பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு அரசு கூட்டுறவுச் சங்கம் / நிர்வாகக் குழுவின் உரிமை, பொறுப்பு, கடமை மற்றும் பண்புகள்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

நிர்வாகக் குழுவின் உரிமை, பொறுப்பு, கடமை மற்றும் பண்புகள்

நிர்வாகக் குழுவின் உரிமை, பொறுப்பு, கடமை மற்றும் பண்புகள் குறித்த தகவல்கள் அனைத்தும் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

கூட்டுறவுச் சங்கங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகத்தினர் முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது, சங்க உறுப்பினர்கள், எந்தவிதமான பிரதி பலனும் எதிர்பாராமல் சேவை செய்வதற்காக தங்களை தேர்ந்தெடுத்துள்ளார்கள் என்பதாகும். ஏனைய வியாபார நிறுவனங்களைப் போல் நிர்வாகத்தினர் தங்கள் நிறுவனத்தில் அதிக இலாபம் ஈட்டி, அதை தங்களுக்குள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலைமை கூட்டுறவுகளில் இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சங்கத்தின் துணைவிதிகளிலும் நிர்வாகக் குழுவின் கடமைகளும் பொறுப்புகளும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

கடமைகள்

  • தாங்கள் சார்ந்த நிறுவனம் இலாபத்தில் இயங்குகிறதா அல்லது நட்டத்தில் இயங்குகிறதா? என்பதை தெரிந்து கொண்டு இலாபத்தில் இயங்கினால் அந்த இலாபத்தினை வருங்காலத்தில் அதிகரிக்கவும், நட்டத்தில் இயங்கினால் அந்த நட்டத்திற்குண்டான காரணங்களை ஆராய்ந்து அவைகளைக் களைந்து சங்கத்தை மேம்படுத்தவும் கூட்டுறவுத்துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். சங்கம் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்யவும், உறுப்பினர்களுக்கு அதிக அளவு ஈவுத் தொகை வழங்கவும், சங்கம் இலாபத்தில் இயங்க வேண்டிய கட்டாயம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.
  • கூட்டுறவுச் சங்கங்களின் நடைமுறை பல்வேறு சட்டங்களுக்கும், அரசு ஆணைகளுக்கும், ரிசர்வ்வங்கி, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி மற்றும் பதிவாளரின் அறிவுரைகளுக்கும் உட்பட்டுத்தான் நடக்க வேண்டியுள்ளது. அவற்றைத் தெரிந்து கொண்டு விதிமுறைகள் பிறழாமல் சங்கத்தை நல்ல விதமாக நடத்தி செல்ல வேண்டியது நிர்வாகக்குழுவின் கடமையாகும்.
  • நிர்வாகத்தினர் சார்ந்துள்ள கூட்டுறவு நிறுவனங்கள் எந்தெந்த சேவைகளை உறுப்பினர்களுக்கு செய்ய வேண்டுமோ அவைகளை உறுப்பினர்களுக்கு முதலாவதாக தெரியப்படுத்த வேண்டும். பின்னர் அந்தந்த சேவைகளை தகுதியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் கிடைக்கும்படி செய்வதற்கு முழு முயற்சியுடன் ஈடுபட வேண்டும். அவ்வாறு செய்யும்போது பாரபட்சமின்றி, நியாயமான முறையில் சங்கத்தின் செயல்பாடு அமைய வேண்டும். சாதி, மத வேறுபாடுகள், தனிப்பட்ட விரோதங்கள் ஆகியவற்றை தவிர்த்து நிறுவனத்தில் தங்களுடைய செயல்பாடுகள் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் இருக்குமாறு நடந்து கொள்ள வேண்டும்.
  • குறிப்பாக, கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் சட்டம், விதிகள் மற்றும் துணை விதிகளுக்கு உட்பட்டு தகுதியுள்ளவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும். அதில் எந்தவிதமான புகார்களுக்கும் இடம் கொடுக்கலாகாது. அதேபோல சங்கங்களின் உறுப்பினர்களுக்கு கடன் வழங்குவதிலோ அல்லது இதர சேவைகளை அவர்களுக்கு கொடுப்பதிலோ பாரபட்சமும் காலதாமதமும் இருக்கக் கூடாது.
  • சட்டப்படி சங்க நிர்வாகக் குழு கூட்டம் ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் குறைந்தது ஒருமுறையாவது கூட்டப்பட வேண்டும். அவ்வாறு கூட்டப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
  • நிதியாண்டு முடிவடைவதிலிந்து ஆறு மாத காலத்திற்குள் சங்கத்தின் பேரவை கூட்டத்தை ஒருமுறையாவது கூட்ட வேண்டியது நிர்வாக குழுவினரின் கடமையாகும். பேரவை எடுக்கும் முடிவுகள் தான் இறுதியானது. அவைகளை செயல்படுத்த வேண்டியதும் நிர்வாகக் குழுவின் கடமையாகும்.
  • சங்கத்தின் கைவசமுள்ள மனிதவளம், நிதிகள், கருவிகள், பொருட்கள் ஆகியவற்றை அங்கீகரிக்கப்பட்ட வழிமுறைகளின்படி நிர்ணயிக்கப்பட்ட குறிக்கோளை நோக்கத்தை எய்தி, முழுப் பலன் கிடைத்திடும் வகையில் பயன்படுத்த வேண்டும்.
  • மாதாந்திர வரவு, செலவுகளை பரிசீலித்து அங்கீகரித்தல்.
  • சங்க நிதிகளும், சொத்துக்களும், தவறான வழியில் பயன்படாதிருப்பதை உறுதி செய்தல்.

பொறுப்புகள்

  • சரக்கு இருப்பு, ரொக்க கையிருப்பு மற்றும் நகையிருப்பு, கடைகளின் மூலமான விற்பனைக்கான இருப்பு, உர இருப்பு ஆகியவைகளை சரியான முறையில் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டும். அப்படிப் பொறுப்பு நிர்ணயம் செய்ததை தீர்மானப் புத்தகத்தில் பதிய வேண்டும்.
  • சங்க அசையாச் சொத்துக்கள் மற்றும் அசையும் சொத்துக்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்வதோடல்லாமல், பங்கு பத்திரம், காசோலை போன்றவைகளை பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • சங்கம் நடைமுறையில் கையாளும் சரக்குகள் முழுமையாக பாதுகாக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
  • சட்டம், விதிகள் மற்றும் துணை விதிகளுக்குட்பட்டு சங்கத்தின் மேலாண்மையை நடத்த வேண்டும்.
  • தணிக்கை மற்றும் ஆய்வின்போது சுட்டிக் காட்டப்பட்டுள்ள குறைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிவர்த்தி செய்தல் மற்றும் சொல்லப்பட்ட கருத்துக்களை அமுலாக்குதல்.

உரிமைகள்

  1. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் அனைத்து நிர்வாகக்குழு கூட்டங்களிலும் கலந்துகொண்டு சங்கத்தின் செயல்பாடுகளில் முடிவு எடுத்தல்.
  2. சங்க நலனுக்கு எதிராக முடிவுகள் எடுக்கப்படுவதை மறுத்து வாக்களித்தல். தகுதியான உறுப்பினர்களுக்கு சங்கத்தின் பணிகள் அவருக்கு சேருகின்றனவா என்பதை கடைசி வரைக்கும் கண்காணித்தல்.
  3. சங்கத்தின் நடைமுறைகள் செம்மையாக நடத்தப்படுகின்றனவா என்று கண்காணித்தல். குற்றம் குறையிருப்பின் அதைத் தலைவரின் கவனத்திற்கோ அல்லது அடுத்த நிர்வாகக்குழு கூட்டத்தில் தெரிவித்தோ நிவாரணம் காணுதல்.
  4. நிர்வாகக்குழு கூட்டங்களில் கலந்துகொண்டு அதற்குண்டான பயணப்படி மற்றும் அமர்வு கட்டணம் பெறுதல்.
  5. சங்கத்தினுடைய வியாபாரம் தொழில் போன்றவற்றை மேம்படுத்த கூட்டுறவுச் சட்டம், விதிகள் மற்றும் துணை விதிகளுக்குட்பட்டு, தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுத்தல்.
  6. பேரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்ட வரவு செலவு திட்டத்திற்கு உட்பட்டு சங்க நிதியிலிருந்து செலவினங்கள் மேற்கொள்ள அனுமதித்தல்.
  7. நிர்வாகக்குழு உறுப்பினர்கள் சங்க இலாபத்தில் ஒரு சிறு தொகையை சட்டம் மற்றும் விதிகளுக்குட்பட்டு மதிப்பூதியமாக பெற்றுக் கொள்ளல்.

அதிகாரங்கள்

  • உறுப்பினர்கள் சேர்த்தல் - பங்கு ஒதுக்கீடு செய்தல்
  • நிதி திரட்டுதல்
  • நிதிகளை முதலீடு செய்தல்
  • உறுப்பினர்களுக்குக் கடன் வழங்குதல் கிட்டங்கிகள், இதர கட்டடங்கள் கட்டுவது, வாங்குவது,
  • வாடகைக்கு எடுப்பது அல்லது மற்ற வகையில் பெறுவது. உறுப்பினர்களுக்குத் தேவையான விவசாயம் மற்றும் விவசாயமற்ற வீட்டுத் தேவைப் பொருட்களை வாங்கி வழங்குதல்
  • வருடாந்திர வரவு செலவுத் திட்டத்திற்குட்பட்டுச் செலவுகள் செய்தல். துணைவிதிகள், பணியாளர்கள் சிறப்புத் துணைவிதிகள் பதிவாளரால் ஏற்பளிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்கேற்ப பணியாளர்களுக்குக் கடன்கள், முன்பணங்கள் அனுமதித்தல்.
  • உறுப்பினர்களின் விளைபொருட்களை விற்பனைச் சங்கங்கள் மூலம் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல்
  • சங்கத்தின் நோக்கங்களுடன் ஒத்துவரக்கூடிய சங்க நிர்வாகத்திற்குத் தொடர்புள்ள தொழில்களையும் இதர அலுவல்களையும் செய்தல்
  • உறுப்பினர்களின் ராஜினாமாவை பரிசீலித்து முடிவு எடுத்தல்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கவனத்திற்கு

  • நிர்வாகக் குழு உறுப்பினர் கூட்டுறவுச் சங்கத்தில் பணிபுரியும் எந்தவொரு பணியாளருக்கும் நெருங்கிய உறவினராக இருத்தல் கூடாது.
  • தான் சார்ந்துள்ள சங்கத்தில் கடனாகவோ, முன்பணமாகவோ பெற்று 3 மாதங்களுக்கு மேல் தவணை தவறிய கடன்தாரராக இருக்கக் கூடாது.
  • அவ்வாறு இருப்பின் நிர்வாகக் குழு பதவியை இழக்க நேரிடும். எந்த ஒரு நிர்வாகக் குழு உறுப்பினர் பேரிலும் சட்டப்பிரிவு 143ல் சொல்லியுள்ள தீர்ப்பாணை, முடிவு தீர்ப்பு ஆணை அல்லது சான்றிதழ் பெறப்பட்டிருந்தால் அன்னார் தகுதியிழக்க நேரிடும்
  • இதுதவிர கூட்டுறவுச் சட்டப்பிரிவு 34ல் கீழ் கூறப்பட்டுள்ள ஏனைய தகுதியின்மைகள் தங்களிடம் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது மிக முக்கியமானதாகும்.
  • கூட்டுறவு சட்டப்பிரிவு 35ல் கூறியுள்ளபடி, குழு உறுப்பினர்களுக்கு அவர்கள் சார்ந்துள்ள சங்கத்துடன் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளுதல்,
  • சங்க சொத்துக்களை வாங்குதல், நிதி சம்பந்தமான பற்றுகள் ஆகியனவற்றில் தொடர்பு இருக்கக் கூடாது.
  • ஒவ்வொரு நிர்வாகக் குழு கூட்டத்திலும் கலந்து கொள்ள வேண்டியது நிர்வாகக் குழு உறுப்பினர்களின் கடமையாகும். தொடர்ந்து நான்கு நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால் அல்லது தொடர்ந்து மூன்று மாதங்களுக்குள் நடைபெறும் அனைத்து நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாவிட்டால், அவர் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும்.
  • நிர்வாகக் குழு உறுப்பினர் தங்களுடைய கடமை மற்றும் பொறுப்புகளிலிருந்து தவறி சங்கத்திற்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டால் சட்டப்பிரிவு 36ன்படி அவர் நிர்வாகக் குழு உறுப்பினர் பதவியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட நேரிடும்.
  • மேலும் எந்த கூட்டுறவுச் சங்கத்திலும் எக்காலத்திலும் நிர்வாகக் குழு உறுப்பினராக அவர் இருக்க தகுதியற்றவராகவும் ஆக்கப்பட நேரிடும்.
  • சங்கத்தின் நிதிகளையும் சொத்துக்களையும் கூட்டுறவு சட்டப்பிரிவுகளில் கூறியபடிதான் பயன்படுத்த வேண்டும்.
  • கூட்டுறவுச் சங்க நிதிகளை கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாகத்திற்கு சம்பந்தப்படாத இனங்களுக்கு செலவழிக்கக் கூடாது.
  • சங்கத்திற்கு வரவேண்டிய கடன்கள் மற்றும் ஏனைய இனங்களையும் நிர்வாகக்குழு மிக உன்னிப்பாக கவனித்து வசூல் செய்வதற்கும் காலக்கெடு கடப்பதற்குள் அந்த கடன்களின் பெயரில் தாவா நடவடிக்கை தொடர்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும். இது முக்கியமான கடமையாகும்.
  • கடன்கள், காலாவதியாகிவிட்டால் நிர்வாகக் குழுதான் பொறுப்பேற்க வேண்டும் என்பதை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
  • அதேபோல தாவா மனுக்களின் மீது தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் சட்டப்படி நடவடிக்கை எடுத்து சங்கத்திற்கு வரவேண்டிய தொகைகளை வசூலிக்க நிறைவேற்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும்.
  • நிறைவேற்று மனுக்கள் காலாவதியாவதற்குள் தொகைகளை வசூலிக்க வேண்டியதும் முக்கியமான கடமையாகும்.
  • ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர், அவரைத் தேர்ந்தெடுத்த சங்க உறுப்பினர்கள் நிறைவேற்றும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்படலாம்.
  • அதேபோல தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கத்தின் தலைவர் 1 துணைத் தலைவர் ஆகியவர்களை நிர்வாகக்குழு கூட்டத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து நீக்கலாம்.

தலைவரின் அதிகாரமும் கடமையும்

  1. சங்கத்தின் எல்லா நடவடிக்கையும் பொறுத்து மேலான மேற்பார்வை ஆதிக்க அதிகாரம் உண்டு.
  2. சங்கப் பேரவைக் கூட்டம், நிர்வாகக்குழு கூட்டம் ஆகியவற்றை தலைமை தாங்கி நடத்துபவர் தலைவரே.
  3. சங்கத்தில் சம்பளம் பெறும் தலைமை நிர்வாகி இல்லாதிருந்தால் சங்க கணக்குகளையும் புத்தகங்களையும் முறையாகப் பராமரித்து பேணும் கடமை தலைவருக்கு உண்டு.
  4. சங்கத் துணை விதியில் தலைவரே பதவி வழி பொருளாளர் என்றிருந்தால் சங்க கையிருப்புக்கு தலைவரே பொறுப்பாவார். அவரே காசோலைகளில் சங்க செயலருடன் கூட்டாக கையொப்பமிடலாம்.
  5. சட்டம், விதிகள் மற்றும் சங்கத் துணைவிதியில் தலைவருக்கென வழங்கப்பட்டுள்ள பிற அதிகாரங்களையும் இவர் செலுத்துவார்.

நிர்வாகக் குழு உறுப்பினர்களின் பண்புகள்

பொதுவாக எந்தவொரு காரியத்தையும் அடுத்தவரை செய்க என்று சொல்வதற்கு முன் நாமே முன் உதாரணமாக அதே காரியத்தை செய்தால் அது மற்றவர்களுக்கு வழிகாட்டுதலாகவும் மற்றவர் பின்பற்றுவதற்கு ஏதுவாகவும் அமையும். இந்த தத்துவம் கூட்டுறவுச் சங்கத்தில் நிர்வாகக்குழு உறுப்பினராக இருப்பவருக்கு மிகவும் பொருந்தும்.

உதாரணமாக,

  • காலக்கெடுவுக்குள் கடனை திருப்பிச் செலுத்துதல்,
  • எந்தவிதமான தகுதியின்மையும் எய்தாமல் தன்னுடைய நிர்வாகக்குழு உறுப்பினர் பதவி காலத்தில் சங்க உறுப்பினர்கள் போற்றும் வண்ணம் நடந்து கொள்ளுதல்
  • வழிகாட்டியாக இருத்தல்,
  • உறுப்பினர்களின் சிரமங்களை அறிந்து தக்க நேரத்தில் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்தல்,
  • ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் ஜனநாயக மரபுகளை பின்பற்றுதல்,
  • கூட்டுறவு கொள்கையில் நம்பிக்கை இருப்பதை செயல்பாட்டில் முன் மாதிரியாக இருந்து காட்டுதல்,
  • பிறர் கருத்துக்கு மதிப்பளித்து தனது கருத்தை திணிக்காமல் இருத்தல்,
  • ஜனநாயக அடிப்படையில் நடந்து கொள்ளுதல்,

முதலியன நிர்வாகக்குழு உறுப்பினர்களின் பண்புகளாகும். சங்கத்தின் சொத்துக்களை பாதுகாத்து அவற்றைக் கூட்டவும் விருத்தி செய்யவும் வேண்டும். ஆனால் சங்கத்தின் சொத்துக்களை பிறர் எடுத்துக் கொள்ளாமலும் தானும் எடுத்துக் கொள்ளாமலும், பராதீனப்படுத்தாமலும் போற்றிப் பேண வேண்டும்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்களின் நன்மையை கருத்திற்கொண்டு மன உறுதியுடன் முடிவுகள் எடுக்க வேண்டும். தவறான முடிவுகளுக்கு எக்காரணத்தைக் கொண்டும் துணை போகாத அளவுக்கு தங்களைப் பண்படுத்திக் கொள்ள வேண்டும். எடுக்கிற முடிவுகள் சட்டம் விதிகள் மற்றும் சங்க துணைவிதிகளுக்கு உட்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நிர்வாகக் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு கையொப்பம் இட வேண்டும். சங்கப் பேரவை கூட்டத்தில் கலந்து கொண்டு அவ்வாறே செய்ய வேண்டும். நிர்வாகக் குழுவின் அனுமதியுடன் தாங்கள் சார்ந்துள்ள கிளைகளை ஆய்வு செய்யலாம். இருப்புக்களை சரிபார்க்கலாம். பொதுவாக நிர்வாகக் குழுவின் நடவடிக்கைகள் நடுநிலையாய் இருத்தல் வேண்டும். சங்கத்தின் சேவைகள் தேவைப்பட்ட எல்லா உறுப்பினர்களுக்கும் உரிய அளவில் சென்றடையும் வகையில் நிர்வாகக் குழுவினர் நடந்து கொள்ள வேண்டும்.

நிர்வாகக்குழு தலைமைகளின் பண்புகள்

கூட்டுறவு ஒரு மக்களாட்சி இயக்கம், இவ்வியக்கத்தின் தலைமையை ஏற்று நடத்துபவர்கள் எந்த அளவிற்கு நீண்ட தொலை நோக்குடனும், உறுப்பினர்களை அரவணைத்து, சங்கத்தின் நலன் காத்துச் செயல்படுகின்றார்களோ அந்தளவிற்கு இவ்வியக்கம் வெற்றிகரமாக செயல்படமுடியும். எனவே, கூட்டுறவில் தலைமையின் பண்புகளைக் கீழ்க்குறித்தபடி கூறலாம்.

  • உறுப்பினர்களை அரவணைத்து அவர்களை ஊக்குவித்து வழிநடத்திச் செல்லுதல்
  • கூட்டுறவு நிறுவனத்தை மக்களாட்சி வழியிலும், அதே சமயத்தில் நல்ல வியாபார ரீதியிலும் செயல்பட வைத்தல்
  • கூட்டுறவு தத்துவ நோக்கங்களுக்கு ஏற்பவும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்குட்பட்டும், அதிகார வரம்பிற்குள்ளும் செயல்படுதல்
  • நிர்வாகக் குழுவில் முழு ஒத்துழைப்பையும், ஒப்புதலையும் பெற்று நிறுவனத்தை நிர்வகித்தல்.
  • கூட்டுறவு கல்வியின் மூலம் உறுப்பினர்களிடையே விழிப்புணர்ச்சியை தோற்றுவித்தல்
  • சமுதாய அமைப்பில் அவ்வப்பொழுது நிகழும் மாறுதலுக்கு ஈடுகொடுத்துச் செயல்பட்டு கூட்டுறவு நிறுவனத்தைத் தொடர்ந்து வளமாக்குதல்.
  • கிராம அளவிலுள்ள உள்ளாட்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல்.
  • கூட்டுறவு நிறுவனத்திலுள்ள குறைபாடுகளை நீக்கி, அதனை செம்மைபடுத்தி, அதன் செயல்திறனை அதிகரித்தல்.
  • திட்டமிடுதல், திட்டமிட்டவாறு வளர்ச்சி எய்துதல்.
  • அனைவரும் பின்பற்றத்தக்க தலைமையை அளித்தல்,
  • பாரபட்சமின்றி செயல் திட்டங்களை நிறைவேற்றுதல், தன்னார்வத்துடன் முழுமையாக ஈடுபடுதல், தன்னலமற்ற தொண்டு செய்தல்.
  • உறுப்பினர்களின் சீரான வளர்ச்சிக்கு சங்கத்தின் வளங்கள் பயன்படும் வகையில் பொறுப்பாளியாகவும், அறங்காவலராகவும் நடந்து கொள்ளுதல்.

மேலாண்மை இயக்குநர்

  1. அட்டவணைப்படுத்தப்பட்ட தொடக்க கூட்டுறவுச் சங்கங்களில் கூட்டுறவுச் சட்டம் பிரிவு 330 ன் கீழ் அரசின் அதிகாரம் ஒப்படைக்கப்பட்டவரால் நியமனம் செய்யப்படுபவர். அரசு அலுவலர் அல்லது பதிவாளரின் கீழ் பணிபுரியும் அலுவலரே மேலாண்மை இயக்குநராக நியமனம் செய்யப்படுவார்.
  2. இவர் நிர்வாகக் குழு உறுப்பினர்களுள் ஒருவர் ஆவார்.
  3. நிர்வாகக் குழு கூட்டத்தில் பங்கு கொண்டு இவருடைய கருத்துக்களைக் கூறவும் நிர்வாகக் குழு நிறைவேற்றும் தீர்மானத்தின் மீது வாக்களிக்கவும், இவருக்கு உரிமையுண்டு.
  4. தலைவர் அல்லது துணைத் தலைவரைக் கலந்தாலோசித்து இவர் நிர்வாகக் குழு கூட்டத்தை கூட்டுவார்.
  5. இவருடைய அதிகாரங்களும் கடமைகளும் விதி 146ல் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளன.
  6. சங்க தலைவரின் மேலான மேற்பார்வை அதிகாரத்திற்கு உட்பட்டே சங்க விவகாரங்களை இவர் கவனித்து வர வேண்டும்.
  7. நிர்வாகக் குழு எடுக்கிற முடிவுகளை செயலாற்றுபவரும் இவரே. சங்க சொத்துக்கள் இவர் பொறுப்பில் இருக்கும். சங்க கணக்குகளையும் புத்தகங்களையும் சரியாக வைத்து பேண வேண்டியதும் தணிக்கை மற்றும் ஆய்வின் போது கொடுக்க வேண்டியதும் இவருடைய கடமையாகும்

செயலாளர்

செயலாளர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களைப் பொறுத்தவரை மேலாண்மை இயக்குநர் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆனால் செயலாளர் நியமனம் செய்யப்படுகின்றார். இவர் சங்கத்தின் சம்பளம் பெறும் தலைமை அலுவலர் ஆவார். சங்கத் தலைவரின் மேலான அதிகாரத்திற்கு உட்பட்டு இவர் சங்கத்தின் அன்றாட காரங்களை கவனித்து வரவேண்டும். சங்கத்திற்குத் தொடர்புடைய கணக்குகள், புத்தகங்கள் ஆகியவற்றை முறையாகப் பராமரிக்க கடமைப்பட்டவராவார். சட்டப்பிரிவுகள் 80, 81, 82 மற்றும் 83ன் கீழான, முறையே தணிக்கை, விசாரணை, ஆய்வு மற்றும் புத்தகங்களை ஆய்வு செய்ய கணக்குகளையும் புத்தகங்களையும் சம்பந்தப்பட்ட அலுவலர் கேட்கும்போது கொடுப்பதற்கும் இவர் கடமைப்பட்டவர் ஆவார். நிர்வாகக்குழு எடுக்கும் முடிவுகளை சட்டம், விதிகள் மற்றும் துணை விதிகளுக்குட்பட்டு செயலாற்றுவதும் இவருடைய கடமையாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம், சென்னை -600 010.

3.06153846154
வள்ளுவன் Jun 18, 2019 05:53 PM

ஆசியர் கூட்டுறவு சங்கத்தின் தலவராக உள்ள ஒருவர் தனது பணிகாலத்தில் சூன் மாதம் ஓய்வு பெறும் சமயம் அவருக்கு அக்கல்வி ஆண்டு முழுவதும் பணியாற்ற மறுநியமன ஆனண பெறுகிறார் எனில் சங்க பொறுப்பும் அவருக்கு நீட்டிக்கப்படுமா?

பிரபாகரன் Jun 05, 2019 09:15 PM

சங்கத்தின் வரவு செலவு கணக்கை இணையதளத்தில் பார்க்க இயலுமா?

ராசசேகர் Jan 31, 2019 04:34 PM

ஒரே சங்கத்தில் நிர்வாக குழுவில் கணவன் மனைவி இருவரும் இருக்கலாமா? இது குறித்து கருத்து தெரிவிக்கவும்

ஜெயசீலன் Jan 12, 2019 01:03 AM

கூட்டுறவு கடன் சங்கத்தில் பணிபுரியும் பணியாளருக்கு சங்கத்தில் கடன் வழங்க எந்த விதமான நடைமுறை பின்பற்ற வேண்டும்

தினேஷ் Aug 14, 2018 10:16 AM

துணை தலைவருக்கு எவ்வகையான அதிகாரம் உள்ளது? ?

Anonymous Aug 05, 2018 11:39 AM

நிர்வாக குழு உறுப்பினராக அரசு வழக்கறிஞர் தேர்தலில் போட்டியிடலாமா ?

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top