பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

ஆடையின் சிறப்பமைப்பு

ஆடையின் சிறப்பமைப்பு பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

முன்னுரை

வயது, பாலினம் மற்றும் இனம் வெவ்வேறாயிருப்பினும் ஒவ்வொரு தனி மனிதனும் தான் சிறப்பான தோற்றத்துடன் விளங்க நிறைவாக அலங்கரித்து வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிகின்றனர். அலங்காரமற்ற வெறுமையான ஆடை ஒருவரின் தோற்றத்தை மங்க செய்கிறது. எனவே ஒவ்வொரு ஆடையும் அலங்கரிக்கப்பட்டு நிறைவு செய்யப்படுகிறது. இவ்விரண்டும் ஓர் நாணயத்தின் இரு பக்கங்கள் போல் விளங்குகின்றன. இவற்றை தனித்தோ, இணைத்தோ பயன்படுத்தலாம். ஓர் ஆடை சிறப்பாக தைத்து முடிக்கப்பட வேண்டுமெனில் இவ்விரண்டும் அவசியமானதாக கருதப்படுகிறது. ஆடையின் தோற்றத்தை மேம்படுத்த துணியை வெட்டுவதும் சரியான அளவில் தைப்பதும் போதுமானதாக அமையாது. பொருத்தமான அலங்காரத்தை தேர்வு செய்வது மற்றும் ஓரங்களை நிறைவு செய்வதும் ஆடை வடிவமைப்பின் ஓர் பகுதியாக கருதப்படுகிறது.

அலங்கரித்தல்

அலங்கரித்தல் ஆடைகளை அழகுபடுத்துகிறது. இவை ஆடையின் மேற்பரப்பில் அழகு படுத்துவதற்காகவோ அல்லது தைக்கப்பட்டு ஆடையின் ஒரு பகுதியாகவோ அமைக்கப்படுகிறது. பயன்படுத்தும் மனிதர், அவரின் உருவ அமைப்பு மற்றும் ஆடை வகையை பொருத்தும் அலங்கரித்தல் அமையும்.

அலங்கரித்தலின் வகைகள்

உரு அமைப்பு அலங்காரம்

உரு அமைப்பு அலங்காரம் என்பது ஆடையின் உருவ அமைப்பிலேயே செய்யப்படுகிறது. இதில் நேர்த்தியான வேலைப்பாடும் நுணுக்கமான வடிவமைப்பும் செய்யப்படுவதால் ஆடையுடன் பொருந்தி சிறப்பான வடிவத்தை கொடுக்கிறது. இது ஆடைக்கு நல்ல நிறைவை கொடுக்கிறது.

மேற்புற அலங்காரம்

ஆடையின் வடிவத்தோடு ஒத்துள்ள நிறங்கள் மற்றும் துணி வகைகள் அல்லது எதிர் நிறங்கள் மற்றும் துணி வகைகளைக் கொண்டு மிகவும் கலைநயத்தோடு, நுணுக்கமாக செய்யப்படும் வேலையாகும். மேற்புறம் வெட்டி ஒட்டுவது போன்ற செயல்பாடுகள் இதில் இல்லை.

உரு அமைப்பு அலங்காரத்தின் வகைகள்

பார்டுகள்

உடலின் வடிவமைப்பிற்கும், வளைவுகளுக்கும் ஏற்றவாறு ஆடைகள் அமைப்பதற்காக குறிப்பிட்ட அகலத்திற்கு ஒரு பக்கத்தில் மடிப்பு செய்யப்பட்டு மறுபக்கத்தில் ஒன்றும் இல்லாமல் ஒரு கூர்மையான முக்கோண வடிவில் உள்ள அமைப்பே பார்ட் எனப்படும். பார்டுகள் கை, கழுத்து வளைவு, தோள் போன்ற பகுதிகளில் அமைக்கப்படுகிறது.


சுருக்கங்கள் (Gatherings) :

துணியை ஒன்றாக இழுத்து சேர்ப்பதே சுருக்கமாகும். இது நிறைவை ஏற்படுத்தும் ஒரு முறையாகும். பெரிய துணியை கொண்டே உடையில் சிறுகலையை உருவாக்க சுருக்கங்கள் பயன்படுகின்றன. உடையை அலங்கரிக்கும் பொழுது, சுருக்கங்களை யோக், இடுப்பு கைகளில் உபயோகப்படுத்தலாம். சம இடைவெளி விட்டு இரண்டு வரிசைகளில் தைக்கப்படும் சுருக்கங்கள் 'ஷெர்ரிங்' (Shurring) எனப்படும். சுருக்கங்கள் அழகிற்காகவும், நேர்த்தியான வடிவத்திற்கும், தாராளத்தன்மைக்கும் தடையற்ற செயல்பாட்டிற்காகவும் செய்யப்படுகிறது.

மடிப்புகள் (Pleats) :

இது ஒரு விதமான குவிந்த துணி அமைப்பாகும். தரையிலிருந்து செங்குத்து அமைப்பாக சம இடைவெளியில் அமைந்து நல்ல தாராளத்தையும் கொடுக்கும் மடிப்புகள் ஒரு நேரான நேர்த்தியான உருவ அமைப்பை ஏற்படுத்துகிறது. இது பக்கவெட்டி மடிப்பு இரட்டை டுபட்டி மடிப்பு, தலைகீழ் பெட்டி மடிப்பு, நேரான மடிப்பு, ஆர்கன் பைப் மடிப்பு, கிக் மடிப்பு, கார்ட்ரிஜ் மடிப்பு, பின்ச் மடிப்பு என பல்வேறு வகையான மடிப்புகள் உள்ளன.

டக்ஸ் ('Tucks) :

இது மடிப்புகளை ஒத்து இருக்கும். ஆனால் ஆடையின் முழு நீளத்திலும் செய்யப்படுகிறது. ஆகையால் டக்குகளுக்கு கீழே தான் ஆடையின் நிறைவு ஏற்படுகிறது. சிப்பி டக்ஸ், வளைவு டக்ஸ், ஸ்காலப்டு டக்ஸ், குறுக்கு டக்ஸ் என பல வகைப்படும்.

ஸ்மாக்கிங் (Smoking) :

இந்த அலங்கார வேலைப்பாடு குறிப்பாக குழந்தைகள் ஆடைகள் மற்றும் ஜாக்கெட்டுகள் போன்றவற்றை அழகுபடுத்த பயன்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட அளவு துணியை இழுத்து சுருக்கங்களாக்கி செய்யப்படும் அலங்கார தையலாகும். இதில் ஹனிகோம்ப் (Honey comb), வீக்கிங் போன் (Hooking bone), டபுள் (Double) போன்றவை என பல்வேறு தையல்கள் காணப்படுகின்றன.

பிரெஞ்சு ஸ்மாக்கிங் அதிக துணியை சுருக்கி செய்யப்படும் ஒரு சிறந்த முறையாகும். இது நான்கு வகையில் செய்யப்படுகிறது. படம் 10.6ல் காட்டப்பட்டுள்ளது போன்று 1/2 அல்லது 1 சதுரங்களை முதலில் துணியில் வரையவும். அடுத்து படம் 1, 2 ஆகியவற்றில் காட்டப்பட்டது போன்று A புள்ளியையும் B புள்ளியையும் இணைக்கவும். அடுத்து படம் 3 போல் ABC யும் படம் 4 போன்று ABCDயும் இணைக்கவும். அடுத்து முடிச்சு போட்டு இழுத்து பின் அடுத்த சதுரத்திற்கு செல்லவும். வலது பக்கமுள்ள நூலை சற்று லூசாக விடவும். இது அழகையும், நிறைவையும் ஏற்படுத்தும்.

பல வகையான பயன்பாட்டு அலங்காரம் (Aplied decorations)

சித்திரப் பின்னல் வேலைப்பாடு :

பயன்பாடு அலங்கார முறைகளில் மிக சிறந்தது. சித்திரப் பின்னல் வேலைப்பாடு ஆகும். ஆனால் இதற்கு நல்ல திறன், நேரம் மற்றும் கலையுணர்ச்சி அவசியம் தேவை. சித்திர பின்னல் வேலைப்பாட்டை கைகளால் அல்லது இயந்திரத்தால் செய்யலாம். இது 11ம் வகுப்பு புத்தகத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது.

லக்னோவின் சிக்கன் வேலைப்பாடு (Chikankari Embroidery)

வெள்ளை நிற நூல்களை கொண்டு பொதுவாக செய்யப்படும் இது மிகச்சிறப்பான பிரசித்தி பெற்ற சித்திர வேலைப்பாட்டு முறையாகும். இது லக்னெள நகரத்தின் கலை ஆர்வத்தை பிரதிபலிக்கும் ஒரு சிறப்பான நுணுக்கமான வேலைப்பாடாகும். லக்னோவின் சிக்கன்காரி வேலைப்பாடு எளிமை மற்றும் மென்மையானது. ஆகையால் வெப்பமான தட்பவெப்ப நிலைக்கு ஏற்றது. இது செளகர்யம் மற்றும் கலையுணர்ச்சி மிக்க மதிப்புடையது.

200 வருடங்களுக்கு மேலாக உள்ள இந்த சிக்கன்காரி வேலைப்பாடு, உத்திரபிரதேசத்திலுள்ள லக்னெள பகுதிக்கு உரிய கலையாகும். இதன் தொடக்கத்தை ஆராயும்போது, முகலாய மன்னன் ஜஹாங்கிரின் ராணி, நூர்ஜஹானுடன் பெர்சியாவிலிருந்து இந்தியாவிற்கு வந்தது என தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகளிலுள்ள சில கெளரவமான இல்லங்களில் இவ்வகை சித்திரபின்னல் வேலைப்பாடு காணப்பட்டதற்கான சான்றுகள் இன்றளவும் உள்ளன. வேலைப்பாடு செய்யப்பட வேண்டிய வடிவம் கட்டை அச்சு அல்லது தாமிர அச்சுகள் மூலம் நிலையற்ற நிறங்களை (fugitive colours) பயன்படுத்தி துணிகளில் செய்யப்படுகின்றது. 40 வகையான தையல்கள் இதில் இருந்தாலும் 30 வகை மட்டுமே இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை 3 பெரும் தலைப்புகளாக நாம் பிரிக்கலாம். தட்டையான, மேடான, ஜாலி வேலை போன்ற திறந்த டிரெல்லிஸ். இதிலுள்ள உருவடிவங்கள் பெரும்பான்மையானவை முகலாய கலாச்சாரத்தை ஒத்திருக்கும்.

நாணய சித்திர வேலைப்பாடு (Coin work embroidery)

நாணய சித்திர வேலைப்பாடு ஆடைகளில் வசீகரமான அழகை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு நாணயமும் அடித்தளத்தில் நூல்கள், ரிப்பன்கள் அல்லது கம்பிகளால் நேர்த்தியாக பொருத்தப்படுகிறது. ஆடைகளில் மணிகள் போன்ற வேறு பொருட்களையும் இணைத்து ஒரு உலோக தொகுப்பு போன்ற அமைப்புடையதாக இது அமைகிறது. வட ஆப்கானிஸ்தான் மற்றும் வட பாகிஸ்தான் வரையிலுள்ள குச்சி பழங்குடி இனி மக்களிடமிருந்து தோன்றியுள்ள கலை இது. அவர்கள் இனத்தோற்ற காரணத்திற்காக நாணயங்களை பிளாஸ்டிக், முத்து மற்றும் உலோக பட்டன்களுடன் இணைத்து ஆர்வமூட்டக்கூடிய வேலைப்பாடு களை செய்தனர். அணிபவரின் பொருள் வசதியையும், செய்யும்

தொழிலை பிரதிபலிப்பதற்கு ஏற்பவும், உடைகளில் நாணயங்களில் சேர்க்கப்பட்டன. அநேகமாக ஆடையின் வடிவம் அல்லது உருவ அமைப்பிற்கேற்ற ஜியோமிதி அல்லது ஒத்த பரிமாண அமைப்பில் கோர்க்கப்பட்ட மணிகளுடன் நாணயங்களும் ஆடைகளுடன் இணைக்கப்பட்டன.

டோரி சித்திரபின்னல் வேலைப்பாடு (Dori Embroidery)

போரி சித்திர பின்னல் வேலைப்பாடு நாண் போன்ற வலுவான நூலினால் செய்யப்படுகின்றது. ஆடைகளை அழகுபடுத்துவதற்காக பல வண்ண நூல்களை பயன்படுத்தி கெளச்சிங் அல்லது ஜர்தோஷி தையல் முறை செய்யப்படுகிறது. இது பொதுவாக சில சீக்வின்கள் கோட்டா மற்றும் முத்துக்களையும் சேர்த்து மனம் கவரும் விதத்தில் அழகூட்டப்படுகிறது.

டோரி சித்திர வேலைப்பாட்டில் பயன்படுத்தப்படும் கம்பிகள் பல வண்ணங்களில் டிசைனை சிறப்பாக காட்டும் வகையில் இருக்கும். மோட்டிப் டிசைனின் வெளிப்புறத்தை அலங்கரிக்க கம்பி பயன்படுத்தப்படுகிறது. பின்புற தையல் வைத்து தைக்கப்பட்ட வடிவமானது லேஸ் வைத்து தைத்தது போன்ற தோற்றத்தையும் ஆடையை விட்டு தையல் மேலெழும்பியது போன்றும் விளங்கும். கம்பியுடன் கெளச்சிங் செய்ய பயன்படும் நூல் வெளியே தெரியாமல் ஒரே நிறமாகவோ அல்லது ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் சார்பற்ற நிறமாகவோ இருக்கலாம். தங்க நிற அல்லது வெள்ளி நிற கம்பிகளை சித்திரப்பின்னல் வேலைப்பாட்டில் பயன்படுத்துவதால் மனம் கவரும் விதத்தில் உலோகத்தின் பிரகாசத்துடன் மிளிரும்.

பழமையான கோட்டகரி வேலைப்பாடு என்பது வடிவமைப்பாளர்களுக்கு பிடித்த ஒன்றாகும். இது மலர் வடிவத்தில் அமைக்கப்பட்டு ஆடை முழுவதிலும் அல்லது ஆடையின் ஓரங்களில் இரு கோடு போன்ற அமைப்பில் வடிவமைக்கலாம். இது பொதுவாக தங்கம் மற்றும் வெள்ளி கோடுகளால் அமைக்கப்பட்ட சிறப்பான அலங்கார லேஸ் வேலைப்பாடு ஆகும்.

கோட்டகரி கலை என்பது அப்ளிக் சித்திரப்பின்னல் வேலைப்பாடு போன்றதாகும். இதில் பல விதமான புறத்தோற்றத் தன்மை ஏற்படுத்தக்கூடிய வகையில் தங்க அல்லது வெள்ளி நிற நெய்யப்பட்ட துணிகள். வேறு துணிகள் மீது பொருத்தப்படுகிறது. இது பல நேரங்களில் மலரின் இதழ்களையோ அல்லது இலைகளை நிரப்ப பயன்படுகிறது. அப்ளிக் சித்திரப் பின்னல் வேலைப்பாடு ஓரங்களில் சங்கிலித் தையல் அல்லது டோரி வேலை செய்து ஒரு உருவளவு அமைப்பில் செய்யப்படுகிறது. சில சமயங்களில் கோட்டாவால் (gota) ஓரங்கள் அமைத்து கின்னாரி (kinari) செய்யப்படுகிறது. இது சுருக்கங்களுடன் குஞ்சம் போன்ற கீழ் பக்கம் கொத்தான அமைப்பை கொண்டு ஓரங்களை அலங்கரிக்கும் முறையாகும்.

கட்ச் சித்திரப்பின்னல் வேலைப்பாடு

சிந்தி தையல் (Sindhi Stitch) என பழங்காலத்தில் அழைக்கப்பட்ட கட்ச் சித்திரப்பின்னல் வேலைப்பாடானது துணிகளின் தோரணையை அதிகமாக்க பயன்படுகிறது. இதில் காணப்பட்ட நீள தையல்களும், மேலே புடைந்திருக்கும் வடிவங்களும் துணியின் முழு மேற்பரப்பையும், நிரப்பும் வடிவமைப்பாக அமைகிறது. வடிவத்தின் ஓரங்கள் கைகளால் வரையப்பட்டு, மற்ற இடங்கள் முழுவதும் வட்ட வடிவ கண்ணாடித் துண்டுகளாலும், பொத்தான் துளை தையல் மூலமாகவும் நிரப்பப்படுகிறது. முழு கட்ச் வேலைப்பாடுமே குறுக்குத் தையல்களால் செய்யப்படுகிறது.

இது குஜராத் மாநிலத்திலுள்ள கட்ச் பகுதியை சேர்ந்த பழங்குடியினரால் செய்யப்படும் கண்ணைக் கவரும் உயர்தர சித்திர வேலைப்பாடாகும். இப்பகுதியில் மணப்பெண் தன் கணவன் வீட்டிற்கு திருமணம் முடிந்து வரும்போது அணிகலன்கள் மற்றும் பிற பொருள்களோடு சேர்ந்து அவளாலும், அவள் வீட்டு பிற பெண்களாலும் செய்யப்பட்ட உயர்தர ஆடம்பர சித்திர வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடைகளை கொண்டு வருவாள். கட்சில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் வடிவத்தில், சித்திர வேலைப்பாட்டிலும் அவர்களுக்கென்று ஒரு தனிப்பட்ட மாறுபட்ட நடைமுறையை வைத்துள்ளனர்.

பல கலைகளும் இணைந்த சிறப்பான இந்த கட்ச் வேலைப்பாடு, பொத்தான் துளை தையல், காம்பு, சங்கிலி, சாட்டின், ஹெர்ரிங்போன், திறந்த சங்கிலி தையல், இன்டர் லேசிங் சங்கிலி தையல், ரோமன் தையல், ஒட்டுத் தையல் மேற்புற டார்னிங் தையல் போன்ற பல தையல்களால் அழகுபடுத்தப்படுகிறது. இதில் பயன்படுத்தப்படும் நிறங்கள் பிரகாசமான சிகப்பு, கோரல், ஆரஞ்சு, பச்சை, இன்டிகோ, நீலவானநிறம், ரோஜா நிறம் மற்றும் பர்ப்பிள். இதில் பயன்படுத்தப்படும் மோடிப்கள் பூ வடிவம், நடனமாடும் மனித உருவம், மயில் வடிவம் மற்றும் ஜியோமிதி வடிவம்.

ஜர்தோஸி வேலைப்பாடு (Zardoze Embroidery)

ஜர்தோஸி வேலைப்பாடு மிகவும் கம்பீரமான உலோக சித்திர பின்னல் வேலைப்பாடாகும். முதலில் துணியை சுருக்கங்களில்லாமல் ஒரு மரச்சட்டத்தினுள் விரித்து வைத்து டிசைன் வரைந்து கொள்ள வேண்டும். பின் ஊசியை பயன்படுத்தி ஜர்தோஸி பொருட்களை ஊசியால் எடுத்து துணியில் பொருத்தப்படுகிறது. ஜர்தோஸி என்பது தங்க மற்றும் வெள்ளி நிறத் துகள்களால் நெய்யப்பட்ட சிக்கலான ஆடம்பர வேலைப்பாடாகும். இது மேலும் கண்கவரும் விதத்தில் பளீரென்று பட்டு, வெல்வெட்டு, புரோகேடு போன்ற துணிகளில் அமைத்து அதனுடன் முத்து அல்லது விலையுயர்ந்த அரியவகை கற்கள் கொண்டு பொருளாதார செழிப்பை வெளிப்படுத்தி வேலைப்பாடு செய்யப்படுகிறது.

ஒரு காலத்தில் இந்திய மன்னர்கள் மற்றும் அரசு குடும்பத்தினரின் உடைகளை அழகுபடுத்தி அலங்கரிக்க ஜர்தோஸி வேலைப்பாடு பயன்படுத்தப்பட்டது. ரிக்வேத காலத்திலிருந்தே ஜர்தோஸி வேலைப்பாடு இந்தியாவில் பழக்கத்தில் உள்ளது. கடவுள்களின் ஆடைகளை இந்த ஜர்தோஸி அலங்கரித்தலுக்கான சான்றுகள் இன்றளவும் உள்ளன. இது தூய்மையான வெள்ளி நூல்கள் கொண்டும், தங்க இலைகள் கொண்டும் பழங்காலத்தில் செய்யப்பட்டது. ஜர்தோஸி என்ற வார்த்தை பெர்ஷியாவிலிருந்து வந்ததாகும். ஜர் என்றால் தங்கம் என்றும் தோஸி என்றால் சித்திரபின்னல் வேலைப்பாடு என்றும் பொருள்படும். இந்த வேலைப்பாட்டில் பயன்படுத்தப்படும் பொருட்கள் சல்மா என்கிற தங்கநாண், சித்தாரா என்கிற உலோக நட்சத்திரங்கள், சம்கிகள், கண்ணாடி மணிகள், டப்கா என்கிற சுருண்ட தங்க நாண் மற்றும் கேசப் என்கிற கம்பிகள்

நுால் வேலைப்பாடு (Thread work Embroidery)

பல விதமான துணிகளில் பல வகையான நூல்கள் கொண்டு மிக சிறப்பான அலங்காரம் நூல் வேலைப்பாட்டில் செய்யப்படுகிறது. (உம். பருத்தி, பட்டு, கம்பளி, தங்கம் மற்றும் வெள்ளி கம்பிகள், இந்த வேலைப்பாடு செய்பவரின் வசதிக்கேற்ப சட்டத்தில் பொருத்தப்பட்டு அல்லது கைகளால் செய்யப்படுகிறது. பலவிதமான தையல்கள் இதில் பயன்படுத்தப்படுகின்றன. இரண்டு வகையான நூல் வேலைப்பாடு உள்ளன.

1. மேற்பரப்பு நூல் வேலைப்பாடு (Surface embroidery)

2. எண்ணிக்கையுடைய நூல் வேலைப்பாடு (Counted thread embroidery)

மேற்பரப்பு நூல் வேலைப்பாட்டில் பல விதமான அலங்கார தையல்கள் உருவடிவத்தில் செய்யப்பட்டு, பின்னர் நூலானது அடிப்படை துணியினுள் செலுத்தப்படாமல் துணிக்கு மேல் செலுத்தப்படுகிறது. எண்ணிக்கையுடைய நூல் வேலைப்பாட்டில் வேலைப்பாடு செய்பவர் ஊசியை துணிக்குள் செலுத்தும் முன் துணியில் நூல்களை எண்ணுவர். பொதுவாக சம எண்கள் உடைய துணிகளையே இதில் பயன்படுத்துவர். கான்தா (Kantha), கஷிதா (Kashidha), கசூட்டி (Kasuti), கரா (Gara), புல்காரி (Phulkari) மற்றும் கட்ச் வேலைப்பாடு (Katch work) ஆகியவை நூல் வேலைப்பாட்டின் வகைகளாகும். எல்லா வகையான தையல்களும் இதில் பயன்படுத்தப்படுகின்றன. (உ.ம்) சங்கிலி, சாட்டின், திறந்த சங்கிலி தையல், நீளகுட்டை தையல், பிரெஞ்சு தையல், இண்டர்லேசிங், ஹெர்ரிங் போன், ஓட்டுத்தையல், காம்புத்தையல், பின்புறத் தையல் முதலியன. (படம். 10.11).

ரிப்பன் சித்திர வேலைப்பாடு (Ribbon Work embroidery)

பட்டு ரிப்பன் சித்திர வேலைப்பாடு என்பது ஒரு கற்பனை மிகுந்த பழமையான கலையாகும். இவ்வேலைப்பாட்டில் பல வகை ரிப்பன்கள், சித்திரப்பின்னல் வேலைப்பாடு நூல்கள் மற்றும் வெண்மையான பருத்தி நூல் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இவற்றை கொண்டு அழகான பூ வேலைப்பாடும் சித்திர தையல்களும் செய்யப்படுகின்றன. இவ்வேலைப்பாட்டை தனித்தோ அல்லது வேறு வகைகளான பிரேசிலியன் சித்திர வேலைப்பாடு, குறுக்கு தையல்கள் (Cross stitch) கிரேசி குவில்டுகள் (Quilt) மற்றும் ஹார்ட்ஹேங்கர் (Hardanger) ஆகியவையுடன் இணைத்தும் செய்யலாம்.

பட்டு ரிப்பன் சித்திர வேலைப்பாடு ஒரு நேர்த்தியான விக்டோரியன் வேலைப்பாடாகும். பழமையான கலையாகும். தோற்றத்தில் மிக கடினமான சிக்கலான வேலைப்பாடாக இருந்தாலும் செய்வதற்கு மிக சுலபமானது. பெரும்பாலும் உடைகள், மற்றும் துணைப்பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகத் துணிகளில் கைகளால் இவ்வேலைப்பாடுகள் செய்யப்படுகின்றன. இக்கலையில் பல்வேறு வகையான சித்திய தையல் உபயோகிக்கப்படுகின்றன. அவற்றில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படுவது ரிப்பன் தையல், லேசி டெய்சி தையல், நேர் தையல், காம்புத்தையல் மற்றும் ப்ரெஞ்சு முடிச்சு ஆகும்.

இத்தையல்களை தனியாக அல்லது பல ஒன்று சேர்ந்து பெரிய பூக்கொத்து வடிவமோட்டில்கள் மற்றும் தையல் உருவடிவங்கள் உருவாக்க பயன்படுத்தப்படுகிறது. ரிப்பன் உபயோகித்து ரிப்பன் தையலை மட்டும் உருவாக்க முடியும். மற்ற தையல்களுக்கு ரிப்பன் அல்லது நூலினை பயன்படுத்தலாம். சம்கி, மணிகள் மற்றும் கற்கள் இவற்றை ரிப்பனுடன் இணைத்து ஆடைகளில், குவில்டுகளில் (Quilts) துணைப்பொருட்களில் மற்றும் வீட்டு உபயோகத் துணிகளில் செய்யப்படும் ரிப்பன் வேலைப்பாடு அவற்றிற்கு ஓர் பாம்பிகத்தையும், அழகையும் கொடுத்து தோற்றத்தை மேம்படுத்துகிறது. இறகுத் தையல், விரிந்த தையல், ஸ்பிலிட் தையல் (Split) விரிந்த முன் தையல் (Fly Stitch Fern) ஆகியவை ரிப்பன் வேலைப்பாட்டுடன் பயன்படுத்தப்படும் வேறு சில தையல்கள் ஆகும்.

கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடு (Stone work embroidery)

பல வகையான துணிகளில் கணக்கிலடங்கா வடிவங்களில் கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடுகள் அழகாக செய்யப்படுகின்றன. தற்கால தேவைகளுக்கு ஏற்ற விதமாக பல்வேறு புத்தம் புதிய வடிவங்களில் தனித்தன்மை வாய்ந்த வடிவங்கள் சந்தையில் கிடைக்கின்றன. பல்வேறு வடிவங்களில், வகைகளில், நிறைவு செய்யப்பட்ட விலையுயர்ந்த அரிய வகை கற்கள் மற்றும் சாதாரண கற்களும் அங்காடிகளில் கிடைக்கின்றன. நாகரீகத்தில் விருப்பமுள்ள வடிக்கையாளர்களின் விருப்பம் மற்றும் தேவைக்கேற்ற பல நிறங்களில் கற்கள் கிடைக்கின்றன.

சமிக்கிகள் வட்டு வடிவ சமிக்கிள் அலங்கார வேலைப்பாட்டிற்காக பயன்படுகின்றன. சமிக்கிகள் பல்வேறு வண்ணமிக வண்ணங்களிலும் ஜியோமிதி வடிவங்களிலும் கிடைக்கின்றன. பொதுவாக சமிக்கிகளை ஆடைகளிலும் நகைகளிலும் டைகளிலும் மற்ற பிற பொருட்களிலும் அலங்காரத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

சித்திரப்பின்னல் வேலைப்பாட்டை சிறப்பாக எடுத்துக்காட்ட கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடு செய்யப்படுகிறது. கிரிஸ்டல் மணிகளும், சாதாரண கற்களும் தற்பொழுது அதிகமாக பயன்படுத்தப் படு கிறது. முக் கி ய வடிவ அலங்காரத்தில் மையமாகவும், கோடுகளை ஏற்படுத்தவும் பிற அலங்காரங்களுக்கு பல்வேறு வகையான கற்களை பயன்படுத்தலாம். கற்களை எல்லா வகையான சித்திரப்பின்னல் வேலைப்பாட்டுடனும் இணைத்து சிறப்பான பிரத்தேய வடிவம் உருவாக்கலாம். பல நிறமுள்ள கற்கள் ஓர் பகட்டான தோற்றத்தை அளிக்கும். சித்திரப்பின்னல் வேலைப்பாட்டிற்கு ஓர் இயற்கையான தன்மையை அளித்து மேம்படுத்துகிறது. இவ்வகையான கற்கள் பதிக்கப்பட்ட வேலைப்பாடு சிறிது செலவை கொடுக்கக்கூடியது. எனினும், விலை குறைந்த கற்கள் கிடைப்பதினால் ஆடையின் அழகை மெருகூட்ட இதனை பயன்படுத்தலாம்.(படம் 1014).

சமிக்கி வேலைப்பாடு (Sequin work Embroidery)

சமிக்கி என்பது வட்டவடிவ தட்டை மணிகள். பல வகைகளில் நிறங்களில், ஜியோமிதி வடிவங்களில் ஆடையை அலங்கரிக்க அங்காடிகளில் கிடைக்கின்றது. இது ஆடைகள், கைவினைப்பொருட்கள் ஆகியவற்றை மெருகூட்டவும், கவர்ச்சியான தோற்றத்தை ஏற்படுத்தவும் பயன்படும் ஒரு வகையான சித்திர வேலைப்பாடாகும். இவை நகராமல் இருக்கவும், கீழே விழாமல் இருக்கவும் ஆடையின் மீது சமமாக தைக்கப்படுகிறது அல்லது எளிதில் நகரவும், ஒளியினை பெற்று பிரகாசிக்கவும் ஒரு புறமாக தைக்கப்படுகிறது. வாடிக்கையாளரின் தேவைக்கு ஏற்ப வானவில் நிறங்களில் பிரகாசமான சமிக்கிகள் கிடைக்கின்றன.

சமிக்கிகளை பொதுவாக ஆடைகள், அணிகலன்கள், பைகள் மற்றும் துணை பொருட்களை அலங்கரிக்க பயன்படுகிறது. ஒரு சில கலாச்சாரத்தில் நாணயங்கள் சமிக் கிக்கு பதிலாக பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்ட சமிக்கிகளையே பயன்படுத்துகிறோம். இவை ஸ்பாங்கில்ஸ் (spangles), பைலெட்ஸ் (paillettes) அல்லது டயமென்ட்ஸ் (diamentes) என்றும் அழைக்கப்படுகிறது. ஒளியை மிகவும் பிரகாசமாக எதிரொளிக்க சில சமிக்கிகள் பேஸட்ஸால் (facets) தயாரிக்கப்படுகின்றது. சமிக்கி என்ற பெயர் அராபிக் சிக்கா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் அர்த்தம் நாணயம் அல்லது வட்டு (disc). பெண்களின் ஆடைகளில் குறிப்பாக தலையை அலங்கரிக்க துண்டு, முகத்தை மறைக்கும் துண்டு, மார்புப்பகுதி மற்றும் இடுப்பு ஆகிய இடங்களில் சமிக்கி அல்லது நாணயங்கள் வைத்து தைப்பதை குடும்பத்தின் செல்வ வளத்தை எடுத்துக்காட்ட பின்பற்றப்பட்டது. இவ்வகையான பழங்கால நடைமுறை புதுவடிவம் பெற்று நாகரிக ஆடைகளில் சமிக்கிகளால் அலங்கரிக்கவும் ஆடை ஓரங்களை சமிக்கிகளால் நிறைவு செய்யவும் கலையாக பரிமாணம் அடைந்தது (படம் 10.15),

மணி வேலைப்பாடு (Bead work)

மணி வேலைப்பாடு என்பது ஆதிகாலம் முதல் இன்று வரை ஆடைகளின் மீது செய்யப்பட்ட மேற்புற சிறப்பமைப்புகளாகும். மணிகள் சிறியதாகவோ பெரியதாகவோ இடையில் துளையுடன் கிடைக்கின்றன. இத்துளையின் வழியாக நூல் செலுத்தப்பட்டு துணியுடன் இறுக்கமாக தைக்கப்படுகிறது. பல்வேறு அளவுகள், நிறங்கள் மற்றும் வடிவங்களில் மணிகள் சந்தையில் கிடைக்கின்றன. பிளாஸ்டிக், உலோகம், மரம் போன்ற வெவ்வேறு பொருட்களிலிருந்து தயாரிக்கப்படு கிறது. விருந்து நிகழ்ச்சிகளுக்கான அலங்கார உடைகளை அலங்கரிக்க பயன்படுகிறது. படம் 10.16

மேல் அடைப்பு அணி அப்ளிக் (Applique)

அலங்காரத்திற்காக ஓர் துணியின் மீது வேறு ஒரு துணியை தைப்பது ஒரு கலையாகும். பெரும்பாலும் ஒரே ஒரு வடிவம் மட்டுமே பயன்படுத்தப்படும். தனிமோட்டிப் கொண்ட இக்கலை ஒரு வகையான சித்திர வேலைப்பாடாகும்.

* அப்ளிக் வடிவத்தின் ஓரங்களை வெட்டி கைகளால் துணியின் மேல் தைக்கப்படுகிறது. சாட்டின் தையல், ஸ்லிப் தையல், பொத்தான் துவார தையல் அல்லது ஒட்டு தையல் பயன்படுத்தப்படுகிறது.

* ஸிக்ஸாக் (Zig Zag) தையல் அல்லது இயந்திர தையலை பயன்படுத்த அப்ளிக் வடிவத்தில் வெட்டப்பட்ட ஓரங்களை இயந்திரத்தின் உதவியால் துணியில் வைத்து தைப்பது மற்றொரு வகை

* மெத்தை (Quilt) வகை மேல் அடைப்பு அணியில் ஒரு மெல்லிய பஞ்சு, அடிப்படை துணி மற்றும் அப்ளிக் துணி இவற்றிற்கு இடையில் பொருத்தப்பட்டு கை தையல் அல்லது இயந்திர தையல் மூலமாக இணைக்கப்படுகிறது.

* நிழல் உருவ மேல் அடைப்பணி அப்ளிக்) தைக்கும்பொழுது, அடிப்படை துணி ஆழ்ந்த நிறத்திலும், அப்ளிக் துணி அதை விட சிறிது மங்கிய நிறத்திலும் இணைக்கப்படுகிறது. பிறகு அதன்மேல் ஒரு ஒளி ஊடுருவக்கூடிய மெல்லிய துணி வைத்து தைக்கப்படுகிறது.

* ப்ரீஹேண்ட் (Free hand) அப்ளிக் கடைகளில் கிடைக்க்கூடியது. இதனை துணியுடன் பொருத்தி பின்புறம் இஸ்திரி செய்வதன் மூலம் துணியுடன் இணைக்கலாம் (படம் 10.17).

குவில்டிங் (Quilting)

அலங்காரத்திற்காக, வெப்ப உணர்வு பெற மற்றும் பெரிய உருவுள்ளதாக தோன்ற செய்வதற்கு இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட துணிகளை இணைத்து தைக்கும் முறை குவில்டிங் எனப்படும். பழங்காலத்தில் கைகளால் செய்யப்பட்டு தற்போது இயந்திரத்தின் மூலமாக செய்யப்படுகிறது. துணியின் வகை, உள்ளே இணைக்கும் துணிகளின் அளவு, தையலின் அளவு இவற்றை மாற்றுவதன் மூலம் வேறுபட்ட விளைவுகள் மற்றும் தோற்றத்தை பெற முடியும்.

• ஒட்டுத் துணிகளை மேற்பகுதியில் பயன்படுத்தி குவில்ட்டிங் செய்யலாம்.:

* மேல் அடைப்பாணியை அப்ளிக்) பொருத்தி குவில்ட்டிங் செய்யலாம்.

* அலங்காரம் ஏதுமின்றி மேல்பரப்பு துணியில் மொத்த பகுதியிலும் குவில்டிங் செய்யலாம். (படம் 10.18).

கண்ணாடி வேலைப்பாடு (Mirror work)

பல்வேறு வடிவங்களில் ஆடையின் மேற்புறத்தில் கலைநயத்தோடு கண்ணாடிகளை வைத்து தைப்பது கண்ணாடி வேலைப்பாடாகும். சதுரம், வைர வடிவம் மற்றும் வட்டவடிவம் என பல வடிவங்களிலும்,

அளவுகளிலும் கண்ணாடிகள், கண்ணாடி வேலைப்பாட்டில் அலங்கரிக்க பயன்படுகிறது. புடவை, இரவிக்கை, பாவாடைகள் போன்ற எவ்வகை உடையிலும் கண்ணாடிகளை வைத்து தைக்கலாம். கண்ணாடிகளை தைத்த பின்பு மணிகளை பயன்படுத்த அலங்கரிக்கலாம். பல்வேறு வடிவம் மற்றும் அளவுகளில் கிடைக்கும் வெள்ளி பூசப்பட்ட பிளாஸ்டிக் சம்கிகளையும் கண்ணாடிகளுக்கு பதிலாக அலங்கரிக்கலாம். (படம். 10.19).

குரோஷாஃ (Crochet)

பிளாஸ்டிக் மரம் அல்லது உலோகத்தாலான குரோஷா ஊக்கை (crochet hook) வைத்து செய்யப்படும் பின்னல் வேலையாகும். மிகவும் நேர்த்தியான வேலைகளுக்கேற்றவாறு ஊசிகள் மற்றும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்த பலவகையான முடிச்சுகள் உள்ளன. அதற்கேற்றவாறு வடிவங்கள் மாறுபடும். பின்னிமுடிக்கப்பட்ட வேலைப்பாட்டை ஈரப்படுத்தி வடிவம் மாறாமல் வைத்து இஸ்திரி போடவும். குரோஷாவை கடைசியாக முடிக்கும் பொழுது 4” விட்டு நூலை கத்தரிக்கவும். பிறகு அதனை வெளியில் தெரியாதவாறு பின்னல் வேலைப்பாட்டினுள் செலுத்தி கச்சிதமாக முடிக்கவும்.

குறுக்குத் தண்டு (Bias Bind)

வளைவான பகுதிகளை (உ.ம். கழுத்து வளைவு) குறுக்குத் துண்டு இணைத்து முடிக்கப்படுகின்றது. ஆடையின் வெளிப்புற பகுதியில் துண்டை இணைத்து உட்புற பகுதியில் முடிக்க வேண்டும். மேலெழும்பிய தோற்றம் தேவையெனில் இரு துண்டுகளை பயன்படுத்த வேண்டும்.

பயாஸ் டியூபிங் (Bias tubbing)

இது மிகவும் சௌகரியமான நிறைவாகும். பொதுவாக 1” அகலம் கொண்ட குறுக்கு துண்டு இரண்டாக மடிக்கப்பட்டு ஆடையுடன் பொருத்தப்படுகிறது. ஆடையின் விளிம்பு முடிக்கப்பட்ட குறுக்கு துண்டின் அகலத்தை ஒத்திருக்கும். சிறு கைத்தையல்களை பயன்படுத்தி இதனை செய்யலாம். பொதுவாக கழுத்து வளைவுகள் மற்றும் பொத்தான் பொருத்தும் இடங்களில் செய்யப்படுகிறது. 10.4.18. பைப்பிங் (Pipings) யோக்குகள், கைப்பட்டைகள் (cuff) கழுத்து பட்டைகள் (collar), வளைந்த விளிம்புகள், இணைப்புப் பகுதி ஆகியவற்றில் செய்யப்படுவதாகும். 3/4” அகலம் உள்ள சார்ந்த நிறம் அல்லது சார்பற்ற நிறத்துண்டை வெட்டி பயன்படுத்தலாம். நல்ல பகுதியில் முதலில் இணைத்து பின் பாதியளவு திருப்பி பின்புறம் இணைக்கவும். தைத்து முடித்த பின் பெட்டி போடவும். (படம் 10.20).

லேஸ் (lace)

பதக்க உருவவடிவங்களை கொண்ட நீண்ட நாடா அமைப்பாகும். இது துணி அல்லது ஆடையின் விளிம்புகள் இணைப்புகள் ஆகியவற்றை நிறைவு செய்ய பயன்படுகிறது. இதனை வளைவுகளில் பொருத்தும்போது சிறு சுருக்கம் வைத்து தைப்பதன் மூலம் சிலும்பல் இல்லாத நிறைவை பெற முடியும். பல நிறங்கள், வடிவம் மற்றும் அளவுகளில் கிடைக்கின்றன. பொருத்தமானதை தேர்ந்தெடுத்து ஆடையில் இணைத்து அழகுபடுத்தலாம். குரோஷா ஊசி பயன்படுத்தி நாமே இதனை தயாரிக்கலாம். லேஸ் தயாரிப்பது மகளிரின் ஒரு ஓய்வுநேரக் கலையாகும். வீட்டில் தயாரிப்பவை ஒவ்வொன்றும் தனித்தன்மையுடனும் அழகுடனும் விளக்கும்.

நிறைவு செய்தல் (Trimming)

நிறைவு செய்தல் என்பது ஆடையின் விளிம்புகளை தைத்து முடிப்பதாகும். நிறைவு செய்தலில் வகைகளாவன

*அலங்கார நிறைவுகள்

ஆடையின் விளிம்பு ஓரங்களுக்கு முக்கியத்துவம் அளித்து அதனை அழகுபடுத்த லேஸ் அல்லது அலங்கார பொத்தான்களை பயன்படுத்தப்படுகிறது. இவைகளை சரியான முறையில் பயன்படுத்தப்படாமல் போன்ற நிறைவற்ற தோற்றத்தை அளிக்கும். இவ்வகை நிறைவுகள் பயன்பாடற்றவை.

*பயன்பாடுடைய நிறைவுகள் (Constructive trimming) :

ஆடையின் உடல் வடிவம், வளைவுகள் மற்றும் முக்கிய இணைப்புகளில் தைக்கப்பட்டு முடிக்கப்படுகின்ற நிறைவுகளாகும்.

இவ்விரண்டு வகைகளும் ஆடையை நிறைவி செய்ய பயன்படுகிறது. இவற்றிற்கு இடையே உள்ள வேற்றுமை இவை பயன்படுத்தப்படும் இடங்களாகும்.

பல்வேறு வகையான நிறைவுகள்

சித்திரப்பின்னல் நீறைவுகள் (Embroidered edges)

இதனை சுருக்கங்கள் வைத்தும் அல்லது சுருக்கங்கள் வைக்காமலும் நிறைவு செய்யலாம். முன்பாகவே திட்டமிட்டு 1 1/2 மடங்கு விளிம்பை விட அதிகமாக சுருக்கம் வைத்து தைக்கலாம். காலர்கள், கையின் கப்கஸ் சுருக்கமில்லாத ஹெம் பகுதி மற்றும் ஆடையின் விளிம்பு பகுதியில் சுருக்கங்கள் இல்லாமல் தைக்கலாம் (படம் 10.21).

ரிக்ரேக் (Rick-Rack)

இவை லேப்பட் இணைப்பு, மடிப்புகள் போன்ற பகுதிகளை தைப்பதற்கு பயன் படக் கூடிய நெய்யப்பட்ட வளைந்த பட்டைகளாகும். சலவை செய்வது எளிமை. இவை நேரான ஓரம் அல்லது மத்திய பகுதிகளில் உள்பக்கம் தைக்கப்படுகின்றது.

பிரிஞ் (Fringe)

மாவு அல்லது ஊடை நூல் கொண்டு தயாரிக்கப்படுகிறது. பிரிஞ் தயாரிக்க தேவையான அளவு மற்றும் அதனுடன் 1/4 அதிகமாக நூலை அட்டையில் சுற்றிக்கொண்டு அதன் மீது இயந்திர தையல் இட வேண்டும். பிறகு நூலினை கத்தரித்து அட்டையை அகற்ற வேண்டும். தைக்கப்பட்ட நூலினை ஆடையின் ஓரங்களில் இணைக்க வேண்டும். இவற்றை சட்டை பையின் ஓரங்களில் அலங்காரத்திற்கு பயன்படுத்தலாம். இரண்டு வகையான பிரிஞ்கள் உள்ளன. அவை சாதாரண பிரிஞ் மற்றும் முடிச்சிடப்பட்ட பிரிஞ்.

சாதாரண பிரிஞ் (Plain Fringe) :

பட்டு அல்லது பருத்தி, கம்பளி நூலிழை அல்லது குரோஷா நூல் கொண்டு ஒரு தடிமனான காகிதத்தால் சுற்ற வேண்டும். தேவைப்பட்ட அளவு சுற்றியவுடன் அதன் மேல் பகுதியில் இயந்திர தையல் போடவேண்டும்.

கீழ்பகுதியில் உள்ள நூலை வெட்டி பின்பு காகிதத்தை பிரித்து எடுக்க வேண்டும். துணியுடன் தைக்கப்பட வேண்டிய விளிம்பு பகுதி பொருத்தப்பட்டு பிறகு இணைத்து தைக்க வேண்டும் (படம் 10.23)

முடிச்சிடப்பட்ட பிரிஞ் (Tied Fringe) :

நீண்ட இரட்டை நூல் கோர்க்கப்பட்ட ஊசியைக் கொண்டு ஆடையின் விளிம்பு ஓரத்தில் உள்ள பிரிந்த நூல்களை குறிப்பிட்ட அளவுகளில் சமமாக முடிச்சிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்ட இடைவெளிகளில் முடிச்சிட்டு முடிப்பதன் மூலமாக இதனை நிறைவு செய்யலாம். (படம் 10.24).

டேசல்ஸ் (Tassels)

டேசல்ஸ்களை வேறுபட்ட நிறம் அல்லது அளவுடைய சித்திரப்பின்னல் வேலைப்பாட்டு நூல் அல்லது சாதாரண நூல் கொண்டு இதனை தயாரிக்கலாம். இதனை தேவைப்பட்ட நீளம் மற்றும் பருமனில் தயாரித்துக் கொள்ளலாம். இதனை தயாரிக்க டேசல்ஸ் அளவு உடைய அட்டையை எடுத்துக்கொண்டு அதன் மீது விருப்பமான அளவு நூலை சுற்றவேண்டும். மேல்முனையில் உள்ள நூலை முடிச்சிட்டுக் கொண்டு கீழ் முனையில் உள்ள நூலை வெட்டிவிட வேண்டும். முடிச்சிட்ட பகுதியினை ஆடையுடன் கையினால் தைக்க வேண்டும்.

லேஸ் வேலைப்பாடு (Lace work)

ஆடையுடன் பல்வேறு வகைகளில் லேஸ் இணைக்கப்படுகிறது. ஆடையின் விளிம்பில் லேஸை இணைக்க ஆடையின் பின்புற விளிம்பில் லேஸ் பொருத்தப்பட்டு பின் மேல் தையல் இட வேண்டும். லேஸை ஆடையின் விளிம்பு ஓரங்களில் நடுபகுதியில் இணைப்பு பகுதிகளில் தைக்கலாம். வளைந்த ஓரங்களில் சுருக்கி வைத்து தைப்பது நிறைவை தரும். முடிக்கப்படாத விளிம்பு ஓரங்களில் தைக்கும் பொழுது லேஸை மேற்புறாக பாஸ்டிஸ் தையல் கொண்டு தைத்து பின் ஆடையின் விளிம்பு பகுதியை உள்மடித்து தைக்க வேண்டும்.

• ஒட்டுத் தையலை பயன்படுத்தி லேஸ் மோட்டிப் வடிவமைப்புகளை இணைக்கலாம்.

* வெவ்வேறு நிறங்களில், குறைந்த விலையில், உறுதியான தன்மையும் ரிக்ராக் கிடைக்கின்றது. இதனை ஆடையின் மேற்பரப்பில் மையத்தில் வைத்து ஆடையை அழகுபடுத்தலாம்.

ஒட்டு அலங்காரம் (Patch work)

மூன்றிற்கு மேற்பட்ட சிறு துணி துண்டுகளை கைகள் (அ) இயந்திரத்தால் இணைத்து அலங்கரிக்க பயன்படும் கலையாகும். இதில் அளவு, வடிவம் மற்றும் துண்டுதுணிகளின் எண்ணிக்கை மாறுபடும். இரண்டு துண்டுகளை நேராக வைத்து இயந்திர தையலிட்டு இணைப்பது சாதாரண ஒட்டு அலங்காரமாகும்.

* குவில்ட் செய்வதற்கு பல அடுக்கு துணிகள் இணைத்து இயந்திரத்தில் தைக்கப்படுகிறது.

* குறுக்குப் பட்டைகள் இணைக்கப்பட்டு தேவைப்பட்ட வடிவங்களில் (stagger) ஸ்டேகர் வகை ஒட்டு அலங்காரம் செய்யப்படுகிறது. (படம் 10.25).

பாம்பான் (Pompon)

கம்பளி நூலின் ஓரத்தை நிறைவு செய்ய கம்பளி நூலினால் தயாரிக்கப்படுபவை. இரண்டு வட்டவடிவ அட்டைகளை பாம்பான் செய்ய தேவையான அளவுகளில் எடுத்துக்கொள்ள வேண்டும். மத்தியிலிருந்து ஓரங்களுக்கு நூலை சுற்ற வேண்டும். மத்தியில் நூலை நன்கு முடிச்சிட்டு பின்பு ஓரத்தை கத்தரிக்க வேண்டும். அட்டையை நீக்கிவிட்டு தேவையான வடிவத்தில் விளிம்புகளை சரிசெய்யவும். (படம் 10.26).

மேற்கூறிய வகைகளை தவிர வளைவு ஓரங்கள் பொத்தான்கள், பட்டைகள், முடிச்சுகள், ஷல் விளிம்பு (shul edges) ட்ராபுன்ட்ஸ் (trapunts) குவெயிலிங் (Quaiting) போன்ற நிறைவுகளும் உள்ளன மொத்தத்தில் அலங்காரங்களையும், நிறைவுகளையும் இணைத்து ஆடையை அழகாகவும், வசதியானதாகவும் தைக்கலாம்.

முடிவுரை (Conclusion)

உடுத்துபவரின் தோற்றத்தை மேம்படுத்தவும், தனித்தன்மையை வழங்கவும் ஆடையானது ஏதேனும் ஒரு வகையில் நிறைவு செய்யப்பட வேண்டும். ஆடை வடிவமைப்பாளர் சுலபமாக கற்கவும் தேர்ச்சி அடையும் வகையில் அலங்கரித்தல் மற்றும் நிறைவு செய்யும் முறைகள் உள்ளன. இவற்றை பயன்படுத்தி தன்னுடைய சொந்த வடிவங்களை உருவாக்க வேண்டும். இவை பணவருவாய் ஈட்டி தரக்கூடிய ஓர் வழியாகவும் அமைகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top