অসমীয়া   বাংলা   बोड़ो   डोगरी   ગુજરાતી   ಕನ್ನಡ   كأشُر   कोंकणी   संथाली   মনিপুরি   नेपाली   ଓରିୟା   ਪੰਜਾਬੀ   संस्कृत   தமிழ்  తెలుగు   ردو

தேசிய மகளிர் ஆணையம்

தேசிய மகளிர் ஆணையம்

பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு

பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தேசிய மகளிர் ஆணையம் ஆண்டு முழுவதும் ஓய்வின்றி உழைத்து வருகிறது. தேசிய மகளிர் ஆணையம் 1992-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி அமைக்கப்பட்டது. இந்தியாவிலுள்ள பெண்களின் நலனைப் பாதுகாப்பதற்காக 1990-ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் கீழ் சட்டபூர்வ அமைப்பாக இந்த ஆணையம் ஏற்படுத்தப்பட்டது.

தேசிய மகளிர் ஆணையத்தின் பணி மிகவும் விரிவானது. பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்வற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. பெண்களின் நலன் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்தச் சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றை ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களைச் செய்ய பரிந்துரைக்கிறது. இவை தவிர எத்தகைய புதியச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது குறித்த பரிந்துரைகளையும் தேசிய மகளிர் ஆணையம் வழங்குகிறது. பெண்களின் உரிமைகள் பறிக்கப்படுவது சம்பந்தப்பட்ட புகார்களைப் பெற்று அவற்றின் அடிப்படையிலும், குற்றச் செயல்களை அறிந்து தாமாகவும் நோட்டீஸ் அனுப்பி இந்த ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது. உரிமைகள் பறிக்கப்படும்போது அவர் களுக்குத் தேவையான உதவி, ஆதரவு, சட்ட கவனிப்பு ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பதற்காகவே தேசிய மகளிர் ஆணையம் இவ்வாறு செய்கிறது. வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் பெண்கள் சமத்துவம் பெறுவதற்கு வசதியாக, அவர்களின் நலனைப் பாதுகாக்க கொண்டுவரப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் முறையாகச் செயல்படுத்தப்படுகின்றனவா? என்பதையும் இந்த ஆணையம் கண்காணிக்கிறது. பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன மற்றும் சட்டப் பாதுகாப்புகளை ஆய்வு செய்வது, சட்டத் தீர்வுகளைப் பரிந்துரைப்பது, குறைகளைத் தீர்க்க உதவி செய்வது, பெண்கள் சம்பந்தப்பட்ட அனைத்து கொள்கை விசயங்களிலும் அரசுக்கு அறிவுரை வழங்குதல் ஆகியவைதான் தேசிய மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பணிகள் ஆகும்.

அமைப்பும் செயல்பாடுகளும்

தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின்படி ஆணையத்தில் ஒரு தலைவரும், ஒரு உறுப்பினர் செயலரும், 5 அலுவலர் சாராத உறுப்பினர்களும் இருப்பார்கள். இந்த ஆணையத்தின் செயல்பாடுகள் மொத்தம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. புகார்கள் மற்றும் விசாரணைப் பிரிவு, சட்டப்பிரிவு, வெளிநாடுவாழ் இந்தியர்கள் பிரிவு, ஆய்வுப் பிரிவு ஆகியவைதான் அந்த 4 பிரிவுகள் ஆகும். ஆணையத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் கிட்டத்தட்ட இந்த 4 பிரிவுகளால் தான் மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

புகார்கள் மற்றும் விசாரணைப் பிரிவுதான் மகளிர் ஆணையத்தின் முதன்மைப் பிரிவு ஆகும். வாய்வழிப் புகார்கள், எழுத்து மூலமான புகார்கள், செய்தித்தாள்களில் வந்த செய்திகள் ஆகியவற்றை இந்த ஆணையம் ஆய்வும் செய்யும். 1990- ஆம் ஆண்டின் தேசிய மகளிர் ஆணையச் சட்டத்தின் 10(1)(7)(94) ஆகிய பிரிவுகளின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்கும். கடுமையான குற்றங்கள் என்றால் அதுபற்றி விசாரிக்க விசாரணை ஆணையத்தை மகளிர் ஆணையம் அமைக்கும். இந்த ஆணையம் குற்றம் நடந்த இடத்திற்கே சென்று விசாரணை நடத்தும். இதில் சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தி சாட்சியங்களைச் சேகரித்து, அவற்றின் அடிப்படையில் பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையை தேசிய மகளிர் ஆணையத்திடம் விசாரணை ஆணையம் தாக்கல் செய்யும். வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி நிவாரணமும், நீதியும் கிடைக்க இந்த விசாரணைகள் உதவும். விசாரணை ஆணையங்களின் அறிக்கையை மாநில அரசுகள்/ அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்று விசாரணை ஆணையத்தின் பரிந்துரைகள் செயல் படுத்தப்படுவதை மகளிர் ஆணையம் கண்காணிக்கும்.

தனக்கான கடமையைச் செய்யும் நோக்குடன், மகளிரின் அந்தஸ்தை மேம் படுத்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுவரும் ஆணையம், பெண்களின் சமூக, பொருளாதார அதிகாரமளித்தலுக்காகவும் பாடுபடுகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தேசிய மகளிர் ஆணையம், தொண்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களின் மகளிர் கல்வி மையங்கள் ஆகியவற்றின் சார்பில் நடத்தப்படும் சட்டங்கள்/ கருத்தரங்குகள்/ பயிலரங்குகள்/ பொது விசாரணைகளில் பங்கேற்பதற்காக மகளிர் ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொள்வார்கள். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விசாரிப்பார்கள். சிறைகளில் வாடும் பெண் கைதிகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் ஆகியோரின் துன்பங்களை அறிவதற்காக முறையே சிறைகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் செல்லும் ஆணைய அதிகாரிகள், பெண்களின் குறைகளைக் களையும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பரிந்துரைப்பார்கள். பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை முதல் நோக்கில் அறிந்துகொள்வதற்காகவும், அதற்கான தீர்வுகளைத் தெரிவிப்பதற் காகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பிரச்சினைகளைக் கொண்டு சென்று தீர்ப்பதற்காகவும், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களின் மகளிர் கல்வி மையங்களின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். பெண்களின் சட்ட உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வு முகாம்களில் இவர்கள் கலந்துகொள்கின்றனர்.

புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தல்

தேசிய மகளிர் ஆணையத்திற்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. விசாரணைக்குக் குழுக்களை அமைத்து விரைவான நீதி வழங்குவதற்காக பல வழக்குகளை ஆணையம் தாமாகவே முன்வந்து எடுத்துக்கொள்கிறது. சட்ட விழிப்புணர்வு திட்டங்கள், மகளிர் மக்கள் நீதிமன்றங்கள் போன்றவற்றை நடத்த இந்த ஆணையம் உதவிசெய்கிறது. அதுமட்டுமின்றி, கருத்தரங்குகள்/ பயிலரங்குகள்/ ஆலோசனைகள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் ஆணையம், பெண் சிசுக் கொலை, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்களையும் செய்து வருகிறது.

பணியிடங்களில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகள் அளிக்கப்படுவது தொடர்பான புகார்கள் வந்தால், அதுபற்றி விசாரிப்பதற் காக, விஷகாய ராஜஸ்தான் அரசு (ஆஒத 1997 உச்சநீதிமன்றம் 3011) வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, உள்விசாரணைக் குழு ஒன்றை அமைக்கும்படி சம்பந்தப்பட்ட நிறுவனத்தைத் தேசிய மகளிர் ஆணையம் கேட்டுக்கொள்ளும். குடும்ப வன்முறை, வரதட்சணைக் கேட்டல், வரதட்சணைக் கொடுமை, கொலை, சித்ரவதை செய்தல், கடத்தல், வெளிநாடுவாழ் இந்தியர்கள்/ வெளிநாடுவாழ் இந்தியர்களின் திருமணம் தொடர்பான மோசடிகள், பெண்களை கைவிட்டுவிட்டுக் கணவர்கள் ஓடுதல், முதன் மனைவி இருக்கும்போதே இரண்டாவது மணம் செய்தல், கற்பழிப்பு, காவல்துறை அலட்சியம், தொல்லை தருதல், கணவனால் கொடுமைக்குள்ளாக்கப் படுதல், பெண்களின் உரிமைகளைப் பறித்தல், பாலின பாகுபாடு பாலினத் தொல்லை உள்ளிட்டவை தொடர்பான புகார்கள் தேசிய மகளிர் ஆணையத்தால் பெறப்படுகின்றன.

அண்மைக்கால முன்முயற்சிகள்

கண்ணியமான வாழ்க்கை வாழ்வதற்குரிய பெண் களின் உரிமைகள் குறித்து அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், அவர்களின் திறனை மேம்படுத்துவதற்கும், இது தொடர்பாக காவல்துறையினருக்குத் தெரிவிப்பதற்கும் ஏராளமான நடவடிக்கைகளைத் தேசிய மகளிர் ஆணையம் எடுத்திருக்கிறது. "வன்முறை இல்லாத இல்லம் பெண்ணின் உரிமை' "ஜாகோ' மற்றும் பிற அமைப்புகளுடன் செய்யப்பட்டு கூட்டுமுயற்சி ஒப்பந்தங்கள் இவற்றில் அடங்கும்.

"மகளிருக்கு அதிகாரமளித்தல் இயக்கம்' என்ற புதிய முயற்சி கடந்த 2011-ஆம் ஆண்டில் வெற்றிகரமாகத் தொடங்கப்பட்டது.

பெண்களின் நலனுக்கான ஏராளமான புத்தகங்களையும் இந்த ஆணையம் வெளியிட்டிருக்கிறது.

பெண்களுக்கு அதிகாரமளித்தல் மட்டுமின்றி அவர்களின் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திலும் தேசிய மகளிர் ஆணையம் கவனம் செலுத்துகிறது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கட்டுப்படுத்துவதற்காக தேசிய மகளிர் ஆணையம், காவல்துறை, ஊடகங்கள் ஆகிய மூன்றுக்கும் இடையே கருத்துப் பறிமாற்றங்கள் தேவை. தேசிய மகளிர் ஆணையத்தின் சார்பில் 'Rashtra Mahila' என்ற பெயரில் மாதாந்திர செய்தி ஏடு ஒன்று வெளியிடப்படுகிறது.

திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகள்

தேசிய மகளிர் ஆணையத்தால் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன. இவற்றில், குழந்தைப்பேறுக்கு வாய்ப்பில்லாத பெண்களுக்காக கருவை சுமக்க கருப்பையை வாடகைக் விடுதல் மற்றும் குழந்தைப் பெறு தொழில்நுட்பங்கள், ஊடகங்களில் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவபடுத்தல், கற்பழிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு அளித்தல், தொழிற்சாலைகளில் இரவு நேரங்களில் பெண்கள் வேலைசெய்தல், திருமணம் சம்பந்தப்பட்ட சட்டங்கள், பெண்களைச் சூனியக்காரிகள் என முத்திரை குத்தி கொடுமைப்படுத்துதல், பெண் களுக்கு எதிரான குடும்ப வன்முறைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஆய்வுசெய்வதை தடைசெய்யும் சட்டம், பாலியல் தொல்லைகளுக்கு எதிராக பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்தல், வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961, பெண்கள் பரிமாற்றம், இந்தியாவில் மனிதக் கடத்துதலை தடுத்தல் மற்றும் ஒடுக்குதல், முடிவெடுக்கும் நடைமுறை தொடர்பான அரசியலில் பெண்களின் பங்கேற்பு ஆகிய தலைப்புகள் அடங்கும்.

குடும்ப வன்முறை, கருவிலிருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சோதனை மூலம் கண்டறிதல், குறைந்துவரும் பாலின விகிதம், தாய்மார்களுக்கான சுகாதார சேவைகள், வடகிழக்கு மாநிலங்களில் நடைபெறும் ஆயுதப் போராட்டங்களால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள், பெண்களின் உரிமைகள், முஸ்லீம் பெண்கள், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளில் பெண்ணின் பங்கு, குழந்தை திருமணம் போன்றவை குறித்து பொது விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரும், உறுப்பினர்களும் கோடா சிறை. திருவனந்தபுரம் சிறை, புதுச்சேரி சிறை, பெங்களூரூ மத்திய சிறை, நரிபந்தி நிகேதன் லக்னோ, பாண்டா மாவட்டச்சிறை, கோவா சிறை, அலிப்பூர் சீர்திருத்த இல்லம், ஏர்வாடி மகளிர் சிறை ஆகிய சிறைகளுக்கச் சென்று ஆய்வு செய்ததுடன், அவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்குப் பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர்.

தேசிய உதவி தொலைபேசி சேவை

மகளிருக்கு உதவுவதற்காக 24 மணிநேரமும் இயங்கும் இலவச தொலைபேசி சேவையைக் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 2012 ஏப்ரல் மாதத்தில் தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியது. இந்தத் தொலைபேசி சேவையை அகமதாபாத் பெண்கள் நடவடிக்கைக்குழு என்ற தொண்டு நிறுவனம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தொலைபேசி சேவையை சோதனை அடிப்படையில் மகளிர் ஆணையம் தொடங்கியிருக்கிறது.

சாதனை மைல்கற்கள்

தேசிய மகளிர் ஆணையம் கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு சட்டங்களை மறுஆய்வு செய்துள்ளது. புதிய சட்டங்களை நிறைவேற்ற யோசனை கூறியுள்ளது.

கீழ்க்கண்ட சட்டங்களில் திருத்தங்களைச் செய்யும்படி தேசிய மகளிர் ஆணையம் யோசனை தெரிவித்துள்ளது. அவற்றில் பெரும்பாலானவை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.

  • குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்- 2005 என்ற சட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்துதல்.
  • பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துவதைத் தடுத்தல் சட்டம்- 1986.
  • பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லைகளைத் தடுத்தல் சட்டம் - 2010.
  • பாலியல் தாக்குதல் தடுத்தல் சட்டம்.
  • வீட்டு வேலையாட்கள் நலன் மற்றும் சமூகப் பாதுகாப்புச் சட்டம் - 2010.
  • விவாகரத்துக்குப் பிறகு ஜீவனாம்சம் வழங்குவது தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 125-வது பிரிவில் திருத்தங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
  • திருமணம் செய்வதற்கான வயது குறித்த சட்டம்
  • PWDVA சட்டம் மற்றும் குத்தகை உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் முன்வைக்கப் பட்டுள்ளன.
  • சூனியம் வைத்தல் தொடர்பான மத்திய சட்டத்தில் மறு ஆய்வு.
  • பெண்கள் உள்ளிட்ட மனிதக் கடத்தலை தடுப்பதற்காக ஐ.நா.வின் கட்டுப்பாட்டில் செயல்படும் (UNIFEM) என்ற அமைப்புடன் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தேசிய மகளிர் ஆணையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டது.

புதிய வரைவுச் சட்டங்கள்

  • கவுரவம், பாரம்பரியம் (கௌரவக்கொலை) என்ற பெயரில் நடக்கும் குற்றங்களைத் தடுத்தல் சட்டம் - 2010
  • ஆசிட் வீச்சில் (ஆசிட் வீச்சு) பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு வழங்குதல் திட்டம்
  • கற்பழிப்புக் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டம்.
  • PWDVA சட்டத்தைச் சிறப்பாகச் செயல் படுத்துவதற்கு வசதியாக சுதந்திரமான பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் துணை பணியாளர்களை நியமிக்க மாநில அரசுகளை ஊக்கவிக்கும் வகையில் அவற்றுக்கு நிதி உதவி அளிப்பதற்காக மத்திய அரசின் ஆதரவுடன் கூடிய திட்டம் ஒன்றை தேசிய மகளிர் ஆணையம் முன்வைத்திருக்கிறது.

தேசிய மகளிர் ஆணையம் தொடங்கப்பட்டதிலிருந்து இன்று வரையிலான 20 ஆண்டுகளில் பொருத்தமான கொள்கை நடவடிக்கைகள், சட்டங்கள் மற்றும் சட்டத்தைச் செயல்படுத்துதல் மூலமாக பெண்கள் அனைத்துத் துறைகளிலும் சமத்துவத் தையும், சம பங்கேற்பையும் பெறுவதற்காக ஆணையம் பாடுபட்டு வருகிறது.

மகளிருக்கு அதிகாரமளிப்பதன் மூலம் தங்களின் உரிமைகளுக்காக போராடுவதற்குரிய அறிவும், வலிமையும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் குறையும் என்று நம்புகிறேன். பெண்களுக்குச் சட்ட, சமூக, அரசியல் மற்றும் பொருளாதார அதிகாரம் மற்றும் மேம்பாடு ஆகியஇலக்குகளை எட்டவும், அதன்மூலம் சமூகத்தில் பெண்களின் அந்தஸ்தை உயர்த்தவும் பாடுபட வேண்டும் என்ற அதன் பணியை நிறைவேற்ற தேசிய மகளிர் ஆணையம் உறுதிபூண்டிருக்கிறது. இந்த இலக்கை நோக்கிய பயணத்தில் சில முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ள போதிலும், இன்னும் செய்யப்பட வேண்டியவை ஏராளமாக உள்ளன.

ஆதாரம் : தேசிய மகளிர் ஆணையம்

கடைசியாக மாற்றப்பட்டது : 7/3/2020



© C–DAC.All content appearing on the vikaspedia portal is through collaborative effort of vikaspedia and its partners.We encourage you to use and share the content in a respectful and fair manner. Please leave all source links intact and adhere to applicable copyright and intellectual property guidelines and laws.
English to Hindi Transliterate