பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஆடை அணிகலன்கள் உற்பத்தி / துணிகளில் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

துணிகளில் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல்

துணிகளில் சாயமேற்றுதல் மற்றும் அச்சிடுதல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

முன்னுரை

சாயமேற்றுதலும், அச்சிடுதலும், துணிகளின் அழகை கூட்டுவதற்காக வண்ணங்களை சேர்த்து முடிவில் செய்யப்படும் செயல்பாடாகும். துணிகளுக்கு வண்ணத்தை ஏற்றுவதற்கு பின்பற்றப்படும் முறையை பொருத்து சாயமேற்றுதலும், அச்சிடுதலும் வேறுபடுகிறது. சாயமிடும் செயல்பாட்டில், இழை, துணியின் நூலிழை ஆகியன சாய மூலப் பொருட்களில் மூழ்கி வைக்கப்பட்டு இழைகளில் சாயம் ஏற்றப்படுகிறது. ஒரு மாதிரி வடிவமைப்பு அல்லது டிசைன் பொதுவாக துணியின் மேல் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வண்ணச்சாயங்களை பசையாக பயன்படுத்தி அச்சிடப்படுகிறது.

சாயத்தின் வகைப்பாடுகள்

சாயங்கள் இயற்கை மற்றும் செயற்கை சாயங்கள் என இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.

இயற்கை சாயங்கள் என்பன தாவரங்கள், விலங்குகள் மற்றும் தாதுக்கள் ஆகிய மூன்றில் இருந்தும் பெறப்படுகின்றன. .

தாவர சாயங்கள்:

4000 ஆண்டுகளுக்கு முன், எகிப்தியர்கள் இண்டிகோ சாயங்களைப் பயன்படுத்தி உள்ளனர். இண்டிகோ சாயம் குறிப்பிட்ட தாவரத்தின் தண்டு மற்றும் இலையில் இருந்து எடுக்கப்பட்டது. சிவப்பு நிறத்தை உறிஞ்சக் கூடிய மேடார் (Madder plant) தாவரத்தின் வேர்களில் இருந்து அலிசாரின் சாயம் எடுக்கப்பட்டது. (Log wood )மரத்தில் இருந்து எடுக்கப்பட்ட மரத்துண்டுகளில் இருந்து பட்டு மற்றும் பருத்தி துணிகளில் கருப்பு நிறம் கொடுக்க லாக்வுட் சாயங்கள் எடுக்கப்படுகின்றன.

விலங்கினச் சாயங்கள் :

காக்கினியல் சாயம் என்பது காக்கஸ் காக்டை என்ற பூச்சியிலிருந்து எடுக்கப்பட்டது. பெண் இன பூச்சிகளை கொன்று பிறகு சாயம் எடுக்கப்படுகிறது. சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறங்களை பட்டு மற்றும் கம்பளி துணிகளில் ஏற்றுவதற்கு இச்சாயங்கள் பயன்படுகின்றன. ஓட்டு மீன்களில் இருந்து டிரியன் பர்ப்பிள் (Tyrian Purple) சாயம் தயாரிக்கப்படுகிறது.

தாது சாயங்கள் :

இயற்கை தாதுக்களில் இருந்து சில வகையான சாயங்கள் கிடைக்கின்றன. உதாரணம்: இரும்புடன் கூடிய வெளிர் மஞ்சள் நிறம். ஆ. செயற்கை சாயங்கள் : 1856ல் நிலக்கரி தாரில் இருந்து செயற்கை சாயம் முதன் முதலில் எடுக்கப்பட்டது. பிறகு அதிக எண்ணிக்கையில் சாயக்கலவைகள் நிலக்கரி தாரில் இருந்து தயாரிக்கப்பட்டு, அழகிய வண்ணத்தை பெற மேம்படுத்தப்பட்டு, வண்ணம் நிலைத்து இருக்குமாறு செய்யப்படுகிறது. அவை பின் வருவனவாகும்.

நேரடி சாயம் அல்லது உப்பு சாயம் :

நேரடி சாயம் விலங்கின மற்றும் தாவர இன துணிகளுக்கு ஏற்றப்படுகிறது. ஆனால் பொதுவாக பருத்திகளுக்கு மட்டுமே ஏற்றப்படுகிறது, இதுவே நேரடி பருத்தி சாயம் என்று கூறப்படுகிறது. இச்சாயங்கள் நீரில் கரையக் கூடியன. இவை அமைன்கள் மற்றும் பினால்களை முதன்மைப் பொருட்களாகக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. சாயக் கரைசலில் சிறிதளவு உப்பு சேர்க்கப்படுவதன் காரணத்தால் இந்த நேரடி சாயங்கள், 'உப்புச் சாயங்கள்' என்றும் அழைக்கப்படுகின்றன. மேலும் அசிடிக் அமிலம் மற்றும் சோடியம் டைகுரோமேட் கரைசலுடன் உட்படுத்தப்பட்ட செயல்பாட்டின் மூலம் சலவை செய்யும் பொழுது சாயம் நீங்குவதில்லை. சாய வண்ணங்கள் ஒளியினால் ஒரளவே பாதிப்படையும், சலவையில் அதிக பாதிப்படைவதால் பிரகாசம் குறைந்து இருக்கும்.

காரச் சாயங்கள் :

முதல் நிலக்கரி தார் சாயம் என்பதே காரச் சாயங்கள் ஆகும். கரிம நிறமி கார உப்புக்களே காரச் சாயங்கள். பட்டு மற்றும் கம்பளியில் அதிக பிரகாசத்தை அளிக்கக் கூடிய வகையில் காரச் சாயங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காரச்சாயங்கள் என்பவை நேர் அயனி சாயங்கள் என்றும் கூறப்படுகின்றன. மார்டண்ட், பானிக் அமிலம் ஆகியன காரச்சாயங்களாகும். பருத்தி துணிகளுக்கு, லினென், அசிடேட், நைலான், பாலியஸ்டர் மற்றும் அக்ரிலிக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சாயம் அழகிய வண்ணத்தை கொடுக்கும், ஆனால் சூரிய ஓளி, சலவை மற்றும் வியர்வையால் பாதிப்படையாது.

அமிலச் சாயங்கள் :

அமிலச் சாயங்கள் என்பன சோடியம் அல்லது கால்சியம் உப்புக்களின் வண்ணகரிம அமிலங்கள் ஆகும். இவை கம்பளி மற்றும் பட்டு துணியில் அநேகமாக பயன்படுத்தப்படுகின்றன. அமிலச் சாயங்கள் விலை குறைந்தவை மற்றும் ஒளியால் பாதிப்படையாதவை. ஆனால் சலவையால் பாதிப்படையும். காரத்துடன் சோப்பு சேர்க்கப்பட்டு பயன்படுத்தினால் துணிகளில் நிற மாற்றம் ஏற்படும்.

மார்டண்ட் அல்லது குரோம் சாயங்கள் :

சோடியம் அல்லது பொட்டாசியம் டைகுரோமேட் மார்டண்டானது சாயத்தொட்டியில் சேர்க்கப்படுகிறது. இந்த மார்டண்ட மற்ற பிற சாயங்களுடன் இணைந்து துணிகளுக்குள் ஊடுருவிச் செல்லும். கம்பளி துணியில் சாயம் ஏற்றுவதற்கு மார்டண்ட் சாயம் பயன்படுகிறது. மேலும் பருத்தி துணியில் அச்சிடுவதற்கும் பயன்படுகிறது. இந்த மார்டண்ட் சாயங்கள் ஒளியால், சலவையால், வியர்வையால் பாதிப்படைவதில்லை.

உருவாக்கப்பட்ட சாயங்கள் :

இச்செயல்பாட்டிற்கு துணிகளில் அடிப்படையாக ஒரு சாயம் ஏற்றப்பட்டிருத்தல் மிகவும் அவசியம். இந்த செயல்பாட்டிற்கு பிறகு டைஅசோடைசிங் செயல்பாடு நடைபெறம். அப்போது சாயம் ரசாயன மாற்றத்திற்க உட்பட்டு புதிய ரசாயனங்களுடன் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இதுவே உருவாக்கப்பட்ட சாயங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. முழுமையான சாயம் இவ்வாறு உருவாக்கப்படுகிறது. உருவாக்கப்பட்ட சாயங்கள் சலவைகளால் பாதிப்படைவதில்லை ஏனெனில் இவை, நூலிழைகளுக்குள் ஊடுருவிச் செல்லுமாறு தயாரிக்கப்படுகிறது.

சல்ஃபர் சாயங்கள் :

இவை நீரில் கரையாது. மற்றும் இச்சாயம் காஸ்டிக் சோடாவையும், சோடியம் சல்ஃபைட்டையும் பயன்படுத்தும் போது கரைகிறது. 1879 ஆம் ஆண்டு முதன் முதலில் சல்பர் சாயங்கள் தயாரிக்கப்பட்டு பருத்தி மற்றும் லினென் துணிகளுக்கு பயன்படுத்தப்பட்டது. இச்சாயங்கள். சலவை, ஒளி, வியர்வையால் பாதிப்படைவதில்லை, ஆனால் குளோரின் அளவு அதிகப்படியாகும்போது துணியில் சாயத்தை எடுத்துவிடுகிறது.

வாட்சாயங்கள் :

முதல் வாட் சாய்மான இண்டிகோ 1879ல் உருவாக்கப்பட்டது. பருத்தி, லினென், ரேயான போன்ற துணிகளுக்கு வாட்சாயங்களே நிலைத்து இருக்கக் கூடியவை. ஒளி, அமிலம் காரம் மற்றும் ஆக்ஸிகரண வெளுப்பான்களால் வாட் சாயங்கள் பாதிப்படைவதில்லை. வாட் சாயங்கள் என்பன கரையாத நிறமிகள், ஆனால் சோடியம் ஹைட்ராக்ஸைடில் உருவாக்கப்பட்ட ஹைட்ரோசல்பைட் போன்ற அடர்ந்த குறைப்பான்களை பயன்படுத்தி, நீரில் வாட்சாயத்தை கரைக்கலாம். துணியானது இக்கரைசலில் மூழ்கச்செய்யப்படுகிறது. காற்றுடன் தொடர்பு ஏற்படும் போது அல்லது ஆக்ஸிகரண தொட்டியில் (பைகுரோமேட் மூழ்க வைக்கும் போது சாயம் கரையாத நிலையில் நாரிழையாக இருக்கிறது.

வினைபுரியும் சாயங்கள் : இவை 1957ல் உருவாக்கப்பட்டன. நாரிழை மூலக்கூறுகளுடன் வினை புரிந்து இச்சாயங்கள் ஒரு ரசாயனக் கலவையை உருவாக்கும். இச்சாயங்கள் முதன்முதலில் செல்லுலோஸ் நாரிழைகளுக்காக வடிவமைக்கப்பட்டன. ஆனால் தற்போது கம்பளி, பட்டு, நைலான், அக்ரிலிக்குகள் மற்றம் இந்த இழைகளை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட நாரிழைகளுக்காகவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒளி மற்றும் சலவையால் பாதிப்படையாமல் இருப்பதே வினைபுரியும் சாயங்களால் ஏற்படுகின்ற நன்மைகளாகும். இந்த சாயங்கள் ஆழ்ந்த ஒளிமிக்க நிறங்களை கொடுக்கக் கூடியன.

நிறமி சாயங்கள் :

இவை உண்மையான சாயங்கள் அல்ல ஏனெனில் நிறமிசாயங்கள் இழைகளுடன் பிணைந்து இருப்பதில்லை மற்றும் இழைகளுக்கு காயம் ஏற்றப்படும்போது துணியில் ரெசின்களுடன் பிணைந்து இருக்கும். பிறகு அதிக வெப்பத்தில் சரி செய்யப்படுகிறது. நிறங்கள், வெளிறிய நிறங்கள், பளிச்சென்ற உலோக நிறங்களான பொன் நிறம் பெரும்பாலும் பருத்தி துணிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும் கம்பளி மற்றும் மனிதானல் தயாரிக்கப்பட்ட நாரிழைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

நீறமற்ற சாயங்கள் ஒளிச்செறிவால் பளீராகுவன (Optical brighteners) :

இச்சாயங்கள் ப்ளுரசன்ட் வெளுப்பான்கள் அல்லது ஒளிச்செறிவால் பளீரென ஆகக்கூடியன என்று அழைக்கப்படுகின்றன. இந்த வெள்ளை நிறம், புற ஊதா ஒளி உறிஞ்சப்படுவதாலும், நீல நிறம் எதிர் ஒளித்தல் மூலமாகவும் ஏற்படுகிறது. பருத்தி, அக்ரிலிக்குகள், கம்பளி, அசிடேட் மற்றும் நைலான். ஆகியனவற்றிற்கும் ஒளிச்செறிவால் பளீரென தெரியக் கூடியது. இவற்றை வெளுக்கச் செய்யும் போதும், ரெசின் கொண்டு சீர்செய்யும் முன்பும் அல்லது ரெசினை பயன்படுத்தும் போதும் செயல்படுத்தப் படுகிறது.

துணிகளில் சாயம் ஏற்றும் போது உள்ள பல்வேறு நிலைகள்

துணிகள் உருவாக்கப்படும் நிலைகளான இழையில் இருந்து துணியாக உருவாக்கப்படும் நிலையிலோ அல்லது சில ஆடைகள் உருவாக்கப்படும் போது துணிகளில் சாயம் ஏற்றும் போது கீழ்வரும் முறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஸ்டாக் பையிங் :

என்பது பருத்தி இழைகள் நூற்கப்படுவதற்கு முன் சாயம் ஏற்றப்படுவதாகும். கட்டுகட்டாக வைக்கப்பட்ட இழைகள் பேல்களில் இருந்து எடுக்கப்பட்டு பெரிய வாட்களாக கட்டப்பட்டு சாயக் கரைசலில் உயர் வெப்ப நிலையில் வைக்கப்படுகிறது. மிகவும் விலை உயர்ந்த மற்றும் சிறந்த சாயம் ஏற்றும் முறையான ஸ்டாக் டையிங்கில், நிறமானது இழைகளுக்குள் ஊடுருவிச் செல்லும். ஆனால் உடனடியாக இழையினுள் நிறம் ஏறாது. ஸ்டாக் டை செய்யப்பட்ட இழைகளை உடனடியாக சாயமேற்றப்படாத இழைகளைப் போல் நூற்க முடியாது ஏனெனில் ஸ்டாக் டை செய்யப்பட்ட இழைகளில் இழுதன்மை குறைந்து விடும். ஆனால் ஒரு சில வழவழப் பாக்கும் எண்ணெய் பசை பொருளை இறுதி நிலையில் சேர்த்து இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.

டாப் டையிங் :

கம்பளி ஆடை தயாரிக்கும் தொழிற்சாலைகளில் டாப் டையிங் பயன்படுத்தப்படுகிறது. பாப் என்பது சிறு கம்பளி துணிகளில் இருந்து வாரப்பட்ட கம்பளி இழையை 1% இஞ்ச் (30 மிமீ கனம்) கயிறு போன்று தயாரிப்பதாகும் இந்த பாப் பிறகு துளையிடப்பட்ட சக்கர உருளைகளில் சுற்றப்படும், பிறகு சாயக் கரைசல் அந்த உருளையின் மீது ஒரே சீரான முறையில் ஊற்றப்படுகிறது. இம்முறை சாயம் ஏற்ற சிறந்த முறையாகும்.

நூ ழை டையிங் (Yarn Dyeing) :

நூலிழை நிலையில் சாயம் ஏற்றப்படுவதே நூலிழை டையிங் என கூறப்படுகிறது. நூலிழையில் சாயம் ஏற்றப்பட்ட துணிகள் வழக்கமாக அழுத்தமான ஆழமான நிறமுடையதாக இருக்கும். நூலிழை நிலையில் சாயம் ஏற்ற அடிப்படைக் காரணம் என்ன வெனில், பல்வேறு நிற நூலிழைகளைக் கொண்டு விரும்பத்தக்க கோடுகள், கட்டங்கள் மற்றும் பிளைடுகளை நெசவு செயல்பாட்டில் செய்வதே ஆகும். உதாரணத்திற்கு சாம்ப்ரேக்கள் (Chambrays) வழக்கமாக நீட்டுப் போக்கில் உள்ள வண்ண இழை மற்றும் நிரப்பு இழை வெள்ளை நிறமானதாகவும் கொண்டு நெய்யப்படுவதாகும். பிற உதாரணங்கள் : கட்டம் போட்ட கிங்காம், ஷெப்பர்ட்களின் கட்டங்கள், ப்ளைடு மற்றும் சீர்சக்கர்.

பீஸ் டையிங் :

இம்முறையில் மொத்தமாக துணிகளில் சாயம் ஏற்றப்படுகின்றன. பீஸ் டையிங் என்பது முற்றிலுமாக திருப்திகரமானது. சீராக ஒரே பரப்பாக செய்து, ஊடுருவுதல் மற்றும் மொத்தத்தில் நிறம் நிலைத்து இருக்க சரியான சாயங்கள் பயன்படுத்துவதை ஒத்து இருக்கும்.

துணிகள் ஒரே வகையான இழையாலோ அல்லது பல்வேறு இழைகளை கலந்தோ அல்லது பல்வேறு நூலிழைகளை கலந்தோ செய்யப்பட்டிருந்தால் துணிகளில் பீஸ் டையிங் செய்யலாம். ஒரே வகையான இழையால் துணி செய்யப்பட்டிருந்தால், டையிங் சுலபமானதாக இருக்கும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட சாயம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. துணியானது பல்வேறு வகையான இழைகளால் செய்யப்பட்டு இருந்தால், குறிப்பிட்ட செய்முறைகளை பயன்படுத்தி, பல்வேறு இழைகளுக்குத் தகுந்த சாயங்களை தேர்ந்தெடுத்து சாயமிடலாம். அவை யூனியன் டையிங் மற்றும் க்ராஸ் டையிங் ஆகும். அ.

யூனியன் டையிங் :

பல்வேறு இழைகளுக்கு பல்வேறு சாயங்கள் பயன்படுத்தப்பட்டு சிறந்த நிறங்களை பெறலாம் ஒவ்வொரு வகையான இழையையும் தகுந்த குறிப்பிட்ட சாயத்தை கொண்ட சாயத்தொட்டியில் போட்டு சாயம் ஏற்றலாம்.

க்ராஸ் டையிங் :

பல்வேறு வழி முறைகளில் ஏதேனும் ஒரு முறையில் க்ராஸ் டையிங் செய்யப்படுகிறது. ஸ்டாக் டையிங் அல்லது நூலிழை டையிங் உடன் துணிகளில் சாயம் ஏற்றும் முறையை தொடர்ந்து இணைத்து செய்வது க்ராஸ் டையிங் ஆகும்.

கரைசலில் நிறமி சேர்த்தல் அல்லது போய் டையிங் :

சரண் மற்றும் கண்ணாடி இழைகள் முதல் ரேயான் வரையான மனிதன் தயாரிக்கும் துணிகளுக்கு நிறமி சேர்க்கப்பட்ட கரைசல் அல்லது போப் டையிங் எனும் செயல்பாடு பயன்படுத்தப் படுகிறது. போப் டையிங்கில், ஸ்பின்னரெட்கள் வழியாக இழைகள் (பிலமென்ட்கள்) ஆகும் முன் டையானது கரைசலில் சேர்க்கப்படுகிறது. இம்முறையில் நிறம் அதிக காலம் நீடித்து நிலைத்து நிற்கிறது. இம்முறையில் நல்ல விளைவுகள் கிடைக்கின்றன.

துணிகளில் சாயமிடுதல்

தையல் செய்யப்படாத சில வகை துணிகளான உள்ளாடைகள், பேண்டிஹோஸ், ஸ்வட்டர்கள், நிறைவு பெற்ற பின் சாயமிடப் படுகிறது. இது போன்ற துணிகள் தளர்த்தியாக பெரிய நைலான் வலை பின்னல் பையில் போடப்படுகிறது. பிறகு பையானது பெரியசாயத் தொட்டியில் மோட்டாரால் இயக்கப்பட்டு சாயத் தொட்டியில் அசைவை ஏற்படுத்திடும். புடுல் டையரில் போடப்படுகிறது. இம்முறையில் துணியில் சாயமேற்றுதல் என்பது சிக்கன முறை ஆகும்.

ஊடுபரவுதலை தடுத்து சாயமேற்றுதல் (ரெசிஸ்ட் டையிங்)

இம்முறை சாயமிடுதலை துணிகளிலோ அல்லது ஆடைகளிலோ செய்யலாம். உருவடிவங்களை கொண்ட துணிகளில் பழங்காலத்தில் பின்பற்றப்பட்டு செய்யப்பட்டு வந்த சாயமேற்றும் பல முறைகளை குறிக்கும் சொல்லே ரெசிஸ்ட் டையிங் ஆகும். இம்முறைகளில் துணியின் அனைத்து பகுதியிலும் சாயம் ஏறாமல் தடுத்து அல்லது ஊடுபரவுதலை தடுத்து (ரெசிஸ்ட்) உருவடிவம் மற்றும் துணியில் அடிப்படையை உருவாக்கப் பயன்படுகிறது. பொதுவாக மெழுகு ஒரு சில வகை பசை, அல்லது இயந்திரத்தினால் ஊடுபரவலை தடுக்க துணியை கட்டிவைத்தல் அல்லது தைத்தல் பயன்படுத்தப்பட்டு செய்யப்படுகிறது. மற்றொரு ஊடுபரவுதலை தடுக்கும் முறையில் ரசாயனத்தை ஒரு குறிப்பிட்ட சாயவகையில் பயன்படுத்தி மற்றொரு சாயத்தின் மீது படியாமல் இருக்க செய்யப்படுகிறது. தற்காலத்தில் அனைவரும் அறிந்த வகைகளுள் டைஅண்டு டை மற்றும் பட்டிக் பிரபலமானவையாகும்.

டை மற்றும் டை (துணியைக் கட்டி சாயமிடுதல்) :

துணிகளை கட்டி சாயமிடுதல் முறையில் ஊடுபரவுதல் துணிகளில் தடைசெய்யப்படுகிறது. பின்னலாடை அல்லது நெசவு செய்யப்பட்ட பருத்தி துணிகளில் வழக்கமாக பளீர் நிறங்களை பயன்படுத்தி கட்டி சாயமிடுதல் செய்யப்படுகிறது. குஜராத் மற்றும் ராஜஸ்தான் பகுதிகளில் துணிகளில் கட்டி சாயமிடுதல் முறை உருவாக்கப்பட்டது. ஜெய்ப்பூர் மக்களும் குறிப்பாக இந்தக் கலையில் திறன் பெற்றுள்ளனர். கட்டி சாயமிடுதலில் துணியை ஒரு மாதிரிக்கு ஏற்றவாறு மடித்து, ரப்பர் பேண்டு அல்லது நூல் வைத்து அழுத்திக் கட்ட வேண்டும். பல்வேறு வகையான சாயங்களை பயன்படுத்தலாம். அநேகமாக ரியாக்டிவ் சாயங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டி சாயமிடுதல் என்னும் நுட்பமான முறையில் பிடித்தமான பல்வேறு வண்ணமயமான உருவ மாதிரி வடிவங்களை துணிகளில் பெறலாம். துணிகள் கசங்குதல், மடிப்புகளுடன் அல்லது மடித்தல் ஆகிய முறையில் கட்டி சாயமிடும் நுட்பம் பல்வேறு உருமாதிரி வடிவங்களில் செய்யப்பட்டு, நூலால் கட்டப்பட்டு சாயமிடப்படுவதால் டை அண்டு டை (tie and dye) என்று அழைக்கப்படுகிறது. கட்டப்பட்ட துணியானது வாட் சாயத்தில் மூழ்கி வைக்கப்பட்டு பின் வெளியில் எடுத்து அலசப்படுகிறது. நூல் கட்டிய பகுதியில் சாயம் ஏறாமல் தடுக்கப்படுகிறது. ஈரமான துணியில் பல்வேறு பகுதியில், பல்வேறு நிற சாயங்களை பயன்படுத்தி பல உருவடிவங்களை (டிசைன்) பெறலாம். நூல் கட்டப்பட்ட பகுதிகள், சீரற்ற முறையில் சாயத்தை மடிப்புகளில் ஏற்றுக்கொண்டு, புதுமையான வேறுபட்ட உருவரை மாதிரிகளை (patterns) பெறுகின்றன.

நூலை கட்டும் முறையிலும் பல்வேறு முறைகள் பின்பற்றப்படுகின்றன. அவை கோடுகள் உடைய டிசைன் - குறுக்காக, செங்குத்தாக மற்றும் மட்டக்கோடுகள், முடிச்சிடுதல், வட்ட டிசைன்கள், மார்பிளிங், ரெளச்சிங், அனைத்து பகுதியிலும் சிறு புள்ளிகள், மாங்காய் டிசைன், பூ டிசைன் போன்றவை ஆகும்.

பட்டிக் (Batik)

இது ஊடுபரவலை தடுத்து சாயமிடுதலின் மற்றொரு முறையாகும். இதில் அச்சுக்கள் போன்று உருவரை மாதிரிகள் (patterns) உருவாக்கப்படுகின்றன. கட்டிசாயமிடுதல் (tie and dye) மற்றும் பட்டிக்கிற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால் முன்னதில் குறிப்பிட்ட பகுதி கட்டப்படுகிறது. பின்னதில் துணியில் மெழுகு பூசப்படுகிறது. பட்டிக் எனும் சொல் ஜவனீஸில் இருந்து பெறப்பட்டது. அதன் பொருள் “டாட்டூ” (Tattoo). பட்டிக் செய்யப் பயன்படுத்தும் துணி வழவழப்பாகவும் மெல்லியதாகவும் இருந்தால் சிறப்பான விளைவினை பெறமுடியும். பட்டு சிறந்ததாகவும், எளியதாகவும் கருதப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. மென்மையான பருத்தி மற்றும் ஆர்கண்டி துணிகளும் பொருத்தமானவை மற்றும் சிறந்தவை.

பட்டிக் செய்யப்படுவதற்கு முன் துணிகள் அலசப்பட்டு, இஸ்திரி செய்யப்பட வேண்டியது அவசியமாகும். கூர்மையான பென்சில் கொண்டு டிசைனை துணியின் மேல் ட்ரேஸ் செய்து கொள்ளவும். பல்வேறு அளவுகளில் புருசுகள் (Brushes) சூடான திரவ மெழுகை டிசைன் மீது பூசுவதற்கு தேவைப்படும். பட்டிக் செய்ய தேனீக்களின் மெழுகு (Beeswax) சிறந்த மெழுகாக கருதப்படுகிறது. பின் துணியானது சாயமிடப்படுகிறது. மெழுகு பூசப்பட்ட பகுதியில் சாயம் ஏறாமல் தடை செய்யப்படுகிறது. நிறைவு செய்யப்பட்ட வண்ணத்துணியில் வெள்ளை நிற டிசைனை பெறமுடிகிறது. சில சமயங்களில் மெழுகை சிலந்தி வலை போல் மெல்லிய கோடு இழைத்து சாயமேற்றும்போது மெல்லிய கோடுகளை தவிர்த்து சாயம் ஏற்றப்பட்டு புதிய டிசைன் உருவாகிறது.

அச்சிடுதல்

துணிகளில் அச்சிடுவதால் வண்ண மயமான விளைவுகளை பெறலாம். அச்சிடுதல் என்பது உரு வடிவங்களில் நிறங்களை பயன்படுத்துவது ஆகும். அச்சிடுதல், கையால் அல்லது இயந்திரத்தின் மூலம் செய்யப்படுகிறது. அச்சிடுதலுக்கு பயன்படுத்தப்படும் சாயங்கள் பசை உருவில் உள்ளன.

அச்சிடுதலின் வகைகள்

அச்சிடுதல் என்பது அ) கைகளால் அச்சிடுதல், ஆ இயந்திரத்தால் அச்சிடுதல் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன.

கைகளால் அச்சிடுதல்

ப்ளாக் அச்சிடுதல் :

இம்முறை சீனா மற்றும் இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழக்கத்தில் இருந்து வருகிறது. ப்ளாக்குகள் மரத்தால் அல்லது மரம் மற்றும் லினோவால் செய்யப்படுகின்றன. உருவடிவம் 1/4 அங்குல கனத்தில் பொதுவாக செதுக்கப்படுகிறது. இவ்வாறு வெட்டப்பட்ட லினோ துண்டு அதே அளவிலான மரத்துண்டில் ஒட்டப்படுகிறது.

அநேகமான அச்சிடுவோர் மர பிளாக்குகளில் உருவடிவம் செதுக்கப்பட்டவைகளையே பயன்படுத்துகின்றனர். வண்ணப்பசையில் இந்த பிளாக்குகள் முழ்கி எடுக்கப்பட்டு துணிகளின் மீது அழுத்தப்படுகிறது. இவ்வாறு அழுத்தப்படும் போது வண்ண உருவடிவமைப்பை துணிகளில் பெற முடிகிறது. முதலில் ஒரு பிளாக்கில் ஒரு வண்ணப்பசையைக் துணியில் அழுத்தப்பட்டு உலர வைக்கப்படுகிறது. பின் மற்றொரு பிளாக்கில் வேறு வண்ணம் கொண்ட பசை துணியில் அழுத்தப்படுகிறது. இவ்வாறு பல வண்ண உருவடிவமைப்புகளை பெற முடிகிறது. இச்செயல்பாடு மீண்டும் மீண்டும் அந்த துணி முழுவதும் அச்சிடப்படுகிறது.

இச்செயல்பாடு மெதுவான மற்றும் விலை மதிப்பு மிக்கதும் ஆகும். ஒரே சீரான அழுத்தம் கொடுத்தால் மட்டுமே துணிகளில் பெறமுடியும். துணி முழுவதும் வண்ணத்தின் வலிமை ஒரே சீராக இருக்காது.

மரத்தால் அன பிளாக்குகள்

அச்சிடப்பட்ட டிசைன்

ஸ்டென்சில் அச்சிடுதல் :

இம்முறை ஜப்பானில் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. இதன் விலை மதிப்பு அதிகம் ஆதலால், இந்த ஸ்டென்சில் அச்சிடும் முறைக்கு முக்கியத்துவம் அளித்து பயன்படுத்துவது, கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை அச்சிடுதலில், உருவடிவமானது முதலில் கார்டு போர்டு, மரம், அல்லது உலோகத்தில் வெட்டப்படுகிறது. ஸ்டென்சிலில் நுட்பமான அழகிய உருவடிவம் அல்லது பெரிய இடைவெளி ஏற்படுத்தப்பட்டு அதிக அளவு வண்ணம் ஊடுருவிச் செலுத்தப்படுகிறது. வழக்கமாக ஸ்டென்சில் உருவடிவத்தில் ஒன்று அல்லது இரண்டு நிறங்கள் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக பிளாக் அச்சிடுதலிலும் பயன்படுத்தப்படுகின்ற அகலம் குறைந்த துணிகளே ஸ்டென்சில் அச்சிடுதலில் பயன்படுத்தப்படுகிறது. இம்முறையானது மிகவும் நிதானமாகச் செய்யப்படுவதாகும்.

காட்போர்டில் டிசைனை வெட்டுவது

துணியில் டிசைன்.

ஸ்கிரீன் அச்சிடுதல் அல்லது திரை அச்சிடுதல் :

நல்ல உறுதிவாய்ந்த பட்டு நூலால் திரைகள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுவதால், திரையில் அச்சிடுதல் தொழில் நுட்பம் பட்டுத்திரையில் அச்சிடுதல் எனக் கூறப்படுகிறது. இன்றைய காலகட்டத்தில் நைலான், பாலியஸ்டர், விஞ்ச் மற்றும் உலோகம் ஆகியன திரை அச்சிடுதலில் பயன்படுத்தப்படுகிறது. திரை அச்சிடுதல் தட்டையான அல்லது உருளை வடிவ திரைகளில் செய்யப்படுகின்றன.

ஒவ்வொரு திரை உருவடிவமும் கையால் வரையப்பட்டு, லேக்குவர் அல்லது பிற ஊடுருவ இயலாத பொருளால் உருவடிவம் அல்லாத பகுதிகளில் திரையில் பூசப்படுகிறது. இன்று உருவடிவம் புகைப்படம் எடுக்கப்பட்டு பிறகு நெகடிவ் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு திரையிலும் உருவடிவம் இல்லாத பகுதிகளில் ஒளியை ஊடுருவிச் செல்ல விடாமல் தடுத்து விடுகிறது. பிறகு ஒவ்வொரு திரையும் மரம் அல்லது உலோகச் சட்டத்தில் பொருத்தப்படுகிறது.

அச்சிடும் பசை அல்லது சாயம் திரையின் மீது ஊற்றப்பட்டு, பட்டுத்துணி திரை வழியாக உருவடிவம் உள்ள பகுதியில் ரப்பர் முனையுடன் கூடிய கருவி கொண்டு பிழியப்படுகிறது (படம்). பிறகு சட்டத்தை எடுத்து துணியின் அடுத்த பகுதியில் வைத்து உருவடிவம் பெற மீண்டும் பசை பழியப்படுகிறது. துணி முழுவதுமாக ஒரே நிறம் அச்சிடப்படும் வரை இச்செயல்பாடு தொடர்ந்து செய்யப்படும். இச்செயல்பாடு உருவடிவத்தில் பயன்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு நிறத்திற்கும் செய்யப்படுகிறது.

கையால் திரை அச்சிடுதல் செய்யப்படுவதால் அதிக நேரம் ஆகிறது. மேலும் குறைந்த நீளமான 60 கெஜம் (58 மீட்டர்) துணிகளில் செய்யப்படுகிறது. மின்சாரத்தால் இயக்கப்படும் தானியங்கி இயந்திரங்கள் ஒரு மணி நேரத்தில் 450 கெஜங்கள் (400 மீட்டர் நீளமான துணிகளில் திரை அச்சிடுதல் செய்கிறது.

இயந்திரங்கள் மூலம் அச்சிடுதல்

இயந்திர அச்சிடுதலில் நேரடி ரோலர் அச்சிடுதல், டூப்ளக்ஸ் அச்சிடுதல், டிஸ்சார்ஜ் அச்சிடுதல், ரெசிஸ்ட் அச்சிடுதல், பிக்மென்ட் அச்சிடுதல், ட்ரான்ஸ்பர் அச்சிடுதல், போட்டோ அச்சிடுதல் மற்றும் ஃப்ளாக் அச்சிடுதல் ஆகியன உள்ளன.

நேரடி ரோலர் பிரிண்டிங் :

1785ல் ரோலர் பிரிண்டிங் உருவாக்கப்பட்டது. பல ஆயிரக்கணக்கான கெஜங்கள் வண்ண உருவடிவம் (design) செய்யப்பட்ட துணிகளை இம்முறை அச்சிடுதலின் மூலம் ஒரு மணி நேரத்தில் பெறமுடியும்.

இந்த அச்சிடுதல் முறையில் பல தாமிர உருளைகள் அல்லது ரோலர்களில் உருவடிவம் செதுக்கப்படுகிறது. உருவடிவத்தை உருளைகளில் செதுக்க பல நாட்கள் எடுத்து கொள்ளும், வடிவம் செதுக்குவது மிகவும் கடினமான வேலையாகும். ஆனால் இம்முறையில் அச்சிடுதலுக்கு மிகக்குறைந்த நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

உருளையானது துணியின் அகலத்தை ஒத்து இருக்கும். உருவடிவத்தில் எத்தனை நிறங்கள் பன்படுத்தப்படுகிறதோ அத்தனை உருளைகள் தேவைப்படும். ஒரு உருளையால் ஒரு வண்ண அச்சிடுதலை மட்டுமே செய்ய முடியும்.

உருளை வடிவ அச்சிடும் இயந்திரம் ஒரு பெரிய மத்திய உருளையை கொண்டிருக்கும். அந்த உருளையை சுற்றி அச்சிட வேண்டிய துணி நகர்ந்து கொண்டிருக்கும். நகரும் துணியுடன் உருளையும் சுழலும். பல வண்ண அச்சிடும் உருளைகள் வெவ்வேறு வண்ண நிறங்களை உருளைகளில் பெற்று இருக்கும். அவை துணியின் மீது அழுத்தப்பட்டு, பின் மத்திய உருளை மீதும் அழுத்தப்படும் ஒரு உருவடிவமைப்பில் ஐந்து நிறங்கள் இருக்குமேயானால், ஐந்து வண்ணங்களுடன் ஐந்து அச்சிடும் உருளைகள் இருக்கும். ஒவ்வொரு உருளையும் தாமிரத்தால் செய்யப்பட்டு குறிப்பிட்ட உருவடிவமும் செதுக்கப்பட்டு இருக்கும். வண்ணம் அல்லது சாயங்களால் நிறைவு செய்யப்பட்ட உருளைகள் உருவடிவமைப்பு உருளைகளுடன் வைக்கப்பட்டு குறிப்பிட்ட இடை வேளைகளில் நகருமாறு அமைக்கப்பட்டு இருக்கும். புருசு போன்ற அமைப்புடையப் பகுதியால் சாயமானது உறிஞ்சப்பட்டு, உருவடிவம் செதுக்கப்பட்ட உருளைகளுக்கு மாற்றப்படுகிறது.

உருளைவடிவ அச்சிடும் இயந்திரம்

உருளை இயந்திரத்தில் அச்சிடப்பட்ட துணி

உருவடிவமைப்புள்ள உருளைக்கு பக்கத்தில் பெரிய இரும்பு உருளை அல்லது நீள வடிவ உருளையில் அச்சிடப்பட்ட துணி சுற்றப்படுகிறது. அச்சிடப்பட வேண்டிய துணிக்கு இழுதன்மை கொண்ட போர்வை தேவைப்படும் (துணிக்குப் பின் Pad போல்) மற்றும் க்ரே துணி செதுக்கப்பட்ட உருளைக்கும் நீள வடிவ உருளைக்கும் இடையே செலுத்தப்படும். போர்வையை பயன்படுத்துவதால் நல்ல மட்டத்தை ஏற்படுத்தும். அதனால் தெளிவான துல்லியமான அச்சினை பெறலாம். அச்சிடப்படும் துணிக்கு பின்னால் உள்ள க்ரே துணியானது அதிகப்படியான சாயத்தை உறிஞ்சி போர்வையை பாதுகாக்கிறது.

இது போன்ற அச்சிடும் இயந்திரங்களில் பதினான்கு உருளைகள் வரை பயன்படுத்தப்படுகிறது. அதனால் பதினான்கு வண்ணங்களில் உருவடிவமைப்பு மாதிரிகளை (pattern) உற்பத்தி செய்ய முடியும். உருளை அச்சிடும் இயந்திரம் மூலம் துணியின் ஒரு பக்கத்தில் மட்டுமே அச்சிட முடியும்

டியூப்லெக்ஸ் பிரிண்டிங் : இவ்வகை அச்சிடுதலில் துணியின் இரு பக்கத்திலும் அச்சிடப்படுகிறது. துணியானது உருளை அச்சிடும் இயந்திரத்தினுள் வெவ்வேறு செயல்பாட்டிற்கு செலுத்தப்படுகிறது. டியூப்லெக்ஸ் அச்சிடுதலில் தெளிவான எல்லைக்கோடு துணியின் இரு பக்கங்களிலும் ஏற்படுத்தப்படுகிறது.

டிஸ்சார்ஜ் பிரிண்டிங் :

ஆழ்ந்த நிறங்களை கொண்ட துணிகளில் டிஸ்சார்ஜ் பிரிண்டிங் செய்வது உகந்ததாகும். துணிகளில் முதலில் சாயமிடப்படுகிறது. நிறத்தை நீக்கக்கூடிய கெமிக்கல்ஸ் கொண்ட ஒரு டிஸ்சார்ஜ் பசை பயன்படுத்தப்பட்டு துணியில் அச்சிடப்படுகிறது. அந்த இடம் வெள்ளை நிறமாக மாறும். இவ்வகை அச்சிடுதல் பருத்தி மற்றும் ரேயான் போன்ற துணிகளில் செய்யப்படுகிறது.

ரெசிஸ்ட் பிரிண்டிங் :

டிஸ்சார்ஜ் பிரிண்டிங்கிற்கு எதிர் மறையானது ரெசிஸ்ட் பிரிண்டிங். இவ்வகை அச்சிடுதலில், ரெசிஸ்ட்பசை முதலில் வெள்ளை துணியில் அச்சிடப்படுகிறது. பிறகு துணியானது சாயமிடப்படுகிறது. ரெசின்கள் அல்லது களிமண் அல்லது ஒட்டும் பசை (Gum) போன்ற ரெசிஸ்ட் பொருட்களே பயன்படுத்தப்படுகிறது. உருவடிவ மாதிரியை ரெசிஸ்ட் பொருளைக் கொண்டு துணியில் அமைத்து பிறகு சாயத்தில் மூழ்கி வைக்கப்படுகிறது. சாயமானது ரெசிஸ்ட்பொருள் பயன்படுத்தப்படாத இடங்களில் மட்டுமே ஏற்றப்பட்டு இருக்கும். ரெசிஸ்ட் பொருள் உள்ள இடத்தில் சாயம் ஏறாமல் இருக்கும். துணி பல்வேறு சாயமிடும் செயல்பாடுகளை கடந்த பின் ரெசிஸ்ட் பசை நீக்கப்படுகிறது. பசை நீங்கிய பிறகு உருவடிவ மாதிரியை (Pattern) ஆழ்ந்த நிற துணியில் பார்க்க முடியும். .

பிக்மெண்ட் பிரிண்டிங் :

இதில் பயன்படுத்தப்படும் சாயங்கள் நீரில் கரையக்கூடியவை அல்ல. மேலும் ஒளியால் பாதிப்படையாதவை. இந்த பிக்மெண்ட்கள் வண்ண அச்சிடும் பசைகளாக பல்வேறு பொருட்களை சேர்த்து செய்யப்படுகின்றன. பசையில் பயன்படுத்தப்படும். ரெசின் என்பது இணைப்புப் பொருளாகவும் பிக்மெண்டாகவும் அச்சிடப்படும் துணியில் பயன்படுத்தப்படுகிறது.

டரான்ஸ்பர் பிரிண்டிங் :

இச்செயல்பாட்டில், ஒரு சில பொருட்கள் வெப்பப்படுத்தப்படும் போது நேரடியாக திட நிலையில் இருந்து ஆவி நிலைக்கு மாற்றப்பட்டு பிறகு குளிர்விக்கப்படும் போது நேரடியாக திடநிலைக்கு மாற்றப்படுகிறது. உருவடிவமானது ஒரு தாளில் அச்சிடப்பட்டு இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது. வெப்ப பின் மண்டலத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. சாயமானது ஆவியாக்கப்பட்டு தாளில் படிகிறது. இவ்வாறாக சாயமானது துணியாலும் உறிஞ்சப்படுகிறது.

போட்டோ பிரிண்டிங் :

இவ்வகையில், துணியில் ஒளியால் பாதிப்படையக்கூடிய ஒரு கெமிக்கல் பூசப்படுகிறது. உருவடிவத்தின் (design) நெகடிவ் துணியின் மேல் வைக்கப்பட்ட பின், ஒளி அதன் மீது விழுமாறு செய்யப்படுகிறது. நெகடிவ்வில் உள்ள உருவடிவம் துணியில் அச்சிடப்பட்டு விடுகிறது. பிறகு துணி அலசப்படுகிறது. கருப்பு, வெள்ளை உருவடிவங்கள் மற்றும் வண்ண உருவடிவங்களை துணியின் மீது அச்சிடலாம்.

ஃப்ளாக் பிரிண்டிங் ( Flock பிரிண்டிங்) :

இந்த தொழில் நுட்பத்தில் நுண்ணிய துண்டு இழைகள் ஒட்டிக் கொண்டு இருப்பது ஃப்ளாக் எனப்படுகிறது. இதுவே துணிகளில் உருவடிவமாக்கப்படுகிறது. தகுந்த ஒட்டும் பண்புள்ள பொருளை பயன்படுத்தி, ஒரு உருவடிவமானது உருளையால் துணியில் அச்சிடப்படுகிறது. பருத்தி, கம்பளி, விஸ்கோஸ் ரேயான், நைலான் அல்லது அக்ரிலிக் போன்றவைகளின் இழை கற்றைகள் (flock) துணிகளின் மீது போடப்பட்டு, தகுந்த முறையில் ஒட்டப்பட்டு, பைல் (Pile) போல் அமைப்பு உருவாக்கப்படுகிறது. - வெல்வெட் - டெக்ஸ்ட்ட ர்ட் டிசைன் (Textured design)

ஃப்ளாக் பிரிண்டிக் இயந்திரம்


ஃப்ளாக் பிரிண்டிக் துணி

முடிவுரை

சாயமேற்றுதல் மற்றும் அச்சிடும் முறைகளால் துணிகளுக்கு மேலும் அழகூட்டி மெருகேற்றப்படுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top