பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / சுற்றுலா துறை / சுற்றுலாவில் சந்தை இயல் – ஓர் கண்ணோட்டம்
பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுற்றுலாவில் சந்தை இயல் – ஓர் கண்ணோட்டம்

சுற்றுலாவில் சந்தை இயல் – ஓர் கண்ணோட்டம்

அறிமுகம்

ஒவ்வொரு மனிதனின் மனதிலும் புதிய இடங்களைப் பார்ப்பதற்கும், அதற்காகப் பயணம் செய்வதற்கான விருப்பமும் எப்பொழுதும் இருந்து வரும் ஒன்றாகும். நாளுக்கு நாள் அந்த விருப்பம் மக்களிடம் வளர்ச்சியடைந்தும் வரும். எனவே சுற்றுலா செல்லக்கூடிய விருப்பம் மக்களிடம் இருப்பதால் சுற்றுலாத் துறையில் சந்தையியலின் ஒரு தூண் என்று கருதப்படும் 'நுகர்வோரின் விருப்பம்' என்பது இருப்பதாக நாம் கருதிக் கொள்ளலாம். சந்தையில் இருக்கின்ற உற்பத்தியாளர்களின் பொருட்களை ஒரு மனிதர் விரும்பலாம் அல்லது விரும்பாமலும் இருக்கலாம். ஆனால் சுற்றுலாவிலோ, சுற்றுலா செல்லும் விருப்பமானது எல்லா மனிதர்களிடத்திலும் எப்பொழுதும் இருந்து வருவதாகும். எனவேதான் சுற்றுலாவை சந்தையாக்குவதற்கும், பிற பொருள்களை சந்தையாக்குவதற்கும் பல வேறுபாடுகள் உள்ளன.

சுற்றுலாத் துறைக்கும் பிற துறைகளுக்கும் உள்ள வேறுபாடுகள்

சுற்றுலாத் துறைக்கும் பிற துறைகளுக்கும் கீழ்க்கண்ட வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 1. சுற்றுலாத்துறையில் 'நுகர்வோர்களான' பயணிகள் 'பொருள்களான' சுற்றுலா மையங்களைத் தேடிச் செல்கின்றனர். அதாவது நுகர்வோர்களே இடம் பெயர்வர், பொருள்கள் இடம் பெயராது. ஆனால் பிற துறைகளில் பொருள்கள் நுகர்வோரைச் சென்றடைகின்றன.
 2. சுற்றுலாத்துறையில் பொருள்கள் நீண்டகால விற்ப்பனை பொருளாகவே உள்ளன. ஆனால் பிற துறைகளில் குறுகியகால விற்பனைப்பொருள், நீண்டகால விற்பனைப்பொருள் என்று இரண்டாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
 3. சுற்றுலாத்துறையில் பொருள் விற்பனையில் பயணமுகவர்கள், பயண நிறுவனங்கள், வழிகாட்டிகள் போன்றோர் இருக்கின்றனர். ஆனால் மற்ற துறைகளிலோ மொத்த விற்பனையாளர்கள், இடைத்தரகர்கள் சில்லரை விற்பனையாளர்கள் போன்றோர் இருக்கின்றனர்.
 4. சுற்றுலாத்துறையில் சுற்றுலா செல்லும்போது புதிய இடங்களைக் கண்டுகளிக்கலாம். இயற்கையான சூழ்நிலைகளை அனுபவிக்கலாம். மனங்கவரும் சுற்றுப்புறச் சூழ்நிலைகளால் திருப்தியடையலாம். ஒரு சில நூல்கள், போட்டோக்கள் போன்றவைகளையே நேரில் காட்டலாம். சுற்றுலா துறையில் விற்பனையாகும் அனைத்துமே 'மனநிறைவுதான்', இதை கண்ணால் காணலாம். சில பொருட்களை திரும்பவும் விற்கமுடியும்.
 5. சுற்றுலாத்துறையில் பயணியே 'நுகர்வோர்' ஆவார். அவருக்கு பணத்துடன் நேரம், உடல்நலம் ஆகியவையும் தேவை. ஆனால் பிறதுறைகளில் பணமே முக்கிய பங்கு வகிக்கிறது. வாங்குவோரே நுகர்வோராக இருக்கவேண்டிய அவசியமில்லை .
 6. சுற்றுலாவில் வாகனங்களில் பயணம் செய்வதும், அதற்காகச் செலவு செய்வதும் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே சுற்றுலா செல்வது என்பது எல்லோருக்கும் கட்டாயம் அல்ல. ஆனால் பிற துறைகளில் உள்ள பொருட்கள் நம்வாழ்க்கைக்குத் தேவைப்படுகிறது. அந்தப் பொருள்களை கட்டாயம் நாம் வாங்கியாக வேண்டும்.

இவ்வாறு சுற்றுலாவானது பிறதுறைகளை விட பலவிதத்தில் வேறுபட்டுள்ளது. எனவே சுற்றுலாவைச் சந்தைப்படுத்துதல் சிறிது கடினமான காரியமாகும். நுகர்வோரின் தேவை, மனநிலை, விரும்பு வெறுப்பு ஆகியவையே சுற்றுலாவை சந்தைப்படுத்த பயன்படுகின்றன. சுற்றுலா சந்தை இயல் பற்றிய விளக்கம் பின்வருமாறு.

"குழு அல்லது தனிப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் திருப்தி உத்தமநிலை அடைவதற்கு பன்னாட்டு, தேசிய மற்றும் பிராந்திய சுற்றுலா நிறுவனங்களால் தொடர்ச்சியான சுற்றுலா வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்படும் முறையான ஒருங்கிணைந்த முயற்சிகளே சுற்றுலா சந்தை இயல் ஆகும்”.

சுற்றுலா பொருள்

பொருள் என்பது விற்பனையாளர் விற்க வைத்திருப்தையும், வாங்குகின்றவர் வாங்கக் கூடியதையும் குறிக்கிறது. வாங்குகிறவர்களின் உடலுக்கும் உள்ளத்திற்கும் திருப்தியளிக்கும் மொத்த தன்மையே 'பொருள்' எனப்படும்.

சுற்றுலாப்பொருளின் அடிப்படை மூலப்பொருள்களாக உள்ளவை ஒரு நாட்டின் இயற்கை அழகு, தட்பவெப்பநிலை, வரலாறு, பண்பாடு மற்றும் மக்கள் ஆகியவைகளாகும். மேலும், சுகமான வாழ்க்கைக்குரிய மின்சாரம், தண்ணீர் வசதி, போக்குவரத்து, செய்தித் தொடர்பு, பொழுதுபோக்கு மற்றும் தங்கும் வசதிகள் ஆகியவையும் சுற்றுலா பொருளில் அடங்கும். இவ்வாறு சுற்றுலாவுடன் தொடர்புடைய பிற வசதிகளும் சிறப்பாக இருந்தால் மட்டுமே சுற்றுலாவை சந்தைப்படுத்த முடியும். சுற்றுலா மையமும், சுற்றுலா சேவையும் சேர்ந்து செயல்பட்டால் மட்டுமே சுற்றுலாவை வளர்க்க முடியும்.

"நுகர்வோருக்குத் திருப்தியளிக்கக்கூடிய ஒரு நாட்டின் சுற்றுலா இடக்கவர்ச்சி, போக்குவரத்து, தங்குமிடம், மகிழ்ச்சியளித்தல் ஆகியவற்றின் மொத்த தொகுப்பே சுற்றுலா பொருள் ஆகும்.”

எனவே இடக்கவர்ச்சி, சுற்றுலா மையத்தில் காணப்படும் வசதிகள் எளிதாக அந்த இடத்திற்குச் சென்றடையும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் சுற்றுலா பொருளை நாம் ஆய்வு செய்ய முடியும்.

சுற்றுலா சந்தைகள்

சந்தை இயலைப் பின்பற்றும் எந்த ஒரு நிறுவனமும் தனது பொருளுக்கான சந்தையைக் கண்டறிவது மிகமுக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இதுவே முதல் நடவடிக்கையுமாகும். சுற்றுலா சந்தையானது சுற்றுலா பொருள்களின் தொடர்புடனே கண்டறியப்படலாம். உதாரணமாக பூகோளரீதியாக கண்டறியலாம். வாடிக்கையாளரை கவரக்கூடிய ஒரு நாடு, வட்டாரம் அல்லது நகரத்தின் சேவை மற்றும் மையங்களை சந்தையாகக் கருதலாம்.

சந்தைப்பிரிவு

சந்தைப்பிரிவு என்பது பலதரப்பட்ட தன்மைகளைக் கொண்ட முழுச்சந்தையை வெவ்வேறு வாங்கும் விருப்பம் அல்லது தேவைகளின் அடிப்படையில் ஒரே தன்மையுடைய சிறுசந்தைகளாக அல்லது பிரிவுகளாகப் பிரிப்பது ஆகும். இப்படிப் பிரிப்பதால் சந்தையின் தேவைக்கு ஏற்ப பொருட்களையும் மேம்பாட்டு முறைகயையும் சரி செய்ய வழி ஏற்படுகிறது. சந்தைத் திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த முடிகிறது.

பொதுவாக சந்தை பிரிவானது பூகோள ரீதியாகவும், மக்கள் சார்ந்த பிரிவாகவும், உளவியல் ரீதியான பிரிவாகவும் பிரிக்கப்படுகிறது.

சுற்றுலாவில் சந்தைப் பிரிவானது மிகவும் முக்கியமானதாகும். எனவே நல்ல குண இயல்புகளின் அடிப்படையில் நடைமுறையிலுள்ள சாத்தியமான சந்தையை பிரித்து அதன்பிறகே அந்த சந்தைகளின் மேம்பாட்டிலும் அளிப்பிலும், சேவைகளுக்கான விலையை நிர்ணயம் செய்தலிலும் கவனம் செலுத்துவது சுற்றுலாவைச் சந்தைப்படுத்துவதில் மிகமுக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. சுற்றுலா சந்தை இயலில் சுற்றுலா சந்தையானது கீழ்க்கண்ட நான்கு பெரிய பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

அவை

 1. மக்கள் தொகை அடிப்படையிலான சந்தை பிரிவு
 2. பூகோள அமைப்பு ரீதியிலான சந்தை பிரிவு
 3. உளவியல் ரீதியான சந்தை பிரிவு
 4. சமுதாய மற்றும் பொருளாதார அடிப்படையிலான சந்தை பிரிவு ஆகியவையாகும்.

மேற்கண்ட இந்த நான்கு பெரிய பிரிவுகள் தவிர விடுமுறை, சுற்றுலா பயணி, வணிக சுற்றுலா பயணி, பொதுநல சுற்றுலா பயணி என்ற மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். எல்லா இடங்களிலும் காணப்படும் விடுமுறை சுற்றுலா பயணியர் விலையில் ஏற்படும் மாற்றங்களாலும், திறமையாக மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்துதல் முயற்சிகளாலும் எளிதில் பாதிக்கப்படும் தன்மை கொண்டவர்கள். எனவே விடுமுறை சுற்றுலா சந்தையானது நிரந்தரமற்றது. மாறும் தன்மை கொண்டது. வாணிக சுற்றுலா பயணியின் எண்ணிக்கை தற்காலத்தில் அதிகரித்துள்ளது. அவரது வேலை அல்லது வாணிபத்தின் அடிப்படையில்தான் அவர் தேர்தெடுக்கும் சுற்றுலா மையம் அமைகிறது. எனவே வாணிகச் சுற்றுலா சந்தையானது விலை நெகிழ்ச்சியற்ற தன்மை கொண்டது. நகரங்களையே மையமாகக் கொண்டது. மாநாடுகள், கூட்டங்கள், பொருட்காட்சிகள் ஆகியவையே இம்மாதிரியான வணிக சுற்றுலாவைக் கவரும் நிகழ்ச்சிகளாகும். உறவினர் வீடுகளுக்கும் நண்பர்களின் வீடுகளுக்கும் செல்லும் பயணிகளே பொதுநலச் சுற்றுலாப் பயணிகளின் பிரிவில் சேர்வர். இவர்கள் அதிகநாள் தங்கினாலும் ஹோட்டல் போன்ற விடுதிகளில் தங்குவதில்லை. நண்பர்களின் வீடுகளிலேயே தங்குவர். இவ்வாறு சுற்றுலா சந்தையானது பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா சந்தை இயலின் சிறப்புத்தன்மைகள்

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஜெட் விமானங்கள் கண்டுபிடிப்பதற்குப் பிறகு சுற்றுலா வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்தது. அதுவும் இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் சுற்றுலா பொருளை விற்பதற்கான சந்தை முறை மூலமே வாடிக்கையாளர்களின் தேவையைக் கண்டறிந்து பின் அந்த தேவைகளை திருப்தி செய்வதன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை உருவாக்க முடிகிறது. எனவே சுற்றுலாவில் சந்தைப்படுத்துதலின் முக்கிய நோக்கம் வாடிக்கையாளர்களை ஒரு சுற்றுலா மையத்தின்பால் கவர்தலும், வரத்தூண்டுதலுமே ஆகும். எனவேதான் வாடிக்கையாளர்களின் தேவைகளை மதிப்பிட்டு அந்த தேவைகளின் அடிப்படையில் அவர்களுக்கான வசதிகளையும், சேவைகளையும் அதிகரித்துக் கொள்வதிலிருந்துதான் சுற்றுலா சந்தை இயலே தொடங்குகிறது.

சுற்றுலா சந்தை இயலின் சிறப்புக் கூறுகள்

 1. சுற்றுலா என்பது ஒரு வடிவமற்ற பொருளாகும். அதனை ஒருவரிடமிருந்து மற்றவருக்கு மாற்றிக் கொடுக்க முடியாது.
 2. சுற்றுலா சேவையின் உற்பத்தியும் நுகர்வும் ஒன்றோடொன்று தொடர்புடையது. வாடிக்கையாளர் இருந்தால்தான் உற்பத்தியே நடைமுறைக்கு வருகிறது
 3. சுற்றுலா பொருளானது பல உற்பத்தியாளர்களால் ஒன்று சேர்க்கப்படுவதேயாகும். அதாவது சுற்றுலா பொருளானது ஒரு விமானத்திலுள்ள இருக்கையோ, விடுதியிலுள்ள தங்கும் அறையோ, ரயில் இருக்கையோ, சுற்றுலா மையமோ அல்ல. இவை அனைத்தும் சேர்ந்ததே சுற்றுலா பொருளாகும்.
 4. சுற்றுலா பொருளுக்கான தேவையானது நிலையற்றது. காலநிலை, பொருளாதாரம், அரசியல் நிலை ஆகியவை சுற்றுலாவுக்கான தேவைகளைப் பாதிக்கும் காரணிகளாகும். நிலையற்ற அரசியல் நிலை பொருளாதார சீர்கேடு தேவையை வெகுவாகப் பாதிக்கின்றன.
 5. சுற்றுலா பொருளில் இடைத்தரக்களின் பங்கு மேலோங்கியுள்ளது. பயண ஏற்பாடு செய்பவர்கள், முன்பதிவு செய்து கொடுப்பவர்கள், பயண முகவர்கள், வழிகாட்டிகள் ஆகியோர்கள் சுற்றுலா சந்தையில் முக்கிய இடம் வகிக்கிறார்கள். சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்கள் தீட்டுவதிலும், கொள்கைகள் வகுப்பதிலும், சேவை முறைகளை நிர்ணயிப்பதிலும் இந்த இடைத்தரகர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள்.
 6. சுற்றுலா பொருளை நுகர்வதற்கு பல வகைப்பட்ட செயலூக்கங்கள் செயல்படுகின்றன.

சுற்றுலா வழிகாட்டிகள்

சுற்றுலா செல்லும் பயணிகளுக்கு வழிகாட்டியாக செல்பவரே சுற்றுலா வழிகாட்டி ஆவார். சுற்றுலாவின் வெற்றியும், பயணிகளின் திருப்தியும் முழுக்க முழுக்க வழிகாட்டியின் பொறுப்பின்தான் உள்ளது. பொதுவாக சுற்றுலாப் பயணிகளுக்கு தாங்கள் செல்லும் சுற்றுலா மைங்களின் சிறப்பைப் பற்றியோ அதன் வரலாறு பற்றியோ எதுவும் தெரியாது. எங்கே தங்குவது, எப்படிச் செல்வது, எங்கே பொருட்களை வாங்குவது என்பது பற்றி எதுவுமே தெரியாது. எனவே சுற்றுலாப் பயணிகளுக்கு அவர்கள் செல்லும் சுற்றலா மையங்களின் சிறப்பைப்பற்றி அவர்களது மொழியில் அவர்களுக்குப் புரியும் படியாக எடுத்துரைப்பவரே சுற்றுலா வழிகாட்டியாவார். இந்த சுற்றுலா வழிகாட்டிகள் எல்லா அனுவமும், திறமையும் பெற்றவராக இருக்க வேண்டும். உள்நாட்டு சூழ்நிலை வெளிநாட்டுச் சூழ்நிலைகளைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும். இந்த சுற்றுலா வழிகாட்டிகளை உள்நாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டிகள், வெளிநாட்டுப் பயணிகளுக்கான வழிகாட்டிகள் என்று இரு பிரிவாகப் பிரிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் சுற்றுலா வழிகாட்டிகள் தங்களுக்கென்று தனிசங்கம் ஒன்று வைத்துள்ளார்கள். இதில் இந்திய சுற்றுலாத்துறையின் அனுமதிபெற்ற 1500 வழிகாட்டிகள் உறுப்பினராக உள்ளனர். இவர்கள் தங்கள் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஒரு அன்னிய மொழியைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் 82 வழிகாட்டிகள் உள்ளார்கள். இவர்களில் 16 பேருக்கு ஜெர்மன் மொழி, 9 பேருக்கு பிரெஞ்சு மொழி, 5 பேருக்கு ஜப்பான் மொழி, 4 பேருக்கு இத்தாலிய மொழி, இரண்டு பேருக்கு ரஷ்யன், இரண்டு பேருக்கு ஸ்பானிஷ், ஒருவருக்கு அராபிக் மொழி பேசத் தெரியும்.

சுற்றுலா வழிகாட்டிகளுக்குத் தேவையான பண்புகள்

சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கென்று அளிக்கப்படும் தனிப்பயிற்சி பெற்று அரசின் அங்கீகாரம் பெற்ற வழிகாட்டியாக இருக்க வேண்டும். வழிக்காட்டிக்குரிய உரிமமும் பெற்றிருக்கவேண்டும். அப்போதுதான் அவர் பயணிகளுக்கு உண்மையான வழிகாட்டியாக செயல்பட முடியும். ஒரு நல்ல வழிகாட்டியாக திகழ ஒருவர் கீழ்க்கண்ட பண்புகளைப் பெற்றிருக்கவேண்டும்.

சுற்றுலா மையங்களைப் பற்றி பூரண அறிவு

வழிகாட்டிகளுக்கு சுற்றுலா மையங்களைப்பற்றிய எல்லா தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும். பயணம் செல்ல இருக்கின்ற சுற்றுலா மையத்தில் வரலாறு, சிறப்பு அம்சங்கள், பார்க்க வேண்டிய இடங்கள், வாகன வசதிகள், தங்கும் வசதிகள் ஆகியவை பற்றிய அறிவு வழிகாட்டிக்கு இருக்க வேண்டும். சுற்றுலா மையத்தின் உள்ளூர் கலாச்சாரம், மக்களின் பழக்கவழக்கங்கள், அந்த மையத்தின் சமுதாய அமைப்பு, பொருளாதார நடவடிக்கைகள், பயணிகள், எளிதாக வாங்குவதற்கான பொருட்கள் கிடைக்கும் இடங்கள் ஆகியவைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். உதாரணமாக மைசூரிலுள்ள திப்புசுல்தான் அரண்மனைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் சென்றால், பயணிகளுக்கு திப்புசுல்தானின் வரலாறு, அரண்மனைக்கட்டப்பட்ட காலம், திப்புசுல்தானுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்கள், திப்புசுல்தான் கொல்லப்பட்டது போன்ற அனைத்து விபரங்களையும் தெரிவிக்க முடியும். பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களின் முக்கியத்துவத்தைக் கேட்டு மகிழ்ச்சியடைவர்.

இனிய பேச்சுத்திறன்

சுற்றுலா வழிகாட்டிகளுக்கு இருக்க வேண்டிய அடுத்த முக்கியமான பண்பு இனிய பேச்சுத்திறன் ஆகும். பயணிகளுக்கு தான் சொல்ல நினைப்பதை இனிமையாகவும், தெளிவாகவும் பேசக்கூடிய திறன் பெற்றிருக்கவேண்டும். இன்முகத்துடன் பேசவேண்டும். சொல்லவேண்டிய செய்திகளைச் சுருக்கமாக சொல்லவேண்டும். முன்னுக்குப்பின் முரணாகப் பேசக்கூடாது. பயணிகளின் மனநிலை அறிந்து பேசவேண்டும். வேகமாக பேசாமல் நிதானமாகப் பேசவேண்டும். கோவில்களைப் பற்றியும், சிற்பங்கள், ஓவியங்களைப் பற்றியும் பேசும் போது உயர்வான நல்லமொழி நடையில் பேசவேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடாது. பயணிகளுக்கு சொல்லப்படும் அறிவிப்புகளும் அறிவுரைகளும் கூட இனிமையான வேண்டுகோளாக இருக்க வேண்டும். மேலும் நகைச்சுவையுடன் பேசினால் பயணிகள் சந்தோஷமடைவர்.

நல்ல தோற்றம்

வழிகாட்டி நல்ல தோற்றப் பொலிவுடன் இருக்க வேண்டும். வழிகாட்டி முதலாவதாக நல்ல உடல் நலம் உள்ளவராக இருக்கவேண்டும். அப்போதுதான் களைப்படையாமல் பயணிகளை நீண்டதூரம் கூட்டிச்செல்ல முடியும். கிடைக்கிற இடங்களில் தண்ணீர் மற்றும் உணவுகளை ஏற்றுக் கொள்ளக்கூடிய திடகாத்திரமான உடல் நலம் தேவை. அடுத்து வழிகாட்டி நல்ல தரமான, சுத்தமான உடைகளை அணிந்திருக்கவேண்டும்.

வெளிநாட்டுப் பயணிகளை அழைத்துச் செல்லும்போது அவர்கள் விரும்பும் உடைகளை அணிந்து கொண்டால் அந்த பயணிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். வழிகாட்டி பெண்ணாக இருந்தார் கவர்ச்சியாக உடை அணியலாம். ஆனால் ஆபாசமாக உடை அணிதல் கூடாது. அதேநேரம் நமது பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாக உடையணியவேண்டும்.

அடுத்து, வழிகாட்டி நல்ல தோற்றப் பொலிவுடன் அழகாக இருக்கவேண்டும். நல்ல நிறமாக இருந்தால் மேலும் நல்லது. நல்ல உயரமாகவும் முகலட்சணமாகவும் இருக்கவேண்டும். ஏனெனில் வழிகாட்டிகள் பேசும்போது பயணிகள் வழிகாட்டிகளையே பார்க்கின்றனர். எனவே வழிகாட்டிகள் தோற்றப் பொலிவுடனும் கவர்ச்சியான கண்களை கொண்டும் இருக்கவேண்டும்.

இது தவிர வழிகாட்டிகள் சிரித்த முகத்துடன், சுறுசுறுப்புடனும் இருக்கவேண்டும். வழிகாட்டியின் பழக்கவழக்கங்கள், நாகரிகம், உடை நடவடிக்கைகள், மற்றவர்களுடன் கலந்து பழகும் முறை ஆகியவைகள் பயணிகளை கவரும் தன்மையுடையதாக இருக்கவேண்டும். சுற்றுலா வழிகாட்டியின் இனிய பண்பும், நல்ல நடவடிக்கைகளும் வெளிநாட்டுப் பயணியரை மகிழ்விக்கும் என்பதில் சந்தேகமில்லை

குரல்வளம்

சுற்றுலா வழிகாட்டிகள் குரல்வளம் பெற்றிருக்க வேண்டும். மென்மை, வலிமை குழைவு, அன்பு, தெளிவு போன்றவை வழிகாட்டியின் குரலில் ஏற்றம் இறக்கம் தகுந்த இடங்களில் கொடுக்க வேண்டும். சொற்களின் இடமறிந்து கருத்தறிந்து பயணிகளின் பண்பறிந்து அழுத்தமாகவும் மென்மையாகவும் பேசவேண்டும். குரல்வளம் கொண்ட வழிகாட்டிகள் வெற்றிகரமான வழிகாட்டிகளாகத் திகழ்வர்.

நினைவாற்றல்

சுற்றுலா வழிகாட்டிக்கு நல்ல நினைவாற்றல் இருக்கவேண்டும். ஒரு இடத்தைப் பற்றிய செய்தியை இன்னொரு இடத்தில் போய் சொல்லக்கூடாது. உதாரணமாக பல கோவில்களைப் பற்றியும் அக்கோவில்களின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சிறப்புத்தன்மை ஆகியவை பற்றி தெரிந்து வைத்திருப்பர் வழிகாட்டி. ஆனால் மறதியின் காரணமாக ஒரு கோவிலைப் பற்றிய தகவல்களைச் சொல்லிக் கொண்டிருக்கும்போது மற்றொரு கோவிலைப் பற்றிய தகவலை சேர்த்து சொல்லிவிடக்கூடாது. மேலும் ஒரு இடத்தைப் பற்றி விளக்கிக் கூறும்போது அதோடு தொடர்புடைய பல இடங்களையும் ஞாபகமாக கூறினால் பயணிகள் மனமகிழ்ச்சியடைவர். இது வழிகாட்டிகளைப் பற்றிய நல்லெண்ணத்தைப் பயணிகளிடத்தில் ஏற்படுத்தும். சொல்லக்கூடியவைகளை முறையாகவும், தெளிவாகவும், வரிசைக்கிரமாகவும், ஒரு சிறு செய்தியைக்கூட விட்டுவிடாமலும் சொல்ல வேண்டும். அதே நேரம் ஒன்றுக்கென்று தொடர்பில்லாத செய்திகளைச் சொல்லிவிடக் கூடாது. எனவே சுற்றுலா வழிகாட்டி நல்ல நினைவாற்றல் கொண்டவராக இருக்கவேண்டும்.

பன்மொழிப் புலமை

சுற்றுலா வழிகாட்டிகள் பல மொழிகளில் புலமை பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் பலமொழிகள் பேசும் மக்கள் உள்ளனர். எனவே வழிகாட்டி ஒரு மொழி மட்டும் தெரிந்திருந்தால் போதாது. உதாரணமாக சென்னையிலுள்ள ஒரு வழிகாட்டி குறைந்தபட்சம் மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் போன்ற மொழிகளை அறிந்திருக்கவேண்டும். அப்போதுதான் சுற்றலா பயணிகளின் விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்ற முடியும். மேலும் பிற வெளிநாட்டு மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன், ரஷ்யன் மற்றும் ஜப்பானிய மொழிகளையும் தெரிந்தவராக இல்லாவிட்டாலும், அந்த மொழிகளில் உரையாட மட்டுமாவது அல்லது முக்கியமான சொற்களுக்கு அர்த்தம் தெரிந்து வைத்திருந்தாலாவது போதும். அயல் நாட்டினருக்கு அவர்களது மொழியில் பேசுவது நிச்சயமாக சந்தோஷத்தை அளிக்கும்.

பல்துறை அறிவு

சுற்றுலா வழிகாட்டிற்கு நல்ல தோற்றமும், குரல் வளமும், மொழித் திறனும் மட்டும் இருந்தால் போதாது. இலக்கியம், வரலாறு, புவியியல், கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, உளவியல், அறிவியல், நாட்டுப்புறக் கலைகள் போன்றவற்றிலும் ஓரளவு புலமை இருக்கவேண்டும். கட்டிடக்கலையும், சிற்பக்கலை வளர்ச்சியும் பற்றித் தெரியாத ஒரு வழிகாட்டி தமிழ்நாட்டுக் கோவில்களைப் பற்றி பயணிகளுக்கு விளக்கிக் கூறமுடியாது.

மிருக்காட்சி சாலை, பறவைகள் சரணாலயம், பூங்காக்கள் ஆகியவற்றையும் பயணிகளுக்குக் காண்பிக்க வேண்டியதிருப்பதால் பறவைகள், விலங்குகள், தாவரங்கள் பற்றிய அறிவும் வழிகாட்டிக்கு அவசியம் தேவை. மேலும் நாட்டின் அரசியல் நிலை, பொருளாதார நிலை, மக்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் ஆகியவை பற்றிய அறிவையும் சுற்றுலா வழிகாட்டி பெற்றிருக்க வேண்டும். இவ்வாறு எல்லாத் தகவல்களையும் வழிகாட்டி பயணிகளிடம் கூறும்போது பயணிகள் சந்தோஷமடைவதுடன் தேவையான  தகவல்களையும் பெற்றுக்கொள்கின்றனர்.

ஆதாரம் : இந்தியா சுற்றுலா வளர்ச்சிக் கழகம்

3.42857142857
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top