பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

பொருளாதாரத் திட்டமிடுதல்

பொருளாதாரத் திட்டமிடுதல் (Economic Planning) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

திட்டமிடுதலின் பொருள் விளக்கம் மற்றும் திட்டமிடுதலின் அவசியம்

இருபதாம் நூற்றாண்டு ஒரு திட்டமிடுதலின் சகாப்தமாகும். ஏறக்குறைய, ஒவ்வொரு நாடும் ஏதோ ஒரு வகையான திட்டமிடுதலைக் கொண்டிருந்தன. சமதர்மப் பொருளாதாரத்தில் திட்டமிடுதல் சற்றேரக்குறைய ஒரு சமயத்தைப் போன்றது. முதலாளித்துவ நாடுகளாகிய அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் பகுதி சார்ந்த திட்டமிடுதலை பெற்றுள்ளன. 19ம் நூற்றாண்டில் அரசானது, கட்டுப்பாடற்ற வாணிகக் கோட்பாட்டு அரசாக (Laissez-faire) இருந்தது. பொருளாதார நடவடிக்கைகளில், தலையிடாக் கொள்கையைப் பின்பற்றியது. ஆனால் நவீன அரசுகள், நல அரசுகளாக (Welfare State) உள்ளன. இரண்டு உலகப் போர்களும், 1930ம் ஆண்டுகளின் பெருமந்தம் மற்றும் சோவியத் ரஷ்யாவில் திட்டமிடுதலில் வெற்றியும், திட்டமிடுதலின் இன்றியமையாமையைக் கோடிட்டுக் காட்டுகிறது. சோவியத் ரஷ்யாவின் திட்டமிடுதல் உலகத்திற்கு ஒரு பரிசாகும். நாட்டளவில், ரஷ்யாவே பொருளாதார திட்டமிடுதலை முதன்முறையாக செயல்படுத்தியது.

இலயனல் ராபின்ஸ் அவர்கள் "அனைத்து பொருளியல் வாழ்வும் திட்டமிடுதலை உட்படுத்தியதே” என்று குறிப்பிடுகிறார். திட்டமிடுவது என்பது ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு நடந்து கொள்வது, தெரிவு செய்வதாகும். தெரிவு செய்தலே பொருளாதார நடவடிக்கையின் சாராம்சமாகும்.

பார்பரா ஊட்டன் அவர்களின் வார்த்தைகளில் “பொது நிருவாகத்தினர் பொருளாதார முன்னுரிமைகளைத் தெளிவாக திட்ட வட்டமாகத் தேர்ந்தெடுப்பதை திட்டமிடல் எனலாம்” என்று கூறுகின்றார்.

குறிப்பிட்ட நோக்கத்தை அடைய ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட, உணர்வுள்ள மற்றும் அடிப்படையாய் இருக்கின்ற மாற்றுக்களுள் தெரிவு செய்ய எடுத்துக்கொள்ளும் ஒரு தொடர்ச்சியான முயற்சியே திட்டமிடுதல் என்றும் பல பொருளியலறிஞர்கள் ஒத்த கருத்தை தெரிவிக்கிறார்கள். திட்டமிடுதலானது, பற்றாக்குறையாய் உள்ள வளங்களை சிக்கனப்படுத்துதலைப் பற்றி உள்ளடக்கியுள்ளது.

உலகில், சுமார் ஐம்பது மற்றும் அறுபது ஆண்டுகளுக்கு முன்புதான் பல குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகள் சுதந்திரம் பெற்றன. அச்சமயம் அவை ஏழ்மை நிலையிலேயே இருந்தன. எனவே புதிதாக தோன்றிய இந்நாடுகளின் தலையாய தொழில், தமது மக்களுக்கு உணவு, உடை மற்றும் உறைவிடத்தை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதைச் செய்ய, முதலாவதாக, இவை நாட்டு வருமானத்தை அதிகரிக்க வேண்டியதாயிற்று. அவற்றுள் பல நாடுகள் விவசாய நாடுகளாக இருந்தமையால், சில வேளாண்மை மேம்பாட்டு திட்டங்களை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி தமது பொருளாதாரத்தை தொழில்மயமாக்கி அனைவருக்கும் வேலை வாய்ப்பை உண்டு பண்ண வேண்டி இருந்தது. எதையாகிலும் செய்து வேலை வாய்ப்பை விரிவாக்க வேண்டி இருந்தது.

மேலும், பெரும்பாலான நாடுகள் ஏதோ ஒரு வகையான சோசியலிசத்தோடு பிணைப்பட்டிருந்ததால், அவைகள் சொத்து மற்றும் வருமானத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஏழை நாடுகள் பொருளாதார திட்டங்களின் வாயிலாகவே மேற்கூறிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முயற்சித்தன.

தலையிடாக் கொள்கை என்பது நவீன அரசுகளுக்கு ஒரு ஆடம்பரமாகும். எனவே அவைகள் பொருளாதாரத் திட்டங்களைக் கொண்டுள்ளன. உலகின் வளர்ந்த நாடுகளில் அவைகள் பொருளாதார நிலைபாட்டிற்காக திட்டமிட்டன. ஆனால் வளர்ச்சி குறைந்த நாடுகள் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக திட்டமிடுகின்றன.

வளர்ச்சிக் குறைந்த நாடுகளில் பொருளாதார திட்டங்கள் வளருவதற்கான காரணம் அங்காடி இயக்கும் செயலமைவுத் திட்டத்தின் (market mechanism) தோல்வியே ஆகும். முதலாளித்துவப் பொருளாதாரம் அடிப்படையிலேயே ஒரு அங்காடிப் பொருளாதாரம் மற்றும் விலை இயக்கமனைத்தும் அங்காடி அமைப்பே நடத்திவிடுகின்றது. விலை அமைப்பே முதலாளித்துவத்தின் அடிப்படை நிறுவனமாகும் (Institution). வளங்களின் ஒதுக்கீடு மற்றும் வெகுமதியைப் பங்கிடுதலும் விலையமைப்பின் வாயிலாகவே நடைபெற்றன. வர்த்தகரின் தீர்மானங்களும், உழவர், தொழிலதிபர்கள் போன்றோர் அனைவரும் இலாப நோக்கத்துடனேயே நடத்தப்பட்டனர். அங்காடி அமைப்பு நிறைவான போட்டியுடையதாக இருந்தால் விலை அமைப்பு சிறந்ததாகும். ஆனால் முற்றுரிமை மற்றும் நிறைகுறை போட்டி அங்காடியில் நிலவினால் விலை அமைப்பு தோற்றுப் போகும். இத்தோல்வி, 'அரசின் தலையீட்டை பொருளாதாரத் திட்டத்தின் வாயிலாகக் கூவி அழைக்கும்.

பொருளாதாரத் திட்டத்திற்கும் தலையிடாக் கொள்கைக்குமிடையே நிலவும் சச்சரவு 'திறமையைக் குறித்தே ஆகும். தலையிடாக் கொள்கைக்கு விரோதமான காரணங்கள் கீழ்காணும் அடிப்படையிலமைந்துள்ளன.

 1. இக்கொள்கையில் வருமானம் நியாயமான முறையில் பகிரப்படவில்லை. இதன் விளைவாக, முக்கியமில்லாத அவசரமற்றப் பொருட்களை செல்வந்தருக்காக உற்பத்தி செய்வதோடு, ஏழை மக்களின் அடிப்படை பண்டங்களை கல்வி, சுகநலன், வீட்டு வசதி, நல்ல உணவு மற்றும் அடிப்படை வசதிப் பொருட்களின் உற்பத்தி இல்லாமல் போய்விடுகிறது. இச்சூழ்நிலையில், அரசு பொருளாதார நடவடிக்கைகளை பொருளாதார திட்டங்கள் வாயிலாகக் கட்டுப்படுத்தி, செல்வ மற்றும் வருமான ஏற்றத்தாழ்வுகளை குறைக்க வழி செய்யலாம்.
 2. அங்காடிப் பொருளாதாரம், 'வாணிபச் சூழலின்' பலியே ஆகும். வாணிபச் சூழலில் செழிப்பும், மந்தமும் மாறி மாறி ஏற்படும் காலக்கட்டம் ஏற்படுகிறது. மந்த நிலமை ஏற்படும் போது வாணிபம் பாதிக்கப்படும். விலை இறக்கம் காணப்படும். பேரளவு - வேலைவாய்ப்பின்மை நிலை நிலவும். எனவே அத்தகைய நிலையில் அரசு தலையிடவேண்டியிருக்கும். சோவியத் ரஷ்யாவில் செய்யப்பட்டது போல, முறையான திட்டங்களை தீட்டி வாணிபச் சூழலைக் கட்டப்படுத்தலாம்.

சோவியத் ரஷ்யா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளோடு, 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில், திட்டமிடுதல் பல வளர்ச்சி குறைந்த நாடுகளிடையே பிரபலமாக பரவியது. இதனால், இந்நாடுகள் முழுமையாக மைய திட்டமிடுதலில் நம்பிக்கை கொண்டிருந்தன என பொருள்படாது. திட்டமிடுதலின் மைய வாதம் யாதெனில் - திட்டமிடுதல் இருக்கலாமா கூடாதா என்பதல்ல ஆனால் திட்டமிடுதல் எந்த வடிவில் தீட்டப்படவேண்டும் என்பதே. இவ்விவாதத்தின் மையம் யாதெனில் - அரசின் செயல்பாடுகள் - விலை அமைப்பின் மூலமாகவா அல்லது விலை அமைப்பை விட்டு ஒய்வதா என்பதே ஆகும்.

பின்தங்கிய நாடுகளில் திட்டமிடுதலின் பிரச்சனைகள்

வளர்ந்த நாடுகளைவிட, பின்தங்கிய நாடுகளில் திட்டமிடுதல் அத்தியாவசியமானது மட்டுமின்றி திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் என்பது மிக மிகக் கடினமானதாகும். எல்லாவற்றுள்ளும் முதன்மையானது. "திட்டமிடுதலுக்கு ஒரு வலிமைமிக்க, தகுதிவாய்ந்த மற்றும் ஊழலற்ற ஆட்சி செய்தல் அத்தியாவசியமானது” என்று ஆர்தர் லூயிசு குறிப்பிடுகின்றார். ஆனால் பெரும்பாலான, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளில் வலுவற்ற தகுதியற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சி செயலையே பெற்றுள்ளன. மேலும் அவைகள் மக்களாட்சி திட்டங்களைக் கொண்டுள்ளன. எனவே, சோவியத் ரஷ்யாவில் நடைபெற்றது போன்று எந்த ஒரு காரியத்தையும் விரைவில் இந்நாடுகளால் செய்ய இயலவில்லை.

அவைகள் மெதுவாக செல்ல வேண்டும். அவைகள் வேளாண்மையிலேயே உழன்றன. மேலும், வேளாண்மை நிச்சயமற்ற இயற்கைக் காரணிகளையே சார்ந்திருத்தலால், அவர்களது விவசாய நிகழ்வுகளில் ஏராளமான நிச்சயமற்ற நிலை காணப்படுகிறது. மக்கள் தொகை மிகுதியும் குறைந்த முதலாக்கமும் வேறு முக்கியப் பிரச்சனைகளாக (திட்டமிடுதலுக்கு) இந்நாடுகளில் அமைந்துள்ளன.

பொருளாதார திட்டமிடுதலின் இயல்புகள்

திட்டமிட்ட பொருளாதாரத்தில், எதை எவ்வளவு உற்பத்தி செய்வது, எப்பொழுது, எங்கு உற்பத்தி செய்வது, உற்பத்தியை யாருக்காக பங்கீடு செய்வது போன்றவை அரசு போன்ற மத்திய நிர்வாகத்தால் திட்டக் குழுவின் மூலமாக முக்கிய பொருளாதார தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. அத்தீர்மானங்களை இவை அனைத்தும் செய்முறைப்படுத்துவது அரசின் கடமையாகும். திட்டத்தை வரைவதற்கு முன்பு, கிடைக்கக்கூடிய அனைத்து வளங்களாகிய, பருப்பொருள்வளம், நீதிவளம், மனிதவளம் ஆகியவற்றின் முழுமையான ஆய்வினை மேற்கொள்ள வேண்டும். (எ. கா.) சோவியத் ரஷ்யாவில், 1917-ஆம் ஆண்டில் ரஷ்ய புரட்சிக்கு பின்பு 1918 முதல் 1921-ஆம் ஆண்டுவரை கம்யூனிசப் போர் நடந்தது. அதன் பின்பு 1921 முதல் 1924 வரை புதிய பொருளாதார கொள்கை நடப்பில் இருந்தது.

1924 - முதல் அரசு கிடைக்கக் கூடிய வளங்களைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வினை மேற்கொண்டு 1928-ம் ஆண்டு தனது முதலாம் ஐந்தாண்டு திட்டத்தை நடைமுறைபடுத்தியது. வளங்களின் ஆய்விற்குப் பிறகு நீண்டகால நோக்கங்களுள் ஒன்று எஃகு, நிலக்கரி மற்றும் மின்சாரம் போன்ற உற்பத்தியில் முன்னணியில் உள்ள உலகப் முதலாளித்துவ நாடுகளாகிய அமெரிக்கா ஐக்கிய நாடுகள் போன்ற நாடுகளோடு இணையான நிலையை சோவியத் ரஷ்யாவும் எட்டிப்பிடிக்க வேண்டும் என்ற நீண்டகால நோக்கத்தை ரஷ்யாவின் திட்டகுழு தீர்மானம் செய்தது. ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கங்களை மனதில் கொண்டு பருப்பொருள் இலக்குகளை நிர்ணயம் செய்யப்படும். அதன் பின்பு நிதிவளங்களை திரட்டுவதற்கான வழிமுறைகள் கண்டுபிடிக்கப்படும். திட்டங்களானது, அவற்றின் பயன்களை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான விவரங்களையும் பெற்றிருக்கும்.

திட்டமிடுதலின் தன்மையானது, அவைகளை நடைமுறைபடுத்தும் பொருளாதார அமைப்பு வகைகளாகிய முதலாளித்துவம், சமத்துவம் மற்றும் கலப்பு பொருளாதாரம் போன்ற அமைப்புக்களைப் பொறுத்தது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் (எ.டு.கா. இங்கிலாந்து) பகுதி சார்ந்த திட்டமிடுதல் (Partial Planning) காணப்படும். சமத்துவப் பொருளாதாரத்தில் முழுமையான திட்டமிட்டப் பொருளாதார அமைப்பு இருக்கும். (எ.டு.கா. சோவியத் ரஷ்யா) இந்தியா போன்ற கலப்புப் பொருளாதாரத்தில் பொதுத்துறை மற்றும் தனியார் துறை இரண்டுமே மிக முக்கியப் பங்கினை, பொருளாதாரத் திட்டமிடுதலில் வகிக்கும்.

சாதாரணமாக, ஒரு திட்டத்தின் கால அளவு ஐந்து ஆண்டுகளாகும். திட்டத்தினை முன்கூட்டியே வரைந்திட வேண்டும். இந்தியாவில் இதை திட்டக்குழு செய்து வருகிறது. ஒரு திட்டமானது ஒரு குறிப்பிட்ட அளவுடையதாக, அமைந்து இலக்கினையும் திட்டத்திற்காக குறித்து, மேலும் திட்டத்திற்கான நிதி வளங்களை திரட்டுவதற்கான வழி முறைகளையும் குறிப்பிட்டிருக்கும்.

திட்டமிடுதலின் முதல் படி, குறிப்பிட்ட திட்டக்காலத்தில், ஒரு பொருளாதாரத்தின் வளர்ச்சி இலக்கை தீர்மானித்தலாகும். அதன் பிறகு திட்டமிடுவோர், பொருளாதாரத்தை, வேளாண்மை, தொழில்துறை மற்றும் பணித்துறை என பல துறைகளாக பிரித்துவிடுவர். ஒவ்வொரு துறையின் பருப்பொருள் இலக்கினை நிர்ணயம் செய்வர். பின்பு எவ்வளவு முதலீட்டினை எந்தெந்த துறைகளுக்கு இலக்குகளை அடைய ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தீர்மானிப்பர். அதன் பின்பு, முதலீடு செய்வதற்கான சரியான முதலீட்டு திட்டத்தையும், உற்பத்தி நுட்பத்தையும் வகுப்பார்கள். வளர்ச்சி குறைந்த நாடுகள் ஏழை நாடுகளாக இருப்பதால், உழைப்பு-செரிவு முறையை கையாண்டு வேலைவாய்ப்பினை விரிவாக்கலாம். ஆனால் சில கனரக தொழில்களான இரும்பு போன்றவை மூலதனச் செரிவு முறையையே கையாளமுடியும். திட்டத்தின் வெற்றியும் தோல்வியும் தெரிவு செய்தலையே சார்ந்ததாகும்.

திட்டங்களின் வகைகள் (Types of Planning)

மையத் திட்டம் (Centralised Planning)

ஒரு சமத்துவ பொருளாதாரத்தில் (எ. கா. முந்தைய சோவியத் ரஷ்யா) மையத் திட்டமிடல் இருந்தது. “இது ஆணைதிட்டமாகும் (அ) கட்டளை திட்டமாகவும் இருக்கலாம். சமஉடமை சமுதாயத்தில் அனைத்து உற்பத்தி காரணிகளும் அரசுக்கு சொந்தமானது அனைத்து அடிப்படை தீர்மானங்களாகிய தொழில்மயமாவதற்கு முன்னுரிமை அளிப்பதா? (அ) வேளாண்மை வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதா ? தொழில் மயமாக்கலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருந்தால் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதா? அல்லது நுகர்வுப் பொருள் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதா? என்ற பொருளாதார முடிவுகளை மத்திய திட்ட நிர்வாகம் தீர்மானிக்கும்.

தூண்டும் திட்டம் (Planning by Inducement)

குடியாட்சி முறையில் திட்டமிடுதல் தூண்டுதல் மூலமாக நடைபெறுகிறது. (எ. கா.) கலப்பு பொருளாதாரமாகிய நமது நாட்டில் பொதுத்துறையும், தனியார் துறையும் செயல்படுகிறது. அரசாங்கம் தனியார் தொழில் துறைகளை திட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றும் வண்ணம் சில வரிச் சலுகைகள், மற்றும் பிற ஊக்கங்கள் அளித்து தனியார் துறையை தூண்டிவிட வேண்டும்.

சுட்டிக் காட்டும் திட்டம் (Indicative Planning)

இத்தகைய திட்டம் முதலில் அரசு தொழில் நிருபர்களையும், தொழில்சாலை பிரதிநிதிகளையும் முன்னதாகவே கலந்தாலோசிக்க வரவேற்று நடப்பு திட்டத்தின் தான் என்னென்ன செய்ய உள்ளது. தனது முன்னுரிமைகள் மற்றும் நோக்கங்களை குறிப்பிட்டு கலந்தாலோசிக்கும்.

வெவ்வேறு நாட்டங்களையுடைய நிபுணர்களுடன் விரிவான கலந்தாலோசனை நடத்தியப்பின் திட்டம் தீட்டப்படும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு பிரான்சு நாட்டின் சுட்டிக்காட்டும் திட்டமாகும். 1991-ம் ஆண்டில் தாரளமயமாதல் மற்றும் தனியார் மயமாக்கும் கொள்கைகள் பின்பற்றப்பட்டப் பின்பு இந்திய திட்டமிடுதலும் கூட ஒருவகையில் சுட்டிக்காட்டும் திட்டமாகவே மாறியது. பொருளாதார திட்டமிடுதலை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

அவை

 1. நடுப்பருவ திட்டம் (midterm plan)
 2. குறுகிய காலத்திட்டம் (Short term plan)
 3. தொலை நோக்கு திட்டம் (perspective plan).

நம் நாட்டின் ஐந்தாண்டு திட்டங்கள் நடுப்பருவ திட்டங்களாகவும், குறுகிய கால திட்டங்களாகவும், ஓராண்டு திட்டங்களாகவும் இருந்துவருகின்றன. திட்டங்களை நிறைவேற்றும் காலத்தில் ஐந்தாண்டு திட்டங்கள் ஓராண்டு திட்டங்களாகவும் பகுக்கப்பட்டு செயல்பட்டன. தொலை நோக்கு திட்டங்கள், நீண்டகால திட்டங்களாகும். இத்திட்டத்திற்கான கால அளவு 20 முதல் 25 ஆண்டுகளாகும். ஐந்தாண்டு திட்டங்கள் எல்லாம் தொலை நோக்கு திட்டங்களின் நோக்கத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சுழல் திட்டம் (Rolling Plan)

நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை கொண்ட ஐந்தாண்டு திட்டங்கள் போல இல்லாமல், இச்சுழல் திட்டமானது, ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் இலக்குகளை தீர்மானித்து மற்றொரு ஆண்டையும் திட்டத்தோடு சேர்த்துக் கொள்ளுதலாகும். அதாவது அனைத்து ஐந்தாண்டுகளுக்கும் குறிப்பிடப்பட்ட இலக்குகள் இல்லாமல், நடப்பு ஆண்டில் திட்டத்தின் செயல் திறனை பொறுத்து, மற்றொரு ஆண்டிற்கு இலக்கிணை தீர்மானிக்கக் கூடும். இவ்வாறாக இத்திட்டம் தொடரும் இதுவே சுழல் திட்டத்தின் மைய கருத்தாகும்.

மைய திட்டமிடுதலின் (Centralised Planning) மிகப்பெரிய நன்மையாதெனில் திட்டங்களை மிக வேகமாக நடைமுறைபடுத்தி, நோக்கங்களையும் இலக்குகளையும் அடைந்துக் கொள்ளலாம். (எ. கா.) சோவியத் ரஷ்யாவில் திட்டமிடுதலின் வழியாக வேளாண்மையை முதன்மைத் தொழிலாக கொண்டிருந்த பொருளாதாரத்தை மாற்றியமைத்து 12 ஆண்டுகளுக்குள்ளேயே தொழில்மயமான நாடாக மாற்றிக் கொண்டது. இந்த மத்திய மயமாக்கப்பட்ட திட்டமிடுதலின் தீமையாதெனில் அரசு ஒரு குறிப்பிட்ட ரீதியான முற்றுரிமையை அனுபவித்து போட்டியின்மையால் அரசுக்கு சொந்தமான உற்பத்தி அலகின், உற்பத்தி திறனை பரிசோதிக்க கடினமான நிலையை உருவாக்குகிறது. தூண்டப்பட்ட திட்டத்தின் (inducement plan) கீழ் (மக்களாட்சி திட்டமிடுதல்) பொதுமக்களுக்கு தங்கள் கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பளித்தாலும் அரசு பின்பற்றும் மக்களாட்சி முறையில் எழக்கூடிய நிர்வாக கால தாமதங்களாலும், பாராளுமன்ற மக்களாட்சி முறையில் ஏராளமான காலதாமதங்களாலும், திட்டங்களை நடைமுறைப்படுத்துதலும், பொருளாதார வளர்ச்சியும் மிகவும் வேகமற்ற நிலையில் உள்ளது.

இந்தியாவில் திட்டமிடுதலின் தோற்றம் மற்றும் நோக்கம் (Evolution and objectives of planning in India)

1950-ம் ஆண்டு தேசிய திட்டக்குழு இந்தியாவில் நிறுவப்பட்டது. இத்திட்ட குழுவின் மிக முக்கிய பணியாதெனில் “நாட்டுவளங்களை சீரிய பயனுள்ள மற்றும் சமமாக பயன்படுத்த திட்டங்களை தீட்டுதலே ஆகும்”.

இந்திய திட்டமிடுதலின் நோக்கங்கள்

இந்திய திட்டமிடுதலின் மைய நோக்கம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதலாகும். நமது ஐந்தாண்டு திட்டங்கள், உற்பத்தியை அதிகரிப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளன. இதே நேரத்தில், வருமான, செல்வ ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதையும் மற்றும் அனைவருக்கும் சமமாக வாய்ப்புகளை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன. வளர்ச்சியோடு கூடிய ஒரு சம உடைமை சமுதாயத்தை உருவாக்குதல் இந்திய திட்டங்களின் அடிப்படை நோக்கங்களாகும்.

இந்திய வளர்ச்சி திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களை கீழ்கண்டவாறு வரிசைப்படுத்தலாம்.

 1. நாட்டு வருமானத்தை உயர்த்துதல். இது வளர்ச்சி நோக்கம் எனப்படும்.
 2. குறிப்பிட்ட காலத்திற்குள், குறிப்பிட்ட நிலையில் முதலீட்டை உயர்த்துதல்.
 3. வருமான மற்றும் செல்வ பகிர்வில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை குறைப்பதோடு பொருளாதார சக்தி வளங்களின் மீது குவிதலைக் கட்டுப்படுத்தல்.
 4. வேலை வாய்ப்புகளை விரிவாக்குதல்.
 5. வேளாண்மை, உற்பத்தித் தொழிற்சாலை (குறிப்பாக மூலதனப் பொருட்கள்) மற்றும் வாணிபச் செலுத்து சமநிலை ஆகியவற்றின் வளர்ச்சித் தடைகளை அகற்றுதல்.

வேளாண்மைத் துறையில் முதன்மையான நோக்கம் யாதெனில் உற்பத்தித் திறனை அதிகரித்து தன்னிறைவை தானிய உணவு வகையில் அடைவதே ஆகும். தொழில் துறையில் அடிப்படை மற்றும் கனரகத் தொழில்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அயல்நாட்டு வாணிபத் துறையில் சாதகமான அயல்நாட்டு செலுத்து சமநிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. இந்தியத் திட்டமிடுதலில் கடைபிடிக்கப்பட்ட யுக்தி முறை பேராசிரியர் 'மஹலநாபிஸ் யுக்திமுறை' என குறிப்பிடப்படுகிறது. இதில் அதிவேக தொழில் மயமாதலுக்கும், அதிலும் அடிப்படை மற்றும் கனரக தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது.

நமது திட்டங்களில் வட்டாரச் சமநிலை அடைவதை குறிப்பிட்டிருந்தாலும், நாம் இன்னும் இவ்வட்டாரச் சமநிலை இன்மை நிலையைக் குறைப்பதில் வெற்றியடையவில்லை. வேளாண் துறையில் உணவுத் தானியங்களின் உற்பத்தியில் உபரி உற்பத்தி செய்யும் மாநிலங்கள் உள்ளன. பற்றாக்குறையான மாநிலங்களும் உள்ளன. உற்பத்தித் தொழிலில் வளர்ந்த வட்டாரங்களும் மற்றும் பின்தங்கிய வட்டாரங்களும் உண்டு. அதுமட்டுமல்லாது, தொழில் வளர்ச்சியானது மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையிலேயே செரிந்துள்ளது.

நமது ஐந்தாண்டு திட்டங்கள், வறுமை மற்றும் வேலையின்மை பிரச்சனைகளுக்கு கவனம் செலுத்தியுள்ளன. சராசரி இந்தியன், உலகில் மிக ஏழைகளுள் ஒருவனாக உள்ளான். எனவே நமது திட்டங்கள், வறுமையை ஒழித்து, பெரும்பாலான ஏழை எளிய நலிந்த பிரிவினராகிய - தாழ்த்தப்பட்ட வகுப்பினரையும் (SC) பழங்குடியினரையும் (ST) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரையும் மற்றும் பெண்களையும் குழந்தைகளையும் முன்னேற்றமடையச் செய்ய விழைந்தன. வாழ்க்கைத் தரம், தனிநபர் நுகர்வையும் தனி நபர் நுகர்வு தலா வருமானத்தையும் பொறுத்துள்ளது. இது பின்னும் வேலை வாய்ப்பையும் சார்ந்துள்ளது. எனவே நமது திட்டங்கள் வேலை வாய்ப்பினை, ஏழ்மை ஒழிப்பு திட்டத்தின் முக்கியமான பகுதியாக கண்ணுற்றது.

இன்னும்கூட, ஊரகத் துறையில், குறிப்பிட்ட ஒரு சிலருடைய நிலங்கள் குவிக்கப்பட்டுள்ளன. நிலச் சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்பட்டப் போதிலும், ஏறக்குறைய 50 சதவீத உழவு நிலங்களை, 10 சதவீத மக்களே சொந்தமாகப் பெற்றுள்ளனர். மேலும் பசுமைப் புரட்சி பெரிய நிலச்சுவான்தாரர்களுக்கே நன்மைப் பயத்தது.

தொழிற்சொத்தின் உரிமையும் கூட செரிவடைந்த நிலையில் காணப்படுகிறது. இந்தியாவின் ஏழ்மை நிலையின் அடிப்படைக் காரணம் குறைந்த உற்பத்தித் திறனும், பெருகும் மக்கள்தொகை வளர்ச்சியே என்பது நிச்சயமானது. இது குறைவான சேமிப்பிலும் மறைமுக வேலையின்மையிலும் முடிவடைகிறது. குடிசை மற்றும் சிறுதொழில்களுக்கு அரசு ஆதரவு நல்கியதால், ஊரக வேலையின்மை மற்றும் குறைவேலை பிரச்சனைகளைத் தீர்ப்பதில், அதிக வெற்றி காணவில்லை. இந்தியத் திட்டத்தில், நகர்புறங்களுக்கு ஒரு சார் நிலை இருந்து வருகிறது. கடந்த காலத்தில் வேளாண்மைத் துறைக்கு போதிய நிதியுதவி அளிக்கப்படவில்லை. ஆனால் திட்டமிடுவோர் வேளாண்மையைப் புறக்கணித்தனர் என கூறமுடியாது.

இந்தியாவில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிப் போக்கு துவங்கியது. முதலாம் ஐந்தாண்டு திட்டம் (1951-56) மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதோடு பல புதிய வாய்ப்புகளை திறந்தளித்து அதன் வாயிலாக பலதரப்பட்ட வாழ்க்கை வசதியின் மூலமாக இந்திய மக்களை செல்வந்தர்களாக மாற்றும் வளர்ச்சி போக்கின் துவக்கமே, இந்திய திட்டமிடுதலின் நோக்கம் என குறிப்பிட்டது. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61) துரிதமான தொழில்மயமாதலை நோக்கமாகக் கொண்டு குறிப்பாக அடிப்படை மற்றும் கனரக தொழில் வளர்ச்சியில் நாட்டம் காட்டியது. இரண்டாம் திட்ட காலத்தில் அரசு மக்களாட்சி சமத்துவ நோக்கத்தை தழுவி வந்தது. மூன்றாம் ஐந்தாண்டு திட்டம் (1961-66) பொருளாதாரத்தை தற்சார்புடையதாகவும் சுயமாக இயங்கும் பொருளாதாரமாக மாற்றவும் எதிர்நோக்கியது. மூன்றாம் திட்டத்திற்கு பிறகு திட்ட விடுமுறை அளிக்கப்பட்டது. நான்காவது திட்டம் உடனடியாக துவங்கப்படவில்லை. நான்காவது திட்டத்திற்குள் மூன்று - ஆண்டுத் திட்டங்கள் (1966-69) நிறைவேற்றப்பட்டன. நான்காவது ஐந்தாண்டு திட்டம் (1969-74) இரண்டு நோக்கங்களை உடையதாக இருந்தது. 1. வளர்ச்சியுடன் கூடிய நிலைத்தன்மை 2. தற்சார்பில் முன்னேற்ற சாதனை அடைதல்.

ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம் (1974-79) வளர்ச்சி மற்றும் சமுதாய நீதியில் கவனம் செலுத்தியது. இக்காலத்தில் (Garibi Hatao) 'கரிபி ஹட்டாவோ' அதாவது வறுமை ஒழிப்பு என்பதே தாரக மந்திரமாக இருந்தது.

ஐந்தாண்டு திட்டத்தின் நோக்கங்கள்

 1. வறுமை ஒழிப்பும் தற்சார்பு அடைதலுமாகும். நடுவண் ஆசிய ஜனதா கட்சி ஆட்சியில் இருக்கும்போது ஆறாவது திட்டம் உருவாக்கப்பட்டது. (1978-83) ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தப் பின்னர் அத்திட்டத்தை கைவிட்டது. மாறாக புதியதொரு ஆறாவது ஐந்தாண்டு திட்டத்தை (1980-85) உருவாக்கியது.
 2. பொருளாதாரத்தை விரிவாக்கும் நிலைகளை உருவாக்கி அதன்மூலம் வறுமையைப் போக்குவதை நோக்கமாக கொண்டது.

ஏழாம் ஐந்தாண்டு திட்டம் (1985-90) உணவு, தானிய உற்பத்தி வளர்ச்சியை வேளாண்துறையில் அதிவேகப் படுத்துவதன் மூலம் வேலைவாய்ப்பினை அதிகரித்து அனைத்து துறைகளிலும் உற்பத்தி திறனை உயர்ந்த முக்கியத்துவம் அளித்தது.

எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத் (1992-97)தின் இறுதி பதிப்பு உருவாக்கப்படும்போது, நாட்டின் பொருளாதாரக் கொள்கையில் பெருத்த மாற்றங்களாகிய திறமை மயமாதல், தனியார் மயமாதல் மற்றும் உலகமயமாதல் போன்ற பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டன. இந்த எட்டாவது திட்டம் இவ்வகை மாற்றங்களை பிரதிபலித்து பொருளாதார வளர்ச்சியை அதிவேகபடுத்தவும். பொது மனிதனின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றவும் வழிவகுத்தது.

திட்டங்களின் சாதனைகள்

இந்திய திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களை நான்கு வகையாக பிரிக்கலாம்.

 1. வளர்ச்சி
 2. நவின மயமாக்குதல்
 3. தற்சார்பு
 4. சமூகநீதி.

வளர்ச்சி (Growth)

திட்டமிடுதலில் முதல் 30 ஆண்டுகளில் நாட்டு வருமான வளர்ச்சி வீதத்தின் போக்கு 3.5 சதவீதமாக இருந்தது. பிரசித்திப் பெற்ற பொருளியல் அறிஞர் பேராசிரியர் ராஜ்கிருஷ்ணா அவர்கள் இதனை “இந்து வளர்ச்சி வீதம்” (Hindu Rate of Growth) என அழைக்கின்றார். வேளாண்மை உற்பத்தி ஒரு சராசரி வீதமாகிய 2.7 சதவீதமாக அதிகரித்தது. தொழில் உற்பத்தி 6.1 சதவீதமாக அதிகரித்தது மற்றும் தலா வருமானம் 1.3 சதவீதமாக வளர்ந்தது. இவ்வீதங்கள் குறைவாக காணப்பட்டாலும் ஆங்கிலேயர் ஆட்சி காலமாகிய ஏறக்குறைய 100 ஆண்டுகள் இந்தியப் பொருளாதாரம் தேக்க நிலையிலேயே இருந்து வந்ததை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். (எ.கா) பிரிக்கப்படாத இந்தியாவில் 1901 - முதல் 1946 வரை நம் நாட்டு வருமான வளர்ச்சி வீதம் 1.2 சதவீதமாகவே இருந்து வந்தது. எனவே இந்தியப் பொருளாதாரத்தில் திட்டமிடுதலின் சாதனை என்னவெனில் தேக்க நிலையை தாண்டி, மெதுவான ஆனால் நிலையான பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

நவீனமயமாதல்

பொருளாதாரத்தில் ஏற்படுத்தப்பட வேண்டிய கட்டமைப்பு மாற்றங்களை நவீனமயமாதல் எனக் குறிப்பிடலாம். திட்டமிடுதலின் கீழ், இந்தியப் பொருளாதாரம், காலனிப் பொருளாதாரமாக இருந்த நிலையிலிருந்து, விடுதலை அடைந்து நவீன பொருளாதாரமாக மாறியது. நாட்டு வருமான தொகுப்பில் மாற்றங்கள் ஏற்பட்டது. (எ.கா) நாட்டு வருமானத்தில் வேளாண்மையின் பங்கு குறைந்து, பணித்துறையின் பங்கு அதிகரித்தது. வேளாண்மையில் தொழில் புரட்சிக்குப்பின் விவசாயத்தில் மாறுதல்கள் ஏற்பட்டன.

தற்சார்புடமை

நமது திட்டமிடுதலின் முந்தைய கால கட்டத்தில் உணவு, தொழில்நுட்பம் மற்றும் அந்நிய செலவாணி போன்ற பல காரியங்களுக்கு அந்நிய உதவியையே சார்ந்திருந்தோம். ஐந்தாம் திட்ட முதல் தற்சார்புடமை என்பது திட்டமிடுதலின் தலையாய நோக்கங்களுள் ஒன்றாகியது.

சமூக நீதி

அனைவருக்கும் சமவாய்ப்பு அளித்தலையே சமூக நிதி என்று குறிப்பிடப்படுகிறது. இதன் பொருள் யாதெனில் நலிவுற்ற ஏழ்மைமிகுந்த பிரிவினரின் வாழ்க்கை தரத்தை முன்னேற்றுவதிலும் வருமானம் மற்றும் செல்வ ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதுமாகும்.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் (1997-2002)

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம் 1997-2002 வரையிலான காலத்தை உள்ளடக்கியது. இது வளர்ச்சியோடு கூடிய சமுதாய நீதி, மற்றும் சமத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. மத்திய திட்டக்குழு இத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகவும், பெரும்பாலான மக்களை அதிலும் குறிப்பாக ஏழை மக்களின் பங்கேற்பை வலியுறுத்தவும் விரும்பியது. இத்திட்டத்தை உருவாக்கும்போது மக்களின் தரமான வாழ்க்கையையும், உற்பத்தி நிறைந்த வேலைவாய்ப்பை உருவாக்குதலையும், வட்டாரச்சமநிலை மற்றும் தற்சார்புடமையையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது.

ஒன்பதாவது திட்டத்தின் தலையாய நோக்கங்கள் (Main Objectives of Ninth Plan)

 1. வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிப்பதன் வாயிலாக போதுமான உற்பத்தி வேலை வாய்ப்பினை உருவாக்குதலும் வறுமை ஒழிப்பும்.
 2. நிலையான விலையுடன் கூடிய வளர்ச்சி.
 3. நிச்சயமாக அனைவருக்கும் உணவளித்தல், அதிலும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு உணவளித்தல்.
 4. குறைந்தபட்ச அடிப்படை பணிகளாகிய பாதுகாப்பான குடிநீர் வசதி, ஆரம்ப சுகாதார வசதி, பாதுகாப்பு, அனைவருக்கும் ஆரம்பக் கல்வி, வீட்டுவசதி ஆகியவற்றை அளித்தல்.
 5. மக்கள் தொகையின் வளர்ச்சி வீதத்தை கட்டுப்படுத்தல்.
 6. பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளில் பொதுமக்கள் பங்கேற்க வாய்ப்பு அளிப்பதன் வாயிலாக சுற்றுப்புற சூழ்நிலையின் நிறைந்தன்மை உறுதிப்படுத்துதல்.
 7. பெண்கள் மற்றும் சமூகத்தில் பின்னடைவில் உள்ள மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர், சிறுபான்மையினர் ஆகிய சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய பிரதிநிதியாகிய இவர்களை அதிக ஆற்றலுள்ளவர்களாக மாற்றுதல்.
 8. ஊராட்சிமன்றம், கூட்டுறவு, சுயத்தேவைக்குழு போன்ற மக்கள் அமைப்புகளை முன்னேற்றி வளர்ச்சியுறச் செய்தல்.
 9. தற்சார்பை அடைவதற்காக முயற்சிகளை வலிமைப்படுத்துதல்.

ஒன்பதாவது திட்டத்தின் செயல்திறன் (Appraisal of the Ninth Plan)

 1. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எதிர்பார்த்த 6.5 சதவீத வளர்ச்சி வீதத்திற்கு மாறாக 5.35 சதவீத வளர்ச்சியே பெறப்பட்டது.
 2. இத்திட்டம் மூலதன இலக்கினை அடையவில்லை . மூலதன இலக்கு 28.2 சதவீதமாக முன் குறிக்கப்பட்டாலும் 24.2 சதவீதமும் முதலீடு செய்யப்பட்டது.
 3. பொதுத்துறையின் அளவு 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 4. இத்திட்ட காலத்தில் மத்திய மற்றும் மாநில அரசுக்களின் நிதியாக்கம் பற்றாக்குறை அதிகரித்தது.
 5. வெளிநாட்டு வர்த்தகமுறையில் இத்திட்டம் தோல்வி அடைந்தது. ஏற்றுமதியின் இலக்கு 11.8 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 5.6 சதவீதமே உயர்ந்தது. இறக்குமதியின் எல்லையானது 10.8 சதவீதமாக உயர வேண்டும் என்ற மாறாக இறக்குமதியின் அளவானது 4.1 சதவீதமாக மட்டுமே உயர்ந்தது.
 6. ஒன்பதாவது திட்டத்தால், 50 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க இயலவில்லை .

பத்தாவது ஐந்தாண்டு திட்டம்

பத்தாவது ஐந்தாண்டு திட்டம் சமத்துவம் மற்றும் சமூக நீதியை பற்றிய பிரச்சனைகளை வெளிப்படையாக அணுகுவதை நோக்கமாகக் கொண்டது. இத்திட்டம் 8 சதவீத வளர்ச்சி வீதத்தை மொத்த நாட்டு உற்பத்தியில் அடைவதை இது இலக்காக நிர்ணயித்தது.

இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு

 • வறுமையை 5 சதவீதமாக 2007-ல் குறைக்கப்பட வேண்டும் 15 சதவீதமாக 2012-ல் குறைக்கப்பட வேண்டும்.
 • இத்திட்ட காலத்தில் இலாபகரமான வேலைவாய்ப்பினை கூடுதலாக ஏற்படுத்துதல்.
 • அனைவருக்கும் தொடக்க கல்வியானது 2007-க்குள் கிடைக்கச் செய்தல். 2001-2011 ஆகிய 10 ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி வீதத்தை 16.2 விழுக்காடாக குறைத்தல்.
 • 2007ல் கல்வியறிவுப்பெற்றோரின் எண்ணிக்கையை 75 விழுக்காடாக உயர்த்துதல்.
 • 2007-க்குள் குழந்தைகளின் இறப்புவீதம் 100 பேருக்கு 45-ஆக குறைத்தல்.
 • 2007-ல் மகப்பேறு காலத்தில் தாய்மார்களின் இறப்பு வீதமானது 1000 பேருக்கு 2 சதவீதமாகவும் 2012-ல் 1000 பேருக்கு 1 சதவீதமாகவும் குறைத்தல்.
 • 2007-ல் காடு மற்றும் மரங்களை 25 சதவீத பாதுகாப்பும், 2012-ல் 33 சதவீத பாதுகாப்பும் அதிகரித்தல்.
 • அனைத்து ஊரகங்களிலும் குடிநீர் வசதியை 2012-க்குள் ஏற்படுத்துதல்.
 • 2007-க்குள் அனைத்து மாசு அடைந்த நதிகள் மற்றும் ஆறுகளை சுத்தம் செய்தல்.

கடந்தகால அனுபவம் குறிக்கப்பட்ட இலக்குகளாகிய மொத்த நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி வீதத்தை 8 சதவீதமாக உயர்த்துதல் மற்றும் வேலை வாய்ப்பு இலக்கை அடைதல் இவைகளை அடைவதில் மிக சந்தேகமாகவே உள்ளது. வேளாண்மை மற்றும் சிறுத்தொழில்கள் இன்னும் குறைந்த முன்னுரிமை நிலையிலேயே உள்ளன. இத்திட்டமானது அதிகமாக தனியார் துறையையே முற்றிலுமாக நம்பியுள்ளது.

முடிவுரை (Conclusion)

இதுவரை ஒன்பது ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தற்போது இது பத்தாவது திட்டத்தின் கடைசி ஆண்டாகும். வளர்ச்சியுடன் கூடிய நிலைத்தன்மை, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் சரியான ஒரு சவாலாக அமைந்துள்ளது. இன்னும் வேலையில்லாப் பிரச்சனை தீர்ந்தபாடு இல்லை. ஓரளவிற்கு வறுமை குறைக்கப்பட்டிருப்பினும் இப்பகுதியில் நடைபெற வேண்டியவைகள் மிகவும் ஏராளமாக உள்ளன. ஐந்தாவது ஐந்தாண்டு திட்டத்திலிருந்தே வேலைவாய்ப்பு திட்டமானது வறுமை ஒழிப்பு திட்டத்தோடு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதனால் இது ஒரு உற்சாகப்படுத்தும் திட்டமாகவே இருந்தது. மக்கள் தொகையினை கட்டுப்படுத்தாவிட்டால் இந்திய பொருளாதார திட்டமிடுதலின் இலக்குகளை அடைவது மிக கடினமானதொன்றாகும். சேமிப்பு, முதலீடு, ஏற்றுமதி முதலியவற்றை உயர்த்த வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக திட்ட நிர்வாகம் வலுவடைய வேண்டும். தகுதிவாய்ந்ததாக இருக்கவேண்டும். மேலும் ஊழலற்றிருந்தால் நமது பொருளாதார திட்டமிடுதல் ஒரு பெரிய வெற்றியை அடைய முடியும். 1991 முதல் புதிய பொருளாதாரக் சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் நமது திட்டமிடுதலில் நல்ல தரமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாளடைவில் இத்திட்டம் ஒரு சுட்டிக்காட்டும் திட்டமாக அமையும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்.

2.98529411765
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top