பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களுக்கான திறன் பயிற்சி

திறன் பயிற்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளால் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

அறிமுகம்

மாற்றங்களின் பிறப்பிடமாகத் திகழும் இளைஞர்கள், புதிய பரிசோதனை முயற்சிகளைத் தயங்காது மேற்கொள்வதோடு, புதிய கருத்தாக்கங்களை முன்வைத்து வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்லும் சக்தியாகவும் விளங்குகிறார்கள். இளைஞர்கள் வருங்காலத்தின் தலைவர்கள் என்பதோடு வளர்ச்சியின் பங்காளிகள் என்பதால், தங்களுடைய கருத்துக்கள் செவிமடுக்கப்படவேண்டும் என்றும், கவனிக்கப்படவேண்டும் என்றும் விரும்புகிறார்கள். எனவே, வளர்ச்சிப்பாதையின் வேகவிசைக்குள் இந்தியா அடியெடுத்து வைக்கின்ற தருணத்தில், நம்முடைய இளைஞர்களுக்குத் தேவையான திறன் பயிற்சிகளையும் அறிவு விளக்கத்தையும் அளிப்பது தற்போதைய அவசியத் தேவையாகும்.

இந்திய வரலாற்றில் இந்தக்காலகட்டம் மிக உன்னதமானது. ஏனெனில் நமது மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்கள். 2020ஆம் ஆண்டில் நம் மக்கள் தொகையின் சராசரி வயது 29 ஆக இருக்கும்போது, சுமார் நான்கு கோடியே 70லட்சம் இளைஞர்கள் வேலைத்திறனுடன் உபரியாக இருப்பார்கள். எனவே திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவு ஆகியவற்றில் அவர்களை நெறிப்படுத்த வேண்டும்.

இந்தியாவின் உழைக்க கூடிய மக்களின் எண்ணிக்கை 2040ஆம் ஆண்டுவரை அதிகரித்துக் கொண்டேபோக வாய்ப்பு உள்ளதால், “வளர்ந்து வரும் நாடு’ என்ற நிலையில் இருந்து ‘வளர்ந்த நாடு அந்தஸ்தை எட்டிவிடக்கூடும் என்று உலகவங்கி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இளைஞர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலமாக வளர்ச்சிப் பாதையில் தேசத்தை முன்நடத்திச் செல்ல முடியும் என்பதே தெளிந்த முடிவாகும். எனவே புதிய சிந்தனைப்போக்குகளை ஊக்குவித்தல், புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடல், முடிவெடுத்தலில் இளைஞர்களையும் சேர்த்துக் கொள்ளுதல் போன்றவை கவனம் பெற வேண்டும். இவற்றுக்கு அடித்தளமாக, வேலை செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக்கும் திறன்களை இளைஞர்களுக்குக் கற்பித்தாக வேண்டும். இதற்கென பலமுனை உத்திகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் தயாரிப்போம், திறன்மிகு இந்தியா இயக்கம், தொடங்கிடு இந்தியா, எழுக இந்தியா, டிஜிட்டல் இந்தியா என்பன அந்த உத்திகளாகும்.

இந்தியாவில் தயாரித்தல்

2022 ஆம் ஆண்டுக்குள் பத்துகோடி பேருக்கும் புதிய வேலைவாய்புகளை உருவாக்கக் கூடிய இத்திட்டம், முதலீடு, துரிதமான புத்தாக்கம், அறிவுசார் சொத்துரிமைப் பாதுகாப்பு போன்றவற்றுக்கு உத்வேகம் அளிக்கும். இத்திட்டத்தால் பலதுறைகளிலும் ஏற்படும் அடுத்தடுத்த சாதகமான விளைவுகளால் எண்ணற்ற வாழ்வாதார வாய்ப்புகள் இளைஞர்களுக்குக் கிடைக்கும். உலகநாடுகளின் உற்பத்திக் கூடமாக இந்தியாவை மாற்றிவிடக் கூடிய இத்திட்டத்தினால், நமது நாட்டின் மொத்த வருவாய், உற்பத்தித்துறையின் பங்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 25 சதவீதமாக உயர்ந்துவிடும். கட்டுமானம், ஜவுளித் தொழில், உணவு பதனத் தொழில், வான்வழிப் போக்குவரத்து, பாதுகாப்புத் தளவாடங்கள், மின்னணுப்பொருள்கள் போன்ற 25 துறைகளில் இந்தியத் தயாரிப்பு நடைமுறைகளைச் செயல்படுத்தலாம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதற்கென அந்நிய முதலீடுகளுக்கான விதிமுறைகளைத் தளர்த்தியுள்ள மத்திய அரசு, இந்திய நிறுவனங்களையும் இங்கே பெருமளவு முதலீடு செய்து, உற்பத்தி செய்து, உலக அளவில் விற்பனை செய்வதை ஊக்குவிக்கிறது. இவற்றுக்குப் புதிய, நவீன தொழில் நுட்பங்கள் அவசியம். அத்தகைய நவீன தொழில் நுட்பங்களைக் கையாள்வதற்குத் தற்போதுள்ள தொழிலாளர்களுக்கும். இனி வருங்காலத்தில் பணியமர்த்தப்படக் கூடியவர்களுக்கும் தொழில்திறன் பயிற்சி அளித்தாக வேண்டும். பொலிவுறு நகரத்திட்டத்தால், சூரியசக்தி மின்னுற்பத்தி, பசுமைக்கட்டடங்கள், போன்றவற்றிலும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

திறன் மிகு இந்தியா

மக்கள் தொகை வளர்ச்சியின் அனுகூலமான, உழைக்கும் சக்தி கொண்ட தொழிலாளர்கள் இந்தியாவில் இருக்கிறார்கள் என்றாலும், அவர்களை வேலைக்கு அமர்த்துகிறவர்கள் எதிர்பார்க்கிற திறன்களை அவர்களுக்கு அளிப்பது மிகவும் சவாலான பணியாகவே உள்ளது. ஆண்டு தோறும் சுமார் ஒரு கோடியே 20லட்சம் பேர், வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக நுழைந்தாலும், அவர்களில் சுமார் இரண்டு சதவீதம் பேர் மட்டுமே முறையான பயிற்சியைப் பெற்றுள்ளனர். தகுதியுள்ள அனைவருக்கும் திறன் பயிற்சிகளை அளிக்கவும், அத்தகைய பயிற்சித்திட்டங்களை ஒருங்கிணைக்கவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான முதலாவது ஒருங்கிணைந்த தேசியக் கொள்கை 2015, இளைஞர்களின் திறன் மேம்பாட்டும் பயிற்சிக்கு மட்டுமல்லாது, உயர்நுட்பத்திறன் தேவைப்படுகிற வேலைகளைப் பெறுவதற்கும், அத்தகு தொழில்களை அவர்களே தொடங்கிட ஊக்குவிக்கவுமான அடித்தளத்தை நிறுவியுள்ளது. “பெருமளவிலான இளைஞர்களுக்கு மிகதுரிதமாகவும், தரமானதாகவும் திறன் பயிற்சிகளை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது இதனால், புத்தாக்க முயற்சிகள் கொண்ட தொழில் முனைவுகள் மேற்கொள்ளப்பட்டு, வேலைவாய்ப்பும் செல்ல வளமும் பெருகுவதுடன், குடிமக்கள் அனைவருக்கும் நிலையான வருவாய் கிடைத்து, வாழ்க்கைத் தரம் தொடர்ந்து மேம்பட்டுக் கொண்டே இருக்கும் என்று கொள்கை விளக்க அறிக்கை கூறுகிறது.

தற்போதைய சூழலில் தொழில்நுட்பச் செயல்பாடுகளிலும் வாணிக நடவடிக்கைகளிலும் பெருத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய வேலைவாய்ப்புகள் என்பது உடல் உழைப்பு வேலை என்றோ, மூளை உழைப்பு வேலை என்று பிரித்தறியப் படாமல், புதிய உழைப்புத்தளம் என்றுதான் பார்க்கப்படும். செயற்கை நுண்ணறிவு தானியக்கம், இணைய தள உலாவல், புள் வரப் பகுப்பாய்வு, போன்றவை உயர்நுட்பத்திறன் மிக்க வேலைகளாகும். இத்தகு பணிகளை வழங்கும் நிறுவனங்களும் அதிகத் திறன் பெற்றவர்களையே தேடித்தேடிப் பிடிப்பதால், நமது இளைஞர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகளும் சர்வதேசத் தரத்தில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

தேசியத்திறன் வளர்ச்சிக்கழகம், ஒவ்வொரு தொழில்துறையும் வேண்டுகிற திறன்களை அளிப்பதற்காக பிரத்யேகத் திறன் கவுன்சில்களை ஏற்படுத்தியுள்ளது. தேசிய வேலைத்திறன் தரம் (National Occupation Standard) என்ற அளவு கோலை இவை வரையறுத்துள்ளன. இந்தத் தரத்தை எட்டுவதாக, இளைஞர்களுக்கான பயிற்சிகள் அமைய வேண்டும். தேசியத்திறன் தகுதி (National Skills Ouolification Frame work) தொழிற்பயிற்சிக் கல்விக்கும், பொதுக்கல்விக்கும் இடையேயான இணைப்புகளை ஏற்படுத்துகிறது.

அடைகாப்பு மையங்கள்

பெரும் பெரும் புத்தாக்க முயற்சிகளுக்குக் களமாக இந்தியா எப்போதுமே திகழ்ந்து வருகிறது. நம்நாட்டு விஞ்ஞானிகளின் அயராத உழைப்பினால் உருவாக்கப்பட்ட ‘மங்கள்யான் ஒன்றே இதற்குப் போதுமான சான்றாகும். செவ்வாய்க்கிரஹத்தை நோக்கிய 65 கோடி கி.மீ தூரத்திற்கான பயணச் செலவை சராசரியாக ஒரு கி.மீ. க்கு ஏழு ரூபாய்க்குள் அடக்கிவிட்டனர் நமது விஞ்ஞானிகள். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள இளைஞர்கள் பட்டாளம் பிரமாதமான கருத்துருக்களையும், நவீன சிந்தனைப் போக்குகளையும் கொண்டவர்களாக இருப்பதை மறுப்பதற்கில்லை. அவர்களுடைய புதிய யோசனைகளை செயல்படுத்தும் விதமாக, அவர்களைக் கைப்பிடித்து வழி நடத்துவது நமது பொறுப்பாகும். பள்ளி அளவிலேயே, புதிய சிந்தனைகளுக்கு ஊக்கம் தரும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. புதிய திட்டங்கள், முழுமையான வடிவத்தைப் பெறுவதற்குப் பலபடிகளைக் கடந்து வரவேண்டிய இடங்களில் அடைகாப்பு மையங்களை அரசு ஏற்படுத்தி வருகிறது. பெரிய தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை, அறிவியல் மற்றும் தொழில் ஆய்வுக்கவுன்சில் போன்றவையும் 'அடைகாப்பு மையங்களை நிறுவவும், தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொள்ளவும் உதவி வருகின்றன.

மேலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில்களில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் தொடர்ந்து புதிய முயற்சிகளையும், புத்தாக்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். இவற்றுக்கான நிதி ஆதரவு, தொழில்நுட்ப ஆலோசனை போன்றவற்றை வழங்கவும் அரசு கவனம் செலுத்துகிறது. பொதுவாக புதியதாக ஒரு நுட்பத்தை உருவாக்கி, உற்பத்தியில் இறங்கும் தொழில் முனைவோர், பெரும்பாலும் தமது உறவினர்கள் நண்பர்களின் பொருள் உதவியை மட்டுமே நம்பி இறங்குகின்றனர். அரசு மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் நிறுவியுள்ள 'அடைகாப்பு மையங்கள், இதுபோன்ற புதிய முயற்சிகளுக்குப் பொருளாதார ரீதியாகவும், தொழில் நுட்ப ரீதியாகவும் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. தற்போது பெரும்பாலான அடைகாப்பு மையங்கள் கல்வி நிறுவன வளாகங்களிலேயே செயல்படுகின்றன. அவற்றுள் 118 மையங்களை மத்திய அரசின் தொழில்-வாணிகத்துறை, தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் அங்கீகரித்துள்ளது. தற்போது நம் நாட்டில் சுமார் பத்தாயிரம் முயற்சிகள் தொடங்கிடு இந்தியா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை 2020 ஆண்டில் 11,500 ஆக அதிகரித்திடக் கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய நிறுவனங்கள் சட்டம் 2013 படி, தொழில் நிறுவனங்கள் தாம் ஈட்டுகின்ற இலாபத்தில் இரண்டு சதவீதத்தை சமூகப் பொறுப்புடைமை திட்டத்தில் செலவிடவேண்டும். அவ்வாறு, சமூக மேம்பாட்டுக்காகச் செலவிடப்படும் தொகையை அடைகாப்பு மையங்களை ஏற்படுத்தவும் செலவிடலாம் என்று வகைசெய்யப்பட்டுள்ளது.

எழுக இந்தியா திட்டம் என்பது, பெண்களும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரும் புதிய தொழில் முனைவோராக ஆவதற்கு ஊக்கம் அளிக்கும் திட்டமாகும். இவர்களுக்கு பத்து லட்ச ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை புதிய தொழில் தொடங்குவதற்காகக் கடன் அளிக்கப்படும். இதனை ஏழாண்டுகள் வரையில் திருப்பிச் செலுத்தலாம். ஆன்லைன் வாணிகம், மின்னணு வியாபாரத்தலம் போன்றவற்றில் இவர்கள் ஈடுபடுத்தவும் இத்திட்டம் ஊக்குவிக்கிறது.

இளைஞர் சக்தி

தொழில் மயமாகி விட்ட நாடுகளில் அடுத்த இருபது ஆண்டுகளில் வேலை செய்யும் திறனுடைய மக்களின் எண்ணிக்கை சுமார் நான்கு சதவீதம் குறைந்துவிடும் என்று கூறுகின்றனர். அதே சமயத்தில் இந்தியாவின் மக்கள் தொகையில் வேலை செய்யும் திறனுடையவர்களின் எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரிக்கும். எனவே, இந்த மாற்றத்தைக் கருத்தில் கொண்டு, நமது இளைஞர்களுக்குத் தரமான திறன்பயிற்சிகளை அளிப்பதால், புதிய இந்தியா மலரும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது உறுதி.


திறன் பயிற்சி

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

3.25
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top