பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தன்னிறைவுத் திட்டம்

தன்னிறைவுத் திட்டம் பற்றி இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.

துவக்கம்

ஊரகப் பகுதி மக்கள் தங்களுடைய தேவைகளை தாமே நிறைவு செய்யும் மனப்பான்மை, பொது மக்கள் பங்கேற்பு ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் தன்னிறைவுத் திட்டம் 2011-12-ஆம் ஆண்டு முதல் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நோக்கம்

•தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது கருத்துக்களை பரிமாற்றம் செய்து வெளிப்படையான மற்றும் பொறுப்புடன் கூடிய முயற்சியின் மூலம் பயன்தரத்தக்க சமுதாயச் சொத்துக்களை உருவாக்குதல்.

•திட்டமிடுதல், நிதி ஆதாரங்களை திரட்டுதல், செயல்படுத்துதல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகளில் கிராமப்புற சமுதாயத்தை நேரடியாக ஈடுபடுத்துவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மக்கள் பங்களிப்பு

•பொதுமக்கள், தெரிவு செய்யப்பட்ட பணியின் மதிப்பீட்டுத் தொகையில் மூன்றில் ஒரு பங்குக்குக் குறையாமல் பங்களிப்பு செய்ய வேண்டும்.

•அரசால் மூன்றில் இரண்டு பங்கு தொகை வழங்கப்படும்.

திட்டக் கூறுகள் மற்றும் எடுத்துச் செய்யப்படும் பணிகள்

பணிகளை தேர்வு செய்தல்

•இத்திட்டத்தின்கீழ் பணியினை எடுத்துச் செய்வதற்கான கோரிக்கை, தனிநபர், குழு, தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அப்பகுதி மக்களிடமிருந்தோ உருவாகலாம்.

•தேர்வு செய்யப்பட்ட பணி குறித்த விண்ணப்பமும், மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பங்கிற்கு குறையாமல் தொகையினை வழங்குவதற்கான ஒப்புதல் கடிதத்தினையும் பொது மக்களிடமிருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பெறலாம்.

•தேவை மற்றும் செயல்படுத்தத்தக்க தன்மையினை உறுதிபடுத்திய பின்னரே மதிப்பீடுகள் தயார் செய்யப்படுதல் வேண்டும்.

•நிதி ஒதுக்கீட்டைவிடத் தேவையான பணிகளின் மதிப்பீடு அதிகமாகும் நிலையில், முன்னுரிமை அடிப்படையில் பணியினைத் தேர்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்வாக அனுமதி வழங்கலாம்.

•மாநில அளவில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்களுக்காக ஊரக வளர்ச்சி ஆணையர், தனியார் அல்லது பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பங்களிப்பை பெறலாம்.

அனுமதிக்கப்பட்ட பணிகளின் பட்டியல்

•அரசு பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள் மற்றும் அரசு விடுதிகளுக்கு கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிவறைகள் மற்றும் சுற்றுச் சுவர் / சுற்று வேலி அமைத்தல்.

•அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார மையங்கள் , துணை மையங்கள், கால்நடை மருந்தகங்கள், கால்நடை வளர்ப்பு மையங்கள் மற்றும் நூலகங்கள் ஆகியவைகளுக்குக் கட்டடங்கள் கட்டுதல் மற்றும் சுற்று சுவர் / சுற்று வேலி அமைத்தல். இடுகாடுகளுக்கு சுற்று சுவர் கட்டுதல். தமிழ்நாடு இஸ்லாமிய அறக்கட்டளை குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட பொது இஸ்லாமிய அறக்கட்டளைக்கு சொந்தமான இடுகாடுகளுக்கு சுற்றுசுவர் கட்டுதல் பணியும் செய்யப்படலாம்.

•ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் நூலகங்கள் கட்டுதல் மற்றும் ஊரக மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் சத்துணவு மையங்கள், சத்துணவு மைய சமையல் கூடங்கள், அங்கன்வாடிகள் மற்றும் பொது விநியோகக் கடைகள் ஆகியவைகளுக்குக் கட்டடங்கள் கட்டுதல். எங்கெல்லாம் நூலகங்கள் கட்டப்படுகின்றனவோ, அங்கெல்லாம் புத்தகங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதா என கவனத்தில் கொள்ள வேண்டும்.

•கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் குடிநீர் ஆதாரங்கள் உருவாக்குதல், சிமெண்ட் கான்கிரீட் சாலைகள் மற்றும் கதிரடிக்கும் களங்கள் போன்ற சமுதாயச் சொத்துக்களை உருவாக்குதல்.

•அனைத்து சமூகச் சொத்துக்களையும் பராமரித்தல். முன்னுரிமை அடிப்படையில் ஒருங்கிணைந்த மகளிர் மற்றும் ஆண்கள் சுகாதார வளாகத்தினை பராமரிக்கும் பணி எடுத்துக் கொள்ளப்படலாம்.

•ஆடவர் மற்றும் மகளிருக்கான ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டுதல்

•சிறிய பாலங்கள் கட்டுதல், சரளை/கப்பிச் சாலைகளை தார்ச்சாலைகளாக தரம் உயர்த்துதல், பழுதடைந்த தார்ச்சாலைகளை புதுப்பித்தல். தெருக்கள் மற்றும் சிறிய சந்துகளை செங்கல் அல்லது கப்பி கற்கள் அல்லது சிமெண்ட் பலகை அல்லது சிமெண்ட் கான்கிரீட் கொண்டு சீரமைத்தல்.

•பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், சாலை திட்டு, நீரூற்று, தெரு விளக்குகள் (சூரிய சக்தி ஒளி விளக்குகள் உட்பட) போன்றவற்றை உருவாக்குதல், மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல்.

•பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், நூலகங்கள் மற்றும் கட்டடங்களுக்குத் தேவையான அறைகலன்கள், கணினிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியவற்றை வாங்குதல். பழைய கணினிகள், உபகரணங்கள் மற்றும் அறைகலன்கள் வாங்கக்கூடாது.

•திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அனைத்து வகைப்பணிகள் மற்றும் சுற்றுச் சூழலின் சுகாதார நிலையினை மேம்படுத்தும் பணிகள்.

•அரசு கட்டடங்கள், ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் பொது கட்டடங்கள் மற்றும் அங்கன்வாடிகளுக்கு சூரிய ஒளி விளக்குகள் அமைத்தல்.

•குடிநீர் வழங்குவதற்கான எதிர் சவ்வூடு பரவுதல் தொழில்நுட்ப ஆலை அமைத்தல்.

தடை செய்யப்பட்ட பணிகள்

சிறப்பினமாக எடுத்துச் செய்ய அனுமதிக்கப்பட்ட பணிகளைத் தவிர கீழ்க்காணும் தடை செய்யப்பட்ட பணிகளை தன்னிறைவுத் திட்டத்தில் எடுத்துச் செய்ய இயலாது.

1)மத்திய, மாநில அரசுத் துறைகள் (பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட) மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவைகளுக்கான அலுவலகக் கட்டடங்கள் மற்றும் வசிப்பிடங்கள் கட்டுதல்.

விதிவிலக்கு - ஆரம்ப சுகாதார நிலையங்கள் / அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு வசிப்பிடங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் சீரமைத்தல். அனைத்து அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவைகளுக்குக் கட்டடங்கள் மற்றும் சுற்றுச் சுவர் கட்டுதல், பொது விநியோகக் கடைகளுக்குக் கட்டடம் கட்டுதல், நேரடிக் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கக் கட்டடங்கள், மொத்தக் குளிர்பதன மையங்களுக்குக் கட்டடங்கள் கட்டுதல்.

2)அசையும் பொருட்கள், உபகரணங்கள் மற்றும் தளவாடச் சாமான்கள் வாங்குதல்.

விதிவிலக்கு - அரசுப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகள், கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், அங்கன்வாடிகள், சத்துணவு மையங்கள், அரசுக் கல்லூரிகள், அரசு மாணவர் தங்கும் விடுதிகள், அரசு மருத்துவ மனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு கால்நடை மருத்துவமனைகள் ஆகியவற்றிற்குத் தளவாட சாமான்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல். அதேபோல் திடக்கழிவு மேலாண்மைக்காக மூன்று சக்கர மிதிவண்டி மற்றும் சிறு லாரிகள் போன்ற வாகனங்கள் வாங்கலாம்.

3)அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கான பணிகளை மேற்கொள்ளுதல்.

4)அனைத்து வணிக நிறுவனங்கள் /அலகுகள் குறித்த பணிகள்.

5)மானியம் மற்றும் கடன் மத்திய மற்றும் மாநில / யூனியன் பிரதேசங்களின் நிவாரண நிதிக்குப் பங்களித்தல்

6)நில எடுப்பு அல்லது நில எடுப்பிற்கான ஈட்டுத் தொகை வழங்குதல்.

7)முழுமையாக முடிக்கப்பட்ட பணிகள், பகுதியாக முடிக்கப்பட்ட பணிகளுக்காக தொகை மீளச் செலுத்துதல்.

8)தனிநபர்/குடும்பப் பயனுக்காக சொத்துக்களை உருவாக்குதல்

9)அனைத்து வரவினங்கள் மற்றும் தொடர் செலவினங்கள்

10)மத வழிபாட்டு இடங்களில் பணிகள் மற்றும் மத அமைப்புகள்/ குழுக்களுக்குச் சொந்தமான நிலங்களில் பணிகள்

11)குட்டைகள், ஊரணிகள், ஆறுகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால் போன்றவைகளைத் தூர் வாருதல்

விதிவிலக்கு :

i) மாவட்ட ஆட்சியர் அவசியம் எனக் கருதினால், பொதுப்பணித்துறை கண்மாய்கள் தூர் வாருதல், கரைகளைப் பலப்படுத்துதல் மற்றும் மதகு / அணைகளைப் புதுப்பித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம். இதில் மக்கள் பங்களிப்புத் தொகை பொதுப்பணித் துறையினரால் தயாரிக்கப்படும் மதிப்பீட்டிற்கு 50 சதவீதத்திற்குக் குறையாமல் இருக்க வேண்டும். தேவையிருப்பின் நீர் நிலைகள், வரத்து கால்வாய் மற்றும் உபரி நீர் கால்வாய் ஆகியவற்றைத் துhர்வாரும் பணியினை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் மேற்கொள்ளலாம்.

ii) இதே போல நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தியாவசிய நீர் ஆதார குளங்களை தூர்வாரும் பணியினை 50ரூ பொதுமக்களின் பங்களிப்புத் தொகையுடன் ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றி செய்யலாம்.

12)சரளை / கப்பிச் சாலைகள் (தார்ச்சாலை வரை அமைக்கும் சாலைப்பணிகளை மட்டுமே எடுத்துக் கொள்ளலாம்).

13)சோடியம் ஆவி விளக்குகள்/உயர் கோபுர மின் விளக்குகள் பொருத்துதல்

திட்ட செயலாக்க அலகு

•பொதுமக்களின் நிதி பங்கீட்டுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான நிதி மாநில அரசால், பொதுமக்களின் பங்களிப்பிற்கேற்ப மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைகளுக்கு வழங்கப்படுகிறது.

•இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்படும் பணிகளுக்கான நிர்வாக அனுமதி மாவட்ட ஆட்சியரால் வழங்கப்படுகிறது.

•உதவி செயற்பொறியாளர், (ஊரக வளர்ச்சி) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக உதவி பொறியாளர் ஆகியோர் தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் அனுமதி வழங்குவார்கள்.

•வட்டார வளர்ச்சி அலுவலர் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் பணிகளை நிறைவேற்றுவார்.

திட்ட செயலாக்கம்

•சம்மந்தப்பட்ட துறைகள் அல்லது உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளிகள் சட்டம் 1998ன்படி ஒப்பந்தப்புள்ளி அடிப்படையில் செயல்படுத்தப்படும்.

•மக்கள் பங்கேற்பினை அதிகப்படுத்தும் நோக்குடன் மதிப்பீட்டில் 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக பங்களிப்பு செய்த பணிகளை பொது மக்களோ அல்லது பணம் செலுத்தியவரோ நேரடியாக செயல்படுத்திட அனுமதி கோரும் நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அதற்கான அனுமதியை வழங்கலாம்.

பொதுப்பணித்துறை, நகர மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள கண்மாய்கள் தூர்வாரும் பணியைப் பொருத்த மட்டில் பொது மக்கள் பங்களிப்பு 50 விழுக்காட்டிற்கும் அதிகமாக இருந்தால் கூட ஒப்பந்தப் புள்ளி முறையைப் பின்பற்றியே பணிகள் செய்யப்பட வேண்டும்.

திட்டத்தில் பயன்பெற மற்றும் திட்டத்தைப் பற்றிய இதர விவரங்களை பெற அணுக வேண்டிய அலுவலர்கள்

மாநில அளவில்       : ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர், சென்னை-15.

மாவட்ட அளவில்   :     மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

வட்டார அளவில்      : வட்டார வளர்ச்சி அலுவலர்(வட்டார ஊராட்சி)

ஊராட்சி அளவில்      :     ஊராட்சி மன்றத் தலைவர்

ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்.

3.13793103448
தங்கள் மதிப்பீட்டை பதிவு செய்ய, நட்சத்திரங்களின் மீது நகர்த்தி க்ளிக் செய்யவும்
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top