பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல்

ஆடைகளைத் தேர்ந்தெடுத்தல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஆடைகள்

ஆடைகள் மனிதனை ஆக்குபவை. இது பழமையான கூற்றாகும். இதனைப் பற்றி அதிகம் சிந்திக்காமல், உண்மைக் கூற்றாக நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆடைகள் மனிதனை ஆக்குவது மட்டும் அன்றி முக அமைப்பு மற்றும் உடலமைப்பையும் பாதிக்கக்கூடியது. ஆடைகள் தனிமனிதனால் சமூக செயல்பாட்டுக்கான கருவியாக பயன்படுத்தப்பட்டு ஒரு அடையாளச் சின்னமாக உருவெடுத்துள்ளது. பேச்சு தொடர்பற்ற தகவல் பரிமாற்றத்தை இது உருவாக்கியுள்ளது. சீதோஷ்ண நிலையானது மனிதனின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வகையான உடைகளை கண்டுபிடிப்பதற்கு முக்கிய பங்கு வகித்து உள்ளது. மிதவெப்ப மண்டலங்கள் உடல் முழுவதையும் மறைத்து உடை அணிய காரணமாகியுள்ளது. வெப்பம், குளிர் மற்றும் மணற்புயல் முதலியனவற்றில் இருந்து உடையானது மனிதனை பாதுகாக்கிறது.

ஆடைகள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன

நிலையானது

* தற்காலத்திற்கு ஏற்றது

நிலையான ஆடைகள் என்பன நிரந்தரமானது. இவை நவநாகரீக மாற்றங்களால் மாறக் கூடியதல்ல. ஆனால் வாழும் பகுதிகளுக்கு ஏற்ப வேறுபடுகின்றன. தற்காலத்திற்கு ஏற்ற உடை வகைகள் மேற்கத்திய நாடுகளில் ஆதிக்கம் செய்கின்றன. உலகளவில் நேரத்திற்கு தகுந்தவாறு நாகரீக மாற்றங்களுக்கு ஏற்ப உடைகள் மாறுகின்றன.

ஆடைகளின் பணிகள்

• ஆடைகள் நம் உடலை பாதுகாத்து, செளகர்யத்தை ஏற்படுத்துவன.

* ஆடைகள் நம் பாவனைகளை அல்லது மன நிலையை எடுத்துக் கூறுவன.

• ஆடைகள் ஒருவரது கெளரவத்தை குறிக்கும்.

* ஆடைகள் அலங்காரத்தன்மை அல்லது அழகுணர்ச்சியை பெற்றிருக்கும்.

• ஆடைகள் மறு பாலினத்தை கவரும் தன்மையை கொண்டிருக்கும்.

ஆடைகளுக்கான பொது கோட்பாடுகள்

ஆடைகள் பற்றி நான்கு பொது கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை ஆடைகள் பற்றி நுணுக்கமாக சிந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி, சில கருத்துக்களை பற்றி யோசிக்கும் வாய்ப்பையும் கொடுக்கிறது.

மாடஸ்டி கோட்பாடு (Modesty Theory) :

“மக்கள் முதலில் ஆடையை அணிந்து அவர்களது உடலின் மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்தனர்” என்கிறது மாடஸ்டி கோட்பாடு. மாடஸ்டி கோட்பாடு "ஒழுங்குணர்வு என்பது தன்னடக்கத்தை சார்ந்து இருக்கும் என்பதை உடல் உறுப்புகளை மறைத்து வெளி படுத்துகிறது” என்ற எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

இம்மாடஸ்ட்டி கோட்பாடு (Inmodesty Theory)

இம்மாடஸ்டி கோட்பாடு அல்லது பாலின கவர்ச்சி ஒருவர் ஆடை அணிவது பிறரது கவனத்தை ஈர்ப்பதற்காகவே அன்றி அவர்களது உடல் உறுப்புகளை மறைப்பதற்கு அல்ல என்று விளக்குகிறது.

அடார்ன்மென்ட் கோட்பாடு (Adornment Theory) :

இக்கோட்பாடு ஆடைகளின் அலங்கார அமைப்பு மற்றும் பிற தோற்றங்களையும், ஆடைகளில் ஒருசில நோக்கங்களுக்கு சில மாற்றங்களை செய்து எடுத்துக்காட்டவும், கவர்ச்சிக்காக அல்லது அழகுணர்வை வெளிப்படுத்துவதற்காகவும் செய்யப்படுவதை குறிக்கின்றன.

புரஜெக்ஷன் கோட்பாடு (Projection Theory) :

இக்கோட்பாடு ஆடைகள் மனிதனை சில கருவிகள், விலங்குகள் அல்லது இயற்கையில் இருந்தும் பாதுகாக்கின்றது என்பதை வலியுறுத்துகிறது.

ஆடைகளுக்கான துணிகளை தேர்ந்து எடுத்தல்

ஆரோக்யம், தோரணை மற்றும் சுயமரியாதை ஆகியனவற்றிற்கு தகுந்த ஆடைகள் தேவைப்படுகிறது. சம்பாதிப்பதை எல்லாம் செலவு செய்பவரை விட வரவு செலவு திட்டமிட்டு வாழ்க்கை நடத்துபவர் பொதுவாக மிகுந்த மகிழ்வோடு, திருப்திகரமாகவும் வாழ்வார். நமது ஆசை மற்றும் தேவைகள், எல்லைகள் அற்றவை என்பது உண்மை . ஒப்பிடுகையில் நமது தேவைகள் மிகவும் குறைவே. குடும்ப வாழ்வில் தேவைகளை ஒழுங்காக்குவது இன்றியமையாதது மற்றும் முக்கியமானது. ஒருவரது ஆளுமை வளர்ச்சிக்கு, அனைத்து தேவைகளையும் நிறைவாக்குவது என்பது விரும்பத்தக்கதல்ல. "விருப்பங்கள் மற்றும் “தேவைகள் " ஆகியவற்றிக்கு இடையே வித்தியாசம் உள்ளது. ஒரு நல்ல ஆடை வாங்குவதற்கான திட்டத்தில் விருப்பம் மற்றும் தேவை அடங்கியிருக்கும்.

துணிகளை தேர்ந்தெடுக்கும் போது நடைமுறையில் கவனிக்க வேண்டிய குறிப்புகள்

*முதலில் ஒருவரது தேவைகளை கண்டறியவும். பிறகு திட்டமிட்டு ஒருவரது ஆடைத் தேவைகளுக்கு செலவிடவும். திட்டமிடுதல் என்பது குடும்ப வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். ஒவ்வொரு உறுப்பினரின் ஆடைத் தேவைப்பட்டியலைப் பற்றி நன்கு அறிந்து, பின் அனைவருக்கும் ஆண்டு முழுவதற்கும் தேவைப்படும் ஆடைகளை வாங்க தீர்மானிக்கவும்.

*அடுத்த படி என்னவெனில் திட்டத்தை செயல்படுத்துதல்

*துணி பயன்படுத்தப்படுவதன் நோக்கத்தை கருத்தில் கொள்ளவும் நாள் முழுவதும் பணியில் அணிய அல்லது ஒரு விழாவிற்காக திட்டமிட்டு வாங்க வேண்டும் என்ற ஆடையை மட்டுமே வாங்கவும். உணர்ச்சி வசப்பட்டு அதிகமாக வாங்குவதை தவிர்க்கவும்.

*நல்ல தரமான ஆடையை தேர்ந்தெடுத்து வாங்கவும், விலை மலிவானவை என்பது அபூர்வமானது.

*விலையையும், மதிப்பையும் பல்வேறு கடைகளுடன் ஒப்பிடவும்.

*தற்போதுள்ள நிலையை பற்றி தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

*பழைய உடைகளை புதுப்பிக்க வழி முறைகளை கண்டறியவும். எளிய சட்டைகள், உடைகள், மற்றும் பிற உடைகளை வீட்டில் தைப்பதற்கு திறமையை வளர்க்கவும்.

*எது அழகானதோ அல்லது கச்சிதமாக பொருந்துகிறதோ அதனை பாராட்டவோ அல்லது குறையை கூறவோ ரசிப்புத் தன்மை மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

ஆடைகளை தேர்ந்தெடுத்தலை பாதிக்கும் காரணிகள்

வயது, பருவ காலம், வருமானம், சிறப்பு நிகழ்ச்சி மற்றும் நாகரீகம் ஆகியவற்றை சார்ந்து ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.

வயது :

ஆடைக்கான துணியை தேர்ந்தெடுக்கும் போது குழந்தையின் வயதை மனதில் கொள்ள வேண்டும் சிறு குழந்தைகளுக்கு, மென்மையான வெளிர் நிறத்தில் அழகான, கச்சிதமான அச்சுக்கள் உள்ள துணியை தேர்ந்தெடுக்கலாம். பின் குழந்தைப் பருவ நிலையை அடையும் போது, ஆண் குழந்தைகள் நீலம், சாம்பல் நிறத்துடன் கூடிய நீலம் மற்றும் ப்ரவுன் போன்ற ஆண்மை தன்மை வாய்ந்த நிறங்களை விரும்புவர். பிங்க், பச்சை மற்றும் சிவப்பு போன்ற பெண்மைத்தன்மை வாய்ந்த நிறங்களை உடைய உடைகளை பெண் குழந்தைகள் விரும்பி அணிவர். சில மென்மையான துணிகளை வளரிளம் பெண்களுக்கு தேர்வு செய்யலாம். வளரிளம் ஆண்களுக்கு சற்று கடினமான துணிகள் உகந்தவை.

உடையின் ஸ்டைலும் குழந்தைகளின் வயதிற்கு ஏற்ப மாறுகின்றன. A-லைன் உடைகள் சிறு குழந்தைகளுக்கு (Toddlers & Infants) பொருத்தமானவை பிறகு, அதிக அளவு சுருக்கங்களுடன் கூடிய ப்ராக்குகள் போன்ற உடைகள் பெண் குழந்தைகளுக்கு உகந்தவை. இது போன்றே சிறிய வயதினருக்கு பலவகை காலர்கள் பொருத்தமாக இருக்கும், உதாரணத்திற்கு, குழந்தைக்கான காலர் வளரிளம் பருவத்தினருக்கு பொருத்தமானதாக இருக்காது.

பருவ காலம் (Season) :

ஒரு சில துணிகள் மற்றும் நிறங்கள் மட்டுமே குளிர்காலத்திற்கு ஏற்றது. உதாரணம்: சின்தெடிக்குகள், பட்டு மற்றும் கம்பளி ஆகியன குளிர் காலத்திற்கு ஏற்றவை, ஏனெனில், அவை வெப்பத்தை கடத்தாதவை. பருத்தி மற்றும் சின்தெடிக் இணைத்து தயாரிக்கப்பட்ட பருத்தி ஆகியன வெயில் காலத்திற்கு ஏற்றவை. ஏனெனில், அவை உறிஞ்சும் தன்மையுடன், வெப்பம் கடத்தும் தன்மையும், கொண்டவை. குளிர் மற்றும் வெம்மையான நிறங்கள் உள்ளன. குளிர் நிறங்கள் என்பவை குளுமையுடன் தொடர்புடையன; உதாரணத்திற்கு: நீலம், பச்சை, வெள்ளை முதலானவை வெம்மையான நிறங்கள் வெப்பத்தை கடத்தாது. மேலும் வெம்மை நிறங்கள் வெப்பத்துடன் தொடர்புடையது. உதாரணத்திற்கு: சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள். ஆகவே, வெம்மை நிறங்கள் குளிர்காலத்திற்கும், குளுமையான நிறங்கள் வெயில் காலத்திற்கும் ஏற்றவை.

வருமானம் :

ஆடைகளை தேர்ந்தெடுப்பதை பணம் பாதிக்கும். குறைந்த வருமானமுடையவர்களுடன் அதிக வருமானம் உடையவர்களை ஒப்பிடும் போது, அதிக வருமானம் உடையர்வளது குழந்தைகள் ஆடைகளுக்கு செலவிடும் தொகையின் சதவிகிதம் அதிகமானதாக உள்ளது. நீடித்து உழைக்கும் துணிகளைவிட அவர்கள் நாகரீக ஆடைகளுக்கென அதிக பணம் செலவிடுவார்கள். குறைந்த வருமானமுடைய பெற்றோர் மென்மையான ஆடையைவிட நீடித்து உழைக்கும் ஆடைகளையே விரும்புவர். குடும்ப வருமானத்தை பொறுத்து ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படுவதும் மாறுகிறது. அணி செய்தல் மற்றும் அழகு ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் குறைந்த சமூக பொருளாதார வளர்ச்சி, உழைக்கும் திறன், செளகர்யம், மற்றும் விலை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

சிறப்பு நிகழ்ச்சி :

சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்றவாறு ஆடைகள் தேர்ந்தெடுக்கப்படுவது மாறும். தினசரி உடுக்கும் உடை அல்லது சம்பிரதாயப்படி அல்லாத (Informal wear) உடைக்கு, எளிய டிசைன்களுடன் கூடிய நீடித்து உழைக்கும் உடைகளை தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சிறப்பு நிகழ்ச்சிகள் அல்லது ஒழுங்கு முறையான உடைக்கு நவீன ஸ்டைலுடன் புது வகையான துணிகளை தேர்ந்தெடுக்கலாம்.

நாகரீகம் :

நாகரீகமான ஆடைகள் மிக அழகானதாக இருக்கும். ஒருவர் நாகரீகத்திற்கு உட்படாது இருந்தால் மாறுபட்டு தனித்து காணப்படுவார். ஒரு சில துணிகளும், நிறங்கள் மட்டுமே நாகரீகத்திற்கு உட்பட்டவை. சில ஆடைகள் நாகரீகத்திற்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து விட்டு மற்றும் சிலவற்றை எளிமையானதாக தேர்ந்தெடுக்கவும், குறைந்த வருமான பிரிவினரை ஒப்பிடுகையில் அதிக வருமான பிரிவினர் அதி நாகரீக ஆடைகளை அதிகம் அணிகின்றனர். அதிகமான நாகரீகத்தை தவிர்க்க வேண்டும்.

குடும்பத்திற்கான ஆடைகளை தேர்ந்து எடுத்தல்

பண்டைய தலைமுறையினரை விட இக்காலத்திய குடும்பத்தினருக்கு ஆடைகளை தேர்ந்தெடுப்பது என்பது பெரிய சவாலாக உள்ளது. பழக்கங்கள் மற்றும் நெறிமுறைகள் என்பனவற்றை ஆடைகள் தேர்ந்தெடுப்பதற்கு போதுமான அடிப்படை விதிமுறைகளாக கருத முடியாது. புதிய தொழிற்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்பாக அதிகமான ஆடை உற்பத்தியின் விளைவாக அதிக விதங்களிலும், வகைகளிலும் இன்று ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. துணிகள் மற்றும் ஆடை உற்பத்தியில் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட இழைகள் மிக முக்கியமான ஊக்கியமாக திகழ்ந்து சமீபத்திய புரட்சிக்கு காரணமாகி உள்ளது. குடும்பத்தினருக்கு தேவைப்படும் ஆடையின் வகைகள் மற்றும் விதங்கள் மனிதனால் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு இழைகளினால் அதிகரித்துள்ளது. கடந்த கால் நூற்றாண்டில் அனைத்து நிலை மக்களின் வருமானமும் அதிகரித்துள்ளதால் குடும்பத்தினரின் தேவைக்கு ஏற்றபடி ஆடைகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன. இவ்வாறாக அனைத்து காரணிகளும் குடும்பத்தினரின் தேவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆடைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் மனநிறைவை ஏற்படுத்துகிறது.

திருமணத்திற்கும், முதல் ஆண்டிற்கும் ஏற்ற ஆடைகள்

கீழ்வரும் யோசனைகள் வருங்கால வாழ்விற்குரிய மணமகள் அல்லது மணமகன் ஆகியோருக்கு தேவைப்படும் ஆடைகளை தேர்ந்தெடுக்க தேவைப்படும் தகுதிகள் அனைத்தையும் பெற வழி செய்கிறது.

*ஒருவரது ஆளுமையை பிரதிபலிக்குமாறு ஆடைகள் மற்றும் துணைப் பொருட்களை தேரந்தெடுக்கவும். திடகாத்திரமான ஆளுமை உடைய நபர்களுக்கு தீர்க்கமான டிசைன்களும், அழுத்தமாக வேறுபடுத்தி காட்டும் வண்ணத்தில், விலை மதிப்பான துணிகள் பொருத்தமானதாக இருக்கும். ஆனால், அமைதியான ஆளுமை உடைய நபருக்கு சிறு டிசைன்கள், மென்மையான துணிகள் மற்றும் அழகிய மென்மையான வண்ணங்கள் மிகச் சிறப்பானதாக இருக்கும்.

• உருவத்திற்கு மகிழ்ச்சியான தோற்றம் அளிக்குமாறு ஆடையைத் தேர்ந்தெடுக்கவும்.

*உருவத்தில் உள்ள ஒழுங்கற்ற அமைப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

*தேர்ந்தெடுக்கும் ஆடையின் நிறமானது தோலின் நிறத்தினை மிளிரச் செய்ய வேண்டும்.

*நிறங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒவ்வொரு நபரும் ஆடை அணியும் போது மனதிற்கு பிடிக்குமாறும், அலமாரியில் உள்ள அனைத்து ஆடைகளும் ஒருமைப்பாட்டுடன் திகழ வேண்டும்.

தற்போதைய நாகரீகத்திற்கு ஏற்ப மாற்றம் பெற்றுள்ள டிசைன்கள் மற்றும் துணிகளை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டும்.

• ஆடைகள் தேவைப்படும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை மனதில் கொள்ள வேண்டும்.

• திருமணத்திற்கு என்று திட்டமிடப்பட்ட ஆடைகள் மணமகள் அல்லது மணமகனுக்கு அலமாரியில் வரும் ஆண்டு அல்லது வரும் ஆண்டுகளுக்காக பாதுகாப்பாக வைக்கப்பட வேண்டும்.

*புதிதாக தேர்ந்தெடுத்து வாங்கிய ஆடைகள். மணமகள் அல்லது மணமகனின் அலமாரியில் தற்போதுள்ள ஆடைகளுடன் சேர்ந்து அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நிறைவு பெற்று சமநிலைப்படுத்தப்பட்ட அலமாரியை திருமண வைபவத்திற்கு பிறகு பெற முடியும்.

*சராசரி வயதுடைய இளம் ஜோடி அவர்களது திருமண வாழ்க்கையை சிறிய அப்பார்ட்மெண்டில் துவக்குகின்றனர். அந்த அப்பார்ட்மெண்டில் சேமிக்கும் இடம் குறைவாக இருப்பதால், அலமாரியை அதற்கு ஏற்றவாறு திட்டமிட வேண்டும்.

*திருமணத்திற்கு பின் மணமகள் பணிக்கு செல்பவராக இருந்தால், அதிகமாக நேரம் மற்றும் பணம் செலவிட்டு பராமரிக்கப்படும் ஆடைகள் பொருத்தமற்றதாகிவிடும். சலவை செய்ய வசதிகள் குறைவாக இருந்தாலோ அல்லது குறைந்த அளவு நிதி, துணிகளை பராமரிக்க இருந்தாலும் பொருத்தமற்றதாக ஆகிவிடும்.

*திருமணத்திற்கு பிறகு அணிய முடியாத திருமண ஆடையானது முறையாக பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் அல்லது ஒழுங்கு படுத்தப்பட வேண்டும்

கர்ப்பிணி தாய்க்குத் தேவைப்படும் ஆடை

*கர்ப்பிணிகளுக்கான கச்சிதமான ஆடைகள், பாதுகாப்பான கவனிப்பு மற்றும் தேர்ந்து எடுக்கப்பட்ட அலங்காரப் பொருட்களை பயன்படுத்தி அழகினை மேம்படுத்தி கவரும்படி இருப்பதால் கர்ப்பிணி தாயின் மனநிலை பொலிவுடன் இருக்கும்.

*மார்பகம் மற்றும் இடுப்புப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள மாற்றமே பிரத்யேகமான ஆடைகள் அணிய காரணமாகிறது.

*ரெடிமேட் கர்ப்ப கால ஆடைகளில் வழக்கமாக அளவுகள் குறிப்பிடப்பட்டு இருக்கும், அப்போதுதான் கர்ப்பிணி பெண் பழக்கமான அளவில் தொடர்ந்து அணிய முடியும்.

*பின்னப்பட்ட துணிகளானது இலகுவாக நீளமாகும். பருத்தி நூல் இழைகள் அல்லது நைலான் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள ஆடைகள் மிகவும் திருப்தியானவை.

(9 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆடைகள்)

வெம்மை, சௌகர்யம் மற்றும் சுகாதாரமான பண்புகள் ஆகிய இம்மூன்றும் பிறந்த குழந்தைகளுக்கான ஆடையில் கட்டாயமாக இருக்க வேண்டியனவாகும். ஒரு வருடத்தின் கால நேரம், பொதுவான சீதோஷ்ணநிலை, குழந்தையின் அறையில் உள்ள வெப்பநிலை மற்றும் குழந்தையின் ஆரோக்கிய நிலை ஆகியவற்றை நிர்ணயித்து ஒரு குழந்தைக்கு எவ்வளவு ஆடை தேவை மற்றும் எவ்வகை ஆடை தேவை என்பதும் ஓரளவு தீர்மானிக்கப்படுகிறது. குழந்தை ஆடைக்கு உகந்த நூலிழை பருத்தியாகும். ஏனெனில் பருத்தி மிகவும் மென்மையானது. மேலும், பருத்தியை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும் வைப்பதற்கு சுடுநீரில் அலசுவதே சிறப்பானதாகும்.

குழந்தைகளின் ஆடையை தேர்ந்தெடுப்பதற்கு தேவையான முக்கிய குறிப்புகள்

• குழந்தைகளுக்கான ஆடைகளை தேர்ந்தெடுக்கும்போது, செளகர்யம் மற்றும் சுலபமாக பராமரிப்பதை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.

*குழந்தைகளின் ஆடைகள் மென்மையானதாகவும், இழுதன்மையுடன் வளைக்கக் கூடியதாகவும், எரிச்சல் ஏற்படுத்தாதவாறும் இருக்க வேண்டும்.

*ஈரப்பதம் இருந்தால் ஆவியாகி காற்றோட்டம் ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். போதுமான காற்றோட்டம் இன்மை, ஈரத்தால் தோலில் அரிப்பு ஏற்படுத்தும் விளைவுகளை உண்டாக்கும்.

*ஆடைகள் எளிமையானதாகவும், சிறப்பானதாகவும் செய்யப்பட்டு இருக்க வேண்டும். அழகிற்காக கத்தரித்து ஆடை அலங்கரிக்கப்பட்டிருந்தால் சலவை செய்யும்போது மிகுந்த கவனம் தேவைப்படும். மேலும், இது போன்று கத்தரித்து அலங்கரிக்கப்படுவது குழந்தைக்கு எரிச்சலை ஏற்படுத்தும்.

*பின்னப்பட்ட துணியால் ஆன ஆடைகள் உடல் அசைவுகளுக்கு ஏற்றவாறு இழுதன்மை பெற்று நீளும் திறன் பெற்றும் இருக்கும். ஆகவே குழந்தைக்கு பின்னப்பட்ட துணியாலான ஆடையை அணிவிப்பது மிகவும் எளிது.

• முன்பக்கம் அல்லது பின்பக்கத்தில் ஆடையின் திறப்பு மேல் இருந்து கீழ்வரை அமைத்து இருப்பது ஆடை அணிவித்தலை எளிமையாக்கும்.

*முடிச்சு போட்டு கட்டுபவை அல்லது தட்டையான பொருத்துவான்கள் மிகவும் சௌகர்யமானவை; கழுத்துப் பகுதிக்கு இழுத்துக் கட்டக்கூடியவைகளை அநேகமாக பரிந்துரைப் பதில்லை. ஏனெனில், கட்டக்கூடிய நாடாவால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்பட்டு விடும்.

*முடிச்சு போட்டு கட்டக்கூடியன அல்லது பொத்தான்கள் பயன்படுத்தப்பட்டிருந்தால், அவை பாதுகாப்பான முறையில் தைக்கப்பட்டுள்ளனவா என்பதை அடிக்கடி கவனிக்க வேண்டும்.

*உடல் வளர்ச்சியின் விகிதம் அதிகமாக இருக்கும். அதனால் ஆடையை பெரிதாக்கிக் கொள்ள வசதியாக இடம் விட்டு (Seam allowance) ஹெம் செய்யலாம்.

(9 மாதங்கள் முதல் 1 வயது வரை) தவழும் குழந்தைகளுக்கான ஆடைகள்

குழந்தை தவழ ஆரம்பித்த பிறகு, அதிக அளவில் ஆடைகள் தேவைப்படும். முக்கியமாக குழந்தையின் பாதுகாப்பை மனதில் கொள்ள வேண்டும். சட்டையில் அழுக்கு படாதிருக்க சட்டையின் மேல் முழுவதுமாக அணியப்படும் ஆடையே இருபாலின குழந்தைகளுக்கும் எளிமையான ஆடையாகும். முக்கியமாக கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் பொருத்தியிருந்தால் குழந்தைகளுக்கு டையாப்பர் மாற்றுவதற்கு உதவியாக இருக்கும். முழுவதுமாக மூடப்பட்ட ஆடையானது குழந்தைகளின் கால் முட்டிகளை மூடும் கவசமாக தரையில் இருந்து உராய்வதை பாதுகாக்கும்.

*கால்சட்டையின் கால்பகுதி குழந்தையின் முட்டிகளுக்கு அதிக பலமளிக்க கூடியதாக இருப்பதால் நீடித்து உழைக்குமாறு இருப்பது அவசியம்.

*முழுவதும் மூடப்படும் ஆடைகளில் கால்கள் பிரியும் இடத்தில் கொக்கிகள் அல்லது சரியான பிடிப்பிற்காக பொருத்தப்படும் கிரிப்பர்கள், டையாப்பர் மாற்றப்படும்போது நேரத்தை சேமிக்க உதவுகிறது.

*நன்றாக நெசவு செய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட துணிகளில் தயாரிக்கப்பட்ட ஆடைகள் தேவையான இணைப்புடன் நிறைவு செய்யப்படும் போது சாதாரணமாக அணியவும், சலவைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

*குளிர்ந்த சீதோஷ்ண மண்டலங்களுக்கு பனிகால உடை, மிட்டன்கள், தலையையும் கழுத்தையும் மறைக்கும் உறை (hood) ஆகியன தேவைப்படுகின்றன. காற்றால் பாதிப்பு அடையாத கனமற்ற, சலவை செய்யக்கூடிய துணிகளான நைலான் அல்லது பாலியஸ்டர் உகந்தது.

*தவழக்கூடிய வயதில் மென்மையான அடிப்பாகம் உள்ள காலணிகள் கால்களை குளிரில் இருந்து பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. காலணிகள் கால் விரல்களை விட 1/2 அங்குலம் அதிக நீளம் உடையனவாகவும், காலுறைகள் பாதத்தை விட 1/2 அங்குலம் நீளமானதாகவும் இருக்க வேண்டும்.

*பயிற்சிக்கான கால்சட்டைகள் டாய்லெட் பயிற்சி ஆரம்பமாகும்போது அணியப்படுகிறது (படம் 5.4), டாய்லெட் பயிற்சி முழுமையடையும் வரை பயிற்சிக்கான கால்சட்டை தொடர்ந்து அணியப்படுகிறது. இருவழி இழுதன்மையுடைய துணியால் இக்கால் சட்டைகள் செய்யப்பட்டு, இடுப்பில் நேர்த்தியாக பொருத்தப்பட வேண்டும்.

*மத்தியில் உள்ள மையப்பகுதி இரண்டு, மூன்று மற்றும் நான்கு அடுக்குகளால் உறிஞ்சுதலுக்கு, பாதுகாப்பிற்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். பின்னப்பட்ட துணிகளால் ஆன பயிற்சிக்கான கால்சட்டைகள் உகந்தவை. ஏனெனில், குழந்தை நகர்வதற்கு எளிதாக இருக்கும். மேலும் துணியின் இழுதன்மை சிறிதளவு வளர்ச்சிக்கும் இடமளிக்கும்.

*பிறந்த குழந்தைகளை விட தவழும் குழந்தைகள் உடற்செயல்பாடுகளில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். குழந்தைகளின் ஆடைகள் உடல் செயல்பாடுகளால் ஏற்படும் வியர்வையை உறிஞ்சும் தன்மை கொண்ட ஆடைகளாக இருக்க வேண்டும்.

*உறுதி வாய்ந்த மற்றும் உழைக்கும் திறன் கொண்ட துணிகள் இவ்வயதினருக்கு உகந்தது. குழந்தைகள் தரையில் தவழ்வர். அப்போது ஏற்படும் உராய்வால் துணியானது முட்டியில் நைந்து போகும். ஆனால் உறுதியான நீடித்து உழைக்கும் துணிகள் உராய்வை தாங்கிக் கொள்ளும் ஆற்றல் பெற்றுள்ளன. ஒட்டு கொடுத்தல் மூலம் ஆடையின் முட்டிப்பகுதியை பலப்படுத்தலாம்.

*வளரும் நிலையில் குழந்தைகள் உள்ளதால் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய பட்டிகளுடன் உள்ள ஆடைகள் மிகவும் உகந்தவை.

குறுநடைபோடும் அல்லது நடக்கக் கற்றுக்கொள்ளும் குழந்தைக்கான ஆடை (clothing for Toddler) (1 முதல் 2 வயது வரை)

• இந்த நிலைக் குழந்தைகள் ஈடுபடும் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொருத்தமான ஆடையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

*உடல் முழுவதுமாக அணியக் கூடியதே பொருத்தமானது. முக்கியமாக அகல தோள்பட்டைகளுடன் கூடியவை நீளமாக இருக்குமானால் வளரும் குழந்தைகளுக்கு ஏற்றவாறு அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்.

• நடைபயிலும் பருவக்குழந்தைகள் பொதுவாக ஒரு துண்டு உடைகளை அணிவர். அந்த உடையில் கால்களில் அல்லது கால்கள் பிரியும் இடத்தில் ஜிப் திறப்பு பொருத்தப்பட்டிருக்கும்.

*ஒரு துண்டு பைஜாமாக்கள் இரு துண்டு பைஜாமாவை விட வழக்கமாக பாதுகாப்பானதாகவும், அழகானதாகவும் இருக்கும். மென்மையான, சலவை செய்யக்கூடிய துணிகளால் பைஜாமாக்கள் இருப்பது நல்லது.

நடைபயிலும் குழந்தைக்கு முழு உடை மற்றும் சன் சூட்.

முன் பள்ளிக் குழந்தைகளுக்கான ஆடை (2 முதல் 4 வயது வரை)

முன்பள்ளி வயது குழந்தைக்கு ஆடை என்பது குடும்பத்தில் பெரிய பிரச்சனையாக இருக்கிறது. ஏனெனில், அவர்களுக்கான ஆடைகள் விலை மதிப்பு மிகுந்தது. மேலும் குறைந்த காலத்திற்கு மட்டுமே அணிய முடிகிறது. குழந்தை தன்னம்பிக்கையை வளர்க்கவும், சமூக செயல் பாட்டு திறன்களை கற்கவும் மற்றும் சமவயதினருடன் சேர்ந்து செயல்படுதல் ஆகியனவற்றிற்கு பொருத்தமான ஆடையை தேர்ந்தெடுக்க வேண்டும். ஆடையானது இழுதன்மையுடன் மாற்றக்கூடியதாக, கதகதப்பாக சௌகர்யமானதாக, எளிதாக சுத்தம் செய்யக்கூடியதாக, மென்மையானதாக, உழைக்கக்கூடியதாக, தன்னம்பிக்கையை வளர்க்கக் கூடியதாக, அடிக்கடி டாய்லெட் செல்வதற்கு வசதியானதாக, வளரும் உடலுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்யக்கூடியதாகவும், கவர்ச்சிகரமான துணியும், டிசைனுடனும் இருக்க வேண்டும். குழந்தைகள் கற்பனை உலகில் உள்ளனவற்றைப் போன்று நம்பத்தகுந்த வகையில் ஆடைகள் இருப்பதை விரும்புவர்.

ஆடையில் உடல் வளர்ச்சிக்கு இடம் அளித்தல்

• முன்பள்ளி வயதில் வளர்ச்சியானது அதிவேகமாக இருக்கும்.

*உடல்வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆடைகள் வாங்கினால் ஆடைகளை நீண்ட காலத்திற்கு அணிவதற்கு உதவும்.

உயரமாக வளரும்போது ஆடையில் இடம் அளிக்க

*பாவாடைகள் மற்றும் உடைகளின் கீழ்பகுதியில் அதிக இடம்விட்டு செய்யப்படும் ஹெம்மிங் மற்றும் டக்குகள் தைத்திருக்க வேண்டும்.

* உடைகள் மற்றும் கால் சட்டைகளின் இடுப்புப்பகுதியில் டக்குகள் இருந்தால் உடையின் மேல் பகுதியை நீளமாக ஆக்கலாம் அல்லது இரண்டு கால் பகுதிகளும் உடையில் இணைக்கப்படும் பகுதியை நீளமாக்கலாம்.

*உடல் முழுவதுமாக மூடக்கூடிய உடைகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய நீண்ட பட்டைகளுடன் அதிக இடம் விட்டு ஹெம்மிங்கும் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

*உடம்பு நீளமாக வளர்ச்சி அடையும்போது யோக்குகளில் குறுக்கு வெட்டில் தைக்கப்படும் டக்குகளை பிரித்துவிடலாம்.

*உறுதியற்ற இடுப்புப்பகுதி அல்லது இடுப்புப் பகுதி இல்லாத ஆடைகள் மற்றும் ஆடையின் கீழ்பகுதியில் அதிக துணிவிட்டு ஹெம்மிங்குகள் செய்ய வேண்டும்.

*இழுதன்மையுடைய துணிகள் மற்றும்

*இரு துண்டு ஆடைகள் முன்பள்ளிப்பருவ குழந்தைகளுக்கு பொருத்தமானவை.

அகலத்தில் வளர்ச்சி அடையும்போது ஆடை இடம் அளிக்க

*பொருத்தப்படாத ஸ்லீவ்களை விட ராக்லான் அல்லது கிமோனோ ஸ்லீவ்களை பயன்படுத்தவும்.

*டக்குகள், மடிப்புகள் அல்லது சுருக்கங்களை தோள்பட்டை பகுதியில் வைத்து தைக்கவும்.

*கைக்கு அடியிலும், கால்களிலும் தேவைக்கேற்ப அதிக அளவில் இடமளித்து தைக்க வேண்டும். ஆடைகள் அதிகமாக பயன்படுத்தப்பட்டு கிழியக்கூடிய பகுதியில் பலப்படுத்தப்பட வேண்டும். முக்கியமாக கால்சட்டையின் முட்டிப்பகுதியில் முழுவதும் மூடக்கூடிய உடையில், இரு கால்பகுதியும் இணையும் பகுதியிலும் இடம் அளிக்கப்பட்ட கைகளுக்கு அடியில் உள்ள பகுதிகளும் பலப்படுத்தப்பட வேண்டும்.

தனக்குத் தானே உதவிக்கொள்ளும் விசேஷ அம்சம்

தனக்குத் தானே உதவிக்கொள்ளும்படியான உடை என்பது ஒரு குழந்தையானது சிறிதளவு உதவியையும் யாரிடமும் பெறாமல் தானே அணியவும், அகற்றவும் கூடியது ஆகும். இந்த சிறப்பு அம்சமானது ஒரு தாய்க்கு எவ்வளவு முக்கியமானதோ, அதே அளவு குழந்தைக்கும் முக்கியமானது. ஒரு குழந்தை தன்னை தானே ஆடை அணிவிக்க கற்று கொள்ள பெற்ற அனுபவம், குழந்தைக்கு அதிக தன்னம்பிக்கையையும், சுதந்திரத்தையும் அளிக்கிறது. இங்கு குழந்தை ஆடை தேர்ந்தெடுக்கும்போது மனதில் கொள்ள வேண்டிய கருத்துக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இக்கருத்துக்கள் ஆடையை அணிவதில் ஊக்கமளித்து சுதந்திரத்தை ஏற்படுத்தும்.

முன்பள்ளி தானே உதவிக்கொள்ளும் பெண்குழந்தைக்கு உடை

*எளிய ஸ்டைல் உடைகள், சிக்கலான உடைகளை விட கையாள்வதற்கு சுலபமானதாக இருக்கும்.

*நீண்ட திறப்புகள் அணிவதற்கு எளிதாக இருக்கும். பின்பக்கம் அல்லது பக்கவாட்டில் உள்ள திறப்பை விட முன்பக்க திறப்புகள் கையாள்வதற்கு மிக சுலபமானதாக இருக்கும்.

*பெரிய பொத்தான்கள் அல்லது பொருத்துவான்கள் சிறியவற்றை விட கையாள்வதற்கு சுலபமானதாக இருக்கும்.

*பெரிய அளவில் ஆர்ம்ஹோல்கள் பெரிய ஸ்லீவ்கள் மற்றும் பெரிய கழுத்துக்கள் உடைகளை சுலபமாக அணிய உதவுகின்றன.

தானே உடுத்திக் கொள்ளும் உடை

முன்பள்ளி பருவ ஆண்குழந்தைக்கு தனக்குத்தானே உதவிக்கொள்ளும் உடை

*ஆடையின் முன்பக்கம், பின்பக்கத்தை எளிதில் கண்டுபிடிக்கும்படி அமைத்திருக்க வேண்டும். முழுகால் சட்டைகளில் வண்ண நூலைக்கொண்டு முன்பக்கம் அல்லது பின்பக்க இடுப்புப் பகுதியில் குழந்தை ஒன்றுக்கொன்று அடையாளம் கண்டுபிடிக்க உதவியாக தைப்பது நல்லது.

*காலணி ஷவின் வெளிப்புறம் பக்கவாட்டில் அடையாளக்குறி இட்டால் குழந்தை இடது, வலதை கண்டுபிடித்து ஒழுங்குணர்வுடன் அணிந்து கொள்ளும்.

*கழுத்து பட்டைகள் இல்லாத ஆடைகள், ரவிக்கைகள் மற்றும் மேல் சட்டைகள் போன்றவைகளை காலர்கள் உள்ளவற்றை விட எளிதாக கையாள முடியும்.

*தனியாக இடுப்புப் பெல்ட்கள், அணிவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் சில சமயங்களில் அவை முறுக்கிக்கொண்டு ஆடைக்குள் மறைந்துகொள்ளும்.

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான ஆடைகள் (5 முதல் 11 வயது வரை)

முன்பள்ளிக் குழந்தைகளின் ஆடைத் தேவைகளை விட ஆரம்பப்பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ஆடைத்தேவைகள் பல விஷயங்களில் ஒத்திருந்தாலும் சில விஷயங்களில் வேறுபட்டு இருக்கின்றன. பள்ளி செல்லும் பருவக்குழந்தைகளின் உடற்செயல்பாடுகள் மிக அதிகமாக இருக்கும். ஆண் மற்றும் பெண் குழந்தைகள் விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். சமூக வளர்ச்சியில் ஆடைகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. ஆடைகள் குறித்து விருப்பம் மற்றும் விருப்பமின்மையை தீர்மானிக்கும் ஆற்றல் வளர்ச்சி அடைகிறது. ஒரு குழுவைச் சார்ந்தவர்கள் என்பது பள்ளிச்செல்லும் பருவத்தில் ஏற்படுவதால் அக்குழுவில் உள்ளவர்கள் என்ன ஆடைகள் அணிவார்கள் என்பது மிக முக்கியத்துவம் பெற்று இருக்கும்.

குழந்தையானது ஒத்த வயதுள்ள குழந்தைகள், தன்னை ஏற்றுக்கொள்ள வேண்டும் என விரும்பி தங்கள் கும்பலை (gang) அல்லது கூட்டத்தை பலப்படுத்தி தங்களுக்கு சொந்தமானவர்கள் என்பதை உணரச் செய்யும். வேறுபட்ட முறையில் ஆடையை அணியும்போது, குழந்தைகள் தன்னுணர்ச்சியுள்ளவர்களாக ஆகிவிடுகின்றனர். மாறுபட்ட தோற்றம் உடைய ஆடையை அணியும்போது தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்திவிடும்.

வளரிளம் பருவத்தினருக்கு முந்தைய பருவம் (12 முதல் 15 வயது வரை)

இப்பருவத்தில் உடலில் அதிக மாற்றங்கள் ஏற்பட்டு முதிர்வுற்றவர்களின் பண்புகளை பெறுவதால், துரிதமான வளர்ச்சி நடைபெறும். தன்னை நேர்த்தியாக்கிக்கொண்டு ஆடைகளில் ஆர்வத்தை ஏற்படுத்திக் கொள்வர். ஆரம்பப்பள்ளி பருவத்தினர் ஒத்த வயதினருக்கு அளித்த முக்கியத்துவத்தைவிட முன் வளரிள பருவத்தினர் அதிக முக்கியத்துவம் அளித்து உடை அணிவதில் அனுசரித்து செல்வர். முன் வளரிளம் பருவத்தினர் பிறருடன் நட்புறவுடன் இருப்பதை அதிகமாக விரும்புவர். பிறர் எண்ணங்களுக்கும், விருப்பத்திற்கும் அனுமதி அளித்து, அதிக உணர்ச்சிமிக்கவர்களாக முன் வளரிளம் பருவத்தினர் விளங்குவர். நீடித்து உழைத்தல் மற்றும் செளகர்யம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது பொருத்தமாயிருப்பது, இளவரசன் தோற்றம், அழகுணர்ச்சி மற்றும் அனுசரித்து நடத்தல் போன்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. வருமான நிலைக்கேற்ப பல்வேறு நிலைகளுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. உதாரணம் : குறைந்த சமூக பொருளாதார பிரிவினர் அதிக வருமானப் பிரிவினருடன் ஒப்பிடும்போது நீடித்து உழைத்தல், செளகர்யம் மற்றும் விலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

வளரிளம் பருவத்தினருக்கான ஆடைகள் (15 முதல் 20 வயது வரை)

இந்த பருவத்தில் ஆண்கள் வளர்ந்துகொண்டு இருந்தாலும், பெண்கள் வளரிளம் பருவத்தின் ஆரம்ப கட்டம் முதல் நடுப்பகுதியை அடையும் வரையிலேயே துரிதமாக வளர்ச்சியின் உச்சத்தை அடைந்துவிடுவார்கள். வளரிளம் பருவத்தினரின் மனவெழுச்சிகள், மனநிலை, சமூக நிலையிலும் வளர்ச்சி அடைந்திருந்தாலும், நிதானமாகவும், முதிர்ச்சியுள்ளவராகவும் செயல்படுவதில் பின்தங்கி இருப்பார்கள். இருபாலினரும், அவரவர் சார்ந்த நண்பர் குழுவினரிடம் அதிக திருப்தி ஏற்படுமாறு நடந்து கொள்வர். வளரிளம் பருவத்தினர் அதிகமாக தங்களைப் பற்றி சிந்தித்து நேர்த்தியாக்கிக் கொள்ளவும், நல்ல தோற்றத்தை பெறவும் விரும்புவர், குறிப்பாக எவை பிறரது கவனத்தை ஈர்த்து ரசிக்கப்படுகிறது என்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். கச்சிதமாக பொருந்தக்கூடிய, நாகரீகமான மற்றும் விலை மிகுதியான உடைகளே வளரிளம் பருவத்தினருக்கு தேவைப்படும். ஆடைகளின் செளகர்யம் மற்றும் அதன் உழைப்புத்திறன் போன்றவற்றை ஸ்டைல் மற்றும் நாகரீகத்திற்காக தியாகம் செய்ய வேண்டியதுள்ளது. வளரிளம் பருவத்தினர் குழுவினர் தங்களை ஏற்றுக்கொள்ளவும், திருப்தி ஏற்படுத்துவதையும் எதிர்பார்ப்பார்கள். இவையே வளரிளம் பருவத்தினரின் மனதில் பாதுகாப்பு உணர்வு மற்றும் அனுசரித்து செல்லும் மனப்பான்மையையும் வளர்க்கிறது. தங்களது அனுசரிப்பை எடுத்துச் சொல்ல ஆடைகள் மூலமாக வெளிப்படுத்துவார்கள். வளரிளம் பருவத்தினர் தங்கள் உடல் தோற்றத்திற்கு அதிக கவனம் செலுத்தி, நல்ல உடைகளை அணிய அதிக ஆர்வம் காட்டுவார்கள். அவர்களது ஆளுமையை வெளிப்படுத்த ஆடைகள் ஒரு கருவியாக உள்ளன.

முதிர்ச்சி அடைந்தவருக்கான ஆடைகள் (Adult)

18 முதல் 21 வயது வரையில் உள்ளவர்கள் முதிர்ச்சி அடைந்தவர்கள் ஆவர். வருமானம், அந்தஸ்து, தொழில், சீதோஷ்ண நிலை, வயது, பால், சிறப்பு நிகழ்ச்சி மற்றும் நாகரீகம் ஆகியவற்றின் அடிப்படையில் ஆடையை தேர்ந்தெடுக்க கூடியவர் முதிர்ச்சி அடைந்தவர் ஆவார். நல்ல ஆடை அணிந்த நபர் பிறருக்கு செயலாற்றல் மிக்கவராக தோற்றம் அளித்தாலும், தன்னம்பிக்கையும், ஆற்றலும் தன்னிடம் உள்ளதாக அவர் மனதில் நினைத்துக் கொண்டிருப்பார். ஒரு ஆணின் அலமாரி பெண்ணின் அலமாரியில் இருந்து முற்றிலுமாக மாறி இருக்கும். ஒரு ஆணின் அலமாரியில் தொழில், விளையாட்டு, சம்பிரதாயமாக அணியும் ஆடைகள் இருக்கும். ஷர்ட், டிரவுசர்கள், ஷார்ட்கள், சாக்ஸ், கழுத்து, டைகள், ஷக்கள், இரவு உடைகள், சூட் மற்றும் பல ஒரு ஆணின் அலமாரியில் இருந்தால் நிறைவானதாக இருக்கும்.

ஒரு பெண்ணின் அலமாரி கணவரின் வருமானம், அவளது சமூக செயல்பாடுகள் மற்றும் தொழில் ஆகியனவற்றை பொருத்து இருக்கும். குடும்பத்தலைவியை விட, பணி செல்லும் பெண்களுக்கு அதிக ஆடைகள் தேவைப்படும். மேலும், சமூக செயல்பாடுகளில் உள்ளவர்களுக்கு குடும்பத்தலைவியை விட அதிகமான ஆடைகள் தேவைப்படும்.

முதியோருக்கான ஆடைகள்

ரசனை உணர்வில், முதியோருக்கு ஆடைகள் மூன்று பணிகளை செய்கின்றன.

*நல்ல விசேஷ அம்சங்கள் பிறரின் கவனத்தை ஈர்ப்பதற்கு

• சிறப்பில்லாத அம்சங்கள் உடலுறுப்பில் மறைக்கப்பட வேண்டும்.

*மனதளவில் ஏற்றம் பெற்று தன்னம்பிக்கையுடன் திகழ.

வயதான பெண்மணிகளுக்கு தளர்ந்த மார்பகமும், இடுப்பு சுற்றளவு அதிகரித்தும் இடைஅளவு கூடியும், தோள்கள் உருண்டும் இருக்கும். ஆகவே சிறப்பில்லாத அம்சங்கள் மறைக்கப்பட வேண்டும். குறைந்த அளவு கோடுகள் மற்றும் ஸ்டைல்களுடனும், தளர்ந்த உடைகளும் பொதுவாக விரும்பத்தகுந்ததாக இருக்கும். தோல் மற்றும் தலைமுடியின் நிறமாற்றத்தால், வேறு நிறங்கள் பயன்படுத்தும்போது பொய்யான தோற்றம் அளிக்கும். இடுப்பில் அழுத்திக்காட்டும் டிசைன்கள் கொண்ட ஆடைகள் பொதுவாக பொருத்தமற்றதாகிவிடுகிறது. V கழுத்து, ஷிப்ட் உடைகள், A லைன் பாவாடைகள், முன் பக்கமாக மூடக்கூடியன, ஒட்டப்பட்ட பாக்கெட்டுகள் மற்றும் 1/4 பகுதி நீளக்கைகள் கொண்ட ஆடைகள் விரும்பத்தகுந்த ஸ்டைல் அம்சங்களைக் கொண்டிருக்கும். நீல நிறம் மிகவும் விருப்பமான நிறம், பொருத்தமானதாக உடையாக இருப்பதே ஒரு குறிப்பிட்ட ஆடையை அடிக்கடி விரும்பி அணிவதாக பட்டியலிட்டு காரணம் கூறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பெண்களுக்கு

*வயதிற்கு ஏற்ற உடையை அணிய உடலின் வடிவத்தை அறிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும். முழு தோற்றத்தையும் தெரிய வைக்கும் கண்ணாடி முன் நின்று பிரத்யேக அறையில் அனைத்து ஆடைகளையும் அணிந்து பார்க்க வேண்டும். அதிகமாக இறுக்கத்துடன் அல்லது உடலை வெளிப்படுத்தும் உடைகளை கழித்து விடவும்.

*தனிச்சிறப்பு வாய்ந்த ஆடைகளை பயன்படுத்தவும். நன்கு தைக்கப்பட்ட பல்வேறு ஸ்டைல்களில் உள்ள சல்வார் கம்மீஸ் அல்லது ப்ளவுசுடன் கூடிய சேலை இந்தியாவில் பழக்கத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது.

*காலப்போக்கினை பின்பற்றி சிறிதளவு மாற்றங்களை உடைகளில் செய்து கொள்ளலாம். காலத்திற்கு ஏற்ப மாறுவது சரியே. ஆனால் நகைகள் மற்றும் சிறுசால்வைகளை பயன்படுத்தி செய்யலாம். சிறிதளவு உதிரிபொருட்கள் அணிவதால் இன்னும் முற்போக்கான நாகரீகத்தில் உள்ளார் என்பதை உணர்த்துமே அன்றி காலப்போக்கிற்கான உடைகளுக்கு அடிமையானவர் அல்ல எனவும் கூறும்.

ஆண்களுக்கு

*உடலுக்கு பொருத்தமான ஆடையை தேர்ந்தெடுக்கவும், பொத்தான் கொண்ட சட்டைகள், கழுத்து மற்றும் கை அளவுகள் பொருத்தமானதாக இருக்குமாறு வாங்கவும். பேண்ட்களை தையல்காரரிடம் சரியான அளவிற்கு ஏற்ப தைக்கவும். அதிக இறுக்கமாகவோ, அதிக தளர்வாகவோ இருக்கும் உடைகளை அணிவதை தவிர்க்கவும்.

*டபுள் பிரஸ்டட் சூட்கள் அணிவதை தவிர்த்து தனி சிறப்பு வாய்ந்த சிங்கிள் பிரஸ்டட் சூட்டை அணியவும்.

*பொருத்தமான சாதாரண வழக்கமான ஆடை அணியவும். ஜீன்கள் மற்றும் காக்கிகளில் கால் பகுதி நீளவாக்கில் வெட்டப்பட்டதையும், பருத்தி துணியில் கழுத்துப்பட்டை கொண்ட போலோ ஷர்ட்களையும் தேர்ந்தெடுக்கவும்.

*நிறைவு செய்வதற்கு, குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு ஆடை தேர்ந்தெடுக்கும்போது மிகுந்த பாதுகாப்பை கருதி எடுப்பது போல வயதானவர்களுக்கு பாதுகாப்பை மனதில் கொண்டு ஆடையை தேர்ந்தெடுக்கவும். உடுப்பதற்கு சௌகர்யமாகவும், அசைவுகளுக்கு எளிதாகவும், பாதுகாக்க சுலபமானதாகவும் உள்ள ஆடைகள் பொருத்தமான அளவிலும், டிசைனிலும் இருந்தால் அவையே சிறந்த ஆடைகள் எனலாம்.

முடிவுரை

உடை உடுக்கும் உணர்வு என்பது மனிதனின் ஆளுமையை சார்ந்தும் கலந்துகொள்ளும் சிறப்பு நிகழ்வுகள் ஆகியவற்றை சார்ந்து இருக்கும். இதனை பொருத்து மனிதனின் விருப்புகள், கலாச்சாரம், மற்றும் நடவடிக்கைகள் அமைகிறது. ஆடைகள், சாதாரணமாக அணியக்கூடியன, பணியிடத்தில் அணிவன, செளகர்யத்திற்காக அணிவன் மற்றும் பாரம்பரிய ஆடைகள் என வகைப்படுத்தப்பட்டு உள்ளன. சமூக பிரிவுகள், பாலினம், வேலை, மணமான நிலை, மதப்பற்று முதலியவைகளில் அடையாளம் காண ஆடைகள் சிறந்த வழியாக செயல்படுகிறது.

பெரியோர்களுக்கு தேர்வு செய்வது போல் கவனமாக சிறுவர்களுக்கும், வளரிள வயதினருக்கும் தேர்வு செய்ய வேண்டும். நல்ல தரமான உடைகள் உடுக்க வசதியாகவும், அசைவுகளுக்கு வசதியாகவும் பாதுகாக்க எளிதாகவும் இருக்கும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top