாய்ந்ததாகும். நேர்க்கோடுகள் மற்றும் வடிவங்கள் சக்தி மற்றும் பலத்தினையும், ஆண்மை குணத்தையும் குறிக்கும். வளைந்த கோடுகள் என்பன இயற்கையான கோடுகள், இக்கோடுகள் ஆடைகளுக்கு அழகைக் கொடுத்து பெண்மை குணத்தையும் ஏற்படுத்தும். ஆடை வடிவமைப்பாளர்களுக்கு கோடுகள் தான் பலமான ஆயுதமாக விளங்குகிறது. கோடுகள் உயரத்தையும், அகலத்தையும் ஒருவரின் தேவைக்கும் தோற்றத்திற்கும் ஏற்றவாறு அமைத்து ஆடைகளை உருவாக்க பயன்படுகிறது.

நேர்கோட்டின் ஒவ்வொரு திசையும் ஒளியியல் விளைவை அல்லது மாயையை செங்குத்து, மட்டக்கோடு, சாய்ந்த கோடு, வளைந்த கோடு ஒரு தனிநபரின் குறிப்பிட்ட ஆடை வடிவமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தீர்மானிக்கலாம்.

ஆடை வடிவமைப்பில் கோடுகளை ஒருங்கிணைத்து அமைப்பதன் மூலம் உயரமாக, குள்ளமாக, பருமனாக அல்லது மெலிவாக தோன்றச் செய்ய முடியும். கோடுகள் ஒரு ஆடையில் பயன்படுத்தும் விதம் ஒருவரது மனப்பான்மையை வெளிப்படுத்தும். கோடு மற்றும் ஒளியியல் விளைவு ஏற்படும்போது சிறிய இடுப்பு பெரிதாக தோன்றவோ, தோள்பட்டை அகலமானதாகவோ அல்லது குறுகலாகவோ, இடுப்புப் பகுதி சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ தோன்றலாம். கோடுகள் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்புடைய பிற காரணிகளாவன:

*டிசைனை அணிந்திருப்பவரது உடல் வடிவம்.

*துணியின் வண்ணம்

*பார்வையை ஈர்த்து ஆவலை தூண்டும் கோடுகளின் மாறுபட்ட விகிதாசரம்.

• கோடுகளால் பக்கத்தில் உருவான வடிவம் அல்லது இடைவெளிகளை ஒப்பீடு செய்தல்,

*துணி தொங்கவிடப்படல், கைநெசவு, அச்சுகள் மற்றும் புறத்தோற்ற தன்மை,

*முன் நிபந்தனையின்படி பார்ப்பவர்கள் எதிர்பார்த்தது போல் தாக்கம் ஏற்படுத்தும்.

செங்குத்துக் கோடுகள் :

செங்குத்துக் கோடுகளின் எண்ணிக்கையை கூட்டி வித்தியாசமான நிறங்களை, ஆடையின் நடுவிலோ அல்லது மையப் பகுதியிலோ சேர்க்கும் போது (படம் அ) ஆடையின் வடிவமைப்பிற்கு உயரத்தை கூட்டியது போன்ற எண்ணத்தை உருவாக்கும். செங்குத்துக் கோடுகள் குள்ளமான தோற்றம் உடையவர்களை, உயரமான தோற்றமுடையவராக தோன்ற செய்யும் திறன் பெற்றுள்ளது. (உம். (படம் ஆ இளவரசிக்கான ஸ்டைலில் உள்ள ஆடையும் இதுபோன்ற விளைவை ஏற்படுத்தும். செங்குத்துக் கோடுகள் இடம் பெறும் ஆடைகளை பார்ப்பவர் கண்கள் அதன் நீளத்தை அளவீடு செய்யும். கணிசமான செங்குத்து கோடுகளை கொண்ட பாவாடைகள்/கால் சட்டைகள், சட்டைகள் அதன் அகலத்தில் இருக்கும் இடவெளியை குறைத்துக் காட்டி பார்வையில் இடம் பெறச் செய்யும் ஆற்றல் பெற்றது. எந்தவித உருவமும் இல்லாமல் தெளிவாக இருக்கும் ஒரு பாவாடை பார்ப்பதற்கு மிகவும் அகலமாக காட்சியளிக்கும். ஆனால் அதில் செங்குத்துக் கோடுகள் இடம் பெற்றால், அது சற்று அகலம் குறைந்ததாக தோன்றும்.

மட்டக் கோடுகள் :

இந்தக் கோடுகள் ஆடைகளின் அகலத்தை அதிகப்படுத்தி, உயரத்தை குறைக்கும் திறன் கொண்டவை. உதாரணம் வித்தியாச நிறமுடைய அகலமான இடுப்புப் பட்டி (belt) அணிந்த ஆடையை இரு பகுதியாக பிரித்து மனிதனின் உயரத்தை குறைத்துக் காட்டும். எனினும், இடுப்புப் பட்டியானது இடுப்பின் அளவை குறைத்து காட்டும், ஆடையின் நிறத்தை ஒத்த (படம் இ) இடுப்புப்பட்டியானது அணிந்துள்ளவரின் உயரத்தையும் ஆடையின் உயரத்தையும் குறைத்து காட்டாது.


இ)

மூலை விட்ட கோடுகள்:

இந்த கோடுகள் உடை உடுப்பவரின் உயரத்தைக் கூட்டிகாட்டவோ, குறைத்துக் காட்டவோ செய்யும் ஆற்றலை பெற்று உள்ளது. துடையில்லாத நீளமான மூலைவிட்ட கோடுகள் கிட்டத்தட்ட செங்குத்து கோடுகளுக்கு சமமான கோடுகள் ஆகும். இவை மிக நீளமான, தெளிவான கோடுகள் ஆகும். மூலை விட்ட கோடுகள், செங்குத்து அல்லது மட்டக் கோடுகளோடு இணைந்து இருந்தால் வடிவம் சிறப்பாக இருக்கும். மூலை விட்டக் கோடுகள் மட்டுமே ஆடையில் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அதன் விளைவு நன்றாக இருக்காது. படம் (ஈ)

(ஈ)

வளைந்த கோடுகள் :

இந்தக் கோடுகள் மிகவும் விசித்திரமானவை மற்றும் இயற்கையில் ஆழ்ந்த யோசனையுடன், பெண்மைதனம் நிறைந்ததாகவும், அழகானதாகவும் கருதப்படுகிறது. மூலை விட்ட திசையில் உள்ள வளைந்த கோடுகள் மிகவும் அழகாக இருக்கும். மென்மையான மடிப்புகளைக் கொண்டு தொங்கவிடப்பட்ட உடையிலும், சுருக்கங்களுடன் கூடிய கழுத்துப்பட்டையிலும் வளைந்த கோடுகளை பார்க்கலாம். வளைவு கோடுகளானது அளிப்பவரின் உடல் அமைப்பை சார்ந்தே இருக்கும்.

வளைகோடு முழு வட்ட வடிவமாக உருவாக்கப்படும் போது, அந்தக் கோடு செயல்பாடு மிக்கதாக தோன்றும். ஒரு கட்டுப்படுத்தப்பட்ட வளைவு அருளோடு, தொடர்ச்சியாக மற்றும் நல்லியல்புடன் தோன்றும் நேர்கோடுகள் உடல் வடிவத்தினை துணியின் புறத்தோற்ற தன்மை மூலமாக வெளிபடுத்துவது போலவே வளைவு கோடுகளும் செயல்படுகின்றன. அதிகமான அளவில் வளைவுகளை வெளிப்படுத்தும். உம்) ஒரு ஆடையில் ஒரு பகுதியில் சுருக்கங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் ஆடையின் மென்மையான பகுதிகளுக்கு பார்வை செலுத்தப்பட்ட பின்னரே சுருக்கம் உள்ள பகுதியில் படிகிறது. மணிக்கட்டில் சுருக்கங்கள் வைக்கப்பட்டிருந்தால் பார்வை அப்பகுதியால் ஈர்க்கப்படும். ஆடையில் அதிக மடிப்புகள் உள்ள பகுதி அனைவரது கவனத்தையும் ஈர்க்கும். வளைவு கோடுகள் ஒல்லியான நபரை சற்று பருமனாக தோன்றச் செய்யும்.

வளைந்து வளைந்து செல்லும் கோடுகள்:

இது மூலைவிட்ட கோடுகளின் தொடர் இணைப்பு ஆகும். கண்களின் பார்வை திசையில் உடனடி மாற்றத்தையும், மறபடி, மறுபடி வரம்பின்றி செல்வதால் பார்வையில் தள்ளாட்டத்தையும் ஏற்படுத்தும். இந்த வகை கோடுகள் துணிகளில் பெரிதாக இடம் பெறும். கண் செயல்பாடுகள் காரணமாக, இந்த கோடுகள் அமையும் இடங்களில் சற்று பெரிய தோற்றத்தை உருவாக்கிவிடுகிறது.

பார்ப்பதற்கு மாயத்தோற்றத்தை உருவாக்கும் நேர்க்கோடுகளின் ஒருங்கிணைப்பு (படம் 1 - 5)

படம் 1 செங்குத்துக் கோடுகள் அமையும் இடங்கள் நீளமாகவும், பார்ப்பதற்கு ஒல்லியாகவும் கண்களை மேலிருந்து கீழாக நகர்த்தினால் தெரியும்.

படம் 2 பக்கவாட்டில் பார்வையை நகர்த்தும் போது சமதளக் கோடுகளானது சிறியதாகவும், அகலமாகவும் தெரியும் பண்பைக் கொண்டது.

படம் 3 மூலைவிட்டக் கோட்டின் சாய்வு சமதளகோட்டை ஒட்டிய அளவில் இருந்தால், அந்த இடம் சிறியதாகவும், அகலமாகவும் கண்களுக்கு காட்சயளிக்கும்.

படம் 4 மூலைவிட்டக் கோட்டின் சாய்வு செங்குத்துக் கோட்டை ஒட்டிய அளவில் இருந்தால், அந்த கோடு நீளமாக காட்சி அளிக்கும்.

படம் 5 விரிவாக்கப்பட்ட மூலைவிட்டக் கோடுகள் கண்களின் பார்வை தொடர்ச்சியாக மேல்நோக்கி செல்கையில் கோடுகளும் நீளமாக தோன்றும்.

கோடுகளின் இயக்கம்

செங்குத்துக்கோடு, மட்டக்கோடு மற்றும் சாய்ந்த கோடுகள் எதிர்ப்பு, இடப்பெயர்ச்சி, அல்லது பரவச் செய்தல் போன்ற பண்புகளைக் கொண்ட இயக்கத்தை தருகின்றன. (படம் உ). எதிர்ப்பு : ஒரு வடிவமைப்பில் செங்குத்துக் கோட்டை BBI மட்டக்கோடு AB எதிர்த்தால் சாய்வுக் கோடுகளை எதிர்ப்புக் கோடுகளாக பயன்படுத்தலாம். (படம் ஊ)

இடப்பெயர்ச்சி:

ஒரு கோட்டின் திசை லாவகமான இன்னொரு கோட்டின் மேல் விழும்போது, இயக்கத்தில் இடப்பெயர்ச்சி நடைபெறும். உதாரணம், வளைந்த கோடுகள் ஒன்றோடு ஒன்று இணைந்து விழக்கூடாது. வளைந்த கோடுகளை நேர் கோடுகள் விறைப்பானதாக செய்கின்ற போது சிறப்பாக இருக்கும். உதாரணம், செங்குத்தான பின்டக்குகள் கொண்ட வட்ட வடிவ யோக்குகள் (படம் எ)

பரவச்செய்தல் :

ஒரு உடையில் கழுத்து வளைவில் இருந்து கோடுகள் பரவும் படி ஒரு வடிவமைப்பு உருவாக்கப்பட்டிருந்தால், அனைவரது கவனமும் உடை உடுத்தியிருப்பவரது முகத்தைப் பார்ப்பதற்கு ஈர்க்கப்படும். இந்த பரவும் கோடுகள் உடையின் வலதுபக்கம் அலங்கார டார்ட்கள் தைப்பதன் மூலம் உருவாக்கப்படுகிறது (படம் ஏ)

உருவடிவ மூலக்கூறுகளுக்கிடையேயான உள் உறவுகள்

இடவெளி, வடிவம், உருவம் பற்றி புரிந்து கொண்ட திறனை வளர்த்துக்கொண்டு கோடுகளின் திசையை அறிய முற்படுதல் என்பது ஒவ்வொரு உருவடிவத்தின் தாக்கத்தைப்பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ள உதவுகிறது. இந்த உருவடிவ மூலக்கூறுகள் வண்ணம் மற்றும் புறத்தோற்றம் மூலம் அறிதல் ஆகியவற்றை இணைத்து அனைத்து உருவடிவங்களையும் உருவாக்கி விடுவதால், அனைத்து உருவாக்கும் பகுதிகளிலும் முக்கியமானதாக கருதப்படுகின்றன.

துணிகளை தேர்வு செய்யும் போது, இடவெளி, வடிவம், உருவம் மற்றும் கோடுகள் முக்கியத்துவம் பெறாமல் போய் விடுகின்றன. உடற்கூற்றின் முக்கோண பரிமாணம் மேடு பள்ள வடிவத்தினை ஆடையில் உருவாக்கி, ஆடைக்கு வடிவம் கொடுக்கிறது. ஆனால், ஆடையின் வடிவம் என்னும் மாயை, ஆடையின் உள் இருக்கும் உடலின் உருவத்தினை சார்ந்து உள்ளது

ஆடையில் இடைவெளி என்பது வடிவத்தில் உள்ள இடம் ஆகும். ஆடை உருவாக்கும் விவரங்களுடன், அலங்காரம், புறத்தோற்ற தன்மை, வண்ணம், துணியில் அச்சிடப்பட்ட டிசைன் ஆகியவற்றுடன் இடவெளி பிரிக்கப்படுவது என்பது ஆடையின் பாங்கிற்கு ஸ்டைலுக்கு மிக்க சிக்கலானது, கோடுகள், உருவம் மற்றும் வடிவத்தினை ஆடையில் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. பார்வையை ஒரே திசையில் செலுத்தும் படியாக ஆடையில் இடவெளியில் ஆடையின் வடிவத்திற்கு ஏற்ற கோடுகள் இருக்க வேண்டும் ஒரு ஆடை ஒருவரது உடலுக்கு ஏற்றவாறு அமைய மூலக்கூறுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

உருவம் மற்றும் வடிவம்

உருவம்:

உருவம் என்பது நீளம், அகலம், ஆழம் போன்ற பரிமாணங்களை உடைய ஒரு பொருள் ஆகும், நாகரீகம் மாறும் பொழுது, மனிதனின் உருவம் உடையால் மாற்றம் அடைகிறது.

வடிவங்கள் :

ஒரு பொருளின் வெளிப்புற பரிமாணங்களை விவரிக்கிறது. ஆடை வடிவமைப்பின் மூலம் ஒரு மனித உடலின் வடிவம் இயற்கையாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆனால் சில சமயங்களில் வடிவத்தை கெடுத்துவிடுகிறது. உடையின் வடிவமானது அணிந்துள்ள மனிதன் பற்றிய தகவல்களை அமைதியாக வெளிப்படுத்தும்.

ஒருவர் உருவம் மற்றும் வடிவம் மற்றும் ஆடையின் கோடுகள் மொத்த உருவத்தை உருவாக்கும். இதுவே ஆடையின் எல்லைக்கோடு ஆகும் (silhoutte விவரம் இல்லாத எல்லைக்கோடு) ஒரு ஆடைக்கு சில்ஹவுட் முதல் அபிப்ராயத்தை ஏற்படுத்தும் ஏனெனில் தூரத்தில் இருந்து ஆடையின் எல்லைக்கோடு பார்க்கப்படுகிறது. மற்றும் எதிர்மறையாகத் தோன்றச் செய்யப்படுகிறது. உடலில் ஒட்டியபடி ஆடை இருப்பதை உடலின் பல்வேறு பகுதிகளின் வடிவத்தையும் ஆடையின் கைப்பகுதி, பேண்ட் மற்றும் ஷர்ட்களின் வடிவத்தையும் வெளிப்படுத்தும்.

ஒவ்வொரு நாகரீக காலகட்டத்திலும், ஒரு வடிவம் மெதுவாக தோன்றும் அல்லது திடீரென வெளிப்படும். எதுவாயினும் ஒவ்வொரு காலத்திலும் ஆடைக்கென குறிப்பிட்ட வடிவம் இருக்கும். தீர்மானம் செய்யப்பட்ட வடிவத்தை ஆடையின் அடிப்படை வடிவத்தை மாற்றாமல் வேறுபட்ட ஸ்டைலில் மாற்றி அமைக்கலாம். கிளர்ச்சி ஏற்படுத்தக் கூடியதாகவோ, இறுக்கமாகவோ, வட்டமானதாகவோ அல்லது நீளமாகவோ, ஒரு கோடு அல்லது ரேக்லான் ஆக இருந்தாலும் ஆடையின் அடிப்படை வடிவம் மாறக்கூடாது. ஆகவே ஆடை வடிவமைப்பாளர் எளிமையான ஆடையுடன் விவரங்கள் இல்லாத எல்லைக் கோடுடன் (silhoutte) கூடிய உருவடிவத்தை தேர்ந்தெடுத்து உருவாக்கி நீண்ட காலத்திற்கு பயன்படுமாறு வைத்துக் கொள்வது சிறப்பானதாகும்.

வடிவம் மற்றும் உருவம் ஆகிய இரண்டும் சில வேறுபாடுகளுடன் ஒன்றுடன் ஒன்றினை பரிமாற்றம் செய்து பயன்படுத்தப்படுகிறது. "உருவம்” என்ற சொல் பொதுவாக இரு பரிமாண பகுதிகளில் அல்லது வடிவங்களில் மற்றும் முப்பரிமாண வடிவ அளவைகளில் அல்லது மொத்த திரளாக "வடிவம்” என்று கருதப்படுகிறது. இடவெளிகளை ஒன்றாக்க கோடுகள் இணைக்கப்படும் போது, அவை எல்லைக்கோடு, மேடுபள்ள வடிவங்கள், அல்லது வடிவம் ஆகியவற்றை உருவாக்குகின்றன. இரு பரிமாண வடிவம் முப்பரிமாண வடிவத்தை பெறும்போது உருவமாக ஆகிறது. ஒரு பொருளின் உருவம் வழக்கமாக அதன் பயன்பாட்டையே குறிக்கிறது. உருவம் என்பது ஒரு சில இணைப்புகளுடன் கூடிய வரைமுறை காரணிகளால் சூழப்பட்டுள்ளது. வடிவம் என்பது அடிப்படையான ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்தக்கூடியது. கோட்டில் இருந்து உருவாக்கப்பட்ட மேடுபள்ள வடிவங்கள், ஒரு மட்ட தளத்தின் எல்லைக்கோடு அல்லது மொத்த

பகுதியின் எல்லை என்பதையும் குறிக்கலாம். ஒவ்வொரு விதத்திலும், வடிவம் என்பது குறிப்பிட்ட கோடுகள் அல்லது சமதளங்களால் சுற்றுப்புற இடவெளி அல்லது பின்பகுதி இடத்தில் இருந்து உருவத்தால் பிரிக்கப்படுவதாகும்.

அலங்காரத்தின் முக்கிய மூலக்கூறு உருவம் ஆகும். உருவத்தில் அழகின்றி, அருமையான வண்ணம், புறத்தோற்றத்தன்மையுடன் அலங்காரம் செய்யப்பட்டால், அது உபயோகமற்றதாகி விடும். ஒரு பொருள் நல்ல உருவத்துடன் இருக்க இரு இன்றியமையாத கருத்துகள் என்னவெனில்

அதன் பயன்பாட்டிற்கு பொருத்தமானதாக இருக்க வேண்டும். எந்த பொருளால் செய்யப்பட்டுள்ளதோ, அதனால் உறுதியான விளைவை ஏற்படுத்த வேண்டும்.

வடிவங்களும், உருவங்களும் மூன்று விரிவான பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கையான வடிவங்கள் உலகில் உள்ள உருவங்கள் மற்றும் நிழலுருவங்களை குறிக்கும். இந்த வடிவங்கள் வழக்கமாக எளிமையாக்கும் செயல்பாட்டின் மூலமாக சீராக்கப்படுகிறது. என்றாலும் இன்றியமையாத பண்புகளால் இயற்கை வளங்கள் தேக்கி வைக்கப்படுகின்றன. இரண்டாம் வகை வடிவம் மற்றும் உருவம் பிரித்தெடுக்கப் பட்டது (abstract) ஆகும். நமக்கு நன்கு பழக்கப்பட்ட பிற பொருட்கள் மற்றும் இயற்கையில் உள்ள பொருட்களில் இருந்தும் வடிவம் மற்றும் உருவம் பெறப்படுகிறது. என்றாலும், அவை நிராகரிக்கப்பட்டு, மிகைபடுத்தப்பட்டு, மீண்டும் நடைமுறை படுத்தப்பட்டு, சில சமயங்களில் அங்கீகாரத்திற்கு அப்பாற்பட்டு செய்யப்படுகிறது. மூன்றாம்வகை வடிவம் மற்றும் உருவம் என்பது பொருள் சார்ந்தவை அல்ல. பொருள் சார்ந்தவை அல்லாத வடிவங்களை வெளிப்படையாக எந்த குறிப்பிடப்பட்ட பொருளுடனும் ஒப்பிடமுடியாது. இந்த வகைகளுள், ஜியோமெதி உருவங்கள் மற்றும் பையோகிராபிக் வடிவங்கள் உள்ளன. சில பொருள் சார்ந்தவை அல்லாத வடிவமானது, காலிகிராபி செயல்பாட்டின் விளைவாக கிடைக்கிறது. இவை சொற்களின் பொருளை (meaning) சின்னமாகக் கொண்டிருக்கும். மற்றவை பார்வையால் கூறப்படும் ஜியோமிதி மற்றும் மறைந்துள்ள கருத்துக்களை வெளிப்படுத்தி பதில் கூறுபவை ஆகும்.

மூன்று பிரிக்கப்பட்ட மற்றும் தனித்தன்மை வாய்ந்த ஜியோமிதி வடிவத்தின் வகைகள்

நேர்கோடான சதுரம் அல்லது செவ்வகம், கோணங்கள் முக்கோணம் அல்லது கூம்புவடிவம், வளைகோடுகள் வட்டம், உருண்டை , கோளம், நீள உருளைவடிவம்

வழக்கமான உருவத்தில், வளைகோடு வடிவங்கள் என்பவை வட்டமானவை, நேர்கோடான வடிவங்களுடன் தொடர் பல்கோண கட்டங்கள் வட்டத்துக்குள் நிலையாக பொறித்து வைக்கப்பட்டவையும் அடங்கும். இவற்றுள், மிகவும் குறிப்பிடும் படியாக உள்ள ஜியோமிதி வடிவங்களுள் வட்டம், முக்கோணம் மற்றும் சதுரம் முக்கியமானவை ஆகும். இந்த அடிப்படை வடிவங்கள் முப்பரிமாணத்திற்குள் விரிவாக்கப்படும்போது உருண்டை , நீள உருளைவடிவம், கூம்பு, கோளம், போன்றவை உண்டாகியுள்ளன.

சதுரங்கள் மற்றும் செவ்வகங்கள் :

சதுர உருவம், தூய்மை மற்றும் அறிவாற்றலை குறிக்கும். பக்கங்களின் சமமான அளவும், நான்கு செங்கோணமும் சதுரத்தின் ஒழுங்குமுறையையும் தெளிவையும் ஏற்படுத்துகிறது. ஒரு சதுர வடிவத்திற்கு விரும்பத்தக்க அல்லது ஆதிக்கமுடைய திசை என்று எதுவுமில்லை. சதுரம் அதன் ஒரு பக்கத்தில் சாய்ந்து இருக்கும் போது நிலையான சாந்தமான உருவமாக உள்ளது, ஆனால் சதுரத்தின் அனைத்து ஒரங்களும் ஒரு மூலையில் சார்ந்து இருக்கும் போது சுறுசுறுப்பாக தெரிகிறது. சதுரமானது நற்பண்புகளுடன் கூடிய சக்தியாக இருக்கும், ஆனால் பிரத்யேகமாக பயன் படுத்தப்படும் போது சலிப்பூட்டக் கூடியதாகி விடுகிறது. (இதனால் தான் ஒரு சிலரை "சதுரம்” என அழைக்கிறேன்.) சதுரத்தின் அகலம்/ நீளம் சேர்க்கப்பட்டு வேறுபாடுகள் கொண்டதே செவ்வகம் என கருதப்படுகிறது. செவ்வக வடிவத்தின் தெளிவு மற்றும் நிலைப்புத்தன்மை பார்வைக்கு மாற்றமில்லாத சலிப்பை ஏற்படுத்தும். அளவுகள், பரிமாணம், வண்ணம், புறத்தோற்றதன்மை, இடத்தில் அமர்த்துதல் அல்லது புத்தாக்கம் செய்தல் மூலம் மாற்றங்களை புகுத்தி பலவகைகளை பெறமுடியும்.

முக்கோணங்கள்:

ஒற்றுமை மற்றும் சமிலையை ஏற்படுத்தும். முக்கோணம் நிலைப்புத்தன்மையை குறிக்கும். முக்கோண வடிவத்தின் செயலாற்றும் தன்மை அதன் மூன்று கோணங்களுள் உள்ள தொடர்பே ஆகும். இந்த கோணங்கள் வேறுபடலாம். முக்கோணங்கள், சதுரம், செவ்வகத்தை விட வளைந்து கொடுக்கும் தன்மை வாய்ந்தவை ஆகும். இது அனைத்தையும் விட முக்கோணத்தை வசதியாக இணைத்து பல சதுரங்கள், செவ்வகங்கள் மற்றும் பலகோண வடிவங்களை உருவாக்கலாம். கூம்பு வடிவங்கள் மற்றும் முக்கோணங்கள், செவ்வகம், சதுரங்களில் இருந்து அவற்றின் சுறுசுறுப்பான இயங்கும் பண்பு மற்றும் அதிகமாக வளைந்து கொடுக்கும் தன்மை ஆகியவற்றால் மாறுபட்டு உள்ளது.

வட்டங்கள்:

வட்ட உருவங்கள் எப்போதும் பயன்உள்ளதாகவும், நெருக்கமாகவும் இருக்கும். ஒற்றுமை, தொடர்ச்சி மற்றும் சிக்கனத்தின் உருவமாக விளங்குகிறது. வட்டம், மனிதன் மற்றும் இயற்கையின் பாதுகாக்கப்பட வேண்டியது மற்றும் சிக்கன வடிவமாக திகழ்கிறது. மேலும் வட்டத்திற்குள் அதிக அளவில் இடம் மற்றும் குறைந்த பரப்பு உள்ளது. வட்ட வடிவம் சாதாரணமாக நிலைப்புத் தன்மையுடன், அதனை மையமாக வைத்து அதன் சூழலில் இருக்கும். மற்ற பிற கோடுகள் மற்றும் வடிவங்களுடன் இணைந்து இருக்கும்போது, அசைவது போன்று வெளிப்படையாக தெரியும்.

பாங்கமைவு (Pattern)

பாங்கமைவு என்பது மேற்புறத்தில் சிறப்பான அமைப்பைச் செய்தலே ஆகும். உருவத்தில் அலங்கார அணியாக அமைக்கப்பட்ட இரு பரிமாணம் அல்லது முப்பரிமாணம் ஆகும். புறத்தோற்றத்தன்மை மற்றும் உருவங்களால் பாங்கமைவை உருவாக்க முடிவதால், தனிப்பட்டவரது பொருட்களின் வடிவங்களில் பாங்கமைவை காணலாம். பாங்கமைவிற்கு பெயர்தல் உண்டு, ஆகவே எந்த பொருளில் அழகூட்டப்பட்டுள்ளதோ, அந்த பொருளின் சலயத்திற்கு ஏற்றவாறு பாங்கமைவை அமைக்க வேண்டும்.

மொத்த அலங்காரத்தினையும் பாங்கமைவால் ஒருங்கிணைக்க முடியும்.

ஒரு ஆடையில் பயன்படுத்தியுள்ள அலங்காரிக்கப்பட்ட பாங்கமைவின் தரத்தினைக் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுவதில்லை. விலையுயர்ந்த ஆடைகளுக்கு மட்டுமே மிகச் சிறந்த வடிவமைப்பாளர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். என்றாலும், ஆடைகளில் உள்ள டிசைன்கள், மாற்றி அமைக்கப்பட்டு, அல்லது டூப்ளிகேட்டாக, அல்லது மற்றொன்றை பார்த்து செய்யப்பட்டதாக விலைமலிவான பொருட்களில் நாம் காண்கிறோம். பாங்கமைவுடன் கூடிய பொருட்கள், வீட்டினை அலங்கரிக்கும் பிற பொருட்கள், மற்றும் துணிகளை புகழ் வாய்ந்த வடிவமைப்பாளர் டிசைன் செய்ததை வாங்குவது உகந்தது. நுகர்வோரின் ரசனையை தயாரிப்பாளர்கள் எப்போதுமே குறைத்து மதிப்பிட்டு, விலைமலிந்த குறைந்த தரமான டிசைன்களை வைத்து பொருட்களை அலங்கரித்து விற்பனைக்கு கொண்டுவருவார். தரம்குறைந்த பொருட்கள் தவிர வேறு பொருட்கள் கிடைக்காத காரணத்தால் மக்கள் தரமற்ற பொருட்களை வாங்க தூண்டப்படுகிறார்கள்.

பாங்கமைவு என்பது ஆழமான மாயையை தோற்றுவித்து, ஆடையில் ஒரு பண்பை சேர்க்கிறது. பாங்கமைவு என்பது மொத்த டிசைன் ஆகும். "மோடிஃப்" என்பது பாங்கமைவின் தனிப்பட்ட ஒரு பகுதி ஆகும். மொத்த பாஸ்கமைவை தோற்றுவிக்க மோடிஃப்களை மீண்டும் மீண்டும் இடம் பெறச் செய்து, துணியில் டிசைன் உருவாக்கப்படுகிறது. இதனை முறையான டிசைன் என்று கருதலாம் ஒழுங்கான அல்லது முறையான மீண்டும் மீண்டும் மோடிஃப் இடம் பெறுதல், அல்லது முறையற்ற ஒழுங்கற்ற முறையில் மோடிஃப்கள் இடம் பெறுதல்.

பாங்கமைவுடைய துணியை தேர்ந்தெடுக்கும் போது, துணியில் டிசைன் மற்றும் வண்ணம் மிகவும் முக்கியமாகும். நீலம் மற்றும் பிங்க், பர்ப்பிள்கள், மாவ்கள் (mauves) மற்றும் ஆப்ரிகாட்கள் முதல் பைஸ்லியின் அடர் நீலம் வரை, ஆழ்ந்த மெஜந்தா மற்றும் எரிக்கப்பட்ட ஆரஞ்ச், மற்றும் வண்ண புள்ளிகள் மற்றும் கோடுகள் போன்ற பாங்கமைவுகள் உள்ளன. ப்ளீட்கள் வைக்கப்பட வேண்டியது.

தொங்கவிடல்களில் அமைக்க வேண்டிய சுருக்கங்கள்

திரைச்சீலைகள், போன்றவற்றிற்கு துணிகள் வாங்கும் போது துணிகளை அவற்றின் பாஸ்கமைவு எவ்வாறு அமையும் என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும். ஒரு சில டிசைன்கள், ப்ளீட்கள், சுருக்கங்களில் பயன்படுத்தப்படும் போது உயிர் பெறுகின்றன. ஆனால் மற்ற சில பாங்கமைவுகள் அதன் தாக்கத்தை இழக்கின்றன.

இடம் வடிவங்களுக்கு இடையே தோன்றும் பரப்பே பொதுவாக இடம் என்று கருதப்படுகிறது. ஆடையில் அதிக இடவெளி இருந்தாலும், இடவெளி இன்றி வடிவமைப்புகள் அதிகம் இருந்தாலும் பார்ப்பதற்கு கவர்ச்சியின்றி சலிப்பை ஏற்படுத்தும், ஒரு ஆடையில் கோடுகள் அமைந்து இருந்தால் பிறர் பார்வையை கவர்ந்து இழுக்கும். வளைந்த கோடுகள் இயற்கையாகவே மனித உடலுடன் அதிக தொடர்புடையன. செங்குத்தான கோடுகள் உடலை மெலிவாக தோன்றச் செய்யும் தன்மை வாய்ந்தவை. மட்டக் கோடுகள் அகலத்தை குறிக்கும் திறன் வாய்ந்தவை. கோடு, வடிவம், இடம், அல்லது உருவம், ஆகியன மறுபடியும் இடம் பெற்றாலோ அல்லது அதிக வித்தியாசத்தை ஏற்படுத்தினாலோ அவசியம் கவனிக்க வேண்டிய முக்கியத்துவத்தை (emphasis) பெறும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.66666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top