பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
 • நிலை: திருத்தம் செய்யலாம்

சுய உதவிக் குழு அமைக்கும் வழிமுறை

சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

சுய உதவிக் குழுக்களை அமைத்தல்

1. சுய உதவிக் குழுக்கள்

ஒரே பகுதியில் வசிக்கக் கூடிய ஒத்த கருத்துடைய இலக்குமக்கள் தங்களின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக தாங்களாகவே முன்வந்து ஏற்படுத்திக்கொண்ட அமைப்பு சுய உதவிக்குழு ஆகும்.

புதுவாழ்வு திட்டத்தின் இலக்கு மக்கள் மிகவும் ஏழை, ஏழை, மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்ற பிரிவைச்சார்ந்த மக்களாவார்கள். இந்த ஏழை எளிய மக்களெல்லாம் குழுக்களாக இணைவதன் மூலம் தங்களின் உரிமைகளுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க முடியும். தங்களின் பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக்கொள்ளும் ஆற்றலைப் பெற முடியும். இவ்வாறாக மக்களை ஒன்றாக இணைப்பதற்கும், அவர்களை திறமை உள்ளவர்களாய் உருவாக்குவதற்கும், சுய உதவிக் குழு என்பது ஒரு சிறந்த கருவியாக உள்ளதை தமிழ்நாட்டின் நீண்ட வரலாற்றில் அறியலாம்.

‘சேமிப்பு, கடன் மற்றும் காப்பீடு’ ஆகியவை நிலைத்த வாழ்வாதாரத்திற்கும், வறுமையை குறைக்கவும் இன்றியமையாததாகும். இச்சேவைகள் மக்களுக்கு தொடர்ந்து கிடைக்க சுய உதவி குழுக்கள் மிகவும் அவசியம் ஆகும்.

எனவே, விடுபட்ட அனைத்து இலக்கு மக்களையும் குழுக்களாக அமைக்க புது வாழ்வு திட்டம் முனைந்து செயல்படுகிறது.

புதுவாழ்வு திட்டத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும் சுய உதவிக்குழுக்கள் தொடர்பான செயல்பாடுகள் பின்வருமாறு:

1. விடுபட்ட இலக்கு மக்களைக் கொண்டு புதிய குழுக்கள் அமைத்தல், ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டிருக்கும் பழைய குழுக்களை வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைத்தல் மற்றும் செயல்படாத குழுக்களை செயல்பட வைத்தல் செயல்படாத குழுக்களில் உள்ள உறுப்பினர்களை புதிய குழுவில் இணைக்கக் கூடாது. மாறாக செயல்படாத குழு உறுப்பினர்களை ஒன்றினைத்து கூட்டம் நடத்தி பிரச்சினைகளை கண்டறிந்து அப்பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு செயல்பட வைக்க வேண்டும்.

2. வறுமை ஒழிப்பு சங்கத்துடன் இணைந்த அனைத்து குழுக்களுக்கும் பயிற்சியளித்தல் 3 மாதங்கள் நிறைவடைந்த குழுக்களுக்கு சமூக தர ஆய்விற்கு ஏற்பாடு செய்து 80-100% இலக்கு மக்களுடைய குழுக்களுக்கு ஆதார நிதி வழங்குதல்.

3. 6 மாதங்கள் நிறைவடைந்த குழுக்களுக்கு வங்கி தர மதிப்பீட்டிற்கு ஏற்பாடு செய்து, தகுதியான குழுக்களுக்கு வங்கி மற்றும் பிற நிறுவனங்களுடன் நிதி இணைப்பு ஏற்படுத்துதல்.

4. ஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்தல் .

5. அனைத்து சுய உதவிக் குழுக்களையும் ஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்பின் மூலம் கண்காணித்தல் மற்றும் வலுப்படுத்துதல்.

ஊராட்சி அளவிலான குழுக்களின் கூட்டமைப்பு, குழுக்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணித்து கட்டுப்படுத்துவதை, கிராம வறுமை ஒழிப்பு சங்கம் உறுதி செய்தல் வேண்டும்.

சுய உதவிக் குழுக்களை அமைத்தல்

அ) தகுதிகள்

 • குழுவில் இல்லாத தகுதியான இலக்கு மக்கள்
 • ஓரே பகுதியில் வசிப்பவர்கள்.

ஆ) சுய உதவிக் குழுவின் வகைகள்

வ.எண்

குழுவின் வகைகள்

வயது வரம்பு

1

மகளிர் சுய உதவிக் குழு

18 – 60*

2

இளைஞர் சுய உதவிக் குழு

18 - 35

3

மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழு

60 வயதுவரை

4

பழங்குடியினர் சுய உதவிக் குழு

18 – 60*

* 60 வயதிற்கு மேற்பட்டவர்களும் சுய உதவிக்குழுவில் இணைந்து புதுவாழ்வு திட்ட பயன்களை பெறலாம்.

 • புதிய குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2 கூட்டங்கள் தொடர்ந்து நடத்துதல்
 • பொதுவாக ஒரு சுய உதவிக்குழு 12-20 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்.
 • ஆனால் மாற்றுத்திறனாளி மற்றும் மக்கள் குறைவாக உள்ள மலைப்பகுதி போன்ற கடினமான பகுதிகளில் குறைந்த பட்சமாக 5 உறுப்பினர்களைக் கொண்டும் குழு துவக்கப்படலாம்.
 • மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு சுய உதவிக் குழுவில், மன வளர்ச்சி குன்றியோர்கள் மற்றும் 18 வயதிற்குக் குறைவான மாற்றுத்திறனாளி சார்பாக அவர்களின் பெற்றோர்களோ (அ) பாதுகாவலர்களோ குழுவில் பிரதிநிதியாக செயல்படலாம்.
 • 100 சதவிகித இலக்கு மக்களைக் கொண்டு மட்டுமே புதிய சுய உதவிக் குழுக்களை அமைக்க வேண்டும்.
 • ஒரு பகுதியில் குறைவான எண்ணிக்கையில் தகுதியுடைய இலக்கு மக்கள் இருப்பின் அவர்களை ஏற்கனவே செயல்படும் சுய உதவிக் குழுக்களில் இணையச் செய்யலாம்.

இ) சுய உதவிக்குழு அமைக்கும் வழி முறைகள்

1. மக்கள் நிலை ஆய்வு அட்டையில், குழுக்கள் பற்றிய விவரங்களை சேகரித்து தொகுத்தல்.

2. கிராம அளவில் இலக்கு மக்கள் கூட்டம் நடத்துதல்.

3. குழுவில் சேர தகுதியான இலக்கு மக்களைக் கண்டறிதல்.

4. கிராம வறுமை ஒழிப்புச் சங்கமும், சுய உதவிக் குழு கூட்டமைப்பும் இணைந்து புதிய குழுக்களை உருவாக்குவதற்கான திட்டத்தினை தயாரித்தல்.

5. இலக்கு மக்கள் விடுபட்டுள்ள காரணம் மற்றும் அவர்களின் உண்மை நிலையை தெளிவாக அறிதல்.

6. புதுவாழ்வு திட்டம் பற்றியும், சுய உதவிக் குழுவில் இணைவதன் அவசியத்தையும் எடுத்துரைத்தல். (சமூக ரீதியிலான முன்னேற்றம், பொருளாதார ரீதியிலான முன்னேற்றம்)

7. விருப்பமுள்ள தகுதியான இலக்கு மக்களை குழுக்களாக ஒருங்கிணைத்தல்.

8. புதிய குழு அமைக்கப்பட்டு குறைந்தபட்சம் மாதத்திற்கு 2 கூட்டங்கள் தொடர்ந்து நடத்துதல்.

9. திட்ட ஒருங்கிணைப்பு அணி, குழுக்கள் அமைத்தலின் தரத்தினை சரிபார்த்தல்.

10. சுய உதவிக் குழுக்கள் வங்கி கணக்கு துவங்குதல்.

ஈ) பயன்கள்

கிராம அளவிலான கூட்டத்தின்போது குழுக்களில் இணைவதன் மூலம் கிடைக்கும் கீழ்காணும் பயன்களை விடுபட்ட இலக்கு மக்களுக்கு விளக்கி கூற வேண்டும்.

சுய உதவிக் குழுக்களில் சேருவதால் இரண்டு வகையான பயன்களை பெற முடியும். அவை நிதி அல்லாத பயன்கள் மற்றும் நிதி பயன்கள் ஆகும்.

1) நிதி அல்லாத பயன்கள்

 • மக்களிடையே ஒற்றுமை உணர்வு வலுப்படுகிறது.
 • தன்னம்பிக்கை வளர்கிறது.
 • சுய முன்னேற்றத்திற்கு வழி வகுக்கிறது.
 • பல தரப்பட்ட தகவல்களைப் பெற முடியும்.
 • சமூக பாதுகாப்பு மற்றும் அங்கீகாரம் கிடைக்கிறது.
 • சமூக வளர்ச்சியில் பங்கேற்க முடியும்.
 • சமூக வல்லுநராக உருவாக முடியும்.
 • அரசின் நலன்திட்டங்களை எளிதாக பெற முடியும்

2) நிதி பயன்கள்

 • சேமிப்பு பழக்கம் ஏற்படுகிறது. மக்களால் முடிந்த அளவு சேமிக்கலாம்.
 • அவசர நிதி தேவைகள் பூர்த்தி செய்யப்படுகிறது.
 • அதிக வட்டியால் அவதிப்படுவது தவிர்க்கப் படுகிறது.
 • குழு மூலம் காப்பீடு (இன்சூரன்ஸ்) பயன்களை அடைய முடிகிறது.
 • ஏற்கனவே செய்யும் தொழிலை மேம்படுத்தவும், புதிய தொழில்கள் மூலம் வளர்ச்சி அடையவும் உதவுகிறது.
 • வங்கி மற்றும் பிற திட்டங்களுடன் நிதி இணைப்பினை எளிதில் பெற முடிகிறது.

உ) குழு ஆரம்பித்தவுடன் பின்பற்ற வேண்டியவைகள்

 • குழுவிற்கான பெயரை முடிவு செய்தல்
 • பிரதிநிதி - 1, பிரதிநிதி -2 மற்றும் கணக்காளர் ஆகியோர்களை தேர்வு செய்தல்
 • குழுவிற்கான முக்கிய விதிமுறைகளை உருவாக்குதல் ( உறுப்பினர் தகுதி, கூட்ட தேதி, கூட்ட நேரம், கூட்ட இடைவெளி, சேமிப்பு முறை, கடன் முறைகள் போன்றவை)
 • முதல் குழு கூட்டத்திலிருந்தே பதிவேடுகளை பராமரித்தல்
 • குழு ஆரம்பித்து உடனடியாக வங்கிக் கணக்கு துவங்குதல்.

திட்ட ஒருங்கிணைப்பு அணி குழுவின் தரத்தை ஆய்வு செய்ய கீழ்க்கண்ட சரிபார்க்கும் பட்டியலை வைத்து சரிபார்த்தல்.

ஊ) குழுவினை அமைப்பவர்கள்

 • புதிய குழுக்களை அமைப்பதற்கான பொறுப்பு கிராம வறுமை ஒழிப்பு சங்கத்தையே சாரும்.
 • தன்னார்வத்துடன் முன்வரும் கிராம வறுமை ஒழிப்பு சங்க உறுப்பினர்கள், சுய உதவிக் குழு கூட்டமைப்பு அல்லது சமூக சுய உதவிக் குழு பயிற்றுநர்கள் மூலம் குழுக்களை ஆரம்பிக்கலாம்.
 • திட்ட ஒருங்கிணைப்பு அணி கிராம வறுமை ஒழிப்புச் சங்கத்திற்கு வழி காட்டும்.

எ) குழு அமைப்பதற்கான செலவினங்கள்

 • குழு அமைக்கும் போது ஏற்படும் செலவினங்கள் (வங்கி வைப்புத்தொகை, சீல், புகைப்படம், போக்குவரத்து)
 • களப்பயணமாக செல்லும் செலவு
 • நன்கு வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் குழு உறுப்பினர்களின் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுதல்.
 • புதிய சுய உதவிக்குழுக்களை சமூக சுய உதவிக்குழு பயிற்றுநர்கள் துவங்கும் பட்சத்தில் ஊக்க தொகையாக ஒரு குழுவிற்கு ரூபாய் 350 தகுந்த ஆவணங்களை பெற்றுக்கொண்டு கிராம வறுமை ஒழிப்பு சங்க நிதியிலிருந்து வழங்கலாம்.

இச்செலவினங்களை கிராம வறுமை ஒழிப்பு சங்க திறன்வளர்ப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

3.22222222222
Sudha Jul 16, 2019 01:02 PM

வெவ்வேறு மாநில மற்றும் மாவட்ட பெண்கள் இணைந்து குழு அமைக்க முடியுமா?

muthulakshmi Jul 15, 2019 02:25 PM

குழுவை அரசின் எந்த துறையில் பதிவு செய்ய வேண்டும் ?

Srija Jun 28, 2019 04:16 PM

பிரதிநிதி குழுவில் ஏதேனும் தவறு செய்தால் அவரை மாற்றலாமா

Gunaseeli Jun 27, 2019 10:05 PM

சுய உதவிக் குழுவின் கணக்கு எழுதும் முறை எப்படி

velankanni May 10, 2019 02:52 PM

மகளிர் சுயஉதவி குழுவில் சரியாக பணம் கட்டாத உறுப்பினர் மீது எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கலா

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top