பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

பட்டைகளும் அலங்கார முடிச்சுகளும்

பட்டைகள் மற்றும் அலங்கார முடிச்சுகளை தயாரிக்கும் முறை பற்றி தெரிந்துக் கொள்ள இங்கு படிக்கவும்.

முன்னுரை

பட்டைகள் இடுப்புப் பகுதியினை நிறைவு செய்வதற்கு பயன்படுகின்றன. மேலும் இவை மேல்சட்டை மற்றும் பாவாடையின் இணைப்யுைம் மறைக்கிறது. ஆடையின் வடிவத்திற்கு ஏற்றவாறு பட்டையின் பாங்கும் அமைந்திருக்க வேண்டும். உடையோடு ஒத்த சார்புள்ள அல்லது சார்பற்ற நிறங்களை சிறப்பாக பயன்படுத்துதல் வேண்டும்.

ஆடைக்கான துணியினால் செய்யப்பட்ட பட்டைகள் அலங்காரமாகவும், பயன்பாடுடையதாகவும் அமையும். அவற்றை மென்மையானதாகவோ அல்லது விரைப்புத் தன்மையானதாகவோ, குறுகிய அல்லது அகலமான, வடிவமற்ற அல்லது சிக்கலான வடிவங்களுடையதாகவோ, ஆடையின் தன்மை மற்றும் நாகரீக பாங்கிற்கு ஏற்றவாறு அமைக்கலாம். பொய்த்துண்டு பயன்படுத்தி விரைப்புத் தன்மை கொண்டு தயாரிக்கப்படும் பட்டைகள் வடிவம் மாறாது சிறப்பாக இருக்கும். மஸ்லின், பெல்டிங் கிராஸ், கிரெயின் ரிப்பன் அல்லது தோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். பட்டை பொதுவாக கொக்கி அல்லது அலங்கார கொக்கி அல்லது இணைப்பான்கள் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. நேர்பட்டி பொய்ப்பட்டி கழுத்துப்பட்டி மற்றும் பாவாடைப் பட்டி ஆகியவை செங்குத்தாக வெட்டி தயாரிக்கப்படுகின்றன. ஆனால் சாஷ் பட்டைகள் (Sash belt) குறுக்குத் துணி வைத்து தயாரிக்கப்படுகின்றன.

பட்டையின் நீளத்தை கணக்கிடும் முறை

முதலில் பட்டையின் நீளத்தை அளந்து குறித்துக் கொள்ள வேண்டும். சாதாரணமாக உடலின் சுற்றளவை விட 7'' அதிகமான நீளத்தை பட்டை கொண்டிருக்க வேண்டும். பலரும் இடுப்பு சுற்றளவை ஒப்பிட 7" அதிகமாக தைத்தாலும் அதனை அணியும்போது பட்டையின் நீளம் பலருக்கு குறைந்துவிடும். அதனால் பட்டையை தைத்த பின் அணிந்து பார்த்து அளவை சரிபடுத்த வேண்டும்.

பட்டைகளின் வகைகள்

கழட்டக்கூடிய பட்டைகள் இரு வகைப்படும். அவை

1. மென்மையானது அல்லது விரைப்புத் தன்மையற்றது

2. உறுதியான நிறைவை உடைய விரைப்பான பட்டை

மென்மையான பட்டை அல்லது டை (Soft belt or Tie)

பட்டை தைப்பதற்கு தேவையான ஒரு நீளத் துணியை (tape) கூர்முனையின் சரியான பக்கத்தில் தையலிட வேண்டும். இத்தையலானது நிரந்திர தையல் போட்ட பின் பட்டையை உள் பக்கத்திலிருந்து வெளிப்பக்கதிற்கு இழுக்கும் வகையில் அமைந்திருக்க வேண்டும். பட்டையின் இரு பக்கங்களும் சரியான இடத்தில் பொருத்தப்படுவதற்கு முன் நீள துணியானது உண்மையான பக்கம் மேலிருக்கும்படி தைக்கப்பட வேண்டும். கூர் முனை மற்றும் இரு பக்ககங்களையும் சுற்றி நிரந்தர தையலிடவும். சதுர மறுமுனையில் திருப்புவதற்கு வசதியாக சிறிதளவு தைக்காமல் விடவும். பட்டையின் (belt) ஓரங்களை சம்படுத்தவும். நிரந்தர தையலிடுவதற்கு முன் கூர்முனைப் பகுதி கனமாக தெரியாமலிருக்க அதன் முனையிலுள்ள துணியை சிறிதளவு வெட்டி சமன்படுத்தவும். நீள் துணியின் முனையை இழுத்து பட்டையின் உட்புறத்தில் தையலிடவும். நீள் துணியை வெளியே முற்றிலுமாக இழுத்து ஓரங்களை தைத்து நிறைவு செய்யவும். தைப்பதற்கு எளிதான இந்த பட்டையை ஆடையமைக்கும் துணியினாலேயே செய்யலாம்.

விரைப்பான பட்டை (Stiffened belt)

விரைப்புத் துணியை பயன்படுத்தி இவ்வகை பட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் விரைப்புத் தன்மை காரணமாக பட்டை உடலில் சரியாக பொருந்தியிருக்கும். பட்டை தயாரிக்கும் துணிக்கு ஏற்றவாறு, விரைப்புத் துணியையும் தேர்ந்தெடுக்க வேண்டும்.

முடிக்கப்பட்ட பட்டையின் அளவிலேயே விரைப்புத் துணியை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். பட்டை துணியின் உள்பக்கம் நடுப்பகுதியில் விரைப்புத்துணியை டாக்கிங் செய்து பொருத்தவும். மேற்புறம் திருப்பி வைக்கும் பொழுது படிமானம் சரியாக இருப்பதற்கு படத்தில் உள்ளது போல கூர்மையான பகுதிகளை டிரிம் செய்யவும். கூர்முனையிலுள்ள அதிகப்படியான துணியை உட்புறமாக மடித்துக் கொள்ளவும். ஒரு பக்கத்தில் உள்ள நீள் துணியை விரைப்புத் துணிக்கு மேல் மடித்து டாக் செய்யவும். மறுபக்கத்திலுள்ள துணியை உட்புறமாக மடித்து ஏற்கனவே டாக் செய்த துணியின் மீது வைத்து பாக் செய்யவும். இதனை இயந்திர தையல் கொண்டு நிறைவு செய்யவும். தேவைப்படுமெனில் ஓரிரண்டு தையல்களை வரிசையாக போட்டு அழகு படுத்தவும் அல்லது அப்படியே விடவும். சதுரமுனையில் தேவைப்படுமெனில் அழகிற்காக பக்குளை (Buckle) பொருத்தலாம். இவ்வகையான பட்டைகளை ஆடையமைக்கும் துணியினாலேயே செய்யலாம்.

வடிவமைக்கப்பட்ட அகன்ற பட்டைகள் (shaped wide belts)

இவ்வகையான பட்டைகள் அழகிற்காக வடிவமைக்கப்படுகின்றன. இதனை வடிவமைப்பதற்கு ஏற்கனவே நீரில் நனைத்து சுருக்கம் நீக்கப்பட்ட பொய்த்துண்டு அல்லது தடிமனான பருத்தித்துணி தேவைப்படும். துணிக்கு ஏற்ற கனமான பொய்த்துண்டை தேர்ந்தெடுக்கவும். பொய்த்துண்டின் இணைக்கும் பகுதியிலுள்ள அதிகப்படியான துணியினை நீக்கி, உள்பக்கமுள்ள துணியுடன் இணைக்கவும். வடிவம் உடைய பட்டை எனில், அதன் வடிவத்திற்கேற்ப ஓரங்களை மடித்தோ அல்லது வெட்டி வளைவுபடுத்தியோ இணைக்கவும். பின்னர், வெளிப்புறமாக திருப்பி, தேவைப்படுமெனில் மேல்பக்க ஓரத்தில் தையலிட்டு அழகுபடுத்தலாம்.

பொய்த்துண்டு வைக்கப்பட்ட பட்டை (Interfaced belt)

இது ஒரு மென்மையான பட்டையாகும். அணியும்போது இது சௌகர்யத்தை அளித்தாலும், பல நேரங்களில் இது கயறு போன்று சுருண்டு விடுகின்றது. இது விரைப்புத் தன்மை அற்றதனால் நாகரிகத்திற்கு ஏற்றதாக கருதப்படுவதில்லை. இதனை வடிவமைப்பது மிகவும் எளிதாகும். ஆனால் துவைத்து பயன்படுத்தக்கூடிய பட்டையை தயாரிக்கும் போது பொய்துண்டை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டும்.

இந்த வகை பட்டையை வடிவமைக்கும் பொழுது, முதலில் துணியினை நீள்வாக்கில் இரட்டையாக மடித்துக் கொண்டு, அதன் அகலத்திற்கேற்ப பொய்த்துண்டை வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

உள்பக்கமாக பொய்த்துண்டை பொருத்தி, ஓரங்களை சரியாக வெட்டி வடிவமைக்கவும், பொய்த்துண்டின் நீள் முனையை, பட்டையின் நடுக்கோட்டில் இணைத்து தைக்கவும். மறுமுனை ஓரங்களை உள் மடித்து வைத்து மேல் தையலிடம் பட்டையின் வடிவம் தெளிவாக இருப்பதற்கு அதன் ஓரங்களில் மேல் தையலிடவும். பக்கிள்களை (Buckle) இணைத்து மேல் தையலிடவும்.

உட்புற நாடா இணைக்கப்பட்ட பட்டை (The belt with belting as backing)

தோலால் செய்யப்பட்டு தொழிலுக்கு ஏற்ற (Professional) அமைப்பில் இவ்வகை பட்டைகள் அமைந்துள்ளன. இந்த விரைப்பு உட்புற நாடா பட்டை கயறு போல் சுருங்காமல், அதன் வடிவம் மாறாதிருக்குமாறு அமைந்துள்ளது. மற்ற பட்டைகளை விட இதன் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். சலவை செய்யக்கூடிய பட்டையாக இருப்பின் அதன் நாடாவை நீரில் நனைத்து சுருக்கம் நீக்கி விடவும்.

* உடலின் சுற்றளவை விட 7 அங்குலம் நீளம் அதிகமிருக்குமாறு தேவைப்படும் வடிவத்தில் நாபா துணியை வெட்டவும்.

*ஆடைக்கு ஒத்த துணியை நீளவாக்கில், பட்டையை விட ஒரு அங்குலம் அகலமாகவும். ஒரு அங்குலம் நீளமாகவும் வெட்டவும்.

*உடலில் அணியக் கூடிய வளைந்த வடிவத்தில் பட்டையை வைத்து அதனுடன் நாடாத் துணியை உட்புறமாக பொருத்தி 1/2 அங்குலம் மடித்து தைக்கவும்.

*வளைவான வடிவத்திலேயே வைத்து கீழ்புறமுள்ள துணியை வடிவம் மாறாமல் சுருக்கங்களில்லாமல் பொருத்தி தைக்கவும்.

*மேற்புறத்தில் பெரிய தையல்களைக் கொண்டு இயந்திரத்தில் தையலிடவும். மேற்புறம் இடும் தையலை ஓரங்களில் அமைக்காமல் 1/4” இடைவெளி விட்டு நிறைவு செய்யவும். வளரிளம் பெண்களின் குட்டை பாவாடையில் உள்ள இடுப்புப் பட்டையின் அகலத்திலும் இதனை தைக்கலாம்.

கான்டூர் பட்டைகள் (The contour belt)

இடுப்பு வளைவில் சிறப்பாக பொருந்தி, உடலின் பின்புறத்தில் சற்று இறக்கமாக இருக்குமாறு கான்டூர் பட்டைகள் வடிமைக்கப்படுகின்றன. அணியும் பொழுது உடலின் வளைவினை நன்றாக எடுத்துகாட்டுமாறு இந்த பட்டைகள் அமைகின்றன. நேரான பட்டைகளை விட இவ்வகை பட்டைகளை வடிவமைக்க நேரம் அதிகம் தேவைப்படுகிறது.

இவ்வகை பட்டைகள் பொய்த்துண்டு மற்றும் விரைப்புத்துணி ஆகியவற்றைக் கொண்டு சரியாக இணைக்கப்பட்டு வடிவமைக்கப்படுகின்றன. இந்தப்பட்டைகள் பொய்த்துண்டு வைக்கப்பட்ட பட்டைகள் போலவே திருப்பப்பட்டு நிறைவு செய்யப்படுகின்றது.

உட்பக்க பட்டை (The inner belt)

இடுப்பு பகுதியில் விரைப்புத் தன்மை பெறுவதற்காக, உட்புறம் ஒரு துணியினை வைத்து இவ்வகை பட்டை தயாரிக்கப்படுகிறது. குறுக்கு வெட்டு துணி, இடுப்பு வளையத்தின் உட்பகுதியில் வைத்து தைக்கப்பட்டு பாவாடையுடன் இணைக்கப்படுகிறது. உடலின் வடிவத்தை சிறப்பாக எடுத்துக்காட்ட இவ்வகை பட்டை பயன்படுத்தப்படுகிறது.

ஆடை வடிவமைப்பில் பட்டைகள் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றது. ஒவ்வொரு பட்டையும் வடிவமைக்கப்பட்டு அதனுடன் பக்குள்கள் இணைக்கப்பட்டு தயாரிக்கப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் வடிவத்திலும், செயல்பாட்டிலும் தனித்தன்மை வாய்ந்தவை. ஆடையின் தோற்றத்திற்கேற்ப வெவ்வேறு வகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.

அலங்கார முடிச்சுகள் (Bows)

ஆடையை அலங்கரித்து, நாகரிகத்திற்கு ஏற்றார்போல் அழகுணர்ச்சி ஏற்படுத்த அலங்கார முடிச்சுகள் பயன்படுத்தப்படுகின்றன. இது பொதுவாக குழந்தைகள் மற்றும் மகளிருக்கான ஆடைகளில் பயன்படுத்தப்படுகின்றது. இவை துணிகளால் தயாரிக்கப்பட்டு, பொத்தான்களாகவும் பயன்படுகின்றது.

அலங்கார முடிச்சுகளின் வகைகள்

எளிமையான அலங்கார முடிச்சுகள்

இவை மலரிதழ் போன்றோ அல்லது பட்டாம் பூச்சியின் வடிவத்திலோ அமைக்கப்படுகிறது. அகலத்திற்கு ஏற்றவாறு முடிச்சை கட்டுவதற்கான துணியின் நீளமும் அமைகிறது. பொதுவாக முடிச்சின் நடுப்பகுதி ஓரங்களைவிட குறுகியதாக அமையும். துணியின் குறுக்குப் பகுதியில் இருமடங்கு அளவில் துணியை வெட்டவும். அலங்கார முடிச்சின் அளவுடன் மடிப்புகளுக்கும் சேர்த்து துணியினை அளந்து வெட்டவும். குறுக்குத் துண்டினை இரண்டாக மடித்து மேல் பக்கங்கள் ஒன்றாக இருக்கும்படி ஓரங்களை தைத்துக் கொள்ளவும். தைக்கப்பட்ட ஓரங்களிலுள்ள அதிகப்படியான துணியை வெட்டி நீக்கிவிடவும். சரியான பக்கம் திருப்பி துணியினை சமன்படுத்தி, ஓரங்களை தைத்து முடிக்கவும்.

முடிச்சு தயாரிப்பதற்கு துணியினை சரிபாதியாக அளந்து குறித்துக் கொள்ளவும். இரண்டு பகுதியிலும் இரண்டு மடிப்புகளை அமைக்கவும். இடது பக்கத்தில் ஒரு மடிப்பும், வலது பக்கத்தில் ஒரு மடிப்பையும் ஏற்படுத்தி ஒன்றிற்குள் ஒன்றை புகுத்தி நடுவில் முடிச்சிடவும். இரண்டு வளைவுகளும் ஒரே அளவில் இருக்குமாறு சரிபார்க்கவும். இது ஒரு மிக அழகான அலங்கார முடிச்சாகும்.

சுருக்கங்களுடைய அலங்கார முடிச்சுகள் (Gathered bows)

லேஸ்கள் கொண்டு, சித்திர பின்னல் வேலைப்பாடுகளுடன் அல்லது அதே துணியில் செய்யப்பட்ட அலங்கார முடிச்சுகள் எளிமையான ஆடைகளுக்கு அழகூட்டுகின்றன. தேவையான வடிவத்தில் முடிச்சை வடிவமைத்து, ஓரங்களை தைத்துக் கொள்ளவும். பின் நடுவில் மூன்று அடுக்குகளில் தையலிட்டு அவற்றை சுருக்கி, பின் நன்றாக இழுத்து முடிச்சிடவும்.

துணி மிகவும் மென்மையாக இருந்தால், விரைப்பாக இருக்க ஆர்கண்டி அல்லது பாருடான் துணியினை உள் பக்கமாக வைத்து தைக்கவும்.

ரிப்பன் அலங்கார முடிச்சுகள் (Ribbon Bow)

ரிப்பன் அல்லது உருட்டுத் துணியின் (Fabric tubing) தயாரிக்கப்பட்ட ரிப்பன் முடிச்சுகள், கழுத்து மற்றும் இடுப்பு திறப்பை முடிச்சிடவும், எளிமையான அலங்காரத்திற்காகவும் பயன்படுகின்றது. தேவையான அளவு ரிப்பன்களை எடுத்து பொருத்த வேண்டிய பகுதியில் கண்ணுக்கு தெரியாத சிறு தையல்களிட்டு பொருத்தவும். வெல்வெட் அல்லது சாட்டின் ரிப்பன்களை பயன்படுத்தும்போது அதன் உள்பகுதி வெளியே தெரியாதவாறு மடித்து தைத்துக் கொள்ளவும். இத்தைகைய முடிச்சுகள் செய்வதற்கு எளிமையாக இருப்பதோடு, பார்ப்பதற்கும் மிக அழகாக இருக்கும்.

முடிவுரை

பட்டைகளும், அலங்கார முடிச்சுகளும் உடையின் தோற்றத்தை மேம்படுத்தி அழகூட்டக் கூடியனவாகும். குழந்தைகள் இவற்றை மிகவும் விரும்புவர். இது வயது, பாலினம் மற்றும் வாழும் இடத்திற்கு ஏற்றவாறு மாறுபடுகிறது. ஆண்கள் விரைப்பான, அகல பட்டைகளை விரும்புவர். பெண்கள் மற்றும் குழந்தைகள் மென்மையான பட்டினால் செய்யப்பட்ட பட்டையை விரும்புவர்.

ஆதாரம் - தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள்

Filed under:
2.71428571429
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top