பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

வணிக அமைப்புகள்

வணிக அமைப்பு பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

உண்மையான வணிக அடிப்படையில் கூறும்போது வணிகம் என்பது "எப்போதும் சுறுசுறுப்பாய் இருக்கும் நிலையைக் குறிப்பதாகும். பொருளாதார நோக்கில் வியாபாரம் என்பது மக்களுக்காக திறமையாக உழைத்து செல்வத்தை உற்பத்தி செய்யும் தொடர்புடைய சொல் என்பதாகும். வியாபாரம் என்பது பணி செயல் முறையில் பார்க்கும்போது சரக்குகளை உற்பத்தியோ, கொள்முதலோ செய்து அவைகளை இலாப நோக்குடன் விற்பனை செய்யும் மனித நடவடிக்கைகள் ஆகும்.

"வியாபார அமைப்பு” என்னும் சொல் அடிக்கடி பல பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. முதலாவதாக, வியாபார நிறுவனம் என்ற நோக்கில் பயன்படுத்தப்படுகிறது. எ.கா. டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம். இரண்டாவதாக, வியாபார அமைப்பு என்பது அமைப்பைப் பற்றியும், தொழிற்சாலை மேலாண்மைப் பற்றியும் வணிக அமைப்பைப் பற்றியும் ஆய்வு செய்வதைக் குறிக்கும் சொல்லாகும். மூன்றாவதாக, "அமைப்பு” என்ற சொல்லின் பொருளானது வியாபாரத்தின் பல்வேறு அடிப்படைக் கூறுகளை ஒருங்கிணைத்து இணக்கமான உறவைப் பணிகளில் ஏற்படுத்துவதாகும்.

நோக்கங்கள்

 1. இலாப நோக்கு
 2. சேவை நோக்கு
 3. பேரளவு உற்பத்தியின் நன்மையைப் பெறுதல்
 4. குறிப்பிட்ட காலத்திற்குள் முயற்சியை மேற்கொள்ளல்
 5. பணியாட்களிடம் இணக்கமான உறவுமுறை வளர்த்தல் செயல் முறைகள்

வியாபாரத்தின் முக்கிய பணிகள் பின்வருமாறு:

 1. உற்பத்திப் பணி
 2. சந்தையிடுதல் பணி
 3. நிதியளிப்பு பணி
 4. பணியாளர் பணி
 5. கொள்முதல் பணி
 6. மக்கள் தொடர்பு பணி
 7. சட்டமுறை பணி

ஒரு வியாபாரத்தின் வெற்றிக்கு வலுவான கட்டமைப்பு என்பது இன்றியமையாததாகும். நிர்வாகத்தை இது எளிமையாக்குகிறது. ஒரு அமைப்பின் நடவடிக்கைகள் பல தொகுதிகளாக பிரிக்கப்பட்டு அவற்றின் நோக்கங்களை நிறைவேற்றுவதாகும். ஒவ்வொரு தொகுதி நடவடிக்கைகளையும், ஒவ்வொரு துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஒவ்வொரு துறையிலுள்ள தனி நபர்களின் பணிகளையும், கடமைகளையும் வரையறுக்கப்பட வேண்டும். எனவே ஒரு அமைப்பு என்பது நடவடிக்கைகளை தொகுதிகளாகப் பிரித்தலும், துறைப்படுத்தலும், பணிகளை ஒப்படைத்தலும் பல்வேறு பணியாளர்களிடையே உறவுமுறையை ஏற்படுத்துவதும் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

“அமைப்பு” என்ற சொல் (Organisation) “உறுப்பாண்மை " (அ) கூட்டிணை அமைப்பு (Organism) என்று பொருள் தரும் சொல்லில் இருந்து பெறப்பட்டது. ஒரு மனித உடலமைப்பில் மூளை என்னும் பாகம் உடலின் பல பாகங்களையும் கட்டுப்படுத்தி, இயக்கி, ஒருங்கிணைப்பு பணியைச் செய்து வருகிறது. ஒரு மனித உடலமைப்பு என்பது பல அங்கங்களின் சேர்க்கைகளால் அமைந்துள்ளது. ஏதேனும் ஒரு அங்க அமைப்பு சரியாகப் பணியாற்றவில்லையெனில் உடலில் பல குறைபாடுகள் ஏற்படும். ஒரு நிறுவனத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், ஒவ்வொரு துறையின் நடவடிக்கைகளும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். அமைப்பு இந்த ஒருங்கிணைப்பைச் செய்கிறது. துறைகளின் அக உறவு முறைகளை ஓர் அமைப்பு ஏற்படுத்துகிறது.

வரைவிலக்கணம்

ஊர்விக் மற்றும் ஹன்ட் அவர்களின் கூற்றுப்படி, "ஒரு வியாபார நிறுவனம் என்பது சமுதாயத்தின் மற்ற உறுப்பினர்களின் தேவைக்காக அளிக்கும் சக்தியைப் பெற்றுக்கொண்டு, ஒரு பொருளையோ அல்லது சேவையையோ, உற்பத்தி செய்து, பகிர்ந்தளித்து செயல்படக்கூடிய அமைப்பாகும்.”

லூயிஸ் எச். ஹேனே அவர்களின் கூற்றுப்படி, "அமைப்பு என்பது பொதுவான நோக்கம் அல்லது நோக்கங்களை வெற்றியடையச் செய்வதற்காக இணக்கமான, சிறப்பு வாய்ந்த பகுதியினைச் சரிகட்டக் கூடியதொன்றாகும்.''

ஆலன்லூயி அவர்களின் கூற்றுப்படி, “செய்யவேண்டிய பணியினை அறிந்து அதனைத் தொகுதிகளாகப் பிரித்தலும் (Grouping) குறிக்கோள்களை அடையப் பணியாளர்களால் பயன் தரு முறையில் உழைக்கும் நோக்குடன் அவர்களுக்கிடையே உறவு முறைகளை ஏற்படுத்தும் பொறுப்பையும் (Responsibility), ஆணைவுரிமைகளையும் (Authority) வரையறுத்தி (Defining) வழங்கலையும் “அமைப்பு” என்னும் சொல் குறிக்கும்.

இலக்குகளை நிர்ணயித்தல், அவற்றை நிறைவேற்றும் குறியுள்ள நடவடிக்கைகளை தொகுதிகளாகப் பிரித்தல், நடவடிக்கைகளை செயல்படுத்த அவற்றை ஒதுக்கீடு செய்தல் அல்லது ஒப்படைத்தல், அனைத்துப் பணிளையும் ஒருங்கிணைத்தல் ஆகியவை அமைப்பின் சிறப்புக் கூறுகளாகும். அமைப்பைப் பற்றி கீழ்காணும் காரணங்களுக்காக தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. (அ) ஓர் அமைப்பு என்பது மனித வாழ்வில் அனைத்து முக்கிய தருணங்களிலும் பரவியுள்ளது. ஒரு மனிதனின் பிறப்பு மருத்துவமனை என்னும் அமைப்பில் நிகழ்கிறது. அவனுடைய கல்வி, பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் என்னும் அமைப்புகள் மூலம் கிடைக்கிறது. அவனது பணி அலுவலகம் தொழிற்கூடம் மற்றும் வியாபாரம் என்னும் அமைப்புகள் மூலம் நடைபெறுகிறது.

(ஆ) ஒரு மேலாளருக்கு அமைப்பை பற்றிய அறிவு, பணியைத் திறம்பட செயல்படுத்த உதவுகிறது.

(இ) ஒரு அமைப்பு என்பது திருப்தியளிக்கும் வகையில் இருக்க வேண்டும். மேலும் சில நேரங்களில் இது சரியாக அமையவில்லையெனில் அது ஏமாற்றத்தை அளிக்கக்கூடும்.

அமைப்பின் கோட்பாடுகள் (Principles of Organisation)

ஒரு அமைப்பின் குறிக்கோள்களை செம்மையான முறையில் நிறைவேற்ற ஒரு வலுவான, திறமையான நிர்வாக அமைப்பு கோட்பாடுகளின் அடிப்படையில் அமைய வேண்டும்.

நோக்கங்களின் ஒருமை (Unity of Objective)

ஒரு அமைப்பு நிறைவேற்ற இருக்கும் நோக்கம் என்பது, இலக்கினை அடையக் கூடியதாக இருக்க வேண்டும். ஒரு நிருவாகத்தின் அமைப்பானது அதன் குறிக்கோள்களைத் தெளிவாக முடிவு செய்ய வேண்டும். அமைப்பின் ஒவ்வொரு நடவடிக்கையும் பொதுவாக குறிக்கோள்களை நிறைவேற்றக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

வேலைப்பகிர்வு (division of Labour)

தொழிலமைப்பின் மொத்த பணிச் சுமையையும் பகிர்வு செய்ய வேண்டும். இது துறைப்படுத்துதல் (Departmentation) என அழைக்கப்படுகிறது. அனைத்து நடவடிக்கைகளையும் திட்டமிடுதல் வேண்டும். ஓர் அமைப்பின் மொத்த பணிச் சுமையை இதன் மூலம் உணர முடியும். ஒரு சக்தி வாய்ந்த அமைப்பிற்கு சிறப்பீடுபாடு ஏற்புடையதாகும்.

கட்டுப்பாட்டு வீச்செல்லை (Span of control)

ஒரு அமைப்பின் மேலாண்மையர் தனக்குக் கீழ் பணியாற்றக் கூடிய பணியாளர்களை அதிக அளவில் நிர்வகிக்க இயலாது. ஒரு அதிகாரி எத்தனை கீழ்ப்பணியாளர்களை சீரிய முறையில் நிர்வகிக்க முடியும் என்பதை இது குறிக்கும். ஓர் உயர் அலுவலர் தனக்குக் கீழ் நியாயமான எண்ணிக்கையிலுள்ள கீழ்ப்பணியாளர்களை மேற்பார்வை செய்ய வேண்டும்.

தரவரிசைக் கோட்பாடு (Scalar Principle)

ஆணையுரிமையின் வரிசை உயர்மட்டத்திலுள்ள உயர் அலுவலரிடமிருந்து கீழ்மட்டத்திலுள்ள தொழிலாளர்கள் வரை படிப்படியாக கீழ்நோக்கி வரவேண்டும். இதற்குக் “கட்டளை இணைப்பு” என்று பெயர். ஓர் உயர் அலுவலர் தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளருக்கு ஆணையுரிமை வழங்குகிறார். அலுவலர் ஒப்படைக்கும் பணியை திறமையாகச் செய்து முடிக்கும் பொறுப்பைப் பணியாளர் ஏற்கிறார்.

கட்டளையொருமை (Unity of command)

ஒவ்வொரு பணியாளரும் ஆணைகளை உயர் அதிகாரியிடமிருந்து பெற வேண்டும். ஒரு பணியாளர் இரண்டு உயர் அதிகாரிகளின் கீழ் பணியாற்றுவது கடினம். பணியாளர் தனது மேல் அதிகாரிக்கு பொறுப்பாவார். இரண்டு உயரதிகாரிகளின் கீழ் பணியாற்றுவது தவிர்க்கப்படுதல் வேண்டும். அப்படியிருந்தால் குழப்பமும் ஒழுங்கின்மையும் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பணிவழி வரைவிலக்கணம் (Functional definition)

ஒரு பணியாளரின் ஆணையுரிமையும், பொறுப்பும் தெளிவாக வரையறுக்கப்படுதல் அவசியம். ஒவ்வொரு பணிகளுக்கிடையேயுள்ள தொடர்புகளை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். 7. ஒருமுனை இயக்கம் (Unity of Direction)

ஒவ்வொரு குழு நடவடிக்கைகளின் தொகுதியின் நோக்கங்கள் வெற்றியடைய ஒரு தலைமையும் ஒரு திட்டமிடுதலும் இருக்க வேண்டும். அமைப்பின் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் பணிகளை நிறைவேற்றவும் இது அவசியமாகிறது.

ஒருங்கிணைத்தல் (Co-ordination)

ஒரு அமைப்பின் விரும்பத்தக்க இலக்குகளை அடைய, அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒரு துறைவாரி பண்டகசாலையிலுள்ள ஒவ்வொரு துறையின் பணிகளும் மற்ற துறைகளின் பணிகளுடன் அடிக்கடி கலந்து ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும். ஒரு பண்டகசாலை இலாபம் பெற வேண்டுமெனில் அதன் கொள்முதல் துறையும் விற்பனைத் துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அதிகார ஒப்படைவு (Delegation of authority)

ஒப்படைவு என்பது பணிகளின் ஒரு பகுதியை அல்லது சில கடமைகளை கீழ் பணியாளர்களுக்கு ஒப்படைப்பதாகும். ஓர் உயர் அலுவலர் தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளருக்குச் சில பணிகளை ஒப்படைக்கிறார். அதை நிறைவேற்ற அவருக்குத் தேவையான அதிகாரங்களையும், உரிமையையும் வழங்க வேண்டும். கீழ்பணியாளர் தனது மேலதிகாரிக்கு பொறுப்பாகிறார். ஒப்படைவு என்பது கீழ்பணியாளர் கடமைப்பட்டிருத்தலை உருவாக்குவதாகும்.

பொறுப்புக் கோட்பாடு (Principles of responsibility)

ஓர் உயர் அலுவலர் தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளர்களின் செயல்களுக்குப் பொறுப்பாகிறார். அவர் தனது கடமையிலிருந்து முற்றிலும் தப்பிக்க இயலாது. அலுவலர் தனது மேலதிகாரிகளுக்குப் பொறுப்பாகிறார்.

நெகிழ்வுத் தன்மை (Flexibility)

ஒரு அமைப்பு மாற்றியமைக்கக் கூடிய வகையில் நெகிழ்வுத் தன்மையுடன் இருக்க வேண்டும். மாறும் சூழ்நிலைகளுக்கேற்ப அமைப்பும் மாறக்கூடிய வகையில் இருக்க வேண்டும். சீர்குலைவு ஏதுமின்றி விரிவுபடுத்தக் கூடிய வகையில் அது இருக்கவேண்டும்.

திறமை (Efficiency)

எந்த நிறுவனத்திற்கும் “திறமையே” மந்திரச் சொல்லாக இருக்கவேண்டும். திறமையான முறையில் குறிக்கோள்களை அடையச்செய்யவும், குறைந்த செலவில் பணிகளை நிறைவேற்றும் வகையில் ஓர் அமைப்பின் வடிவமைப்பு இருக்க வேண்டும்.

தனித்திறமை (Personal ability)

ஓர் அமைப்பை உருவாக்குவதில் தனிநபர் திறமை தொடர்புற்று இருப்பதால் பணியாளர்கள் தேர்வு, இட அமர்வு, பயிற்சி அவசியமாகிறது. எனவே அமைப்பு என்பது மனிதவள மேம்பாட்டினை உத்தம அளவில் பயன்படுத்தி வளர்ச்சித் திட்டங்களை ஊக்கமடையச் செய்ய வேண்டும்.

எளிமை (Simplicity)

அமைப்பு முறையின் மற்றொரு கோட்பாடானது அது எளிமையானதாக இருக்கவேண்டும். அதிகாரப் படிநிலை மட்டங்கள் அல்லது ஆணையுரிமைப் படிநிலை மட்டங்கள் (levels & Authoriy) மிகுந்திருப்பின், செய்தித் தொடர்புகள் சிக்கலாகும். இதனால் குழப்பமும், மோதலும் ஏற்பட்டு, ஒருங்கிணைப்பு ஏற்படாமல் போகும்.

மேற்கூறிய கோட்பாடுகள் ஒரு வலுவான நிருவாக அமைப்பிற்கு இன்றியமையாத் தேவைகளாகும். பழங்காலங்களில், மனிதர்களின் அவசியமும், தேவையும் மிகவும் குறைவாகவே இருந்தன. அதனால் வியாபாரத்தின் அளவு மிகக் குறைந்த அளவிலே இருந்தன. நாளடைவில் மக்கட்தொகைப் பெருக்கத்தால் சேவைகளுக்கும், பண்டங்களுக்கும், தேவைகள், அதிகரிக்கத் தொடங்கின. அதன் விளைவாக இயந்திரயுகம் (Machine age) தோன்றி அதிக அளவு உற்பத்தி நடைபெற்றது. இதன் விளைவாக அதிக அளவு முதலீடும், பணியாளர்களும் தேவைப்பட்டன. இது அதிக நட்ட அச்சத்தை ஏற்படுத்தியது. சிறு வணிக அமைப்புகள் இந்த சவால்களை ஏற்க இயலவில்லை. இக் குறைபாடுகளே நிறும் அமைப்பு உருவாக வழிவகுத்தது.

உரிமையின் அடிப்படையில், கீழ்கண்டவாறு அமைப்புகளை வகைப்படுத்தலாம். மக்களின் தேவைக்கேற்ப இவ்வமைப்புகள் வெளிவரத் தொடங்கின.

தொழிலமைப்பின் பல்வேறு வடிவங்களை பின்வரும் பாடங்களில் தனித்தனியாக பயில இருப்பதால், சுருக்கமான விளக்கக் குறிப்புகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

வணிக அமைப்பகளை இரு வகைகளாகப் பிரிக்கலாம் அவைகள் தனி நபர்களின் நிறுவனங்கள் மற்றும் அரசுத்துறை நிறுவனங்களாகும். கீழ் குறிப்பிட்ட அட்டவணை வணிக நிறுவனங்களின் பல்வேறு அமைப்புகளை வெளிப்படுத்துகிறது.

வணிக அமைப்புகளின் வகைகள்

 

 • தனி வணிகர்
 • பொதுக் கூட்டுரு.
 • கூட்டாண்மை
 • கூட்டுப் பங்கு நிறுமம்
 • கூட்டுறவு அமைப்புகள்
 • பன்னாட்டு நிறுமங்கள்
 • தனிநபர் நிறுவனங்கள்
 • அரசு நிறுவனங்கள்
 • துறைமுறை அமைப்பு
 • அரசு நிறுமம்
 • இந்து கூட்டுக்குடும்பம்
 • வாரிய அமைப்புகள்

தனிநபர் நிறுவனங்கள்

தனிநபர் நிறுவனங்கள் என்பது தனி நபராலோ அல்லது தனி நபர்களாலோ உருவாக்கப்படுவதாகும். கீழ் காண்பவை வணிக அமைப்புகளின் பல்வேறு வடிவங்களாகும்.

தனிவணிக நிறுவனங்கள்

தனி நபரால் உருவாக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படும் வியாபார அமைப்பு தனி வணிக அமைப்பாகும். அதை எவர் மேலாண்மை செய்கிறாரோ, அவரே தனிவணிகர் என்று அழைக்கப்படுகிறார். இதற்கு தனி உரிமையாளர் அல்லது தனி வணிகர் அல்லது தனி நபர் உரிமையர் என அழைக்கப்படுகிறது. தனிநபர் வணிகமுறை தொழிலமைப்புகளின் மிகப் பழமையான வடிவமாகும். தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் பிறரிடமும் கடனை பெற்று முதலீடு செய்யலாம். பெரும்பாலும் தானே மேலாண்மை செய்து தன் உறவினர்களின் அல்லது பணியாட்களின் உதவியுடன் வணிகத்தை நடத்திவருவது வழக்கம்.

தனிவணிகரே அனைத்து கொள்முதல் மற்றும் விற்பனை செய்து, கணக்குகளையும் பராமரிக்கிறார். தொழிலில் கிடைக்கும் இலாபம் முழுவதும் தனியாள் வணிகரையேச் சாரும். அவ்வாறே நட்டம் முழுவதையும் அவரே ஏற்க வேண்டும். வியாபாரத்தை நிறுவியவரும் அதை கண்காணிப்பவரும் அவர் ஒருவரே. தனிவணிகம் “எல்லாம் அவரே, அவரே எல்லாமும்” என்ற கோட்பாட்டின்படி நடைபெறுவது ஆகும். இதனைத் தொடங்கி நடத்துவதும் எளிது. சட்டச் சடங்குகள் ஏதும் பின்பற்றப் படவேண்டியதில்லை.

இந்து கூட்டுக்குடும்பம்

இந்து கூட்டுக் குடும்ப வணிக அமைப்பில் இந்தியா தலைசிறந்து விளங்குகிறது. இந்து குடும்ப வணிக முறையில் தந்தை , தாய், மகன், மகள், மகனின் மகன், மகனின் மகள் ஆகியோர் அடங்குவர். அவர்களது சொத்துக்கள் அனைத்தும் கூட்டுச் சொத்தாகும். அவர்கள் வணிகத்தை குடும்பத் தலைவர் மூலம் நடத்துவர். இக்குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம், கைத்தொழில்கள், சிறு தொழிற்சாலை போன்ற தொழில்களைச் சார்ந்திருக்கும். இத்தகைய வியாபார அமைப்பிற்கு இந்து கூட்டுக் குடும்ப வணிகம் என்று பெயர். இது இந்தியாவில் மட்டுமே காண முடியும்.

இந்து கூட்டுக் குடும்ப வணிக முறை இந்து சட்டத்தின்படி கூட்டுருவாக்கப்பட்டு நடத்தப்படுகிறது. இதில் உறுப்பினர்களுக்குள் எந்த ஒப்பந்தமும் ஏற்படுவதில்லை. இந்த வியாபார அமைப்பு குடும்ப உறுப்பினர்களால் உரிமையாக்கப்பட்டு குடும்பச் சொத்தில் வாரிசு உரிமையுள்ள நபர்களால் நடத்தப்படுகிறது. இதன் உறுப்பினர்கள் ஒரே குடும்பத்தில் பிறந்தவர்கள். குடும்பத் தலைமை உறுப்பினருக்கு (karta) கர்த்தா என்று பெயர். குடும்ப உறுப்பினர்களுக்கு கூட்டு வாரிசுதாரர் என்று பெயர். இது இந்து சட்டத்தின்படி ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இந்து சட்டத்தின்படி, இந்து எனப்படுபவர் மூன்று தலைமுறையைச் சேர்ந்த வம்சாவழி சொத்து உரிமையர் ஆவார். மகன், மகள், மகனின் மகன், மகனின் பேரன் அக்குடும்பத்தில் பிறந்ததன் மூலம் குடும்ப சொத்தில் கூட்டு வாரிசுதாரர்களாகக் கருதப்படுகிறார்கள். இந்து கூட்டுக்குடும்பத்தில் பெண்களுக்கு சேர்ந்து வாழவும், திருமணம் செய்து கொள்ளவும் சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது.

இந்து வாரிசு சட்டம் 1956, ஒரு கூட்டு உரிமையர், அவர் மரணமடைந்த பின்பு அவரின் வாரிசுதாரர்கள் சொத்தின் உரிமையுள்ளவராகிறார்கள். 1985-ம் ஆண்டிலிருந்து இச்சட்டம் மகனைப் போலவே மகளுக்கும் சம உரிமை வழங்கிவருகிறது.

இந்து கூட்டுக்குடும்பத்தைப்பற்றி சட்டம் எந்த வரைவிலக்கணமும் தரவில்லை. ஒரு கூட்டுக்குடும்ப சம்பந்தப்பட்ட ஒரு வழக்கில் சொல்லப்பட்ட தீர்ப்பில், இந்து கூட்டுக் குடும்பம் என்பது ஒரே இடத்தில் வசித்து, வழிபாடு நடத்தி, ஒரே வகையான உணவு வகைகளை உண்டு ஒரு குடும்பத்தில் உள்ள சொத்தில் பங்கேற்பவர் என நீதிபதி கூறியுள்ளார்.

மிட்டக்சரா (MITAKSARA) சட்டத்தின்படி ஒரு குடும்பத்திலுள்ள ஆண் வாரிசுகள் மட்டுமே வம்சாவழி சொத்தில் உரிமையுள்ளவர்கள். இது அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளம் தவிர இந்தியா முழுமைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தாய்பாகா சட்டத்தின்படி சொத்தின் உரிமை மாற்றம் கூட்டு வாரிசுதாரரின் வாரிசுகளுக்கு வாரிசு உரிமையின்படி ஏற்படுவதாகும். ஆனால் பிறப்பின் காரணமாக அல்ல. சொத்தின் பங்கு பிறப்பின் மற்றும் இறப்பின் காரணமாய் மாறுபடுவதல்ல. பங்குகள் பற்றி பிரிவினைக்கு முன்பு குறிப்பிடப்பட்டிருக்கும். கூட்டு வாரிசுதாரர் அவரது சொத்தின் பங்கை மற்ற கூட்டு வாரிசுதாரரின் சம்மதமின்றி மாற்றித்தர இயலும். இந்திய பேரளவு தொழிற்சாலைகள் தோற்றத்திற்குப் பின், கூட்டுக்குடும்பங்கள் சிறிய அளவில் குறைந்துவிட்டது. இதன் விளைவாக இந்த முறை வீழ்ச்சியடைந்துள்ளது.

கூட்டாண்மை

ஒரு தனி வணிக நிறுவனத்தில் பல வரையறைகள் உள்ளன. ஒரு எல்லைக்குமேல் விரிவாக்கம் செய்ய இயலாது. எங்கே அதிக முதலீடும், திறமையும் தேவைப்படுகிறதோ, அதைத் தனி நபர் மட்டுமே அளிக்க முடியாது. இருவரோ அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களோ ஒருங்கிணைந்து தேவையான முதல் தொகையையும், திறமையும் அளிக்க முடியும். இந்த நிலையில் கூட்டாண்மை ஏற்படுகிறது.

பேராசிரியர் ஹேனேயின் கூற்றுப்படி, “கூட்டாண்மை ” என்பது தகுதி வாய்ந்த நபர்களிடையே உறவு முறையை ஏற்படுத்தி சட்டமுறை வியாபாரம் நடத்தி, தகுந்த ஒப்பந்தங்களின் முலம் தனிப்பட்ட இலாபங்களுக்காக நடத்துவதேயாகும் என்று கூறுகிறார்.

கூட்டாண்மை என்பது இருவர் அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் ஒப்பந்தத்தின் மூலம் ஏற்படுத்தப்படுவதாகும். குறைந்த பட்சம் இருவரும் அதிகபட்சமாக வங்கித் தொழிலாயின் பத்து நபர்களும் பிற தொழிலாயின் இருபது நபர்கள் வரை இருக்கலாம். கூட்டாண்மை சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்ட முரணான தொழிலைச் செய்யக்கூடாது.

கூட்டாளிகள் இலாபம் அல்லது நட்டத்தை ஒப்புக்கொண்ட விகிதத்தின்படி பகிர்ந்து கொள்வர். அவர்களிடையே ஒப்பந்தம் ஏதும் இல்லையெனில், சரி சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு கூட்டாளியும் வியாபார மேலாண்மையில் பங்கெடுத்தக் கொள்ள உரிமை உண்டு. அவருக்குக் கருத்துக் கூறவும் உரிமை உண்டு. நிறுவனக் கடன்களுக்கு கூட்டாகவும் தனித்தனியாகவும் பொறுப்பேற்க வேண்டும். கூட்டாண்மையில் பங்கெடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு கூட்டாளிகள் என்று பெயர். கூட்டாளிகளின் அமைப்புக்கு நிறுவனம் என்று பெயர்.

கூட்டுப் பங்கு நிறுமம்

கூட்டுப் பங்கு நிறுமம் என்பது பல நபர்களின் சங்கமாகும். ஒரு நிறுமத்தின் முதல் பல அலகுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். அதற்கு பங்கு என்று பெயர். எவரொருவர் ஒரு நிறுமத்தின் பங்குகளை வைத்திருக்கிறாரோ அல்லது வாங்குகிறாரோ அவரே பங்குதாரர் என அழைக்கப்படுகிறார். பங்குதாரர்கள் நிறுமத்தின் உறுப்பினர்கள். ஒரு நிறுமம் கூட்டுப்பங்கு நிறுமம் என அழைக்கப்படுகிறது. அதற்குக் காரணம் அதனுடைய முதல் தொகை பல முதலீட்டாளர்களால் வழங்கப்படுவதாகும். ஒரு கூட்டுப்பங்கு நிறுமம் என்பது பொது நிறுமமாகவோ (அ) தனி நிறுமமாகவோ இருக்கலாம். ஒரு நிறுமத்தில் வரைவிலக்கணமானது, இது ஒரு கூட்டுருவாக்கப்பட்டதும் தனி நபர் தன்மையுடன் கூடியதும் சட்டத்தால் உருவாக்கப்பட்டதும், பொது முத்திரையுடனும் நிலைப்பேற்றுத் தொடர்ச்சியுடன் கூடிய அமைப்பாகும்.

ஒரு நிறுமம் என்பது சட்டத்தால் உருவாக்கப்பட்ட புனைவு நபர். அது தன் பெயரிலேயே ஒப்பந்தங்களில் ஈடுபடலாம். தனி நபராகக் கருதப்பட்டாலும் அதனால் எந்த பத்திரங்களிலும் கையொப்பமிட முடியாது. எனவே அது தன் பெயரிலேயே ஒரு பொது முத்திரையைப் பெற்றிருக்கும். ஒரு நிறுமம் தொழிலைத் தொடர்ந்து நடத்தக்கூடிய நிலைப்பேற்றுத் தொடர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு பங்குதாரரின் பொறுப்பு வரையறுக்கப்பட்டது.

நிறுமத்தின் பங்குகளை ஒரு நபரிடமிருந்து மற்றொரு நபருக்கு எளிதில் மாற்றலாம். பொதுமக்களின் சிறு முதல் தொகை கூட சேமிக்கத் தூண்டுகிறது. ஒரு நிறுமம் என்பது புனைவு நபர் என அழைக்கப்படுகிறது. ஏனென்றால், இது கூட்டுருவாக்கம் செய்வதன் மூலம் சட்ட உரு பெறுகிறது. கூட்டுருவாக்கம் என்பது நிறுமப் பதிவாளரிடம் நிறுமச் சட்டத்தின்படி பதிவு செய்வதைக் குறிக்கும். இந்திய நிறுமச் சட்டம் 1956-ன் படி ஒரு பொது நிறுமமோ அல்லது தனி நிறுமமோ நிறுமப் பதிவாளரிடம் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும். கூட்டுப்பங்கு நிறுமத்தின் மேலாண்மை இயக்குனரவையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கம்

கூட்டுறவு சங்கம் என்பது நபர்கள் தாமாகவே அமைத்துக் கொள்ளும் சங்கமாகும். பொதுவாக உள்ளூரில் ஒரே இடத்தில் வசிப்பவர்கள் பொருளாதார நலனை கருதி ஒன்று சேரும் தன் விருப்ப மன்றமாகும். எந்த நபர் வேண்டுமானாலும் உறுப்பினராகச் சேரலாம். உறுப்பினராவதற்கு யாரையும் வற்புறுத்துவதில்லை. ஒரு நபர் எப்போது விரும்புகிறாரோ அப்போது அவர் கூட்டுறவு சங்கத்தில் சேரலாம். அதேபோல் எப்போது விரும்புகிறாரோ அப்போது விலகிக்கொள்ளலாம்.

ஒரு கூட்டுறவு சங்கத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் சமம். ஒரு நபர் எத்தனை பங்குகள் வைத்திருந்தாலும் அவருக்கு ஒரு வாக்கு மட்டுமே உண்டு. "ஒரு நபர் - ஒரு வாக்கு” என்பது மிக முக்கியமான கோட்பாடாகும். இவ்வமைப்பு குடியாட்சி அமைப்பின் கோட்பாட்டின்படி மேலாண்மைக்குழு மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் உறுப்பினர்கள் சங்க அலுவல்களிலும் உறுப்பினர்கட்குச் சேவை செய்வதிலும் சம வாய்ப்பினைப் பெறுகின்றனர். கூட்டுறவு சங்கங்களின் முக்கிய நோக்கம் சேவை செய்வது என்பது முதன்மைப் பணி. இலாபம் ஈட்டுவது என்பது இரண்டாம் பணி.

கூட்டுறவு சங்கங்கள் பொதுவாக ரொக்க அடிப்படையில் வியாபாரம் செய்கின்றன. குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கடன் அடிப்படையிலும் வியாபாரம் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மாநில அரசும் கூட்டுறவு சங்கங்களுக்கென பதிவாளரையும் நியமித்து, பதிவு செய்தலையும், கட்டுப்படுத்துதலையும், மேற்பார்வை செய்கிறது. ஒரு கூட்டுறவு அமைப்பு பதிவு செய்தவுடன் கூட்டுருவாக்கம் பெறுகிறது. அது தனி சட்ட ரீதியான நிலைப்பேற்றுத் தொடர்ச்சியைப் பெறுகிறது. அரசு, கூட்டுறவு அமைப்பதற்கு முத்திரைத்தாள் வரி பதிவுக் கட்டணங்களிலிருந்து வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. வரையறு பொறுப்பு என்னும் சிறப்பு இயல்புகளை இது அனுபவிக்கிறது.

பன்னாட்டு நிறுமங்கள் (Multinational companies)

பன்னாட்டு நிறுமம் என்ற சொல் இரண்டு பதங்களைக் கொண்டுள்ளது. பன் (Multi) நாடு(National) முற்சேர்க்கை “பன்” என்பது “பல” அல்லது “அநேக” என்பதைக் குறிக்கும். பிற்சேர்க்கை நாடுகள் என்பது பல தேசங்களைக் குறிக்கும். ஆகையால் பன்னாட்டு நிறுமங்கள் என்பது பல நாடுகளில் இயங்கிவரும் நிறுமங்கள் என வரையறுக்கப்படுகிறது. இந்த நிறுமங்களுக்கு தொழிற்சாலைகளும், அலுவலகக் கிளைகளும் ஒரு நாட்டுக்கு மேல் இருக்கும். ஐக்கிய நாட்டுக் குழுவின் கூற்றுப்படி, பன்னாட்டு நிறுமங்கள் என்பது, எந்த நாட்டில் அது உருவாக்கப்பட்டதோ, அதைவிட கூடுதலாக பல நாடுகளில் அது கூட்டுருவாக்கப்படுவதாகும்.

பன்னாட்டு நிறுவனம் எனப்படுவது உலக அளவில் உள்ள “பலமிக்கவன்” (Global giant) அல்லது “உலக வியாபாரம்” (World enterprises) அல்லது “பன்னாட்டு வியாபாரம்” என அழைக்கப்படுகிறது. எல்லாவகையான வியாபார அமைப்பு ஒரு நாட்டு அரசின் எல்லையைத் தாண்டிச் சென்றால் அது பன்னாட்டு நிறுவனம் என்று அழைக்கப்படுகிறது.

எளிமையான வார்த்தையில் கூறும்போது பன்னாட்டு நிறுவனம் என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபாரத்தை நடத்துவதாகும். நைல் H. ஜேகோபி அவர்கள் கூற்றுப்படி, "ஒரு பன்னாட்டு நிறுமம் என்பது ஒரு வியாபாரத்தை தொடங்கி இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளில் மேலாண்மை செய்து வருவதாகும்,” என்று கூறுகிறார்.

சிறப்பியல்புகள்

 1. ஒரு பன்னாட்டு நிறுமம் ஒரே சமயத்தில் பல நாடுகளில் நடத்தப்படும்.
 2. இது மிகப்பெரிய அளவில் செயல்படும்.
 3. இது அயல்நாடுகளில் உள்ள கச்சாப் பொருட்கள், பணியாட்கள், சந்தை ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொண்டு போக்குவரத்துச் செலவுகளை குறைக்க முற்படும்.

இன்று உலக அளவில் 500 முதல் 700 பன்னாட்டு நிறுமங்கள் வரை செயல்படுகின்றன. இதில் சரிபாதி அமெரிக்காவிலும் மீதியுள்ளவை அதற்கு வெளியிலும் காணப்படுகின்றன. அமெரிக்காவில் தலைமையிடம் கொண்டுள்ள பன்னாட்டு நிறுமங்கள் அயல்நாட்டு முதலீடுகளை, நேரடியாகக் கொண்டுள்ளது. அவைகளாவன ஐக்கிய நாடுகள், U.K., ஜெர்மனி, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா. பின்தங்கிய நாடுகளில் முதலீடுகளும் பணியிடங்களும் பன்னாட்டு நிறுமங்களால் 12 நாடுகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவைகளாவன பிரேசில், மெக்ஸிகோ, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் தென்கொரியா. பன்னாட்டு உழைப்பாளர் சங்க அமைப்பின் கூற்றுப்படி (ILO) அமெரிக்காவில் 60% பன்னாட்டு நிறுமங்கள் வேலை வாய்ப்பை வளரும் நாடுகளில் உருவாக்குகின்றன. ஆசிய நாடுகளில் 30% நிறுமங்களும், ஆப்பிரிக்காவில் 10% நிறுமங்களும் செயல்படுகின்றன. அயல்நாட்டு முதலீடுகள் வளரும் நாடுகளுக்குச் சென்று அதன் காரணமாய் அரசியல் நிரந்தரத் தன்மை, பொருளாதார சூழ்நிலை, மலிவான பணியாளர், எண்ணெய் வளங்களையும் இயற்கை வளங்களையும் பயன்படுத்த பன்னாட்டு நிறுமங்கள் உதவிபுரிகின்றன.

எடுத்துக்காட்டு :

பன்னாட்டு நிறுமங்களுக்கு சில எடுத்துக்காட்டுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

யூனி லீவர் லிமிடெட் (Uni Lever Limited)

இது ஒர் பிரிட்டிஷ் நிறுமம். இது பல நாடுகளில் துணை நிறுமங்களையும் கிளைகளையும் கொண்டுள்ளது. இது இந்தியாவில் உருவாக்கிய ஒரு துணை நிறுமம் இந்துஸ்தான் லீவர் லிமிடெட் (Hindustan Lever Ltd).

யூனியன் கார்பைடு (Union carbide)

இது ஓர் அமெரிக்காவைச் சார்ந்த நிறுமம். இது இந்தியா உட்பட பல நாடுகளில் தொழில் கூடங்களையும், துணை நிறுமங்களையும் பெற்றுள்ளது.

இன்டர்நேஷனல் பிசினஸ் மெஷின் (IBM)

இது ஒர் அமெரிக்காவைச் சார்ந்த நிறுமம். பல நாடுகளில் இதன் கிளைகளைப் பெற்றுள்ளது.

பிலிப்ஸ் (Philips)

இது ஒர் டச்சு நிறுமம். இது இந்தியாவில் பிலிப்ஸ் இந்தியா என்னும் துணை நிறுமத்தைப் பெற்றுள்ளது. இப்போது பீசியோ எலக்ட்ரிகல்ஸ் என்னும் பெயரில் நடைபெறுகிறது.

கோகோ கோலா கழகம் (Coco-cola corporation)

இது ஒர் அமெரிக்காவைச் சார்ந்த நிறுமம். பல நாடுகளில் குளிர்பானங்களை உற்பத்தி செய்து விற்பனை செய்கிறது. பீட்டர் டிரக்கர் அவர்களின் கூற்றுப்படி, பன்னாட்டு நிறுமங்களுக்கு எதிர்காலத்தில் மிகச்சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அரசின் கொள்கைகளும் இதற்கு சாதகமாய் உள்ளன. அரசாங்கத்தின் பொருளாதார சீர்திருத்தங்களினால் பன்னாட்டு நிறுமங்கள் மேலும் பயனடையப்போகின்றன. அயல் நாட்டு முதலீடுகளை வரவேற்றலின் தடையில்லாத் தீர்வின் காரணமாக பன்னாட்டு நிறுமங்கள் வளர்ந்து இந்தியா முன்னேற வகைசெய்கிறது.

அரசு நிறுவனங்கள் (Government Institutions)

நவீன காலத்தில் ஒரு நாட்டின் முன்னேற்றத்தை துரிதப்படுத்தும் விதமாக அரசு தொழில்துறையை உருவாக்கியது. பொதுத்துறை நிறுவனங்கள் மத்திய (அ) மாநில அல்லது இரண்டு அரசுகளுக்கும் சொந்தமான, அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, நடத்தப்படும் நிறுவனங்களாகும். இந்த நிறுவனங்கள் பொதுமக்களுக்கு சேவை புரியும் நோக்கோடு நடத்தப்படுவதாகும். இதன் செயல்பாடுகள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும். இந்த அமைப்புகள் பொதுவாக பாதி அளவு சுயாட்சி தன்மை கொண்ட அல்லது முழு சுயாட்சித் தன்மை கொண்டதாகும். தொழில் நடவடிக்கைகளிலும் வியாபார நடவடிக்கைகளிலும் இது ஈடுபட்டுள்ளது.

இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் பல பொதுத்துறை அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிறுவனங்கள் பெரிய அளவில் பலவகையான பொருட்கள் இரும்பு, எக்கு, மின்னணு, கப்பல் துறை, ஆகாயவிமானம், இரயில் என்ஜின், அதிக சக்தியுள்ள இயந்திரங்கள், உரங்கள், இரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்துகள், மருந்துப் பொருட்கள், நுகர்வோர் பொருட்களை உற்பத்தி செய்கிறது. பலவகையான பொது நிறுவன அமைப்புகளில் மிகப்பெரிய அளவிலானது ஆகும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் கோடிக்கணக்கான ரூபாய்களும் இதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. பின்வருபவை இதன் பல்வேறு வடிவங்களாகும்.

துறைமுறை அமைப்பு (Departmental undertaking)

இது அரசாங்கத்தின் அமைச்சகத்தால் நடத்தப்படும் அமைப்பாகும். அமைச்சகத்தின் நிர்வாக அதிகாரிகளால் நிர்வாகம் செய்யப்படுவதாகும். இது அரசாங்கத்தின் ஒரு பகுதியாக செயல்படுகிறது. இது பொதுத்துறை அமைப்பில் மிகவும் பழைமையானதாகும். இது மத்திய அரசாலோ அல்லது மாநில அரசாலோ நடத்தப்படுவதாகும். ரயில் போக்குவரத்து, தொலைபேசி, தொலைக்காட்சி போன்றவை துறைமுறை அமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

பொதுக்கூட்டுரு (public corporation)

இது பாராளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட தனிச் சட்டங்களால் உண்டாக்கப்படுவதாகும். இது ஒரு சட்டமுறைக் கழகமாகும். ஏனெனில் இது தனிச்சட்டத்தால் நடத்தப்படுகிறது. தனிச் சட்டத்திலேயே இதனுடைய நோக்கம், அதிகாரங்கள், பணிகள் ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். இது அரசாங்கத்தால் நிதியுதவி அளிக்கப்பட்டு சுயாட்சித் தன்மை கொண்ட அமைப்பாகும். இது சட்டம் உருவாக்கிய நீடித்தத் தன்மையுடைய அரசாங்கத்திலிருந்து தனித்து இருக்கும் அமைப்பாகும். இதன் முழு பங்கு முதலும் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது.

அரசால் நியமிக்கப்பட்ட (அ) பணியில் அமர்த்தப்பட்ட இயக்குனர் குழுவால் நிர்வாகம் செய்யப்படுகிறது. இக்கழகத்தில் தினசரி நடவடிக்கைகளில் அரசாங்கத்தின் குறுக்கீடுகள் ஏதும் இல்லை. இக்கூட்டுருவின் நோக்கம் பொதுமக்களுக்கு சேவை புரிவதாகும். இப்போது கூட்டுருவிற்கென தனி பணியாட்கள் உள்ளனர். இது நாட்டின் பாராளுமன்றத்திற்கு (அ) சட்டமன்றத்திற்கு பொறுப்பானதாகும். இந்திய ரிசர்வு வங்கி, இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம், யூனிட் டிரஸ்ட் ஆப் இந்தியா ஆகியவை இந்த அமைப்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

அரசு நிறுமங்கள் (Government compaines)

தனியார் நிறுமங்களைப் போலவே அரசு நிறுமங்களும் இந்திய நிறுமச் சட்டம் 1956ன் படி உருவாக்கப்படுவதாகும். இதன் செலுத்திய பங்கு முதலில் 51 விழுக்காடு மத்திய அரசோ அல்லது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநில அரசுகளோ அல்லது மத்திய, மாநில அரசுகளுக்கு சேர்ந்தோ சொந்தமானதாகும் இந்தியாவில் பெரும்பாலான அரசு நிறுமங்கள் தனியார் நிறுமத்திலும் முதலீடு செய்கின்றன. எனவே அரசு நிறுமங்கள் கலப்பு உரிமை நிறுமங்கள் எனவும் அழைக்கப்படுகிறது. இது சட்ட உருகொண்ட, அரசாங்கத்தில் இருந்து தனித்து இயங்குவதாகும். இதன் நிர்வாகம் அரசால் நியமிக்கப்பட்ட அல்லது பங்குதாரர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இயக்குனரவையால் நடத்தப்படுகிறது. இதன் பணியாளர்கள் அரசு ஊழியர்கள் அல்லர். இவர்கள் சமூக அதிகார சட்டங்களுக்கு உட்பட்டவர்கள் அல்ல. இவ்வமைப்பு அரசிடம் இருந்து கடன் வாங்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது. இது மத்திய அமைச்சத்திற்கும் துறைக்கும் பொறுப்பானதாகும். இந்துஸ்தான் ஸ்டீல் வரையறு நிறுமம், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் வரையறு நிறுமம், மாருதி உத்யோக் போன்றவை இதன் எடுத்துக்காட்டுகளாகும்.

வாரிய அமைப்பு (board Organisation)

இந்த அமைப்பின் மேலாண்மை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவிடம் உள்ளது. இது தனிச்சட்டங்களால் ஒழுங்குபடுத்தப்படுகிறது. தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் போன்றவை எடுத்துக்காட்டுகளாகும்.

ஆதாரம் : தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் ஆராய்ச்சி மையம்

Filed under:
3.34782608696
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top