অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

சுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

சுயதொழில் தொடங்குவது முன் தெரிந்து கொள்ள வேண்டியவை

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின் பணத்தினைத் தேடுவதில்லை பலர்.

தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.

தொழில் தொடங்கி அம்பானி போல ஆகிவிடலாம் என்கிற கனவோடு களமிறங்குகிற பலர் எடுத்த எடுப்பிலேயே தடைபட்டு நின்றுவிடுகிறார்கள். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், ‘பணம் இல்லை; கடன் கேட்டேன்; கிடைக்கவில்லை’ என்பதாகவே இருக்கிறது. டாடாவோ, அம்பானியோ பெரிய முதலோடு தங்கள் தொழிலை ஆரம்பிக்கவில்லை. கடன் வாங்கித்தான் ஆரம்பித்தார்கள். நிறுவனத்துக்கான கடனை வாங்க அந்தக் காலத்தில் அவர்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அவர்களோடு ஒப்பிட்டால் தொழில்கடன் வாங்க இன்றைக்கு உள்ள சிரமங்கள், பிரச்னைகள் குறைவே. சில முன் தயாரிப்புகளோடு அணுகினால் அந்தப் பிரச்னைகளையும் பிஸினஸ்மேன்கள் தவிர்த்து நிச்சயம் வெற்றி பெறலாம்.

தேவை தெளிவான பார்வை

‘வேலை செய்யப் பிடிக்கவில்லை; அதனால் பிஸினஸ் செய்யப் போகிறேன்’ என்று சொல்லி தொழிலில் இறங்குகிறவர்கள், வெற்றி பெறுவது கடினம்தான். அதே போல செய்ய நினைக்கும் தொழில் பற்றிய முழுமையான அறிவு, தெளிவான நம்பிக்கை இல்லாமல் தொழிலில் இறங்குகிறவர்களுக்கும் தோல்வி நிச்சயம்தான். தொழில்கடன் கேட்டு வங்கியை அணுகுகிறவர்களை வங்கி மேலாளர் முதலில் சோதிப்பது அவர்களின் நம்பிக்கையைத்தான். தொழில் முனைவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் வங்கி தரப்பில் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். சிலசமயம் வங்கி மேலாளர் தொழில்முனைவரின் உறுதியைக் குலைக்கும் வகையில் சில கேள்விகளைக் கேட்கவும் செய்யலாம்.

‘நீங்கள் சொல்கிற பிஸினஸை எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் செய்தார். அதில் அவருக்கு பலத்த நஷ்டம். வேறு ஏதாவது பிஸினஸுக்கான ஐடியா உங்களிடம் இருக்கிறதா?’ என வங்கி மேனேஜர் கேட்பதாக வைத்துக் கொள்வோம். இதற்கு தொழில் முனைவரின் பதில் என்னவாக இருக்கும்..? உடனே பதற்றமடையும் பலர், ‘சார், என்கிட்ட இன்னொரு பிஸினஸுக்கான ஐடியாவும் இருக்கிறது’ என்றுதான் சொல்வார்கள். இந்த ஒரு வரி பதில் போதும், உங்கள் தொழில் மீது உங்களுக்கு ஆழமான நம்பிக்கை இல்லை என்று சொல்ல. ஆனால், இத்தகைய பதில்களால் மட்டுமே ‘கடன் கிடைக்காது’ என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் நீங்கள் செய்யப் போகிற தொழில் மீது உங்களுக்கு இருக்கும் உறுதியைக் காட்டிவிடும். எனவே தெளிவான பார்வை, உறுதியான திட்டம் தேவை.

பிஸினஸ் பிளானில் என்ன இருக்க வேண்டும்?

நீங்கள் செய்யப் போகிற பிஸினஸ் இதுதான் என்று முடிவு செய்துவிட்டால் அதற்கான பிளானை தயார் செய்ய வேண்டும். முதலில் உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் யார், என்ன செய்து கொண்டிருந்தீர்கள், இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்ற விவரங்கள் இருக்க வேண்டும். தொடங்கப் போகிற தொழிலைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும், எப்படித் தெரியும், அந்தத் தொழிலில் என்ன புதுமைகள் செய்யப் போகிறீர்கள்; உங்களுக்கான மூலப்பொருட்கள் எங்கு கிடைக்கும்; உங்களின் வாடிக்கையாளர்கள் யார் என்பது பற்றி தெளிவாகக் கூற வேண்டும். இந்தத் தொழில் மூலம் மாதத்துக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்கிற தோராயமான கணக்கு வேண்டும்.

இதற்கு டி.எஸ்.சி.ஆர். என்கிற விகிதத்தை நிச்சயம் பார்ப்பார்கள்.   Debt Service Coverage Ratio  என்பதன் சுருக்கமே டி.எஸ்.சி.ஆர். அதாவது, ஒரு மாதத்துக்கு நீங்கள் 15 ஆயிரம் சம்பாதிக்கிறீர்கள் எனில், அசலுக்கும் வட்டிக்குமாகச் சேர்த்து ரூபாய் 10 ஆயிரம் போக, குறைந்தது ரூபாய் 5 ஆயிரம் உங்களிடம் இருந்தால்தான் தொடர்ந்து பிஸினஸ் நடத்த முடியும். அதாவது, இந்த விகிதம் 1.5க்கு மேல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு எளிதாகக் கடன் கிடைக்கும். நீங்கள் செய்யும் பிஸினஸில் இந்த வருமானம் உங்களுக்கு இருக்கிறதா என்பதை நீங்களே உறுதி செய்து கொண்டு, வங்கியை அணுகினால் தெம்பாகப் பேசலாம்.

கடன் வகைகள்

அடமானமில்லாத கடன் ( unsecured loan ) ரூபாய் 10 லட்சம் வரைக்குமான தொழில் கடனுக்கு எந்த விதமான அடமானமும் கேட்கக்கூடாது என்பது ஆர்.பி.ஐ. விதி. இந்த விதி காரணமாக, 10 லட்சம் வரை எந்தவித அடமானமில்லாமல் கடன் கிடைக்கும். ஒரு வேளை வங்கிகள் அடமானம் கேட்டால் அது விதியை மீறிய செயலாகவே கருத வேண்டும். தவிர, சிறு மற்றும் குறு தொழில்களை ஊக்குவிக்க மத்திய அரசும் சிட்பியும் சேர்ந்து ஒரு கோடி ரூபாய் வரைக்கும் எந்த விதமான அடமானமும் இல்லாமல் கிரெடிட் கேரண்டி ஸ்கீமில் ( Credit Guarantee Scheme CGS ) கடன் தருகிறார்கள். ஆனால், இந்தத் திட்டத்தில் கடன் பெற பதிவு செய்ய வேண்டும். இது பற்றி வங்கிகளிடம் கேட்டால் அவர்கள் இது சம்பந்தமான மற்ற முழு விவரங்களைத் தருவார்கள்.

சொந்தப் பணம் ?

பிஸினஸ் திட்டத்திலே நமக்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்று தெரிந்துவிடும். அந்தத் தொகையில் குறைந்தபட்சம் 1: 4.5 என்ற விகிதத்தில் ( Debt Equity Ratio  ) நம்மிடம் சொந்தப் பணம் இருக்க வேண்டும். அதாவது, ஒரு லட்சம் ரூபாயை நீங்கள் மூலதனமாக கொண்டு வந்தால் வங்கிகள் 4.5 லட்சம் வரைக்கும் கடன் கொடுக்கும். இந்த விதிதான் நிரந்தரம் என்று சொல்ல முடியாது. மிகச் சில சமயங்களில் மட்டும் இந்த விகிதத்துக்கு கீழே சென்றால் வங்கிகள் கடன் கொடுக்கும். அது நீங்கள் செய்யும் தொழில், உங்கள் பிஸினஸ் நடக்கும் இடம் போன்ற பல காரணிகளை வைத்து வங்கிகள் முடிவு செய்யும். இருந்தாலும் முதல்முறை தொழில் தொடங்குவோர் இந்த விகிதத்துக்கும் குறைவாக மூலதனம் வைத்திருந்தால் கடன் கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம். உங்கள் தொழிலில் உங்கள் முதலீடு கணிசமாக இருக்க வேண்டும் என வங்கிகள் எதிர்பார்ப்பதுதான் இதற்குக் காரணம்.

வங்கிகளை எப்படி அணுகுவது?

ஒவ்வொரு வங்கியும் ஆண்டுக்கு குறிப்பிட்ட தொகையை கடனாகக் கொடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்து செயல்படுகின்றன. அந்த இலக்குக்காக போட்டி போட்டுக் கொண்டு வங்கிகள் கடன் தருகின்றன. ஆனாலும் தொழில் முனைவோருக்கு கடன் கிடைக்கவில்லை எனில் அதற்குக் காரணம், சரியான திட்டமிடல் இல்லாததுதான். உங்கள் தேவை ரூபாய் 25 லட்சம் எனில் அருகிலிருக்கும் வங்கிகளையே அணுகலாம். அவர்களே கடன் தருவார்கள். 25 லட்சத்துக்கு மேல் போகும் போது, ஒவ்வொரு வங்கியும் தொழில்கடன்களை ஊக்குவிக்கவே தனியாக சிறுதொழில் கிளையை ( SME Branch ) வைத்திருக்கிறார்கள். அங்கிருக்கும் அதிகாரிகளை அணுகினால் அவர்கள் உங்களுக்குத் தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

தேவையான ஆவணங்கள்

  • அடையாளச் சான்றிதழ்,
  • முகவரிச் சான்றிதழ்,
  • பிஸினஸ் நடைபெறும் இடத்துக்கான முகவரிச் சான்றிதழ்,
  • திட்ட அறிக்கை,
  • வருமான எதிர்ப்பார்ப்பு (கடனை திருப்பிச் செலுத்தும் காலம் வரைக்கும்),
  • உள்ளாட்சி மற்றும் இதர அரசு அலுவலகங்களில் இருந்து தடையில்லாச் சான்றிதழ் (தேவைப்பட்டால்),
  • பிஸினஸ் நடைபெறும் இடம் உங்களுடையது என்றால் அதற்கான சான்றிதழ் (அ) வாடகை இடம் என்றால் ஒப்பந்தச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
  • இவை தவிர, வேறு என்னென்ன ஆவணங்கள் தேவை என்பது கடன் விண்ணப்பத்திலேயே  இருக்கும். அவற்றையும் கொடுத்தால் நிச்சயம் உங்கள் கடன் மனுவை வங்கி அதிகாரிகள் ஒதுக்கித் தள்ள மாட்டார்கள்!

அரசு சில தொழில்களுக்கு மானியமும் வழங்குகிறது.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்

  • மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி
  • தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு
  • வாகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு
  • மருந்துப் பொருட்கள் உற்பத்தி
  • சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி
  • ஏற்றுமதி ஆபரணங்கள்
  • மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்
  • விளையாட்டுப் பொருட்கள்
  • சிக்கன கட்டுமானப் பொருட்கள்
  • ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்

  • 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
  • 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.
  • சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு (வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.
  • உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.
  • உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம் (சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். அதன் பின்பு வங்கிக்கடன் மூன்று வருடத்திலிருந்து பத்து வருடத்திற்குள் செலுத்தினால் 13 சதவீதத்திலிருந்து 16 சதவீதம் வட்டியுடன் அசல் தொகையும் வசூலிக்கப்படும். கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யம் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது. அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு  ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரிமையுடன் நினைக்க வேண்டும்.

சுயதொழில் எப்படி தொடங்குவது

ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60 வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம். அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில் (என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம். அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். சிறப்பாக செயல்படும் குழுக்கழுக்கு வங்கிகளில் ரூபாய் ஐந்து லட்சம் வரை 12 சதவீத வட்டியில் கடன் பெறலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!

ஒருங்கிணைப்பு

முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்

தொழில் நுணுக்கங்கள்

தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும்.

உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். தொழிலில் சுமுகமான  அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும.

100 வகை சுயதொழில் பயிற்சிகள்

ரூட்செட் நிறுவனம் நூற்றுக்கும் மேற்பட்ட தொழில்முனைவு மேம்பாட்டு பயிற்சிகளை வெவ்வேறு இடங்களில் வழங்கி வருகிறது.

ஒவ்வொரு பயிற்சிக்கும் குறைந்தபட்சம் ஒன்று அல்லது ஆறு வார கால அளவு ஆகும். இந்த பயிற்சி சுயதொழில் புரிவோருக்கு பயனளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு டெய்லரிங் தொடங்கி உணவு பதப்படுத்துதல் வரை நூற்றுக்கணக்கான சுயதொழில் பயிற்சிகள் நடத்தப்படுகிறது. இந்நிறுவனத்தில் வழங்கப்படும் பயிற்சிகள் முற்றிலும் இலவசம். பயிற்சி பெறுபவர்களுக்கு தங்கும் வசதியும் உள்ளது.

இந்நிறுவனத்தில் கற்பிக்கப்படாத பயிற்சிகளே இல்லை எனலாம். செயற்கை வைரம் பட்டை தீட்டுதல் முதல் ஆடை வடிவமைப்பு, மோட்டர் ரீவைண்டிங், தொழில் முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சிகள் வரை 100 வகைப் பயிற்சிகள் இலவசமாக நடத்தப்படுகிறது

ஆதாரம் : தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு, சென்னை

கடைசியாக மாற்றப்பட்டது : 7/19/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate