பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / நிதி சேர்க்கை / வரி சீர்திருத்தங்கள் / சரக்கு மற்றும் சேவைவரி பின்னமைப்பு (GSTN)
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சரக்கு மற்றும் சேவைவரி பின்னமைப்பு (GSTN)

சரக்கு மற்றும் சேவைவரி பின்னமைப்பு (GSTN) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

ஜூலை 1, 2017 இதுவரை இல்லாத மிகவும் புரட்சிகரமான வரி சீர்திருத்தங்களை இந்தியா கட்டவிழ்த்து விட்ட நாள். இந்த நிகழ்வு பொருளாதாரத்தில் ஒரு புதிய வீரியத்தைப் பாய்ச்சியது. தேசம் முழுவதையும் ஒரே சந்தையாக மாற்றியது. தனது பொருளாதாரத்தை வெளிஉலகுக்குத் திறந்துவிட்ட 26 ஆண்டுகளுக்குப் பிறகு தாராளமயமாக்கலின் வளர்ச்சி ஆதாயங்களை உறுதிப்படுத்தவும், அதை மேலும் முன்னெடுத்துச்செல்லும் நோக்கத்தோடும் இன்னொரு முக்கியமான நிதி சீர்திருத்தத்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தப்புதிய சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் மத்திய மாநில அரசுகள் இதுவரை விதித்துவந்த 17 வகையான வரிகளும், 22 வகையான செஸ் வரிகளும் இதன் கீழ் உட்படுத்தப்பட்டு ஒரே வரியாக உருப்பெற்றுள்ளது. பலவகைப்பட்ட வரிகளினால் உருவாகும் பெரும் சிக்கல்கள் இதன் மூலம் தவிர்க்கப்படுகின்றன. தொடர்ச்சியாகப் பெருகிவரும் வரிவகைகள் நீக்கப்பட்டுள்ளன. மறைமுக வரிவிதிப்பு இதன் மூலம் கணிசமாக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. மாநிலங்கள் விதித்துவந்த 34 வெவ்வேறு வகையான மதிப்புக்கூட்டு வரிகளுக்கு வெவ்வேறு விதமான 97 வகைக் கணக்குகள் 317 விதமான இணைப்பு ஆவணங்களுடனும் 28 வகை உறுதி ஆவணங்களுடனும் இதுவரை சமர்ப்பிக்கப்பட்டுவந்தன. மத்திய சுங்கவரிக்கு இதைப்போலவே 13வகை கணக்கு ஆவணங்களை உறுதிப்பத்திரத்துடன் சமர்ப்பிக்கவேண்டி இருந்தது. இதற்கான பணம் செலுத்தும் படிவங்களோ 12 வகைப்பட்டவைகளாக இருந்தன. இவை அனைத்துமே இப்போது 12 கணக்குப்படிவங்கள், ஒரு பணம் செலுத்துப்படிவம் என்று குறைக்கப்பட்டுவிட்டன. நாடு முழுவதற்கும் இது பொருந்தும். வரிகளை செலுத்துவதையும், கணக்குகளை சமர்ப்பிப்பதையும் ஜி எஸ் டி எளிமையாக்கியிருப்பதோடு மட்டுமின்றி வரிச்சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் சுமையையும் வெகுவாகக் குறைத்துள்ளது. எளிமையாகத்தொழில் செய்வது என்பது வெகுவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

GSTN: ஜிஎஸ்டிக்கான தகவல் தொழில்நுட்ப ஆக்கம்

சரக்கு மற்றும் சேவை வரி பின்னலமைப்பு (GSTN) ஜிஎஸ்டிக்கான தகவல் தொழில் நுட்ப முதுகெலும்பாக இருக்கிறது. இந்த அமைப்பு புதிய வரிவிதிப்புப் பரிபாலன முறைக்குத் தேவைப்படும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கித்தருகிறது. இதுவரை இருந்துவந்த பலமுனை வரியிலிருந்து ஒற்றை வரி விதிப்புக்கு மாறுவதற்கு இது வழி செய்யும். இந்திய அரசாங்கமும், மாநில அரசுகளும் இணைந்து GSTN கட்டமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்புமுறை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவு செய்வதற்கானது. இது ஒரு இலாப நோக்கில்லாத நிறுவன அமைப்பாகும். இதன் 24.5% பங்குகள் மத்திய அரசிற்கும், 24.5% பங்குகள் அனைத்து மாநில அரசுகளுக்கும் உரியவை. மீதமுள்ள பங்குகள் ஐந்து தனியார் நிதி நிறுவனங்கள் வசம் இருக்கின்றன. முக்கியமான கட்டுப்பாடுகள் அரசிடம் இருக்கும் வேளையில் இந்தக் கட்டமைப்பு தனியார் துறையின் நெகிழ்ச்சித்தன்மையையும் கொண்டுவருகிறது.

எந்தத் தவறும் நேர்ந்துவிடக்கூடாது. வெவ்வேறு நிர்வாகப் படிநிலைகளில் செயல்பட்டுவரும், அபாரமான எண்ணிக்கையில் இருக்கும் வரிவிதிப்பு முறைகளை ஒற்றை இடைமுகத்தில் இணைப்பது சாதாரணமான காரியமல்ல.

சரக்கு மற்றும் சேவை வரி அமைப்புமுறைத்திட்டம் தனித்தன்மையுடைய ஒன்று. இது ஒரு சிக்கலான தொழில்நுட்ப முன்முயற்சி. வரிசெலுத்துபவர், மத்திய அரசு, மாநில அரசுகள் ஆகிய அனைவரும் பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒத்த தன்மையுள்ள இடைமுகப்பை நிறுவவேண்டிய தேவையின் அடிப்படையில் இது உருவானது. வெவ்வேறு முதிர்ச்சி நிலைகளில் இருக்கும் முற்றிலும் வெவ்வேறான 36 வழிமுறைகளை இணைத்து ஒன்று சேர்த்து முடிப்பது மிகவும் சிக்கலான செயலாகும். ஜிஎஸ்டி என்பது பொருள்கள் வாங்கப்படும் இடத்தில் வசூலிக்கப்படுவது என்பதோடு, IGSTக்கு மத்திய, மாநில அரசுகளுக்கிடையே ஒரு வலுவான பைசல் அமைப்பு முறையும் தேவைப்படுகிறது. மாநிலங்களுக்கிடையே வலுவான தகவல் தொழில்நுட்பக்கட்டமைப்பும், சேவைப்பின்புலமும் ஏற்படுத்தப்பட்டு தரவுகள் பெறப்பட்டு, ஆராயப்பட்டு வரி செலுத்துவோர், மாநிலங்கள், மத்திய அரசு, கணக்கு பார்க்கும் அலுவலகங்கள், வங்கிகள், ரிசர்வ் வங்கி ஆகியவற்றுடன் தகவல் பரிமாற்றம் செய்ய்யப்பட்டால்தான் பைசல் சாத்தியப்படும்.

திட்டமிட்டு, வியூகங்கள் அமைத்து, நடைமுறைப்படுத்தி, சரக்கு மற்றும் சேவைவரி பின்னலமைப்பை (GSTN) வளர்த்தெடுப்பதற்கு கடந்த சில ஆண்டுகளாக ஓய்வின்றி உழைத்து ஒரு  பொதுவான ஜி எஸ் டி நுழைவாயில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த GST - IT அமைப்பு முறையில் இது செயல்பட்டு வருகிறது. பயன்படு மென்பொருள்களை உருவாக்குவதற்கு GSTN இன்போசிஸ் உடன் இணைந்து செயலாற்றியது. சேவை வழங்கலை நிர்வகிக்கும் பொறுப்பில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இன்போசிஸ் இருந்துவரும்.

பொதுவான ஒரு ஜிஎஸ்டி நுழைவாயில் நாட்டின் எந்தப்பகுதியிலிருந்தும் வரி செலுத்தக்கூடிய அனைவருக்குமான ஒற்றை இடைமுகப்பாகத் திகழும். வரி செலுத்துபவர்களில் யாரேனும் தணிக்கைக்கோ, மீளாய்வுக்கோ உட்பட நேர்ந்தால் அத்தகையவர்கள் மட்டுமே வரித்துறை அதிகாரிகளுடன் தொடர்புகொள்ளவேண்டி நேரிடும். மற்ற அனைத்து நேர்வுகளிலும், ஏறத்தாழ 95% நேர்வுகளில் பொதுவான GST இடைமுகப்பே வரி செலுத்துவோருக்கான ஒரே நுழைவாயிலாக இருக்கும்.

இது எப்படி வேலை செய்கிறது?

பதிவு செய்து கொள்ளுதல், பணம் செலுத்துவதற்கான படிவங்களை குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் உருவாக்குதல், தொழில் செய்வோருக்கிடையேயான விலைப்பட்டியல் விவரங்களின் அடிப்படையில் கணக்குகளை சமர்ப்பிப்பது ஆகியவற்றை செய்வதற்கு ஏற்ற வகையில் GSTN வடிவமைக்கப்பட்டுள்ளது. கணிப்புகள், மேல்முறையீடுகள், செயலாக்கம் 27 மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்குமாறு GSTN கேட்டுக்கொள்ளப்பட்டது. மதிப்புகூட்டுவரி (VAT), சேவைவரி, மத்திய சுங்கவரி, மற்ற பிற வரிகளுக்காக ஏற்கனவே பதிவு செய்துகொண்டிருப்பவர்கள் ஜி எஸ் டியில் பதிவு செய்து கொள்வதற்கான தொகுப்புகளை நவம்பர் 8, 2016இல் GSTN வெளியிட்டது. இத்தகைய வரிகள் யாவும் தற்போது ஜிஎஸ்டியால் உட்கிரகிக்கப்பட்டுவிட்டன. எனவே இந்தப் புதிய நுழைவாயில் வரி செலுத்தும் அனைவருக்கும் பொதுவான ஒரே நுழைவாயிலாக ஆகியிருக்கிறது. இங்கு பெறப்படும் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு அவை முழுமையானதாக இருக்கும் பட்சத்தில் PAN, CBDT, DIN/CIN, ஆதார் ஆகியவற்றுடன் சரிபார்க்கப்படுகிறது.

ஜிஎஸ்டி நுழைவாயிலில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு பணம் செலுத்தும் படிவத்தைக் கொண்டு, வரி செலுத்துவதும் தொடங்கியிருக்கிறது. பணம் செலுத்தும் படிவம் GSTNஇல் உருவாக்கப்பட்டதும் வரி செலுத்துபவரின் பெயர், தொகை, எந்தெந்தத் தலைப்புகளின் கீழ் வரி செலுத்தப்படுகிறது போன்ற விவரங்கள் அதில் நிரப்பப்படவேண்டும். ஏற்பளிக்கப்பட்டுள்ள 25 வங்கிகளில் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் பணம் செலுத்தலாம். வங்கியில் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் வரையிலான வரிப்பணத்தை நேரடியாக செலுத்தமுடியும். NEFT/RTGS முறைகளைப் பயன்படுத்தி எந்த வங்கியிலிருந்தும் பணத்தைச் செலுத்தலாம். ஒவ்வொரு நாளும் பெறப்பட்ட வரிக்கட்டணங்களை உறுதிசெய்து அதில் மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய பங்கினைப் பிரித்துக்காட்டி, இதுவரை செலுத்தப்பட்டுள்ள வரி பற்றிய முழு விவரங்களையும் தெரிவித்து, கணக்கில் காணப்படும் வேறுபாடுகளைக் களைந்து சரிசெய்வதற்கு வரித்துறையினருக்கு GSTN உதவுகிறது. பணம் செலுத்தப்பட்ட விவரங்களை வங்கிகளிடமிருந்து ரிசர்வ் வங்கி நாள்தோறும் பெறும். பணம் செலுத்தப்பட்ட விவரங்கள் சரிபார்த்து உறுதி செய்யப்பட்டு வரி செலுத்துவோரின் கணக்குப்பேரேட்டில் பதிவு செய்யப்படும்.

இணக்கத்தை எளிமையாக்குதல்

  • வரி செலுத்துவது வரி செலுத்தவேண்டியவர்களின் கடமை. வரிக் கணக்குகளை எளிமையான விதத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளும், குறுகிய காலத்தில் இணக்கமான முறையில் வரி செலுத்துவதற்கான வழிவகைகளை எற்படுத்தித் தருவதும் வரி வசூலிப்பவர்களின் கடமை. எளிய முறையில் இணக்கமான வழியில் வரி செலுத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் என்ற எண்ணமே வரி சீர்திருத்தங்களின் பின்புலமாக இருக்கிறது. வரி வசூலையும், வரிக்கணக்கு சமர்ப்பிப்பதையும் எளிமையாக்குவதற்கு GSTN போன்ற பலவிதமான சேவைகளும், தொழில்நுட்பம் சார்ந்த வசதிகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு மாதமும் GST பரிபாலனத்தில் சாதாரணமான, வழக்கமான வரி செலுத்துவோர் தாங்கள் பொருள்களை வெளியில் விற்ற விவரங்களை அடுத்த மாதத்தின் 10ஆம் தேதிக்குள் GSTN 1 வடிவத்தில் சமர்ப்பிக்கவேண்டும். இதன் ஒரு பகுதியாக மிக எளிதாக, மிகக்குறைவான செலவில் மாதாந்திரக்கணக்குகளை தயாரித்து அனுப்புவதற்கு வசதியாக எக்செல் வடிவத்தில் மிக எளிய படிவத்தினை GSTN உருவாக்கித் தந்துள்ளது. எல்லாவிதமான விலைப்பட்டியல்களிலிருந்தும் தரவுகளை தொடர்ந்து ஒப்பிட்டுப்பார்க்கமுடியும். அதை JSON கோப்பாக மாற்றி ஜிஎஸ்டி முகப்பில் பதிவேற்றம் செய்துவிடவேண்டும். இந்த ஒரு காரியத்துக்கு மட்டுமே வரிசெலுத்துவோருக்கு இணைய இணைப்பு தேவைப்படும்.
  • நுகர்வோருக்கு மட்டும் விற்பனை செய்யும், சிறிய அளவில் வரி செலுத்துவோரிடம் வணிகர்களுக்கிடையிலான விலைப்பட்டியல் இருக்காது. இத்தகையவர்கள் வெறும் ஐந்து வரிகளில் விவரங்களைத் தந்துவிட முடியும். அதைப்போலவே, 75 இலட்சமும் அதற்குக் கீழும் வரவு செலவு உள்ள வரி செலுத்துநர்கள் 3 மாதத்திற்கு ஒரு முறை வரிகணக்கை சமர்ப்பிக்கும் விருப்பத்தேர்வை செய்துகொள்ளலாம். இந்தக் கணக்கும் மிக எளிய முறையில் இருக்கும்.
  • வரிக்கணக்கு தயாரிப்பதையும், சமர்ப்பிப்பதையும் எளிதாக்குவதுதான் நமது நோக்கம். எக்செல் வடிவில் இருக்கும் கோப்பைப் பயன்படுத்தி பல்வேறு தலைப்புகளின் கீழ் உள்ள தரவுகளை வரிசெலுத்துவோர் நிர்வகிக்கமுடியும். வாராவாரமோ அல்லது சீரான இடைவெளிகளிலோ பொருள்களை விற்பனை செய்யும் விவரங்களை வரிசெலுத்துவோர் தயாரித்துக்கொள்ளமுடியும். அதனை ஜிஎஸ்டி முகப்பில் எளிதில் பதிவுவேற்றம் செய்துகொள்ளவும் முடியும். இந்தச் செயலி ஒரே சமயத்தில் 19000 வரிகளில் இடம்பெற்றுள்ள தரவுகளை உள்வாங்கிக்கொண்டு அதை 5MB கோப்பாக உருவாக்கும்.
  • இதன் வழியாக, தரவுகளை பலமுறை உள்ளீடு செய்து பதிவேற்றம் செய்து, தேவைப்பட்டால் GSTR-1 ஐ உருவாக்கமுடியும். இந்த வழிமுறையின்படி வணிகத்தொடர்புடைய நடுத்தர வரி செலுத்துநர்கள் தங்களின் வரி தொடர்பான கணக்குகளைத் தயாரித்து சமர்ப்பிக்கமுடியும். GSTR-1 வரிக்கணக்கை இணைய இணைப்பு இல்லாமலேயே உருவாக்கிக் கொள்ளவும் முடியும். இணைய இணைப்பு சரிவர இல்லாத தொலைதூரப் பகுதிகளில் இருக்கும் வரி செலுத்துவோர் இதனால் பயன் பெற இயலும்.

தொழில் செய்வதை மேலும் சுலபமாக்கும் வழிமுறை

  • எளிதாகத் தொழில் செய்யக்கூடிய வாய்ப்பு பொருளாதாரத்தின் வெளிப்படையான, ஏதுவான தன்மைக்கு முக்கியமான அடிப்படை. துரதிருஷ்டவசமாக இந்தியா, உலகப்பொருளாதாரத்தில் இந்த வகையில் தொடர்ந்து பின்தங்கி வந்துள்ளது. எளிதாகத் தொழில் புரிவது எனும் உலக வங்கியின் அறிக்கை தொழில் ஆரம்பிப்பதிலும், அதனை நடத்துவதிலும் தொழில் முனைவோர் சந்திக்கும் பல்வேறு இடையூறுகளை சுட்டிக்காட்டும் காரணிகளில் முக்கியமான ஒன்றாக வரிசெலுத்துவதைக் கணக்கில் கொண்டுள்ளது. இங்கு அலசி ஆராயப்பட்ட முக்கியமான குறியீடுகளில் ஒன்று எளிதில் வரி செலுத்துவது என்பதுமாகும்.
  • GSTNஇன் நோக்கம் வரி செலுத்துவதை உறுதிப்படுத்துவது மட்டுமல்ல. வரி செலுத்தும் வழிமுறையை எளிதாகவும், வசதியாகவும் மாற்றுவதும் தான். இந்தக்குறியீடு ஒன்றை மட்டுமே சீர்படுத்தி அமைப்பதின் மூலம் எளிதாகத்தொழில் செய்வதை கணிசமாக உயர்த்தி உலக அரங்கில் இந்தியாவின் தரவரிசையை மேம்படுத்திவிடமுடியும். தொழில்கள் சிறக்கவும், தொழில் முனைவோர் அதிகாரம் பெறவும் வரி செலுத்துமுறை எளிதாகவும் இது உதவும்.
  • GSTN ஆல் சக்தியளிக்கப்பட்ட GSTயை அமலாக்குவதால், எளிதில் தொழில் செய்யும் வகை முறையில் இந்தியா மிகப்பெரிய ஆதாயங்களை எதிர்நோக்கி உள்ளது. GSTஇன் அமலாக்கம் தொழில்வளர்ச்சியை ஊக்கப்படுத்தும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.0
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top