பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

துணியை சீர்படுத்துதல்

துணியை சீர்படுத்துதல் பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

முன்னுரை

புதிதாக உருவாக்கப்பட்ட துணிகள், ஆலையில் இருந்து வெளிவரும்போது கிரேக் சரக்குகள் (Greige goods) அல்லது கிரே சரக்குகள் என்று அழைக்கப்படுகின்றன. இது துணிகள் கிரே நிறத்துடன் இருப்பதை குறிக்காது. சாதாரணமாக தயாரிப்பில் நிறைவுபெறாத துணிகளையே இது குறிக்கும். துணி சரக்குகள் தயாரிப்பில் நிறைவு பெற பல்வேறு செயல்பாடுகளை கடந்து வந்தால் மட்டுமே பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்கும். துணியின் தோற்றம் சீர்செய்து நிறைவு பெறும் போது சில மாற்றங்களை அடைகிறது. தொடு உணர்வு, அதன் பயன்பாடு மற்றும் அதன் உழைக்கும் திறன்.

நெசவு செய்யப்பட்ட துணிகள்

நெசவு செய்யப்பட்ட துணிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

• கிரே துணி

• கன்வெர்டட் துணி

• வண்ண நூல்களால் நெசவு செய்யப்பட்ட துணி.

கிரே துணி

சீர் செய்யப்படாமல் நிறைபெறாது தறியிலிருந்து நேரடியாக தயாராகி வரும் துணிகள் 'கிரேதுணி' என்று அழைக்கப்படுகின்றன. இந்த துணியானது ஒழுங்கற்ற முறையில் தயாரிக்கப்பட்ட நூல்களால் தயாரிக்கப்பட்டவை. கிரே துணியில் ஒரு பகுதி மட்டுமே சந்தைக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எஞ்சிய மற்றவை சீர் செய்யப்பட்ட பின் சந்தையில் மக்களின் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

கன்வெர்ட்ட துணி

தறியில் முழுமையாக முடிவு பெறாத துணிகளை, சீர்செய்து முடிவு பெறச் செய்து மாற்றம் ஏற்படுத்தப்பட்ட துணிகள் கன்வெர்டட் துணிகள் என்று கூறப்படுகின்றன.

வண்ண நூல்களால் நெசவு செய்யப்பட்ட துணி :

வண்ண நூல்களால் ஆலைகள்/தறிகளில் நெசவு செய்யப்பட்டு பிறகு வண்ண துணிகள் கடைகளுக்கு நேரடியாக விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

சீர்செய்து நிறைவுசெய்தல் இரு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன:

அடிப்படை சீர்செய்தல், பயன்பாட்டினை பொருத்து சீர்செய்தல்

அடிப்படை சீர்செய்தல்

அடிப்படை சீர்செய்தல் முறையில் இரு வகைகள் உள்ளன. அவை, அ) கண்ணுக்கு தெரியும் வண்ணம் சீர்செய்தல், ஆ) தொட்டு உணரக் கூடிய வகையில் சீர்செய்தல்

அ. கண்ணுக்குத் தெரியும் வண்ணம் சீர்செய்யும் வழி முறைகள் பின் வருவன:

ப்ளீச்சிங்:

ஒரு துணி வெண்மை நிறம் பெறுவதற்கு சீர் செய்யவோ அல்லது மேற்பரப்பில் அலங்கார அமைப்பு செய்வதற்கும் ப்ளீச்சிங் மூலமாக அனைத்து இயற்கை நிறங்களையும் துணியில் இருந்து அகற்ற வேண்டும். முந்தைய தயாரிப்பு செயல்பாட்டின் போது ஏற்பட்ட நிற மாற்றங்கள் அல்லது கறைகளை நீக்க ப்ளீச்சிங் தேவைப்படும். நூலிழை நிலையிலும், உருவாக்கப்பட்ட துணிகளிலும் ப்ளீச்சிங் செய்யலாம். துணிகளில் உள்ள நிறத்தை நீக்குவதற்கு தகுந்த ப்ளீச்சிங் பொருட்களான ஆக்ஸிடைசிங் அல்லது ரெட்யூசிங் வெளுப்பான்கள் பயன்படுத்தப்படுகின்றன. பருத்தி, கம்பளி மற்றும் பட்டுத் துணிகளில் ப்ளீச்சிங் செய்யப்படுகிறது. மனிதனால் தயாரிக்கப் பட்ட துணிகள் இயற்கையாகவே வெண்மையாக இருப்பதால் ப்ளீச்சிங் தேவைப் படுவதில்லை. துணி உருவாக்கத்திற்கு பயன்படுத்தப்பட்ட துணியின் இழை வகையை பொருத்து ரசாயன வகையும் பயன்படுத்தப்படுகிறது.

மெர்சரைசிங்:

பருத்தி துணிகள் தயாரிக்கப்படும் செயல்பாட்டில் மெர்சரைசிங் மிகவும் முக்கியமானது. லினன் துணிகள் சீராக்கப் படுவதற்கும் மெர்சரைசிங் பயன்படுகிறது. மெர்சரைசிங் செயல்பாட்டில் துணியானது வீரியம் மிகுந்த சோடியம் ஹைட்ராக்ஸைடு கரைசலில் 70 - 80°F வெப்பநிலையில் இழுத்து பிடிக்கப்படுகிறது. தட்டையான, முறுக்கப்பட்ட நாடா போன்ற பருத்தி இழைகளை மெர்சரைசேஷன் செய்வதால் வட்டவடிவமாக உப்பச் செய்து நீளத்திலும் அதிகரிக்கச் செய்யப்படுகிறது. இயற்கை இழைகளை விட இந்த இழைகள் அதிக பளப்பளப்புடனும், அதிக வலிமையுடனும் 20% அதிகரித்தும் காணப்படும். சாயம் துணிகளில் ஏற்றப்படுவதை மேம்படுத்த மெர்சரைசிங் செய்யப்படுகிறது.

வெட்டுதல் (Shearing):

பைல் நெசவினால் உருவான துணிகள் மற்றும் துணிபரப்பின் மீது நீட்டிக் கொண்டிருக்கும் நூல்கள் கத்தரிக்கப்படுவதும், வழக்கமாக வெட்டப்பட்டு, துணிகளுக்கு கவர்ச்சியான வளவளப்பான மேற்பரப்பை கொடுக்கும். மேற்பரப்பில் ஏற்படும் ஒழுங்கற்ற நூல் இழைகளை நீக்கி சமன்படுத்தி, மேலே நீட்டிக் கொண்டு இருக்கும் நூல்களை வெட்டும் செயலும் செய்யப்படுகிறது. இன்னொரு வகையில் பைல்நெசவில் மாதிரிகள் வெட்டப்பட்டு ஸ்கல்ப்டர்டு விளைவு ஏற்படுத்தப்பட்டு அதிக மற்றும் குறைந்த மேற்பரப்பு நிலைகளை ஏற்படுத்துகிறது. சுழலும் உருளைகளையும், வெட்டும் ஹெலிக்கல் பிளேடுகளையும் கொண்ட இயந்திரத்தின் மூலம் வெட்டுதல் செய்யப்படுகிறது. இவ்வியந்திரத்தின் செயல்பாடு புல்வெளியில் புல் வெட்டும் இயந்திரத்தை ஒத்து இருக்கும். வெட்டப்பட்ட பிறகு, துணியில் உள்ள நுனி நூல் மற்றும் வெட்டப்பட்ட நூல் இழைகள் தானாகவே இயங்கும் புருசால் சுத்தம் செய்யப்படுகிறது.

சின்ஜிங்:

ஒரு துணி கரடுமுரடில்லாமல் வழவழப்பாக சீர்செய்யப்பட வேண்டுமானால், சின்ஜிங் என்பது ஒரு முதன்மையான இன்றியமையாத செயல்பாடாகும். சின்ஜிங் லின்ட், நூல்கள், தலைமுடி மற்றும் இழைகளின் நுனிகள் ஆகியவற்றை எரித்து விட்டு, பிறகு சமமான வழவழப்பான மேற்பரப்பை ஏற்படுத்தும். அதற்கு பிறகு அச்சிடும் செயல்பாடு அல்லது பிற முடிவுறும் சீர்செய்யும் செயல்பாடுகள் முறையாக செய்யப்படும். க்ரே துணிகளை இரு பர்னர்கள் உள்ள வாயு ஜ்வாலை மேல் 100 முதல் 250 யார்டுகளை (90-225 மீட்டர் ஒரு நிமிடத்தில் செலுத்தலாம். துணிகள் பர்னர்களை விட்டு அகன்றதும் தண்ணீரில் நனைத்து, வெளியேற்றி உலர வைத்து விடுவர்.

பீட்லிங் (Beetling):

லினன் துணிகளை தயாரிக்கும் செயல்பாட்டில் பொதுவான சீர்செய்தல் முறையே பீட்லிங் ஆகும். கட்டைகளால் நூலிழைகள் அடிக்கப்பட்டு தட்டை ஆக்கப்படுகிறது. இவ்வாறு செய்கின்ற போது துணி திடமாக, தட்டையாக, மிருதுவாகவும், பளபளப்பாகவும் தோன்றும். மேஜைக்கு பயன்படுத்தப்படும் லினன்கள் மட்டுமே பீட்லிங் செயல் பாட்டிற்கு உட்படுத்தப்படுகிறது. ஆடைகளுக்கு பயன்படும் லினன்கள் பீட்லிங் செயல்பாட்டிற்கு உட்படுத்தப்படுவதில்லை. பீட்லிங் காலண்டரிங்கில் இருந்து மாறுபட்டது.

டென்டரிங் (Tentering) :

சீர்செய்யும் செயல்பாட்டு நிலையில் டென்டரிங் செய்யப்படுகிறது. வழக்கமாக டென்டர்க்குள் செலுத்தப்படும் போது துணிகள் ஈரமாக இருக்கும். உலரச்செய்தல் மற்றும் அகலத்தை சீராக வைப்பது ஆகியவை டென்டரிங் செய்வதன் அடிப்படை நோக்கமாகும். டென்டர் சட்டத்தில் இரு முடிவில்லாத சங்கிலிகள் நீளமாக அமைக்கப்பட்டு இருக்கும். இரு சங்கிலிகளுக்கும் இடையே உள்ள அகலத்தை கூட்டவோ, குறைக்கவோ செய்யும் வகையில் அமைக்கப்பட்டு இருக்கும். சங்கிலிகளில் உள்ள கிளிப்கள் மற்றும் பின்கள் துணியின் கரைப்பகுதியை (selvedge) அழுத்தமாக பிடித்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டு, துணியை உருளை வழியாக செலுத்தும்போது வெப்ப நீராவியானது துணியின் கீழ் இருந்து செலுத்தப்பட்டு துணியில் உள்ள ஈரத்தை அகற்றுகிறது. ஊசிகள் (pins) உள்ள சட்டங்கள் (frames) அநேகமாக கம்பளிகள் மற்றும் பின்னப்பட்ட (knitted) துணிகளில் பயன்படுத்தப்படுகிறது. சில சமயங்களில் துணிகளின் கரைப்பகுதியில் ஊசிகள் குத்தப்பட்டதால் ஏற்பட்ட சிறுதுளைகள் அல்லது கிளிப்கள் பயன்படுத்தப்பட்டதால் ஏற்பட்ட அடையாளம் காணப்படுகிறது.

காலண்டரிங் (Calendering) :

காலண்டரிங் என்பது இஸ்திரி இடும் செயல்பாடாகும். இதனால் துணிகள் மெருகேற்றப்பட்டு தோற்றமளிக்கும். எவ்வகை சீர்செய்தல் தேவைப்படுகிறதோ அதற்கேற்றவாறு காலண்டரிங் செய்யப்படுகிறது. காலண்டர்கள் என்பன அதிக எடையுள்ள குறைந்தபட்ச இரு உருளைகளால் செய்யப்பட்ட இயந்திரங்கள் ஆகும். ஒன்று பொதுவாக குளிர்விக்கப்பட்ட ஸ்டீலாலும், மற்றொன்று மரம், பேப்பர், பருத்தி இழை, சோள உமி அல்லது பருத்தி மற்றும் சோள உமி சேர்ந்த கலவை போன்ற மென்மையான பொருளாகும். உருளைகள் நீளவாக்கில் அமையப்பெற்ற சட்டங்களால் தாங்கப்படுகின்றன. சாதாரண காலண்டர் உருளைகளில் ஏழு உருளைகள் அமைக்கப்பட்டிருக்கும் - நான்கு ஸ்டீல் உருளைகளும், மூன்று சோள உமி அல்லது பருத்தி உருளைகளும் இருக்கும். ஸ்டீல் உருளைகள் வாயு அல்லது நீராவி மூலமாக சூடாக்கப்படுகின்றன. காலண்டரிங் இயந்திரம் செயல்பட்டுக் கொண்டு இருக்கும் போது துணியானது உருளையின் இடையே ஏற்படுத்தப்படும் இடைவெளி வழியாக செலுத்தப்படுகிறது; சராசரியாக 150 கெஜம் (135மீ துணிகள் ஒரு நிமிடத்தில் 40 முதல் 60 டன்கள் அழுத்தத்தில் காலண்டரிங் செய்யப்படுகிறது. பிறகு துணிகள் இயந்திரத்தின் பின்னால் சுற்றப்படுகிறது.

மோயர் முறையில் சீர்செய்யப்படுதல் (Moire Finishes) :

கவர்ச்சிகரமான, பளபளப்பான, அலை அலையான டிசைன்களே மோயர் ஆகும். மோயர் டிசைன்கள் என்பன துல்லியமாக மேற்பரப்பில் புடைக்கச் செய்வதாலும், அல்லது துணிகளை வரிகளுடன் கூடிய உருளைகளுக்குள் செலுத்தி அழுத்தம் கொடுப்பதாலும் தயாரிக்கப்படுகிறது. ரிப் நெசவுத் துணிகளை உருளைகளுக்கு மத்தியில் செலுத்தும் பொழுது சிறந்த மோயர் டிசைன் விளைவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த வடிவமைப்புகள் உருளையால் துணி இழையை உயர்த்தி புடைக்க செய்து அச்சிடப்படுவதாகும். டிசைன் கோடுகளில் ஒளி பரப்பப்பட்டு பளபளப்பான தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

பிரஸ்சிங் (Pressing):

கம்பளித் துணிகளின் மேற்பரப்பில் உள்ள சிறு மயிரிழைகளை அகற்ற அழுத்தும் முறை பயன்படுத்தப் படுகிறது. பிரஸ்சிங் முறை காலண்டரிங் முறையை ஒத்திருக்கும்

எம்பாமிங் (Embossing):

வெப்பப்படுத்தப்பட்ட உருளைகளுக்கு இடையே துணிகளை செலுத்தி டிசைன் துணியின் மேற்பரப்பில் பிற பாகத்தை விட உயர்ந்து தோன்றச் செய்யும் செயல்பாடே எம்பாஸிங் ஆகும். இச்செயல்பாடு கம்பளித் துணியைத் தவிர மற்ற அனைத்து வகை துணிகளிலும் செய்யப்படுகிறது. எம்பாஸிங்கால் நிறைவு செய்யப்பட்ட துணிகளில் எம்பாஸிங்கை பாதுகாக்க துணிகளை வெதுவெதுப்பான மிதமான சோப்பு நீரில் நனைத்து, சலவை செய்து, வெளிரச் செய்யாமல், துணியின் உள் பக்கத்தில் சிறிது ஈரமாக இருக்கும் நிலையில் அழுத்தம் கொடுக்க வேண்டும்.

கிரேப் மற்றும் கிரிங்கிள்ட் விளைவு (Crepeand Crinkled Effect):

நெசவு செயல்பாட்டின் போது அழுத்தமாக முறுக்கப்பட்ட நூலிழைகளைப் பயன்படுத்தும் போது நிரந்தரமான கிரேப் விளைவுகளைப் பெற முடியும். ஒரு சீரமைப்பு முறையில் சுருக்கங்கள் நிறைந்த விளைவினை குறி பொறிக்கப்பட்ட உருளைகளை பயன்படுத்தும் போது டிஷ்யூ பேப்பரில் நகத்தால் கீரியது போன்ற தோற்றம் அமைப்பை பெற முடிகிறது. தொடர் சலவைகளால் இந்த அமைப்பு நிலையற்று மறைந்து விடுகிறது. மற்றுமொரு சீரமைப்பு முறையில் காஸ்டிக் சோடாவை பயன்படுத்தி பருத்தி துணியில் தேவைப்படும் உருவம் அல்லது கோடு வடிவங்களில் டிசைன் போடலாம். துணி பிறகு சலவை செய்யப்படும். காஸ்டிக் சோடாவைப் பயன்படுத்தி டிசைன் செய்யப்பட்ட இடங்களில் சுருக்கங்கள் ஏற்பட்டும் மற்ற இடங்கள் 'பக்கர்'களாகவும் ஆகிவிடுகின்றன.

நைலான் போன்ற இளகும் தன்மை கொண்ட துணிகளில் நிரந்தர சுருக்கங்களை பெற முடியும். வெப்பமான சற்று உயர்ந்த உருவ டிசைன் கொண்ட உருளைகளுக்கிடையே துணி செலுத்தப்படும்போது துணிகள் இளகி அந்த டிசைன்கள் துணிகளில் உருவாக உதவுகிறது. மற்ற பிற இடங்களில் பக்கர் உருவாகிவிடுகிறது.

தொட்டு உணரக்கூடய சீர் செய்யும் முறைகள்: (Finishes that appeal to touch):

சில சீர் செய்யும் முறைகள் துணிகளுக்கு மிருது தன்மை, எடையை அதிகரித்தல், மொடமொடப்பு மற்றும் வெதுவெதுப்பான சீதோஷ்ணம் போன்ற மாற்றம் ஏற்படுத்தி இருப்பதே தொட்டு உணரக் கூடிய சீர் செய்யும் முறைகள் என்று அழைக்கப்படுகிறது.

நேப்பிங் (Napping):

நேப்பிங் என்பது நீளமான மயிரிழை மேற்பரப்பை பெறுவதற்காக முக்கியமாக பயன்படுகிறது. ஆனால் நீளமான மயிரிழை மேற்பரப்பை பெறுவதற்கு, எவ்வகையான தொழிற் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பது மிகவும் முக்கியம். சிறு கொக்கிகளை முனைகளில் கொண்ட உலோக கம்பிகளை உடைய உருளைகளுக்கு அடியில் துணி செலுத்தப்படுகிறது. கொக்கிகள் துணியின் மேற்பரப்பை சமமாக்கி இழைகளின் முனைகளை நூலிழைகளில் இருந்து இழுக்கும் போது தெளிவற்ற நிறைவுறுதல் துணியில் ஏற்படுகிறது. நேப்பிங் மூலம் துணியில் உருவாகும் இச்சீர் அமைப்பு துணியை மென்மையானதாக, வெதுவெதுப்பானதாக, குளிர்தாங்கக் கூடியதாகவும் ஆக்குகிறது.

எடையை அதிகரித்தல் (Weighting) :

சில உலோக உப்புக்களுடன் சேர்த்து பட்டு துணியின் எடையை அதிகரித்து, அத்துணியின் மதிப்பை உயர்த்துகிறார்கள். உலோக உப்புக் கரைசல் உள்ள நீரில் பட்டை மூழ்க செய்து பட்டுத் துணியின் எடையை அதிகரிக்கலாம். பட்டு நூலிழைகளுக்குள் உப்புக் கரைசல் ஊடுருவிச் சென்று, துணியின் நிரந்தர அங்கமாகிவிடுகின்றன. ஆனால் பட்டுத்துணியை தொட்டு உணரும் போது உப்புக் கரைசல் ஊடுருவியுள்ளதை கண்டு பிடிக்க இயலாது. பட்டின் எடையை அதிகமாக்க அதிக உலோக உப்பு பயன்படுத்தப்பட்டு இருந்தால் துணி நைந்து விடும்.

கஞ்சி போடுதல் (Starching):

குளூ மெழுகு, கேசீன், ஸ்டார்ச் மற்றும் களிமண் (Clay) ஆகியன பருத்தி துணிகளுக்கு எடை அதிகரிப்பு, விரைப்புத் தன்மை மற்றும் பளபளப்பான தோற்றத்தை ஏற்படுத்த பயன்படுகின்றன. ஸ்டார்ச்சை துணியின் மேல் பரப்பிய பிறகு இரு உருளைகளுக்கு இடையே செலுத்தப்படுகிறது. மெழுகும், எண்ணெயும் ஸ்டார்ச் திரவத்துடன் ஒன்றாகக் கலந்து துணிக்கு போடும் போது பளபளப்பான தோற்றத்தை துணிகளில் காணலாம். கஞ்சி போடுதல் என்பது தற்காலிக முறையாகும்.

சான்போரைசிங் (Sanforizing):

நார் இழைகள், நூல் இழைகளாக நூற்கப்படும் போது நெசவு செயல்பாட்டில் பல முறைகள் இழுக்கப்படுகின்றன. நூலிழைகள் நிறைவுற்ற நிலையை அடைந்து துணியாக தயாரிக்கப்பட்டு சீர் செய்யப்பட்ட செயல்பாட்டில், சுருக்கங்கள் ஏற்படுவதை குறைப்பதற்காக குளிர்ந்த நீரில் மூழ்கி வைக்கப்படுகிறது. துணிகள் சுருங்குவதை இழையின் நிலைப்புத் தன்மையும், துணி உருவாக்குதலும், கட்டுபடுத்தக் கூடிய காரணிகளாகும். நெசவு முறை, நூலிழையின் முறுக்கு, நூலின் எண்ணிக்கை, மற்றும் நூலிழையின் எண்ணிக்கை ஆகியவற்றைச் சார்ந்தே துணிகள் உருவாக்கப்படுகின்றன.

துணியின் சிறு துண்டை எடுத்து, அளந்து, நீரில் மூழ்கச் செய்து, துணியில் சுருக்கம் ஏற்படுவதை கணக்கிடலாம். சூடான இயந்திரத்திற்குள் துணி செலுத்தப்பட்டு, தேவையான அளவிற்கு சுருங்க வைக்கப்படுகிறது. இதுவே சான்போரைசிங் ஆகும்.

சிறப்புச் சீர் செய்யும் முறை அல்லது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு சீர் செய்தல்

தனிப்பட்ட பயன்பாட்டிற்கு துணிகளை சீர் செய்வதை சிறப்புச் சீர் செய்யும் முறைகள் என்று கூறுவர்.

உறிஞ்சும் சீர் செய்யும் முறை (Absorbency Finishes) :

பருத்தி, லினன், ரேயான் ஆகிய செல்லுலோஸ் இழைகள் நீரை நன்கு உறிஞ்சினாலும் சில சமயங்களில் இன்னும் அதிக அளவில் உறிஞ்சுதல் அவசியமாகிறது. அமோனியம் கலவைகளுடன் சேரும் போது செல்லுலோஸ் இழைகள் மாற்றப்பட்டு, இன்னும் அதிக அளவில் உறிஞ்சும் தன்மையை அடைகிறது. இந்த உறிஞ்சும் தன்மையானது அதிக சௌகர்ய ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், துண்டுகளுக்கும் மிகவும் இன்றியமையாதது ஆகும்.

சுருக்கங்களை தடுக்கும் சீர் செய்யும் முறைகள் (Wrinkle Resistant Finishes):

இந்த முறையில் சீர் செய்யப்படுவதை 'சுருக்கங்கள் தவிர்க்கும்' அல்லது 'சலவை செய்து அணிதல்' சீர் செய்தல் என்றும் கூறலாம். DMDHEU- டைமீத்தேல் டைஹைட்ராக்சி எத்திலின் யூரியாவை பயன்படுத்தி துணிகளில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்க பயன்படுத்தப்படுகிறது. இம்முறையில் சீர்செய்தலின் முக்கிய நோக்கம் யாதெனில் துணிகளில் ஏற்படும் விரும்பத்தகாத மற்றும் தேவையின்றி ஏற்படும் மடிப்புகள், சுருக்கங்கள், கசங்குதல் போன்றவைகளை தடுப்பதே ஆகும். சில சீர் செய்யும் முறைகள் சுருக்கங்களை தவிர்ப்பவை. ஆனால், சில சீர்செய்யும் முறைகளில் துணிகளை அணிந்த பிறகு சுருக்கம் ஏற்படாதவாறு இருக்க ஒழுங்காக தொங்கவிடப்பட வேண்டும்.

நெருப்பு ஜ்வாலையால் அழியாத தன்மையுடன் சீர்செய்தல்: துணிகள் நெருப்பு ஜ்வாலையால் அழியாத தன்மை பெற ரசாயனம் பயன்படுத்தி சீர் செய்யப்படுகிறது. இந்த ரசாயனம் துணிகள் மற்றும் இழைநார்களில் சேர்க்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ளது. கார்போனேட் மற்றும் அமோனியம் உப்புக்கள் பயன்படுத்தி துணிகள் நெருப்பு ஜூவாலையில் அழியாத தன்மையுடன் இருக்கச் செய்யப்படுகிறது.

கிருமிகளில் இருந்து தடுத்து சீர் செய்யும் முறை: துணிகளுக்கு ரசாயன கிருமி நாசினியான சைட்டோசன் பயன்படுத்தும் போது துணியில் கிருமிகளை அகற்றச் செய்து சீர் செய்யப்படுகிறது. துணிகளின் தோற்றம் மற்றும் தொடுதன்மை எந்த மாற்றமும் அடையாமல் இருக்கும். எந்த ஒரு ரசாயன மணமும் இருக்காது. உலர் சலவை செய்வதால் சீர்செய்தல் எந்த வகையிலும் பாதிக்கப்படுவதில்லை.

மைல்டு ட்யூவில் இருந்து தடுத்தல் (Prevention of Milddew) :

செல்லுலோஸ் நாரிழைகள் மைல்டு ட்யூவால் பாதிப்படையும். பட்டு மற்றும் கம்பளியும் ஓரளவிற்கு பாதிப்படையும். குறிப்பிட்ட காலத்திற்கு ஈரப்பதம் உள்ள நிலையில் துணிகள் இருக்குமேயானால் பூஞ்சைகளால் பாதிப்படைந்து, துர்மணம் ஏற்பட்டு, துணியில் கறையும் ஏற்பட்டுவிடும்.

வீடுகளில் திரைச் சீலைகள் அல்லது பிற பருத்தி துணிகள் மைல்டு ட்யூவால் பாதிப்படையாமல் இருக்க, துணியை சோப்பு நீரில் மூழ்கச் செய்து, பின் அலசாமல், போரிக் அமிலம் மற்றும் கார்போலிக் அமிலக்கரைசலில் மூழ்கச் செய்யப்படுகிறது. இப்படிச் செய்வதால் மைல்டு ட்யூ பூஞ்சை வளராமல் தவிர்க்கப்படுகிறது. 0.05% பினைல் மெர்க்யூரிக் அசிடேட் கரைசல் நீர்க் கலவையானது. மைல்டு ட்யூவை தடுக்கும் முக்கிய காரணி ஆகும்.

நீர் புகாதவாறு இருக்க சீர் செய்தல் (Water repellency finishes): நீரின் அழுத்தம் மற்றும் துணி நீருடன் உள்ள காலத்தைப் பொறுத்தும், துணி தண்ணீரை உறிஞ்சவும், ஊடுறுவதலையும் குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பதுமே நீர் துணியினுள் புகாதவாறு இருக்கும் துணியாகும். அநேகமான நீர் புகாதிருக்க செய்யப்பட்டவைகள் ரப்பர், மெழுகுகள் மற்றும் ஆக்ஸிகரணம் அடைந்த எண்ணெய்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி பாலிவினைல் குளோரைடு பிளாஸ்டிக் பயன்படுத்தப்பட்டு செய்யப்படுகிறது. குறைவான செலவு செய்யப்பட்டு, மிக குறைந்த எடையுடன் உள்ள நீர் புகாதவாறு நிறைவு செய்யப்பட்டுள்ள ஆடை தயாரிப்புகள் உடுத்தும்போது அசெளகர்யம் ஏற்படுத்துகின்றன.

துணி நீரை உறிஞ்சாமல் இருக்க சீர்செய்தல் (Water proof finishes) ஒரு துணி நீரை உறிஞ்சாமல் இருப்பதற்கு, நீரில் கரையாத ஒரு பொருளைக் கொண்டு முழுவதுமாக சீல் செய்ய வேண்டும். தற்காலத்தில் நீரை உறிஞ்சாமல் இருக்கச் செய்யும் பொருட்களுள் வினைல் ரெசின்கள் -ஆக்ஸிகரணம் அடையாமல் ரப்பர் போல் பிளவு படாமலும் இருக்கும்.

முடிவுரை

துணியை சீர்ப்படுத்துவதால் நமது உணர்வுகள் உயர்த்தப்பட்டு, துணிகளில் பளபளப்புடன் எடை கூட்டப்பட்டு, நிறைவான தன்மை ஏற்பட்டு, மென்மையாக்கப்படுகிறது. இது தற்காலிகமானதாகவோ, நிரந்தரமானதாகவோ இருக்கும். இவ்வாறாக துணியின் உழைப்புதிறன் நீடித்த நிலைப்புத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்த துணிகளை சீர்ப்படுத்துதல் பயன்படுகிறது.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
3.14285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top