பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / சுற்றுலா துறை / சுற்றுலாவின் சமூக, பொருளாதார விளைவுகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுலாவின் சமூக, பொருளாதார விளைவுகள்

சுற்றுலாவின் சமூக, பொருளாதார விளைவுகள் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இன்றைய உலகில் சுற்றுலா ஒரு பயன்மிகு தொழிலாக விளங்குகிறது. ஒரு நாட்டின் கண்ணுக்குத் தெரியாத ஏற்றுமதிப்பொருள்தான் சுற்றுலா. சுற்றுலா மூலம் ஒரு நாடு பல்வேறு வழிகளில் பயன்பெறுகிறது. சுற்றுலா மூலம் நாட்டின் தேசிய வருவாய் அதிகரிக்கிறது. இதனால் நாடு பொருளாதார வளர்ச்சியடைந்து பல துறைகளில் முன்னேறுகிறது. நாடு மட்டுமல்லாது தனிநபரும் பயன் அடைகின்றனர். சுற்றுலா பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த துறையாக இருப்பதுடன் சமுதாய முக்கியத்துவம் பெற்றுள்ளது. சமுதாயத்தில் பல மாற்றங்களை ஏற்படுத்துகின்றது. சமுதாய வளர்ச்சிக்கு பெரும் பங்கேற்கிறது. சமுதாய அமைப்பு முறையிலும், வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இங்கு சுற்றுலாவின் சமுதாய முக்கியத்துவத்தைப் பற்றி காண்போம்.

சுற்றுலாவினால் ஏற்படும் சமூக விளைவுகள்

தேசிய ஒருமைப்பாடு

சுற்றுலாவின் மூலம் தேசிய ஒருமைப்பாடு வளர்கிறது. ஜாதி வேறுபாடுகள், மத அடிப்படைவாதம், மொழி வேற்றுமைகள் ஆகியவை மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அமைதியைக் கெடுக்கின்றன. இப்படிப்பட்ட சமுதாயக் கேடுகள் காணப்படும் இந்தியா போன்ற நாடுகளில் சுற்றுலா வேற்றுமையில் ஒற்றுமையைப் பேணுகிறது. சுற்றுலா செல்லும் பயணி பிற மாநிலங்களில் வாழும் மக்களுடன் கூடிப்பேசி மகிழமுடிகிறது. வடமாநிலத்தவர் தென் மாநிலங்களுக்கும், தென் மாநில மக்கள் வடமாநிலங்களுக்கும் செல்லும் போது தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சி ஏற்படுகிறது. இதனால் தேசிய ஒருமைப்பாடு வலுவடைகிறது.

மகிழ்ச்சி அளிக்கிறது

சுற்றுலா மனிதனுக்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. அன்றாடம் உழைத்து, உழைத்து அலுத்துப் போன தொழிலாளிக்கு சுற்றுலா இன்பம் தருகிறது. தொழிற்சாலையிலுள்ள எந்திரங்களையே சந்தித்துக் கொண்டிருந்த தொழிலாளி சுற்றுலாவின் மூலம் புதிய சூழ்நிலையில் மகிழ்ச்சியடைகிறான். இயற்கையழகில் மனதைப் பறிகொடுக்கிறான். கவலைகளை மறந்து கடற்கரை மணலில் இன்பம் காண்கிறான். புத்துணர்ச்சி பெறுகிறான். இவ்வாறு மனிதரின் மனதுக்கு மன மகிழ்ச்சி தரும் சுற்றுலா மனிதனின் உடல் நலத்தையும் பேணுகிறது. இதனால் சமுதாயம் நலன் பெறுகிறது. சமுதாயத்தில் ஏற்படும் பல தீய விளைவுகள் இதனால் தடுக்கப்படுகிறது.

வாழ்க்கைத்தரம் உயர்கிறது

ஒரு நாட்டில் வெளிநாட்டு சுற்றுலா அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறது. உள்நாட்டுச் சுற்றுலா வருவாய் மாற்றத்தினை ஏற்படுத்துகிறது. மேலும் அதிக வேலை வாய்ப்பினை ஏற்படுத்துகிறது. இதனால் குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. அதிக வருமானம் கிடைப்பதால் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது. உதாரணமாக மதுரையை எடுத்துக் கொண்டால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு வருமானம் கிடைக்கிறது. சுற்றுலாப் பயணிகள் இல்லையென்றால் அவர்களுக்கு வருமானமும் இல்லை என்ற நிலை உள்ளது. எனவே சுற்றுலா மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தனி மனித அறிவு பெருகுகிறது

சுற்றுலாவினால் தனிமனித அறிவு பெருகுகிறது. பிற நாடுகளுக்கும், தனது நாட்டின் பிற பகுதிகளுக்கும் செல்வதால் சுற்றுலாப் பயணியின் பொது அறிவு வளர்ச்சியடைகிறது. பிற நாடுகளின் வரலாறு, பண்பாடு மற்றும் பொருளாதார நிலை பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. மனிதன் நவீன அறிவியல் முன்னேற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் அறிந்து கொள்கிறான். பழங்காலத்தில் பல அறிஞர்கள் பல இடங்களுக்குப் பயணம் சென்று வந்ததால் தான் தங்கள் அறிவை விருத்தி செய்து கொள்ள முடிந்தது. தனிப்பட்ட முறையாக நேரடியாகப் பார்த்து, கேட்டு தெரிந்து கொள்ளுவதால் அறிவு விருத்தியடைகிறது. இவ்வாறு சுற்றுலா மனிதர்களின் அறிவை விருத்தி செய்து கொள்வதற்கு பெரிதும் உதவுகிறது.

உலக அமைதி மற்றும் பன்னாட்டு ஒற்றுமை உணர்வு

சுற்றுலா பன்னாட்டு ஒற்றுமை உணர்வை வளர்க்கிறது. நமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை இன்முகத்தோடு உபசரித்து, நல்ல வசதிகளை அளித்து, அவர்களைச் சரியாகப் புரிந்துகொண்டு நட்புணர்வுடன் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்போது நெருங்கிய தொடர்பு ஏற்படுகிறது. தனிப்பட்ட நபர்களுக்கிடையே ஏற்படும் இந்த நெருங்கிய உறவுகள் நாளடைவில் அவர்களின் நாட்டின் பால் நட்புணர்வுகள் ஏற்படுகிறது. இதனால் நேசநாடுகளாகி உலக அளவில் பகைமை விரோதம் ஆகியவை ஒழிக்கப்பட்டு சர்வதேச அளவில் நிரந்தர அமைதி ஏற்பட வழிவகை செய்கிறது.

பண்பாட்டு பரிமாற்றம்

சுற்றுலாப் பயணிகள் நாகரிகம் பண்பாடு ஆகியவற்றை பிற மக்களிடம் பரப்புகிறார்கள். இதனால் இரண்டு மாறுபட்ட பண்பாடு கொண்டவர்கள் ஒன்று சேர்கிறார்கள். மற்றவர்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை அறிய மனிதன் முற்பட்டதனால்தான் சுற்றுலாவே தோன்றியது. சுற்றுலாப் பயணிகளிடம் பழமையான நாகரிகம், பண்பாடு, பண்பாட்டுச் சின்னங்கள் போன்றவற்றை அறிய வேண்டும் என்ற ஆவல் இருப்பதை அறியலாம். சுற்றுலாவினால் ஒரு நாட்டு நாகரிகம் இன்னொரு நாட்டில் பரவ வாய்ப்பு உள்ளது. அதே நேரம் அந்த நாட்டின் பழமை, பண்பாடு, நாகரிகம் போன்றவற்றை நிலை நிறுத்திக்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

கலை மற்றும் கிராமியக்கலை பேணிகாக்கப்படுகிறது

சுற்றுலா கலை மற்றும் கிராமியக் கலைகளைப் பேணிக்காப்பதற்கு உதவுகிறது. சுற்றுலாத்துறையானது நம் நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், கலைகள், கிராமியக் கலைகள் ஆகியவற்றைப் பேணிக்காக்கும் வகையில் கண்காட்சிகள், திருவிழா போன்றவைகளை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. இது போன்ற கலைக்கூடங்களில் இந்தியப் பண்பாட்டிற்கே உரித்தான நடனக்கலைகள், நாட்டியக்கலைகள், கிராமியக்கலைகள் இடம் பெறுகின்றது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றனர். இதனால் இந்தக்கலைகள் புத்துயிர் பெறுகின்றன. அழியாமல் பாதுகாக்கப்படுகின்றன. எனவே சுற்றுலா கலை மற்றும் கிராமியக் கலைகளைப் பேணிப் பாதுகாக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன

பொதுவாகச் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாட்டின் நாகரிகம், பண்பாடு, கலை ஆகியவற்றை வெளிப்படுத்தும் பழங்காலச் சின்னங்களைப் பார்க்க வேண்டும் என்பதிலேயே ஆவல் கொள்ளுகின்றனர். நினைவுச் சின்னங்களைப் பார்க்கும்போது அதனை உற்றுநோக்கி அதோடு கலந்துவிடுகிறார்கள். இதில் அவர்களுக்கு நிம்மதியும், திருப்தியும், புதிய உற்சாகமும் ஏற்பட்டு நல்ல அனுபவங்களைப் பெற்றுத் திரும்பிச் செல்கின்றனர். எனவே ஒவ்வொரு அரசும் தங்கள் நாட்டில் உள்ள பழங்காலக் கலை மற்றும் நினைவுச் சின்னங்களைப் பாதுகாக்க வேண்டியது அத்தியாவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இவ்வாறு சுற்றுலாவினால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

விலங்குகள் மற்றும் தாவர வகைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன

சுற்றுலாவினால் விலங்குகள் மற்றும் தாவரவகைகள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. வெளிநாட்டுப் பயணிகள் பல்வேறு காரணங்களுக்காக நமது நாட்டிற்கு வருகை புரிந்தாலும் இயற்கை வளங்களைக் கண்டு ரசிப்பதிலும், பல அரிய தாவர இனங்களையும் விலங்குகளையும் கண்டு உற்சாகம் அடைகிறார்கள். எனவே பறவை சரணாலயங்கள், வனவிலங்கு சரணாலயங்களை முறைப்படிப் பாதுகாப்பதிலும், இயற்கை எழில்களைப் பேணிப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்படுகிறது. முதுமலை விலங்குகள் சரணாலயமும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயமும், சிதம்பரத்திற்கு அருகிலுள்ள பிச்சாவரமும் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன. இது சுற்றுலாப் பயணிகளை அதகமாகக் கவர்கின்றன. இவ்வாறு சுற்றுலாவினால் வனவிலங்குகள் மற்றும் தாவரங்கள் பேணிப் பாதுகாக்கப்படுகின்றன.

இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது

சுற்றுலா இளைஞர்களை நல்வழிப்படுத்தி சரியான வழியில் அவர்களைச் செல்ல வைக்கிறது. இளைஞர்களின் சுற்றுலா, விளையாட்டு சுற்றுலா, துணிகர செயல் புரியும் சுற்றுலா ஆகியவை இளைஞர்களை ஒன்றாக பங்கேற்கச் செய்து அவர்களிடம் பொது நன்மைக்காக சேவை செய்யும் மனப்பான்மையை வளர்க்கிறது. தானாக முன்வந்து சேவை செய்தல், பங்கிட்டுக் கொள்ளுதல், வாழ்க்கையின் பல நிலைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், நாட்டின் சட்ட திட்டங்களுக்கும், நெறிமுறைகளுக்கும் மதிப்பளித்தல் போன்ற குண இயல்புகளை இளைஞர்களிடம் வளர்க்கிறது. இது நாட்டிற்கு பலத்தைக் கொடுக்கிறது. இவ்வாறு சுற்றுலாவானது இளைஞர்களை நல்வழிப்படுத்துகிறது.

இவ்வாறு சுற்றுலா சமுதாயத்திலுள்ள பல குறைகளைப் போக்கி சமுதாயத்தை மேம்பாடடையச் செய்கிறது. சுற்றுலா சமுதாயத்தில் நிலவும் மூடப்பழக்க வழக்கங்களை ஒழிக்கவும், சமுதாயக் குறைகளை நீக்கவும், புதிய நாகரிகத்தை உருவாக்கவும், உயர்ந்த நாகரிக வாழ்க்கை வாழவும் உதவுகிறது.

சுற்றுலாவினால் ஏற்படும் பொருளாதார விளைவுகள்

சுற்றுலாவும் வாணிகச் சமநிலையும்

ஒரு நாடு ஒரு குறிப்பிட்ட கால அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பும், பிற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களின் மொத்த மதிப்பும் சம அளவில் இருந்தால் அதனை நாம் பன்னாட்டு வாணிகச் சமநிலை என்கிறோம். அதேசமயம் ஏற்றமதிப் பொருட்களின் மொத்த மதிப்பு இறக்குமதிப் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் அதனை நாம் சாதகமான வாணிகச் சமநிலை என்கிறோம். அதற்கு மாறாக ஏற்றுமதிப் பொருட்களின் மதிப்பைக் காட்டிலும் இறக்குமதிப் பொருட்களின் மொத்தமதிப்பு கூடுதலாக இருப்பின் அதனை பாதகமாக வாணிகச் சமநிலை என்கிறோம்.

பொதுவாக வளர்ச்சியடைந்த நாடுகள் சாதகமான வாணிகச் சமநிலையையும், வளர்ந்துவரும் நாடுகள் பாதகமான வாணிகச் சமநிலையைக் கொண்டுள்ளன. பாதகமான வாணிகச் சமநிலையை விரைவில் சீர்செய்யாவிடில் நாட்டின் பொருளாதாரநிலை பாதிக்கப்படும். இதற்கு மிகவும் கைகொடுப்பது கண்ணுக்கு புலனாகாத ஏற்றுமதிகள் ஆகும். கண்ணுக்குப் புலனாகாத ஏற்றுமதிகளில் சுற்றுலா முக்கியமான இடம் வகிக்கிறது. சுற்றுலாவின் மூலம் அந்நிய நாட்டு பணவரும்படியைப் பெருக்கி பாதகமான செலுத்து சமநிலையைக் குறைக்கலாம். முடிந்தால் போக்கவும் செய்யலாம். ஏனெனில் சுற்றுலாவினால் வரும் வருவாய் ஏற்றுமதித் தொகையுடன் சேரும்.

சுற்றுலாவும் அன்னியச் செலவாணியும்

ஒரு நாட்டிற்கும் மற்றொரு நாட்டிற்கும் இடையில் நிலவும் அனைத்து தொடர்புகள் பற்றிய பதிவேடே 'அயல்நாட்டு செலுத்து சமநிலை' ஆகும். ஒரு நாட்டின் வாணிகச் சமநிலையும் கண்ணுக்குப் புலனாகாத பொருள்களின் வரவுகள் அனைத்தையும் கூட்டி பற்றுகளைக் கழித்துக் கொண்டால் செலுத்துதல் சமநிலை கிடைக்கிறது. அயல் நாட்டுப் பயணிகள் நம் நாட்டில் செலவிடும் பணம் புலனாகாத ஏற்றுமதியாகும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காகவும் உணவுக்காகவும் போக்குவரத்திற்காகவும், பொருட்களை வாங்கவும் செலவு செய்யும் தொகையானது அந்த நாட்டிற்கு அன்னியச் செலவாணியாகக் கிடைக்கிறது. இந்த அன்னியச் செலவாணி மூலம் பாதகமான வாணிகச் சமநிலையையும், பாதகமான செலுத்து சமநிலையையும் சமாளிக்க முடிகிறது. இந்த வகையில் சுற்றுலா மூலம் கிடைக்கும் வருவாய் ஒரு நாட்டிற்கு வரப்பிரசாதமாகவே உள்ளது. குறிப்பாக பாதகமான செலுத்துசமநிலையைக் கொண்டிருக்கும் பின் தங்கிய நாட்டின் சுமையைக் குறைப்பதில் சுற்றுலா முக்கியமானதோர் இடம் வகிக்கிறது.

சுற்றுலாவின் மூலம் அந்நிய செலவாணியை ஈட்டுவதில் இந்தியா இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்த துறையில் நமது அரசு குறைந்த பட்சத் தொகையை மூலதனமாக வைத்து அதிக அளவு லாபம் அடைகிறது. 1990-ம் ஆண்டு இந்தியா அந்நிய செலவாணியாக 2,103 கோடி ரூபாய் பெற்றது. 1991-ல் 2440 கோடியும், 1992 ல் 3,300 கோடியும், 1993-ல் 3900 கோடி ரூபாயும் பெற்றது. கி.பி 2000-ம் ஆண்டில் அந்நிய செலவாணியாக ரூபாய் 14,408.63 கோடி பெற்றது.

சுற்றுலாவும் தேசிய வருமானமும்

சுற்றுலா மூலம் ஒவ்வொரு நாடும் பல வழிகளில் வருமானம் பெறுகின்றன. பொருட்களை உற்பத்தி செய்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விற்பதைக் காட்டிலும் அதிகமான வருமானத்தைச் சுற்றுலாத்துறை தருகிறது. சுற்றுலா ஆய்வறிஞர்களான லிகோரிஷ், கெர்ஷா ஆகியோர் சுற்றுலா பற்றி கீழ்க்கண்டவாறு கூறுகிறார்கள். "சுற்றுலா முதலீடு ஏதும் தேவைப்படாத மிக எளிதான தொழில். ஒரு சமுதாயம் ஆண்டு முழுக்க ஒவ்வொரு நாளும் இரண்டு டஜன் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்க முடியுமானால் அது பொருளியல் வளர்ச்சியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர்கள் ஊதியப்பட்டியல்களைக் கொண்ட ஒரு புதிய தொழிற்சாலையைப் பெற்றுள்ளதற்கு ஒப்பாகும்” என்று கூறுகின்றனர்.

அரசாங்கம் சுற்றுலாத் துறையிலிருந்து நேர்முக வரி மற்றும் மறைமுக வரி மூலம் வருவாயைப் பெறுகிறது. சுற்றுலாத்துறை வளர்ச்சிப் பணிகள் மூலம் கிடைக்கும் வருவாய் நேர்முக வரி ஆகும். மறைமுகவரி என்பது பயணிகளுக்குச் சேவை செய்தோ, உபசரித்தோ கிடைக்கும் வருவாய் ஆகும். மறைமுக வரிகளை கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்: a) தங்கும் அறை மீதான வரி, b)உணவு மீதான வரி, சுற்றுலா சம்பந்தப்பட்ட தொழில் தொடங்குவதற்கான உரிமம் மூலம் பெரும் தொகை, d) நுழைவு வரி, சுங்கவரி, f) இறக்குமதி வரி, சொத்து பராமரிப்பு வரி, h)விமானத் தளங்களைப் பயன்படுத்துவதற்கான வரி போன்றவை ஆகும்.

பொருளாதார ஏற்றத்தாழ்வு குறைகிறது

சுற்றலா நாடுகளுக்கிடையே நிலவும் பொருளாதார ஏற்றத்தாழ்வை ஓரளவு குறைக்கிறது. பெரும்பாலும் பணக்கார நாடுகளைச் சேர்ந்த பயணிகள் பொருளாதாரத் துறையில் பின்தங்கிய நாடுகளுக்குப் பயணம் செய்கிறபோது அவர்களது பணம் பின்தங்கிய நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்தப் பயன்படுகிறது. சுற்றுலாவை வளர்ச்சியடையச் செய்வதன் மூலம் ஒரு நாடு பெருந்தொகையை நேரிடைவரி மூலமும் மறைமுகவரி மூலமும் பெறுகிறது. ஒரு நாடு எந்த அளவிற்கு அயல் நாட்டுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கிறதோ அந்த அளவிற்கு அந்த நாடு அந்நிய செலவாணியைப் பெறுகிறது. அந்த வெளிநாட்டுப் பயணிகள் எத்தனை நாள் தங்குகின்றனரோ, எவ்வளவு பொருட்கள் வாங்குகின்றனரோ அந்த அளவிற்கு பெற்று தேசிய பொருளாதாரத்தை உயர்த்த முடியும். இதனால் உலகநாடுகளுக்கிடையே காணப்படும் பொருளாதார ஏற்றத்தாழ்வு ஓரளவு குறைகிறது.

வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது

சுற்றுலாத்துறையானது சேவையை மையமாக வைத்து செயல்படும் தொழிற்கூடம் ஆகும். இதுவும் முழுக்க முழுக்க தொழிலாளர்களைக் கொண்டு செயல்படும் துறை ஆகும். இதில் பலதரப்பட்ட மக்கள் தங்கள் தகுதிக்கேற்ப பலவகையான வேலைவாய்ப்புகளைப் பெறுகிறார்கள். வேலையற்ற பட்டதாரிகள் சுற்றுலாவின் பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளார்கள். இவ்வாறு லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பைக் கொடுக்கும் சுற்றுலாத்துறை வேலை வாய்ப்பை வழங்கும் அமுதசுரபியாக உள்ளது. சொல்லப்போனால் சுற்றுலா மற்றுமோர் வேலை வாய்ப்பு நிறுவனமேயாகும். 1999-2000-ம் வருட கணக்குப்படி 15.5 மில்லியன் மக்கள் இந்தியாவில் சுற்றுலாத்துறை மூலம் நேரடி வேலை வாய்ப்பு வசதி பெற்றார்கள். சுமார் 12.3 மில்லியன் மக்கள் மறைமுக வேலைவாய்ப்பு வசதிகளைப் பெற்றனர். உலக பயண மற்றும் சுற்றுலா கழகத்தின் அறிக்கையின்படி 2010-ல் இந்தியாவில் 12.9 மில்லியன் மக்கள் நேரடி வேலை வாய்ப்பு பெருவார்கள்.

சுற்றுலாத்துறையில் முதலாளி முதல் பல வகையான தொழிலாளர் வரை எண்ணற்ற மக்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் நேரடித் தொழிலாளர்கள், மறைமுகத் தொழிலாளர்கள் என இரு பிரிவுகள் உள்ளன. சுற்றுலா முகவர், வழிகாட்டி, ஓட்டுநர், விற்பனையாளர், வரவேற்பாளர், இசைக்கலைஞர் நடனமாதர், கணக்கர், எழுத்தர், உணவு தயாரிப்போர், பரிமாறுவோர், மேலாளர், தகவல் தருவோர் போன்றவர்கள் நேரடியாக சுற்றுலாத்துறையில் பணிபுரிகின்றனர். இவர்களைத் தவிர ஆயிரத்துக்கும் மேற்பட்ட துணைச் சுற்றுலாத்துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளன. அவைகளில் வேலைபார்ப்போர் மறைமுகத் தொழிலாளர் ஆவர். நட்சத்திர ஹோட்டல்களின் கட்டுமானப் பொறியாளர்கள், தொழிலாளர்கள், பஸ், ரயில் விமானங்களில் பணிபுரியும் பல வகைத் தொழிலாளர்கள், புகைப்படம் எடுப்போர்,கைவினைப் பொருட்களை உற்பத்தி செய்வோர், விற்பவர்கள், கச்சாப் பொருள் விற்போர் போன்ற அனைத்துத் தொழிலாளர்களும் மறைமுகமாக சுற்றுலாத் துறையில் வேலை வாய்ப்பினைப் பெறுகிறார்கள்.

இவ்வாறு சுற்றுலா மூலம் தொழில் திறமை உள்ளவர்களும் திறமை இல்லாதவர்களும் வேலை வாய்ப்பினை பெறுகிறார்கள். சுற்றுலாத் துறைக்குள் அடங்கும் ஒவ்வொரு துறையும் மக்களுக்கு வேலை வாய்ப்பினை அளிக்கிறது

இவ்வாறு சுற்றுலா வேலை வாய்ப்பினை அளித்து நாட்டில் நிலவும் தொழில் உலகம் முழுவதும் 10 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

கைத்தொழில் வளர்ச்சி

சுற்றுலாவினால் தொழில்களும் கைத்தொழில்களும் வளர்ச்சியடைகின்றன. உள்ளூர் கைவினைப் பொருட்கள் புத்துயிர் பெற துணை புரிகிறது. பொதுவாகச் சுற்றுலாப் பயணிகளே அரிய கலைப்பொருட்களையும், பொம்மைகள், பைகள் போன்றவற்றை நினைவுப் பொருட்களாக வாங்கிச் செல்கின்றனர். இந்தியாவில் சுற்றுலாத் துறையினால் கைவினைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. தஞ்சை தலையாட்டி பொம்மைகள், தஞ்சை கலைத் தட்டுகள், கன்னியாகுமரியில் உள்ள கிளிஞ்சல் பொருட்கள், சந்தன மாலைகள், மூங்கில் கூடைகள், பனைஓலைத் தொப்பிகள் ஆகியவைகள் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளால் விரும்பி வாங்கப்படுகின்றன. இதனால் இத்தொழில்கள் நசித்துப் போகாமல் பாதுகாக்க முடிவதுடன் அந்தத் தொழில் செய்து அநேகக் குடும்பங்கள் பிழைப்பிற்கு வழி ஏற்படுகிறது.

சுற்றுலாத் துறையின் பன்முக விளைவு

சுற்றுலாவிற்கு பயணிகளின் வருகையால் பல்வேறு துறைகள் வளர்ச்சியடைந்து வருமானம் கிடைக்கிறது. இதனாலும் பொருளாதார வளர்ச்சி மேம்படுகிறது. அடிப்படை வசதிகளான சாலைப் போக்குவரத்து ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்து, மின்சார வசதி, தண்ணீர்வசதி, தரமான உணவு வசதி, கட்டிடப்பணிகள், அருங்காட்சியங்கள், கேளிக்கை விடுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்றவை குறைந்த மூலதனத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்காகத் தொடங்கப்பட்டு பல தரப்பட்ட துறைகளுக்கு இது அதிக லாபத்தைத் தருகிறது.

இவ்வாறு சுற்றுலா ஒரு நாட்டின் தேசியப் பொருளாதார வளர்ச்சிக்கு உரிய பங்கைச் செலுத்துகிறது என்பதை அறியலாம். நாட்டின் பல துறைகளிலும் சீரான வளர்ச்சி ஏற்பட்டு தேசிய வருவாய் உயர்கிறது. சுற்றுலாத் தொடர்புடைய பல்வேறு துறைகள் வளர்ச்சியடைவதுடன் மனித சக்தியும் வளர்ச்சியடைகிறது. முன்னேற்றமடையாத நாடுகளின் பொருளாதாரம் வலுப்படுத்துப்பட்டு வளர்ச்சியடைகிறது. அந்நிய செலவாணி அதிகமாகக் கிடைக்கிறது. எனவே சுற்றுலாத் துறையானது ஒவ்வொரு நாட்டிலும் அதிக பொருளாதார முக்கியத்துவம் பெற்று வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

சுற்றுலாவைத் திட்டமிடுதலும் மேம்படுத்தலும்

திட்டமிட்டுச் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும் வள்ளுவரும் 'எண்ணித் துணிக கருமம்' என்று கூறியுள்ளார் சுற்றுலாத் துறையைப் பொறுத்துவரை எக்காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் தோல்வியடையும் வளர்ந்து வரும் நாடுகள் சுற்றுலாவின் மேன்மையை அறிந்து, சுற்றுலாத் துறையை வளர்க்க முனைந்துள்ளன

உலகச் சுற்றுலா மாநாடு

1963-ம் ஆண்டு உரோமம் நகரில் ஐ.நா சபையின் உலகச் சுற்றுலா மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன: 1.வளர்ந்துவரும் நாடுகள் சுற்றுலாத்துறைக்கு அதிகமான முக்கியத்துவம் கொடுத்துச் சுற்றுலாத் துறையை வளர்க்க வேண்டும். 2.வளர்ந்து வரும் நாடுகள் ஐ.நா சபையின் சிறப்பு நிதியிலிருந்து நீண்டகாலத் தவணையிலும், குறுகியகாலத் திட்டத்திற்கும், குறுகியகாலத் திட்டத்திற்கும் கடன் பெறலாம். 3. உலகம் முழுவதும் சுற்றுலாச் செல்வோரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது. மக்கள் புதிய சுற்றுலா மையங்களுக்குச் செல்ல ஆர்வம் கொண்டுள்ளனர். எனவே ஒவ்வொரு நாடும் புதிய சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மலையேறுதல், குளிர்கால விளையாட்டுகள், மீன்பிடித்தல், வேட்டையாடுதல், கடற்கரைகள், மருத்துவக் குணமுள்ள நீறுற்றுகள், தேசியப் பூங்காக்கள், விளையாட்டுகள், பறவை விலங்குகளின் சரணாலயங்கள், தேசிய நினைவுச் சின்னங்கள், அந்நாட்டு மக்களின் பழக்கவழக்கங்கள், நாகரிகம், பண்பாட்டுச் சின்னங்கள், புனிதப் பயணம் மேற்கொள்ளல், திருவிழாக்கள், போட்டி விளையாட்டுகள் போன்றவற்றை மிகுதிப்படுத்தவேண்டும்.

வெற்றிபெறும் வழிகள்

 1. முன்னேற்பாடுகளுடன் செய்யப்படும் திட்டங்கள் வெற்றி பெறுகின்றன. அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படையில் திட்டமிட்டுச் சுற்றுலாத் துறையில் மேம்பாடு அடைந்துவரும் நாடுகளும், மேம்பாடு அடைந்த நாடுகளும் சில முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 2. வளர்ந்து வரும் நாடுகள் பணவருவாயைத் தராததும், மக்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காததுமான சுற்றுலா மையங்களை உருவாக்கக் கூடாது.
 3. ஒரு நாடு குழுச் சுற்றுலாவை வேகமாக ஊக்கப்படுத்தலாமா? என்பதைத் தீர்மானித்துச் செயல்படவேண்டும்.
 4. வட்டார, மாவட்ட, மாநில அளவில் சுற்றுலாவைப் பெருக்கினால் அது அந்நாட்டுப் பொருளாதார மேம்பாட்டுடன் ஒத்து வருகிறதா? என்பதை அலசி ஆராய வேண்டும்.
 5. சுற்றுலாவின் வளர்ச்சிக்காக அரசிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும், தனியாரிடம் கொடுக்கப்பட்ட பொறுப்புகளையும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
 6. சுற்றுலாவிற்காகச் செலவு செய்யப் பெற்ற உள்நாட்டுப் பணத்தையும், வெளிநாட்டுப் பணத்தையும் கணக்கிட வேண்டும்.
 7. உள்நாட்டுப் பணம் போதவில்லை என்றால் அயல்நாடுகளிலிருந்து கடன் வாங்கிக் கொள்ளலாமா? என்பதையும் தீர்மானிக்க வேண்டும்.
 8. சுற்றுலாத்துறை பிற துறைகளுக்குச் சமமாகப் பாவிக்கப் படுகிறதா? அல்லது சிறப்பு நிலை கொடுக்கப்பட வேண்டுமா? என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
 9. சுற்றுலாத் துறையை நீண்டகால முறையில் மேம்படுத்துவதா? அல்லது பொருளாதாரக் குறையை நிறைவு செய்யக் குறுகிய கால முறையில் மேம்படுத்துவதா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த திட்டம்

சுற்றுலாத்துறை ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவுகிறது. எனவே சுற்றுலாத் துறையைப் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து அமைக்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும், ஒரு நாட்டின் வளர்ச்சிக்காகத் திட்டமிடுவதும் ஒருங்கிணைந்து ஒத்துச் செல்ல வேண்டும். அனைத்துத் துறைகளும் ஒன்று சேர்ந்து சுற்றுலாவை வளர்க்க வேண்டும்.

முன்னேறும் நாடுகளில் சுற்றுலா

அண்மைக் காலம் வரை சுற்றுலா முன்னேறிய நாடுகளுக்குரியது என வரையறுக்கப்பட்டது. முன்னேறும் நாடுகளும் சுற்றுலாவின் சிறப்பை அறிந்து சுற்றுலாவை விரிவுபடுத்த விரும்பின. சில நாடுகள் சுற்றுலாவின் தொழில் நுணுக்கம் அறியாமல் அத்துறையில் இறங்கிவிட்டன. சூரிய வெளிச்சமும் கடற்கரையுமே சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நினைத்து ஏமாந்தன. அச்சமயத்தில் பொருளாதார வளம் குன்றிய நாடுகளுக்கு உதவ முன்வந்தன. சில நாடுகள் சுற்றுலா வசதிகளைப் பெற்றிருந்தும், அவற்றை மேம்படுத்த முடியாத நிலையில் இருந்தன. பணக்கார நாடுகளுக்குத் தொலைவில் உள்ள நாடுகளும், இயற்கைக் காட்சிகள் அற்ற நாடுகளும், நல்ல தட்பவெப்பம் இல்லாத நாடுகளும் சுற்றுலாவை வளர்க்க முடியாது. உலகில் மெக்சிகோவும், துனிசியாவும் சுற்றுலாவினால் பல நன்மைகளைப் பெற்றுள்ளன. அந்நாடுகள் முன்னேற்பாட்டுடன் திட்டமிட்டுச் செயலாற்றியதால், சுற்றுலாத்துறையில் வெற்றி அடைந்தன.

மாநில அரசின் ஒத்துழைப்பு

திட்டமிடுதல் என்பது கொடுக்க கூடிய பொருள்களையும், மூலங்களையும் மதிப்பீடு செய்து அவற்றின்மீது ஏற்படும் தேவையை அறிதலாகும். சுற்றுலாத் துறையில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபடுவதால், அவற்றை ஒருங்கிணைத்துச் செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டிலுள்ள தேசிய சுற்றுலாக் கழகத்தின் வழியாகச் சுற்றுலாவை மேம்படுத்துகின்றது. தங்கள் நாட்டின் புவியியல் நிலைக்கேற்பவும், தங்கள் நாட்டின் வரவு செலவுத் திட்டத்திற்கேற்பவும், தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்பவும் திட்டமிட வேண்டும். பிரான்சு நாடு லாங்கோடிக்-ரவுசிலியன் திட்டத்தில் அம்முறையைக் கையாண்டு வெற்றி பெற்றுள்ளது. ஓரிடத்தை மேம்படுத்த அம்மாநில அரசின் ஒத்துழைப்பு, முதலீடு, புதியன புனையும் திறன் போன்றவை தேவை. வளர்ந்து வரும் நாடுகளில் மாநில அரசின் ஒத்துழைப்பே சுற்றுலா வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணியாக அமையும்.

சுற்றுலாப் பயணியின் தேவை வழங்கலின் மதிப்பீடு

ஒரு சுற்றுலா மையத்தைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் சேகரிக்க வேண்டும். மேலும் அச்சுற்றுலா மையத்தின் வளர்ச்சிக்குரிய வழிவகைகளை ஆராயவேண்டும். சுற்றுலாத்துறை பின்தங்கியிருப்பதற்கான காரணம், அதைப் பற்றிய முழுமையான செய்திகள் கிடைக்காமையே ஆகும். செய்திகளைச் சேகரிப்பதும், புள்ளி விவரங்களைக் கணக்கிடுவதும் முக்கியமான வேலையாகும். ஒவ்வொரு நாளும் சேகரிக்கும் புள்ளி விவரங்கள் சுற்றுலா வளர்ச்சிக்குப் பயனுள்ளதாக இருக்க வேண்டும். தேவை, வழங்கல், திட்டமிடுவதற்கு முன்னோடியாக இருக்கும். சுற்றுலாப் பயணிகளைக் கவருவதற்கு ஒரு நாடு மேற்கொண்டுள்ள அனைத்து முயற்சிகளையும் விளம்பரப்படுத்தவேண்டும். சுற்றுலாத் துறையை விரிவாக்க முடியாது.

பீட்டரின் விதிமுறைகள்

சுற்றுலாத்துறையை மதிப்பீடு செய்து வளர்ப்பதற்கு பீட்டர் என்பவர் சில விதிமுறைகளை வகுத்துத் தந்துள்ளார். 1. நாடு முழுவதும் சுற்றுலாப் பயணிகளைக் கவரும்படி திட்டம் தீட்டவேண்டும். எனவே சுற்றுலா மையங்கள் சுற்றுலாவினால் ஏற்படும் நன்மைகளை நாடு முழுவதும் பெற வேண்டும். 2.சில குறிப்பிட்ட மையங்களை நீண்ட காலத்திற்கு ஏற்ற முறையில் சிறப்பாக மேம்படுத்த வேண்டும். குறிப்பிட்ட பருவத்திற்கு மட்டும் ஏற்ற முறையில் அமைக்காமல் ஆண்டு முழுவதும் பயணிகளைக் கவரும்படி அமைக்க வேண்டும். எளிதாகவும், விரைவாகவும், சிறப்பாகவும் மேம்படுத்தக் கூடிய இடங்களை முதலில் விரிவுபடுத்திச் சுற்றுலா மையங்களாக்க வேண்டும்.

ஏற்கனவே இருக்கின்ற கருவிகளைக் கொண்டும் மிகக் குறைந்த முதலீடு செய்தும் அவ்விடங்களை மேம்படுத்த வேண்டும். ஒரே மாதிரியான சுற்றுலா மையங்களை நாடு முழுவதும் ஏற்படுத்தாமல், வெவ்வேறு வகையான சுற்றுலா மையங்களை உருவாக்க வேண்டும். ஒரே நேரத்தில் எல்லாச் சுற்றுலா மையங்களையும் மேம்படுத்த முடியாது. சுற்றுலா மையங்கள் பயணிகளுக்கு இன்பமளிக்கும் முறையில் அமைய வேண்டுமேயல்லாமல், திட்டமிடுபவர்களுக்காகச் சுற்றலா மையங்களை உருவாக்கப்பட்டது. திட்டமிடுபவர்கள் மன நிறைவுக்காக ஒரு சுற்றுலா மையத்தை உருவாக்கினால், அது தோல்வி அடையக்கூடும். ஒரு சுற்றுலா மையத்தின் சிறப்புகளைப் பயணிகளே அனுபவித்துத் தீர்ப்பளிக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகள் புதிய காட்சிகளைக் காண விரும்புகின்றனர்: புதிய அனுபவங்களைப் பெற விரும்புகின்றனர்: வீர சாகசங்களைச் செய்ய விரும்புகின்றனர். சுற்றுலாப் பயணிகளின் விருப்பத்தை அறிந்து, அவர்களது தேவையை நிறைவு செய்தால் மிகுதியான சுற்றுலாப் பயணிகளைக் கவரலாம்.

உள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் கவரும்படி சுற்றுலா மையங்கள் அமைய வேண்டும். உள்நாட்டுப் பயணிகளையும், வெளிநாட்டுப் பயணிகளையும் தடுக்கும் தடைக் கற்களை நீக்கவேண்டும்.

 • குறிக்கோளை வரையறுத்தல்
 • குறிக்கோளை வரையறுத்தல்,
 • இடங்களைத் தேர்ந்தெடுத்தல்,
 • தேவையான வசதிகள்,
 • துணை ஈர்ப்புச் சக்திகள்,
 • இடத்தின் தன்மையும் கட்டுப்பாடும்,
 • வரவுசெலவு திட்டம்,
 • தேவையான சட்டத் திட்டங்கள்

போன்றவற்றை மதிப்பீடு செய்து நோக்கங்களை வரையறுக்க வேண்டும். அதன்பின் விரிவான திட்டமிடும் பொழுதும் முழுமையாக முடிக்க முடியாத பொழுதும் பகுதி பகுதியாக முடிக்கலாம். சுற்றுலா இடங்களை மேம்படுத்துதல், அவ்விடத்திற்குச் செல்கின்ற சாலை வசதிகளை மேம்படுத்துதல், மக்கள் வசதியாகத் தங்குவதற்குரிய கட்டிடங்களைக் கட்டுதல் போன்றவற்றில் மிகுதியான கவனம் செலுத்தவேண்டும்.

ஒரு நாட்டின் பல்வேறு முனைகளிலும் சுற்றுலா மையங்களை உருவாக்குவது நல்லது. நாட்டின் பொருளாதார வளம் கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் நாட்டின் பண்பாடு, நாகரிகம் போன்றவை வளரும்படி பார்த்துக் கொள்ளவேண்டும். சுற்றுலா மையங்களில் பெரும் தொழிற்சாலைகளை இல்லாமல் இருத்தல் நலம் பயக்கும். மிகுதியான மக்கள் வாழும் இடங்களையும் சுற்றுலா மையங்களாக்காமல் இருத்தல் நலம்.

பணம் செலவழித்தல்

 • ஒரு சுற்றுலா மையத்தை மேம்படுத்துவதற்கும், நன்முறையில் செயல்படுத்துவதற்கும், சுற்றுலாவின் அகத்துறைக்கும், புறத்துறைக்கும் பணம் செலவழிக்க வேண்டும்.
 • ஒரு திட்டத்தினால் ஏற்படும் நன்மைகளை மனத்திற்கொண்டு, அதற்கு ஆகும் செலவுகளை மதிப்பீடு செய்ய வேண்டும். இடமும், செயலாக்கப் பயன்படுத்தும் உத்திகளும் மனித சக்திக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
 • எவ்வகை மூலக்கூறுகளுக்கு முதலிடம் தர வேண்டும்? எவ்வளவு பணம் செலவழிக்க வேண்டும்? செலவழிக்கும் திறன் போன்றவற்றை மனத்திற் கொண்டு திட்டமிட வேண்டும்.
 • சுற்றுலாத்துறையில் வளர்ந்த நாடுகள் சுற்றுலாவிற்காக மேலும் பணம் செலவழிப்பது எளிது. ஆனால் வளர்ந்து வரும் நாடுகளில் சுற்றுலாவிற்காக மிகுதியான பணம் செலவழிப்பது கடினம். ருஷ்யா, போலந்து, யுகோசு லேவியா, பிரான்சு, இத்தாலி போன்ற நாடுகளில் அரசும் தனியார் நிறுவனங்களும் சுற்றுலாவின் வளர்ச்சிக்கு முதலீடு செய்துள்ளன.
 • பொதுவுடைமை நாடுகளைத் தவிரப் பிற நாடுகளில் அரசு முதலில் முதலீடு செய்யும். அதன் பின் தனியார் நிறுவனங்கள் துணை முதலீடு செய்ய விரும்பும்.

ஒரு நாடு தனியார் நிறுவனங்களைச் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யத் தூண்ட வேண்டுமானால்

 1. குறைந்த விலையில் கச்சாப் பொருள்களை வழங்குதல்,
 2. வரிச் சலுகை அளித்தல்,
 3. வட்டிச் சலுகை வழங்குதல்
 4. நிலங்களை வாங்குவதற்குச் சிறப்புரிமை அளித்தல் போன்ற சலுகைகளை வழங்கவேண்டும்.
 5. சில சமயங்களில் வெளிநாட்டு நிறுவனங்களும் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்யவிரும்பும்.
 6. அதற்கு ஏற்றாற் போல் சட்டதிட்டங்களைத் திருத்தவேண்டும். பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளே வெளிநாட்டுப் பணத்தை விரும்பும்.

மனித சக்தியைப் பயன்படுத்துதல்

 • சுற்றுலாத்துறை வெற்றிபெறத் தொழில் நுணுக்கமும் திறமையும் வாய்ந்த அலுவலர்கள் தேவை. ஆரம்ப காலத்தில் சுற்றுலாத்துறையில் பயிற்சி பெற்ற நிபுணர்கள் இருக்கவேண்டும். சுற்றுலாத் துறையில் பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. அந்தந்தத் துறையில் சிறப்புப் பயிற்சி பெற்றவர்களையே அந்தந்தப் பணிகளில் அமர்த்த வேண்டும். சுற்றுலாத்துறை வளரும் பொழுது அதற்கு ஏற்றாற்போல் பயிற்சி பெற்ற நிபுணர்களும் மிகுதியாக இருக்கவேண்டும்.
 • யார் யாருக்கு எவ்வகைப் பயிற்சி அளிக்கவேண்டுமோ, அவர்களுக்கு அவ்வகைப் பயிற்சியை அளிக்கவேண்டும். தொழிலில் ஆர்வமும், தொழில் நுணுக்கத்தில் ஆழ்ந்த புலமையும் பெற்றிருக்க வேண்டும். பெருமை, நெகிழும் தன்மை, மற்றவர்களுடன் ஒத்துப்போதல், எதையும் நடுநிலையில் இருந்து ஆராய்தல் போன்றவை சுற்றுலா ஆர்வத்தினால் உண்டாகக் கூடியவையாகும். ஒரு துறையை நடத்துதல்,நிருவகித்தல், நிதி நிலையைச் சமாளித்தல், உணவு, பானங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்தல், பகிர்ந்தளித்தல், பணியாளர்களை மேற்பாவையிடல், பொது நிருவாகம், திட்டமிடல், புள்ளி விவரங்களை ஆராய்தல் போன்றவை தொழிற்திறமையின் பாற்படும்.
 • சுற்றுலாத் துறைக்கு எத்தனை பேர் தேவை? என்பதை முதலில் புள்ளி விவரம் சேகரிக்க வேண்டும். அதற்கு முதலில் என்னென்ன வேலைகள் உள்ளன? அவ்வேலைகளைச் செய்வதற்குரிய பணியாட்களின் தகுதி என்ன? ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பணியில் மட்டும் ஈடுபடுத்த வேண்டுமா? பிற பணிகளிலும் ஈடுபடுத்தலாமா? என்பன போன்ற திட்டங்கள் தீட்ட வேண்டும். சான்றாகச் சமையற்காரரை உணவு பரிமாறச் சொல்லலாமா? ஊர்தி ஓட்டுநரைத் தோட்டவேலை செய்யச் சொல்லலாமா? என்பன போன்றவற்றைத் தீர்மானிக்க வேண்டும். எதிர் காலத்தில் என்னென்ன பணிகளுக்கெல்லாம் ஆட்கள் தேவைப்படும்? என்பதற்கும் திட்டம் போடவேண்டும். பணிகளைச் சிறப்புறச் செய்வதற்குப் பணியாளர்களுக்குத் தேவையான கல்வியும், பயிற்சியும் அளிக்கவேண்டும். அப்பயிற்சியை உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ அளிக்கலாம். பணியாளர்களுக்கு எளிய பயிற்சியை உள்நாட்டிலும், சிறப்புப் பயிற்சிகளைத் திறமைமிகு வெளிநாடுகளிலும் தீர்மானிக்க வேண்டியது அத்துறை வல்லுநர்கள் ஆவர். வெளிநாட்டு வல்லுநர்களையும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இந்தியாவில் பணியாற்றச் சொல்லலாம்.

நிருவாக அமைப்பு

ஒரு துறை முன்னேற அதன் நிருவாக அமைப்பு திறமையாகச் செயல்பட வேண்டும். சுற்றுலாத் துறை வளர்வதற்கு அதன் நிருவாக அமைப்புகள் செம்மையாகச் செயல்பட வேண்டும். நிருவாகம் பல்வேறு பணிகளையும் திட்டமிட்டுச் செய்யவேண்டும். பலநாடுகளில் சுற்றுலாத் துறையை நிருவாகம் செய்யத் தனி அலுவலகங்கள் உள்ளன. ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பிற்கேற்பச் சுற்றுலாத்துறை அரசிடம் இருக்கலாம் அல்லது தனிக் கழகமாகச் செயல்படலாம். அரசின் அனுமதியுடனும், ஆதரவுடனும், பண உதவியுடனும் தனியார் நிறுவனங்களும் அதனை நடத்தலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top