பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / அரசு முதலீடுகளும், மானியம் மற்றும் கடன்களும்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசு முதலீடுகளும், மானியம் மற்றும் கடன்களும்

அரசு முதலீடுகளும், மானியம் மற்றும் கடன்களும் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

அரசு பங்கு மூலதனத்தில் முதலீடு செய்யும்பொழுது, பங்குமூலதன பதிவேட்டில் அரசுக்கு உரிய இடம் ஒதுக்கப்படவேண்டும். பங்குசான்றிதழ் உடனடியாக வழங்கப்படவும் ஆவன செய்யவேண்டும். பங்கு மூலதனத்தை அரசுக்கு திருப்பிச்செலுத்தும் காலத்தை சரியாக கண்காணித்து உரிய நேரத்தில் பணத்தை அரசு கருவூலத்தில் செலுத்த தவறக் கூடாது. இதே போன்று அரசு மானியம் பெறப்பட்ட காரியத்திற்கு மட்டுமே செலவிடப்படுவதையும் அவ்வாறு செலவு செய்தமைக்கு சரியான, முறையான கணக்குகளை மானியம் வழங்கும் விதி முறைகளில் சொல்லப்பட்டதுபோல், பணியாளர்கள் பேணிவருகிறார்களா என்பதையும் உறுதி செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல் அரசுக்கடன்கள் மற்றும் பிரத்தியேக நிதி உதவிகளை கோரிப்பெறும்போது ஒவ்வொரு விதமான கடனுக்கும் குறிப்பிடப்பட்ட நெறிமுறைகள் மற்றும் வழிமுறைகள் தவறாது கடைப்பிடிப்பதை கண்காணிக்க வேண்டும். அங்ங்ணம் பெறப்பட்ட கடன், கோரிய காரணத்திற்காக மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்துகொண்டு பயன்பாட்டுச் சான்றிதழ் வழங்க வேண்டும். திருப்பிச் செலுத்தும் கால அளவினையும் அதற்குண்டான வட்டியையும் கண்காணித்து உரிய காலத்தில் அரசு கருவூலத்தில் தொகையை திருப்பி செலுத்த ஆவன செய்ய வேண்டும். அவற்றிற்கான உரிய பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும். அரசிடமிருந்து பல்வேறு திட்டங்களின் கீழ் பெறப்படும் மானியம், நிதி உதவி, கடன் வசதிகள் தவறாக பயன்படுத்தப்பட்டால் அல்லது விதி முறைகள் மீறப்பட்டால் அது கடுமையான குற்றமாகக் கருதப்பட ஏதுவாகும்.

எனவே தங்களின் மேலான கவனம் இந்த வகை நிதி பயன்பாட்டின் கீழ் பெரிதும் வேண்டப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் பிற கூட்டுறவு நிறுவனங்களின் நிதி உதவிகள் சங்கம் ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை கட்டுப்பாட்டிலுள்ள எந்த நிதி நிறுவனத்திடமிருந்தும் கடன் பெறலாம் என சட்டப் பிரிவு 136-D (7) ல் குறிப்பிட்டிருந்தாலும், சங்கம் உறுப்பினராய் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்தே கடன் பெறுவதுதான் உசிதமானது. மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து குறுகிய கால, மத்தியகால, நீண்டகால கடன்கள் மற்றும் மறு நிதி உதவி பெறும்போது எந்தெந்த காரியங்களுக்காக கடன்கள் மற்றும் நிதி உதவி கோரப்படுகிறதோ அந்தந்த காரியங்களுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்தப்படுவதையும், அவைகளுக்குண்டான வட்டி விகிதங்கள் திரும்பச்செலுத்தும் கால அளவு ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு வகை கடனும் திரும்பச் செலுத்தும் காலம் வரும்பொழுது தாங்களாகவே முன்கூட்டியே நிதி வசதிகளைப் பொறுத்து அத்தகைய கடன்களை திரும்ப செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்படும் நிதி உதவி மூலம் பெறப்படும் கடன்களை உறுப்பினர்களுக்கு முறையாக வழங்கி அவற்றை அந்தந்த கேட்பு காலங்களில் வசூலித்தால் மட்டுமே, மத்திய வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி உதவியை உரிய காலத்தில் செலுத்த இயலும், மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெறப்பட்ட கடனை உரிய தவணை தேதியில் செலுத்த தவறினால் மீண்டும் நிதி உதவி மத்திய கூட்டுறவு வங்கியிலிருந்து பெறுவது தடைப்படும். காசுக்கடன் வசதியைப் (Cash Credit) பொறுத்தவரை (உதாரணமாக உரம், பொது விநியோகம், நகைக்கடன் ஆகியவற்றுக்கான காசுக் கடன்கள்) அவை பெறப்படும்பொழுது மத்திய வங்கி கடன் வழங்கு ஆணையில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளை அந்த நிதியைக் கையாள்வதில் தவறாது கடைப்பிடிக்க வேண்டும். இத்தகைய நிதியினை கையாளும்பொழுது தக்க சரக்கு இருப்பினையும் மற்றும் பிற ஆதார இருப்பினையும் உறுதி செய்து கொள்வதோடு, இருப்புக் குறைவு அல்லது ஆதாரக்குறைவு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இருப்புக் குறைவு அல்லது ஆதாரக்குறைவு ஏற்படும்போது அதனை ஈடுசெய்யவும் ஏற்பாடு செய்ய வேண்டும். அத்தகைய இருப்புக்குறைவு மற்றும் ஆதாரக்குறைவிற்கு காரணமான பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க தவறவோ, தயங்கவோ கூடாது. நிதி செலவினம் சங்கத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்திற்கு நேரடியாக தொடர்பில்லாத காரியங்களுக்கு சங்க நிதி செலவிடக் கூடாது. ஆனால், அடியில் குறிப்பிட்டுள்ள காரியங்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு செலவு செய்யலாம்.

விழாக்களுக்கு செலவிடுதல்

விதி 85 இன்படி ஒரு தொடக்க கூட்டுறவு சங்கம் ஆண்டு விழா, திறப்பு விழா, கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசால் அறிவிக்கை செய்யப்பட்ட இதர விழாக்களுக்கு கீழ்க்காணும் சில நிபந்தனைகளுக்குட்பட்டு ரூ.30,000/-க்கு மிகாமல் செலவினங்களை மேற்கொள்ளலாம். அதற்கும் மேலாக தொகை செலவு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால் சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதி பெறவேண்டும்.

நிபந்தனைகள்

  • ஆண்டு விழாக்களுக்கு செய்யப்படும் செலவானது முந்தைய 3 ஆண்டுகளில் சங்கம் அடைந்த சராசரி நிகர இலாபம் அல்லது தணிக்கை அலுவலரால் வெளியிடப்பட்ட சமீபத்திய நிதிநிலைப்பட்டியலின்படி நிகர இலாபம் இதில் எது அதிகமோ அதில் 25% க்கு மேலாக இருத்தல் கூடாது.
  • திறப்பு விழா அல்லது அடிக்கல் நாட்டு விழாவுக்கு செய்யப்படும் செலவானது உத்தேசிக்கப்பட்ட கட்டடத்தின் அல்லது திட்டத்தின் மதிப்பில் 1% க்கு மேலாக இருத்தல் கூடாது.
  • கட்டடம் அல்லது திட்டம் சம்பந்தப்படாத தொடக்க விழாவுக்கு செய்யப்படும் செலவானது முந்தைய ஆண்டின் வியாபார மூலதனம் அல்லது வியாபார வரவு செலவு இதில் எது அதிகமோ அதில் ஒரு விழுக்காட்டின் பத்தில் ஒரு பங்குக்கு அதிகமாகக் கூடாது.
  • ஆண்டு நிறைவு விழா அல்லது அரசால் அறிவிக்கப்பட்ட இதர விழாக்கள் நீங்கலாக இதர சந்தர்ப்பங்களில் படத்திறப்பு விழாக்களுக்கு ஒரு முறைக்கு ரூ.1500/-க்கு மேல் எந்த செலவினமும் செய்தல் கூடாது.
  • கூட்டுறவுச் சங்கங்கள் விதிகளில் விதி 86இன்படி எந்த சங்கமும் வியாபாரத்தை வளர்ச்சியடைய அல்லது முன்னேற்றமடையச் செய்வதற்கன்றி வேறு எந்த காரணத்திற்காகவும் விளம்பரங்களில் செலவு செய்தல் கூடாது.
  • ஆண்டு குறிப்பேடு, நாட்குறிப்பேடு அல்லது அன்பளிப்பு பொருட்கள் ஆகியவற்றின் மூலமான விளம்பரங்களில் சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதியில்லாமல் செலவு செய்தல் கூடாது.
  • அரசு அங்கீகரிக்கப்பட்ட பட்டியலில் இடம் பெறாத நாளேடு அல்லது பத்திரிக்கைகள் அல்லது வெளி மாநிலங்களின் வெளியீடுகளில் சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதியின்றி விளம்பரங்கள் வெளியிடுதல் கூடாது.
  • எந்த விளம்பரமும், எந்த வேறு சங்கத்தால் அல்லது வேறு நபர்களால் வெளியிடப்படும் நினைவு மலர் அல்லது அது போன்ற வெளியீடுகளில் அல்லது எந்த பத்திரிக்கையின் இணைப்புக்கு வெளியீட்டு செலவுக்கு பொறுப்பேற்றல் ஆகியவை சங்க துணைப்பதிவாளரின் முன் அனுமதியின்றி வெளியிடுதல் கூடாது.
  • சங்க விவகார எல்லையில் நடைபெறும் விழாக்கள், பொருட்காட்சிகள், விளையாட்டுகள் போன்றவை நடைபெறும் போது பெயர்ப்பலகை, விளம்பர பலகை வளைவுகள் வைத்தல், மின் விளக்கு அமைத்தல் ஆகியவற்றிற்கு ரூ.1000/-க்கும் மிகாமல் ஒருமுறைக்கு செலவு செய்யலாம். அதற்கு மேலும் செலவு செய்ய வேண்டின் சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதி பெறவேண்டும்.

நிதிமுதலீடு

சங்கத்தின் நிதிகளை சங்கம் உறுப்பினராய் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் மட்டுமே முதலீடு செய்திடல் உசிதமானது.

சங்கத்திற்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்தல் (விதி 73)

சங்கத்திற்குத் தேவையான, அதனால் உபயோகப்படுத்தப் போகும் உபகரணங்கள் அல்லது பொருட்களை அவற்றைத் தயாரிக்கும் கூட்டுறவு சங்கம், சங்கம் தயாரிக்கவில்லையெனில், நுகர்வோர் கூட்டுறவு சங்கம், அல்லது அரசு துறை, அல்லது அரசு நிறுவனம், ஆகியவை தவிர வேறு எந்த நபரிடமிருந்தும் கொள்முதல் செய்யக் கூடாது.

எனினும் அந்த உபகரணங்கள் அல்லது பொருட்கள் நுகர்வோர் கூட்டுறவு சங்கத்திலோ அல்லது அரசுத்துறையிலோ அல்லது அரசு நிறுவனத்திலோ கிடைக்கப் பெறாத போது ரூபாய் பத்தாயிரம் மதிப்புக்கு மிகாமல் வெளிச்சந்தையில் இருந்து கொள்முதல் செய்யலாம். சங்கம் அதனுடைய அச்சிடும் வேலைகளை மாவட்டத்திலுள்ள பதிவாளர் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவு அச்சகம் அல்லாத வேறு எந்த நபரிடமும் வழங்கக்கூடாது.

சங்கத்தின் அசையா சொத்துக்கள்

விதி 78() ன்படி, சங்கத்தின் பேரில் அசையா சொத்துக்கள் வாங்குதல் அல்லது குத்தகைக்கு எடுத்தல் எதுவும் மண்டல இணைப்பதிவாளரின் எழுத்தாலான முன் அனுமதியின்றி கூடாது.

விற்பனை செய்தல் விதி 783) ன்படி, நிறைவேற்று மனு நடவடிக்கை மூலமான விற்பனையின் போது வாங்கப்பட்ட சொத்து நீங்கலாக, சங்கத்தின் அசையா சொத்தினை பேரவை மற்றும் மண்டல இணைப்பதிவாளரின் எழுத்தாலான முன் அனுமதியின்றி விற்பனை செய்தல் கூடாது.

உபயோகித்தல் : அ) விதி 87()ன்படி, சங்கத்தின் அசையா சொத்துக்களை அல்லது சங்க வளாகத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சங்க வியாபாரம் அல்லது இதர கூட்டுறவு நடவடிக்கைகளுக்கு அல்லாதவற்றிற்கு சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதி இல்லாமல் உபயோகிக்கவோ அல்லது உபயோகப்படுத்துவதை அனுமதிக்கவோ கூடாது.

ஆ) சங்கத்தின் அசையா சொத்தினை அல்லது வளாகத்தினை அரசியல் நடவடிக்கைகளுக்காக உபயோகிக்க அல்லது உபயோகப்படுத்துவதற்கு எந்த அனுமதியும் வழங்கக்கூடாது.

வாகனங்கள் வாங்குதல், உபயோகித்தல் மற்றும் விற்பனை செய்தல்

பொதுவாக தொடக்க வேளாண்மைக்கூட்டுறவுக் கடன் சங்கங்களின் செயல்பாட்டுக்கு வாகனம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தவிர்க்கமுடியாத நேர்வுகளில் ஒருசங்கத்திற்கு வாகனம் வாங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விதி 88-இன்படி சங்கப் பேரவை மற்றும் சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதியின்றி எந்த ஒரு புதிய வாகனமும் சங்க நிர்வாகக் குழுவால் வாங்கக்கூடாது. சங்கத்தின் வியாபார உபயோகத்திற்கு அல்லது சங்கப் பணிக்கு மட்டுமே சங்கத்தின் வாகனத்தை பயன்படுத்த வேண்டும். வாகன பயன்பாடு குறித்து பயணக் குறிப்பேடு பராமரிக்க வேண்டும். வாகனத்தை உபயோகிப்பவர் பயண விவரம் பற்றி பயணக் குறிப்புப் புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும். சரக துணைப்பதிவாளரின் முன் அனுமதியில்லாமல் எந்த வாகனமும் விற்பனை செய்யக்கூடாது.

தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களுக்கான அரசு நிதியுதவி சிறப்புத் திட்டங்கள்

(1) தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் உறுப்பினராயுள்ள மாற்றுத்திறனாளிகளின் / மகளிரின் கடன் பெறும் திறனை அதிகரித்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட ரூ.2500/- பங்கு மூலதனம் அரசு மான்யமாக வழங்குதல்,

(2) தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் ரொக்கம் மற்றும் நகைகளைப் பாதுகாக்கும் வகையில் இரும்புக் கதவுடன் கூடிய பாதுகாப்பு அறைகள் அமைத்தல்,

(3) தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் தற்போது அதிக அளவில் நகைக் கடன் வழங்குவதால் அவற்றின் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தும் நோக்கத்துடன் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவுதல்.

(4) உறுப்பினர்களுக்கு தடையின்றி சேவை வழங்கிட, முதல் கட்டமாக வேலூர், கரூர், திண்டுக்கல், நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கூட்டுறவுச் சங்கக் கட்டடங்களில் சூரிய ஒளி வாங்கிகள் அமைத்தல்.

(5) சங்கத்தின் அனைத்து பரிவர்த்தனைகளையும் கணினி மயமாக்குதல். பொது நிர்வாகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கம் ஒரு வியாபார நிறுவனமாக மட்டும் இல்லாமல் அரசு இடுகின்ற திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக உறுப்பினர்கள் மற்றும் ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் அமைப்பாகும். சங்கத்தின் நலனும், உறுப்பினர்களின் நலனும், சிறந்தோங்க மேலே சொன்ன பணியாளர்களின் நிர்வாகம் மற்றும் நிதி நிர்வாகம் தவிர பொதுவான சில நிர்வாக குறிப்புகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தங்களின் அனுபவத்தின் அடிப்படையிலும், அன்றாட நிர்வாகத் தேவைகளை கருத்தில் கொண்டும் தாங்களே இத்தகைய வழிமுறைகளை கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிகளுக்கேற்பவும் அவ்வப்போது பதிவாளரால் மற்றும் மத்திய வங்கியால் அனுப்பப்படுகிற சுற்றறிக்கைகளுக்கேற்பவும் அமைத்துக் கொள்ளலாம்.

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மாவட்ட ஆட்சித்தலைவர், இணைப்பதிவாளர், துணைப்பதிவாளர் முதலிய அரசுத்துறை அலுவலர்களிடமிருந்தும், மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் இதர நிறுவனங்களிடமிருந்தும் வரக்கூடிய தபால்களை பார்வையிடுவதும், அதன் மீதான நடவடிக்கைகளை மேற்கொள்வதும் முக்கியமான பொது நிர்வாகப்பணியாகும். இது தவிர சங்கப் பணியாளர்கள் அவ்வப்போது உயர் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ளும்பொழுது அவர்களுக்கு தெரிவிக்கப்படுகிற கருத்துக்களை தங்களுக்கு ஒரு பேரேட்டின் மூலமாகவோ அலுவலகக் குறிப்பின் மூலமாகவோ தெரிவிக்க தக்க உள் ஏற்பாடு செய்து கொள்ளுங்கள். தணிக்கை அறிக்கை, உயர் அலுவலர்களின் ஆய்வு அறிக்கை ஆகியவற்றை கூர்ந்து நோக்குவீர்களேயானால் தங்கள் சங்கத்தின் அவ்வப்போதைய பணி நிலைமை தெரிய வரும். அரசு அலுவலர்களுக்கும், மத்திய நிறுவனங்களுக்கும் அனுப்பப்படும் புள்ளிவிவர மாதாந்திர மற்றும் இதர காலமுறை அறிக்கைகளை உடனுக்குடன் பார்வையிடத் தவறாதீர்கள். குறிப்பாக தணிக்கை அறிக்கைகளை அதில் சுட்டிகாட்டப்பட்டுள்ள குறைகளை நிர்வாகக்குழுவில் பரிசீலனை செய்யும்பொழுது குறை களைவு அறிக்கையை பணியாளர்களிடமிருந்து தவறாமல் பெறுவதன்மூலம் நிர்வாக சீர்கேடுகளை தவிர்க்கலாம். கூட்டுறவு சங்கங்களின் சட்டம் மற்றும் விதிமுறைகளின் கீழ் தங்கள் சங்கத்திற்கோ நிர்வாகக் குழுவிற்கோ அனுப்பப்படுகிற தாக்கீதுகளுக்கு தவறாமல் பதில் அளிக்க தக்க ஏற்பாடு செய்யுங்கள்.

மேலும் தங்கள் பகுதியில் இயங்கும் வட்ட வழங்கல் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்துறை அலுவலகம், கூட்டுறவு விற்பனை இணைய மண்டல அலுவலகம் மற்றும் இது போன்ற தொடர்புடைய அலுவலகங்களோடு தாங்கள் நல்ல தொடர்பு வைத்து கொண்டால் அவ்வப்போது வருகின்ற புதிய திட்டங்களை செயல்படுத்த தங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

இணக்கமான உறவு

எந்தவொரு சங்கத்தின் தலைவர் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக் அச்சங்கங்களுடன் இணைந்த கூட்டுறவு சங்கங்கள், மாவட்ட கூட்டுறவு வங்கி, மாவட்ட சங்கங்கள் அல்லது மாநில சங்கங்கள் ஆகியவற்றுடன் எந்தவிதமான கருத்து வேறுபாடு இருப்பினும் அவரவர் சார்ந்துள்ள சங்கங்களின் ஒட்டுமொத்த நலன் கருதி கூட்டுறவு தத்துவத்தின் அடிப்படைக் கருத்தை உணர்ந்து கூட்டுறவு என்ற சொல்லுக்கு இலக்கணமாக செயல்படுதல் அவசியம்.

வணிக நிர்வாகம்

சங்கத் துணை விதிகளில் குறிப்பிட்டுள்ள நோக்கங்களின் அடிப்படையில் சங்க வணிகத்தை வாணிப நோக்கோடு நல்ல இலாபம் ஈட்டும் வகையில் நடத்த வேண்டும். உதாரணமாக-பண்டக சாலைகளில் சரக்குகளின் கொள்முதல் வாணிப சுழற்சியைப் பொறுத்து இருக்க வேண்டும். சரக்குகள் நீண்ட காலமாக தேங்கி இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பல்வேறு கடன்களை வழங்குவதைப் பொறுத்து பணப்புழக்கத்தை சீர் செய்ய வேண்டும். பெறப்படும் வைப்புகள் இலாபகரமாக முதலீடு செய்யப்பட வேண்டும்.

வணிக நோக்குடன், வணிக விரிவாக்கம் செய்ய தீர்மானிக்கும் சங்கம், நிர்வாகக் குழு ஒப்புதல் பெற்று சங்க துணைவிதிகளில் கூறியபடி நடவடிக்கை எடுக்கலாம்.

திட்டமிடுதலும் செயலாக்கமும்

ஒவ்வொரு சங்கமும் அதன் நோக்கத்திற்கேற்ற செயல்பணிகளின் அடிப்படையில் ஒவ்வொரு செயற் பணியிலும் உரிய வளர்ச்சிக்கான வியாபார மேம்பாட்டுத் திட்டம் அல்லது அபிவிருத்தித் திட்டம் தயாரிக்க வேண்டும் தயாரிக்கப்பட்ட திட்டங்களை முழு மூச்சாக தொய்வின்றி செயல்படுத்த வேண்டும். திட்ட செயலாக்கத்தில் தவறுகள் நிகழாவண்ணம் கவனமுடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு புதிய மற்றும் பெரிய திட்டத்தையும் அதன் செயல்பாட்டையும் பொதுக்குழுமுன் வைத்து அதன் நன்மைகளை விளக்கி ஒப்புதல் பெற்று செயல்படுத்த வேண்டும். செயல்முறைகளை ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து குறைகள் களையப்பட வேண்டும்.

எந்த ஒரு பொருளாக இருந்தாலும் தலைமை நிர்வாகி தன்னுடைய நிலையையும் அதற்கான காரணங்களையும் சங்க நலன் கருதி எடுத்துரைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் - கையேடு

2.87878787879
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top