অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் - சவால்களும் வாய்ப்புகளும்

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்கள் - சவால்களும் வாய்ப்புகளும்

தொழிலாளர் சீர்திருத்தங்கள் என்றால் பொதுவாக தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்றே பார்க்கப்படுகிறது. அதாவது தொழில் முனைவோர்களும் தொழிலதிபர்களும் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டிய தேவை இல்லாமல் அரசாங்கத்தின் தண்டனை நடவடிக்கைகளுக்கு பயப்படாமல் தங்களது வியாபாரத்தை நடத்த மேற்கொள்ளப்படும் மாற்றங்கள் என்றே பார்க்கப்படுகிறது. என்றாலும் இத்தகைய பார்வைக்கு அதிக இடமில்லை. தொழிலாளர் சட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில திருத்தங்கள் செய்வதைவிட அல்லது இடையில் சமூக பாதுகாப்பு நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்வதைவிட தொழிலாளர் சீர்திருத்தம் என்பது தொழிலாளர் சந்தையை முற்றிலும் மாற்றியமைப்பது என்பதே ஆகும்.

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான முக்கிய காரணங்கள்

இந்தியாவில் தொழிலாளர் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு இதுவே மிகச் சரியான நேரம் என்று கூறுவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன.  அவை

  1. சீனா, உற்பத்தி மையம் என்ற சாதகமான அம்சத்தை இழந்து வருகிறது. ஏனெனில் கடந்த பத்தாண்டுகளில் அங்கு தொழிலாளர் செலவு என்பது மூன்று மடங்காக அதிகரித்து விட்டது
  2. இந்திய அரசாங்கம் உண்மையில் இந்தியாவில் உருவாக்குங்கள் என்ற இயக்கத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் உள்ளது. நம் நாட்டில் தங்களது உற்பத்தி மையங்கள் அமைக்க அரசு முதலீட்டாளர்களையும் பெரும் தொழில் நிறுவனங்களையும் ஈர்த்து வருகிறது.

இந்தியாவில் உருவாக்குங்கள் என்ற இயக்கத்தின் வெற்றியானது எவ்வளவு விரைவில் மற்றும் எவ்வளவு வேகமாக தொழிலாளர் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்தே அமையும்.

தொழிலாளர் சந்தை

பரந்துபட்ட நோக்கில் பேசுவதானால் தொழிலாளர் சீர்திருத்தங்கள் என்பது தொழிலாளர் உற்பத்தித்திறனால் ஊக்கப்படுத்தப்படும் போட்டியுடன் தொடர்பு படுத்தப்படுகின்றன. துருதிருஷ்டுவசமாக இந்தியத் தொழிலாளர் சந்தையை சீரமைக்கும் முயற்சிகள் மிக மெதுவாகவே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவில் 1991 இல் தொடங்கிய உலகமயமாதல் மற்றும் கட்டுப்பாடற்ற சந்தை ஆகியவற்றின் தாக்கம் தொழிலாளர் சந்தையின் இறுக்கமான தன்மை, பழமையான தொழிலாளர் சட்டங்கள் வெளிப்படையாகத் தெரியும் திறன் போதாமை ஆகிய காரணங்களால் உலகின் உற்பத்தி மையமாக இருக்க வேண்டிய நல்லதொரு வாய்ப்பை இந்தியா கைவிட்டு விட்டது. கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக தொழிலாளர் சட்ட திருத்தங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது. எனினும் இந்தியாவில் தொழிலாளர் சந்தை என்பது நேரடி அந்நிய முதலீடுகளைக் கவர்வதில் சலனமற்றே இருந்தது. அதிலும் குறிப்பாக தொழிலாளர் எண்ணிக்கை அதிகம் உள்ள தொழில் பிரிவுகளான தோல்பொருட்கள் ஜவுளி (ஆயத்த ஆடை துணைப்பொருட்கள் முதலானவை), ஜெம் மற்றும் நகைகள், விளையாட்டுக் கருவிகள், போர்க்கருவிகள் மற்றும் ஆயுதங்கள், வீட்டு அலங்கார மரப்பொருட்கள், ரப்பர் பொருட்கள், இழையப்பட்ட உலோகப் பொருட்கள் முதலான தொழில் பிரிவுகளில் அந்நிய முதலீட்டை அதிக அளவில் ஈர்க்க முடியவில்லை.  தொழிலாளர் சீர்திருத்தங்கள் ஒருங்கிணைந்த அணுகுமுறையில் பார்க்கப்படுகின்றன என்பது இதில் இருந்து தெரிய வருகிறது. இதனால் உலகின் உற்பத்தி மையமாக மாறுவதன் மூலம் இந்திய குடிமையியல் பங்கின் லாபத்தை பெற முடியும். இதற்கு அதிக தொழிலாளர் உற்பத்தித் திறன் தொழிலாளர் சந்தை நடைமுறைகளில் அனுசரிப்பு மற்றும் குறைவான தொழிலாளர் செலவு ஆகியவற்றை தொழிலாளர் தரமதிப்பீடுகளுக்கு பாதகம் இல்லாமல் உருவாக்க வேண்டும் என்ற உறுதியானது எதிர்பார்க்கப்படுகிறது.

தொழிலாளர் சட்ட திருத்தங்கள்

பழமையான தொழிலாளர் சட்டங்கள், நியாயமில்லாத அதிகார வர்க்க கட்டுப்பாடு, ஊழல் நிறைந்த ஆய்வாளர் அலுவலகம் போன்ற சிக்கல்களால் இந்தியத் தொழிலாளர் சந்தை சீரழிந்த உள்ளது. தொழிலாளர்களின் நல்வாழ்வை அடகுவைத்து தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் எண்ணற்ற வாய்ப்புகளை அறுவடை செய்கிறார்கள். எனவே இன்றைய உடனடித் தேவை என்பது தொழிலாளர் சந்தையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதே ஆகும். தொழிலாளர் சட்டங்கள் முன்னேற்றம் அடைந்து வருகின்றன. அதிகார வர்க்கக் கட்டுபாடு குறைந்து வெளிப்படைத் தன்மையானது ஏற்பட்டு வருகின்றது. சுயமாக அறிக்கைத் தருதல் மற்றும் அனைத்தையும் வெளிப்படையாகத் தெரிவித்தல் என்பது தற்போது நடைபெற்று வருகின்றது. தொழிற்சாலைகளை ஆய்வு செய்தல் மற்றும் விதிகளை மதித்து நடத்தல் போன்ற வழக்கொழிந்த அமைப்புக்கு மாறாக தாமாகவே முன்வந்து தொழிலாளர் தர மதிப்பீடுகளைக் கடைபிடிப்பதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தொழில் சந்தையில் கட்டுபாடுகளைத் தளர்த்துதல் என்பது வேலைவாய்ப்பில் நெகிழ்வுத்தன்மை, திறன் மேம்பாடு, பெருமளவில் வேலைவாய்ப்பை உருவாக்கல் போன்றவற்றை விரைவுப்படுத்துகிறது என்பது சொல்லாமலேயே புரியும். என்றாலும் கட்டுப்பாடில்லாத சந்தை முறைக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் தொழிலாளர் சட்டத்திருத்தங்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் தருகிறார்கள்.

விதிகள் மற்றம் நிபந்தனைகளை சீரமைத்தல்

மாறிவரும் சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துவதற்கான விதிகள் மற்றம் நிபந்தனைகளை சீரமைத்தல்:

தொழிலாளர்களை வாடகைக்கு அமர்த்துதல் அவர்களை வேலையைவிட்டு நீக்குதல் போன்ற நடவடிக்கைகளில் முதலாளிகளுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தொழிலாளர் நல சட்டங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய தீவிர நிலை என்பது தொழிலாளர் சீர்திருத்தங்களை தவறான பாதைக்கு திருப்பிவிடும். அதுமட்டுமின்றி உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில் போட்டிக்கான அடித்தளமாக இருக்கும் வகையில் தொழிலாளர் சீர்திருத்தங்களில் பெரிய தடை ஏற்பட்டுவிடும்.

மற்றொரு வகை சிந்தனைப் பிரிவினர் பழமையான தொழிலாளர் சட்டங்களைப் பகுத்தறிவு ரீதியில் புதுப்பிக்க வேண்டும் என்றும் தொழிலாளர்களுக்கு அதிகாரம் அளித்தல் மற்றும் தீவிரமான தொழில்திறன் மேம்பாடு மூலமாக தொழிலாளர் சந்தையை நெகிழ்ச்சி உடையதாக மாற்ற வேண்டும் என்றும் சொல்கின்றனர். எதைக் கொடுத்தாவது நிர்வாக முன்னுரிமையைத் தூக்கிப் பிடிக்க வேண்டும். தொழிலாளர்களை வாடகைக்கு அமைத்தல், இழப்பீடு வழங்குதல், வேலையில் இருந்து நீக்குதல் போன்றவற்றுக்கான அதிகாரங்கள் முதலாளிகள் கைகளில் இருக்க வேண்டும் என்று கூறுகின்ற புதிய தாராளவாதிகள் முன்வைக்கும் கட்டற்ற தொழிலாளர் சந்தை என்பதற்கு எதிரானதாக சிந்தனைப் பிரிவினரின் கருத்தானது உள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இந்தியத் தொழிலாளர் சந்தையானது விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற மனோபாவத்தின் அடிப்படையில் நெறிப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்களும் உருவாகி வரும் தொழிலாளர் சீர்திருத்தத் தேவைகளுக்கு ஏற்ப இசைந்து நடப்பது போன்று தோன்றுகிறது. எனவே கடந்த 25 ஆண்டுகளில் விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்ற நிர்பந்தமும் ஆய்வாளர்கள் குறித்த பயமும் குறைந்து கொண்டே வந்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் அரசாங்கமே ஓப்புந்தத் தொழிலாளர் சட்டத்தைப் பொருட்படுத்தாமல் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் அமர்த்தும் போது  பெரிய நிறுவனங்கள் தங்களது அடிப்படை உற்பத்திச் செயல்களில் ஒப்பந்தத் தொழிலாளர்களை அதிக அளவில் அமர்த்துவதற்கு ஊக்கமுடன் முன்வருவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. அரசாங்கமானது தொழிலாளர் சட்டங்களுக்கு ஏற்ப இசைந்து நடக்க வேண்டும் என்பதில் அக்கறையுடன் இருந்தால் இந்த நிலைமையானது தனியார் நிறுவனங்களில் சாத்தியம் ஆகாது. தொழிலகப் பிரச்சனைகளில் தீர்ப்புகளைச் சொல்வதிலும் நீதிமன்றங்கள் விவேகமுள்ளவையாக மாறி வருகின்றன – 1991 க்கு முன்பு நீதிபதிகள் தொழிலாளர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையிலான பிரச்சனைகளை விசாரிக்கும் வழக்குகளில் தொழிலாளர் சார்பான நிலையையே பொதுவாக எடுத்து வந்தனர். இப்போது இந்த நிலைமை மாறி வருகிறது.

அரசின் கடமைகள்

தொழிலாளர் சட்டங்களை குறித்த தனது நிலைப்பாட்டில் இந்திய அரசாங்கம் தனது கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இருந்தாலும் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையிலான தன்னார்வமான ஒப்பந்தத்தின் அடிப்படையில் வேலையின் விதிகள் மற்றும் நிபந்தனைகளின் கட்டுப்பாட்டை முதலாளிகளின் கையில் ஒப்படைக்க இந்திய அரசாங்கம் முழுமையாகத் தயாராகவில்லை. சரக்குப் பொருட்களின் சந்தையைக் காட்டிலும் தொழிலாளர் சந்தைகள் மிக அதிக அளவில் சட்டத்தால் நெறிப்படுத்தப்பட வேண்டும் என்ற தேவைக்கான காரணமும் அனைவரும் அறிந்ததுதான். தொழிலாளர்கள் என்பவர்கள் சரக்குப் பொருட்கள் அல்ல. அவர்கள் மனிதர்கள், அவர்கள் குடிமக்கள் ஆவர். மேலும் வேலை செய்பவர் வேலை அளிப்பவர் உறவில், தனிப்பட்ட தொழிலாளர் என்பவர் எப்போதும் பலவீனமான தரப்பினராகவே உள்ளார். எனவே பலதரப்பட்ட அம்சங்களில் தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதை இலக்காகக் கொண்ட சட்டத்தை இத்தகைய கரிசனங்கள் நியாயப்படுத்துகின்றன. அதாவது கூட்டாக பேசும் நோக்கத்துக்காக தொழிற்சங்கங்கள் அமைத்தல் சமூக பலன்கள், தொழிலாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றைப் பொறுத்து வேலை அளிப்போர் குறைந்தபட்ச பொறுப்புடைமை உருவாக்குதல், பெண் தொழிலாளர்களுக்கு சிறப்பு வசதிகள், குறைதீர்ப்பு அமைப்புகளை உருவாக்குதல் போன்ற அம்சங்களுக்காக சட்டங்கள் வேண்டும் எனக் கூறப்படுகிறது.

தொழிலாளர் நலன் மற்றும் நிர்வாகத்தினர் நலன் என இரண்டையும் ஒன்றாகச் சமமாகப் பாதுகாத்தல் என்ற அம்சத்தில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. தொழிலாளர்களின் சட்டரீதியிலான நலன்களைப் பாதுகாப்பதற்கு நமக்குத் தொழிலாளர் சட்டங்கள் தேவை என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமே இல்லை. ஆனால் அதே சமயம் உருவாகும் சட்டப் பின்னணியானது தொழிலாளர்களின் சட்டரீதியிலான உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கும் மொத்த வேலைவாய்ப்பை விரிவாக்கம் செய்தற்கான திறன் மற்றும் ஊக்கத்தை மேம்படுத்தும் ஒரு சட்டகத்தை வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுக்கும் சம அளவில் முக்கியத்துவம் தர வேண்டும். சட்டங்களும் அதே நேரம் அவற்றை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளும் தொழிலாளர் உற்பத்தித்திறன் மேம்படுத்தும் ஊக்கச் சலுகைகள் அமைப்பை வேலை அளிப்பவர்கள் உருவாக்கி அனுமதிப்பதாக இருக்க வேண்டும். மாறிவரும் தொழில்நுட்பம் மற்றும் மாறி வரும் சந்தை நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைத்து கொள்ளும் வகையில் தொழிலாளர் சக்தியை மறுஆக்கம் செய்யும் நெகிழ்வுத்தன்மை இதில் உள்ளடங்கும். தற்போது அத்தகைய நெகிழ்வுத் தன்மைக்கான தேவை அதிகரித்து உள்ளது. ஏனெனில் உலகமயமாதலும் தாராளமயமாதலும் நெகிழ்வுத் தன்மைக்கு ஒரு மதிப்பை உருவாக்கி உள்ளன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

ஆசிரியர் : பிரவீன்ஜா

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate