பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

தொழில்துறையில் அரசு

தொழில்துறையில் அரசு பற்றிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தொழில் அமைப்புகளில் ஒன்றான அரசு தொழிலமைப்புகளின் பொருளாதார எழுச்சி அண்மையில் தோன்றிய வளர்ச்சியாகும். இருபதாம் நூற்றாண்டில், உலகெங்குமுள்ள அரசுகள் உற்பத்தி மற்றும் தொழில் துறையில் ஈடுபடத் தொடங்கின. அதற்கு முன்னர் நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, பகைவர்களிடமிருந்து நாட்டைக் காப்பது இவையே அரசின் கடமை என்ற எண்ணம் நிலவி வந்தது.

உற்பத்தி நிறுவனங்கள் திறமையான வளர்ச்சியடைய தொழில் புரட்சி (Industrial revolution) பெரும் பங்காற்றியது. இருப்பினும், தனியார் துறையினர் பொதுநலனைப் பாராட்டாமல் லாபநோக்கோடு செயல்படத் தாடங்கினர். பொதுமக்களைச் சுரண்டும் வேட்கையும், தொழிலாளர்களின் உழைப்பைச் சுய நலத்துக்காகப் பயன்படுத்துவதும் (சுரண்டுவதும்) பெருமளவில் நடைபெற்றன. தொழில் நிறுவனங்களின் வளர்ச்சி, தனியார் தொழில் முனைவோர்களின் தீர்மானத்தைப் பொருத்திருந்தது.

இக்காரணங்களால் உலகின் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் ஆகியவற்றில் கூட அரசு, உற்பத்தி நிறுவனங்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு, அவற்றைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியது. தனியார் துறையில் இயங்கிவரும் தொழிலமைப்புக்களைப் பல்வேறு காரணங்களால் தன் கட்டுப்பாட்டுக்குள் கொணர முடியாதபோது, அரசு அவ்வாணிக அமைப்புக்களைப் பொதுமக்கள் நலனுக்காக, நாட்டுடமையாக்கி அவற்றை நிருவகிக்கும் பொறுப்பை மேற்கொள்ளலாம்.

அரசுத்தொழில்கள் - வரைவிலக்கணம் (Definition)

அரசுக்குச் சொந்தமாகவும், அதன் கட்டுப்பாட்டின் கீழுமுள்ள தொழில்கள் அரசு தொழில்களாகும். பொதுமக்கள் நலனுக்காக அத்தொழில்கள் உள்ளாட்சி அல்லது மாநில அல்லது மத்திய அரசுக்குச் சொந்தமானதாகவோ அல்லது அதன் கட்டுப்பாட்டிலோ இருக்கும். அந்நிறுவனங்களுக்குத் தேவையான முதலீட்டினை அரசே முழுவதுமாக வழங்குகிறது.

‘உற்பத்தி, விவசாயம், நிதி, வணிகம் ஆகிய தொழில்களில் ஈடுபட்டிருக்கும் அரசுக்குச் சொந்தமான, தொழில்களை அரசுத் தொழில்கள் எனலாம்' என்கின்றார் A.H ஹேன்சன்.

S.S. கேராவின் (S.S.Khera) கூற்றுப்படி, மத்திய அல்லது மாநில அரசுகள் தனியாகவோ அல்லது தனியார் துறையுடன் கூட்டாகவோ உற்பத்தி, வணிகம், போன்ற தொழில்களில் ஈடுபடலாம். சுய நிறைவு மேலாண்மையை (Self contained management) பெற்றுள்ள அத்தகை தொழில்களை அரசுத் தொழில்கள் எனலாம். அரசு தனக்கு உரிமையுள்ளதாகவோ, அல்லது தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தொழிலமைப்புகளையோ இருவகைகளில் உருவாக்கலாம்.

அரசே முதலீடு செய்து புதிய தொழில் நிறுவனங்களை அமைத்து அவற்றை மேலாண்மை செய்யும் பொறுப்பையும் மேற்கொள்ளலாம். ஏற்கெனவே தனியார் துறையில் இயங்கிவரும் அதாவது தனியாருக்குச் சொந்தமான தொழில் மற்றும் வாணிக அமைப்புகளை நாட்டுடமையாக்கி அரசு தொழில்களாக அவை செயல்படுமாறு செய்யலாம்.

அரசுத் தொழில்களின் நோக்கங்கள் அரசின் பொருளாதார கொள்கைகளை நிறைவேற்றும் பணிக்காகவே அரசு தொழிலமைப்புகள் பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே, மக்கள் நலனுக்காகப் பணியாற்றுவது மற்றும் உற்பத்தி, வணிக நடவடிக்கைகள் தங்குதடையின்றி நடைபெறத் தேவையான சூழ்நிலையை உருவாக்கித் தருவதுமே அரசு தொழிலமைப்புகளின் முக்கிய நோக்கமாக உள்ளது.

அரசுத் தொழில்களின் பிற முக்கிய நோக்கங்கள்

பல்வகை உற்பத்தி செய்ய உதவுவது

இலாபம் ஈட்டுவதிலேயே குறியாக இருக்கும் தனியார் தொழில் முனைவோர், இலாப வாய்ப்பு மிகுந்த தொழில்களில் மட்டும் முதலீடு செய்ய விரும்புவர். இலாப வாய்ப்புகள் அதிகம் இல்லாத - அதே சமயம் நாட்டுக்குத் தேவையான தொழில்களில் முதலீடு செய்ய விரும்பமாட்டார்கள். தனியார் துறை மேற்கொள்ள அஞ்சும் தொழில்களில் முதலீடு செய்து மக்களுக்குச் சேவையாற்றுவதற்கு அரசு நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகின்றது.

அடிப்படைத் தொழில்கள் வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாத தொழில்களை அடிப்படைத் தொழில்கள் எனலாம். எடுத்துக்காட்டாக இரும்பு, எஃகு ஆலைகள், வேதியியல் தொழில்கள் போன்றவை அடிப்படைத் தொழில்களாகும். இத்தகைய தொழில்கள் அரசுத் தொழில்களாகவே இருப்பதே சாலச்சிறந்தது.

பேரளவு முதலீட்டு நிறுவனங்கள்

சில தொழில் நிறுவனங்களில் பேரளவு முதலீடு செய்யப்பட வேண்டும். மேலும், அந்நிறுவனங்களில் தொழில் உற்பத்தித் தொடக்கக் காலம் (Gestation period) நீண்டதாக இருக்கும். தனியார் தொழில் முனைவோர்களால் அப்பேரளவு முதலீட்டினை அளிக்கமுடியாது. எடுத்துக்காட்டாக, இரயில், கப்பல் கட்டுவது, மின்சக்தி ஆகிய தொழில்களுக்குத் தேவையான பேரளவு முதலீட்டினை தனியார் முதலீட்டாளர்களால் அளிக்க இயலாது. எனவே, அத்துறையில் அரசே தனக்குச் சொந்தமான நிறுவனங்களை ஏற்படுத்தும்.

இன்றியமையாத வசதிகளை நல்குவது

குடிநீர், மின் உற்பத்தி, மின் சக்தி, எரிவாயு, போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவை நாடு முழுவதும் அன்றாடம் தேவைப்படும் இன்றியமையாத வசதிகள் ஆகும். இத்தேவைகள் மிகக் குறைந்த விலையில் பூர்த்தி செய்யப்படவேண்டும். எனவே, இவ்வசதிகளைச் செய்து தரும் அமைப்புகள் அரசுத் தொழில்களாகவே இயங்க வேண்டும். இத் தொழில்களில் பொதுமக்களின் நலன் பெரிதும் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதால் அவற்றைத் தனியாரிடம் ஒப்படைக்க இயலாது.

முற்றுரிமை நிறுவனங்களை ஏற்படுத்துவது

ஒரு நாட்டை அயல் நாடுகளின் தாக்குதலிலிருந்து காப்பது மிகவும் இன்றியமையாதது. நாட்டின் பாதுகாப்புச் சார்ந்த தொழில்கள் தனியார் வசமிருந்தால் ஒரு நெருக்கடி ஏற்படும்பொழுது அவர்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பை நல்காமல் போகும் நிலை உருவாக வாய்ப்புண்டு. அல்லாமலும் அவர்கள் நாட்டின் பாதுகாப்பு குறித்த இரகசியங்களை எதிரி நாடுகளுக்குச் சொல்லக்கூடிய அபாயமும் இருக்கிறது. எனவேதான், பாதுகாப்புத் தொழில்களை எப்போதும் அரசே ஏற்று நடத்தி வருகிறது.

அனைத்துப் பகுதிகளும் சமமாக பொருளாதார வளர்ச்சி பெறுதல்

தொழில், உற்பத்தி வளர்ச்சியின் நோக்கம் நாட்டிற்குத் தேவையான அனைத்து உற்பத்தித், தொழில்களை ஏற்படுத்துவதேயாகும். நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமச்சீரான முன்னேற்றம் ஏற்பட வேண்டும். தனியார் துறையினர், இலாபம் ஈட்ட வாய்ப்பு இல்லாத, மற்றும் நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் தொழில் நிறுவனங்களை அமைக்க விரும்புவதில்லை. இப்பகுதிகளில் தொழில்களை அமைக்கத் தனியார் துறையினரை அரசு ஊக்குவிக்கலாமே தவிர, கட்டாயப்படுத்த முடியாது. அந்நிலையில் அரசு அங்கு தொழில்களை நிறுவுவது சாலச் சிறந்தது.

இயற்கை வளங்கள் தோண்டியெடுத்தல்

நாட்டில் இயற்கையாகக் கிடைக்கும் பொருள் வளங்களைத் தோண்டியெடுக்கும் தொழில்களில் முதலீடு செய்து நட்டத்தை ஏற்றுக்கொள்ள தனியார் துறையினர் விரும்புவதில்லை. இந்தியாவில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கமிஷன், புது தோற்றுவாய்களைக் (Sources) கண்டுபிடிப்பதற்காகப் பேரளவு தொகையினைச் செலவிடுகிறது. புதுத் தோற்றுவாய்களைத் தேடும் கட்டத்திற்காக அத்தகைய பேரளவு செலவினைத் தனியார் துறையால் செய்ய இயலாது.

பொருளாதார வலிமை செறிவதைத் தடுத்தல்

உற்பத்தியானது தனியாரிடம் முழுவதுமாக இருந்தால், தங்களுடைய இலாபத்தை அதிகரிப்பதற்காக, அவர்கள் பொதுமக்களையும் நுகர்வோரையும் சுரண்டுவர். தனியார் துறை அவ்வாறு இலாப நோக்கோடு செயல்படும்போது, அதன் விளைவாகப் பொருளாதார வலிமை அவற்றிடம் மேன்மேலும் செறிவடைவதையும் நாம் அறிவோம். அரசு, தொழில் துறையில் நுழைந்து தொழில்களைச் சொந்தமாக்கிக் கொள்வதால், இச்செறிவைக் குறைப்பதோடு பொருளாதாரத்தையும் அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இயலும்.

நிறை வேலைவாய்ப்பை உறுதிப்படுத்துதல்

நிறை வேலைவாய்ப்புப் பொதுவுடமை உற்பத்தியினாலேயே ஏற்படும். முழு வீச்சில் செயல்படும் தனியார் துறையைப் பெற்றுள்ள வளர்ச்சியடைந்த நாடுகள்கூட நிறை வேலைவாய்ப்பைப் பெறுவதில்லை. நாட்டிலுள்ள வளங்கள் அனைத்தும் நன்கு பயன்படுத்தப்பட்டால்தான் பொருளாதார வளர்ச்சி விரைவாக ஏற்படும். இதற்கு அரசு பொருளாதாரத் துறையில் கவனம் செலுத்தித் திட்டங்கள் தீட்டவேண்டும். இப்பணிகளின் ஒரு பகுதியாக அரசே தொழில்களையும் தோற்றுவித்து நடத்த வேண்டும்.

அரசின் வருவாயைப் பெருக்குதல்

சில அரசு நிறுவனங்கள் வணிகக் கொள்கைகளின் அடிப்படையில் செயல்படும். அந்நிறுவனங்களின் வருவாய் அரசுக் கருவூலத்தில் சேர்க்கப்படும். இவ்வாறு அரசின் நிதி நிலைமை மேம்படுத்தப்பட்டு, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை நிறைவேற்றப் பயன்படுத்தப்படுகிறது. அது மக்கள் வாழ்க்கைத் தரம் உயர உதவும். கல்வி, மருத்துவம், வீடு போன்ற பொதுநலப் பணிகளுக்கும் இவ்வருவாய் செலவிடப்படுகிறது.

பொதுவுடமைப் பாங்கான சமுதாயத்தை (Socialistic Pattern of Society) அமைப்பது

பொதுவுடமைப் பாங்கான சமுதாயத்தில் ஏழை, பணக்காரர்களுக்குமிடையே உள்ள (மக்களிடையேயுள்ள பொருளாதார ஏற்றத்தாழ்வு) வேறுபாட்டினை அரசு களைவதுமில்லாமல், உற்பத்தி வழிமுறைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். முதலாளித்துவ சமுதாயத்தில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகவும் ஆகின்றனர். மக்களிடையேயுள்ள பொருளாதார ஏற்றத் தாழ்வுகளைப் போக்க, பொதுத்துறை நிறுவனங்கள் அவசியமாகின்றன.

அரசுத் தொழில்களின் வடிவமைப்பு (Forms of organization of state Enterprises)

ஒரு தொழிலின் தகுந்த வடிவமைப்பு, அதன் செயல் திறமையை அதிகரிக்கின்றது. நிதிக்காக அரசைச் சார்ந்திருக்கும் தொழிலமைப்புகளின் அன்றாட நடவடிக்கைகளில் கூட அரசு தலையீடு உள்ளது. அரசு தொழிலமைப்புகள் வியாபார நோக்கில் செயல்படுதல் வேண்டும். மேலும் அவற்றிற்குத் தேவையான தன்னாட்சியுரிமையும் வழங்கப்பட வேண்டும். உற்பத்தி அல்லது வாணிகத் தொழில்களை அரசு மூன்று அடிப்படைகளில் அமைத்து அவற்றை நிருவகிக்கிறது.

 1. அரசு துறைவாரி அமைப்பு (Departmental Organisation)
 2. பொதுக்கழகம் (Public Corporation)
 3. அரசு நிறுமம் (Government Company)

இம்மூவகை வடிவமைப்பில் எந்த வடிவத்தைத் தேர்ந்தெடுப்பது என்பது தொழிலின் இயல்பு, நாட்டில் நிலவும் சூழ்நிலை, அந்த நாட்டு அரசின் கொள்கை ஆகியவற்றைச் சார்ந்திருக்கும்.

அரசு துறைவாரி அமைப்பு (Departmental Organization)

அரசுத் தொழில்களின் வடிவமைப்புகளில் இது மிகவும் தொன்மையானதாகும். இதற்குமுன் அரசின் நடவடிக்கைகளும் அரசு தொழிலமைப்புகளின் நடவடிக்கைகளும் வெவ்வேறாகக் கருதப்படவில்லை. எனவே தொடக்கக் காலத்தில் நிறுவப்பட்ட பெரும்பாலான அரசுரிமை நிறுவனங்கள் அனைத்தும் துறைவாரி அமைப்புக்குச் சான்றுகளாகும். இந்தியாவில் இரயில், அஞ்சல், தந்தி, வானொலி, தொலைக்காட்சி போன்றவை அரசுத்துறைகளாகச் செயல்படுகின்றன.

இவ்வமைப்புகளுக்குத் தேவைப்படும் நிதியை அரசே முழுவதுமாக வழங்குகிறது. அரசு அலுவலர்களால் இது மேலாண்மை செய்யப்படுகிறது. துறைவாரி அமைப்பு அரசுத்துறையின் ஒரு பகுதியாக இயங்குவதால் அந்தத் துறை அமைச்சரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். இவ்வகையமைப்புகள் சட்டப் பரிசீலனைக்கு உட்பட்டவையாகும்.

அரசு துறைவாரி அமைப்பின் இயல்புகள்

துறைவாரி அமைப்புகள் தமக்குத் தேவைப்படும் நிதியைப் பெறுவதற்கு முழுவதுமாக அரசைச் சார்ந்திருக்கின்றன. இத் தொழில் நிறுவனங்கள் அரசுக்கு முற்றும் கட்டுப்பட்டுள்ள நிலையில் இயங்குகின்றன. இந்நிறுவனங்களின் நிர்வாகிகள், சம்பந்தப்பட்ட அரசுத் துறையை சார்ந்த அரசு அலுவலர்களாவர். அந்தந்தத் துறை அமைச்சர்கள் இவ்வமைப்பில் தலைமை வகிக்கும் பெருமையையும், பொறுப்பையும் ஏற்கின்றனர். இந்நிறுவனங்களின் வளர்ச்சி, இயக்கம், குறைபாடுகள் இவை பற்றிப் பாராளுமன்றத்திற்கும், சட்டமன்றப் பேரவைகளுக்கும் பதில் சொல்லும் கடமை அந்தந்த அமைச்சகத்தைச் சார்ந்ததாகும். அதிகார ஒப்படைவு அரசு உயர் நிறைவேற்றாளர்களிடமிருந்து அமைப்பின் ஒவ்வொரு பகுதிக்கும் கீழ்நோக்கி செல்கிறது. இது நிறைவேற்றாளர்களிடையே செங்குத்து அதிகார (Line authority) உறவை ஏற்படுத்துகிறது. இத் தொழில் நிறுவனங்கள் தமக்குத் தேவைப்படும் நிதியை ஆண்டுதோறும் அரசுக் கருவூலத்திலிருந்து பாராளுமன்றம் அல்லது சட்டமன்றப் பேரவைகளின் நிதி அறிக்கையின் மூலம் ஒதுக்கீடாகப் பெறுகின்றன. இவற்றின் திட்ட மதிப்பீடுகள் நாட்டின் அல்லது சம்பந்தப்பட்ட மாநிலங்களின் வரவு - செலவுத் திட்டத்தில் இடம்பெறுகின்றன. இத்தொழில்களின் மூலம் கிடைக்கும் வருவாய், கருவூலத்தில் செலுத்தப்படும். இந்நிறுவனங்களின் வரவு-செலவுத் திட்டம், அரசின் கணக்குப் பதிவு முறை மற்றும் தணிக்கைக்கு உட்பட்டதாகும். கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கைக் கட்டுப்பாடு முறைகள் அரசு துறைகளில் பின்பற்றுவதைப்போல் இதற்கும் பின்பற்றப்படும்.

இத் தொழிலமைப்புகள் அரசு துறைகளின் பகுதிகளாக இயங்குவதால் அரசுக்குரிய சட்ட விலக்களிப்பு (Immunity) பெற்று விளங்குகின்றன. அரசின் இசைவின்றி இந்நிறுவனங்களுக்கெதிராக வழக்குத் தொடுக்க இயலாது.

துறைவாரி அமைப்பின் நிறைகள்

 1. முழுமையான அரசுக் கட்டுப்பாடு: துறைவாரி அமைப்புகள் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் இயங்குபவை. சம்பந்தப்பட்ட அரசுத் துறையின் நிருவாகத்துக்கு உட்பட்டிருப்பதால் அரசுக்கு இந்நிறுவனங்களின் செயல்பாட்டை சரியான வழியில் கட்டுப்படுத்த முடிகிறது.
 2. மேலாண்மை: அரசு அலுவலர்கள் இந்தத் தொழில்களை மேலாண்மை செய்கின்றனர். இந்நிறுவனங்களை நிருவகிக்கும் அரசு அலுவலர்கள் உண்மையாகவும் திறம்படவும் உழைப்பர்.
 3. அரசுக்கு வருவாய் ஈட்டுவது: இந்நிறுவனங்கள் வியாபார நோக்கில் செயல்படும். இத் தொழில்கள் மூலம் கிட்டிடும் வருவாய் அரசைச் சாரும். அவை சமூகப் பணிகளுக்கும், வளர்ச்சிப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
 4. அரசின் கொள்கைகளை செயல்படுத்துதல்: அரசின் கொள்கைகளையும், திட்டங்களையும் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இந்நிறுவனங்கள் செயல்படுத்துகின்றன.
 5. நிதியினைத் தகுந்த வழியில் பயன்படுத்துதல்: துறைவாரி நிறுவனங்கள் கடுமையான கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவதால், இவற்றிற்கு அளிக்கப்பட்ட நிதியினை முறைகேடாகப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்புகள் இல்லை.
 6. இரகசியம் காத்தல்: அரசுக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டிருக்க வேண்டிய அணுசக்தி போன்ற தொழில்களுக்கும், மிக இரகசியமாக நடத்தவேண்டிய நாட்டுப் பாதுகாப்பு சார்ந்த தொழில்களுக்கும் சிறந்த வடிவமைப்பு துறைவாரி அமைப்பேயாகும். துறைவாரி அமைப்புகளில்தான், தங்கள் கொள்கைகள் மற்றும் செயல்பாட்டினைப் பற்றிய இரகசியங்களைப் பாதுகாத்து வைக்க இயலும்
 7. குறிப்பிட்ட தொழில்களுக்கு ஏற்ற அமைப்பு: பொதுச்சேவை சார்ந்த (Public Utility Services) தொழில்களுக்கு ஏற்ற அமைப்பு துறைவாரி அமைப்பேயாகும். இத்தொழில்கள் இலாப நோக்கோடு இல்லாமல், நியாய விலையில் மக்களுக்குத் தேவையான பணிகளையாற்றுவதே இவற்றின் குறிக்கோளாகும். தபால், தந்தி, இரயில் போன்ற தொழில்கள் துறைவாரியமைப்பின் கீழ் செயல்படுகின்றன. மேலும் இவ்வமைப்பு உற்பத்தி தொடக்கத்திற்கு நீண்டகாலம் (gestation) எடுத்துக்கொள்ளும் தொழில்களுக்கும் சிறந்ததாகும்.
 8. பதில் சொல்லும் கடமை (Accountability) : துறைவாரி அமைப்பைக் கொண்டுள்ள தொழில் நிறுவனங்கள் அரசுத்துறையின் கீழ் இயங்குகின்றன. இந்நிறுவனங்களின் செயல்பாடுகளில் குறை இருப்பின் பாராளுமன்றத்திற்கோ, சட்டமன்றப் பேரவைகளுக்கோ, அது தொடர்புள்ள அமைச்சரகம் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

குறைபாடுகள்

துறைவாரியமைப்பில் பல குறைகள் இருப்பதால் அதன் செயல்பாடுகள் பெரும் கண்டனத்துக்குரியதாகிறது.

அவையாவன.

 1. அரசின் தலையீடு: துறைவாரி அடிப்படையிலமையும் தொழில்கள் அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகும். அரசின் நெகிழ்வற்ற நடைமுறைகளையும், மரபுகளையும் வழுவாது பின்பற்ற வேண்டிய அவசியமுள்ளது. தங்களுடைய கொள்கைகளை வகுக்க இந்நிறுவனங்களுக்குச் சுதந்திரம் அளிக்கப்படுவதில்லை. எனவே இவ்வமைப்பில் பின்பற்றப்படும் மையக்கட்டுப்பாடு, முடிவெடுப்பதில் கால தாமதத்தை ஏற்படுத்துகிறது. இவ்வகை அமைப்புகளில் சிகப்பு நாடாவும், (Red-tapism) அதிகார வர்க்கமும் பெருமளவில் காணப்படும்.
 2. தகுதி வாய்ந்த அலுவலர் இல்லாமை: இத் தொழில் நிறுவனங்களை நிருவகிக்கும் நிறைவேற்றாளர்கள் அரசு அலுவலர்களாவர். தலைமை பொறுப்பிலிருக்கும் அரசு அலுவலர்கள் தொழில் நுட்பம் அல்லது வியாபார நோக்கம் உடையவர்களாக இருப்பதில்லை. அதனால், நுகர்வோரின் சுதந்திர தன்மை (Soverignty) சர்வாதிகாரத்தைக் கருத்தில் கொள்ளாமல் தங்கள் எண்ணங்களுக்கேற்ப தொழிலை நிருவகிக்கின்றனர்.
 3. மையப்படுத்தப்பட்ட அதிகாரம்: தொழில்முறையான காரணங்கள் புறக்கணிக்கப்பட்டு, அரசு மட்டத்தில் இத்தொழிலமைப்பின் கொள்கைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஆட்சி மாற்றத்திற்கேற்ப தமது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டிய நிலை இவ்வமைப்புக்களுக்கு உள்ளது.
 4. தாமதமும், சிகப்பு நாடா போக்கும் (Red-Tapism): இத்தொழில் நிறுவனங்கள் நெகிழ்வற்ற நடைமுறைகளையும், மரபுகளையும் வழுவாது பின்பற்ற வேண்டியதாக இருப்பது நாம் அறிந்ததே. இத்தகைய நடைமுறைகளும், மரபுகளும் இந்நிறுவனங்கள் விரைந்து செயல்படுவதற்குத் தடையாக உள்ளன.
 5. திறமையின்மை: இத்தொழில் நிறுவனங்கள் பெரும்பாலும் போட்டியற்ற சூழ்நிலையில் இயங்குவதால் திறமையைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதார முனைப்போடு செயல்படுவதில்லை. மேலும் இந்நிறுவனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட திறமை என ஏதும் குறிக்கப்படுவதில்லை . இவைகள் அரசுத் துறையின் ஒரு பகுதியாகச் செயல்படுவதால், இவற்றிற்கு ஏற்படும் நட்டத்தை அக்கறையுடன் கவனத்தில் கொள்வதில்லை.
 6. அரசியல் மாற்றம்: அரசுத்துறை அமைச்சகத்தின் பொறுப்பிலிருப்பதால் இத்தொழிலமைப்புகள் நிலையான கொள்கைகளைக் கடைப்பிடிப்பது அரிதாக உள்ளது. ஆட்சி செய்யும் அரசில் ஏற்படும் மாற்றங்கள் இத்தொழிலமைப்பின் கொள்கை மாற்றங்களுக்கு அடிகோலுகின்றன.
 7. வரிச்சுமை: இத்தொழில் நிறுவனங்களில் ஏற்படும் நட்டம் காரணமாக, அதை ஈடுகட்டும் பொருட்டு அரசு பொதுமக்களுக்கு மேன்மேலும் வரிவிதிக்கலாம்.

பொதுக்கழகம் (Public Corporation)

பொதுக்கழகம் என்பது அதற்கெனப் பாராளுமன்றமோ, சட்டமன்றமோ இயற்றும் தனிச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டு, தன்னாட்சியுரிமை பெற்ற ஒரு நிறுமமாகும். பொதுக்கழகம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தனித்தியங்கும் தன்மையுடன் சட்டத்தால் உருவாக்கப்படுவதாகும். இவ்வமைப்பு இயக்குநரவையால் மேலாண்மை செய்யப்படுகிறது. அரசு நியமிக்கும் அலுவலர்களைக் கொண்டு இதன் இயக்குநரவை அமைக்கப்படுகிறது.

பொதுக் கழகத்தின் இயல்புகள்

 1. தனித்தியங்கும் சட்ட தன்மை: இது அதற்கென மத்திய அல்லது மாநில அரசால் இயற்றப்படும் தனிச் சட்டத்தின் கீழ் தோற்றுவிக்கப்படுகிறது.
 2. நீடித்த நிலைத்தன்மை: இது நிறுமத்தைப் போன்று பொது முத்திரை, மற்றும் நிலைத்தன்மையையும் பெற்றிருக்கும். தனது பொது முத்திரையின் கீழ் ஒப்பந்தங்களை மேற்கொள்ளலாம். சொத்துக்களைத் தன் பெயரிலேயே வாங்கலாம். அரசின் அனுமதியில்லாமலேயே வழக்குத் தொடுக்கலாம்.
 3. அரசு முதலீடு: இது அதற்குத் தேவையான முதல் முழுவதையும், அரசிடமிருந்து பெறுகிறது. சில பொதுக் கழகங்களில் தனியார் முதலீடு செய்யப்படும் நிலையிருந்தால் குறைந்த பட்சம் 51 விழுக்காடு பங்குகளை அரசு வைத்திருக்கும்.
 4. நிதி தன்னாட்சியுரிமை: அன்றாட நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதிக்காக இந்நிறுவனங்கள் அரசைச் சார்ந்திருப்பதில்லை. தேவைப்பட்டால் பொதுமக்களிடமிருந்து அல்லது அரசிடம் கடன் பெறலாம்.
 5. நிர்வாகம்: பொதுக்கழகங்கள் இயக்குநரவையால் மேலாண்மை செய்யப்படுகிறது. தகுதி, திறமை, அனுபவம் கருதி இயக்குநர்கள் அரசால் நியமிக்கப்படுகிறார்கள்.
 6. சேவை நோக்கம்: இது இலாப நோக்கு இல்லாமல் சேவை நோக்கை கொண்டு செயல்படும். அதாவது சரக்கு அல்லது பணியினை நியாயமான விலையில் அளிக்கும் நோக்கில் செயல்படுகிறது. கிடைக்கும் இலாபத்தை இவை தாம் அளிக்கும் சரக்கு அல்லது பணியின் தரத்தை உயர்த்தவும், விலையைக் குறைக்கவும் பயன்படுத்துகின்றன.
 7. பணியாளர்கள்: இதன் பணியாளர்கள் அரசு அலுவலர்கள் அல்ல. அக்கழகமே அவர்களின் பணியமர்த்தல், சம்பளம் இன்ன பிற பணி நிபந்தனைகளைத் தீர்மானிக்கும். வியாபார நோக்கில் தொழிலை நிர்வகிக்கத் தேவையான தகுதிபடைத்த பணியாளர்களைக் கழகமே அமர்த்திக் கொள்ளலாம்.
 8. உரிமை மற்றும் கடமை: இதைப் படைக்கும் சட்டமே அதன் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள் ஆகியவற்றைத் தெளிவாக இயம்பும்.
 9. அரசு தலையீடின்மை: இதன் அன்றாட அலுவல்களில் அரசு தலையிடாது. சுதந்திரமாகத் தம் கொள்கைகளைக் கழகங்கள் செயல்படுத்தலாம்.
 10. தன்னாட்சியுரிமை: இக்கழகங்களுக்கு நிதி மேலாண்மையில் தன்னாட்சியுரிமை உள்ளது. வரவு-செலவுத் திட்டம், கணக்குப் பதிவு, தணிக்கை போன்ற அரசுத் துறையின் கட்டுப்பாடுகள் இவற்றிற்கில்லை. இயக்குநரவையால் தீர்மானிக்கப்பட்ட நோக்கங்களுக்காக இந்நிறுவனங்கள் தங்கள் நிதியினை பயன்படுத்தலாம்.
 11. பதில் சொல்லும் கடமை: இக்கழகங்களுக்குப் பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்திற்கும், அத்தொழில் சார்ந்த அமைச்சரகத்திற்கும் பதில் சொல்லும் கடமை உண்டு. இதன் கணக்குகளை இந்தியத் தணிக்கைத் தலைவர் தணிக்கை செய்து, ஆண்டு அறிக்கையைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பார்.
 12. தொழில் கொள்கை: இலாபம் ஈட்டுவது இதன் முதன்மையான நோக்கமாக இல்லாமலிருப்பினும் கழகங்கள் தொழில் கண்ணோட்டத்தோடு இயங்குகின்றன.

பொதுக் கழகங்களின் நிறைகள்

 1. அரசு நிதி: இக்கழகங்கள் மூலதனம் முழுவதையும் பங்கு முதலாக அரசிடமிருந்து பெறுகிறது. பொதுமக்களிடமிருந்தும் குறைவான வட்டிக்குக் கடனைத் திரட்டுகிறது.
 2. தன்னாட்சியுரிமை: இவை தன்னுடைய கொள்கைகளையும் திட்டங்களையும் வகுத்துக்கொள்கிறது. இவ்வமைப்புகள் தானே தன் நோக்கத்தையும், அவற்றைச் செயல்படுத்தும் முறையையும் தீர்மானித்துக் கொள்கின்றன.
 3. நெகிழ்வுத் திறன்: பொதுக்கழகம் வணிக தேவைகளுக்கேற்ப நெகிழ்வுத்திறன், முனைப்பாற்றல் ஆகியவற்றோடு தன் தொழிலை நடத்த இயலும். நிறுவனத்தின் நலனுக்குத் தேவையான முடிவுகளை எடுக்க இதற்குச் சுதந்திரம் உண்டு.
 4. அரசியல் தலையீடின்மை: அரசியல் தலையீடு, அரசினால் ஏற்படும் தாமதம் ஆகிய குறைபாடுகளின்றி இது இயங்க முடிகிறது. நிறுவனத்தின் செயல்பாட்டுக்குத் தேவையான கொள்கைகளை வகுக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது.
 5. பொது நலன் காத்தல்: இதன் செயல்படும் விதம், இதன் முக்கியமான கொள்கைகள் போன்றவற்றின் மீது பாராளுமன்றம் மற்றும் தக்க அமைச்சகத்தின் கண்காணிப்பு இருப்பதால் பொது நலனுக்குப் புறம்பாக இது செயல்படுவதற்கான வாய்ப்பில்லை.
 6. வணிகக் கொள்கை: இது வணிக நோக்கோடு செயல்படுதால். ஈட்டும் வருவாயையும், இலாபத்தையும் தங்கள் வளர்ச்சித் திட்டங்களுக்கும், தொழில் பெருக்கத்துக்கும் பயன்படுத்துகின்றன.
 7. பொறுப்பு: பாராளுமன்றம் அல்லது சட்டமன்றத்திற்குப் பதில் சொல்லும் கடமை பொதுக் கழகங்களுக்கு உண்டு. பாராளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ இதன் செயல்பாடுகளைக் குறித்து குறை கண்டுபிடிக்க வாய்ப்பு இருப்பதால் இந்நிறுவனங்கள் தம் செயல்திறனை அதிகரித்துக் கொள்வதில் கவனமாக இருக்கும்.
 8. சமுதாய சேவை நோக்கம்: பொதுக்கழகங்களின் முதன்மை நோக்கம் பொதுமக்களுக்குச் சேவை செய்வதாகும். அதாவது நியாயமான விலையில் சரக்கு மற்றும் பணியை வழங்குவதாகும். இது அதன் பணியாளர்களுக்கு அதிக அளவு ஊதியமும் வசதிகளும் அளித்து மாதிரி பணியாண்மையராக (Model employer) விளங்குகின்றது.
 9. நிர்வாகம்: இதன் இயக்குநரவையில் சமுதாயத்தின் பற்பல பிரிவுகளைச் சார்ந்த அனுபவசாலிகள் இடம் பெற்றிருப்பதால், சமுதாய நலம் காக்கப்படுகிறது.

பொதுக்கழகத்தின் குறைகள்

 1. வரையறுக்கப்பட்ட தன்னாட்சி உரிமை: நடைமுறையில் அரசு அலுவலர்களும், அமைச்சர்களும், அரசியல்வாதிகளும் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ இதன் செயல்பாட்டில் தலையிட முயற்சிக்கிறார்கள். எனவே இவ்வமைப்புகளுக்கு வரையறுக்கப்பட்ட தன்னாட்சியுரிமைதான் வழங்கப்படுகிறது. அதாவது இவை பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் இத்தன்னாட்சி உரிமை ஏட்டளவிலேயன்றி, நடைமுறையில் காண்பதரிது.
 2. மாற்றங்கள் செய்வது கடினம்: மாறுபடும் பொருளாதாரச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை தமது அமைப்பு, இயக்கம், நிருவாக முறைகளை மாறுபடுத்திக் கொள்ளலாம் என்பது அவ்வளவு எளிய செயலன்று. ஏனென்றால், இக்கழகங்கள் சட்டங்களால் உருவாக்கப்படுவதால், அச்சட்டங்களைத் தக்கவாறு திருத்தியமைக்கப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதேயாகும்.
 3. தவறாகப் பயன்படுத்தப்படும் உரிமை: பல நேரங்களில் இந்த அமைப்பிலுள்ள சுதந்திரத்தையும் உரிமைகளையும் அதன் தலைமைப் பொறுப்பிலிருப்பவர்கள் தவறாகப் பயன்படுத்தி, பொது நலனுக்குக் கேடு விளைவித்திருக்கிறார்கள். பொது நிதியை தேவையற்ற திட்டங்களில் முதலீடு செய்து வீணடிக்கிறார்கள்.
 4. திறமையின்மை : பெரும்பாலும் இது போட்டியற்ற சூழ்நிலையில் செயல்படுவதால் படிப்படியாக இதன் திறமை குன்றத் தொடங்குகிறது. மேலும், இந்நிறுவனங்கள் அடையும் நட்டத்தைப் பொதுமக்கள்தான் ஏற்க வேண்டியுள்ளது. ஏனெனில், நட்டத்தை ஈடு செய்வதற்காக அரசு கருவூலத்திலிருந்து இவற்றிற்கு மான்யம் (subsidy) அளிக்கப்படுகிறது.
 5. ஈடுபாடின்மை : பொதுக்கழகங்கள் சம்பளம் பெறும் அலுவலர்களால் மேலாண்மை செய்யப்படுவதால் இந்நிறுவனங்களின் செயல்பாட்டிலும், வளர்ச்சியிலும் அவர்கள் அதிக அக்கறை காண்பிப்பதில்லை. சில நிறுவனங்களில் நிர்வாகப் பணிக்குத் திறமையுள்ள பணியாளர்கள் இல்லாமல் அல்லல் படுவதையும் நாம் சுட்டிக் காட்டுதல் நன்று.
 6. அரசுக் கட்டுப்பாடு. இந்நிறுவனங்கள் தன்னாட்சியுரிமை பெற்ற அமைப்புகள் என்று கூறப்பட்டாலும் நடைமுறையில் அரசு இதன் மீது பல கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அதாவது பொதுக்கணக்குக் குழு, அரசாங்க பொதுத் தணிக்கை துறைத் தலைவர் ஆகியோர் மூலம் அரசு இவற்றைக் கட்டுப்படுத்துகிறது.

அரசு நிறுமம் (Government Company)

ஒரு நிறுமத்தின் பெரும்பாண்மையான அல்லது முழு பங்குகளையும் மத்திய அல்லது மாநில அரசு பெற்றிருந்தால் அது அரசு நிறுமமாகிறது. 1956 ஆம் ஆண்டு இந்திய நிறுமச் சட்டம், “அரசு நிறுமம்” என்பதற்கு வரைவிலக்கணம் அமைத்துள்ளது. அது கூறுவதாவது “மைய அரசு, மாநில அரசுகள் தனித்தனியாகவோ, கூட்டாகவோ ஒரு நிறுமத்தின் பங்கு முதலில் குறைந்த பட்சம் 51 விழுக்காட்டைக் கொண்டிருந்தால் அது அரசு நிறுமமாகும்; அரசு நிறுமத்தின் துணை நிறுமமும் அரசு நிறுமமாகவே கொள்ளப்படும்.''

அரசு நிறுமங்கள் பொது நிறுமங்களாகவோ, தனி நிறுமங்களாகவோ அமைக்கப் பெறலாம். இவற்றின் நிருவாகம் அரசின் கட்டுப்பாட்டுக்குட்பட்டு இருப்பது இயல்பாகும். அரசு நிறுமங்கள், தனி நிறுமங்களுக்கு இல்லாத (வழங்கப்படாத) சிறப்புரிமையையும் (தனிச்சலுகை) பற்பல விதிகளிலிருந்து விலக்கும் பெற்றிருக்கின்றன. இவற்றைத் தோற்றுவிப்பதற்குத் தனிச்சட்டம் அவசியமில்லை .

தனியார் துறை ஏற்க அஞ்சும் தொழில்களில் அரசு நிறுமம் முதலீடு செய்கிறது. சில நேரங்களில், நலிவடைந்த தனியார் துறை நிறுவனங்களையும் ஏற்று, அரசு நிறுமமாக நடத்தப்படுகிறது.

அரசு நிறுமத்தின் இயல்புகள்

 1. கூட்டுருவாக்கம் (Incorporation): தனியார் துறையிலுள்ள குழுமங்களைப் போன்றே, அரசு நிறுமமும் இந்திய நிறுமச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுத் தோற்றுவிக்கப்படுகிறது.
 2. அரசு நிதி: இவற்றிற்குத் தேவையான பெரும்பான்மை பங்கு முதல் அல்லது, மொத்த பங்கு முதலில் குறைந்தபட்சம் 51 விழுக்காட்டை அரசு கொண்டிருக்கும்.
 3. பொதுமக்களின் பங்கேற்பு: தனியாரும் இவ்வமைப்பு நிறுவனங்களின் பங்கு முதலில் பங்கேற்க இயலும்.
 4. மேலாண்மை: இயக்குநரவை இதனை மேலாண்மை செய்கிறது. தக்க வல்லமையும், அனுபவமும் வாய்ந்தவர்களையே அதன் இயக்குநர்களாக பெரும்பாண்மை பங்கு முதலைப் பெற்றிருக்கும் அரசு நியமிக்கும். தொழிலாளிகள், நுகர்வோர், அயல்நாட்டு கூட்டுவினையர் (Foreign Collaborators) தொழில் நுட்ப வல்லுநர் போன்ற பல பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் தரும் வண்ணம் நிறுமத்தின் இயக்குநர்களை அரசு நியமிக்கும்.
  1. தன்னாட்சியுரிமை: நிதி மற்றும் நிருவாகம் குறித்துத் தக்கவாறு செயல்படுவதற்கு அரசு நிறுமங்களுக்கு மிகுந்த சுதந்திரம் இருக்கிறது.
  2. பணியாளர்கள்: அரசால் நியமிக்கப்படும் அரசு அலுவலர்கள் தவிர மற்ற பணியாளர்களைத் தாமே தேர்ந்தெடுத்து அமர்த்தலாம்.
  3. கட்டுப்பாடு: இது எந்த அமைச்சகத்தோடு இணைக்கப்படுகிறதோ அத்துறை சார்ந்த அமைச்சரின் கட்டுப்பாட்டிற்கும், கண்காணிப்பிற்கும் உட்பட்ட நிலையில் அது செயல்படும்.
  4. தணிக்கையாளர்: அரசு நிறுமத்தின் தணிக்கையாளரை மைய அரசே நியமிக்கும்.
  5. பதிலளிக்கும் கடமை: அரசு நிறுமங்கள் தங்களின் ஆண்டறிக்கையைப் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலோ அல்லது சட்டமன்றத்திலோ சமர்ப்பித்தல் வேண்டும்.

நிறைகள்

 1. எளிதான அமைப்பு: அரசு நிறுமத்தை உருவாக்குவதும் இவற்றின் அமைப்பில் அவ்வப்பொழுது தேவையான மாற்றங்களைச் செய்வதும் எளிது. இவற்றைத் தொடங்க பாராளுமன்றத்தின் முன் அனுமதி தேவை இல்லை.
 2. நெகிழ்வுத் தன்மை : இது நிறுமச் சட்டத்திற்குக் கட்டுப்பட்டிருப்பினும் தேவையான அளவு நெகிழ்வுத் திறன் பெற்றிருக்கிறது. மாறுபடும் பொருளாதார, வணிகச் சூழ்நிலைகளுக்கேற்ப இவை தமது அமைப்பு, இயக்கம், நிருவாக முறைகளை மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
 3. செயல் சுதந்திரம்: இதன் நிதி, நிருவாகம், பணியாளரை அமர்த்துதல் போன்றவற்றைச் செய்ய இதற்கு முழு சுதந்திரம் உள்ளது.
 4. அரசு தலையீடின்மை : இதன் செயல்பாட்டில் அரசு தலையிடுவதில்லை. எனவே தனியார் துறையினரைப் போன்று இது தொழில் முறைக் கண்ணோட்டம், செயல் சுதந்திரம், விரைந்து முடிவெடுப்பது, நெகிழ்வுத் திறன் போன்ற சிறப்புகளைப் பெற்றிருக்கிறது.
 5. தொழில் கண்ணோட்டத்தில் இயங்கும்: இவை தனியார் துறை நிறுமங்களைப்போலத் தொழில் நுட்பக் கண்ணோட்டத்தோடு இயங்குகின்றன. இவை ஈட்டும் இலாபத்தைத் தம் தொழிலின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன.
 6. தொழில் நிபுணத்துவம்: இது தனியார் தொழில்களின் திறமையையும் அரசின் பொதுநலக் கண்ணோட்டத்தையும் ஒருசேரப் பெற்றிருக்கிறது. நமது அரசு அயல்நாட்டினரோடு கூட்டாகத் தொழில் செய்து, தொழில் நுட்பத் திறமையையும், நிதி வளங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற அமைப்பாக விளங்குகிறது.
 7. ஆரோக்கியமான போட்டி: தனியார் துறையினரைப் போன்று தொழில் முறைக் கண்ணோட்டம், செயல் சுதந்திரம், விரைந்து முடிவு எடுப்பது, நெகிழ்வுத்திறன் போன்றவற்றோடு அரசின் உதவியும் இருப்பதால் அரசு நிறுமங்கள் தனியார் நிறுமங்களுக்கு ஆரோக்கியமான போட்டியை உருவாக்க முடியும்.
 8. புறக்கணிக்கப்படும் தொழில்களை வளர்ச்சியடையச் செய்தல்: ஆபத்து நிறைந்திருக்கும் தொழில், இலாப வாய்ப்பு குறைவாக உள்ள தொழில் ஆகியவற்றைத் தனியார் துறை இயல்பாக புறக்கணிக்கும். ஆனால் அத்தொழில்கள் நாட்டுக்கு மிகவும் தேவையானதாகும். அவ்வாறு தனியார் துறையினரால் புறக்கணிக்கப்பட்ட தொழில்களை நடத்த அரசு நிறுமம் ஏற்படுத்தப்படுகிறது.
 9. திறமை: இந்நிறுமங்களின் இயக்கம், வளர்ச்சி பற்றிய விஷயங்கள் பொதுமக்களின் பாராளுமன்ற ஆய்வுக்கு உட்பட்டிருப்பதால், இந்நிறுவனங்கள் திறம்படவும் விழிப்போடும் நிருவகிக்கப்படுகின்றன.

குறைகள்

 1. அரசியல் தலையீடு: அரசு நிறுமம் பெற்றிருப்பதாகச் சொல்லப்படும் செயல் சுதந்திரம் உண்மையிலேயே இவற்றிற்கிருப்பதில்லை. இதன் இயக்குநர்களில் பெரும்பாலானோர் அரசால் நியமிக்கப்படுவதால் அரசு என்ன எண்ணுகிறதோ அதை செயல்படுத்திக் கொள்ள அதிக வாய்ப்பு இருக்கிறது.
 2. சிறுபான்மையினர் புறக்கணிக்கப்படுதல்: இந்நிறுமங்களுக்குத் தேவையான முதல் முழுவதையுமோ, அதன் பெரும்பகுதியையோ அரசு தருவதால், அதாவது பெரும்பான்மை பங்குதாரராக இருப்பதால் அரசு தன் எண்ணங்களை இவற்றின் நிருவாகத்தின் மீது திணிக்க வாய்ப்பிருக்கிறது.
 3. ஈடுபாடின்மை : இதன் உயர் பதவிகளில் அமர்த்தப்படும் அரசு அலுவலர்கள் வேறு பதவிகளுக்கு அடிக்கடி மாற்றப்படலாம். அவர்கள் இதில் பங்கு முதல் இடுவதில்லை. எனவே, அவர்கள் திறம்படவும், ஈடுபாட்டுடனும் உழைப்பார்கள் என்று உறுதியாகக் கூற இயலாது.
 4. பதிலளிக்கும் பொறுப்பு: பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் இதன் ஆண்டு அறிக்கை அதன் நிதி குறித்த செய்திகளையே தாங்கியிருக்கும். இந்நிறுமத்தின் செயல்பாட்டுத்திறன், மேலாண்மை போன்ற முக்கியமான செய்திகள் குறித்து அந்த அறிக்கை அதிகமாகக் கூறுவதில்லை.
 5. தாமதம் மற்றும் முனைப்பற்ற போக்கு. அரசு வகுத்துத் தரும் கொள்கைகளை செயற்படுத்த வேண்டியதாகவே அரசு நிறுமங்கள் இருக்கின்றன. அரசுச் செயல்களுக்கே உண்டான தாமதம், முனைப்பற்ற போக்கும் இவை திறம்பட செயல்படுவதைத் தடை செய்கின்றன.

அரசு நிறுமங்கள் பின்வரும் சூழ்நிலைகளில் பொருத்தமாக இருக்கின்றது.

 1. இயங்குகின்ற தொழில் நிறுவனத்தை நெருக்கடி காலங்களில் அரசு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றபொழுது.
 2. தனியார் துறை அல்லது வெளி நாட்டினரின் கூட்டு முயற்சியுடன் தொழில் நிறுவனத்தை அமைக்க விரும்புகின்றபொழுது.
 3. தொழில் நிறுவனங்களை இயக்குவதற்கு நெகிழ்வுத் தன்மை தன்மை தேவைப்படுகின்றபொழுது.
 4. அரசாங்கம் ஒரு தொழிலைத் தொடங்கி அதைத் தனியார் நிர்வாகத்திடம் விட விரும்புகின்றபொழுது.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

3.07246376812
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top