பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இளைஞர்களின் திறன் மேம்பாடு

இளைஞர்களின் திறன் மேம்பாட்டு கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இந்தியாவின் மக்கட்தொகையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்படும் நேரமிது. சுமார் 65 சதவிகிதத்தினர் 15-59 என்ற வயதுக்குள் உள்ளனர். நாம் உலகத்தின் திறன் தலைநகரமாக உருவாக இது ஒரு நல்ல வாய்ப்பு. உலகளாவிய திறன் தர அடிப்படையில் முதிர்ந்த பொருளாதாரங்களின் தேவையான திறமையான திறன்களை நாம் வழங்க முடியும்.

தேசிய இளைஞர்கள் கொள்கை 2014இன் படி 15-29 வயதுக்குட்பட்ட எல்லோரும் இளைஞர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள், பல்வேறு தன்மைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் ஆகியவைகளைக் கொண்டவர்களாக உள்ளனர். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகையில் இவர்கள் 28 சதவிகிதம் உள்ளனர். இந்தியாவின் மொத்த உள் நாட்டு உற்பத்திக்கு 34 சதவிகிதம் பங்களிக்கிறார்கள். இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பு அளித்து அவர்களின் உற்பத்தித் திறனை அதிகரித்தால், உள் நாட்டு மொத்த உற்பத்தியில் அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும். இன்றைய தேவை இந்த இளைஞர்கள் தங்களுடைய முழு திறன்களையும் வெளிப்படுத்த வாய்ப்பளித்து திறன்மிகு தொழிலாளர் படையில் இந்தியா முன்னணி வகிக்க வேண்டும்.

இடத்திற்கு ஏற்ற கொள்கை

இந்தியாவின் மக்கட்தொகை அளவின் பயன்கள், இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் ஒரே மாதிரி பெறப்படுவதில்லை. தீபகற்ப பகுதிகளான மேற்கு வங்கம், கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச ஆகிய மாநிலங்களுக்கும் உட்பகுதிகளான மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் பிஹார் மாநிலங்களுக்கிடையே பெரிய வேற்றுமை காணப்படுகிறது. தீபகற்ப மாநிலங்களில், சீனா, கொரியா போலவே வேலை செய்யும் வயதுடைய மக்களின் ஜனத்தொகை மிகவும் அதிகரித்தும் மிகவும் குறைந்தும் காணப்படுகிறது. ஆனால், உட்பகுதி மாநிலங்களில் உள்ள பணியாளர்கள் இளமையாகவும், வேகம் மிகுந்தவர்களாகவும் இருக்கிறார்கள். வேலை செய்யும் வயதுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இந்த நூற்றாண்டின் மத்தி வரை அதே நிலைமையில் நீடிக்க வாய்ப்புண்டு. ஆகவே, ஜனத்தொகை அளவில் இரண்டு இந்தியாக்கள் உள்ளன. இதனால், கொள்கைகளும் மாறுபட வேண்டும், அதாவது விரைவில் வயது முதிர்வடையும் இந்தியா (தீபகற்ப இந்தியா) இங்கு முதியோர்கள் மிகுந்து அவர்களின் தனித்தேவைகள் கவனிக்கப்பட வேண்டும்; மற்றும் ஒரு இளம் இந்தியா (உட்பகுதி மாநிலங்கள்) இங்கு மக்களுக்கு கல்வி, திறன் மேம்பாடு, மற்றும் வேலை வாய்ப்புகள் வழங்குவதில் அக்கறை காட்ட வேண்டும். ஆனால், இங்குள்ள இளைஞர்களைத் திரட்டி அவர்களுக்கு தொழில்கல்வி அளித்து திறன் வளர்ப்பது கடினமான காரியமாகும். இதற்குக் காரணம் அவர்களுக்கு வேறு இடங்களுக்கு செல்வதில் தயக்கம், பயிற்சிக்கான செலவை ஏற்க இயலாமை. வேலை அளிப்பவர்களின் ஏற்பு இல்லாமை. மிகக்குறைந்த எழுத்தறிவு மற்றும் போதிய விழிப்புணர்வு இல்லாமை ஆகியவைகளாகும். இந்த இளைஞர்களுக்கு அதிகாரமளிக்க முற்படும் போது, தொழிலாளர் சந்தையில் அதனுடைய பங்கு என்ன என்பதை பார்க்க வேண்டும்.

இளைஞர்களும் தொழிலாளர் சந்தையும்

வேலைவாய்ப்பு தகவலின்படி படித்த இளைஞர்களிடையே காணப்படும் உயர் அளவு வேலையின்மை அவர்கள் எதிர்பார்த்த வேலை இல்லாத காரணமாகவும் அவர்கள் விரும்பிய வேலை கிடைக்காததுமாக இருக்கலாம்.

முறைப்படி படித்தவர்களிடையே மட்டும் வேலையற்றத் தன்மை அதிகமாக காணப்படுவதோடு பட்டயப்படிப்பு மற்றும் சான்றிதழ் படிப்பு சார்ந்த தொழில் கல்வி பயின்றவர்களிடையேயும் பெருமளவு வேலையின்மை காணப்படுகிறது.

பலவகைக் கல்வி நிலைகளில் சாதாரணமான வேலையின்மை விகிதம்

பொதுக்கல்வி நிலைமை

வேலையின்மை விகிதம் (15 முதல் 29 வயது)

கிராமப்புற

நகர்ப்புற

ஆண்

பெண்

ஆண்

பெண்

கல்வி கற்காதவர்கள்

 

2.3

0.8

2.5

1.6

ஆரம்பக்கல்வி வரை

 

3.2

0.6

4.8

4.3

நடுநிலைக்கல்வி வரை

 

4.2

4.6

5.1

5.8

உயர்நிலைக் கல்விவரை

 

4.6

8.6

5.5

15.1

மேல்நிலைக் கல்வி வரை

6.5

13.8

12.0

14.6

பட்டய / சான்றிதழ் படிப்புகள் வரை

15.9

30.0

12.5

17.3

பட்டபடிப்பு மேல்

19.1

29.6

16.3

23.4

எல்லா வகையும்

5.0

4.8

8.1

13.1

மேற்கண்ட விவரங்கள்படி ஒரு எதிர்மறையான நிலைமை இருப்பதை பார்க்கிறோம். படித்த இளைஞர்கள் வேலை தேடுகிறார்கள், தொழில் நிறுவனங்கள் திறன் பெற்ற பணியாளர்களைத் தேடுகிறார்கள். இளைஞர்களுக்கும் வேலை கிடைப்பதில்லை. தொழில்களுக்கும் மனித வளம் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட திறன் முரண்பாட்டால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாமல் உள்ளது. இதற்குக் காரணம், ஒரு குறிப்பிட்ட திறனுக்கு உண்டான வேலை வாய்ப்பை விட மிக அதிகமானவர்கள் அந்த திறன்களைக் கொண்டிருக்கலாம் அல்லது மாணவர்களின் கல்வியின் திறனும் பணியமர்த்துவதற்குத் தேவையான திறன்களுக்கு ஏற்றவாறு இல்லாமல் இருக்கலாம். படிப்பிற்கு ஏற்ற வேலை வாய்ப்பின்மையாலும், தொழில்நுட்ப வளர்ச்சியால் சில திறன்கள் பயன் படாமலும் போகலாம். முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ள வேலைகளில் 90 சதவிகித வேலை வாய்ப்பு வழங்கப்படக்கூடிய நிலையில் இந்தியாவில் வேலையற்றவர்களில் இளம் வயதினர் 49 சதவிகிதம் உள்ளனர்.

இந்தியாவில் படித்த இளைஞர்கள் ஒன்று வேலையில்லாமல் இருக்கிறார்கள் அல்லது குறைவான பணியில் உள்ளனர், வேலை தேடும் நிலையில் உள்ளனர், வேலைகளில் மாறிக்கொண்டே இருக்கின்றனர் அல்லது பாதுகாப்பற்ற பணிச் சூழ்நிலையில் வேலை செய்து கொண்டிருக்கின்றனர். 2017 இந்தியத் திறன் அறிக்கையின்படி சுமார் 40 சதவிகித படித்த இளைஞர்கள் பணி செய்ய திறம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். ஆகவே, முக்கிய சவால்களாக உள்ளது பணிசெய்யும் ஏழைகள், பணிப்பாதுகாப்பின்மை, சந்தைக்கு ஏற்ற திறன் இல்லாமை, தகவல் விழிப்புணர்வின்மை மற்றும் திறன் மேம்பாடு பற்றிய போதிய அறிவு இல்லாமையாகும். இதனால் நாம் தெரிந்து கொள்வது, (i) தற்போது தேவைப்படும் திறன்களுக்கேற்ற மனித வளத்தை அளிப்பது (ii) ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பணியாளர்களும், நிறுவனங்களும் மாறிக்கொள்ளும் தன்மை மற்றும் (ii) எதிர்கால தொழில் சந்தைக்கு ஏற்ப திறமைகளை வளர்த்துக்கொள்வது. ஆகவே, பணியமர்த்துவதை மேம்படுத்துவது எப்படி என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

பணியமர்த்துவதற்கான முயற்சிகள்

ஜனத்தொகையின் நற்பயன்களைப் பெறவும் இளைஞர்களைப் பணியமர்த்தக்கூடிய நிலைக்கு உருவாக்கவும் 2015இல் தேசிய திறன் மேம்பாடு இயக்கமும், தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக் கொள்கையும் மேற்கொள்ளப்பட்டது. இந்த இயக்கத்தின்படி தேவைக்கு ஏற்ப மனித வளத்தை வழங்க திறன் படைத்தவர்களை தொடர்ந்து வழங்குவதற்கும் திறன்களை மேம்படுத்தவும் இப்போதுள்ள திறமைகளை தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது அல்லாமல், தேசிய திறன் தகுதி அமைப்பின் மூலம் உலக தரத்தில் சான்றிதழ்களை வழங்குவது, தேவைக்கு ஏற்ப மனித வளத்தை வழங்குவது மற்றும் தொழில்முனைவை ஊக்கப்படுத்துவது ஆகியவை பிற முயற்சிகளாகும். இதன் அடிப்படையில், எல்லா அமைச்சகங்களுக்கும் இடையே, ஒருங்கிணைப்பு, பணியாளர்களை திரட்டி அவர்களை தொடர்பில் வைத்திருப்பது, வேலை வாய்ப்பு அணுகுமுறைகளை மேம்படுத்துவது மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை அணுகி செயல்திட்டங்களை மேற்கொள்ளுதல் ஆகியவை புதிய முயற்சிகளாகும்.

தொழில்முறைக் கல்வியைப் பெரிதளவு மேம்படுத்தி தரத்தையும் மொத்த அளவையும் உயர்த்த பெருமுயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, ஒன்பதாம் வகுப்பு முதல் பள்ளிக் கல்வியில் தொழில்சார் திறன்களையும் வழங்க கல்வி முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான பாடத் திட்ட மாற்றங்கள், தொழில்முறை பயிற்சிகள், ஆசிரியர்களுக்கான பயிற்சிகள், தொழில்துறைக்கு ஏற்ப தொழில்பயிற்சிக் கழகங்களை மாற்றியமைத்தல், தொழில் நிறுவனங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம், பொருட்களை வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, ஒவ்வொரு தொழில் துறைக்குமான திறன் மேம்பாட்டுக் கழகங்களை அவற்றோடு ஒருங்கிணைப்பது, தொழில் கூடங்களில் பயிற்சி அளிப்பது மற்றும் அதற்குத் தேவைப்படும் இளைஞர்களை ஈர்க்க வலைதளப் பயிற்சி, அரசு தனியார் கூட்டுமுயற்சியில் திறன் மேம்பாட்டு புதிய நிலையங்களை அமைத்தல், மாறிவரும் வேலைகளுக்கு ஏற்ப திறன்களை வழங்குவது ஆகியவைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. திறன் வழங்கு பல்கலைக்கழகங்களை உருவாக்கி தேவைப்படும் ஏராளமான திறம் படைத்த பயிற்சியாளர்களை உருவாக்குவது, தொழில்கல்வி வழங்க பாடத்திட்டம் மற்றும் கல்வி அளிக்கும் முறைகளில் ஆய்வுகளைச் செய்தல் மற்றும் திறன் மேம்பாட்டு கல்வி நிலையங்களை மேற்பார்வை செய்வதும் புதிய முயற்சிகளாகும்.

திறன் மேம்பாட்டு திட்டம்

திறன் மேம்பாட்டு அமைச்சகம் உள்ளிட்ட 20 மத்திய அமைச்சகங்களின் பல்வேறு முயற்சிகளாக பொதுவான திட்டங்கள், பகுதிக்கு ஏற்ற திட்டங்கள், தொழில்துறைக்கு ஏற்ற திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு இளைஞர்களின் பணியமர்வுத் திறன் மேம்படுத்தப்படுகிறது. பலதரப்பட்ட திறன்களை வழங்க 13,000க்கும் மேற்பட்ட நிலையங்கள் 4000க்கும் மேற்பட்ட துணை பொறியியல் கல்வி நிறுவனங்கள் மற்றும் 20,000க்கும் மேற்பட்ட தொழில்சார் பயிற்சி நிலையங்கள் உள்ளன. இங்கு மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் திறன் மேம்பாட்டுக் கல்வியையும், பயிற்சிகளையும் பெற்று அதற்கான நம்பகத்தன்மை கொண்ட சான்றிதழ்களையும் திறன்சார் தகுதிகளின் மொத்த அளவையும் பெறுவார்கள். முறைப்படுத்தப்படாத துறைகள் பெருமளவிலான மக்கள் குறைந்த திறன்களோடு பணி செய்வதால் அவர்களை சோதித்து, சான்றிதழ்களை வழங்க அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கல்வியை நிர்ணயிக்க பிரதம மந்திரி தொழில் மேம்பாட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட பணியாளர்களுக்கு திறன் மேம்பாடும், பிற திறன்களும் வழங்கப்பட வேண்டும். பிரதமரின் இந்த திட்டத்தால், பள்ளிப்படிப்பைப் பாதியிலேயே விட்டவர்கள் பணியமர்வுக்குத் தேவையான திறன்களைப் பெற்று வேலை வாய்ப்பு பெற முடியும். இதற்கு, பணியாளர் சந்தையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டு, பணியாளர்கள் திறன் மேம்பாடு பெற மிகுந்த ஆர்வம் காட்டவேண்டும்.

தேசிய திறன் மேம்பாட்டு அமைப்பு பலவகையான அமைப்பு சார்ந்த மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இதற்கான தேசிய திறன் தகுதி அமைப்பு திறன் மேம்பாட்டு ஆர்வத்தை ஊக்குவித்து, தொழிலாளர்கள் பதவி உயர்வு பெறவும் பிற தொழில்களுக்கு மாறவும் வசதி செய்கிறது. மத்திய அரசு நிறுவனங்களுக்கு பொதுவான செயல்திட்டங்களின்படி ஒரே அளவிலான கட்டணங்கள், பாடத்திட்டங்கள், பயிற்சியின் காலம் ஆகியவை சீரமைக்கப்படும். வேலைவாய்ப்பு, பணியமர்த்தல் போன்றவைகளுக்கு தேவையான தரமான தகவல்களை அளிக்க தொழிலாளர் சந்தை அமைப்பை மேம்படுத்துதல், நாட்டில் தொழில் வழங்கு திட்டத்தை கண்காணித்தல் ஆகியவை பிற முயற்சிகளாகும். தேசிய திறன் மேம்பாட்டு வாரியம், தனியார் துறையைப் ஊக்குவித்து உள் கட்டமைப்பு வசதிகளை பெருக்கி 2015 கொள்கையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைய அதற்கு ஏற்றவாறான தொழில்பயிற்சிகளை அளிக்கிறது. ஒவ்வொரு துறைக்குமான திறன் மேம்பாட்டு கவுன்சில்கள், அந்தந்தத் துறையினால் மேற்கொள்ளப்பட்டு தேவைக்கு ஏற்ற திறன்களை வழங்க ஏதுவான பயிற்சி திட்டங்களையும் மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்கு முறைகளையும் மேம்படுத்தி வருகின்றன. ஏழை மாணவர்கள், திறன் மேம்பாட்டு பயிற்சிகளில் சேர கடன் வசதியையும் அரசு துவக்கி உள்ளது. தேவையான கொள்கையும், திட்ட செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டாலும், இளைஞர்களின் சக்தியை முழுமைப்படுத்தவும், பொருளாதார மேம்பாட்டிற்கும் அவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்க வேண்டியுள்ளது. இதற்கு தேவையான அடிப்படை அம்சங்களை இப்போது நாம் பார்க்கலாம்.

இளைஞர்களின் பணி ஆர்வம்

எல்லோரையும் உள்ளடக்கிய சமூகப் பொருளாதார நிலைமையை ஏற்படுத்த, கண்ணியமான வேலை வாய்ப்புக்களை வழங்க, ஏதுவாக திறன் மேம்பாட்டை உருவாக்க, இளைஞர்களின் ஆர்வங்களை அளவெடுக்க வேண்டியது அவசியம். 2011-12ஆம் ஆண்டின் படித்த வேலை வாய்ப்பற்றவர்களின் ஆய்வறிக்கையின்படி கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் சிலவகையான தொழில்களுக்கே விருப்பம் அதிகமாகக் காணப்படுகிறது. 22.3 சதவிகித ஆண்கள் வாகனங்களை ஒட்டுவது மற்றும் பழுது பார்க்கும் தொழில் கல்வி பெற விரும்புகிறார்கள். நகர்ப்புற ஆண்களில் 26.3 சதவிகிதத்தினர் வலைதள வியாபாரத் துறைகளில் பயிற்சி பெற விரும்புகிறார்கள். அதேபோல கிராமப்புறங்களில் 32.2 சதவிகிதத்தினர் தையல் துறையில் பயிற்சி பெறுகிறார்கள். நகர்ப்புறப் பெண்களில் 30.4 சதவிகிதத்தினர் பெரும்பாலும் வலைதள வியாபாரத்துறையில் பயிற்சி பெற விரும்பினர். தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் முரண்பாட்டு ஆய்வறிக்கையை இந்த நிலைமையோடு ஒப்பிட்டு பார்க்கும் போது தேவையான திறமைகளுக்கும், தற்போது பயிற்சி நிலையங்கள் அளிக்கும் திறன்களுக்கும் உள்ள இடைவெளி தெள்ளத்தெளிவாகப் புரியும். தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தின் ஆய்வறிக்கையின்படி மிகுந்த வேலைவாய்ப்பு உற்பத்தி செய்யும் துறைகளுக்கு திறமையான மனித வளம் கிடைப்பதில் பிரச்சினைகள் காணப்படும். இளைஞர்களின் ஆர்வ அறிக்கையில் பல மாநிலங்களில் கட்டுமானத் தொழில், போக்குவரத்து, அதற்கான கட்டமைப்பு, விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்களான உணவு பதனிடுதல் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புக்கள் மிகுந்து உள்ளன. ஆனால், பல மாநிலங்களில் இந்த வேலைகளுக்குச் செல்ல இளைஞர்களுக்கு ஆர்வம் இல்லை.

ஆகவே, பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப பணியாளர்களின் தேவையும், அப்படிப்பட்டவர்களை உருவாக்குவதற்கு இளைஞர்களின் ஆர்வத்தை அளவெடுத்தல் அவசியமாகும். சிறப்பாக திறம் பெற்றவர்களுக்கு அங்கீகாரமும், விருதுகளும் வழங்கி இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளில் ஊக்கமளிக்க முடியும் என்று கருதப்படுகிறது. எந்தத் தொழிலும் சிறந்த தொழில் என்ற எண்ணத்தை ஏற்படுத்தினால் கடுமையாக உழைக்க வேண்டிய தொழில்களுக்கு மதிப்பு ஏற்படும். ஆகவே, திறன் மேம்பாட்டுத் திட்டங்களைப் பிரபலப்படுத்தவும், இளைஞர்களின் ஆர்வத்தைத் தூண்டவும் பலவகையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் தேவையானவர்கள் உருவாவார்கள்.

பயிற்சி பெற இளைஞர்களை திரட்டுதல்

தேசிய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக் கொள்கை 2015இன்படி 2022க்குள் 11 கோடி மக்களுக்கு திறன்களை அளிக்க வேண்டும். 21 கோடி பேரின் திறன்களை மேம்படுத்த வேண்டும். ஆகவே, இந்த திறன் மேம்பாட்டிற்காக நாடெங்கிலும் உள்ள இளைஞர்களைத் திரட்ட வேண்டும். எப்படி நாம் இளைஞர்களை திரட்ட முடிகிறதோ, அப்படித்தான் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் வெற்றி பெறும். தற்போதுள்ள நிலைமைகளில் திறன் பெறுவோரைத் திரட்டுவது, திறன் அளிப்பவரிடம் விடப்பட்டுள்ளது. தொழில் சார்ந்த படிப்புகள் மற்றும் தொழில் சந்தை பற்றிய போதிய தகவல் இல்லாமை, தொழில் கல்வி பெறுவதற்கு வசதி இல்லாமை, ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல விருப்பம் இல்லாதது, பழைய பாடத் திட்டங்கள் ஆகியவை மக்களைத் திரட்ட முடியாமைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இப்போதுள்ள தேவை, பயிற்சி பெற வேண்டியவர்களை திரட்டுவதற்கான வழிவகைகளாகும்.

மஹாராஷ்டிரா அரசு துவக்கியுள்ள திறன் சக்தி மாதிரியில் ஒரு சமூகத்திலிருந்து இளம் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் இந்த சமூகத்தில் உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லி திறன் பயிற்சி திட்டங்களில் சேர வைக்கிறார்கள். உள்ளாட்சி அமைப்புகளில் பணி செய்பவர்கள் அந்தந்த பகுதியில் உள்ள இளைஞர்களின் தேவைக்கு ஏற்ப பட்டியல் தயாரித்து அவர்களை ஊக்குவித்து, பணிக்குச் செல்வதற்காகவும், சுயமாக வேலை செய்யவும், பயிற்சி பெற வைக்க முடியும். இந்தத் தகவல்களை ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வங்கிக் கணக்கு ஆகியவற்றோடு இணைத்து வலைதளத்தில் தகவல்களாக அளிக்க முடியும். இந்த அலுவலர்கள், வீடுவீடாகச் சென்றும் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும். பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களோடு நேரடித் தொடர்பு கொண்டு, ஒரு தேசிய விழிப்புணர்வு இயக்கத்தை நடத்தினால், பெருவாரியான மக்கள் பயிற்சிக்கு சேருவார்கள்.

பெண்களின் ஈடுபாடு

இந்திய தொழில் சந்தையில் துறை, பாலினம் மற்றும் பகுதியை சார்ந்த வேற்றுமைகள் உள்ளன. இந்தியத் தொழில் சந்தையில் பெரும்பான்மையான மக்கள், முறைப்படுத்தப்படாத துறைகளில் உள்ளனர் (93%). முறைப்படுத்தப்பட்ட துறைகளில் 8% மக்கள் மட்டுமே உள்ளனர். இந்த இரண்டு துறைகளுக்குமான பயிற்சி வேறு வேறாகும். முறைப்படுத்தப்படாத துறையில் ஒருவரே பல வேலைகளை செய்ய வேண்டியுள்ளது. அவர்களுக்கு திறன் சார்ந்த சிறப்புப் பயிற்சி இல்லை. அவர்கள், ஒரு வேலையில் சேர்ந்து தொழிலை கற்கிறார்கள். இதனால், உற்பத்தித் திறனும் பாதிக்கப்படுகிறது. இந்தத் துறையில் அதிகமான கல்வியும், திறமையும் பெறாதவர்கள் பணி செய்கிறார்கள். தேசிய பணிப் பயிற்சி திட்டத்தைப் பயன்படுத்தி, சிறந்த திறன் படைத்த மனித வளத்தை நாம் உருவாக்க வேண்டும்.

மொத்த மக்கள் தொகையில், பெண்களின் பங்கு 48 சதவிகிதம் உள்ளது. ஆனாலும், தொழிலாளர் சந்தையில் அவர்களுடைய பங்கு 22 சதவிகிதம்தான். இந்திய பிரதமர் கூறியபடி “பெண்களுடைய திறன்களை வளர்த்து, மேம்பாட்டு இயக்கங்களோடு சேர்த்தால் ஒரு நாட்டின் வளர்ச்சி பெருமளவு உயரும்.” இன்றைய தேவையாக பெண்களுக்கு திறன்கள் மற்றும் மறு திறன்களை அளித்து அவர்களை தொழில் சந்தையில் ஈடுபடுத்த வேண்டும். பெண்களின் பங்கேற்பை உயர்த்துவதற்கான சிறப்புக் கொள்கைகளாக தேவைப்படுபவை தேவையான கட்டமைப்பு வசதி, திறன் மற்றும் மறு திறன் அளிக்க வேண்டியதற்கான குறிக்கோள் மற்றும் தொழில் நிறுவனங்கள் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து, அவர்களையும் தொழிலாளர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல் இந்தத் தொழிலை ஒரு ஆண் அல்லது பெண் மட்டும் தான் செய்ய முடியும் என்பதைத் தவிர்த்து எல்லாப் பணிகளிலும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வகையில், ஜிந்தால் எஃகு ஆலையில் பெண்களுக்கு பணி செய்ய வாய்ப்பளித்த ஹரியானா அரசின் முயற்சியை முன்னோடியாக ஏற்கலாம்.

உள் கட்டமைப்பு வசதி

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளைவிட வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் துறை மற்றும் பாலியல் சார்ந்த மாறுபாடுகளும், உள் கட்டமைப்பு குறைபாடுகளும் உள்ளன. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் தனியார் மற்றும் அரசு தொழில் பயிற்சிக் கூடங்களில் 67 சதவிகிதம் இருந்து 60 சதவிகித இருக்கைகளுடன் 51 சதவிகித மக்களுக்கு பயனளிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் உள்ள தொழில் பயிற்சி நிறுவனங்கள் 33 சதவிகிதம் மட்டுமே. அவை, 40 சதவிகித இருக்கைகளுடன் 49 சதவிகித மக்களுக்கு சேவை செய்கின்றன. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு பகுதிகளில் உள்ள மாநிலங்களுக்கிடையே வேற்றுமைகள் காணப்படுகின்றன.

இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு பகுதிகளில் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். முடிந்த வகையில் மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உள்ளவர்கள் பிறபகுதிகளுக்கு சென்று பணியாற்ற விரும்பினால் அவர்களுக்குத் திறன் பயிற்சி / மறு திறன் பயிற்சி அளிக்க வேண்டும். இதற்காக, இடம் விட்டு இடம் பெயர்வோர்களுக்கு இரு இடங்களிலும் ஆதரவு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். நிறுவன சமூகப் பொறுப்பு மூலமும் பிற வகைகளிலும் தனியார் துறையினர் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பணியில் பயிற்சி அளித்தல், பணிக்கான பயிற்சி அளித்தல். பயிற்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல் மற்றும் பயிற்சிப் பாடத்திட்டங்களை மறு சீரமைத்தல் ஆகியவைகளை மேற்கொண்டு, இனிவரும் பணியாளர்களுக்கான சிறப்பான வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டும்.

மறு திறன் அளிப்பு, மேம்பட்ட திறன் அளிப்பு மற்றும் ஏற்கனவே கற்றதை அங்கீகரித்தல்

2012-17க்கான 12வது ஐந்தாண்டு திட்டத்தின்படி 47 சதவிகிதம் மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிப் படிப்புக்கு முன்பே நின்றுவிடுகிறார்கள். ஆகவே அவர்கள் வேலை தேடும் போது அவர்களுக்கு குறைந்த திறன்களே உள்ளதால் மிகக்குறைந்த ஊதிய வேலைகளே கிடைக்கின்றன. அவர்களுக்கு, புதிய திறன்களையும், மறு திறன்களையும், மேம்பட்ட திறன்களையும் வழங்கி வாய்ப்பளிக்க வேண்டும். மாநில மற்றும் மத்திய அரசு அளவில் இவர்களுக்கு வேலை வாய்ப்பளிக்க பல திட்டங்கள் இருந்தாலும், தேசியக் கொள்கைகளை அடைவதற்கு ஏற்ப திறனளிப்பு, மறு திறனளிப்பு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை தனித்தனியே தெளிவாகப் புரிந்து திட்டங்களை வகுக்க வேண்டும். ஒவ்வொன்றிற்குமான பணியாளர்களை தேர்ந்தெடுப்பது முக்கிய சவாலாகும். பணிக்கேற்ற திறன் இல்லாமையை தெளிவாகப் புரிந்து கொண்டு அதற்கேற்ப திறன் மேம்பாட்டு திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு வேலைக்கு வேண்டிய மிக முக்கியமான திறன்கள், எவை என்று மதிப்பிடப்பட்டு அப்படி அளிக்கப்படும் திறன் பயிற்சிகளால் நல்ல வேலையும், சிறந்த ஊதியமும், மேம்பட்ட வாழ்க்கையும், உற்பத்தி திறன் மேம்படுதலும் ஏற்படுமா என்று தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும்.

தொழிற் சந்தையில் சிறு வயதிலேயே சேர்ந்தவர்களும், பணி அனுபவம் இருந்தும் சான்றிதழ்கள் இல்லாதவர்களும், கைவினைஞர்கள் மற்றும் பிற தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக கற்ற அறிவையும், திறன்களையும் அங்கீகரிக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களின் முன் அனுபவங்கள் மற்றும் திறன்களை அங்கீகரிப்பதன் மூலம் அவர்களை பணியமர்த்துவதிலும், பணி மாற்றத்திலும், மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் திறன்களைக் கற்றுக்கொள்ளவும் எல்லோரையும் உள்ளடக்கிய சமூக நலன்களை வழங்கவும் அவர்களுடைய சுய மதிப்பை உயர்த்தவும் முடியும். இந்தியாவில், சுமார் 30 கோடி பணியாளர்களுக்கு மறு திறன்களும், திறன் மேம்பாடுகளும் அவர்களுடைய முன் அனுபவங்களும், அங்கீகரிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. திறன் மேம்பாட்டு தேசியக் கொள்கை அமைச்சகம், இதற்கு கவனம் அளித்து வேண்டிய திட்டங்களை மேற்கொண்டாலும் இப்பணியாளர்களின் முன் அனுபவங்களும், திறன்களும் அங்கீகரிக்கப்பட வேண்டியது மிகப்பெரிய சவாலாகும். எல்லா தகுதிகளுக்கும், நிலைகளுக்கும் ஏற்ற முன் திறன் அங்கீகரிப்பு முறை ஒன்றும் இல்லை. ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு முறையான அணுகுமுறை தேவை. ஒவ்வொரு அங்கீகார அணுகு முறைக்கும் புதிய கொள்கைகள் தேவை. மற்றொன்றைப் பின்பற்ற முடியாது. இந்த அங்கீகார முறை வெற்றியடைய வேண்டுமானால், அதற்குத் தேவையான தொழில்முறை வழிகாட்டுதல் இருக்க வேண்டும். அதற்கேற்ற பரிந்துரை முறைகள், கொள்கையோடு இணைக்கப்பட்ட அணுகுமுறை, கல்வி மற்றும் பயிற்சித் திட்டங்களுக்கு சட்ட மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள், இதில் பங்கு பெறும் அனைவரும் உற்சாகமாக பங்கேற்பதற்குமாக இந்த அங்கீகார முறையை நடைமுறைப்படுத்த ஒரு அமைப்பு முறை தேவை. இது அல்லாமல், கல்வி, பயிற்சித் தகுதியையும் ஒரு தொழிலுக்கு வேண்டிய தரங்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். ஒவ்வொரு இலக்கு குழுவுக்கும் ஏற்ற மதிப்பீட்டு கருவிகள் மற்றும் செயல் முறைகள் தேவை. இந்த முன் அனுபவ அங்கீகார செயல்பாடு தொடர்ந்து நிலைத்து செயல்படத் தேவையான நிதியும் தேவை.

பள்ளியிலிருந்து வேலைக்கு செல்லும் பயணம் சார்ந்த ஆய்வுகள்

15 முதல் 29 வயதிலான இளைஞர்களுக்குத் தரமான அதிக அளவிலான தொழிற்சந்தைத் தகவல்களை அளிக்க வேண்டும். பணியாளர் படை ஆய்வுகள், வேலை வாய்ப்பு, வேலையின்மை, பணியாளர் படையிலிருந்து வெளியேற்றம் ஆகிய தகவல்கள் கிடைக்கின்றன. அது அல்லாமல், எத்தனை காலத்திற்கு வேலை இல்லாமல் இருக்கிறார்கள், எப்படிப்பட்ட வேலையில் இருக்கிறார்கள், எந்தெந்த துறையில் வேலையில் இருக்கிறார்கள் என்ற தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால் பள்ளி படிப்பு முடித்து பணிக்கு செல்வது எளிதா கடினமா போன்ற தகவல்கள் கிடைப்பதில்லை. ஆகவே, பள்ளியிலிருந்து வேலைக்கு செல்லும் பயணம் சார்ந்த ஆய்வுகள், தகுந்த நேரத்தில் தேவையான தொழிற்சந்தைத் தகவல்களை அளித்து, இளம் பெண்கள் ஆண்களுக்கான குறிப்பிட்ட பணி சார்ந்த சவால்களை சமாளிக்க உதவுவதோடு இந்த ஆய்வுகளின் மூலம், தேசிய பணிச்சேவை அமைப்பு, இளைஞர்கள் விரும்புகின்ற பாதுகாப்பான பணிகளுக்குச் செல்ல உதவ முடியும். தொழிற்சந்தையில் உள்ள பலதரப்பட்ட நிலைமைகளை சமாளிக்கவும் இது உதவும். சாதாரணமாக, தொழிற் பயிற்சி பெற இயலாதவர்களுக்கு, தொழில் நிறுவனம் பயிற்சி அளிக்க அரசு ஊக்கங்களை அளிக்க வேண்டும். இதனால் தொழிற் புரட்சிகளால் ஏற்படும் வேலைவாய்ப்பு சார்ந்த சவால்களை நாம் எதிர்கொள்ள முடியும்.

முடிவுரை

வேகமாக மாறிவரும் பொருளாதார நிலைமையில் இனிவரும் வேலைவாய்ப்பு நிலைமைகள் இளைஞர்களுக்கு ஒரு சவாலாகவும், வாய்ப்பாகவும் உள்ளன. இதனால், அவர்களுடைய வேலை வாய்ப்பும், வாழ்க்கைத்தரமும் உயர முடியும். பணியமர்வதில் ஏற்படும் மேம்பாட்டால் வேலையில் பாதுகாப்பும் பதவி உயர்வுகளும் கிடைத்து, இளைஞர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து அவர்களும் பயன் பெறுவார்கள். பணி மேம்பாட்டுத் துறைகளில் சிறந்த நடைமுறைகளை ஏற்று பல்வேறு முயற்சிகளையும், திட்டங்களையும் எல்லா மாநிலங்களிலும் செயல்படுத்தினால் மாற்றத்திற்கு ஒரு முக்கிய கருவியாக இளைஞர்களை நாம் பயன்படுத்தலாம்.


திறன் பயிற்சி

ஆதாரம் : திட்டம் மாத இதழ்

2.93548387097
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top