பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / சுய தொழில்கள் / தொழிலாளர் நலன் / தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும்

தொழில் திறமை மேம்பாடும் வேலைவாய்ப்பும் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

"உலகில் நமது நாட்டில்தான் அதிக அளவிலான இளைஞர்கள் உள்ளனர். இந்த வாய்ப்பை பயனுள்ளதாக்கிக் கொள்ளுவது குறித்து நாம் எப்பொழுதேனும் சிந்தித்து இருக்கிறோமா? இன்றைய உலகிற்கு திறமை மிக்கத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். அதேபோல் நமது நாட்டிற்கும் திறமையான தொழிலாளர்கள் அவசியமாகும். நமது நாட்டில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால், திறமையை வளர்ப்பது நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். லட்சக்கணக்கான நமது இளைஞர்கள் திறமையை வளர்த்துக் கொள்ள முன்வர வேண்டும். இதற்கென நாடு முழுவதும் கட்டமைப்பு வசதி இருக்க வேண்டும்.

அண்மையில் வெளியிடப்பட்ட ஐ.நா. அறிக்கை ஒன்று சுவாரசியமான தகவல் ஒன்றை தெரிவிக்கிறது. உலக மக்கள் தொகை 4ல் ஒரு பங்கு அதாவது 1.8 பில்லியன் பேர் 10 முதல் 24 வயது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று இந்த அமைப்பு கூறுகிறது. மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியாவில்தான் இந்த இளைய சமுதாயத்தினரின் விகிதம் உயர் அளவில் இருப்பதாக, ஐக்கிய நாட்டு சபையின் மக்கள் தொகை நிதியத்தின் இந்த அறிக்கை கூறுகிறது.

வட ஐரோப்பிய நாடுகள் கணிசமான முதுமை மக்களைப் பெற்றிருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை பிரிட்டனில் உள்ள இளைய தலைமுறையினர் எண்ணிக்கை இந்தியாவை விட 10 சதவீதம் குறைவு என்று தெரிவிக்கிறது. ஆனால் இந்தியாவின் இந்த சிறப்புமிக்க தனித்தன்மை வெகுநாட்களுக்கு நீடிக்காது என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கை தருகிறது. அடுத்த 35 ஆண்டுகளில் இந்த நிலைமை மாறும் என்பதும் இந்த அறிக்கையின் கணிப்பாகும். எனவே இப்பொழுது நமது நாட்டிற்குக் கிடைத்துள்ள இந்த நல்ல வாய்ப்பை பயனுள்ள வகையில் மாற்றி அமைப்பதற்கான வழிமுறைகளைக் காண வேண்டியது அவசியமாகிறது.

அரசு பயணிக்க உள்ள திசையைச் சுட்டிக் காட்டிய அவர், வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டிய அவசியத்தைக் குறிப்பிட்டார். சேவை மற்றும் உற்பத்தித் துறைகளில் பணிபுரிபவர்களின் திறன் மேம்படுத்த வேண்டியதின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர் கூறியதாவது: இந்தியா இளைஞர்களை பெருமளவு கொண்டுள்ள நாடு. இந்த நாட்டு மக்கள் தொகையில் 65 சதவீதத்தினர் 35 வயதுக்கு உட்பட்டபவர்கள் ஆவர். இன்றைய உலகிற்கு திறமைமிக்கப் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள். இந்தியாவிற்கும் இந்தத் தேவை உள்ளது.

நாம் நல்ல வாகன ஓட்டியை தேடும்பொழுது அவர் கிடைப்பது இல்லை. நீர் குழாயைப் பொருத்துவதற்கு நல்ல தொழிலாளியைத் தேடும்பொழுது அவர் கிடைப்பது இல்லை. இதைப் போன்று நல்ல சமையல்காரரின் தேவை இருக்கும்பொழுது அவர் கிடைப்பதில்லை. நம்மிடையே இளைஞர்கள் உள்ளனர். அவர்களுக்குப் போதிய வேலைவாய்ப்பு இல்லை.

நாம் இளைய தலைமுறை பணியாளர்களைத் தேடும்பொழுது அவர்களின் சேவை இருப்பதில்லை. நாம் நமது நாட்டில் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டுமென்றால், நமது முயற்சி திறமையை மேம்படுத்துவதற்காக அமைய வேண்டும். திறமை பெற்றவர்களைக் கொண்ட நாட்டை உருவாக்குவது நமது நோக்கமாக இருக்க வேண்டும். எனவே லட்சக்கணக்கான நமது இளைஞர்கள் தங்களது திறமையை வளர்த்துக் கொள்ளுவதற்கான முயற்சியை மேற்கொள்ள வேண்டும். எனவே இதற்கு நாடு முழுவதும் கட்டமைப்பு இருக்க வேண்டும். பழமையான முறை பயன்தராது.

வேலைவாய்ப்புக்களை உருவாக்கக் கூடிய நிலையில் இல்லாதவர்களும், அதற்கு வாய்ப்புக் கிடைக்காதவர்களும் உலகின் எப்பகுதியிலும், அவர்களைப் போல் உள்ளவர்களை எதிர்கொள்ளும் நிலையில் இருக்க வேண்டும். தங்களது திறமையால், இவர்கள் உலக மக்களின் இதயத்தை கவர்ந்து இழுக்க முடியும். இத்தகைய இளைஞர்களின் திறமையை மேம்படுத்த வேண்டும்.

இப்பொதுள்ள நிலைமையில், நமது நாட்டில் பெரும்பாலும் ஓரளவு கல்வி அறிவு பெற்ற தொழிலாளர்களே உருவாக்கப்படுகிறார்கள். தற்பொழுது உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில், இத்தகைய தொழிலாளர்கள் போதுமான திறமையை பெற்று இருக்கவில்லை என்பதே உண்மையாகும். 15 முதல் 29 வயது வரை உள்ள தொழிலாளர்களில் 2 சதவீதத்தினர்தான் முறையான தொழிற்பயிற்சி பெற்று இருக்கிறார்கள் என்று, தொழில் திறமை மேம்பாடு பற்றிய ஆய்வு அறிக்கை கூறுகிறது. மேலும் 8 சதவீதத்தினர் முறைசாரா தொழிற் பயிற்சி பெற்று இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. உலகில் அடியெடுத்து வைப்பவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 28 லட்சமாக இருக்கையில், 31 லட்சம் பேருக்குத்தான் தொழிற்பயிற்சி பெறுவதற்கான வசதி இருப்பதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. எனவே நமக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

ஆகவே வேலை தேடி வருபவர்களுக்கு குறைந்த வருவாய் பணி இடங்களைக் கண்டறிவதற்குப் பதிலாக, போட்டிச் சூழ்நிலைக்கு ஏற்ப தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். இது பெருஞ் சவாலான பணி என்பதை மறுப்பதற்கு இல்லை.

முதிர்வடைந்து வரும் இப்பொருளாதார சூழ்நிலை காரணமாக, தொழிலாளர்கள் இடம் பெயருவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டிருந்த தமது பொருளாதாரம், இப்பொழுது பன்முகப்பட்டு வருவதால், இத்துறையிலிருந்து மற்ற துறைகளுக்கு ஊழியர்கள் இடம் பெயர்ந்து வருகிறார்கள். ஆனால் இத்துறைகளின் தேவை மாறுபட்டதாக உள்ளது. எனவே இவர்களுக்கு உரிய பயிற்சி அளிப்பதும், திறமையை மேம்படுத்துவதும் அவசியமாகிறது.

அரசின் மேம்பாட்டு இயக்கங்கள்

தேசிய திறன் மேம்பாட்டு இயக்கம்,

  • திறன் மேம்பாட்டிற்கான தேசிய சபை,
  • தேசிய திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பு வாரியம்,
  • தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம்

என மூன்று அமைப்புக்களை கொண்டதாகும்.

இவை தேசிய சபையின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறையை வகுக்கிறது.

தொழிலாளர் சந்தைக்குத் தேவையான பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தும் தேசியத் திறன் மேம்பாட்டுக்கழகம்:

இந்திய தொழிலாளர்களின் திறமையை வளர்ப்பதுடன், மேம்படுத்தும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை செயல்படுத்தும் இக்கழகம், தனியார் & அரசுத் துறை ஒத்துழைப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

தனியார் மற்றும் அமைப்பு ரீதியில் இல்லாத தொழிலகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் திறன் மேம்பாட்டுப் பணிகளைச் செயல்படுத்துவது இக்கழகத்தின் முக்கிய பணியாக உள்ளது. இக்கழகம் 21 உயர் முன்னுரிமை தொழில் துறைகளில் முக்கிய கவனம் செலுத்துகிறது.

இரு மற்றும் நான்கு சக்கர ஊர்திகள், இத் துறைக்கான உதிரி உறுப்புக்காக, மின்னணு சாதனங்கள், துணி ஆலைகள், ஆயத்த ஆடைகள், இரசாயனம் மற்றும் மருந்துப் பொருட்கள், கட்டுமானப் பணிகள், உணவு பதனிடுதல், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், தகவல் மென்பொருள் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல், ஊடகங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், வங்கி, காப்பீடு மற்றும் நிதி சேவை, போக்குவரத்து, உடல் நலன், நகைத் தொழில், தோல் மற்றும் தோல் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும். ஒளித் தேவை மரி வரும் சமூக பொருளாதார சூழ்நிலையில் அறிவும், திறமையும்தான் பொருளாதார வளர்ச்சியையும் சமூக மேம்பாட்டையும் ஊக்குவிக்கும் காரணிகளாக உள்ளன. இவை வளரும் நாடுகள் அனைத்திற்கும் பொதுவான நியதி ஆகும். மேம்பட்ட, சிறந்த திறமையை கொண்டுள்ள நாடுகள் உழைக்கும் உலகம் அளிக்கும் வாய்ப்புகளையும், சவால்களையும் எளிதில் எதிர்கொள்ள இயலும். எனவே இந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கும் புதிதாக வேலைவாய்ப்புகளைத் தேடி வருபவர்களுக்கும் உரிய துறைகளில் பயிற்சி அளித்து திறமையை வளர்த்துக் கொள்ள உதவ வேண்டியது இன்றியமையாததாகும். நமது நாட்டில் 2004&05ம் ஆண்டு கணக்கீட்டின்படி, ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடியே 28 லட்சம் பேர் தொழிலாளர் உலகில் அடியெடுத்து வைக்கின்றனர். இவர்கள் தவிர அமைப்புரீதியான துறைகளில் 2 கோடியே 60 லட்சம் பேரும், அமைப்புரீதியில் இல்லாத தொழில் பிரிவுகளில் 43 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அனைவரின் தொழில் திறமையை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும்.

ஆனால் இப்பொழுது செயல்பட்டு வரும் அமைப்புக்களின் வாயிலாக 31 லட்சம் பேருக்குத்தான் திறன் மேம்பாட்டு பயிற்சியை வழங்க இயலும். ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் 50 கோடி தொழிலாளர்களின் திறமையை மேம்படுத்த குறியளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறப்பு திட்டத்தைச் செயல்படுத்துவது பெருஞ் சவாலான செயல் என்பதை மறுப்பதற்கில்லை. பெருமளவு மக்கள் செல்வத்தைப் பெற்றுள்ள நமது நாட்டில், உழைக்கும் சக்தி பெற்ற 15 முதல் 59 வயது வரையில் உள்ளவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து ஆக்கப்பூர்வ ரீதியில் உயர்ந்து வருவது கவனத்திற்கு உரியதாகும்.

இந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள எடுக்கப்படும் நடவடிக்கைகள் நல்ல பலன்களை அளிக்கும் என்பதை வலியுறுத்தத் தேவையில்லை. எனவே உழைக்கும் இந்தப் பிரிவினருக்கு உரிய பயிற்சி அளிப்பது, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மேம்பாட்டிற்கும் நாட்டின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் துணை புரியும்.

சர்வதேச அளவில் காணப்படும் திறமைமிக்க ஊழியர்களின் பற்றாக்குறையை ஈடுகட்டவும் இது உதவும். எனவே பெருமளவிலான திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மிகவும் அவசியமாகும். திறன் மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முன் முயற்சிகள் நமக்குள்ள பெரும் மக்கள் செல்வத்தைக் கணக்கில் கொண்டு எடுக்கப்பட வேண்டும். இது பெரும் பணி ஆகும். அளிக்கப்படும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் நல்ல வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும்.

அமைப்பு ரீதியில் அல்லாத தொழில் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இது பெரிதும் முக்கியமாகும். தொழிலுக்கு உரிய கௌரவத்தை அளிக்கும் வகையில் இப் பயிற்சி அமைய வேண்டும். சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு பாதுகாப்பு, உடல்நலன் ஆகியவை பற்றிய தெளிவான சிந்தனைக்கும் இப்பயிற்சி வித்திட வேண்டும்.

புதிய அமைச்சகம்

திறன் மேம்பாட்டுப் பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த மத்தியில் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முயற்சிக்கென தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு இயக்கத்தைச் செயல்படுத்தி பல்வேறு அமைச்சகத் துறைகளுடன் கலந்து ஆலோசித்து பிரதமரின் இந்தியாவில் உற்பத்தி செய்வீர்' கொள்கைக்கு இணக்கமான திட்டம் வரையப்படும். ஊரக மேம்பாட்டு அமைச்கம், பிரதமரின் "இந்தியாவில் உற்பத்தியைத் தொடங்குவீர்" என்ற இயக்கத்திற்கு இயைந்த வகையில் தேசிய ஊரக வாழ்வு ஆதார இயக்கத்தில் தேவையான மாற்றங்களைச் செய்து வருகிறது. ஊரகத் திட்டங்கள் ஊரகப் பகுதிகளில் உள்ள வேலையில்லாத இளைஞர்களுக்காக திறன் மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

தேசிய ஊரக வாழ்வு ஆதார இயக்கம்

தேசிய ஊரக வாழ்வு ஆதார இயக்கத்தின் கீழான இந்தத் திட்டங்கள், வெளிநாட்டு பணிகளுக்கான தேவையையும் உள்ளூர் வேலைவாய்ப்பையும் உறுதி செய்கின்றன. தேசிய ஊரக வாழ்வு ஆதார இயக்கத்தின் கீழ், ஊரகப் பகுதிகளில் இருக்கும் வேலைவாய்ப்புப் பெற இயலாத இளைஞர்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சிக்கழகங்கள் மற்றும் தீன தயாள் உபாத்யாயா, கிராம கௌஷால்யா திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டுப் பயிற்சி தரப்படுகிறது. ஊரக வேலைவாய்ப்புப் பயிற்சிக் கழகங்கள், இப்பெயர் சுட்டிக் காட்டுவது போன்று, சுயவேலைவாய்ப்பை மேற்கொள்ளுவதற்கு உரிய பயிற்சியை அளிக்கின்றன.

மற்றொரு பயிற்சித் திட்டமான தீன தயாள் உபாத்யாயா "கிராம கௌஷால்யா" ஊதியத்துடன் வேலைவாய்ப்பை பெறுவதற்கான பயிற்சியை கொடுக்கிறது. இத்தகைய பயிற்சியைப் பெறுபவர்கள், தனியார் மற்றும் அரசுத் துறைகளின் ஒத்துழைப்பில் அமைக்கப்படும், நிறுவனங்களில் முறையான வேலைவாய்ப்பை பெற வாய்ப்பு அளிக்கிறது. வெளிநாட்டுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தப்படும் வாய்ப்பையும் இவர்கள் பெறுகிறார்கள். மேலும், இத்தகைய அமைப்புக்களின் வேலைவாய்ப்பை பெறுபவர்கள், பணி இடங்களில் முன்னேற்றம் பெறுவதற்கும் இடமுண்டு. இந்தத் திட்டங்களின் செயல்பாடு குறித்து, ஒவ்வொரு காலாண்டிலும் 'பணித்திறன்' ஆய்வுக் கூட்டங்களில் பரிசீலிக்கப்படுகிறது.

இப்பயிற்சித் திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதை, தேசிய அளவிலான கண்காணிப்பாளர்களும், ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சக அலுவலர்களும், குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பயிற்சிக் களங்களுக்கு பயணித்து மதிப்பீடு செய்து வருகின்றனர். சுய வேலைவாய்ப்புப் பயிற்சி கழகங்களின் செயல்பாடுகளும், தேசிய மற்றும் மாநிலங்கள் அளவிலான குழுக்கள், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுக்கள், மாவட்ட ஆலோசனைக் குழு ஆகியவற்றால் உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் இப்பயிற்சிக் கழகங்கள் வெளிப்படையான அளவீட்டின்படி தரம் வகுக்கப்படுகின்றன. இந்த பரிசீலனைகள், இந்த திட்டங்களின் பணியை மேம்படுத்த துணைபுரிகின்றன. இது ஊரக இளைஞர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழிலுக்கு ஏற்ற பயிற்சியைப் பெற வழி வகுக்கிறது. இதனிடையே அடுத்த 87 ஆண்டுகளில் 50 கோடிக்கும் மேற்பட்ட பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டிய தேவை இருக்கும் என தொழிற்துறை வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள். இப்பொழுதுள்ள வளர்ச்சி வீதத்தைப் பராமரிக்கவே தொழில்துறைக்கு பயிற்சி பெற்ற 35 கோடி பணியாளர்களின் சேவை தேவைப்படும் என்பது இவர்களின் கருத்தாகும். இத்தேவையை நிறைவு செய்யும் வகையில், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம், சமூக தொழில் முயற்சி அமைப்பு ஒன்றுடன் இணைந்து செயல்படுத்துவதற்கான உடன்பாட்டை எட்டியுள்ளது.

தரமான, தொழில் பயிற்சிக் கழகங்களை, இந்த தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஊக்குவிக்கவுள்ளது. இந்தக் கழகம், திறன் மேம்பாட்டிற்கென 956 பயிற்சித் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில் முயற்சிக்கென தனித்துறை செயல்பட்டு வருகிறது.

ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்திவரும், வேலைவாய்ப்பை உறுதி செய்யும் பயிற்சித் திட்டத்தில், நலிவடைந்த சமுதாய பிரிவினருக்கு உரிய பங்களிப்பு அளிக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதில் ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் பழங்குடியினருக்கு 50 சதவீத இடங்களும், சிறுபான்மை இனத்தவர்களுக்கு 15 சதவீத இடங்களும் அளிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.94736842105
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top