பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிர்வாகம் / தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பற்றிய தகவல்கள் இங்கே விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 27.02.1982 ஆம் ஆண்டு தமிழக அரசால் அமைக்கப்பட்டது. சென்னையை தலைமையகமாக கொண்டு வாரியத்தின் 7 மண்டல அலுவலகங்கள் மற்றும் 38 மாவட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. வாரிய தலைவரின் தலைமையில் வாரிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மண்டல அலுவலகங்கள் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும், மாவட்ட அலுவலகங்கள் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் தலைமையிலும் செயல்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுச்சூழல் பொறியளார்கள் தலைமையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் 2 பறக்கும் படைகளும் செயல்பட்டு வருகின்றன.

தொழிற்சாலைகளைக் கண்காணிக்க உதவும் வகையில் வாரியத்தில் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும், 8 மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மாசு கட்டுப்பாட்டுச் சட்டங்கள் மற்றும் விதிகளை முறையாக செயல்படுத்தி வருகிறது. வெளியேற்றப்படும் நீர், காற்று மற்றும் நில மாசுக்களின் தன்மையை வாரியம் சேகரித்து, கண்டறிந்து தரவுகளை வெளியிடுகிறது. மேலும் வெளியேற்றப்படும் சாக்கடை கழிவுநீர், தொழிற்சாலை கழிவுநீர் மற்றும் காற்று மாசின் தரத்தை அறிய முறையான தர அளவுகளை நிர்ணயத்துள்ளது.

வாரியம் தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டமாக இசைவாணைகளை வழங்குகிறது. முதற்கட்டமாக, தொழிற்சாலை நிறுவுவதற்கான இசைவாணை, தகுந்த இடத் தேர்வுக்கு பின், கட்டுமானப் பணிகளைத் துவங்குவதற்கு முன் வழங்கப்படுகிறது. பிறகு வாரியத்தால் வரையறுக்கப்பட்டுள்ள விதிமுறைகளின்படி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் காற்று மாசு கட்டுப்பாடு சாதனங்களை தொழிற்சாலை அமைத்த பின், உற்பத்தியை தொடங்கும் முன் தொழிற்சாலையை இயக்குவதற்கான இசைவாணை இரண்டாவது கட்டமாக வழங்கப்படுகிறது.

வாரியத்தின் கள அலுவலர்கள் தங்களின் பகுதிக்குட்பட்ட ஒவ்வொரு தொழிற்சாலையையும் குறித்த கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, செயல்முறைக் கழிவுநீர் மற்றும் வாயுக் கழிவுகளைச் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள மாசு கட்டுப்பாடு சாதனங்களின் செயல்திறனைத் தொடர்ந்து கண்காணிக்கின்றனர். வாரியம் ஒவ்வொரு தொழிற்சாலை வெளியிடும் மாசுபாட்டினை கண்காணிக்க அவற்றின் தன்மையை கீழ் கண்டுவாறு வகைப்படுத்தியுள்ளது.

தொழிற்சாலைகளை ஆய்வு செய்தல் மற்றும் மாதிரி சேகரித்தலுக்கான காலவரையறை

தொழிற்சாலைகளின் வகை

பிரிவு

ஆய்வு செய்தல்

மாதிரிகளை சேகரித்தல்

பெரிய வகை

சிவப்பு
ஆரஞ்சு
பச்சை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை

மாதம் ஒரு முறை
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை
.........

நடுத்தர வகை

சிவப்பு
ஆரஞ்சு
பச்சை

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை

மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை
.........

சிறிய வகை

சிவப்பு
ஆரஞ்சு
பச்சை

வருடத்திற்கு ஒரு முறை
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை

3-6 மாதங்களுக்கு ஒரு முறை
6 மாதங்களுக்கு ஒரு முறை
.........

17 வகையான தொழிற்சாலைகள்

மாதம் ஒரு முறை

மாதம் ஒரு முறை

மாசினை கட்டுப்படுத்த தவறும் தொழிற்சாலைகளின் மீது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சட்டபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. நிர்ணயத்துள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தொழிற்சாலைகளுக்கு முகாந்திர விளக்கம் கோரும் கடிதங்கள் அனுப்பப்படுகின்றன. மேலும் அத்தகைய தொழிற்சாலைகள் மூடுதல், மின் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீர் வழங்குதலை துண்டித்தல் போன்ற நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படுகின்றன.

வாரியம், தொழிற்சாலைகளை சிறந்த முறையில் கண்காணிக்க பொறியார்களுக்கு முழு அதிகாரத்தை வழங்கியுள்ளது. வாரியத்தில் இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்களும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்களும் ஆரஞ்சு, பச்சை வகை மற்றும் சிறிய சிவப்பு வகை தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்கவும், புதுபிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு அனைத்து தொழிற்சாலைகளுக்கும் முகாந்திர விளக்கம் கோரவும் முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வாரியம், தொகுப்பாக அமைந்துள்ள சிறிய வகை தோல் மற்றும் சாயத் தொழிற்சாலைகளுக்கு பொது கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலைகளை நிர்மானிக்க சிறந்த முறையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

வாரியம் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்டறிந்து உரிய முறையில் அதனை வெளியேற்ற நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த கழிவுகளை பாதுகாப்பாக அகற்ற உகந்த இடங்களை தேர்வு செய்துள்ளது.

வாரியத்தின் செயல்பாடுகள்

நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 - ன்படி தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் முக்கியப் பணிகள் பின்வருமாறு :

  • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் பற்றிய விரிவான திட்டம் தீட்டுதல்.
  • நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்புடைய தகவல்களை சேகரித்தல் மற்றும் வெளியிடுதல்.
  • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்திறனை ஆய்வு செய்தல் மற்றும் திட்டங்கள், தரநிர்ணயங்களை சரி செய்வதற்காக அவற்றை பரிசீலனை செய்தல்.
  • காற்று மாசுபடுவதைத் தடுத்தல், கட்டுப்படுத்துதல் மற்றும் குறைத்தல் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொழிற்சாலைகளின் உற்பத்தி முறையில் மாசினை குறைக்கும் உபகரணங்களை ஆய்வு செய்து தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்.
  • காற்று மாசு கட்டுப்பாடு பகுதியில் காற்றின் தன்மையை அளவீடு செய்ய ஆய்வு செய்தல் மற்றும் காற்று மாசுபடுவதைக் கட்டுப்படுத்துதல், தடுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீர், தொழிற்சாலைகள், வாகனங்கள் மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து காற்று மண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுக்கழிவுகள் ஆகியவற்றிற்கு வரையறைகளை விதித்தல், மாற்றி அமைத்தல் அல்லது நீக்குதல்.
  • வடிகால் கழிவுநீர் மற்றும் செயல்முறைக் கழிவுநீரை சிறந்த முறையில் பொருளாதார ரீதியாக உகந்த வழியில் சுத்திகரிப்பு செய்வதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்குதல்.
  • வடிகால் கழிவுநீர், செயல்முறைக் கழிவுநீர் மற்றும் வாயுக்கழிவுகளின் மாதிரிகளைச் சேகரித்து குறிப்பிட்ட தன்மைகளை தர அளவீட்டிற்காக பகுப்பாய்வு செய்தல்.
  • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து, நீர் மற்றும் காற்று மாசுபடுவதைத் தடுக்க, கட்டுப்படுத்த மற்றும் குறைப்பது சம்பந்தமான திட்டங்களில் ஈடுபட்டுள்ள மற்றும் ஈடுபடுத்தப்படும் நபர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் விழிப்புணர்வு கல்வி நிகழ்ச்சிகளை நடத்துதல்.
  • மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் மாநில அரசு குறிப்பிடும் பிற பணிகளையும் நிறைவேற்றுதல்.

நிறுவன அமைப்பு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் - தலைமை அலுவலகம், மண்டல அலுவலகம் மற்றும், மாவட்ட அலுவலகம் என மூன்று நிலை அமைப்பாக மொத்தம் 623 பணியாளர்களுடன் செயல்பட்டு வருகின்றது. தலைமை அலுவலகம் சென்னையிலும், மண்டல அலுவலகங்கள் இணைத் தலைமை சுற்றுச் சூழல் பொறியாளர் தலைமையில், மாநிலத்தில் 7 இடங்களிலும், மற்றும் மாவட்ட அலுவலகங்கள் மாவட்ட சுற்றுச் சூழல் பொறியாளர் தலைமையில் 38 இடங்களிலும் செயல்பட்டு வருகின்றது. மேலும், சுற்றுச் சூழல் பொறியாளர் தலைமையில் ஈரோடு மற்றும் திருப்பூரில் 2 பறக்கும் படைகளும் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளைக் கண்காணிக்க உதவும் வகையில், வாரியத்தில் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்கள், 8 மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இந்த ஆய்வகங்கள் தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் வடிகால் கழிவுநீர், செய்முறை கழிவுநீர், வாயுக்கழிவு மற்றும் அபாயகரமான கழிவுகள் ஆகியவற்றின் மாதிரிகளைப் பகுப்பாய்வு செய்யும் பணியிலுள்ளன.

திட்டங்கள்

இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் மற்றும் புவி சுற்றுப்புறச் சூழல் கண்காணிப்பு திட்டம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உள்நாட்டின் நீரின் தன்மையை 2 பெரிய திட்டங்கள் மூலம் அதாவது 1984-ஆம் ஆண்டிலிருந்து புவி சுற்றுபுறச்சூழல் கண்காணிப்பு திட்டம் (ஜெம்ஸ்) மூலமும், 1988 ஆம் ஆண்டிலிருந்து இந்திய தேசிய நீர்வள ஆதாரங்கள் கண்காணிப்பு திட்டம் (மினார்ஸ்) மூலமும் கண்காணிக்கிறது. இவற்றின் கீழ் காவிரி, தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை போன்ற 4 முக்கிய ஆறுகளில் 32 நிலையங்கள் மூலமும், உதகமண்டலம், கொடைக்கானல் மற்றும் ஏற்காடு ஆகிய 3 ஏரிகளின் நீரின் தன்மையும் தமிழ்நாட்டில் கண்காணிக்கப்பட்டு வந்தன. பின்னர், நவம்பர் 2010 முதல் 11-வது திட்டத்தின் கீழ் மேலும் 23 இடங்களில் நீரின் தன்மையைக் கண்காணிக்க மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் ஒப்புதல் அளித்து நிதி உதவி வழங்கி வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 55 இடங்களில் நீரின் தன்மை கண்காணிக்கப்படுகிறது. இந்த திட்டங்களுக்கு டெல்லியிலுள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிதி உதவியளிக்கிறது. தற்போது மினார்ஸ் திட்டத்தின் கீழ் தாமிரபரணி, பாலாறு மற்றும் வைகை ஆகிய நதிகள் மற்றும் உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு, செங்குன்றம் மற்றும் புழல் ஏரிகள் கண்காணிக்கப்படுகின்றன. மேற்கூறிய இரு திட்டங்களின் கீழ் காவிரி ஆறு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

காவிரி ஆறு மற்றும் அதன் கிளைகள்

தமிழ்நாட்டின் பெரிய ஆறுகளில் ஒன்றான காவிரி, மாநிலத்தின் மூன்றில் ஒரு பகுதி நிலத்திற்கு நீர்ப்பாசன வசதி அளிக்கிறது. குடியிருப்பு மற்றும் தொழிற்சாலைப் பகுதிகளின் செயல்களினால் ஏற்படும் மாசின் பாதிப்பை அறிய காவிரி ஆறு ஒரு முக்கிய ஆறு என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. காவிரி ஆற்றின் நீரின் தன்மை ஜெம்ஸ் திட்டத்தின் கீழ் 4 இடங்களிலும், மினார்ஸ் திட்டத்தின் கீழ் 29 இடங்களிலும் ஆக மொத்தம் 33 இடங்களில் கண்காணிக்கப்படுகிறது. இந்த இடங்கள் தொழிற்சாலைக் கழிவுநீர், வீட்டுக் கழிவுநீர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கழிவுநீர் ஆற்றில் சேரும் இடங்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கண்காணிப்பு நிலையத்தைப் பொறுத்தவரை பல்வேறு வகைப்பட்ட பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. சேலத்திலுள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் தில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ளபடி மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

தாமிரபரணி ஆறு

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தாமிரபரணி ஆற்றின் நீரின் தன்மையை பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் தில்லியில் உள்ள மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் நிர்ணயித்துள்ளபடி 12 இடங்களில் கண்காணித்து வருகின்றது. நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன. ஆய்வுகள் திருநெல்வேலியில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.

பாலாறு

வாணியம்பாடி நகராட்சி குடிநீர் தலைமை நிலையத்தில் உள்ள ஒரு இடம் மட்டும் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் கண்காணிக்கப்படுகிறது. சென்னையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் நீர்மாதிரிகள் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த கண்காணிப்பு இடத்தில் சேகரிக்கப்படும் நீர் மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிரின் தன்மைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.

வைகை ஆறு

இத்திட்டத்தின் கீழ் வைகை ஆற்று நீரின் தன்மை திருப்புவனம் என்ற இடத்தில் வைகை ஆற்றில் அமைந்துள்ள நீரோற்று நிலைய கிணற்றிலிருந்து ஆறு மாதத்திற்கு ஒரு முறை நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது. நீர்மாதிரிகளின் பௌதீக, இரசாயன மற்றும் நுண்ணுயிர் தன்மைகள் மதுரையில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

ஏரிகள்

இந்திய தேசிய நதிநீர் ஆதாரங்களை கண்காணிக்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 8 முக்கிய ஏரிகளான உதகமண்டலம், கொடைக்கானல், ஏற்காடு, வீராணம், போரூர், பூண்டி, பழவேற்காடு மற்றும் செங்குன்றம் ஆகியவை தெரிவு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.

தொடர் நீர் தர கண்காணிப்பு நிலையங்கள்

சாயத் தொழிற்சாலைகள் நிறைந்துள்ள திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் நீர் நிலைகளின் தரத்தை தொடர்ந்து கண்காணிக்கும் பொருட்டு வாரியம் காளிங்கராயன் வாய்க்கால் மற்றும் நொய்யல் ஆற்றில் தலா மூன்று இடங்களில் தொடர் நீர் தர கண்காணிப்பு கருவிகளை பொருத்தியுள்ளது. இந்நிலையங்களின் மூலம் நீரின் அமில கார சமநிலை, மொத்தம் கரைந்துள்ள திடப் பொருட்கள், கரைந்துள்ள பிராண வாயு அளவு ஆகிய காரணிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இதே போல தாமிரபரணி ஆற்றிலும் மூன்று இடங்களில் கண்காணிப்பு கருவிகளை வாரியம் பொருத்தியுள்ளது. அக்டோபர் 2014 முதல் இந்நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.

காற்று தர கண்காணிப்பு மையம் (Care Air Centre)

தொழிற்சாலை புகைபோக்கியிலிருந்து வெளிவரும் வாயு கழிவுகளின் தரத்தையும் மற்றும் தொழிற்சாலையினை சுற்றியுள்ள காற்றின் தரத்தையும் கண்காணிக்கும் பொருட்டு சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஒரு காற்று தர கண்காணிப்பு மையத்தினை வாரியம் அமைத்துள்ளது. சிகப்பு மற்றும் 17 வகையான அதிக மாசு படுத்தும் தொழிற்சாலைகள் இம்மையத்துடன் இணைக்கப்பட்டு வாரத்தின் ஏழு நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலையிலிருந்து வெளிப்படும் வாயுக்களின் தன்மை, மற்றும் சுற்றுப்புறக் காற்றின் தன்மை குறிப்பிட்ட தர அளவினை மீறும் பொழுது, அத்தொழிற்சாலைக்கும், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மற்றும் உறுப்பினர் செயலருக்கும் உடன் நிவாரண நடவடிக்கை எடுக்கும் பொருட்டு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் தானாக அனுப்பப்படும்.

கழிவு மேலாண்மை

மருத்துவக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகள், 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின் படி மருத்துவக் கழிவு என்பது மனித இனம் மற்றும் விலங்கினங்களுக்கு நோய் பரிசோதித்தல், சிகிச்சை அளித்தல், நோய் தடுப்பு செய்தல், மற்றும் மருத்துவ ஆராய்ச்சி செய்தல், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகளாகும். மருத்துவக் கழிவுகளை பாதுகாப்பான முறையில் சேகரித்து சுத்திகரிப்பு செய்து அகற்றுவது, மருத்துவக் கழிவுகளை உற்பத்தி செய்வோர் மற்றும் பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையத்தினை இயக்குவோர்களின் பொறுப்பாகும். மருத்துவக்கழிவு மேலாண்மை விதிகளை அனைத்து மருத்துவமனைகளும் சரிவர பின்பற்றுகின்றனவா என்பதை உறுதி செய்வது மாநில அரசு சுகாதாரத்துறையின் பொறுப்பாகும்.

மருத்துவமனைகள் மற்றும் பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அங்கீகாரம் வழங்கி, அந்நிறுவனங்கள் விதிகளை சரிவர கடைபிடிக்கின்றனவா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தை சார்ந்ததாகும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இவ்விதிகளின் கீழ் 6261 தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. அனைத்து மருத்துவமனைகளும் மருத்துவக்கழிவுகளை சேகரித்தல், கொண்டு செல்லுதல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் விஞ்ஞான முறைப்படி அகற்றுதல் பொருட்டு பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களில் உயர் அழுத்த நீராவி மூலம் சுத்திகரிக்கும் கருவி, துரும்பாக்கும் கருவி, எரிப்பான் மற்றும் பாதுகாப்பான நிலநிரப்பு ஆகிய அமைப்புகள் உள்ளன. தமிழ்நாட்டில் 11 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் இயக்கத்தில் உள்ளன. இவற்றில் நாளொன்றுக்கு 43 டன் மருத்துவக்கழிவுகள் கையாளப்படுகின்றன. மேலும் 3 பொது மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்கள் திருவள்ளூர், கடலூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.

மருத்துவக் கழிவுகளை மேலாண்மை செய்யும் பொது சுத்திகரிப்பு நிலையங்கள்

வ.எண்

பொது மருத்துவக்கழிவுகள் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பெயர் மற்றும் முகவரி

மருத்துவக் கழிவுகள் சேகரிக்கும் பகுதிகள்

கையாளப்படும் மருத்துவக் கழிவுகளின் அளவு (கிலோ கிராம் நாளொன்றுக்கு)

1

தி/ள். ஜி.ஜே. மல்ட்டிகிளேவ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட், தென் மேல்பாக்கம், செங்கல்பட்டு வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

சென்னையின் சில பகுதிகள், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம்.

6160

2

தி/ள். தமிழ்நாடு வேஸ்ட் மேனேஜ்மேன்ட் லிமிடெட், கின்னர் கிராமம், மதுராந்தகம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்.

வடசென்னை, திருவள்ளூர் மாவட்டம், கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம் (பகுதி).

6660

3

தி/ள். மெடிகேர் என்விரான்மென்ட் சிஸ்டம்ஸ், சென்ஜிபட்டி, தஞ்சாவூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவாரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம், சிவகங்கை மாவட்டம்.

1800

4

தி/ள். கென் பயோ லிங்க்ஸ், கண்டிபேடு, காட்பாடி வட்டம், வேலூர் மாவட்டம். வேலூர் மாவட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், வாணியம்பாடி மாவட்டம்.

7660

5

தி/ள். சொசைட்டி ஃபார் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட், குன்னூர், நீலகிரி மாவட்டம்

நீலகிரி மாவட்டம்

766

6

தி/ள். நீட் & கிளீன் சர்வீஸ் ஸ்குவாட், முத்துவயல் ராமநாதபுரம் மாவட்டம். இராமநாதபுரம் மாவட்டம்.

இராமநாதபுரம் மாவட்டம்.

21

7

தி/ள். ராம்கி எனர்ஜி & என்விரான்மென்ட் லிமிடெட், தங்காயூர், சேலம் மாவட்டம்.

சேலம் மாவட்டம், நாமக்கல் மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி), தர்மபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், கரூர் மாவட்டம், பெருந்துறை மாவட்டம்

1500

8

தி/ள். டெக்னோ தெர்ம் இண்டஸ்ட்ரீஸ், ஒரட்டுகுப்பை கோயம்புத்தூர் மாவட்டம்.

கோயம்புத்தூர் மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி), நீலகிரி மாவட்டம், ஈரோடு மாவட்டம் (பகுதி).

2500

9

தி/ள். கோவை பயோ வேஸ்ட் மேனேஜ்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஒரட்டுகுப்பை, கோயம்புத்தூர் மாவட்டம்.

கோயம்புத்தூர் மாவட்டம்

1450

10

தி/ள். ராம்கி எனர்ஜி & என்விரான்மென்ட் லிமிடெட், விருதுநகர் மாவட்டம்.

மதுரை மாவட்டம், விருதுநகர் மாவட்டம், திண்டுக்கல் மாவட்டம், தேனி மாவட்டம் மற்றும் ராமநாதபுர மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகள்

4000

11

தி/ள். அசெப்டிக் சிஸ்டம் பயோ மெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி, பாப்பன் குளம், திருநெல்வேலி மாவட்டம்

திருநெல்வேலி மாவட்டம், தூத்துக்குடி மாவட்டம்,கன்னியாக்குமரி மாவட்டம்.

1650

மின்னணுக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், மின்னணு கழிவு மேலாண்மை விதிகள் 2016-ஐ அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகள் அக்டோபர் 1, 2016 முதல் அமல் படுத்தப்பட்டுள்ளது. இவ்விதிகளின் படி, மின்னணு கழிவு என்பது பழைய, காலாவதியான தொலைபேசி, கைப்பேசி, கணினி, மடிக்கணினி, தொலைகாட்சி பெட்டி, குளிர்சாதனப்பெட்டி, துணி சலவை இயந்திரம், குளிர் சாதனப்பெட்டி, பாதரசம் கொண்ட விளக்குகள் போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள் அடங்கும். மின் மற்றும் மின்னணு சாதனங்கள் உற்பத்தியாளர், தயாரிப்பாளர், நுகர்வோர், மொத்தமாக நுகர்வோர், சேகரிப்பு மையங்கள், வியாபாரம் செய்வோர், இணையம் மூலம் சில்லரை வர்த்தகம் செய்வோர், மின் மற்றும் மின்னணு சாதனங்களை சீர் செய்வோர், பிரித்தெடுப்போர், மற்றும் மின்னணு கழிவு, மின் மற்றும் மின்னணு சாதனங்களை மறுசுழற்சி செய்தல், விற்பனை செய்தல், இடமாற்றம் செய்தல், கொள்முதல் செய்தல், சேகரித்தல், சேமித்தல், செயல்முறை செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு இவ்விதிகள் பொருந்தும்.

இவ்விதிகளின்படி, தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்பதன் அடிப்படையில் மின் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரிப்போர், அவர்களின் தயாரிக்கும் பொருட்களால் உண்டாகும் மின்னணு கழிவுகளை ஒருமுகப்படுத்தி சேகரிப்பு செய்வது அவர்களின் பொறுப்பாகும். மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் மின் மற்றும் மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வோர், பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்வோர், சீர் செய்வோர், ஆகியோருக்கு அங்கீகாரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் செய்ய வேண்டும். தயாரிப்பாளர்களின் நீடித்தப் பொறுப்பு என்பதன் அடிப்படையில் மின் மற்றும் மின்னணு சாதனங்களை தயாரிப்போர் மின்னணுக் கழிவுகளை ஒருமுகப்படுத்தி சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் கையாளுகின்றார்களா என்பதை மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் கண்காணிக்க வேண்டும். மேலும் மின் மற்றும் மின்னணு சாதனங்களை பிரித்தெடுப்போர், மறுசுழற்சி செய்வோர், மற்றும் சீர் செய்வோர்களை மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் அவ்வப்போது ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும். மேலும், மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் மறுசுழற்சி செய்வதை ஊக்குவிக்கும் வகையில் அதற்கான தகவல்கள், அங்கீகாரம் வழங்கப்பட்ட விபரங்கள் மற்றும் விதிகளை மீறுவோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், மின்னணு கழிவு மேலாண்மை மற்றும் கையாளுதல் விதிகளின்படி, 35 தொழிற்சாலைகளுக்கு (சேகரிப்பு மையங்கள் - 16, பிரித்தெடுப்போர் -14, மறுசுழற்சி செய்வோர்-5) அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தீங்கு விளைவிக்கும் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், தீங்கு விளைவிக்கும் மற்றும் இதர கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்து கொண்டு செல்லுதல்) விதிகள், 2016 – யை அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின்படி தீங்கு விளைவிக்கும் கழிவு என்பது ஏதாவது அதனுடைய இயற்பியல், வேதியியல், மறுவினையாக்கம், நச்சு பண்பு, எரியக்கூடிய, வெடிக்கக்கூடிய அல்லது அரிமான பண்புகளுடையதும், அல்லது மனிதநலம் அல்லது சுற்றுச்சூழலுக்கு அபாயம் தரவல்லது ஆகும். தீங்கு விளைவிக்கும் கழிவுகளை உற்பத்தி செய்வோர், அக்கழிவுகளை ஆரம்ப நிலையிலேயே தவிர்த்தல், குறைத்தல், மறு உபயோகம் செய்தல், மறு சுழற்சி செய்தல், மீளப்பெறுதல், இணை செயலாக்கத்திற்கு பயன்படுத்துதல் மற்றும் பாதுகாப்பான முறையில் அகற்றுதல் போன்ற வழிமுறைகளை கையாளவேண்டும். இவ்விதிகளின்படி மாநில மாசு கட்டுப்பாடு வாரியம் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை கையாள்வதற்கான அங்கீகாரத்தை வழங்கவேண்டும்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், 3545 தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்து இவ்விதிகளின் கீழ் அவற்றிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தமிழகத்தில் ஆண்டு ஒன்றுக்கு 6.92 இலட்சம் டன் தீங்கு விளைவிக்கும் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 2.97 இலட்சம் டன் கழிவுகள் நில நிரப்பு செய்யப்படுபவை, 3.43 இலட்சம் டன் கழிவுகள் மறு சுழற்சி செய்யப்படுபவை மற்றும் 0.52 இலட்சம் டன் கழிவுகள் எரிப்பான் மூலமாக எரிக்கக்கூடியவை. தீங்கு விளைவிக்கக் கூடிய இரசாயனப் பொருட்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் கழிவுப் பொருட்களைச் சுற்றுப்புறச் சூழலுக்கு எந்தவித பாதிப்புமின்றி விஞ்ஞான முறையில் பாதுகாப்பாக கையாளுவதற்கு தகுந்த மேலாண்மை நடவடிக்கையினை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் எடுத்து வருகிறது. கும்மிடிபூண்டியில் அமைந்துள்ள சிப்காட் வளாகம் மற்றும் விருதுநகர் மாவட்டம், உண்டுஉருமிகிடாக்குளம் கிராமத்தில் தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுப்பொருட்களை, பாதுகாப்பாக சுத்திகரித்து நிலம்நிரப்பும் பொதுவசதிகள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

துணி சாயமிடும் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து உருவாகும் தீங்கு விளைவிக்கும் திடக்கழிவினை சிமெண்ட் தொழிற்சாலைகளில் மூலப் பொருளாகவும் மற்றும் எரிபொருளாகவும் பயன்படுத்துவதில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னோடி முயற்சிகளை எடுத்துள்ளது. இதுவரை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து பெறப்பட்ட சுமார் 50,000 டன் திடக்கழிவுகள் சிமெண்ட் தொழிற்சாலையில் மூலப் பொருள்களுடன் கலந்து சிமெண்ட் தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மற்ற தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் தீங்கு விளைவிக்கும் கழிவுகளை சீரமைப்பு செய்து அதனை சிமெண்ட் தொழிற்சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இராணிப்பேட்டையில் ஒரு பொது வசதியை ஏற்படுத்தி இயக்கிவருகின்றது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை

மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் சூழல் மாறுபாடு அமைச்சகம், பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை விதிகள், 2016-யை அறிவிக்கை செய்துள்ளது. இவ்விதிகளின் படி, பிளாஸ்டிக் கழிவு என்பது பயன்படுத்தப்பட்டு அல்லது பயன்படுத்தும் நோக்கம் நிறைவேறியவுடன் தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக் ஆகும். பிளாஸ்டிக் கழிவுகளை தரம்பிரித்தல், சேகரித்தல், சேமித்தல், கொண்டு செல்லுதல், செயலாக்கம் செய்தல் மற்றும் அகற்றுதல் ஆகியவற்றிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளாட்சி அமைப்புகளின் பொறுப்பாகும்.

இவ்விதிகளின்படி, புதிய மற்றும் மறு சுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பைகள் 50 மைக்ரான் தடிமனுக்கு கீழ் இருக்கக்கூடாது. பிளாஸ்டிக் பைகள், பல அடுக்குகள் கொண்ட பேக்கேஜிங், பிளாஸ்டிக் சீட் அல்லது அது போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்வோர் மற்றும் இறக்குமதி செய்வோர் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்திடம் பதிவு சான்றிதழ் பெற வேண்டும். இவ்விதிகளின்படி பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பல அடுக்கு பேக்கேஜிங் பிளாஸ்டிக் உற்பத்தி செய்வோர் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவோர்களை பதிவு செய்து, கண்காணிப்பது மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தின் பொறுப்பாகும். இதுவரை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் 471 பிளாஸ்டிக் பைகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மற்றும் 140 பிளாஸ்டிக் பொருட்கள் மறு சுழற்சி செய்யும் தொழிற்சாலைகளை கண்டறிந்துள்ளது. இவற்றில் 219 தொழிற்சாலைகளுக்கு வாரியத்தின் பதிவுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி விதிகளை திறம்பட செயல்படுத்த வேண்டும் என அனைத்து உள்ளாட்சி அமைப்புகளையும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

பிளாஸ்டிக் கழிவுகளை முறைப்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிளாஸ்டிக்கின் தீமைகள் மற்றும் பயன்படுத்தி தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களின் தேவை ஆகியவை பற்றி பொதுமக்களுக்கும் / அரசு நிறுவனங்கட்கும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையங்களை ஏற்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தியாளர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தொடர்ந்து பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சென்னை, மதுரை மாநகராட்சிகள் மற்றும் திண்டுக்கல் நகராட்சிகளில் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையங்கள் உள்ளன. இவற்றில் கழிவுகளைத் துண்டாக்கும் உபகரணங்கள் உள்ளன. இம்மையங்களில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் மாநகராட்சிகளில் சாலைகள் போடப் பயன்படுத்தப்படுகின்றன. இச்சாலைகளை மாநகராட்சியும், உள்ளாட்சி அமைப்பும் பராமரிக்கின்றன.

சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஒரு பகுதியான சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம் டேனிடா உதவியுடன் 1994-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தில் மூன்றாவது தளத்தில் இயங்கி வருகின்றது.

சுற்றுச்சூழல் பயிற்சி நிலையம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத் தலைவர் தலைமையில் இயங்கும் வழிகாட்டும் குழுவால் வழிநடத்தப்படுகிறது. இக்குழுவில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்கள், தொழிற்சாலைகளின் தலைமை நிர்வாகிகள் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். மேலும் தொழிற்சாலைகள், அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசு நிறுவனங்களின் உறுப்பினர்கள் அடங்கிய தொழில் நுட்ப குழு பயிற்சி நிலையத்திற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்குகின்றது.

சுற்றுச்சூழல் பயிற்சி நிலையத்தின் முக்கிய குறிக்கோள் மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பணிபுரிவோர், தொழிற்சாலை பிரதிநிதிகள் மற்றும் அரசு சாரா அமைப்பின் பிரதிநிதிகள் ஆகியோருக்கு கீழ்க்கண்ட நோக்கங்களை அடைய பயிற்சி அளித்தல் ஆகும்.

  1. அனைத்து நிலையிலும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  2. சுற்றுச்சூழல் மற்றும் நீடித்து நிலைக்கும் வளர்ச்சிக்கான முழுமையான அணுகுமுறையினை அறிமுகப்படுத்துதல்.
  3. நீடித்து நிலைக்கும் வளர்ச்சியை அடையும் பொருட்டு ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் மேலாண்மை திட்டம் மற்றும் மேலாண்மைக்கான கொள்கைகள், அடிப்படை கோட்பாடு மற்றும் வழிமுறைகளை அறிமுகப்படுத்துதல்.
  4. சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை அரசு சாரா நிறுவனங்கள் வாயிலாக ஏற்படுத்துதல்.
  5. தொழிற்சாலையில் பணிபுரிவோர் மற்றும் நகர்ப்புற மக்களிடையே சுற்றுச்சூழல் கெடுவதால் ஏற்படும் அபாயத்தை, மற்றும் வாழ்க்கைத் தரம் எவ்வாறெல்லாம் பாதிக்கப்படுகிறது என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  6. மாசினை துவக்க நிலையிலேயே கட்டுப்படுத்தும் பொருட்டு தூய்மையான தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட மாற்று நடைமுறைகளைச் செயலாக்குதல். புதுப்பிக்க முடியாத வள ஆதாரங்களைப் பாதுகாத்தல், வள ஆதாரங்களின் இயல்பு நிலை மீட்பு, மறுசுழற்சி மற்றும் குறைந்த கழிவுப்பொருள் வெளியேற்றம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
  7. தொழிற்சாலை மற்றும் நகர்ப்புற வளர்ச்சியின் போது சுற்றுச்சூழல் மேலாண்மை குறித்த திறமையை மேம்படுத்துதல்.
  8. சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தாம் அறிந்த செய்தியை வெளிப்படுத்தும் திறமையை மேம்படுத்துதல்.

மேல்முறையீட்டு ஆணையம்

மாண்புமிகு மேல் முறையீட்டு ஆணையம், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அவர்கள் தலைமையின் கீழ் இரண்டு தொழில்நுட்ப உறுப்பினர்களை கொண்டு அரசாணை எண். 66, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை தேதி 7.5.2013-ன்படி அமைக்கப்பட்டது. இது எண். 51, கங்காதீஸ்வரர் கோவில் தெரு, புரசைவாக்கம், சென்னை – 86-ல் இயங்குகிறது. திருத்தப்பட்ட 1974-ஆம் ஆண்டு நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் பிரிவு 25, 26 அல்லது 27 மற்றும் திருத்தப்பட்ட 1981-ஆம் ஆண்டு காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் மாநில மாசு கட்டுப்பாடு வாரியத்தால் பிறப்பிக்கப்பட்ட ஆணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்தவொரு நபரும், மேற்கூறிய ஆணையத்திடம் மேல்முறையீடு விண்ணப்பம் செய்யலாம்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனபாதுகாப்புக்குரிய வழக்குகளை பயனுள்ளதாகவும், விரைவாகவும் முடித்து வைக்க 18.10.2010 அன்று புதுடில்லியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது. தேசிய தீர்ப்பாயம் சட்டம் 2010-யின் படி பிரிவு 28/29 மற்றும் 33ஏ-படி நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1974, பிரிவு 13 நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) மேல் வரி சட்டம் 1977, பிரிவு 31 காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 1981 மற்றும் பிரிவு 5 சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம் 1986-ன்படி பிறப்பிக்கப்பட்ட ஆணை மற்றும் முடிவுகளின்பால் இடருற்ற நபர்கள் மேற்கூறிய ஆணைகள் கிடைக்க பெறப்பட்ட 30 தினங்களுக்குள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யலாம்.

சென்னையில் தென் மண்டலத்திற்கான தேசிய பசுமை தீர்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வருகின்றது. தென் மண்டல தேசிய பசுமை தீர்பாயத்தினை அமைக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பெருமளவு உதவி புரிந்துள்ளது. மேலும் சென்னையில், தேசிய பசுமை தீர்பாயத்தின் இரண்டாவது அமர்வை ஏற்படுத்த வாரியம் உதவி புரிந்து, இரண்டாவது அமர்வானது 23.03.2015 முதல் இயங்கி வருகின்றது. தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அரும்பாக்கம், சென்னை-106-ல் உள்ள தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கிவருகின்றது.

வாரிய முயற்சிகள்

நீர் பாதுகாப்பு

நீர் பாதுகாப்பு முறையாக, மணலி மற்றும் பேசின்பிரிட்ஜ் பகுதியில் உள்ள மூன்று பெரிய தொழிற்சாலைகள், நாளொன்றுக்கு சுமார் 25 மில்லியன் லிட்டர் நகர வடிகால் கழிவுநீரை மூன்றாம் கட்ட சுத்திகரிப்பிற்குப் பிறகு குளிரூட்டும் தேவைகளுக்காக பயன்படுத்தி வருகின்றன. திருப்பூரில் உள்ள பெரிய சாயப்பட்டறை தொழிற்சாலை உட்பட மாநிலத்தில் உள்ள சாயப்பட்டறை தொழிற்சாலைகள் கழிவுநீரிலிருந்து உபயோகமான நீரை மீட்சி செய்வதற்காக எதிர்மறை சவ்வூடு நிலையங்களை அமைந்துள்ளன. மீட்சி செய்யப்பட்ட நீர் மறு உபயோகம் செய்யப்படுகிறது. சர்க்கரை தொழிற்சாலைகளில், ஆவியாக்கும் நிலையத்திலிருந்து திரவமாக்கப்பட்ட நீர் மறு உபயோகம் செய்யப்படுகிறது. இசைவாணை வழங்குவதில் ஒரு நிபந்தனையாக, தொழிற்சாலைகள் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை நிறுவ அறிவுறுத்தப்பட்டுள்ளன. அனைத்து தொழிற்சாலைகளும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் நிறுவியுள்ளன. தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலகங்களிலும் மேல்தளத்தில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தூய்மையான தொழில்நுட்பங்கள்

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் இறுதிமுறை சுத்திகரிப்பு முறை மட்டுமல்லாமல் ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் தூய்மை தொழில் நுட்பதிறனை வளர்ப்பதில் ஈடுபட்டுள்ளது. ஒருமுகப்படுத்தப்பட்ட அணுகுமுறையில் தூய்மை தொழில் நுட்பங்கள் பாதுகாப்பை மேம்படுத்த வாரியத்தின் முனைப்பான ஆதரவு மற்றும் ஊக்குவிப்புடன், எரிசோடா உற்பத்தியில் பாதரச கலத்திற்கு பதிலாக சவ்வூடு கலம் பயன்படுத்துதல், சிமெண்ட் தொழிற்சாலைகளில் காற்று மாசினைக் குறைக்க ஈர செய்முறைக்கு பதிலாக உலர் செய்முறையினைப் பின்பற்றுதல், பிபிசி சிமெண்ட் தயாரிப்பில் 25 முதல் 30 சதவிகிதம் பறக்கும் சாம்பலைப் பயன்படுத்துதல், கந்தக அமிலம் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இருமுறை மாற்றம் மற்றும் உட்கிரகிக்கும் தொழில்நுட்பத்தை செயல்படுத்துதல், சயனைடு அற்ற முலாம் பூசுதல் மற்றும் சயனைடு உப்புக்கு பதிலாக வாயு கார்புரைசிங் முறையை வெப்பக் கடினப்படுத்துதலுக்கு பின்பற்றுதல் ஆகிய தூய்மையான தொழில்நுட்பங்களுக்கு மாறியுள்ளன. மரக்கூழ் மற்றும் காகித தொழிற்சாலைகள் டையாக்ஸின் உள்ளிட்ட ஆர்கனோ – குளோரைட்ஸ் உருவாவதை குறைக்கும் வகையில் குளோரின் மூலக்கூறு இல்லாத சலவை முறையினை பின்பற்ற ஊக்கப்படுத்தப்பட்டு

கழிவுகள் குறைப்பு

தூய்மை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதனால், கழிவுகளிலிருந்து பொருட்களை மீட்பதிலும், கழிவுகளைக் குறைப்பதிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, தோல் பதனிடும் தொழிற்சாலை கழிவுநீரிலிருந்து குரோமியமும், உரத் தொழிற்சாலைகளிலிருந்து அம்மோனியாவும் மீட்பு செய்யப்படுகின்றன. தொழில்முறை கழிவுநீர் வெளியேற்றாத பூஜிய நிலையினை அடைவதற்காக எரிசாராய தொழிற்சாலைகள் அறிவுறுத்தப்பட்டன. 7 எரிசாராய தொழிற்சாலைகள் கழிவுநீரை, சர்க்கரை ஆலை கழிவு மண்ணுடன் சேர்த்து உயிரியல் உரமாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளன. 5 எரிசாராய தொழிற்சாலைகள் செறிவூட்டும் முறையில் கழிவுநீரை எரித்து பூஜ்ய திரவ கழிவுநீர் வெளியேற்றம் நிலையை அடைந்துள்ளன.

எரிசக்தி சேமிப்பு

எரிபொருள் பாதுகாப்பு மற்றும் மீட்சி செய்வதற்கான வழிமுறையாக, அனைத்து எரிசாராய தொழிற்சாலைகளும் தமது இறுதி கழிவிலிருந்து காற்றிலி தொட்டியின் மூலம் மீத்தேன் வாயுவை மீட்சி செய்கின்றன. பெரிய சர்க்கரை தொழிற்சாலைகள் உற்பத்தியுடனான மின்நிலையங்களை அமைத்துள்ளன. சவ்வரிசி தொழிற்சாலைகள் தமது செய்முறை கழிவுநீரிலிருந்து காற்றிலி தொட்டியின் மூலம் மீத்தேன் வாயுவை மீட்சி செய்கின்றன. செரியூட்டப்பட்ட கார்பன் தயாரிப்பில் வெளியாகும் அனல் காற்றை மறு சுழற்சி செய்து கொதிகலனுக்கு பயன்படுகின்றது. இதனால் விறகு மற்றும் நிலக்கரி எரிபொருள் பயன்பாடு தவிர்க்கப்பட்டதுடன், பசுமைக்குடியில் வாயுக்கள் வெளியேறுவதும் தவிர்க்கப்பட்டுள்ளது, பிற தொழிற்சாலைகள் குறைந்த எரிசக்தியினை உபயோகிக்க ஊக்கப்படுத்தப்படுகின்றன. இது, அத்தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் அறிக்கையின் வாயிலாக தணிக்கை செய்யப்படுகின்றது. வாரியத்தின் சொந்த கட்டங்களில் இயங்கும் 18 அலுவலகக் கட்டிடங்களில் சூரிய சக்தி பெருவதற்கான தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், புதிதாக கட்டப்பட்டு வரும் அலுவலகக் கட்டிடங்களிலும் சூரிய ஒளி தகடுகள் பொருத்தப்படும்.

தொழில் நுட்ப செயல் விளக்க மையம்

தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியமானது சட்டங்களை அமல்படுத்துகையிலும், கண்காணிக்கையிலும் துhய தொழில் நுட்பம், கழிவைக் குறைக்கும் தொழில் நுட்பம், மாற்று முறை மூலம் அபாயகர பொருளை நீக்குதல், மறு சுழற்சி, மறுபயன்பாடு, பூஜ்ய நிலை திரவ வெளியேற்றம் மற்றும் தமிழ்நாட்டிற்குள் நிலைத்தகு தொழில் வளர்ச்சியைக் கொண்டு வருவதற்கான சிறந்த தொழில் நுட்பம் ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 46,000க்கும் அதிகமாகி விட்டதால், நிலைத்தகு வளர்ச்சியைக் கொண்டுவருவதற்கான சுற்றுச் சூழல் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண்பது அமல்படுத்தும் அதிகாரிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் சவாலாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் வாரியம் சென்னை ஐ.ஐ.டி யுடன் இணைந்து ஒரு புதிய தொழில்நுட்ப விளக்க மையத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக ஐ.ஐ.டி யுடன் 17.4.2013 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு ரூ 5.கோடி நிதியினை வாரியம் ஒதுக்கியுள்ளது.

தொழில் நுட்ப செயல்விளக்க மையத்தின் குழுவானது, அரிசியாலைகள், ஐவ்வரிசியாலைகள், துணிக்கு சாயமிடும் சிறிய ஆலைகள் ஆகியவற்றிற்கான சில ஆய்வுகளை நடத்தின. இம்மையம், நகராட்சி அலுவலர்கள், தமிழ் நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலர்கள் மற்றும் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்காக திடக்கழிவு நிலம் நிரப்பு செய்யும் இடங்களில் ஏற்படும் தீயை மேலாண்மை செய்வது குறித்த பயிற்சி வகுப்பை நடத்தியது. மேலும் ஐவ்வரிசி ஆலைகளின் கழிவு நீரின் தன்மை, காற்றற்ற சுத்திகரிப்பு, பயோ எரிவாயு உற்பத்தி, பயோ எரிவாயுவின் தரத்தையும் அளவையும் அதிகரிப்பதற்கான செய்முறை ஆகியவற்றை நன்கு புரிந்து கொள்வதற்காக ஒரு தொழில் நுட்ப யோசனைகள் மற்றும் கருத்துக்கள்ப்பட்டறையை இம் மையம் நடத்தியது. மேலும், சவ்வரிசி தொழிற்சாலை கழிவுநீரை பயன்படுத்தி காற்றில்லா சுத்திகரிப்பு செய்து எரிவாயு எடுப்பதற்கான சிறந்த தொழிற்நுட்ப முறையை செயல்விளக்கம் செய்து காட்டுவதற்கு ஒரு 'மேல் நோக்கி நகரும் காற்றில்லா சேற்றுபடலம்' என்ற அமைப்பினை இம்மையம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக மேலும் ஆராய்ச்சி நடந்து வருகிறது.

பசுமை போர்வை திட்டம்

மாசினைத் தடுக்கும் வழிமுறையாக, தொழிற்சாலைகள் தங்களது வளாகத்தில் 25 சதவீதம் நிலப்பரப்பில் அடர்த்தியான கிளைகளைக் கொண்ட மரங்களை வளர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தொழிற்சாலைகள் போதிய அளவு மரங்களைத் தங்களது வளாகத்திலும் மற்றும் தொழிற்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வளர்க்க நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளன.

ஆதாரம் : தமிழ்நாடு மாசுகட்டுபாட்டு வாரியம்.

3.5
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top