பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / அலுவலக நிர்வாகம் / அலுவலக இடவசதியும் அமைப்புத் திட்டமும்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

அலுவலக இடவசதியும் அமைப்புத் திட்டமும்

அலுவலக இடவசதியும் அமைப்புத் திட்டமும் பற்றிய விபரங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

அறிமுகம்

அனைத்து மேலாண்மை நடைமுறைகளின் ஒட்டுமொத்த நோக்கமும் குறைந்த செலவில், சிறந்த முறையில், தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளித்த பணியாளர்கள் மற்றும் இயந்திர சாதனங்களைப் பயன்படுத்தி, மன உவப்புடன் வேலைகளைச் செய்து பெறுவதாகும். சிறந்த அலுவலகக் கருவிகளுடன் திறமையான பணியாளர்களின் முழு முயற்சியும், நல்ல இணக்கமான அலுவலகச் சூழ்நிலையும் அமையாவிட்டால், முழுமையான சிறந்த விளைவுகளைப் பெறமுடியாது. அலுவலக இடவசதியைத் தேர்ந்தெடுப்பதிலும் அதைப் பயன்படுத்துவதிலும்தான் அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றும் செயல்திறன் அடங்கியுள்ளது. வேலைகளைச் செய்வதற்கு கொடுக்கப்படும் வசதிகள்தான் சிறந்த முறையில் வேலைகளைச் செய்ய உதவுகிறது. வெற்றிகரமான செயல் நிறைவேற்றத்திற்கு அலுவலக இடவசதி முதன்மையான காரணியாகும். இது எளிதில் கிடைக்காது என்பதும் தெளிவானதுதான்.

இடவசதித் தேவைகள்

ஒரு கட்டிடத்தின் பொருந்தும் தன்மையைக் குறித்து முடிவெடுக்கும் பொழுது மேலாளர் ஒரு முழுமையான, தேவைகளின் சரிபார்க்கும் பட்டியலைத் தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இயற்கையாகவே ஒவ்வொரு வியாபார நிறுவனமும், துறையும், அலுவலகமும் தங்களுக்கென்று சிறப்புத் தேவைகளைப் பெற்றிருக்கும். சரிபார்க்கும் பட்டியல் தயாரிக்கப்பட்டவுடன் முன்னுரிமை நிலைகள் ஒதுக்கப்படும். முக்கியமானது, விரும்பப்படுவது, பயனுள்ளது இது குறித்து துணைப் பணியாளர்களுடன் கலந்துரையாடுவதால் எல்லோரும் இதில் பங்குபெறும் உணர்வு பெறவும், முன்னுரிமை நிலைகளை நிரணயிக்கவும், ஏற்கனவே இருக்கும் குறைபாடுகள் தடுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை உறுதிசெய்யவும் உதவுகிறது

இடவசதியைத் தீர்மானிக்கும் காரணிகள்

 • அலுவலக கட்டிடத்தின் அமைவிடம்
 • கட்டிடத்தின் அளவு
 • அலுவலக அமைப்பின் வடிவம்
 • காற்றும் வெளிச்சமும்
 • அலுவலகத்திற்குத் தேவையான இடவமைப்பு மற்றும் வசதிகள்
 • வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் வசதி
 • அலுவலக இடப்பரப்பு அல்லது இடவசதிக்கு ஆகும் செலவு

லுவலக கட்டிடத்தின் அமைவிடம்

பெரும்பாலானோர் அலுவலகத்தை நகர்ப்புற நெருக்கத்திலிருந்து புறநகர் பகுதியில் வைக்க விரும்புகிறார்கள். அதற்கான காரணங்கள் ஆவன.

 1. அதிகச் செலவு : நகர்ப்புறங்களில் அலுவலகத்திற்குத் தேவையான இடம் ஒரு சதுர அடியின்படி விலை மிகவும் அதிகமானது.
 2. அதிக நெருக்கம் : நகர்புறங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால், சிறிய இடத்திற்கே அதிகமான தேவை உருவாகிறது.
 3. அதிகமான போக்குவரத்து மற்றும் செய்தித் தொடர்பு வசதிகள் : புறநகர்ப்பகுதிகளில் நவீன போக்குவரத்து வசதிகளாலும், செய்தித் தொடர்பு முன்னேற்றங்களாலும் அலுவலகக் கட்டிடங்களை அமைப்பது நன்மை பயக்கிறது.
 4. தொழிற்சாலை நடவடிக்கைகளில் மாற்றம் : தொழிற்சாலைகள் நகர்ப்புறங்களிலிருந்து புறநகர் பகுதிகளுக்கு (அ) கிராமப்புற பகுதிகளுக்கு மாற்றப்படுவதால் அதன் அலவலகங்களும் சில உற்பத்திப் பிரிவுகளோடு சேர்ந்து புறநகர் பகுதிகளுக்கு மாற்றப்படுகிறது.

மையப்படுத்தப்பட்ட VS துறைப்படுத்தப்பட்ட இடவமைவு

பாரம்பரியமாக மையப்படுத்தப்பட்ட இடவமைவுகளில் இயங்கி வந்த பெரிய நிறுவனங்கள் இப்பொழுது நாடு முழுவதிலும் கிளைகளை அமைத்து வருகின்றன. இவ்வாறு செயல்படுவதால் அவர்களுக்கு அருகாமையில் கிடைக்கும் மூலப் பொருட்கள், மண்டலச் சந்தைகள், போக்குவரத்தில் சிக்கனம் ஆகிய காரணிகளில் நன்மைகள் உண்டாகின்றன. சிறிய அளவில் இயங்கும் நிறுவனங்கள் வசதியாக நிர்வாகம் செய்வது மற்றும் நெருங்கிய தொழிலாளர் மேலாண்மை உறவுகள் பேணுவது போன்ற காரணிகளால் நன்மைகள் கிடைக்கப் பெற்று சிறப்பாகச் செயல்படுகின்றன.

அலுவலக இட அமைவை நிர்ணயிக்கும் காரணிகள்

அலுவலகம் நகரத்தில் அமைய உள்ளதா (அ) புறநகரில் அமைய உள்ளதா என்பதை முடிவு செய்த உடன் கீழ்க்கண்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு அலுவலகக் கட்டிடத்தைத் தேர்வு செய்யவேண்டும்.

 1. போக்குவரத்து வசதிகளின் கிடைப்பு நிலை : அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் தடையின்றி வந்து போகும் வண்ணம் போக்குவரத்து வசதிகள் இருக்க வேண்டும். இது நிறுவனத்தின் தடையில்லா செயல்பாட்டிற்கு உதவியாக இருக்கும். ரயில் நிலையத்திற்கோ பேருந்து நிலையத்திற்கோ (அ) விமான நிலையத்திற்கோ அருகாமையில் இருந்தால், வியாபாரங்களுக்கு உதவியாக இருக்கம்.
 2. பல்வேறு சேவை வசதிகள் இருத்தல் : வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், அஞ்சலக அலுவலகங்கள், போக்குவரத்து அலுவலகங்கள் சில்லறை அங்காடிகள் மற்றும் உணவு விடுதிகள் போன்ற சேவை வசதிகள் இருந்தால் அலுவலகப் பணியாளர்கள் தங்கள் திறமை முழுவதையும் பணியில் செலுத்தி நிறுவனம் வளர உதவிபுரிவர்.
 3. மற்ற பிரிவுகளுடன் தொடர்பு கொள்ளும் வசதி இருத்தல் : ஒரே வளாகத்தில் நிறுவனத்தின் அனைத்துப் பிரிவுகளும் இருக்கும் பட்சத்தில் அலுவலகமும் அதே வளாகத்தில் இருந்தால் வசதியாக இருக்கும்.
 4. சுற்றுப்புற சூழ்நிலை நன்கு அமைதல்: நல்ல ஆரோக்கியமான சூழ்நிலை ஒரு அலுவலகத்திற்கு அவசியம் ஆகும். இரைச்சல், புகை, நெருக்கம் போன்ற காரணிகளால் பணியாளர்களின் திறமை பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும்.
 5. உள்ளூரில் அமைதல் : அலுவலகம், வியாபார நிறுவனங்கள் அமைந்துள்ள இடத்திலேயே அமையும் பட்சத்தில் நல்ல புகழோடு வாடிக்கையாளரின் சேவைகளை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கிறது. சமீப காலங்களில் செய்தி மற்றும் போக்குவரத்து வசதிகள் பெருகிவிட்டதால் அலுவலகம் உள்ளூரில் அமையவேண்டும் என்ற நடைமுறையிலிருந்து விலகி விட்டது.
 6. தேவையான இடத்தைப் பெறுதல் : ஒரு குறிப்பிட்ட பகுதியில், குறைந்த அளவு தேவைப்படும் அலுவலக இடத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் அரிதாகி விட்டது. இதுவே இட அமைவை தேர்ந்தெடுக்க முக்கிய தடையாக உள்ளது.

தேவைப்படும் அலுவலக இட அமைவை உடமையாக்குதல்

எந்த இடத்தில் அலுவலகத்தை அமைக்கப் போகிறோம் என்ற இடம் தீர்மானிக்கப்பட்ட உடன் தேவையான கட்டிடம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். அந்த கட்டிடம் சரியான அளவினதாகவும் சரியான வடிவம் உடையதாகவும் நிறுவனத்தின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் விதத்தில் இருக்க வேண்டும். இவ்வலுவலக அளவு தேவைக்கு ஏற்ப அவ்வப்பொழுது விரிவுபடுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். இவ்வலுவலக கட்டிடம் சொந்தமானதாகவோ குத்தகைக்கு எடுத்ததாகவோ (அ) வாடகைக்கு எடுத்ததாகவோ இருக்கலாம்.

சொந்தக் கட்டிடம்

அலுவலகக் கட்டிடத்தைப் பொறுத்த வரை ஒரு அடிப்படை வினா என்ன என்றால் அலுவலகக் கட்டிடம் சொந்தமானதா? (அ) வாடகைக்கா? என்பதுதான். இது மேலாண்மையரால் எடுக்கப்பட வேண்டிய நிர்வாக முடிவாகும்.

சொந்தக் கட்டிடத்தின் நன்மைகள்

 1. கட்டிடமானது தற்கால மற்றம் எதிர்காலத் தேவைகளின் அடிப்படையில் திட்டமிடப்பட வேண்டும். இவ்வாறு செய்வதால் இருப்பிடத்தின் முழுப்பயனைப் பெறமுடியும்.
 2. சொந்தக் கட்டிடம் நிறுவனத்தின் கெளரவத்தைக் காண்பிக்கிறது. நிறுவனத்தின் கடன் தீர்வுத் திறத்தைக் காட்டுவதோடு வாடிக்கையாளர்களிடையே அது பற்றிய நல்லெண்ணத்தை உருவாக்குகிறது.
 3. சொந்தக் கட்டிடம் ஒரு நிலையான முகவரியைத் தரவல்லது. அடிக்கடி இடத்தை மாற்றத்தக்கதாக இருக்காது.

சொந்தக் கட்டிடத்தின் குறைபாடுகள்

 1. சொந்தக் கட்டிடம் அதிகமான முதலீட்டை உள்ளடக்கியது. சிறிய மற்றும் நடுத்தர வியாபார நிறுவனத்தால் அடையக்கூடியது அல்ல.
 2. அதிகமான பேணுகைச் செலவு மற்றும் வரி முதலியவை நிறுவன உரிமையாளருக்குச் சுமையாக மாறிவிடும்.

குத்தகைக் கட்டிடம் / வாடகைக் கட்டிடம்

அலுவலக இடம் குத்தகைக்கும் எடுக்கப்படலாம்.

குத்தகைக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணங்கள்

 1. வாங்குபவர்களுக்கு பொருத்தமாக இருத்தல்
 2. குத்தகை வாடகை
 3. கிடைப்பில் உள்ள நிதி

வாடகைக் கட்டிடத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான காரணிகள்

 1. முதலீடு செய்யும் முடிவு குறித்த பொறுப்பு இல்லாமை
 2. பேணுகைப் பொறுப்பு இன்மை
 3. இடமாற்றம் எளிது எந்த இடத்தில் வேண்டுமானாலும் கட்டிடத்தை மாற்றி வைத்துக் கொள்ளலாம். மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இடமாற்றம் செய்வது எளிது. சுருங்கக் கூறின் இடவமைவில் நெகிழ்ச்சித்தன்மை காணப்படுகிறது.

கட்டிடத்தின் அளவு

அலுவலக இடத்தை சொந்தமாக வாங்குவதா? குத்தகைக்கு எடுப்பதா? வாடகைக்கு எடுப்பதா? என்பதைத் தீர்மானித்த உடன் அதன் அளவைத் தீர்மானிப்பது அவசியம் ஆகும். எதிர்கால விரிவாக்கத்திற்கு ஏற்ப ஒதுக்கீடுகள் செய்ய வேண்டும். நிறுவனத்தின் இயல்பிற்கும் தேவைக்கும் ஏற்ப தனது தேவைகளுக்கு ஏற்ற வழிகளை தீர்மானிக்கவேண்டும்.

அலுவலக கட்டிடத்தின் வடிவம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கட்டிடத்தின் வடிவம் சதுரமாகவோ செவ்வகமாகவோ, குறுகலாகவோ, நீளமாகவோ செங்குத்தாகவோ, படுகிடையாகவோ இருக்கலாம். இவை அலுவலகக் கட்டிடத்திற்கு நல்ல பயன்பாட்டைத் தருகிறது. பணியாளர்களின் திறமையை அதிகரிக்க உதவுகிறது. அவர்கள் நடமாடும் பகுதி சரியான அளவிற்குள் இருக்கிறது.

காற்றும் வெளிச்சமும்

போதுமான சரியான வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் முதலியவை அலுவலகக் கட்டிடத்திற்கு முக்கியமானவை ஆகும். அலுவலக கட்டிடத்தின் இடப்பரப்பிற்கான காற்று மற்றும் வெளிச்சம் அளிக்கப்படுமானால் அது பணியாளர்களின் உடல் மற்றும் மனஉளைச்சலைக் குறைக்கும். இது பணியாளரின் ஒழுங்குனர்வையும் கூட்டுகிறது. கதவுகள், சாளரங்கள் காற்று செலுத்திகள் முதலியவை தேவையான எண்ணிக்கையிலும், தேவையான இடங்களிலும் அமைக்கப்படவேண்டும். இது நல்ல காற்று வெளிச்சம் முதலியவை பெற உதவியாக இருக்கும். கட்டிடம் தென் கிழக்காகவோ, தென்மேற்காகவோ, கிழக்காகவோ, மேற்காகவோ இருப்பது போதுமான இயற்கை வெளிச்சம் உள்ளே வர ஏதுவாக இருக்கும்.

போதிய மற்றும் தகுந்த வெளிச்சத்தின் முக்கியத்துவம்

குறைவான மற்றும் ஒழுங்கில்லாத வெளிச்சம் கெடுதலான கண் உறுத்துதல் மற்றும் அயர்வுக்கும் காரணமாகிறது. கீழே கானும் பொதுவான கொள்கைகள் ஒரு அலுவலகத்தின் செயற்கை வெளிச்சக் கொள்கைகளைக் கட்டுப்படுத்துகிறது.

 • வெளிச்சம் போதுமானதாக இருத்தல் வேண்டும்.
 • மிகவும் வலுவாக இருத்தல் கூடாது.
 • மேஜையில் கருப்பு நிழல்கள் படியக்கூடாது.
 • வெளிச்சம் தருகின்ற முறை மிகவும் திறமையுடன் இருத்தல் வேண்டும். அதாவது சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
 • வெளிச்சத்தின் தோற்றம் நன்றாக இருத்தல் வேண்டும். அதாவது விளக்குகளை பொருத்தி இருந்தாலும், இல்லையென்றாலும் தோற்றம் நல்ல முறையில் இருத்தல் வேண்டும்.
 • தேவைப்படும் போது வெளிச்சத்தை கூட்டவும், குறைக்கவும் சாத்தியம் இருத்தல் வேண்டும்.
 • சுவர்கள் விளக்கு பொருத்துதல்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட வேண்டும். அப்பொழுதுதான் பெரும்பான்மை வெளிச்சம் கிடைக்கும்.
 • மனை அணையங்களை தேர்வு செய்யும் பொழுது அவை மனதிற்கு இதமான வெளிர்நிறங்களில் இருத்தல் வேண்டும்.
 • நீலம், பச்சை மற்றும் சாம்பல் நிறமுடைய காகிதங்களும் அட்டைகளும் தவிர்க்கப்பட வேண்டும்.
 • பல நவீன அலுவலகங்களில் குளிர்ந்த குழல் விளக்குகள் பயன்படுத்தப் படுகின்றன.
 • கண்பார்வை ஒவ்வொரு மனிதனுக்கும், தனி வாழ்விலும் மற்றும் பணியிலும் இன்றியமையாத வரப்பிரசாதமாகும். பணியாளர்களுக்குத் தகுந்த வெளிச்சத்தை அளித்து அவர்களது கண்கள் பாதிக்காத வண்ணம் ஏற்பாடு செய்தல் வேண்டும்.

அலுவலகத்திற்குத் தேவையான இடஅமைப்பு மற்றும் வசதிகள்

நவீன வியாபாரம் பணியாளர்களையும் கருவிகளையும் மட்டுமே சார்ந்திருப்பதில்லை. அவை எவ்வாறு பொருத்தமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பதையும் சார்ந்துள்ளது. நவீன அலுவலகங்களில் அலுவலக முறைமைகள் மற்றும் அமைப்பின் கட்டமைப்பை பொருத்தே உட்புற ஏற்பாடுகள் அமைகின்றன. அலுவலக இட அமைப்பு துறைகளின் அமைப்பைப் பொறுத்துத்தான் அலுவலகத்தின் அளவு, வடிவம் மற்றும் துறைகளின் எண்ணிக்கை, தாழ்வாரம் மற்றும் பிற ஏற்பாடுகள் தீர்மானிக்கப்படும். துறைகள் அதே தளத்திலும் அமையலாம்.

வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் வசதி

வாடிக்கையாளர் மற்றும் பணியாளர்களின் வசதி அலுவலக இடவசதியில் பெரும் பங்கு வகிக்கிறது. விற்பனை மற்றும் நிதித் துறைகள் வாடிக்கையாளர்களால் அடிக்கடி பார்வையிடப்படுவதால் இவை எளிதில் அடையக் கூடிய இடத்தில் இருக்க வேண்டும். தேநீர் விடுதிகள், கழுவும் அறைகள், பொருட்களைப் பாதுகாக்கும் அறைகள், நீர் பொருத்துகைகள் முதலியவைகள் சரியான இடங்களில் அமைக்கப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் வசதியாகத் தேவையான இடங்களில் மின் தூக்கிகள் அமைக்கப்பட வேண்டும்.

அலுவலக தரைப்பரப்பு (அ) இடவசதிக்காகும் செலவு

அலுவலகக் கட்டிடத்தினைத் தேர்ந்தெடுப்பதில் அதற்காகும் செலவு ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கிறது. அலுவலக இடவசதிக்காகும் செலவு, அது அமையும் பகுதி, அதன் அளவு மற்றும் உட்புற ஏற்பாடுகளால் தீர்மானிக்கப்படுகிறது. நிறுவனத்தின் மொத்தத் தேவைகள் மற்றும் அதற்காகும் செலவு இவை இரண்டிற்குமிடையே ஒரு சமநிலையை ஏற்படுத்த நிர்வாகம் முயற்சி செய்ய வேண்டும். எவ்வாறு இருந்தாலும் இடப்பரப்பின் செலவு நிறுவனத்தின் செயல் எல்லைக்குள் இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் திறமையானது செலவைச் சிக்கனம் செய்வதற்காக தியாகம் செய்யப்படக்கூடாது.

இதர ஆலோசனைகள்

ஆலோசனை செய்யப்பட வேண்டிய இதரக் காரணிகளில் மாறும் வணிகத் தேவைகளுக்கு ஏற்ப இடப்பரப்பில் ஏற்படும் நெகிழ்வுத்தன்மை, கருவிகளையும் இயந்திரங்களையும் பொருத்துவதில் உள்ள எளிமை, இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பாதுகாப்பு மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு போன்றவை அடங்கும்.

அலுவலக இட அமைப்பு

மனையணையங்களையும் கருவிகளையும் கிடைப்பில் உள்ள தரைப்பரப்பில் சீராக அமைக்கும் ஏற்பாடே இட அமைப்பு ஆகும். அலுவலக மேலாண்மையில் ஒரு முக்கியமான பணி அலுவலக இடஅமைப்புத் திட்டத்தைத் தயாரிப்பதாகும். ஒரு அலுவலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து இயல்பியல் பாகங்களையும் சிறப்பாக அமைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் தரைப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்தி, அதிக அளவு ஆற்றலையும் ஒருங்கிணைப்பையும் வழங்கும் வண்ணம் இந்த பிரிவுகளை திறமையான, கவர்ச்சியான பகுதியாக மாற்ற வேண்டும். இதுவே அலுவலக இடஅமைப்பு ஆகும்.

அலுவலகப் பரப்பு முழுமையாகவும் இலாபகரமாகவும் பயன்படுத்தும் வகையில் அமைப்பின் துறைகளும் பணியாளர்களும் மற்றும் அலுவலகக் கருவிகளும் சரியாக அமைக்கப்படவேண்டும். அலுவலக இடஅமைப்பு என்பது அலுவலகப் பரப்பினை திட்டமிடுதல் என்றும் கூறலாம். ஏனெனில் அலுவலக இடஅமைப்பில் கிடைப்பில் உள்ள குறைந்த அளவு வள ஆதாரங்களை முழுமையாகப் பயன்படுத்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

மேற்கண்ட அலுவலக இடஅமைப்பின் வரைவிலக்கணம் கீழ்க்கண்ட சிறப்பியல்புகளைத் தெளிவுபடுத்துகிறது.

1. இது முழுமையான, அறிவியல் அடிப்படையிலான கிடைப்பில் உள்ள தரைப்பரப்பை சீரமைக்கும் ஏற்பாடு ஆகும்.

2. ஒவ்வொரு கருவிகளுக்கும், பொறிகளுக்கும், பணியாளர்களுக்கும் சரியான இடத்தைக் குறிப்பிட்டுத் தருகிறது.

3. இது சிறந்த முழுமையான அலுவலகச் சூழ்நிலையை அளிக்க வல்லது.

முக்கியத்துவம்

அலுவலக இடஅமைப்பு என்பது வியாபாரத்திற்கு இன்றியமையாதது. கீழ்காணும் காரணிகளால் இது எத்துனை முக்கியமானது என்பது தெரிகிறது.

 1. தரைப்பரப்பை முழுமையாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய
 2. கண்காணிப்பை எளிதாக்க
 3. உள்தொடர்பினை வளப்படுத்த
 4. அலுவலக இயந்திரங்ளையும் கருவிகளையும் நன்றாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய
 5. பணியாளர்களின் வசதிகளையும் ஒழுங்குணர்வையும் உயர்த்த
 6. வாடிக்கையாளர்களிடையே மற்றும் பார்வையாளர்களிடையே சாதகமான எண்ணத்தை உறுதிபடுத்த
 7. தடையில்லா வேலை ஒட்டத்தை உறுதிசெய்ய

அலுவலக இட அமைப்பு (அ) அலுவலக பரப்பைத்திட்டமிடுதலின் நோக்கங்கள்

அலுவலக இடஅமைப்பைத் திட்டமிடும் போது கருத்தில் கொள்ள வேண்டிய நோக்கங்கள் : இந்த நோக்கங்கள் சிறந்த அமைப்பின் மூலமாக அடையக் கூடியதாக இருக்க வேண்டும். இது ஒரு அலுவலக மேலாளரின் வேலையாகும். இந்த நோக்கங்களை அலுவலக மேலாளர் சரியாக வரையறுக்க வேண்டும். அப்போதுதான் இவ்விட அமைவு அதிக அளவு திறனைத் தரும்.

இவ்விட அமைவை தீர்மானிக்கும் முன்னர் அலுவலக மேலாளர் அலுவலக இட அமைப்பு முன் மாதிரியைத் தயாரிக்க வேண்டும். சில வண்ண காகிதத் துண்டுகளை வைத்து பணியாளர்கள், கருவிகள் மற்றும் மனையணையங்களை சித்தரிக்கும் மாதிரியை உருவாக்க வேண்டும்.

கீழ்க்கண்ட நோக்கங்கள், இட அமைப்பை உறுதி செய்யும் முன், கருத்தில் கொள்ள வேண்டியவை.

 1. இது தடையில்லா வேலை ஒட்டத்தை உறுதி செய்ய வேண்டும். அப்பொழுதுதான் வேலை தடையில்லாமல் சரியான முறைமையின்படி நடைமுறைப்படுத்தப்படும்.
 2. முழுமையான இடப்பயன்பாடு உறுதி செய்யப்படவேண்டும்.
 3. குறைவான முயற்சியுடன் முழுமையான கண்காணிப்பைத் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படும்.
 4. அலுவலகப் பணியாளர்களின் சுதந்திரமான நடமாட்டத்திற்கு உதவும் வகையில் இருக்க வேண்டும். பணியாளர்கள் இயந்திரங்கள் இருக்கும் இடத்திற்கு எளிதில் சென்று வருமாறு இருக்கவேண்டும்.
 5. அலுவலகப் பணியாளர்களுக்கு சிறந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டும். அப்பொழுதுதான் அதிகப்படியான வெளியீட்டுத்திறனை தரவல்லதாக இருக்கும்.
 6. மந்தண வேலைகள் செய்யும் பணியாளர்கள் தனியான இடங்களில் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.
 7. பணிவழித் துறைப்படுத்தல் பின்பற்றப்பட வேண்டும்.

அலுவலக இட அமைப்பின் கொள்கைகள் / தத்துவங்கள்

அலுவலக இட அமைப்பின் நோக்கங்களை அடைய கீழே குறிப்பிட்டிருக்கும் கொள்கைகளை பின்பற்றுதல் அவசியம்.

 1. வேலை ஓட்டக் கொள்கை : வேலை ஓட்டமானது மளமளவென்று தங்கு தடையில்லாமல் செல்லும் வகையில் இருக்க வேண்டும். அலுவலக அமைப்பு நேர்கோடாகவோ, வட்டமாகவோ, 'ரு' வடிவத்திலோ இருந்தாலும் பணியாளர் மற்றும் காகித (கோப்பு) ஓட்டமானது குறைந்த அளவினதாக இருக்கவேண்டும்.
 2. தடையற்ற இயக்கம் மற்றும் உற்று நோக்கும் கோட்பாடு : தரைப்பரப்பு, முடிந்தவரை தடுப்பு தூண்கள் போன்ற தடைகள் இல்லாமல் தடையில்லா இயக்கத்திற்கும் உற்று நோக்குதலுக்கும், கண்காணிப்பிற்கும் உதவுவதாக இருக்கவேண்டும்.
 3. ஆற்றல் வாய்ந்த கண்காணிப்புக் கோட்பாடு இடஅமைப்பு முழுமையான கண்காணிப்பிற்கு உதவுவதாக இருக்கவேண்டும்.
 4. நெகிழ்வுத் தன்மைக் கோட்பாடு அலுவலக இடஅமைப்பு மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும்படி வடிவமைக்கப்பட வேண்டும். ஏனெனில் வியாபாரம் ஒரே நிலையில் இருக்காது.
 5. நேர்மை மற்றும் ஒழுங்குணர்வுக் கோட்பாடு: பெரிய நிறுவனங்களில் வேலையாட்களின் நேர்மை மற்றும் ஒழுங்குணர்வை உறுதிபடுத்துவது அவசியமாகிறது. ஏனெனில் அவர்கள் ஒரு சமுதாயக் குழுவினைச் சேர்ந்தவர்கள். சரியான முறையில் வடிவமைக்கப்படும் இடவமைப்பு கண்டிப்பாக அவர்களது இயக்கத்தை வளப்படுத்தும்.
 6. சமநிலைக் கோட்பாடு : இடஅமைப்பு சமன் செய்யப்பட்டு மனதிற்கு இதமான தோற்றத்துடன் அமைவது அவசியமாகிறது. சமன்படுத்துவதன் மூலம் பொறுப்புணர்வினைக் கொண்டு வர முடியும். மனதிற்கு உவந்த தோற்றம் வாடிக்கையாளர்களைக் கவர்வதுடன் அவர்களுக்கு நிறுவனம் பற்றிய ஒரு உயர்ந்த நல்லெண்ணத்தை உருவாக்குகிறது.
 7. குறைந்த செலவில் அதிகப் பயன்பாட்டுக் கொள்கை : தரைப்பரப்பு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் செலவு குறையும். ஆனால் ஒவ்வொரு பணியாளருக்கும் குறைந்த அளவு இடம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் திறமையை உயர்த்துவதன் மூலம் அவர்களை ஆரோக்கியமான மனநிலையில் உள்ள பணியாளர்களாக வைக்க முடியும்.
 8. கருவிகளுக்கான இட அமைப்புக் கோட்பாடு: கருவிகளுக்கும் கோப்புகளுக்கும் வழங்கப்படும் இடம் பணியாளர் எளிதில் வந்து செல்லும் வண்ணமும், எளிதில் கையாளும் வண்ணமும், அமைய வேண்டும். பணியாளர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்காமல் எளிதில் அடையும் வண்ணம் கருவிகள் அமைக்கப்படவேண்டும்.
 9. சீராக அமைக்கும் ஏற்பாட்டுக் கோட்பாடு : எழுது மேசைகள் சரியாக ஏற்கனவே உள்ள தரத்திட்டப்படி அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அமைப்பதன் மூலம் அலுவலகம் திறம்பட காட்சி அளிக்கும் என்பதைவிட கண்காணிப்பும் மிகவும் சுலபமாகும் என்பது உண்மை.
 10. நல்ல ஒளியமைப்புக் கோட்பாடு இடத்தை அமைக்கும் போது அதோடு இயற்கை வெளிச்சம் தேவையான அளவிற்கு உள்ளே வருவதுபோலவும் இருக்க வேண்டும். சில வேலைகளுக்கு நல்ல வெளிச்சமானது தேவைப்படலாம். அது போன்ற வேலைகளுக்கான இடம் சாரளங்களுக்கு ஜன்னல்) அருகில் அமைக்கப்படவேண்டும்.
 11. சிறந்த காற்றோட்டக் கோட்பாடு : காற்றோட்டம் இட அமைப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஆண்களும் பெண்களும் இணைந்து பணியாற்றும் இடங்களில் ஒவ்வொருவரின் விருப்பத்திற்கு ஏற்ப காற்றோட்டத்தை அமைப்பது சிறிது சிக்கலானது. ஒவ்வொருவரின் விருப்பம் கருத்தில் கொள்ளவேண்டும்.
 12. தரைப்பரப்புக் கோட்பாடு : ஒவ்வொரு மேசை வரிசைகளுக்கு இடையே இயங்குவதற்கான குறைந்தபட்ச இடம் விடவேண்டும். அதன் அகலம் கருவிகள் மற்றும் மேசைகளின் எண்ணிக்கையை பொறுத்தது.

மேற்கண்ட கோட்பாடுகளை ஒருங்கிணைப்பதன் மூலம் முழுமையான அலுவலக இடஅமைப்பை அடைய முடியும். இதன் இறுதி நோக்கம் பணியாளர்கள், கருவிகள் மற்றும் பொறிகளைத் திறமையாக ஒருங்கிணைப்பதுதான் ஆகும்.

அலுவலக இடஅமைப்பிற்கு முறைமை அணுகுமுறை

ஒரு நிறுவனத்தின் ஆவண நடமாட்டம் மற்றும் வாய்மொழி செய்தித் தொடர்பு இவற்றை ஆய்வு செய்வதன் மூலம்தான் முறைமை அணுகுமுறை தொடங்குகிறது. எப்பொழுது இவ்விரண்டு நடமாட்டங்களும் முழுமையாக அடையாளம் காணப்பட்டு விவரிக்கப்படுகிறதோ அப்பொழுது அலவலக இடஅமைவானது செய்தி ஓட்டத்துடனும் முழுமையான திறமையுடனும் செல்கிறது என முடிவு செய்யலாம். இம்முறைமைகளில் ஒன்றானது திறந்த அலுவலகம் ஆகும். அதுவே கீழ்க்கண்ட பகுதியில் விளக்கப்படுகிறது.

திறந்த அலுவலகமும் தனி அலுவலகமும்

அலுவலக இடத்தை அமைக்கும் போது நிறுவனத்திற்கு சில திறந்த அலுவலகம் தேவைப்படுகிறதா? அல்லது அதிகமான சிறிய தனித்தனி அலுவலகம் தேவைப்படுகிறதா? என்று தீர்மாணிப்பது அவசியம் ஆகிறது. அது திறந்த அலுவலகம் என்று முடிவு செய்யப்பட்டால் பணியாளர்கள் ஒரு பெரிய அறை அல்லது நீளமான அரங்கத்தில் பணியிடம் வழங்கப் படுகிறார்கள். அனைத்து பிரிவுகளும் துறைகளும் தனியாக வழங்கப்பட்ட இடத்தில் அதே அரங்கத்தில் தேவையானால் சிறிய தடுப்புகளுடனும் அலமாரிகளுடனும் அமைக்கப்படுகிறது. இவை ஒவ்வொரு பிரிவுகள் அல்லது துறைகளைக் குறிக்கிறது. எப்படியிருந்தாலும் சில முக்கியமான அதிகாரிகளுக்குத் தனி அறைகள் ஒதுக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர்களது பணிகளுக்கு ப்ரத்யேகமாகவும், மன ஒருமுகப்பாட்டுடனும் பணிபுரிவது அவசியம் ஆகிறது.

திறந்த அலுவலகம்

திறந்த அலுவலகம் என்பது அனைத்துப் பணியாளர்களும் தங்கள் பிரிவுகளின்படி ஒரே நீண்ட அறையில் பணிபுரியுமாறு செய்யும் ஏற்பாடே ஆகும். இவர்களை பொறுப்புடைய அலுவலர்கள் கண்காணிக்கிறார்கள்.

திறந்த அலுவலகத்தின் நன்மைகள்

திறந்த அலுவலகமானது சிறிய தனி அலுவலகங்களை விட அதிகமான நன்மைகளைப் பயக்கிறது. அவையாவன.

 1. சிக்கனமானது : திறந்த அலுவலகம் சிக்கனமானது. ஏனெனில் பெரிய நகரங்களில் அதிகமான வாடகை கொடுக்க வேண்டியுள்ளது. இடப்பரப்பை பிரிவுகள் மற்றும் தடைச்சுவர்கள் ஆக்ரமிப்பதை திறந்த அலுவலகத்தில் தவிர்ப்பதால் அது சிக்கனத்தைத் தருகிறது.
 2. சிறந்த வேலை மற்றும் கண்காணிப்பு : திறந்த அலுவலகம் நல்ல வேலை மற்றும் சிறந்த கண்காணிப்பினை வழங்குகிறது. வேலையாள் நேரடிக் கண்காணிப்பில் வருவதால் சிறந்த ஒருங்கிணைப்பை வேலையில் ஏற்படுத்துவது எளிதாகிறது.
 3. நெகிழ்வுத்தன்மை : இட அமைப்பில் எந்த விதமான கஷ்டமும் இல்லாமல் மாற்றங்களை செய்ய இயலும். இதன் மூலமாக மனை அணையங்களையும் கருவிகளையும் மிகவும் எளிதாக நகர்த்த இயலும்.
 4. நல்ல செய்தித் தொடர்பு : தகவல் தொடர்பு தனி அலுவலகத்தைவிட திறந்த அலுவலகத்தில் சிறப்பாக அமையும். ஏனெனில் திறந்த அலுவலகத்தில் பணியாளர்கள் சுவர்கள் மூலமாகவோ அல்லது கதவுகள் மூலமாகவோ ஏற்படும் தகவல் தொடர்பு இடர்பாட்டை சந்திப்பதில்லை. ஒரு பணியாளர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கலந்தாலோசனை, அறிவுரை மற்றும் செயல்முறைகள் வழங்க சில அடிகள் எடுத்து வைத்தாலே போதும். இதனால் நல்ல சீரான முறையில் வேலை செய்ய இயலும்.
 5. மையப்படுத்தல் : ஒரு திறந்த அலுவலகத்தில் எழுதுப் பொருள் மற்றும் கோப்புக்களை மையப்படுத்துவது எளிதாகவும், சிக்கனமாகவும், திறமையானதாகவும் உள்ளது.
 6. சாதனங்களை சேர்ந்து பயன்படுத்துதல் : அலுவலக சாதனங்களான கால்குலேட்டர், தொலைபேசி மற்றும் ஜெராக்ஸ் இயந்திரங்களை சேர்ந்து பயன்படுத்துவதற்கு சாத்தியமாகிறது. இதன்மூலமாக சாதனங்கள் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு சிக்கனத்துக்கு வழிவகுக்கிறது.
 7. மின் விளக்குகள், குளிரூட்டிகள் இன்ன பிறவற்றில் சிக்கனத்தை கடைப்பிடித்தல் : திறந்த அலுவலகம் நிலையான மற்றும் இயக்கும் செலவுகளான மின் விளக்குகள், குளிரூட்டுதல், குளிரூட்டும் இயந்திரம் மற்றும் வெப்பப்படுத்துதல் போன்றவற்றில் சிக்கனம் கடைப்பிடிக்கப்படுகிறது.
 8. சுறுசுறுப்பான தோற்றம் : ஒரு அலுவலகம் சுறுசுறுப்பான தோற்றத்துடன் இருப்பதால் அதுவே கூடுமான வரையில் அந்நிறுவன அமைப்புக்கு ஒரு விளம்பரமாக உள்ளது. மேலும் இதற்கு எந்த கூடுதல் செலவில்லாமல் வாடிக்கையாளர்களுக்கு அதிக திருப்தியை வழங்குகிறது. பணியாளர்களும் நிறுவனத்தின் பெருமையில் பங்கேற்பதால் இது ஒழுங்குணர்வையும் வேலையின் வெளியீட்டையும் கூட்டுகிறது.
 9. நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் : திறந்த அலுவலகங்கள் நல்ல வெளிச்சத்தையும், காற்றோட்டத்தையும் உறுதிப்படுத்துகின்றன. இதனால் அலுவலகம் பணியாற்ற ஒரு ஆரோக்கியமான இடத்தை அளிக்கிறது.
 10. மக்களாட்சி : ஒரு திறந்த அலுவலகம் மக்களாட்சியின் அடிப்படையில் இயங்குகிறது. ஏனென்றால் இங்கு அனைத்துத் தர பணியாளர்களுக்கும் பார்வையில் உள்ளபடியால், அனுபவமிக்க பணியாளர்கள் திறமையாலும் பண்புகளாலும் தங்களுடைய நிலையைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
 11. அலங்கரிக்க எளிதாக உள்ளது : ஒரு திறந்த அலுவலகம் அலங்கரிக்க எளிதாக உள்ளது. ஏனென்றால் பணியாளர்களே அலங்காரம் செய்வதில் பங்கு கொண்டு அலுவலகத்தை பணி செய்வதற்கு ஒரு அமைதியான இடமாக மாற்றிவிடுகின்றனர்.

திறந்த அலுவலகத்தின் குறைபாடுகள்

திறந்த அலுவலகம் நிறைய குறைப்பாடுகளால் அல்லல்படுவதால் அவற்றில் முக்கியமானவை பட்டியலிடப்பட்டுள்ளன.

 1. இரகசியத்தன்மை இல்லாமை: திறந்த அலுவலகத்தில் ரகசியத்தன்மை எப்பொழுதும் பராமரிக்க இயலாது. ஏனென்றால் அனைத்துப்பணிகளும் எல்லாப்பணியாளர்களின் பார்வைக்கு முன்புதான் நிறைவேற்றப்படுகிறது.
 2. தூய்மையற்ற, வியாபாரமற்ற தோற்றம் : சரியாக பராமரிக்கப்படவில்லையானால் திறந்த அலவலகங்கள் தூய்மையில்லாத, அழகற்ற மற்றும் வியாபாரமற்ற தோற்றத்துடன்தான் காட்சி அளிக்கும். இது அலுவலக பணியாளர்களின் ஒழுங்குணர்வையும், திறமையையும் பாதிக்கிறது.
 3. பிணைப்பில்லாத சூழல் : ஒரு பெரிய திறந்த அலுவலகத்தில் பிணைப்பில்லாத சூழல் காணப்படுகிறது. ஒவ்வொரு பணியாளரும் தான் வேலை செய்யும் இடத்தில் ஒரு சிறிய பிணைப்புடன் மட்டுமே இருப்பதால் மேலாண்மைக்கு இதனால் பல பிரச்சனைகள் உருவாகின்றன.
 4. சப்தம் : பணியாளர்களின் திறமை குறைய பலவிதமான சப்தங்கள் காரணமாகிறது. இதில் முக்கிய குற்றவாளி தொலைபேசியே ஆகும்.
 5. சுகாதாரமற்ற தன்மை : சுகாதார நோக்குடன் பார்த்தோமேயானால் ஒரு பெரிய திறந்த அலுவலகம் பணியாளர்களின் சுகாதாரத்திற்கு ஏற்றது அல்ல. தொற்றும் வியாதிகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு எளிதாக பரவும். ஏனென்றால் அங்கு நிலவுகின்ற காற்றோட்டமின்மை மற்றும் ஒரேயிடத்தில் உள்ள பணியாளர்களின் நெரிசல் ஆகும்.
 6. ஒற்றுமையை அரித்தல் : இடவமைப்பின் மாற்றங்களினால் திறந்த திட்ட அலுவலகம் உருவாகிறது. இதனால் முதன்மையாக பணியாற்றும் குழுவின் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. நெருக்கமான பிணைக்கப்பட்ட சிறிய அலுவலகத்தில் உள்ள பணியாளர் குழு தங்களுடைய ஒற்றுமை அரிக்கப்படுவதை உணர்கின்றனர்.
 7. நெருக்கம்: பணியாண்மையர் அனைத்துப் பணியாளர்களையும் ஒரே இடத்தில் நெருங்கி அமரச் செய்தும் பணி இயந்திரங்களை இணைந்து பயன்படுத்த அனுமதித்தும் மின்விளக்குகள் குளிரூட்டிகள் குளிர்சாதனங்கள் முதலியவற்றைப் பயன்படுத்துவதில் சிக்கனம் காட்டுகின்றனர். இது ஒரு குறைபாடாக அமைகிறது.
 8. தனிப்பட்ட தேவைகளை புறக்கணித்தல் : வெளிச்சம், வெப்பம், குளிரூட்டுதல் போன்றவை ஒருவருக்கொருவர் மாறுபடுகிறது. ஒரு திறந்த அலுவலகம் இவற்றை புறக்கணிப்பதன் மூலம் பணியாளர்களின் தவறான புரிதலுக்கு கொண்டு செல்கிறது.

தனி அலுவலகம்

தனி அலுவலகம் என்பது முக்கியமான அதிகாரிகள் பணியாற்றுவதற்காகவும், மந்தணப் பணிகள் மேற்கொள்வதற்காக வழங்கப்படும், முற்றிலும் தடுக்கப்பட்ட அறைவசதிகள் ஆகும்.

தனி அலுவலகத்தின் நன்மைகள்

 1. நிறுவனத்திலுள்ள மேல்நிலை அதிகாரிகளுக்கு கெளரவத்தையும், முக்கியத் துவத்தையும் அளிக்கிறது.
 2. மந்தணப் பணிகளும், கலந்துரையாடல்களும் சாத்தியமாகின்றன. பொது ரகசியத் தன்மையும் உறுதியாகிறது.
 3. கணக்கியல் மற்றும் புள்ளியியல் பணிகளிலும் மனதை ஈடுபடுத்த இயல்கிறது. இதன் மூலமாக பணித்திறமை அதிகரிக்கிறது.
 4. நல்ல காற்றோட்டம் அமைகிறது. இது பணியாளர்களின் ஆரோக்கியத்தை அளிக்கிறது.

தனி அலுவலகத்தின் குறைபாடுகள்

ஒரு தனி அலுவலகத்தின் குறைபாடுகள் பின்வருமாறு.

 1. பிரிவுகள் செய்வதில் நிறைய இடம் வீணாகிறது.
 2. வேலை சீரோட்டத்தை தடுக்கிறது.
 3. அலுவலகத்தில் நடக்கின்ற பணிகளை கண்காணிக்க பல கண்காணிப்பாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆகையால் கண்காணிப்புப்பணி அதிக செலவீனமாகிறது.
 4. தனித்தனியான அலுவலகங்கள் கட்டுவது மிகவும் செலவை உண்டாக்குவதாகும்.
 5. போதுமான வெளிச்சத்தை ஏற்படுத்த அதிக செலவு செய்யவேண்டும்.
 6. அலுவலகத்தை தூய்மை செய்வது கடினமான பணியாகிறது
 7. அலுவலக இடவமைப்பு ஒரு கடினமான பணியாகிறது
 8. திறந்த அல்லது பொது அலுவலகத்தைவிட அதிக விலையுள்ள மனை அணையங்கள் தேவைப்படுகின்றன.
 9. கூடுதல் தகவல்தொடர்பு சாதனங்கள் ஒவ்வொரு அறைக்கும் தேவைப்படுகின்றன.
 10. பணியாளர்களும், செய்தி கொடுப்பவர்களும் தங்கள் நேரத்தை வீணாக்க நேரிடும். ஏனென்றால் ஒவ்வொரு அறையிலும் அதற்குரியவர் உள்ளார்களா என்று பார்க்கவேண்டும்.

க்யூபிகல்ஃபார்ம்ஸ் (Cubicle farms)

இடைநிலை மேலாண்மைப் பணியாளர்கள் அதிகமாக உள்ள நிறுவனங்கள் பணியாளர்களை நான்கு பக்கமும் மூடிய வடிவில் உள்ள இடவமைப்பில் பணியில் அமர்த்துகிறார்கள். அல்லது உச்சியைத் தொட்ட அல்லது தொடாத பிரிக்கும் தடுப்புகளால் பிரிவினை செய்கிறார்கள். ஒவ்வொரு தடுப்பிலும் ஒரு மேஜை, கணிணி, ப்ரிண்டர் மற்றம் தனிப்பட்ட தொலைபேசி வசதி உள்ளது. ஒரு தனிப்பட்ட பணியாளர் ஒரு தடுப்பில் அமர்கிறார். அல்லது சில நேரங்களில் இரண்டு அல்லது மூன்று பணியாளர்கள் ஒரு தடுப்பை ஆக்கிரமிக்கின்றனர்.

ஹாட்டெஸ்க் அல்லது இன்குபேட்டர் அலுவலக திட்டங்கள்

இன்குபேட்டர் அலுவலகங்கள் பல எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டுள்ளது. அவர்கள் ஒரு நிறுவனத்தில் தொடர்பானவர்களாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம். அவர்களுக்கு ‘ஹாட் டெஸ்க்” வசதி செய்யப்பட்டுள்ளது. இதில் இரண்டோ அல்லது அதற்கு மேலான பணியாளர்கள் அந்த அலுவலக இடத்தை ஒரு நாளில் பல நேரங்களையோ அல்லது ஒரு வாரத்தின் நாட்களில், சில நாட்களிளே பங்கு போட்டுக் கொள்கின்றனர். இன்குபேட்டர் மற்றும் "ஹாட் டெஸ்க்" ஏற்பாட்டின் மூலமாக அதிக எண்ணிக்கையிலான மக்கள், கொடுத்துள்ள அலுவலக இடத்தை பெரும்பான்மையாக பயன்படுத்திக்கொள்கின்றனர்.

குறுகிய காலத்திற்கு அலுவலகங்களை வாடகைக்கு எடுத்தல்

அடுத்த ஒரு நவீன முன்னேற்றமானது அலுவலகங்களை குறுகிய காலத்துக்கு வாடகைக்கு எடுப்பதாகும். இவைகள் அன்றாட வாடகைக்கும் மாதாந்திர குத்தகை அல்லது அதிக காலங்களுக்கும் தரப்படுகிறது. குறுகிய கால வாடகை அறைகள் அனைத்து சாதனங்களையும் கொண்டதோடு மட்டுமல்லாமல் அலுவலக மனை அணையங்களையும், இன்டர்நெட் மற்றும் ஃபாக்ஸ் இயந்திரங்களையும் கொண்டதாகும். உதவியாளர்கள் மற்றும் குரல் வழிச் செய்தி முறையும் இதில் அடங்கும். இவைகள் சிறிய வியாபாரத்துக்கும் மற்றும் பயணம் செய்யும் அதிகாரிகளுக்கும் ஏற்றதாகும். குறுகிய கால அலுவலகங்களின் ஒரு மாறுதல்தான் மெய்நிகர் அலுவலகங்கள். இவற்றின் மூலம் தொழில் செய்பவர்கள் வீட்டில் இருந்து கொண்டே தொழிலை நிறுவி எல்லாவற்றிலும் கலந்து கொண்டு சிறப்புத் தொழிலின் இருப்பினை உணர்த்துவதோடு பதில் தரும் சேவையையும் செய்கின்றனர்.

அலுவலகச் சூழ்நிலை

அலங்கரித்தல்

நல்ல நிறம் கொண்ட அலங்காரங்கள் அறையின் தோற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. மற்றும் அதில் வேலை செய்கின்றவர்களின் மனமும் சுறுசுறுப்படைகிறது. தெளிவான மற்றும் உற்சாகமான நிறங்கள் ஒரு இனிமையான சூழலை ஏற்படுத்தி நல்ல பணி செய்ய உதவுகிறது. நல்ல சூரிய வெளிச்சம் பெறும் அறைகள் மிதமான நிறங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட வேண்டும்.

திரைச்சீலைகள்

திரைச்சீலைகள் ஒரு அலுவலகத்தினுடைய பெருமைக்கு மேலும் பெருமையைச் சேர்க்கின்றன. இது பொதுவாக அதிகாரிகளின் அறைகளுக்கு பொருந்தும் இனிமையான சூழலை உருவாக்குவதுடன், திரைச்சீலைகள் சத்தங்களை கிரகிக்கின்றது. திரைச்சீலையின் நிறம் சுவர் நிறத்துடன் கலந்து அலங்களிப்பதோடு சில நேரங்களில் ஒரு மாறுதலான உயிர்ச்சூழலை அறையில் உருவாக்குகிறது.

இரைச்சல்

சத்தம் ஒரு நடுத்தரமான அலுவலகப் பணியாளரின் திறமையை பாதிக்கிறது. சோதனைகள் மூலமாக தெரிவிக்கப்படுவது என்னவென்றால் சத்தம் குறைவாக இருந்தால் பணியில் தவறுகள் குறைகின்றன. வேலையின் அளவு அதிகரிப்பதுடன் அதன் தரமும் உயர்கிறது. பணியாளர்களும் உடல் நலத்துடன் இருக்கின்றனர். சத்தத்தை குறைக்கும் பிரச்சினையானது ஒவ்வொரு அலுவலக மேலாளருக்கும் எளிதான பணியன்று. ஆனால் அதற்கு தகுந்த கவனத்தை அளித்தல் வேண்டும். அலுவலகத்தில் பெரும்பான்மை சத்தங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டதானது, ஆனால் இவற்றை ஆராய்ந்து அவற்றைக் குறைக்க முயற்சிகள் எடுத்தல் வேண்டும்.

வெளிச்சத்தம்

அலுவலக கட்டிடத்தை தேர்ந்தெடுக்கும் பொழுது மிக்க கவனத்துடன் சத்தத்தைக் குறைக்கும் வண்ணம் இருப்பது முதல்படியாகும். அலுவலக கட்டிடம் சாலையிலிருந்து சிறிது தூரம் இருப்பது நலம். மற்றபடி மரங்களல் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். குளிரூட்டும் வசதியுள்ள நகரத்தில் அமைந்துள்ள அலுவலகங்களில் சத்தத்தால் சுற்றுச்சூழல் மாசடைவது தடுக்கப்படுகிறது.

உள்சத்தம்

உள்சத்தப் பிரச்சினையை கட்டுப்படுத்துவது அலுவலக மேலாளின் கடமையாகும். இரைச்சல் மிகுந்த துறைகள் பிரிக்கப்பட்டிருக்க வேண்டும். அதற்காக கட்டிடத்தை நன்றாக திட்டமிடல் வேண்டும். ஒரு அலுவலகத்தில் சத்தமானது பளபளப்பான மற்றும் கடினமான மனை அணையங்கள், தரைகள் மற்றும் அவ்வப்பொழுது ஒலிக்கும் தொலைபேசிகள், இயந்திரங்களின் அலறல்கள், கலந்துரையாடல்கள், காலடி ஓசைகள் மேலும் கதவுகள் திறத்தல் மற்றும் மூடுதல் போன்றவற்றால் அதிகாமாகிறது.

காற்றோட்டம்

இது ஒரு பிரபலமான பிரச்சினையாகும் காற்றோட்டமில்லாத அலுவலகங்கள் சூடாகவும், அடைப்பாகவும் உள்ளன. இதனால் பணியாளர்களுக்கு சோர்வு மற்றும் கிறக்கம் போன்ற தொல்லைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் வேலை மெதுவாகவும் துல்லியம் இல்லாமலும் நடைபெறும் நிலை உருவாகிறது. ஒரு நல்ல காற்றோட்டத்தின் மூக்கிய தேவையாதெனில் நிலையான காற்றோட்ட வசதியினால், கிரக்கம் உருவாகாமல் சோர்வு நீக்கப்படுவதேயாகும்.

இயற்கை காற்றோட்டம்

ஜன்னல்கள் மூலம் கிடைப்பதுடன் அவை கூரைகளில் உள்ள திறப்பான்கள் மற்றும் வெளிப்புற சுவர்களில் உள்ள உள்குழல் திறப்பான்கள் மூலம் அதிகரிக்கிறது. செயற்கை காற்றோட்டம் மின்விசிறிகள் மூலமாகவும் குளிரூட்டிகள் மூலமாகவும் கிடைக்கிறது. அலுவலக இடவமைப்பு சுத்தமாகவும் தூய்மையாகவும் இருத்தல் வேண்டும். ஒரு தூய்மையற்ற அலுவலகம் இனிமையான பணியையும் மற்றும் பணியாளர்களின் உடல்நலத்தையும் பாதிக்கிறது.

தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

ஒரு அலுவலகத்தில் போதிய தீப்பாதுகாப்பு சாதனங்கள் இருத்தல் வேண்டும். தீ ஆபத்துகளில் இருந்து பாதுகாக்க சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

 1. தீ ஏற்பட்டால் வெளியில் வரக்கூடிய வாயில்களைக் தெரியப்படுத்த வேண்டும்.
 2. தீயை தடுக்கக்கூடிய சாதனங்களை உபயோகிக்க பணியாளர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும்.
 3. தீயை எதிர்க்கக்கூடிய வகுப்புகள் அவ்வப்பொழுது நடத்தப்பட வேண்டும்.
 4. புகையை கண்டுப்பிடிக்கும் சாதனத்தை அல்லது தானியங்கி தீ எச்சரிக்கை மணியடிக்கும் முறையை நிறுவவேண்டும்.
 5. சாம்பல் தட்டுக்களை கொடுப்பது மூலமாக சிகரெட்டுகளை பிடித்துவிட்டு குப்பைக் கூடைகளில் போடும் வழக்கம் தடுக்கப்படுகிறது.

நல்ல சூழ்நிலைகள் தரப்பட்டால் மக்கள் சரியான விதத்தில் நடந்து கொள்கின்றனர். அவர்கள் அவ்விடத்தை நல்ல முறையில் வைப்பதில் பெருமை கொள்கின்றனர். அலுவலகச் சூழ்நிலை, இட அமைப்பு, இடவசதி போன்றவற்றை வடிவமைக்கும் போதே பணியாளர்களை அது தொடர்ந்த நிகழ்வுகளில் ஈடுபடுத்துவோமானால், அவர்கள் அவற்றை நல்ல முறையிலும் சுத்தமாகவும் பேணுவார்கள் என்பது உறுதி. இதன் விளைவு பணியாளர்கள் ஒரு குழுவாகத் தங்கள் பணிகளை உற்சாகமாகவும், ஈடுபாட்டுடனும், மன ஒருமுகப்பாட்டுடனும் செயல்படுவதுடன் மேலாண்மைக்கும் பணியாளர்களுக்கும் பரஸ்பர நன்மையை உருவாக்குகின்றனர்.

ஆதாரம் : தேசிய திறந்த நிலைப்பள்ளி நிறுவனம்

Filed under:
2.85714285714
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top