பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

அரசுத் தேர்வுகள் - 2018 - 2019

அரசுத் தேர்வுகள் - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திட பொறுப்பேற்றுள்ளது. மிக முக்கியமான இம்மூன்றுத் தேர்வுகள் மட்டுமின்றி இதர 32 தேர்வுகளையும் நடத்தி மதிப்பெண் சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழ்கள் உயர்கல்வி தொடர்வதற்கும் வேலை வாய்ப்பு பெறுவதற்குமான மிக முக்கிய மற்றும் மதிப்பு வாய்ந்த ஆவணமாகும்.

1975 முதல் செயல்படத் துவங்கிய அரசுத் தேர்வுகள் இயக்ககம், பல புதுமையான முறைகளைத் திறம்படப் புகுத்தியதன் வாயிலாகத் தேர்வுகளை நடத்துவதில் சிறப்பான முன்னேற்றம் அடைந்து உள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் அவசியத் தேவையினை உணர்ந்து, பொதுத்தேர்வுகள் நடத்தும் முறைகளை துல்லியமாக மேம்படுத்திடவும், தாமதத்தினை குறைத்திடவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு டிஜிட்டல் முறைப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கம்

தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தித் தேர்வுகள் நடத்தும் நடைமுறைகளை எளிதாக்குதல் மற்றும் தேர்வு முடிவுகள் வெளியிடும் செயல்முறைகளை துரிதப்படுத்துதல்.

குறிக்கோள்கள்

*அனைத்து தேர்வுகளை நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துதல்

*தேர்வுகள் நடத்தும் நடைமுறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்

*மதிப்பீட்டு முறைகளை வலுப்படுத்துதல்

*தேர்வு முடிவுகளை குறித்த நேரத்தில் வெளியிடுதல்

*தேர்வர்களுக்கு அங்கீகரிக்கப்பட்டச் சான்றிதழ்கள் வழங்குதல்

நிறுவன கட்டமைப்பு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் 35 விதமான தேர்வுகள் நடத்துவதனை முதன்மையான பொறுப்பாக கொண்டுள்ளது. அனைத்துத் தேர்வுகளையும் நிர்ணயிக்கப்பட்ட கால அட்டவணைக்குள் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துகிறது. தேர்வு மையங்களுக்குத் தேவையான எழுதுபொருட்கள், தேர்விற்கான முன்பணங்கள் விநியோகம் செய்தல், தேர்வு முடிவுகள் வெளியிட்டப் பின்னர் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் போன்ற முக்கியப் பணிகள் 7 மண்டல அலுவலக துணையுடன் இயக்ககத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

இணையதள சேவைகள்

மாணாக்கர் சமுதாயம் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால் www.dge.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தினால் நடத்தப்படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான கால அட்டவணை, விண்ணப்பப் படிவங்களின் மாதிரிப்படிவம், கட்டண விவரங்கள், சான்றிட்ட மதிப்பெண் நகல், புலப்பெயர்ச்சிச் சான்றிதழ் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ் பெறுதலுக்கான நடைமுறைகள்,

பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாட்கள் மற்றும் முந்தைய ஆண்டுகளின் வினாத்தாட்கள் மற்றும் 10 ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான அறிவியல் பாட செய்முறை தேர்விற்கான அறிவுரைகளும் இந்த இணையதளத்தின் வாயிலாக மாணாக்கர்கள் தெரிந்து கொள்ளலாம். இந்த இணையதள உருவாக்கத்தினால் தேர்வர்களுக்குத் தேர்விற்கு விண்ணப்பிக்கும்போது ஏற்படும் சிரமங்கள் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், மேற்படி இணையதள உருவாக்கத்தின் வாயிலாக, தேர்வுகள் எழுதவுள்ள பள்ளி மாணாக்கர்கள் மற்றும் தனித் தேர்வர்களது பெயர்ப் பட்டியல் தயாரிப்பதற்கு தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் மார்ச் 2017-18 ஆம் ஆண்டு முதல் பாரத ஸ்டேட் வங்கியின் கட்டணச் சேகரிப்பு இணையதளத்தின் வழியாக தேர்வுக் கட்டணங்களைச் செலுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. பள்ளிகள் தங்களது அனைத்து மாணாக்கர்களின் நுழைவுச் சீட்டுகளையும் பதிவிறக்கம் செய்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு விநியோக மையங்களுக்கு நேரில் சென்று தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்ளும் முறை நீக்கப்பட்டு, தற்போது தனித்தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை இணையதளத்தில் நேரடியாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளமான www.dge.tn.nic.in வாயிலாக தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறாக வழங்கப்படும் தற்காலிகச் சான்றிதழ் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்கு மட்டுமே செல்லத்தக்கவையாகும். மேலும், இச்சான்றிதழ்கள் உயர்கல்வி அனுமதிக்கு பயன்படுத்தப்படுகிறது.

தமிழ் வழியில் பயிலும் மாணாக்கருக்குத் தேர்வுக் கட்டணத்திலிருந்து விலக்களித்தல்

இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்குத் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. மார்ச் 2018, மேல்நிலைப் பொதுத்தேர்வில் 10,46,741 பள்ளி மாணாக்கரும், இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில் 5,55,621 பள்ளி மாணாக்கரும் தமிழ் வழியில் பயின்றதால் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்குப் பெற்று பயனடைந்துள்ளனர்.

சிறப்புக் கவனம் தேவைப்படும் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு வழங்கப்படும் சலுகைகள்

இடைநிலை மற்றும் மேல்நிலைப் பொதுத்தேர்வு எழுதும் டிஸ்லெக்சியாவால் பாதிக்கப்பட்ட தேர்வர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்குத் தேர்வெழுதுவதற்கு அனைத்து பாடங்களுக்கும் கூடுதலாக நேரம் வழங்கப்படுகிறது. மேலும், அவர்கள் சொல்வதை எழுதுபவர் நியமனம்/ ஏதேனும் ஒரு மொழிப்பாட விலக்களிப்பு/ தேவையின் அடிப்படையில் கணிப்பான் பயன்படுத்த அனுமதி போன்ற சலுகைகள் வழங்கப்படுகிறது. மார்ச் 2018, மேல்நிலைப் பொதுத் தேர்வில் 4,635 சிறப்புக்கவனம் தேவைப்படும் தேர்வர்களுக்கும், இடைநிலைப் பள்ளி இறுதி விடுப்புச் சான்றிதழ் பொதுத்தேர்வில் 3,659 சிறப்புக்கவனம் தேவைப்படும் தேர்வர்களுக்கும் உரிய சலுகைகள் வழங்கப்பட்டுத் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டனர்.

அரசுத்தேர்வுகள் சேவை மையங்கள்

தேர்விற்கு விண்ணப்பிக்கும் தனித்தேர்வர்கள், விண்ணப்பிக்கும் வழிமுறைகளை பற்றித் தெரிந்துக் கொள்வதில் இடர்பாடுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, அவர்களுக்கு வழிகாட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கென மாநிலம் முழுவதும் தேர்வு சேவை மையங்களைப் பள்ளிகளில் அமைத்துள்ளது.

சிறைகளில் தேர்வுமையம்

சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறை வளாகத்திலேயே தேர்வு மையம் அமைத்திட இயக்ககம் அனுமதித்துள்ளது.

தேர்வுகளை நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துதல்

ஒவ்வோர் தேர்வு நாளன்றும் வாகனங்களில் வினாத் தாட்கள் தேர்வு மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் எடுத்துச் செல்லப்பட்டு, தேர்வு முடிவுற்றவுடன் அதே வாகனங்களைப் பயன்படுத்தி விடைத்தாள் கட்டுகளை, விடைத்தாள் சேகரிப்பு மையங்களில் சேர்ப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், விடைத்தாள் கட்டுகள் அனைத்தும் பாதுகாப்பாக விடைத்தாள் சேகரிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப் படுகிறது. பொதுத்தேர்வுகள் நடைபெறும் காலங்களில் பொதுத்தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடத்தும் பொருட்டு அவசியமான தேவைகளுக்குத் தேர்வுக் காலங்களில் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு, பொதுத் தேர்வுகள் தொடங்கும் நாள் முதல் தேர்வுகள் முடியும் வரை, இக்கட்டுப்பாட்டு அறை காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை செயல்படுகிறது. பெறப்படும் புகார்களின் அடிப்படையில் உடனுக்குடன் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

ஜூன் ஜூலை மாதங்களில் சிறப்புத் துணைத் தேர்வு நடத்துதல்

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் மார்ச் /ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் 10 மற்றும் 12 பொதுத் தேர்வுகளில் தோல்வியுறும் மாணாக்கர்களுக்கு ஒரு முழு கல்வியாண்டு வீணாகாமல் அக்கல்வியாண்டிலேயே அவர்தம் உயர் கல்வியினை தொடர்வதற்கு உதவியாக உடனடி சிறப்புத் துணைத்தேர்வு ஒவ்வோர் ஆண்டும் ஜூன்/ஜூலை மாதத்தில் நடத்தப்படுகிறது. இதனால், பல்வேறு காரணங்களினால் தேர்வுகளில் தோல்வியுறுபவர்கள் இடைநிறுத்தம் தடுக்கப்படுகிறது.

விடைத்தாள்களின் சிறப்பம்சங்கள்

தேர்வறையில் ஆள்மாறாட்டத்தைத் தவிர்க்கும் பொருட்டு, தேர்வு எழுதும் அனைத்துத் தேர்வர்களின் புகைப்படம் அடங்கிய முகப்புத்தாளுடன் விடைப்புத்தகம் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால், தேர்வின் சமயத்தில் தேர்வர்களை அடையாளம் காண தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் மற்றும் அனைத்து நிலை தேர்வுப் பணியாளர்களுக்கும் ஏதுவாக உள்ளது. முகப்புத்தாளின், மேல்பகுதி பிரித்தெடுக்கும் வசதியுடன் அச்சிடப்பட்டுள்ளதால், தேர்வு முடிந்ததும் இப்பகுதி பிரித்தெடுக்கப்பட்டு, விடைப்புத்தகத்தினை மதிப்பீடு செய்ய விடைத்தாள் மதிப்பீட்டு முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. விடைத்தாள் மதிப்பீடு மையங்களில் பார்கோடு ரீடர் மூலம் விடைத்தாளுக்குரிய மாற்றெண்கள் துல்லியமாக கணினியில், மிக எளிதாக பதிவேற்றம் செய்யப்படும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. படிப்பு உதவித்தொகை பெறுவதற்காக நடத்தப்படும், தேசிய அளவிலான திறனறிவுத் தேர்வு, தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு, தமிழ்நாடு ஊரக மாணவர் திறனாய்வுத் தேர்வுகளிலும் தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடிய OMR விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட மற்றும் சம்பந்தப்பட்டப் பாடங்களுக்கேற்ப முதன்மை விடைப் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. விடைத்தாளுடன் விடையளிக்கப்பட வேண்டிய படிவங்கள், வரைகட்டத்தாள் மற்றும் நிலவரைபடங்கள் அவ்விடைத்தாளுடனே அச்சிடப்பட்டு வழங்கப்படுகின்றன.

மறுமதிப்பீட்டிற்கான விடைத்தாட்களை பதிவேற்றம் செய்தல்

உயர்கல்வி, மருத்துவப்படிப்பு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்பிற்குச் செல்ல உள்ள அனைத்து மாணாக்கர்களும் ஒரு மதிப்பெண் கூட குறைந்து விடக்கூடாதென கருதப்படுகின்ற நிலையில், மேல்நிலைப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டப் பிறகு மாணாக்கர் விடைத்தாட்களின் நகல் பெற மறுமதிப்பீடு மற்றும் மதிப்பெண் மறுகூட்டல் வேண்டி அதிகப்படியாக விண்ணப்பிக்கப் படுகின்றன. அவர்களது கவலையைப் போக்கித் தகுதியான மதிப்பெண்களை வழங்குவது அவசியமானதாகிறது. எனவே, இதனை உறுதி செய்யும் வகையில் மாணாக்கர்களது விடைத்தாள் ஊடுநோக்கப்பட்டு, இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யும் முறையும் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாணாக்கர்கள் தங்களது விடைத்தாளில் மதிப்பெண்கள் கூடுதலாக வர வாய்ப்புள்ளது என்பதை அறிந்த பிறகே மாணாக்கர்கள் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கின்றனர்.

பொதுத்தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடுதல்

மாணாக்கர்கள் தேர்வு முடிவுகளை பதற்றம் ஏதுமின்றி தெரிந்துகொள்ள பின்வரும் இணைய தளங்களில் www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.tnresults.nic.in தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன.

மதிப்பெண் சான்றிதழ்கள்

தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்களில் தேர்வர்களின் பெயர் மற்றும் பாடங்கள் தமிழிலும் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகிறது. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறும் வரை ஒவ்வொருமுறை தேர்வெழுதும்போதும் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, அவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மதிப்பெண் சான்றிதழ்கள் வைத்துள்ளனர். இத்தகைய தேர்வர்களுக்கு அவர்களின் தேர்ச்சியடைந்த முழு விபரங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட மதிப்பெண் நகல் மற்றும் மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ்கள் தேர்வர்களின் கோரிக்கையின் பேரில் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில் 5,968 மறுபிரதி மதிப்பெண் சான்றிதழ்களும், 4,932 சான்றிட்ட மதிப்பெண் நகல்களும் வழங்கப்பட்டுள்ளன. மதிப்பெண் சான்றிதழ்களை மேம்படுத்தப்பட்டப் பாதுகாப்புத் தன்மையுடன் வெளியிடப்படுவதனால் போலி மதிப்பெண் சான்றிதழ்கள் தயாரிக்க இயலாது. மேலும், மதிப்பெண் சான்றிதழின் உண்மைத் தன்மையினை அறியும்போது போலி மதிப்பெண் சான்றிதழ்களை எளிதாக கண்டுபிடிக்க முடிகின்றது. மேலும் கூடுதலாக மேம்படுத்தப்பட்டப் பாதுகாப்பு தன்மையுடன், 2D பார்கோடிங் முறையுடனும், தேர்வர்களின் புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மை தன்மையினை அறிதல்

உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் நியமன அதிகாரிகள் மதிப்பெண் சான்றிதழின் உண்மை தன்மைக் குறித்த அறிக்கையினைக் கோரும் பட்சத்தில் இந்த இயக்ககம் அவ்வறிக்கையினை வழங்கி வருகிறது.

புலப்பெயர்ச்சிச் சான்றிதழ்

10 மற்றும் 12 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியடைந்து பிற மாநிலங்களில் மேற்படிப்பைத் தொடர விரும்பும் மாணாக்கர்களுக்குப் புலப்பெயர்ச்சிச் சான்றிதழ்கள், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இவ்வலுவலகத்தில் பெறப்பட்ட 5 தினங்களுக்குள் வழங்கப்படுகின்றது.

பல்வேறு வகையான பிற தேர்வுகள் நடத்துதல்

தொடக்கக்கல்விப்பட்டயத் தேர்வு

அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வும் நடத்தப்படுகிறது. இத்தேர்வர்கள் விடைத்தாள் ஒளிநகல் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டு, விடைத்தாள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்யவும் அனுமதிக்கப்படுகிறார்கள்.

எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு

அரசுத் தேர்வுகள் இயக்ககம், குறைந்த பட்சக் கல்வித் தகுதியினை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், அடிப்படை நிலையில் பதவி உயர்வுக்காகவும், எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை நடத்தி வருகின்றது.

அரசுத் தொழில்நுட்பத்தேர்வு

அரசுத் தேர்வுகள் இயக்ககம் தேர்வர்களுக்கு தொழில்நுட்பக் கல்வித் தகுதியை வழங்குவதற்கும், வேலைவாய்ப்புக்காகவும், ஓவியம், தையல், விவசாயம், இசை, அச்சுக்கலை, கைத்தறி, நெசவு மற்றும் பிற பாடப்பிரிவுகளில் அரசுத் தொழில் நுட்பத் தேர்வினை நடத்தி வருகிறது. இத்தேர்வு கீழ்நிலை, மேல்நிலையென இருநிலைகளில் நடத்தப்படுகிறது.

தமிழ்நாடு ஊரக மாணாக்கர் திறனாய்வுத்தேர்வு

தமிழ்நாடு ஊரக மாணாக்கர்களுக்கான திறனாய்வுத் தேர்வு ஆண்டுதோறும் செப்டம்பர் திங்களில் ஊரக மாணாக்கர்களை ஊக்குவிக்கும் விதமாக நடத்தப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும் 9ஆம் வகுப்புப் படிக்கும் ஊரக மாணாக்கர்கள், அவர்களின் பெற்றோர் ஆண்டு வருமானம் ரூபாய் ஒரு இலட்சத்திற்கும் மிகாமல் இருக்கும்பட்சத்தில், இத்தேர்வினை எழுத அனுமதிக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 மாணவியர் மற்றும் 50 மாணவர்கள் மேற்படி எழுத்துத் தேர்வில் தெரிவு செய்யப்பட்டு, ஆண்டொன்றுக்கு ரூ.1000/- வீதம் நான்கு ஆண்டுகளுக்குக் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. தற்போது மாணாக்கர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தேசிய வருவாய்வழி மற்றும் தகுதிப்படிப்பு உதவித் தொகை பெறுவதற்கான தேர்வு

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால், தேசிய வருவாய் வழி மற்றும் தகுதிப் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு நடத்தப்படுகிறது. மதிப்பெண்கள் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் மாணாக்கர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர். மாநில அரசுப் பள்ளிகள்/அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 7 ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்று 8 ஆம் வகுப்பில் பயிலும் (பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணாக்கர்கள் 50% மதிப்பெண்கள் மற்றும் ஏனையோர் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்) மாணாக்கர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,50,000/க்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில், அவர்கள் தேர்வெழுதலாம். தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.6000/-மாதந்தோறும் ரூ.500/- வீதம்) உதவித் தொகையாக 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஆண்டுதோறும் 6,695 மாணாக்கர்களுக்கு படிப்பு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

தேசிய அளவிலான திறனறித்தேர்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான முதல்நிலை திறனறித் தேர்வினை தமிழகத்தில் நடத்த, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு அங்கமாகச் செயல்படுகிறது. மத்திய மாநிலப் பள்ளி குழுமங்களில் 10 ஆம் வகுப்புப் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் இத்தேர்வினை எழுத தகுதிபடைத்தவர்கள் ஆவர். முதல்நிலைத் தேர்வுக்கான முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டு, பின்னர் தகுதியுள்ள தேர்வர்களுக்கு தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் இரண்டாம் நிலைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்ச்சிப்பெற்ற மாணாக்கர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் இத்திட்டத்தின் மூலம் தேர்ச்சிப் பெறும் 40 தமிழக மாணாக்கர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகின்றது. இந்நேர்காணலில் தெரிவு செய்யப்படும் மாணாக்கர்களுக்கு 1 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1250/-ம், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பிற்கு மாதந்தோறும் ரூ.2,000/-ம் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவினால் நிர்ணயிக்கப்படும் உதவித்தொகை அதிகபட்சமாக நான்கு ஆண்டு காலத்திற்கு மட்டும் வழங்கப்படுகிறது.

மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் தேர்வுகளை நடத்துதல்

ஆண்டுதோறும் மைய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மற்றும் பணியாளர் தேர்வாணையக் குழுமத்தினால் நடத்தப்படும் பல தேர்வுகளை சென்னையில் நடத்திட, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஒருங்கிணைப்பு மையமாக செயல்பட்டுவருகிறது.

மின் ஆளுமையின் முயற்சிகள்

தேர்வுத்துறையினை கணினிமயமாக்குதல்

'தேர்வுத் துறையின் பணிகளை முற்றிலும் கணினிமயமாக்குதல்” திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாடு மின் ஆளுமை நிறுவனத்தின் வாயிலாக பணிகள் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ரூ.272 கோடியினை தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் சேமிப்பிலிருந்து அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேசிய கல்வித்தரவுக்களஞ்சியம்

அனைத்துத் தேர்வு வாரியங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களைச் சார்ந்த மாணாக்கரின் மதிப்பெண் சான்றிதழ்களை மின்னணு வடிவத்தில் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி மாணாக்கர் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்துக் கொள்ள பல்கலைக்கழக மானியக் குழு என்.எஸ்.டி.எல் தரவு மேலாண்மை நிறுவனத்தை அங்கீகரித்துள்ளது. வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்கள் இணையதள வாயிலாக மின்னணு முறையிலேயே பதிவேடுகளை சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் பொருட்டு, இவ்வியக்ககம் என்.எஸ்டி.எல் தரவு மேலாண்மை நிறுவனத்துடன், ஒப்பந்தம் செய்யப்பட்டு கடந்த சில வருடங்களுக்கான மாணாக்கரின் கல்வி ஆவணங்களை மின்னணு வடிவத்தில் சேமித்து வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மின் ஆவணக் காப்பகம்

மின்னணு முறையில் மதிப்பெண் சான்றிதழ்களை வழங்குதல், ஆய்வு செய்தல் மட்டுமல்லாமல், காகித வடிவிலான ஆவணங்களை கையாள்வதை தவிர்ப்பதற்கும் மின்ஆவணக் காப்பகம் ஒரு சிறந்த வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வெழுதி, ஆதார் எண்ணைக் குறிப்பிட்டு Digilocker Account கோரிய அனைத்து மாணாக்கரும் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் தகவல் களஞ்சியம் வாயிலாக மின்னணு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மார்ச் 2011 தேர்வு பருவத்தில் மேல்நிலை மற்றும் இடைநிலை பொதுத் தேர்வெழுதிய 19,44,184 தேர்வர்களுக்கு மின்னணு மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான மின்னணு கணக்கு வசதி செய்யப்பட்டுள்ளது.

முடிவுரை

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் மாணாக்கர்கள், பெற்றோர் மற்றும் சமுதாயத்தின் நலன் கருதியே முன்னெடுத்து செல்லப்படுகிறது. கடந்த வருடங்களில் பல புதுமையான முயற்சிகளைப் புகுத்தித் தேர்வுகளை நடத்துவதிலும், தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலும் எளிய மற்றும் நியாமான முறையில் நிரூபித்துக் கொண்டு இருக்கின்றது. இனிவரும் காலங்களில் அனைத்து நிலைகளிலும் மென்மேலும் பல உயரிய இலக்கினை எய்திட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு செயல்பட்டுவருகிறது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை,

3.16666666667
சத்யா Apr 21, 2019 11:33 AM

எனது கணவர் ௧௦ ஆண்டுகளுக்கு முன்பு 10ஆம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். தற்போது இவர் தேர்வு எழுத முடியுமா

Surta Dec 09, 2018 10:39 AM

அருமை, விளக்கமாக, மற்றும் தெளிவாக இருக்கிறது

கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top