பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / ஆடை அணிகலன்கள் உற்பத்தி / துணியில் மாதிரியை வைத்தல், குறித்தல், வெட்டுதல்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

துணியில் மாதிரியை வைத்தல், குறித்தல், வெட்டுதல்

துணியில் மாதிரியை வைத்தல், குறித்தல், வெட்டுதல் பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஆடை வடிவமைப்பு மற்றும் உருவாக்குதலில் மாதிரிகளை துணிகளில் விரித்தல், குறிப்பது மற்றும் வெட்டுவது ஆகிய மூன்றும் முக்கிய அங்கம் வகிக்கும் அம்சங்களாகும். பேப்பரிலோ அல்லது அட்டையிலோ தயார் செய்யப்பட்டு மாதிரிகளை துணிகளின் மேல் விரித்து வெட்டுவதற்கும், தையல் செய்வதற்கும் உதவும் அம்சமாகும். மாதிரிகளைப் போல் துணிகளில் குறித்து துண்டுகளாக வெட்டி தைப்பதற்கு குறிப்பது மிக முக்கிய அம்சமாகும். மேற்கூறிய மூன்றும் ஆடைகளை உருவாக்குவதற்குரிய மேம்பட்ட அம்சமாகும். ஆடைகளை வடிவமைப்பதற்கும் உருவாக்குவதற்கும் படியவைப்பது, குறிப்பது மற்றும் வெட்டுவது என்பதனை உயிர்நாடி என்றே கூறலாம்.

துணியை விரித்தல்

சுருக்கமில்லாத துணிகளில் மாதிரிகளை வைத்து படிய வைப்பதை துணி படியவைத்தல் என்று கூறலாம். மேடு பள்ளம் இல்லாத மேஜையில் முதலில் துணிகளை படிய வைக்க வேண்டும். பேப்பர் அல்லது அட்டையிலான மாதிரிகளை பின்பு அதன் மேல் வைக்க வேண்டும். துணிகளை விரிப்பதில் சில முக்கிய கவனத்தில் கொள்ள வேண்டிய செயல்பாடுகள் பின் வருமாறு.

• துணிகளை படிமானப்படுத்த வேண்டும்.

* பெரிய, கடினத் தன்மையான, மேடுபள்ளமில்லாத மேஜையை உபயோகிக்க வேண்டும்.

* மாதிரிகளில் அனைத்து விவரங்களும் உள்ளதா என சரிபார்க்கவும்.

* தரமான வரைபடத்தை தயாரிக்கவும்.

* மாதிரியை சரியான நூல் திசையில் வைக்கவும்.

* பெரிய மாதிரிகளை துணிகளின் ஓரங்களில் வைக்கவும். .

* ஒரே மாதிரியான மாதிரிகளை ஒரே பகுதியில் சேர்த்து வைக்கவும்.

* முடிந்தவரை ஒவ்வொரு மாதிரிகளையும் மிக அருகாமையில் வைத்து துணிகளை மிச்சப்படுத்தவும்.

மாதிரிகளின் விவரங்கள்

• மாதிரியின் பெயர்.

* துண்டுகளின் எண்ணிக்கை

* மடிப்பு பாகத்தை தெளிவாக குறிப்பிட வேண்டும்.

• நூல் திசையை கோடு போட்டு குறிப்பிட்டிருக்க வேண்டும்.

* நாட்ச்சஸ் குறிப்பிட வேண்டும்.

* சட்டை பைகள், பொத்தான் துவாரம், பொத்தான் மற்றும் இதர பாகங்களின் இடத்தை தீர்மானிக்கவும்.

• மடிப்புகள் நிலை, நிறைவை செய்வன

* முன்பக்கம், பின்பக்கம் மையப்பகுதியை குறிக்க வேண்டும்.

* தைக்கும் கோடுகள் .

* மடிப்பு, பிடிப்பு பாகங்கள் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மாதிரியை விரிப்பில் பொருத்துதல்

துணிகள் முதலிலேயே சுருக்கப்பட்டிருந்தாலொழிய ஒவ்வொரு துணிகளுக்கேற்றாற் போல் நீரில் நனைத்து சுருங்கும் தன்மையை அறிந்து பின்பு உலரவைத்து துணிகளை சுருக்கங்களின்றி படிமானமாக்கி மாதிரிகளை துணியின் மீது விரிக்க வேண்டும். துணிகளை சுத்தமான பெரிய மேஜையின் மீது விரிக்க வேண்டும். மேஜையின் அளவு விரிக்கப்படும் துணிகளின் அளவை காட்டிலும் பெரியதாக இருக்க வேண்டியது அவசியம். இப்படி செய்வதால் துணிகள் ஒன்றின் மேல் ஒன்றுபடிவது மற்றும் தவறாக குறிப்பதையும் தவிர்க்க முடியும்.

சிறப்பு துணிகளின் மீது மாதிரியை விரித்தல்:

பின்னல் துணிகள் மற்றும் பட்டு துணிகளின் மீது மாதிரியை விரிக்கும்போது அதிக கவனம் காட்ட வேண்டும். பல்வேறு கருத்துகளையும் கவனத்தில் எடுத்துக் கொண்டு மாதிரியை விரித்து குறிக்கும்போது துணியையும், நேரத்தையும் மிச்சப்படுத்த முடியும். இது பல்வேறு வகையான ஆடைகளை வடிவமைக்க உதவும்.

பின்னலாடைகள்

துணி வடிவமைப்பில் ஒற்றை நூல்கள் கொக்கி போன்ற வடிவில் இழுக்கப்பட்டு அவை பின்னல்களாக இணைக்கப்படுகின்றன. பின்னல்கள் ஒற்றை மற்றும் இரட்டை நூல்களை கொண்ட அழுத்தமான துணிகளான ஜெர்ஸி, டிரைகாட் மற்றும் ரிப் போன்று பலவித துணிகளை உருவாக்க முடியும். பொதுவாக ஆடைகளின் தயாரிப்பிற்கு அழுத்தமான துணிகள் (ஜெர்ஸி) தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

ஜெர்ஸி துணிகளை தயாரித்தல் குறித்தல், விரித்தல் மற்றும் வெட்டுதலின் பல்வேறு நிலைகள்

* துணிகளை நேராக்க துணிகளை இழுக்கவோ, கிழிக்கவோ செய்வதை தவிர்க்கவும்.

* துணிகளின் மடிக்கப்பட்ட ஓரங்களை நேராக வைத்து சமதளத்திலோ அல்லது மேஜையின் மீதோ விரிக்க வேண்டும்.

* செல்வெட்ஜ் ஓரத்தை மடிப்பதற்கு அகலமான செங்கோண நேர்குறுக்கு கோடாக வெட்டவும்.

* துணிகள் வழுவழுப்பு தன்மையானதாகவோ, வழுக்கும் தன்மை கொண்டதாகவோ இருந்தால் செய்தித்தாள்களையோ அல்லது ஜரிகை தாள்களையோ துணியில் சிறு குண்டூசியில் குத்தி மேஜையின் மீது சரிசமமாக விரிக்கலாம்.

*மாதிரிகளை எப்பொழுதும் துணிகளின் மாற்றுப்பக்கத்தில் கெட்டப்பக்கத்தில் வைப்பது நல்லது. இது துணிகளில் சுருக்கம் விழாமலும் துணி சுருட்டப்படாமல் இருக்கவும் உதவும். .

* புதிதாக தையல் பழகுவோர்கள் சிறிய குண்டூசியினால் மாதிரிகளை துணிகளில் குத்தி குறிக்கவும்.

* மாதிரிகளின் ஓரத்தை டெய்லர் சாக்குக்கட்டி / சிவப்பு அல்லது நீல நிற பென்சிலாலோ குறிக்கலாம்.

• ஜெர்ஸி துணிகளில் ஆடைகள் தைக்க திறந்த விரிப்புதான் சிறந்தது.

* வளைவான ஓரங்களை அல்லது குறுக்குத் துண்டு தைக்கும்போது கவனம் தேவை.

பட்டு, ரேயான், லேஸ் துணிகள்

பட்டு, ரேயான், லேஸ் துணிகள் மிகவும் மெலிதாகவும், மென்மையானதாகவும், வழுக்கும் தன்மை நிறைந்ததாகவும் இருக்கும். அடையாள குறிப்புகள் மற்றும் வெட்டுதலின் போது கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

தயாரித்தல், விரித்தல், அடையாள குறிப்புகள், மற்றும் வெட்டுதலில் பின்பற்ற வேண்டிய படிகள்

* மிகக்குறைவான சுருங்கும் தன்மை கொண்டிருப்பதால் இவற்றை வெட்டுவதற்கு முன் சுருக்க அவசியமில்லை .

• துணிகளை நேர்படுத்த அதை மேஜையின் மீது விரித்து குறுக்கு வாட்டத்தில் இழுக்கவும்.

* துணிகளை மேடுபள்ளமில்லாத சமதளத்தில் விரிக்கவும். உங்களது சக விரல்களை நகர்த்தி கிரீஸ் போன்றவற்றை நீக்கவும். இதை செய்ய சுத்தமான தரையை கூட உபயோகிக்கலாம். துணி விரிக்கப்பட்ட இடமானது துணியின் அளவைவிட பெரியதாக இருக்க வேண்டியது அவசியம்.

• துணி நழுவாமல் இருக்க துணியின் பின்புறத்தில் செய்தித்தாளையோ அல்லது பட்டர் தாளையோ குண்டூசி குத்தி மாதிரிகளை வைக்கும் போது நழுவுவதை தவிர்க்கலாம்.

* மாதிரிகளை எப்பொழுதும் துணிகளின் முன் பக்கத்தில் (நல்ல பக்கம் வைக்க வேண்டும். துணிகளின் முன் பக்கத்தை பார்ப்பதிலும் தொடும்போதும் உணரலாம். துணிகளின் முன்பக்கம் பின்பக்கத்தைவிட பிரகாசமாகவும் மென்மையானதாகவும் இருக்கும்.

* மாதிரிகளை மெல்லிய குண்டூசிகளை கொண்டு இரண்டோ அல்லது மூன்று இடத்தில் குத்தவும். மாதிரிகளை எப்பொழுதும் துணிகளின் நீளவாக்கில்தான் குத்த வேண்டும் என்பதை கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். குண்டூசிகளை குத்தும்போது துணிகளின் நூல் இழைகள் பாதிக்காத வண்ணம் குத்த வேண்டும்.

* இணைக்கப்பட்ட மாதிரி துண்டுகளை துணியுடன் சேர்த்து வெட்டவும் அல்லது மாதிரிகளை டைலர் நிறக்கட்டியால் அடையாள குறியிட்டு வெட்டவும்.

* வளைவான ஓரங்களில் இருப்பு தையலிடவும். வெட்டப்பட்ட துணிகளை தையற் செய்யப்படும் தருணம் வரை சுருட்டி வைக்கவும்.

* புதிதாக பழகுவோர்க்கு திறந்த விரிப்பு முறைதான் அனைத்து வகை துணிகளுக்கும் சிறந்தது. அரை மத்திய மடிப்பையும் உபயோகிக்கலாம்.

வெல்வெட், சாட்டின் & பைல் துணிகள்

இந்த வகை துணிகளில் உள்ள லூப்புகள் துணிகளின் அழகை மேம்படுத்தும் திறன் கொண்டது.

மாதிரி தயாரித்தல், விரித்தல், குறித்தல், வெட்டுதலில் பயன்படும் படிகள்

* கடையில் வாங்கப்பட்ட துணிகளை சுருட்டி வீட்டிற்கு எடுத்துச் செல்லவும். துணிகளை வெட்டுவது வரை சுருட்டியே வைத்திருக்க வேண்டும். இது போல் செய்வதனால் துணிகளில் சுருக்கத்தை உருவாக்காது.

* துணிகளில் சுருக்கம் இருந்தால், ஒரு பாத்திரத்தில் வெண்ணீரை ஊற்றி துணியை ஒரு கம்பியில் விரித்து வைத்து ஆவி படச் செய்து உங்களது விரல்களை சுருக்கத்தின் மீது தடவி சுருக்கத்தை நீக்கலாம்.

* மெதுவாக துணியை இழுத்து துணிகளை நேர் செய்யலாம்.

• துணியின் முன்பக்கத்தை நல்ல பக்கம்) மேஜையில் படியுமாறு செய்ய வேண்டும்.

• மாதிரிகளை துணிகளில் வைத்து டைலர் நிறக்கட்டியால் அடையாள குறி ஏற்படுத்தவும்.

* ஆடை வல்லுனர்கள் மாதிரிகளில் அடையாள குறி ஏற்படுத்தாமல் ஒன்றோ அல்லது இரண்டு குண்டூசிகளை குத்தி துணிகளை வெட்டிவிடுவார்கள்.

* இழை திசையை பராமரிக்க வேண்டியுள்ளதால் இவ்வகையான துணிகளுக்கு திறந்த விரிப்பு முறைதான் சிறந்தது.

துணியின் டிசைன்களை பொருத்து மாதிரிகளை வைத்தல்

துணியிலுள்ள டிசைன்கள் ஆடை அணிபவர்களுக்கு அழகாக சேர்க்கிறது. எனவே, துணியில் மாதிரிகளை விரிப்பின் போது மிகவும் கவனமாக பொருத்தி இருக்க வேண்டும். டிசைன்களின் பொதுவான வகைகளும், அதன்மேல் மாதிரிகளை வைத்து விரிக்கும் முறைகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

.தெளிவான டிசைன்கள்

பெரிய மோடிஃப்கள் எல்லாவகையான ஆடைகளுக்கும் பயன்படுத்தலாம். அவை ஒழுங்கற்ற முறையில் அமைக்கப்படும் போது சிறப்பாக அமையும். துணியில் நிறைய அல்லது நெருக்கமான வரைபடங்கள் இருந்தால் அல்லது ஒழுங்கற்றவையாக இருந்தால் மாதிரி துண்டுகளை நெருக்கமாக வைத்து வெட்டி தைக்க வேண்டும். இவை பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். (படம் 7.2.

துணியில் பெரிய மோடிஃப்கள் குறிப்பிட்ட அல்லது சமமான இடைவெளியில் இருப்பின், பெரிய வடிவங்கள் ஆடையின் முன்புறம் அமையுமாறு மாதிரி துண்டுகளை வைத்து வெட்ட வேண்டும். டிசைன்கள் அல்லது வடிவங்களின் மேல் வெட்டினால் தைக்கும் இடம் நன்றாக பொருந்தது. படம் 7.3).

துணியில் மாதிரிகளை வைத்து விரித்தல் துணியில் உள்ள வடிவங்களை பொருத்தும் வேறுபடுகிறது. எனவே ஆடை வடிவமைப்பாளர்கள் துணியின் டிசைன்களை பொருத்து கவனமாக வெட்ட வேண்டும்.

.ஒரு பக்க டிசைன் உள்ள துணிகள்

இவ்வகையான துணிகள் பிரிண்ட் செய்யப்பட்டவையாக அல்லது நெய்தவையாக இருக்கலாம். வரைபடங்கள் ஒரே திசையில் செல்லும் (எ. கா.) கொத்தான மலர்கள் கொடியில் உள்ளதுபோல் துணியில் ஒரு ஓரத்தில் ஆரம்பித்து அடுத்த ஓரம் வரை அமையுமாறு இருக்கும் அல்லது ஜியோமெட்ரிக் வரைபடங்கள் பிரிண்ட் செய்யப்பட்டிருக்கும். (படம் 7.4).

இவ்வகையான துணியை விரிக்கும் போதும், மாதிரி துண்டுகளை பொருத்தி வெட்டும் போதும், இணைப்பு பகுதி சரியாக இருக்க கவனமாக பார்க்க வேண்டும். (எ.கா). பிளவுஸ் அல்லது சட்டை வெட்டும்போது மாதிரி துண்டுகளின் வலது மற்றும் இடதுபக்கத்தின் டிசைன்கள் ஒரே திசையில் இருக்குமாறு பார்த்து வெட்டவும். (படம் 7.5).

கோடுகள் மற்றும் பிளைடுகள்

கோடுகள் நேர்கோட்டு, குறுக்கு கோட்டு திசைகளில் துணியில் இருக்கும். இவ்வகையான கோடுகள் செங்குத்து கோடுகள் மற்றும் குறுக்கு வெட்டு கோடுகள் என்றழைக்கப்படும் கோடுகள் சட்டையில்தான் அதிகமாக காணப்படும். இவற்றை குறுக்கு கோட்டிலும், நீள்வெட்டு கோட்டிலும் வெட்டி தைக்கலாம். இதன் மூலம் குறுக்கு நெடுக்கான வடிவத்தை உருவாக்கலாம்.

காலர் மற்றும் கை மாதிரி துண்டுகளை குறுக்கு திசையில் வெட்டி தைப்பதன் மூலம் ஆடையினை மேலும் அழகாக்கலாம்.

பிளைட்ஸ் (கட்டங்கள்) என்பன நெய்யப்பட்ட அல்லது பிரிண்ட் செய்யப்பட்ட கோடுகள் நீள்வாக்கிலும் குறுக்காகவும் கட்டங்களாக அமைந்திருக்கும்.

கோடுகள் மற்றும் கட்டங்களும், சமமாகவோ அல்லது சமமற்றதாகவோ இருக்கலாம். கோடுகளின் அளவும் பட்டையின் அளவும் ஒரே மாதிரி இருக்கும். நூலின் தன்மையை பொருத்தும், நிறத்தை பொருத்தும் வேறுபடுகிறது, சமமற்ற கோடுகளில், கோடுகளும், பட்டையும் வெவ்வேறான அளவில் இருக்கும். ஆனால் நிறம் மற்றும் இடைவெளி ஒரே மாதிரியாக இருக்கும்.

பார்டர் டிசைன்கள்

இவ்வகையான டிசைன்கள் துணியில் ஒரு ஓரத்தில் மட்டும் இருக்கும். இவை நெய்தவையாகவோ அல்லது பிரிண்ட் செய்யப்பட்டதாகவோ இருக்கலாம். இவை துணியின் ஹெம் லைன், கை ஓரம், பாவாடையின் ஓரங்களில் அமைந்திருக்கும். வளைவான ஓரங்கள் உள்ள ஆடைகளுக்கு இது பயன்படுத்தப்படுவதில்லை. (எ.கா). ஃபிளேர்டு ஸ்கர்ட், துணியின் முன்புறம் மற்றும் பின்புறம் ஒரே மாதிரி இருக்குமாறு மாதிரி துண்டுகளை வைத்து வெட்டவும்.

திறந்த விரிப்பில் அரைநீளவாக்கில் அல்லது முழுநீளவாக்கில் மத்திய மடிப்பு விரிப்பு இத்துணிகளுக்கு உகந்தவை.

சிக்கன ரீதியில் மாதிரிகளை வைத்தல்

சிக்கன ரீதியில் மாதிரிகளை வைத்தல் என்பது மாதிரியை துணியின் மீது வைத்து சிக்கனமாக வெட்டுவதேயாகும். துணியை வீணாக்காமல் சிக்கனமாக வெட்டுதலே சிறந்ததாகும்.

கோட்பாடுகள்

* ஒவ்வொரு துண்டும் சரியான இடத்தை தேர்ந்தெடுப்பதற்கு முன் அடையாள குறியீடுகள் ஏற்படுத்துவதோ அல்லது துணிகளை வெட்டவோ கூடாது.

* ஒவ்வொரு துண்டுகளையும் சில தேர்ந்தெடுத்த இடங்களில் சிறு எடையுள்ள பொருளை வைத்து பொருத்திப் பார்க்கலாம்.


* மிகப்பெரிய துண்டுகளின் மாதிரிகளை துணிகளின் எதிர்முனையில் வைக்க வேண்டும். சிறு துண்டுகளின் மாதிரிகளை துணியின் மையப்பகுதியில் வைக்க வேண்டும்.

* முடிந்தவரை ஒவ்வொரு மாதிரிகளையும் மிக நெருக்கமாக வைக்கவும். அவ்வாறு செய்யும்போது துணிகளின் மிச்சப்படுத்தப்பட்ட பகுதிகளை சிறு உப அலங்கார ஆடைகளை தைப்பதற்கு வசதியாக இருக்கும்.

* முடிந்தவரை நாட்சஸ்களை வெளிப்புறத்தில் வெட்டவும். துணி பற்றாக்குறை இருக்கும்போது உள்புறத்தில் வெட்டலாம்.

* டவ் டெய்லிங் நுட்பமுறையை மாதிரியின் விரிப்பிற்கு பின்பற்றவும். இந்த முறை ஒரே மாதிரியான வடிவம் கொண்ட மாதிரிகளை ஒன்று சேர்த்து வைப்பதாகும். இதனால் துணிகளை மிச்சப்படுத்தலாம். காலர் மாதிரியை அக்குள் பகுதி கோட்டில் வைக்கலாம்.

* மாதிரிகளை வெட்டுவதற்கு துணி பத்தாத போது சிறு துண்டுகளை இணைத்து வெட்டவேண்டும். மாதிரிகளை சமன் செய்வதற்கு மாதிரியின் இரு புறத்திலும் துண்டுகளை இணைத்து வெட்டுவதன் மூலம் பார்வைக்கு அழகு சேர்க்கும். உதாரணம் பாவாடை கீழ்முனை ஹெம் துணிகளின் அளவைவிட பெரியதாக இருந்தால், மாதிரிகளை நடுவில் வைத்து இரு ஓரங்களிலும் துண்டு துணிகளை இணைத்து வெட்டி தைக்கலாம்.

குறித்தல்

குறித்தல் என்பது குறிப்பை மாதிரியில் இருந்து துணிக்கு மாற்றுதலாகும். மாதிரியின் கோடுகள் மற்றும் பிற விவரங்களான டார்ட்கள் ஆகியவற்றை மாற்றும் செயல்பாடு ஆகும்.

குறித்தலின் போது கவனிக்கப்பட வேண்டியது

* சிவப்பு, நீல பென்சில்கள், டெய்லர், சாக்கு கட்டி, பென்சில் மற்றும் கார்பன் தாள் ஆகியவை பயன்படுத்தி குறித்தல் செய்யப்படுகிறது.

* ஆடைக்கு போதுமான துணி உள்ளதா என கவனிக்கவும்

* எல்லா குறிப்புகளையும் குறித்தாகிவிட்டதா என்பதை கவனிக்கவும்.

* துணியில் எல்லா மாதிரிகளுக்கும் போதுமான இடம் உள்ளதா என்பதை சரிபார்க்கவும்.

* சரியான குறித்தல் முறையை தேர்ந்தெடுக்கவும். உதாரணம்: வெட்டும் கோடுகளை கொண்ட மாதிரிகளுக்கு டைலர் நிறக்கட்டியை மட்டும் பயன்படுத்தவும். தையல் கோடுகளை குறிப்பதற்கு, ஆரம்ப கால பயலுவோர் பென்சிலையும், கார்பன் பேப்பரையும் பயன்படுத்தவும்.

*லெட் பேனாவை குறிக்க பயன்படுத்த வேண்டாம். அப்படி பயன்படுத்தினால் மாதிரிகளில் கறை ஏற்படுத்தும்.

சிவப்பு மற்றும் நீல பென்சில்கள்

மாதிரிகளை குறிப்பதற்கு பெரும்பாலும் அரை சிகப்பு மற்றும் அரை நீல பென்சில்களே பயன்படுத்தப்படுகிறது. ஆடைகளின் முன் பக்க மாதிரிகளை குறிப்பதற்கு சிவப்பு பென்சிலும் பின்பக்க மாதிரிகளை குறிப்பதற்கு நீல பென்சிலும் பயன்படுத்தப்படுகிறது. மாதிரிகளை துணியின் மீது விரித்து அதன் ஓரங்கள் குறிக்கப்படுகிறது. இதுதான் மிக சாதாரண எளிய முறையாகும். ஆனால் பென்சில்களை கொண்டு தையற்கோடுகள் மற்றும் பார்ட்களை குறிக்க முடியாது.

டெய்லர் நிறக்கட்டி

இதன் மூலம் மிகவும் சாதாரணமாகவும், எளிதாகவும் குறிப்பை மாதிரியில் இருந்து துணிக்கு மாற்றும் முறையை எளிதில் கடைபிடிக்கலாம். டெய்லர் நிறக்கட்டி என்பது ஒரு முக்கோண வடிவத்தில் இருக்கும் மெழுகு போன்ற பொருளால் ஆனது. இது வெள்ளை , நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் கொண்டதாக இருக்கும். சிவப்பு மற்றம் நீல நிற நிறக்கட்டிகள் வெளிர் நிற

துணிகளுக்கும், வெள்ளை மற்றும் மஞ்சள் நிறக்கட்டிகள் அடர்நிற துணிகளில் குறிக்கவும் பயன்படும். மாதிரிகளை துணிகளின் மீது வைத்து அதன் வெளிப்புற கோடுகளை வரைய டெய்லர் நிறக்கட்டி பயன்படுகிறது. ஆனால் இதன் மூலம் மாதிரிகளின் நுண்ணிய குறிப்புகளையும், தையற் கோடுகளையும் குறிக்க முடியாது.

பென்சில் மற்றும் கார்பன் பேப்பர் (மைத்தாள்)

மிகவும் தொன்மைமிக்க இந்த முறையில் கார்பன் பேப்பரை (மைத்தாள்) மாதிரிக்கும், துணிக்கும் நடுவில் வைத்து மாதிரியின் வெளிக்கோடுகளையும் மற்றும் மற்ற குறிப்புகளையும் பென்சிலின் உதவியுடன் எளிதில் வரைந்திட முடியும். இந்த முறையில் தையற் கோடுகள், டார்ட் ஆகியவற்றை துணியில் குறிக்க முடியும்.

மார்கிங் சக்கரம் மற்றும் ஆடை தயாரிப்பவரின் கார்பன் காகிதம்

ஆடை தயாரிப்பு தொழில் புரிவோர் மார்கிங் சக்கரத்தையும், கார்பன் காகிதத்தையும் பயன்படுத்துவர். கார்பன் காகிதம் மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கும். இவை எளிதில் அழியாது. கருமைநிற துணிகளில் வெள்ளை கார்பன் காகிதத்தை பயன்படுத்தலாம். சிவப்பு மற்றும் மஞ்சள் நிற கார்பன் காகிதத்தை வெள்ளை நிற துணிகளில் பயன்படுத்தலாம். கார்டு போர்டாக குறிக்கும் சக்கரத்தை பயன்படுத்தும் போது இந்த டிரேசிங் போர்டு அவசியம். இந்த போர்டு உறுதியாக இருக்கும். தச்சரின் மூலம் செய்தோ அல்லது கடையிலிருந்தோ இவ்வகையான போர்டை பெறலாம். இந்த போர்டின் ஒரு புறத்தில் அளவீடுகள் இருக்கும். இதன் மூலம் போர்டை துணியை நேராக பொருத்தலாம். துணி தைக்க பழகுபவர்கள் மாதிரி துண்டுகளை போர்டில் துணி மீது ஊசி மூலம் இணைத்தபின் குறிப்பது எளிதாக இருக்கும். குறிக்கும் சக்கரம் 6 அங்குல நீளத்தில் முன்புறம் சக்கரமும், பின்புறத்தில் 1 செ.மீ நகரும் சக்கரமும், கைப்பிடி மரத்தால் அல்லது பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்டிருக்கும். சக்கரத்தின் பக்கம் கூர்மையாக வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.

குறிக்கும் போர்டின் மேல் துணியை வைத்து, கார்பன் காகிதத்தை மாதிரித் துண்டுகளுக்கும் துணிக்கும் இடையில் வைத்து குறிக்கும் சக்கரத்தின் மூலம் வெட்டும் கோடு மற்றும் தைக்கும் கோடுகளை அடையாளம் குறித்து துணியை வெட்டலாம்.

குறிக்கும் சக்கரத்தை உபயோகப்படுத்தும் வழிமுறைகள்

* குறிக்கும் சக்கரத்தை சரியான இணைப்பு ஓரங்களில் வைத்து அழுத்தி வரைவதால் அடையாளம் சரியாக விழும்.

* கார்பன் காகிதம் போதவில்லையென்றால் முதலில் மாதிரி துண்டின் கீழ்பகுதியை மட்டும் வரைந்துவிட்டு, கட்டை விரலின் உதவியால் மாதிரியை அழுத்திக்கொண்டு கார்பன் காகிதத்தை வெளியே எடுக்கவும்.

* நேர்கோடுகளை அளவுகோலின் உதவியால் குறிக்கும் சக்கரத்தை பயன்படுத்தி வரையலாம்.

* நாட்ச்சஸ் 1 செ.மீ நீளமான வெட்டு செய்வதன் மூலம் வரையலாம்.

தையல்காரர் இழையோட்டல் அல்லது டேகிங்

இழையோட்டல் துணியில் குறிப்பதற்கு உதவுகிறது. இவை பட்டு மற்றும் மென்மையான துணிகளுக்கு பொருத்தமானதாக அமையும். தையல் பழகுபவர்களுக்கு இது பெரிதும் உதவுகிறது. இது நிரந்தரமான இருபுறமும் தெளிவாக தெரியும். இது பெரிய தையலாகவோ அல்லது ஒட்டுத் தையலாகவோ செய்யலாம். (எ.கா). சிவப்பு நிற துணிக்கு ரோஸ், மஞ்சள், ஆரஞ்சு, ஊதா, கருமை, வெள்ளை நிற நூலை பயன்படுத்தலாம். துணியில் நூல் தெளிவாக தெரிய வேண்டும்.

தையல்காரர் டேக்கிங் செய்யும்போது கீழ்வருவனவற்றை மனதில் கொள்ள வேண்டும்.

• துணியை நிலையான பரப்பில் போடவும்

• மாதிரி துண்டுகளை சரிபார்த்து சரியான முறையில் துணி வீணாகாதவாறு வைத்து பொருத்தவும்.

* அழுத்தமான நிற இரட்டை நூலை ஊசியில் கோர்த்து வைத்துக் கொள்ளவும்.

• மாதிரியை துணியுடன் சேர்த்து சிறு ஒட்டுத் தையலிடவும்.

* இரு தையலுக்கிடையே நீளமான கொக்கிகள் போல் இழுக்க நூல் விடவும்.

* முழு மாதிரிகளையும் டேக்கிங் செய்யவும்.

• டேக்கிங் முடிந்தவுடன் தையலிடையே நூலினை கத்தரிக்கவும்.

• மாதிரிகளை மெதுவாக எடுக்கவும். .

தையலிடப்பட்ட இடங்களில் வெட்டப்பட்ட நூலினை கவனமாக விட்டுவிடவும்.

• இந்த நூல்கள் புள்ளியிட்ட கோடுபோல துணியை வெட்ட பயன்படும்.

• திறந்த விரிப்பு மற்றும் இணைந்த விரிப்பு கொண்டு தையல்காரரின் டேக்குகள் குறிக்கவும்.

வெட்டுதல்

ஒரு துணியை அளவான, பொருத்தமான துண்டுகளாக வெட்டி இணைத்து, தைத்து ஆடையாக உருவாக்கும் முறையே வெட்டுதல் எனப்படுகிறது. துணியை வெட்டுவதற்கு கத்தரிக்கோல் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

துணி வெட்டுவதில் பின்பற்ற வேண்டிய முக்கியமான படிகள்

• கிரைன் நழுவாமல் இருக்க துணியை மேஜை மீது ஒழுங்காக பரப்பவும்.

• துணியை இடதுகையால் அழுத்தி பிடித்துக் கொண்டு வலது கையினால் வெட்ட வேண்டும்.

* பென்சிலால் வரையப்பட்ட நீண்ட கோடுகளை பயன்படுத்தி கத்தரியின் முழு நீளத்தையும் பயன்படுத்தி துணியை வெட்ட வேண்டும்.

• மேசையின் மீது துணியை வைத்து, மேசையை சுற்றி வந்து வெட்ட வேண்டும்.

• துணியை நம் பக்கமாக இழுத்து வெட்டும்போது இழைதிசை மாறும்.

* வரைந்த கோட்டின் மீது சரியாக வெட்ட வேண்டும்.

• வெட்டும் இடத்தைக் குறிக்கும் வெட்டு (நாட்சஸ்) தேவைப்படும் இடங்களில் வெட்டவும்.

* அனைத்து மாதிரிகளும் வெட்டப்படும் வரை பிற மாதிரிகளை எடுக்க வேண்டாம்

• தேவையற்ற துண்டுகளை அப்புறப்படுத்தி, மற்ற பிற துண்டுகளை சுற்றி வைக்கவும்.

சிறப்புத் தன்மை வாய்ந்த துணிகளை வெட்டும் போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்

1. சிறு நூலிழைகள் மேலே தோன்றும் (Short nap)

எ.கா). கார்டுராய், வெல்வெட்டீன், வெட்டப்பட்ட நூலிழை மேல் நோக்கி இருக்கும். அகல துணியில் இழை கீழ்நோக்கி இருப்பது (தனித்துவம் பெற்றது)

2. நீண்ட நூலிழை (long nap)

வெட்டப்பட்ட நூலிழை கீழ்நோக்கி சிறப்புத்தன்மை வாய்ந்த துணிகளை வெட்டும்போது கவனிக்க வேண்டிய குறிப்புகள்

3. ஒருபக்க டிசைன்

ஒரு அச்சு டிசைன் ஒரு திசையில் செய்யப்படும் போது, ஆடையின் ஒவ்வொரு துண்டும் அதே திசையில் வெட்டப்பட வேண்டும்.

4. அரை நூலிழை திசை டிசைன் (Off grain design)

உடையில் நூலிழை திசையில் சற்று அகன்று அச்சுக்கள் இருப்பது. (இதுபோன்ற உடைகள் வாங்குதலை தவிர்க்கவும்).

5. கட்டங்கள் மற்றும் கோடுகள்

பொருந்துதல் அவசியம். கட்டங்கள் நிறைந்த டிசைன் 3/4அல்லது குறைவான அங்குலத்தில் நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

6. பைல்

துணியின் மென்மையான அல்லது பின் தவறான பக்கத்தை ஒன்றாக வைக்கவும்.

7. செல்வெட்ஜ்

ஆடைக்கு துணியை வெட்டும் முன் செல்வெட்ஜ் பகுதியை பார்த்து வெட்டுவது அவசியம். இணைப்பு பகுதியில் நிறைவுப்பகுதியாக பயன்படுத்த முடிகின்ற இடங்களில் பயன்படுத்தவும். சில துணிகளில் அதிக அடர்த்தியாக காணப்படும். ஒரு சில துணிகளில் கத்தரித்து விடப்பட்டு இருக்கும்

8. மனிதனால் உருவாக்கப்பட்ட துணி இழைகள்

மனிதனால் உருவாக்கப்பட்ட இழைகளால் செய்யப்பட்ட துணிகளில் மாதிரிகளை கவனமாக தயாரிக்க வேண்டும். ஏனெனில் தையற்காரரின் தைத்த ஆடை போல் தோன்றாது. ஓரங்கள் மற்றும் இணைப்புகள் சீராக இருக்க வாய்ப்புகள் குறைவு.

9. விரைப்புத்தன்மை கொண்ட துணிகள்

(உ.ம்). பட்டுடபேட்டா, துணிகளில் மோல்டட் கோடுகள் கொண்டிருக்கும். (உ.ம்). தயாரிக்கப்பட்ட கைப்பகுதி, மாதிரிகளை கவனமாக தேர்வு செய்யவும்.

10. கார்டுராய் சுருங்காது. ஆனால் துணிகளை உலர்த்தும் இயந்திரத்தால் சுருங்கும்.

11. பெரிய அச்சுக்கள்

துணியின் நூலிழை திசையுடன் ஒன்றிப்போகாத அச்சுக்களுடன் கூடிய துணிகளை வாங்கக்கூடாது. அச்சுக்களின் திசையில் வெட்டவும். (உ.ம்) பூக்கள் |மோட்டிஃப்கள் மேல்நோக்கி இருக்க வேண்டும்.

முடிவுரை

துணியை விரித்தல், குறித்தல் மற்றும் வெட்டுதல் இவை மூன்றும் ஆடை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இவை கவனமாக செய்யப்பட்டால் அழகான ஆடையாக அமைத்து, கச்சிதமாகவும், சிக்கனமாகவும் ஆடைகளைத் தைக்க முடியும்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.21428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top