பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம்

சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

நோக்கம்

சட்ட மன்ற உறுப்பினர் ஓவ்வொருவரும் தனது தொகுதிக்குத் தேவைப்படும் முக்கியப் பணிகளைச் செயல்படுத்திடவும் மற்றும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதுமே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சிறப்பு அம்சங்கள்

இத்திட்டம், மாநில அரசின் முழு நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டமாகும். இதன்படி ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் தனது தொகுதியில் தேவைப்படும் பணியினைக் கண்டறிந்து அப்பணியினை செயல்படுத்திட பரிந்துரைப்பார். ஊரக மற்றும் நகர்ப் புறங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு :

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியாக ஆண்டு ஒன்றிற்கு ஒவ்வொரு தொகுதிக்கும் 2011-12ஆம் ஆண்டு முதல் ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆதி திராவிடர்/ பழங்குடியினருக்கான ஒதுக்கீடு :

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்படும் மொத்த நிதியில், 21 விழுக்காடு நிதி ஆதி திராவிடர்/ பழங்குடியினர் அதிக எண்ணிக்கையில் வாழும் ஊரகப் பகுதிகள் அல்லது நகர்ப்புறங்களில் குடிசைப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதிக்கென ஒதுக்கப்பட வேண்டும்.

வரையறுக்கப்பட்ட மற்றும் வரையறுக்கப்படாத நிதி :

மொத்த ஒதுக்கீடான ரூ.2.00 கோடியில் ரூ.1.125 கோடி வரையறுக்கப்பட்ட நிதியாகும். அத்தொகையில் அரசால் குறிப்பிடப்பட்ட முன்னுரிமைப் பணிகளையும், மீதமுள்ள ரூ.87.50 இலட்சம் வரையறுக்கப்படாத நிதியில் சட்டமன்ற உறுப்பினர் தனது விருப்பப்படி வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிட்டுள்ள பணிகளையும் தேர்வு செய்யலாம்.

திட்டச் செயலாக்கம்

I. வரையறுக்கப்பட்ட நிதியிலிருந்து செய்யப்படும் பணிகள்

வரையறுக்கப்பட்ட நிதி ரூ.1.125 கோடியில், ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வகையில், பழுதுற்ற கழிப்பறைகள்,

குடிநீர் வழங்கல், சமையலறைகள் போன்ற கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 25 இலட்சமும் , அங்கன்வாடி கட்டடங்கள், சத்துணவு மைய கட்டடங்கள், சத்துணவு சமையற்கூடங்கள் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு ரூ. 20 இலட்சமும் , மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்கிட ரூ.5.00 இலட்சமும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேற்படி தொகை ரூ. 5.00 இலட்சத்தில், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள், நவீன செயற்கை அவயம் மற்றும் காதுக்கு பின்புறம் அணியும் காதொலிக் கருவி ஆகியவற்றை வாங்குவதற்கு ரூ. 2.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும், அங்கன்வாடி சமையல் அறையை நவீனப்படுத்துவதற்காகவும், சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதற்காகவும், ஒரு அங்கன்வாடி மையத்திற்கு ரூ.6050/- வீதம் ஒருமுறை செலவினம் மேற்கொள்ள ரூ. 10.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதியில் உள்ள தகுதியுள்ள அனைத்து அங்கன்வாடி சமையல் அறை நவீனபடுத்தும் பணிகளை மேற்கொண்டபின், மீதமுள்ள தொகையினை பள்ளி சமையலறை மையங்களை நவீனப்படுத்தும் பொருட்டு அரசாணை (நிலை) எண். 294 சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டம் (ச.உ.தி. 7) துறை, நாள்:11.12.2012-ல் தெரிவித்தவாறு ஒரு மையத்திற்கு ரூ.22000 வீதம் ஒருமுறை செலவினம் மேற்கொள்ளலாம்.

வரையறுக்கப்பட்ட நிதியில் மீதமுள்ள ரூபாய் 52.50 இலட்சம் நிதியில், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர் தம் விருப்பத்தின் அடிப்படையில் கீழ்க்கண்டவற்றுள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பணிகளை தேர்வு செய்யலாம்.

அ)ஊரகப் பகுதிகளில்

1.சூரிய சக்தி தெரு விளக்குகள் பொருத்துதல்

2.சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச் சாலைகளாக மேம்படுத்துதல்

3.மிகவும் பழுதடைந்துள்ள தார்ச் சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச்சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்)

4.சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல்

5.அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவ மனைகள் ஆகியவைகளுக்குக் கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுதல்.

6.மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு ஆதரவற்றோர் விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுத்தல்.

7.பாலங்கள் கட்டுதல்

8.இடுகாடு மற்றும் சுடுகாடு வசதி இல்லாத கிராம ஊராட்சிகளில் இவ்வசதிகளை அமைத்தல்.

9.வக்ஃப் வாரியத்தில் பொது சொத்தாக பதிவு செய்யப்பட்ட மயானங்களுக்கு சுற்றுச்சுவர்/வேலி அமைத்தல். தற்போது வக்ஃப் வாரியத்திற்கென பொறியியல் பிரிவு இல்லை என்பதினால், இவ்வேலைகளை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைப்பு செய்யலாம்.

ஆ)நகர்ப்புறப் பகுதிகளில்

1.சூரிய சக்தி தெரு விளக்குகள் அமைத்தல்

2.சரளை மற்றும் கப்பிச்சாலைகளை தார்ச் சாலைகளாக மேம்படுத்துதல்

3.மிகவும் பழுதடைந்துள்ள தார்ச் சாலைகளைப் புதுப்பித்தல் (தேவையின் அடிப்படையில் சாலையில் உள்ள பள்ளங்களை நிரப்பி தார்ச் சாலைப் பணி மட்டும் மேற்கொள்ளல்.)

4.சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் அமைத்தல்

5.அரசு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு கால்நடை மருத்துவ மனைகள் ஆகியவைகளுக்கு கட்டடம் மற்றும் சுற்றுச்சுவர் கட்டிக் கொடுத்தல் மற்றும் அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய, ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகள் ஆகியவைகளுக்குக் கட்டடம் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுதல்.

6.மாற்றுத் திறனாளிகளுக்காக அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு ஆதரவற்றோர் விடுதிகள் ஆகியவைகளுக்கு உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுத்தல்.

7.பாலங்கள் கட்டுதல்

8.சுடுகாடு / இடுகாடுகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல்

9.தேவையின் அடிப்படையில் மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய சிமெண்ட் கான்கிரீட் நடைபாதைகள் அமைத்தல்

10.புதிய பொதுப் பூங்காக்கள் அமைத்தல்

11.பொதுக் கழிப்பிடங்கள் கட்டுதல்

12.ஜெட்ராடிங் இயந்திரங்கள் மற்றும் ஹைட்ராலிக் விசையால் இயக்கப்படுகின்ற தூர்வாரும் இயந்திரங்களை வாங்குதல்.

13.வக்ஃப் வாரியத்தில் பொது சொத்தாக பதிவு செய்யப்பட்ட மயானங்களுக்கு சுற்றுச்சுவர்/வேலி அமைத்தல். தற்போது வக்ஃப் வாரியத்திற்கென பொறியியல் பிரிவு இல்லை என்பதினால், இவ்வேலைகளை தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒப்படைப்பு செய்யலாம்.

II.வரையறுக்கப்படாத தொகையான ரூ.87.50 இலட்சத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள கீழ்கண்ட பணிகளைத் தவிர, ஏனைய பணிகளை வரையறுக்கப்படாத திட்ட நிதியான ரூ.87.50 லட்சம் ஒதுக்கீட்டிலிருந்து எடுத்து செய்யலாம். அதேபோல் வரையறுக்கப்பட்ட நிதியில் எடுத்துச் செய்யக் கூடிய பணிகளையும் வரையறுக்கப்படாத நிதியில் மேற்கொள்ளலாம்.

தடை செய்யப்பட்ட பணிகள்

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தில் சிறப்பினமாக எடுத்து செய்ய அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர கீழ்க்காணும் தடை செய்யப்பட்ட பணிகளை எடுத்து செய்ய இயலாது

1.மத்திய, மாநில அரசு துறைகள் (பொது துறை நிறுவனங்கள் உட்பட) மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவைகளுக்கான அலுவலக கட்டடங்கள் மற்றும் வசிப்பிடங்கள் கட்டுதல்.

விதிவிலக்கு (i) பொது விநியோகக் கடைகளுக்குக் கட்டடம் கட்டுதல், நேரடி கொள்முதல் நிலையங்கள், கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடங்கள், மொத்த குளிர்பதன மையங்களுக்குக் கட்டடங்கள் (ii) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் பேருந்து பணிமனைகளுக்கான பேருந்து பராமரிப்புக் கூடம், சுற்றுச்சுவர் மற்றும் சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல்.

2.அனைத்து வகையான பராமரிப்பு, பழுது பார்த்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகள் மேற்கொள்ளுதல்.

விதிவிலக்கு – அரசுத் திட்டங்களின் கீழ் 31.12.2002 வரை கட்டப்பட்டுள்ள வீடுகள், தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்டப்பட்ட வீடு உட்பட, வீடு ஒன்றுக்கு ரூ.25,000-க்கு மிகாமல் பழுது நீக்கும் பணிகளை மேற்கொள்ளுதல். இருப்பினும், எடுத்துக்கொள்ளும் முன்னர் தமிழ்நாடு குடிசைமாற்று வாரியம் மற்றும் தாட்கோ நிறுவனத்திடமிருந்து உரிய அனுமதி பெறப்பட வேண்டும்.

3.அசையும் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் வாங்குதல்,

விதிவிலக்கு

(i) அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசு தங்கும் விடுதிகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவற்றிற்கு தளவாடச் சாமான்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல்.

(ii) அரசு போக்குவரத்து கழகங்களுக்குச் சொந்தமான கழிவு செய்யப்பட்ட சாதாரண பேருந்துகளுக்கு (அரசாணை (நிலை) எண். 2552, போக்குவரத்துத் துறை, நாள் 26.9.91-ல் குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி கழிவு செய்யப்பட்ட பேருந்துகள்) பதிலாக மட்டும் புதிய சாதாரண வகை பேருந்துகள் வாங்குதல்,

(iii) பணிமனைகளுக்கு பழுது நீக்கம் மற்றும் பராமரிப்புக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குதல்,

(iv) மாற்றுத் திறனாளிகளுக்கு கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல், இருப்பினும் இத்தகைய பணிகளை எடுத்துச் செய்யும்போது இதற்கான பணியாட்களுக்கான செலவினம் எதுவும் மேற்கொள்ளக்கூடாது.

4.அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் எவ்விதப் பணிகளையும் மேற்கொள்ளுதல்.

விதிவிலக்கு :- 100 சதவீதம் அரசு நிதி உதவி பெறும் மற்றும் 100 சதவீதம்

தமிழ் வழிக் கல்வி பள்ளிகளில் பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்கள் மற்றும்

கழிப்பிடங்கள் கட்டும் பணிகளை எடுத்துச்செய்தல். பகுதி சுய நிதி பெறும் மற்றும் பகுதி நிதி உதவிப் பள்ளி அல்லது பகுதி தமிழ்வழிக் கல்வி அல்லது பகுதி ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் இத்திட்டத்தில் அரசு நிதி உதவி பெற தகுதியில்லை. நிதி உதவி பெறும் தகுதி வாய்ந்த பள்ளி ஒன்றுக்கு இத்திட்டத்தில் அரசு நிதி உதவி ஒரு குறிப்பிட்ட ஆண்டில் ரூ. 15 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். அரசு நிதி உதவி பெறும் தகுதி வாய்ந்த பள்ளி ஒன்று இத்திட்டத்தில் எவ்வளவு நிதி உதவி பெற்றிருப்பினும், அப்பள்ளி இத்திட்டத்தின் கீழ் அடுத்த மூன்றாண்டுகளுக்கு உதவி பெற தகுதியில்லை.

மேற்படி பணிகளைப் பொருத்தமட்டில், மாவட்ட ஆட்சியர் தனது சொந்த விசாரணையை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அல்லது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து கீழ்காணும் சான்றிதழ்களை பணி மேற்கொள்வதற்கு முன் பெற வேண்டும்.

(i)இந்தப் பள்ளி 100 சதவீதம் தமிழ்வழி பயிற்றுவிக்கும் வகுப்புகள் / பிரிவுகள் கொண்டது. ஆங்கில வழி வகுப்புப் பிரிவுகள் இல்லை.

(ii)இந்தப் பள்ளி 100 சதவீதம் அரசு உதவி பெறும் பள்ளி ஆகும். அதே நிர்வாகத்தால் ஒரே வளாகத்திலோ அல்லது வெவ்வேறு வளாகங்களிலோ நடத்தப்படும் இந்தப் பள்ளியின் சுய நிதி பிரிவுகள் / வகுப்புகள் இயங்கவில்லை.

5.தனிநபர் / குடும்பப் பயனுக்காக சொத்துக்களை உருவாக்குதல்.

6.அனைத்து வணிக நிறுவனங்கள் / அலகுகள் குறித்த பணிகள்.

7.மானியம் மற்றும் கடன், மத்திய மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிவாரண நிதிக்கு பங்களித்தல்.

8.நில எடுப்பு அல்லது நில எடுப்பிற்கான ஈட்டுத் தொகை வழங்குதல்.

9.முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள், பகுதியாக முடிக்கப்பட்ட பணிகள் அல்லது இனங்களுக்கான தொகை மீளச் செலுத்துதல்.

10.அனைத்து வரவினங்கள் மற்றும் தொடர் செலவினங்கள்.

11.மத வழிபாட்டு இடங்களில் பணிகள் மற்றும் மத அமைப்புகள் / குழுக்களுக்கு சொந்தமான நிலங்களில் பணிகள்.

12.குட்டைகள், ஊரணிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால் போன்றவைகளைத் தூர் வாருதல்.

13.சரளை / கப்பி சாலைகள் (தார்ச்சாலை வரை அமைக்கும் சாலைப்பணிகளை மட்டுமே எடுத்துக்கொள்ளலாம்).

14.உயர் கம்ப மின் விளக்குகள் பொருத்துதல்.

திட்டம் செயல்படுத்துதல்

தேர்வு செய்யப்பட்ட பணிகளுக்கு சம்மந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் நிர்வாக அனுமதி வழங்கிச் செயல்படுத்தும் முகமையினை நிர்ணயிப்பார்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

தொகுதி அளவில்  :     சட்டமன்ற உறுப்பினர்

மாநில அளவில்   :     ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில் :     மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில் :     வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு அரசு

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

3.33333333333
Umar Feb 04, 2018 02:00 AM

மக்களுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எந்த வியாபாரத்தையும் தனியார் நிறுவனம் செயல்படும் போது தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் சட்டமன்ற உறுப்பினரின் நிலை பாடு என்ன?

Jayakutti Oct 24, 2017 10:21 PM

எனது ஊர் நாங்குநேரி தொகுதிக்குட்ப்பட்ட ஒரு கிராமம். எனது தொகுதியில், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து என்ன என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பதை எப்படி தெரிந்துகொள்வது

வினோத் May 19, 2016 07:11 PM

ஆனால் யாரும் இந்த மாதிரியான வேலைகளை செய்வதில்லையே

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top