பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடைகளை வடிவமைத்தல் - பகுதி 2

ஆடைகளை வடிவமைத்தல் குறித்து இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

வண்ணம்

வண்ணம் என்பது எவராலும் நிராகரிக்க முடியாத ஒரு முக்கிய கலை மூலக்கூறு ஆகும். வண்ணத்தினை உணர்ந்து பாராட்டுதல் என்பது மனவெழுச்சி சார்ந்த செயல்பாடு, அனைவராலும் உணர கூடியது; ஆனால் பிற கலை மூலக்கூறுகளான கோடு, உருவம், புறத்தோற்றத்தன்மை போன்றவை பாராட்டப்படுதல் சாதாரணமானதல்ல என்பதும், அறிவுத்திறன் சார்ந்தது என்பதும் விளங்கும். வண்ணம், உலகளவில் மனமகிழ்ச்சி ஏற்படுத்தக் கூடிய ஒரு ஆதாரப் பொருளாகும். வண்ணம் அனைவராலும் மகிழ்ச்சி ஏற்படுவதற்காக பயன்படுத்தப்படுகிறது. மற்றும் மனிதர்கள் வாழும் சூழலில் வண்ணம் அதன் ஊக்கப்படுத்தும் விளைவினால் செறிவூட்டப்படுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த உலகம் மங்கிய, சாம்பல் நிறம் முதல் வலுவான ஒளிமயமான நிறம் வரை, ஒளிமிக்க நிறம் போன்றவைகளால் நிரபப்பட்டுள்ளன. நாம் அனைத்து நிறங்களின் பெயர்களையும் துல்லியமாக தெரிந்து கொண்டு நினைவில் வைப்பது என்பது கடினமான செயலாகும். நிறம், மதிப்பு, ஆழ்ந்த செறிவு ஆகியன வண்ணத்தின் பரிமாணங்கள் ஆகும். இந்த சொற்களை பயன் படுத்தி வண்ணத்தின் பரிமாணங்களை செயல்படுத்தலாம். நிறம் என்பது சிவப்பு, நீலம் அல்லது பச்சை வண்ணக் குடும்பப் பெயர் ஆகும். நிறம் என்ற சொல் அதிக அளவில் வண்ணம் என்ற சொல்லுக்கு மாற்றாக பயன்படுத்தப்படுகிறது.

நெசவின் நயம் என்பது தொட்டு உணர்வது, துணி மற்றும் விரைப்புத் தன்மையின் அளவு, துணியின் மென்மை ஆகியன, நெசவின் நயம் அணிந்திருப்பவர் மீது பிறரது கவனத்தை கவர்ந்து பார்க்கச் செய்யும். துணியின் சிறய மாதிரித் துண்டை வடிவமைப்பாளர் பார்வையிட்டு, நெசவின் தன்மை மற்றும் துணியினை பற்றி மேலும் அறிந்து கொண்டால் வடிவமைப்பதற்கு பேருதவியாக இருக்கும்.

ஒரு மனிதன் மீது முதல் அபிப்ராயத்தை வண்ணம் ஏற்படுத்துவதால் வண்ணத்தை தேர்வு செய்யும் போது மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். ஒருவரது தோற்றத்தை வண்ணம் மேன்மை படுத்தும் அல்லது எதிர்மறையான பாதிப்பையும் ஏற்படுத்தும் தன்மையை பெற்றுள்ளது. மிக எளிய ஆடையில் தகுந்த வண்ணங்களை பயன்படுத்தும்பொழுது, சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தும்.

வெப்பமான மற்றும் குளிர் நிறங்கள்

நிறங்கள் வெப்பமானவை மற்றும் குளிர்ச்சியானவை என்று வரையறுக்கப்பட்டுள்ளன. நெருப்பில் தோன்றும் நிறங்கள் யாவும் வெப்பமான நிறங்கள். அவை சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு ஆகும். குளிர்ச்சியான நிறங்கள் என்பன வானம் மற்றம் நீரின் நிறம், பச்சை, நீலம், வயலட் ஆகியனவாகும். நிறத்தின் வெப்பம் அல்லது குளிர்ச்சி என்பது அதனுடன் உள்ள மாயையாக தோற்றம் அளிக்கும் உயரமாகும். வெப்பமான நிறங்களான மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகியன மேன்மையான நிறங்கள் எனக் கூறப்படுகின்றன. ஏனெனில் அவை முன்னோக்கி நகரும் மாயையை உருவாக்குகின்றன. வெப்பமான நிறங்கள் பொருட்கள், வடிவங்கள் அல்லது இடங்கள் பெரியதாக தோற்றமளிக்கவும், அதிக முக்கியத்துவம் வாய்ந்ததும், மற்ற பிற நிறங்களை விட நெருக்கமானதாகவும் இருக்கும். உடல் அளவு மற்றும் உடல் மேடுபள்ள வடிவங்களுக்கு அதிகமான அழுத்தத்தை வெப்பமான நிறங்கள் கொடுக்கின்றன. குளிர்நிறங்கள் பொருட்கள், வடிவங்கள் அல்லது இடங்களை சிறியதாக தோன்றச் செய்யும். முக்கியத்துவம் அல்லாத மற்றும் பிற நிறங்களில் இருந்து சற்று அகன்று இருக்குமாறு தோன்றச் செய்யும். குளிர்நிறங்கள் உடல் அளவுகள் மற்றும் வடிவத்தை சிறிதாகக் காட்டும்.

மதிப்பு என்பது ஒரு வண்ணத்தை வெளிறியதாகவோ அல்லது அடர்வானதாகவோ தெரியுமாறு விவரிக்கும். ஒரு வண்ணத்தின் மதிப்பை மாற்றுவதற்கு வெள்ளை அல்லது கருப்புநிறம் சேர்க்கப்பட்டு, வண்ணத்தை வெளிறுமாறோ அல்லது அடர்வுமிக்கதாகவோ மாற்றம் பெறச் செய்கிறது.

உடல் அளவு மற்றும் உருவம் தொடர்புடைய மதிப்பு

ஆடை தேர்வு செய்வதில் மதிப்பை பயன்படுத்துவது மிகவும் முக்கியம். இதன் மூலம் பிரமிப்புமிக்கதாக கருத்தைக் கவரும் விளைவுகள் மற்றும் அறிவு சார்ந்த உடல் அங்கங்களை மறைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. மதிப்பின் உச்ச அளவு வெளிறிய அல்லது அடர்வு மிகுந்த அல்லது மிகக்குறைந்த மதிப்புகள், பொருட்களின் வடிவங்கள் அல்லது பகுதிகளின் வெளிப்புற எல்லைகோட்டை குறிக்கும். மற்றும் உடலில் உள்ள மேடு பள்ள வளைவு நெளிவுகளை வெளிப்படுத்தும். குறிப்பாக, வெளிச்சம் மிகுந்த பகல் நேரங்களில், வெள்ளை நிறம் வெளிரிய மதிப்புடையது, கருப்பு நிறம் அடர்வு மிகுந்த மதிப்புடையது. வெள்ளை மற்றும் கருப்பு உடைகள் பொதுவாக உறுதியான எதிர்மறை மதிப்புகளை அளிக்கும். பகல் நேர வெளிச்சத்தை விட இரவு நேர வெளிச்சத்தின் மதிப்பு குறைவதால் வழக்கமாக அடர்வு மிகுந்த மதிப்பு மிக்க ஆடைகளை மாலையில் அணிவது பின்னணி சூழலில் ஒன்றாய் சேர்ந்து விடும். உடல் உருவத்தை வெளிப்படுத்த விரும்பாதவர்களுக்கு, நிறத்தின் மதிப்பின் விளைவுகளை பின்னணி சூழலில் எதிரிடை ஆக்குவது மிகவும் முக்கியம்.

குரோமா நிறங்கள் அல்லது அடர்வு: குரோமா என்பது நிறத்தின் தூய்மையை விவரிக்கும். குரோமா நிறத்தின் மதிப்பு உறுதியான மற்றும் வலிமையற்ற, ஒளிமயமான மற்றும் மங்கிய அல்லது செறிவு நிலை அளவின் படி வெளிப்படுத்தப்படுகிறது. நிறம் மற்றும் அடர்வை எப்பொழுதும் மாற்ற முடியாது ஆனால் குரோமா என்பது மிகவும் நுட்பமான சொல். ஆகையால் இவை நிற இலக்கியத்தில், அதிகமுறை பயன்படுத்தப்படுகிறது. உயர்தர குரோமா நிறங்கள் தூய்மையான, வலிமையான, ஒளிமிக்க, செறிவுநிலை நிறங்களாகும். குறைந்த மதிப்புடைய குரோமா நிறங்கள் அமைதியான, வலிமையற்ற, மங்கலாக ஒளியற்று இருக்கும். ஒளிமிகுந்த உறுதியான, உயர்தர குரோமா நிறங்கள், முனைப்பானவை மற்றும் உடலை பெரிய உருவமாக தோன்றச் செய்யும். மங்கலான. வலிமையற்ற, குறைந்த குரோமோ நிறங்கள் முனைப்பற்றவை, இவை உடல் உருவத்தை சிறியதாக தோன்றச் செய்யும்.

புறத்தோற்றத் தன்மை

இது டிசைனின் மூலக்கூறு ஆகும். மேற்புறத் தோற்றத்தையும், உணர்வையும், விவரிக்கும். ஒருவர் அணிந்திருக்கும் ஆடையுடன் புறத்தோற்றத்தன்மை ஒப்பிடப்படுகிறது. மேலும் மற்ற பிற புறத்தோற்றத்தன்மை வேறு நூலின் நயம் இணைக்கப்பட்டதுடன் ஒப்பிட்டு பார்க்கப்படுகிறது. மென்மையான, கனமான, மெலிதான மொறுமொறுப்பான, பளபளப்பான, சொரசொரப்பான போன்றவை புறத்தோற்றத் தன்மைகளை விவரிக்க பயன்படும் வேறு சில சொற்கள் ஆகும். புறத்தோற்றதன்மை இயக்க விதிகளை புரிந்துகொள்வதால் தனிபட்ட நுகர்வோர்கள் மற்றும் நாகரீக ஆடை தயாரிப்பு வல்லுநர்கள் ஆடைக்கான பொருட்கள் வாங்கும் போதும், சொந்த அலங்கரிப்புக்கான பொருட்கள் வாங்கும்போதும் சிறப்பான தீர்மானங்களை எடுப்பார்கள்.

புறத்தோற்றத்தன்மை ஒரு உணர்வு பூர்வமான எண்ணம்:

சொரசொரப்பு, மென்மை அல்லது நிலையுடன் உறுதியாக தொடுதல் உணர்வின் மூலம் அறிதல் ஆகியன துணியின் தரத்தினை குறிக்கும். புறத்தோற்றத்தன்மை என்பது பொருட்களின் மேற்புற தரங்களை குறிக்கும். புறத்தோற்றத் தன்மையின் பார்வை தோற்றம் என்பது கண்களால் பெறப்படுவது. ஏனெனில், பொருளின் மேற்பரப்பில் வெளிச்சம் உறிஞ்சப்படுதல் அளவுபடி பிரதிபலிக்கும் அளவையும் சார்ந்து உள்ளது.

புறத்தோற்றத்தன்மையை எப்போதும் தொடு உணர்வும் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, ஆனால் ஒரு பொருளின் தரத்தினை உணர்வு மூலம் அறிய வேண்டிய அவசியம் இல்லை. சாட்டீன்களில் பளபளப்பான புறத்தோற்றத்தையும், கம்பளியில் மங்கலான புறத்தோற்றத்தையும் காணலாம். எடை அளவு, பருமன், வடிவம் போன்ற பரிமாணங்களை புறத்தோற்றத் தன்மை கொண்டுள்ளது. வெளிப்புற பரிமாணங்களை கண்களாலும் பெற முடியும். ஒவ்வொரு துணிக்கும் உணர்தல், பார்த்தல் அல்லது உணர்தலும், பார்த்தலும் போன்ற புறத் தோற்றத் தன்மை வாய்ந்த பண்புகள் உள்ளன.

உணர்தல் - மென்மையான - மொறுமொறுப்பான, வழுவழுப்பான - சொரசொரப்பான பார்த்தல் - பளபளப்பான - மங்கலான, கண்ணுக்குப்புலப் படாத - ஊடுருவி பார்க்கக்கூடிய லேசான

உணர்தல் மற்றும் பார்த்தல் - கனமான - மெல்லிய, பற்றிக் கொள்ளும் - திடமான.

புறத்தோற்றத்தன்மையை தீர்மானிக்கும் ஆக்கக் கூறுகள்:

ஆக்கக்கூறு பகுதிகளை துணியில் சீராக அமைத்தலின் மூலம் புறத்தோற்ற தன்மை தீர்மானிக்கப்படுகிறது. நூலிழை, முறுக்கிழை, மற்றும் துணி உருவாக்கும் முறை ஆகியவை ஆக்கக்கூறுகள் ஆகும். (உம்) நெசவு அல்லது பின்னப்படுதல் மற்றும் துணியை நிறைவு செய்தல். நாரிழைகள் நூலிழைகளாக நெய்யப்பட்டு, பல்வேறு புறத்தோற்றத்தன்மைகள் கொண்ட துணிகளை உருவாக்க பயன்படுகின்றன. துணி உருவாக்கப்பட்ட பின் கொடுக்கப்படும் நிறைவு புறத்தோற்றத்தன்மை மற்றும் பிற குணங்களை துணியில் ஏற்படுத்தும். துணியை எவ்வாறு பயன்படுத்தவேண்டும் என்பதை புறத்தோற்றம் தீர்மானிக்கிறது. துணியின் புறத்தோற்ற பண்புகளை ஒத்திராத ஆடை டிசைன்கள் திருப்திகரமாக இருக்காது.

புறத்தோற்றத்தன்மையில் நாகரீகம்:

நாகரீகத்தில் Silhouetteகள் மற்றும் நிறங்கள் வந்து, போய் கொண்டிருக்கும். ஒரு ஆடையின் ஸ்டைல் எவ்வகை புறத்தோற்றம் பயன்படுத்த வேண்டும் என்பதை தீர்மானிக்கும் தையலாடைகள் சரியான கச்சிதமான பொருத்தத்திற்காக வெட்டி தைக்கப்படுகிறது. தொங்கவிடுதலில் தளர்வான மடிப்புகளுடன் அமைக்க வேண்டும். கொடுக்கப்பட்ட கோடுகளில் அல்லது தளர்வான மடிப்புகளில் தொங்கவிடும் திறனே தொங்குதலாகும். ஏனெனில், புறத்தோற்றமும் ஆடை ஸ்டைலும் இணை ஒத்தவையாகும். புறத்தோற்றத்தன்மை மற்றும் ஆடை டிசைன்கள் நாகரீகத்திற்காக மீண்டும் மீண்டும் இடைவெளிவிட்டு தோன்றுவது ஆகும்.

புறத்தோற்றத்தன்மையை தேர்ந்தெடுத்தல்:

ஒருவரது உடற்கூறு விகிதம், தோல், தலைமுடியின் புறத்தோற்றம் மற்றும் ஆளுமையைக் கருத்தில்கொண்டு புறத்தோற்ற தன்மையை தேர்வு செய்ய வேண்டும்.

உடற்கூறு விகிதத்தில் புறத்தோற்றத்தன்மையின் விளைவு:

புறத்தோற்ற தன்மையில் ஒருவரது பண்புகளான எடை அளவு, பருமன், வடிவம், ஒளி உறிஞ்சுதல், மற்றும் பிரதிபலிப்பு போன்றவை அடங்கியுள்ளன. புறத்தோற்றம் மாயையை ஏற்படுத்தும், அதனால் உடல் அளவு விசிதத்தில் மாற்றம் ஏற்படுத்தி பருமனாகவோ, மெலிந்தவராகவோ காட்டலாம்.

நாகரீக தொழில் வல்லுநர்கள் மற்றும் நுகர்வோர், துணியின் புறத்தோற்றம் ஆடையின் டிசைன் ஆகியவற்றின் இயக்கத்தினை கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் துணியை தேர்ந்தெடுப்பவரது உடல், மனம் மற்றும் சமூகபண்புகள் பற்றி அறிந்திருத்தல் அவசியம்.

ஆடை வடிவமைப்பின் நியதிகள்

துணிகளில் டிசைன்களை தேர்வு செய்து வாங்கும் பொழுதோ அல்லது உருவாக்கும் போதும் வழக்கமாக ஆடை வடிவமைப்பின் நியதிகள் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு ஆடைகளை தேர்வு செய்யும்போது மட்டும் வடிவமைப்பு நியதிகள் உதவுவது இல்லை ஆனால் பல்வேறு ஆடைகளையும், அதனை சார்ந்த பொருளை ஒருங்கிணைத்து முழுமையான பொருத்தமான ஆடையாகும் போது வடிவமைப்பின் நியதிகள் உதவியாக உள்ளது. வெவ்வேறு வகையான வடிவமைப்புகளை கலைநயத்தோடு உருவாக்கி நேர்த்தியாக வெளிப்படுத்தி பார்வையாளர்களை கவரும்படி அமைக்க ஆடை வடிவமைப்பு நியதிகள் பயன்படுகிறது. ஆடை வடிவமைப்பு நியதிகள் பின்வருவன.

* சமநிலை ,

* அழுத்திக் காட்டுதல்,

*லயம்,

*சரியான அமைப்பு,

* இயற்கையான இணைப்பு.

சமநிலை

ஆடை வடிவமைப்பில் சமநிலை என்பது ஒரு மையப் பகுதியிலிருந்து பார்வையை செலுத்தும் போது சமமாக தோன்றுவது ஆகும். சமநிலை என்பது வடிவமைப்பு விவரங்களை துல்லியமாக ஒருமுகப்படுத்தி சமமான எடை அல்லது ஈர்க்கும் உணர்வை ஏற்படுத்தி ஒரு பக்கத்தில் இருந்து மற்றொரு பக்கத்திற்கும், முன் பகுதியிலிருந்து பின் பகுதிக்கும் அல்லது மேல் பகுதியிலிருந்து கீழ் பகுதி வரை சீராக இருக்கும்படி சரிபடுத்தி, ஆடையை அணிபவர்களுக்கு வசதியாக, இதமாக இருக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகும். உகந்த சமநிலையில் அனைத்து வடிவமைப்பு பகுதிகளும் ஒருங்கிணைக்கப்பட்டு திருப்திகரமான ஒற்றுமையை பார்வையில் ஏற்படுத்தும். ஆடை வடிவமைப்பில் 3 விதமான சமநிலைகள் உள்ளன.

வடிவமைப்பு மூலக்கூறுகளான, கோடு, உருவம், வடிவம், இடவெளி, வண்ணம் மற்றும் புறத்தோற்றத்தன்மை ஆகியன சமநிலையில் இருந்தால், மனதுக்கு பிடித்தமான லயத்தை ஏற்படுத்தி விடலாம். ஆடை வடிவமைப்பதில், மூன்று வகையான சமநிலையை காணமுடிகிறது.

* முறையான சமநிலை இது சிமெட்ரிகல் சமநிலை அல்லது பைலேட்ரல் சமநிலை என்றும் அழைக்கப்படும்.

*முறைப்படியில்லாத சமநிலை இது ஏசி மெட்ரிக்கல் சமநிலை அல்லது அக்கல்ட் சமநிலை என்று அழைக்கப்படுகிறது.

*ஆரங்களினால் சமநிலை

முறையான சமநிலை (Formal Balance) :

ஒரு பொருள் மத்திய பகுதியில் இருந்து சமதூரத்தில் வரிசைப்படுத்தப் பட்டிருந்தாலும், மறுபடியும் தோன்றி ஒன்றோடொன்று சமமாக்கப்பட்டு இருந்தாலும் முறைமையான சமநிலை உருவாகும். வடிவமைப்பின் மேல் மற்றும் கீழ் பகுதிகள் சமநிலை ஏற்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆகவே, கீழ்பகுதியில் அதிக எடை இருப்பது போன்ற தோற்றம் ஏற்படாதவாறு கவனித்துக் கொள்ள வேண்டும். உதாரணம் அடர்வு நிற மேல் சட்டை அணிந்து, வெளிர் நிற கால் சட்டை அணிந்தால், ஒரு மனிதன் அவனது உயரத்தை விட அதிக குள்ளமான தோற்றத்தோடு காட்சியளிப்பான். ஆடைகளில் முறையான சமநிலையில் அதிகமான உதாரணங்கள் உள்ளன. டிசைனை உருவாக்கும் பகுதிகளை பொருத்தும் இடஅமைப்பில் சமநிலைப்படுத்தப்படும் போது முறையான சம நிலை டிசைன்கள் நிலைப்புத்தன்மையை ஏற்படுத்தும் அபிப்ராயத்தை உருவாக்கும். உடைகளில் முறையான சமநிலை, உடலில் உள்ள குறைபாடுகளை அழுத்திக் காட்டுகிறது.

முறைப்படியில்லாத சமநிலை Informal Balance) :

மீண்டும் செய்தல் மூலம் இல்லாமல், ஒழுங்கற்ற முறையில் பொருட்கள் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொருட்கள் ஒன்றை ஒன்று சமன்படுத்துவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவது முறைப்படியில்லாத சமநிலை.

இம்முறையில் வடிவங்கள் பல்வேறு அளவுகளில், வடிவங்கள் மற்றும் பல்வேறு விதங்களில் கவர்வது போல் அமைக்கப்பட்டிருக்கும். மிகப்பெரிய கவர்ச்சியான வடிவமைப்புகள் மத்திய பகுதியில் இருந்து தொலைவில் வைக்கப்பட்டு இருக்கும். முறைப்படியில்லாத வடிவமைப்புகள் சரியான முறையில் கையாளப்பட்டால், அதன் ஈர்ப்பு தன்மை மிகவும் சிறப்பான விளைவை ஏற்படுத்தும்.

ஆடை வடிவமைப்பாளருக்கு அவர் நினைத்ததை வெளிப்படுத்தும் சுதந்திரத்தை முறைப்படியில்லாத சமநிலை கொடுக்கிறது. ஒரு உடையில் பாடிஸ் பகுதி முறைப்படியான

சமநிலை ஆகவும், ஸ்கர்ட் டிசைன் முறைப்படியல்லாத சமநிலையாகவும் இருக்கும் போது ஏற்படுகிறது. இது போன்று அமைக்கப்படும் போது லயம் மற்றும் பிற பகுதிகளுடன் உள்ள தொடர்பும் இல்லாது போகின்றது. இரு எதிரான விளைவுகளை கொண்ட வெவ்வேறு பகுதிகளை இணைக்கும் போது, டிசைனின் கலவையானது உகந்ததாக தோன்றும்.

ஆரங்களினால் சமநிலை (Radial balance)

வடிவமைப்பின் முக்கிய பாங்கள் மத்திய பகுதியில் இருந்து பரவச் செய்வதால் ஏற்படுவதே ஆரங்களின் சமநிலை. முறைமையான சமநிலையில் அதிக அளவில் மொத்தமாக ஆடைகளை குறைந்த செலவில் உற்பத்தி செய்யலாம். முறைப்படியில்லாத சமநிலையில் ஆடைகளை உற்பத்தி செய்வது மிகவும் கடினம். ஆடையின் ஒவ்வொரு பாகத்திற்கும் வெட்டுவதை பல்வேறு விதங்களில் கையாள வேண்டும். மத்திய புள்ளியை கூடும் புள்ளியாக ஆரங்களினால் ஏற்படும் சமநிலையில் பயன்படுகிறது. பிளீட்ஸ், இணைப்பு பகுதிகள், சுருக்கங்கள், பார்ட்கள், மோடிஃப்கள் கூடும் புள்ளியில் இருந்து பரவி சூரிய கதிர்கள் பரவும் விளைவை ஏற்படுத்துகிறது.

அழுத்திக்காட்டல்

ஒரு பாகத்தின் ஆதிக்கத்தை அதனுடன் தொடர்புடைய பாகங்களை தொகுத்து செய்வதைக் குறிக்கும். ஒரு நல்ல வடிவமைப்பு என்பது அனைவரது கவனத்தையும், ஈர்க்கக்கூடியதாகவும், ஏனைய பொருட்கள் அந்த வடிவமைப்புக்கு துணையாகவும் இருக்கும். வடிவமைப்பாளர்கள் மாறான கோடு, நயம், வண்ணம் ஆகியவற்றை கவனமாக பயன்படுத்துவதன் மூலம் அழுத்திக்காட்டி கவனத்தை ஈர்க்கலாம். இதனை மையப்புள்ளி பகுதி (Focal point) என்று கூறலாம். ஒரு உடையின் குறிப்பிட்ட பகுதியை பார்த்து ஈர்க்கும் விதத்தில் ஒவ்வொரு வடிவமைப்பும் அமையப் பெற்றிருப்பது அவசியம். வித்தியாசனமான வண்ணத்தை ஒரு பகுதியில் பயன்படுத்தி அழுத்திக் காட்டலாம். வெள்ளைநிற கழுத்து காலர் மற்றும் கஃப்கள் கொண்ட கருப்பு நிற உடை அணிந்திருப்பவரின் கைகள் மற்றும் முகத்தை பார்க்குமாறு பார்வையாளரின் கவனம் ஈர்க்கப்படும்.

அழுத்திக் காட்டுவதற்கான சில வழிமுறைகள்

*வடிவமைப்பு பொருட்களை கொடுத்து வைத்தல்,

*சார்பற்ற நிறங்களை உபயோகித்தல்,

*வழக்கமான கோடுகள்,

* மேற்கூறியவைகளை இணைத்து பயன்படுத்துதல்,

*டக்குகள், சுருக்கங்கள் பொத்தான்கள் முதலியவைகளை மீண்டும் பயன்படுத்துதல்,

* அசாதாரண உருவங்கள் மற்றும் நயங்கள்,

*வடிவமைப்புகளுக்குத் தெளிவான பின்புறம் அமைத்தல்.

கவனத்தை ஈர்க்கும் மையப் பகுதியில் கவனம் செலுத்தி வடிவமைப்பாளர் உடை அணிபவரின் உருவம் மற்றும் ஆளுமைக்கு தகுந்தவாறு சிறப்பாக வடிவமைக்கலாம்.

மீண்டும் மீண்டும் வருதல் அல்லது கூர்ந்து நோக்குதல் மூலமாக அழுத்திக்காட்டலை பெறலாம். எதிரிடையான பின்னணி சூழலில் அலங்கரிப்பது.

லயம்

லயம் என்பது சிறிது வித்தியாசத்துடன் அல்லது பல்வேறு வடிவத்தில் வடிவமைப்புகளை ஒன்றிணைந்து சலிப்பை ஏற்படுத்தாதவாறு அமைப்பது ஆகும். விகிதம், சமநிலை, இணைப்பு, அழுத்திக் காட்டல் ஆகியவற்றின் கோட்பாடுகள் ஒழுங்கான முறையில் பயன்படுத்தப்படுமே யானால், இறுதியாக வடிவமைப்பில் லயத்தை பெறலாம். முதலில் உடையின் பல்வேறு பாகங்களை (கை, பாவாடை கழுத்துப்பட்டி போன்றவை) வடிவத்தின் ஸ்டைலுக்கு தகுந்தவாறு உருவாக்கி ஒவ்வொரு பகுதியும் மற்றொன்றுடன் லயத்துடன் அமைக்கப் பெற வேண்டும்.

விகிதம் அல்லது பிரதியளவு

சரியான விகிதம் என்பது ஒரு உடையில் உள்ள பல்வேறு வடிவமைப்பு விவரங்களின் அளவுகளுக்கும், உடையில் உள்ள பிற விவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பாகும்.

விகிதம் என்பது உயரம், அகலம், ஆழம், மற்றும் ஒவ்வொரு டிசைனை சுற்றியுள்ள இடவெளிக்கு உண்டான தொடர்பையும் கொண்டுள்ளது. விகிதங்களில் உள்ள வேறுபாடுகள் டிசைன்களை மற்றொன்றில் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. (உம்) 5 செவ்வகங்களின் விகிதங்களை கவனி. படம் (1-5) எது நீளமானது? எது அகலமானது? ஒரு ஆடைக்கான இடவெளியை பிரித்தல் மூலம் மிகவும் ஒல்லியான மாயை தோற்றத்தை எது அளிக்கும்? எது உயரமானது? எது குட்டையானது?

1 ஆடையின் வடிவத்தில் வெயிஸ்ட்லைன் இல்லை, ஷிப்ட் போன்று.

2 ஆடை வடிவம் எம்ப்பயர் லைனை குறிக்கும், உயரமான வெயிஸ்ட்லைனை பஸ்ட்டின் கீழ் கொண்டுள்ளது.

3. இயற்கையான வெயிஸ்ட்லைனை குறிக்கிறது, முதல்தர சர்டிரஸ், வெயிஸ்ட்நீள ஜாக்கெட் மற்றும் ஸ்கர்ட்

4 வெயிஸ்ட்லைன் ஹிப் அளவிற்கு இறங்கிவிட்டதை குறிக்கிறது, ஜாக்கெட் மற்றும் சரிஅளவுநீள பகுதியை கொண்டுள்ளது.

5. நீள ஜாக்கெட்டையும், குட்டை பாவாடையையும் குறிக்கிறது, ஸ்கர்ட்மேல் 3/4 நீள கோட்டு மற்றும் நீள தளர்வான உட்சட்டை.

இடப்பகுதியின் கிரேக்க விதி:

2:3 விகிதத்தில் ஒரு இடம் பகுக்கப்பட்டால் கண்களுக்கு மிகவும் திருப்திகரமாக அமையும், உதாரணம், ஒரு உடையில் பாடி நீளத்துடன் ஸ்கர்ட் நீள விகிதம் 2:3 என்றும், யோக் நீளத்துடன் பாடிநீள விகிதமும் சமமாக இருக்க வேண்டும். பாக்கெட்கள் பாடியில் மற்றும் ஸ்கர்ட்களிலும் சமமான விகிதத்தில் இருத்தல் அவசியம்.

பிரதியளவு

உடைக்கும், உடையில் உள்ள விவரங்களான பார்ட்கள், மடிப்புகள், சித்திரக்கலை போன்றவைகளின் தொடர்பை குறிக்கும் மற்றும் உடையை உடுப்பவர்க்கும், உடைக்கும் உள்ள தொடர்பைக் குறிக்கும். உதாரணம், பெரிய அளவில் அப்ளிக், மோட்டிஃப்கள் சிறிய உடையில் அமைப்பது என்பது பிரிதியளவு கோட்பாட்டை மீறுவதாகும்.

இணைப்பு

இணைப்பு என்பது கண்களின் பார்வை தடையின்றி வடிவமைப்பின் ஒரு தொகுதியில் இருந்து மற்றொரு தொகுதிக்கு சுலபமாக இயங்குவது ஆகும். ஆகவே இணைப்பு உருவடிவம் உடையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். முறையான வடிவங்கள் மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல் மற்றும் அலங்காரதர வேலைப்பாடுகளான டக்குகள், மடிப்புகள், ஸ்கேலங்கள் (scallops) பொத்தான் போன்றவை மூலமாக இணைப்பை பெற முடியும். அளவுகளின் ஏறுவரிசை அமைப்பும் இணைப்பை ஏற்படுத்தும். இவ்வகை சில சமயத்தில் குறை இணைப்பாக கூறப்படுகிறது.

கோடுகள், வடிவங்கள், வண்ணம் மற்றும் நயங்கள் ஆகியவற்றை இணைத்து இணைப்பை பெற்று வடிவமைப்பை பின்வருமாறு பெறலாம்.

*ஒழுங்கான கத்தரித்தல், நமயம், துணியில் வடிவமைப்பு மற்றும் அச்சக்களை மீண்டும், மீண்டும் பயன்படுத்துதல்.

*கத்தரித்தல், வண்ணங்கள், நயங்கள் மற்றும் துணி வடிவமைப்பில் முன்னேற்ற போக்கு அல்லது பரவச் செய்தல். *பரவச் செய்தல் அல்லது மையப் புள்ளியில் இருந்து பல திசை நோக்கிச் செல்லுதல் வடிவமைப்பில் வேலைப்பாடுகளான சுருக்கங்கள், மடிப்புகள், டக்குகள், டார்ட்கள் போன்றவற்றில் ஏற்படுத்துதல்.

*கோடுகள் தொடர்ச்சியாக வண்ணப்பட்டைகள், நயங்களில் மற்றும் துணி வடிவமைப்புகளில் காணப்படுதல்.

துணி டிசைனில் அகலமான இடைவெளியில் மோடிகள் பொருத்தப் படும்போது இணைப்பு இல்லாது போய் விடுகிறது. துணி வெட்டும் முன், ஆடை உருவாகும் முன் இந்த டிசைன்கள் நுணுக்கமாக மதிப்பீடு செய்யப்படவேண்டும் ஆடை டிசைன், துணியில் உள்ள டிசைனில் தடைகளை ஏற்படுத்தி, பல சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும்.

ஆடை தேர்ந்தெடுத்தல், தொடர்புடைய சிறு இணைப்புகள், தலைமுடி ஸ்டையில், முக அமைப்பில் சிறு திருத்தங்கள் செய்தல் போன்ற அனைத்திலும் மாற்றம் செய்து, ஒவ்வொரு நுகர்வோர் மற்றும், நகாரீக தொழில் வல்லுனர்கள் சிறந்த வடிவமைப்பாளராக, கலையுணர்வு மிக்க ஆடைகளை உருவாக்குகின்றனர்.

ஆடைகளை டிசைன் செய்வதற்கான குறிப்புகள்

அடிப்படை டிசைன் மூலக்கூறுகளான வண்ணம், கோடு, புறத் தோற்றத்தன்மை, வடிவம் மற்றும் உருவத்தை இணைத்து அழகான, ஆர்வமான, அமைதியான விளைவுகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு ஒருவர் கலை மற்றும் கலை மூலக்கூறு கோட்பாடுகளான லயம், விகிதம், சமநிலை, இணைப்பு, அழுத்திக்காட்டல் பற்றி அறிந்திருப்பது அவசியம் ஆகும். இந்தக் கோட்பாடுள் நல்ல ரசனை மிகுந்த டிசைன்களை உருவாக்கவும், டிசைன்களை நுட்பமாக மதிப்பீடு செய்யவும் உதவுகிறது.

ரசனை, கற்பனை, மற்றும் திறமையை வளர்த்து, பயன்படுத்தி எவ்வாறு டிசைன்களை உருவாக்குவாய்? முதலாவதாக, பேஷன் பத்திரிக்கைகள், பழங்கால நாகரீக உடைகள் படம் கொண்ட புத்தகங்கள், தேசிய மற்றும் எளியோரது உடைகள் படம் கொண்ட புத்தகங்கள்,

மலைவாழ் மக்களின் உடைகளின் படங்கள் கொண்ட புத்தகங்களை பார்வையிட்டு அந்த டிசைன்களை சேகரித்து அது பற்றிய எண்ணங்களை உருவாக்க வேண்டும். அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள அணிகலன்கள், பிரசித்திபெற்ற படங்களில் உள்ள மக்களின் ஆடைகள் மற்றும் தற்போதைய ஆயத்த ஆடைகளின் ஸ்டைல்கள் கடையில் வைக்கப்பட்டுள்ளதை கவனித்தும், சினிமா படக்காட்சிகளில், பார்டிகளில், கடைகளில், விழாக்களில் நன்கு உடையணிந்தவர்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும். உன்னிப்பாக கவனித்தல் நமது கண்களுக்கு சாதாரண டிசைன்களில் இருந்து தனித்தன்மை வாய்ந்த டிசைன்களை வேறுடுத்தவும், நல்ல டிசைன்கள் மற்றும் சற்று அழகற்ற டிசைன்களை கண்டறியும் திறமையை நமக்கு அளிக்கிறது.

இரண்டாவதாக, டிசைன்களை வரைய கற்றுக் கொள்ள வேண்டும். டிரேசிஸ் பேப்பரை பயன்படுத்தி தற்போதுள்ள பேஷன் மேகசின்களில் இருந்தும் ஒரு சில டிசைன்களை கவனமாக டிரேஸ் செய்ய வேண்டும். பிறகு, ப்ரி ஹேண்ட் வரைதலை பயிற்சி செய்யவும், முதலில் பார்த்து, டிசைன்களை வரைந்து பிறகு உற்று கவனித்து டிசைனை கவனமாக செய்து, நிறைவாக மனதில் உள்ளதை ஸ்கெட்ச் செய்க, நல்ல பயிற்சி கிடைத்த பின், கடைகளில் மற்றும் விழாக்களில் உற்று கவனித்த ஆடைகளின் டிசைனை காகிதங்களில் செய்து பார்க்கவும்.

மூன்றாவதாக, டிசைன் விவரங்கள் அலங்காரவிவரங்கள், ஸ்டைலை ஆடையின் டிசைன், உடுப்பவரின் ஆளுமையை மனதில் கொண்டு ஆகியவற்றுடன் தொடர்பு படுத்தி கலை கோட்பாடுகளை நன்கு நுணுக்கமாக கவனித்தபின் டிசைன்களை மதிப்பீடு செய்யும் திறனை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

நான்காவதாக, தற்போதைய பேஷன்கள், பல்வேறு வகையான ஆளுமைதன்மை கொண்டோர், பல்வேறு வயது குழுவினர், பால், விழாக்கள், மற்றும் காரணங்களுக்கு ஏற்றவாறு பொருத்தமாக பல்வேறு டிசைன்களை உன்னிப்பாக கவனித்து ஏற்றவாறு மாற்றி அமைத்து டிசைன் செய்வதற்கு பயிற்சி பெற வேண்டும். ஒரு டிசைனில் இருந்து சிறு மாற்றங்கள் செய்து பத்து டிசைன்களை வரைய வேண்டும்.

நிறைவாக பயிற்சி மூலம், கவனித்தல் மூலம், பல்வேறு டிசைன்களை வரைந்து பெற்ற அனுபவத்தால், சொந்தமாக டிசைனை உருவாக்கி, பேப்பரில் கற்பனையாக வரைந்து பழக முயற்சி செய்யவும்.

அடிப்படை வெட்டுகள் அல்லது ஸ்டைல்கள்

கெமிஸ் அல்லது A லைன் ஸ்டைல் (படம் அ) இந்த உடை ஒரே துண்டில் வெயிஸ்ட்லைன் சீம் இன்றி வெட்டப்படுகிறது. இந்த ஸ்டைல் ஸேக் (Sacque) ஷிப்ட் (Shift) என்று கூறப்படுகிறது. இது முன்பள்ளி குழந்தைகளின் உடைகள், டஸ்டர்கோட் (duster coat) இரவு உடைகளுக்கு ஏற்றது. வெயிஸ்ட்லைனில் விளைவு ஏற்பட, பெல்ட் பயன்படுத்தலாம். இந்த ஸ்டைலில் வெயிஸ்ட்லைன் அல்லது ஸ்கர்ட்பகுதியில் அதிக மடிப்புகளை புகுத்தி, டார்ட்டை கையாண்டு, வெட்டு செய்து, விரிக்கும் முறை பயன்படுத்தலாம். இளவரசி ஸ்டைல் (படம் ஆ இந்த வகை உடையில் வெயிஸ்ட்லைன் சீம் இல்லை, ஆனால் படத்தில் உள்ளது போல் செங்குத்தான சீம் உள்ளது மிடி அல்லது முழுநீள உடல் ஸ்டைல் (படம் இ) தாழ்ந்த வெயிஸ்ட் கொண்ட ஸ்கர்ட்டுடன் சேர்ந்த உடை விரிவாக்கப்பட்ட வெயிஸ்ட்லைனில் இணைக்கப்பட்டுள்ளது. (படம் ஈ)

இந்த ஸ்டைல் ஸ்கர்ட் முக்கோண வடிவ துண்டு துணியில் தைக்கப்படலாம் (gored) சுருக்கங்களுடன், மடிப்புகளுடன், பளபளப்பான அல்லது வட்டமான அளவிலும் இருக்கலாம். இந்த ஸ்டைலில் பாடிஸ் பகுதி, இயற்கையான வெயிஸ்ட்லைனில் நிறைவுறும் இருதுண்டு உடை

(படம் உ) (உம்) ஸகர்ட், பிளவுஸ் உடையின் முன் பகுதியில் வெயிஸ்ட்லைன் சீம் இருக்கும், ஆனால் பின் புறத்தில் “A” லைன் வகையாக தோன்றும்.

அடிப்படை சில்ஹவுட்கள்

சில்ஹவுட்கள் என்பன மங்கிய பின்னணியில் பார்ட் நிழலுருவ எல்லைக்கோடு என்பதாகும். ஒரு ஆடை டிசைனின் சில்ஹவுட் என்பது அணிபவரின் வெளிப்புற வடிவக்கோடாகும். சில்ஹவுட், துணியின் புறத்தோற்றம், ஆடையின் வெட்டு, ஆடையின் நீளம், அகலம், வெயிஸ்ட்லைனின் நிலை, தோள்பட்டை சீமின் நீளத்தைச் சார்ந்து வரையறுக்கப்படுகிறது. சில்வ ட்யூபுலார், நார்மல், A லைன், பெல், கிளிங்கிங்பஃபன்ட் (clinging bouffant) என்று வகைபடுத்தப்பட்டுள்ளன. ட்யூபுலார் சில்ஹவுட்டின் அடிப்படை அம்சம் குறுகலான ஸ்கர்ட் ஆகும். (படம் 1-அ) A லைன் சில்ஹவுட் என்பது லேசான ஃப்ளேருடன் ஆன ஸ்கார்ட் ஆகும். (படம் 1 ஆ பெல் சில்ஹவுட் என்பது முழு ஸ்கர்ட் அதிக சுருக்கங்கள், மடிப்புகள், ப்ளீட்கள் அல்லது ஃப்ளேர் கொண்டு இருக்கும். (படம் 1 - இ) நடுத்தர பெல்சில் ஹவுட்டை காட்டுகிறது. (படம் 1 ஈ) அதிகப்படியான பெல்சில்ஹவுட் இது சில நேரத்தில் பஃபன்ட் சில்ஹவுட் (bouffant silhoulette) என கூறப்படுகிறது. ஆர்கண்டி டஃபேட்டா துணிகள் போன்ற விரைப்பான துணிகள் பஃபன்ட் விளைவுகளை கொடுக்கும். ஃபுல் வாயில் (full voile) போன்ற துணிகள் கிளிங்கிங் சில்ஹவுட்களை உருவாக்கும். ஒல்லியான உருவங்களும், பருமனான உருவங்களும் அதிகப்படியான ட்யூபுலார் அல்லது கிளிங்கிங் ஸ்டைல்கள் மற்றும் மிக அதிகமான பஃபன்ட் ஸ்டைல்களை தவிர்க்க வேண்டும்.

முகவடிவங்கள், ஹேர் ஸ்டைல்கள் மற்றும் நெக் லைன்களுக்கு ஏற்றடிசைன் மூலக்கூறுகள்:

முகவடிவங்கள்

பேஷன் மேகசின்கள் பல்வேறு ஆர்வமிக்க முகங்களை காண்பிக்கும். அவை ஒவ்வொன்றும், அதன் அழகை பிரதிபலிக்கும். (Fred Feucht) ஃபிரெட் ப்யூசெட் டிசைன் குழு பல்வேறு பிரசித்தி பெற்ற நுகர்வோரின் முக வடிவங்களைப் பற்றி ஆராய்ந்தது. இவற்றுள் ஆண்களுக்கு உகந்த முகவடிவ அமைப்பு சாய் சதுர வடிவம் (டைமண்ட் என்றும் பெண்களுக்கு இதய (heart) வடிவ முகவடிவம் உகந்தது என்றும் கண்டறியப்பட்டது.

முகவடிவங்களை மிக சரியாக விவரிப்பது மிகவும் கடினமானதாகும் குறிப்பிடப்படும் புத்தகங்கள் முக அமைப்பை எட்டு ஜியோமிதி வடிவங்களாக கூறியுள்ளது. அவை நீள்சதுர வடிவம் (oblong), நீள் உருண்டை வடிவம் (oval), உருண்டையான வடிவம் (round), செவ்வக வடிவம் (Rectangle), சதுர வடிவம் (Square), முக்கோண வடிவம் (Triangular), சாய்சதுர வடிவம் (Diamond), இதய வடிவம் (heart) ஆகும். முக வடிவம் என்பது குறிப்பிட்ட கண்காணிப்பு கொண்டு இடவெளி பகுத்தல், முன் நெற்றி பரிமாணம், கன்ன அகலம், முகவாய் கோடு போன்ற நுண்ணிய சோதனை மூலம் கண்டறியப்பட்டது முக தோற்றத்தில் உருவான கோடுகள் அதிக ஆர்வம் ஏற்படுத்தும். சிலருக்கு குறிப்பிட்ட முக வடிவம் இருக்காது. ஆனால் பல வடிவங்கள் இணைந்து இருக்கும்.

நெக்லைன்

காலர்கள் மற்றும் லேபல்ஸ் இணைந்து நெக்லைன்கள் என்பன ஆடை உருவாக்க விவரங்களுக்கான முகவடிவமாகும்.

நக்லைன் வடிவம் என்பது ஆடை டிசைன் கோடுகளை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. சதுர வடிவ முகங்கள் சதுர நெக்லைன் அழுத்தி காட்டல் மூலமும், உருண்டை வடிவ உருண்டையான நெக்லைன் மற்றும் சதுர நெக்லைன் மூலமும், செய்யப்படுகிறது. ஒரு முக்கோண வடிவ முகம் குட்டையான நெக்லைன் மூலமாக சதுர முகவாய் கோடு நீளமாகக் காட்டப்படுகிறது.

கழுத்து அகலம் மற்றும் நீளம், கழுத்து இடவெளியில் கோடுகளை பயன்படுத்தி மாற்றப்படுகிறது. உம். மட்டக்கோட்டை நெக்லைனுக்கு மேல் இடத்தை பகுக்க பயன்படுத்தி நீளக் கழுத்து சற்று குட்டையாக தோன்றுமாறு செய்யப்படுகிறது.

நெக்லைன் அணிந்து குட்டையான கழுத்து நீளமான தோன்றச் செய்யப்படுகிறது.

நெக்லைன் என்பது அநேகமாக ஒரு ஆடையின் கவரும் பகுதியாக உள்ளது. இந்த விளைவை தோலின் நிறம் வைத்து சரி செய்யலாம். பளீரென்ற அல்லது எதிரிடையான வண்ணங்களை பயன்படுத்தி நெக்லைன் பகுதியை கவனத்தை ஈர்க்கும்படி செய்யலாம்.

ஹேர்ஸ்டைல்ஸ்

தலைப் பகுதி மற்றும் உடல் உருவத்தை கவனத்தில் கொண்டு ஹேர்ஸ்டைலில் கோடுகள் ஆய்வு செய்யப்படுகிறது. வட்ட முகத்தை சிறிதாக்க, முழுவதுமாக வட்டமாகவோ, அல்லது நேராகவோ இல்லாத ஹேர்ஸ்டைலை தேர்ந்தெடு, முக்கோண வடிவ முகத்துக்கு, முகத்தின் சில பயிண்ட்க ளில் குறுகலாகவும், அகலத்தில் புல்நெஸ்ஸை (fullness) தவிர்க்கவும்.

முடிவுரை

டிசைன் செயல்பாடு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பிளாஸ்டிக் மூலக்கூறுகளான இடவெளி, வடிவம், உருவம் மற்றும் கோடு ஆகியவற்றை பயன்படுத்துகிறது. கோடு நேராகவும், வளைந்தும் இருக்கும். ஒரு நேர்க்கோடு வேறுபட்ட விளைவை உடலில் ஏற்படுத்தும். அந்த நேர்க்கோடு, செங்குத்தாக, மட்டக்கோடாக அகலமாகும்), சாய்ந்த கோடு (சிதறும்) அல்லது வளைந்து வளைந்து (சக்தி கொடுக்கும் செல்லும் கோடுகளை பொறுத்து விளைவினை ஏற்படுத்தும். வளைந்த கோடுகள், அந்த குறிப்பிட்ட பகுதியை மென்மையாக்கும். இந்த டிசைன் மூலக்கூறுகுள் ஆடை தேர்ந்தெடுக்கும் போதும் முக வடிவம், ஹேர்ஸ்டைல், நெக்லைனில் ஏற்படுத்தும் விளைவுகள் பற்றி அறிந்து இருந்தால், நாம் குறைபாடுகளை எளிதாக சரிபடுத்தலாம்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.22222222222
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top