பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி - 2018 - 2019

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

தமிழ்நாடு அரசு, இடைநிலைக் கல்வியின் அமைப்பு மற்றும் வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. மாணாக்கர்களிடம் பொதுத்திறன்களின் வளர்ச்சியினை மேம்படுத்துவதிலும், சமூகம் சார்ந்த திறன்களை விதைப்பதிலும் இடைநிலைக் கல்வியின் நிகரில்லாத பங்கினை இந்த அரசு மிகச்சரியாக உணர்ந்துள்ளது. எனவே, தமிழகம் இதுவரை கண்டிராத அளவில் நிதி ஒதுக்கீட்டினைக் கல்வித்துறைக்கு ஒதுக்கித் தமிழகத்தில் பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்கும் தரமான கல்வி ஒருங்கே கிடைக்கப்பெற கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இவ்வரசு சிறப்புடன் செயலாற்றி வருகிறது. தமிழகப் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் நலத்திட்டங்கள், தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித் துறையின் மீதுள்ள அக்கறைக்குச் சான்றுகளாகத் திகழ்கின்றன. மேலும், பள்ளிக் கல்வித் துறையானது, கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில், புதுமைகளைப் புகுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இடைநிலைக் கல்வி தொலைநோக்கு

சமுதாயக் கோட்பாடுகள் மற்றும் உறவுகளை மேம்படுத்துவதில் உயரிய விழுமியங்களை அடித்தளமாகக் கொண்டு, அறிவாற்றல், சமூகம், உளவியல் மற்றும் உடலியல் சார்ந்த பண்புகளை மாணாக்கர்களிடம் தட்டி எழுப்பும் ஒரு கல்வி முறையே அரசின் இலக்காகும்.

அரசின் கல்விசார் நோக்கங்களையும், இலக்குகளையும் நடைமுறைப்படுத்த ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் துணை நிற்கிறது. கல்வியில், தரம் மற்றும் சரிநிகர் வாய்ப்பு ஆகியவற்றை மையமாகக் கொண்ட திட்டங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம், வகுப்பறைகளின் சமூக கலாச்சாரச் சூழல், அறிவுநிலை, விழுமியங்கள் மற்றும் திறன் வளர்த்தல் ஆகியவற்றில் மாற்றம் காணும் முயற்சியில் இவ்வியக்கம் மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறையோடு கைகோர்த்துப் பயணிக்கிறது.

நோக்கங்கள்

*அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் பாலினம் மற்றும் சமுதாய பொருளாதார தடைகளை கடந்து தரமான கல்வியை மாணாக்கர்களுக்கு அளித்தல்

*அனைத்து இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நூறு விழுக்காடு தக்கவைப்பை உறுதிசெய்தல்

*வேலைவாய்ப்பை மேம்படுத்துவதற்குத் தேவையான மென்திறன்களையும், தொழில் திறன்களையும் ஒருங்கிணைப்பதன் மூலம் கல்வித் தரத்தை உயர்த்துதல்

*கற்றலில் இனிமை மற்றும் செயலாக்கம் உள்ள கல்விக்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை இடைநிலை மற்றும் உயர்நிலை மாணாக்கர்களுக்கு உருவாக்குதல்

*கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள மாதிரிப் பள்ளிகள் மற்றும் பெண்கள் விடுதிகளின் செயல்திறனை மேம்படுத்துவதன் மூலம் சமூகத்தரம் மற்றும் சரிநிகர் பங்கேற்பு ஆகியவற்றை உறுதிசெய்யும் மாதிரிக் கல்வி நிறுவனங்களாக அவற்றை முன்னிறுத்துதல்

*அணுகல் இலக்கினை அடைய இலவசப் போக்குவரத்து மற்றும் குடியிருப்பு வசதிகளை ஏற்படுத்துதல்

*சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கு நிகரில்லா நலத்திட்ட உதவிகள் மற்றும் புலன்களால் உணரத்தக்கக் கல்வி கிடைக்கப் பெறுதலை உறுதிசெய்தல்.

*மாணாக்கர்களின் கல்வி, கல்விசார் மற்றும் கல்வி சாராத் திறன்களை முழுமையாக வெளிக்கொணர்தல்

* மாணாக்கர்கள், பள்ளி இடைநிலை மற்றும் மேனிலைத் தேர்வுகளில் சிறந்த தேர்ச்சி விழுக்காடுகளைப் பெறத் தேவையான சிறப்பு முயற்சிகளை மேற்கொள்ளுதல்

* அறிவியல் திட்டங்கள், சுற்றுசூழல் மன்றங்கள் மற்றும் திட்டம்சார் கற்றல் ஆகியவற்றில் முனைப்புடன் பங்கேற்க ஊக்குவிப்பதன் மூலம் மாணாக்கர்களின் அறிவியல் ஆர்வத்திற்கும் வேட்கைக்கும் புத்துயிர் அளித்தல்

* மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் மாணாக்கர்களின் உள்ளார்ந்த தடகள மற்றும் விளையாட்டுத் திறன்களை வெளிக்கொணர்தல் மற்றும் மேம்படுத்துதல்

* தரமான கல்வியை அன்றாட வகுப்பறைச் சூழலில் வழங்குவதற்குத் தேவையான தொடர் பயிற்சிப் பட்டறைகளை ஏற்படுத்திச் செயல் படுத்துவதன் மூலம் ஆசிரியர்களின் திறன்களைச் செம்மைப்படுத்துதல்

* விழிப்புணர்வுப் பரப்புரைகள் மற்றும் மருத்துவ முகாம்கள் மூலம் மாணாக்கர்களின் உடல் நலத்தை மேம்படுத்துதல்

* குறித்த கால அளவுகளில் மாணாக்கர்களுக்கு தொழில் சார்ந்த வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் கிடைக்கச் செய்தல்

பள்ளி வசதியை மேம்படுத்திட பள்ளிகளின் தரம் உயர்த்துதல்

இடைநிலைக் கல்விக்கான வசதிகளை மேம்படுத்துவதே அரசின் முக்கிய இலக்காகும். ஒவ்வொரு 5 கிலோமீட்டர் சுற்றளவிற்குள்ளாகவும் ஒரு உயர்நிலைப் பள்ளி அமைவதனை உறுதிசெய்வதே அரசின் முதன்மை நோக்கம் ஆகும். இதற்கென இதுவரை உயர்நிலைப்பள்ளி வசதி கிடைக்கப்பெறாத குடியிருப்புகளை பள்ளிப் புவியியல் தகவல் முறைமையின் மூலம் இனம் கண்டு, நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துவதன்மூலம் குழந்தைகள் பள்ளிகளை அணுகல் மேம்படுத்தப்படுகிறது.

இந்த இலக்கினை அடைய, 2011-12 முதல் மொத்தம் 979 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த 979 பள்ளிகளில், 571 பள்ளிகள் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலமும், 408 பள்ளிகள் தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலமும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

இதேபோன்று, இக்காலக்கட்டத்தில் 504 உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளன.

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள்

கல்வி ஆண்டு

நடுநிலைப் பள்ளியிலிருந்து உயர்நிலைப் பள்ளியாக

உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக

மாநில அரசு நிதி

அஇகதி*

மாநில அரசு நிதி

2011-12

158

552

100

2012-13

--

--

100

2013-14

50

--

100

2014-15

50

--

101

2015 16

--

--

1

2016-17

--

19

--

2017-18

150

--

102

மொத்தம்

408

571

504

*அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம்

உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்விக்கான தரநிலை

மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், இடைநிலைக் கல்வியின் முன்னேற்றத்தை மதிப்பிட மற்றும் கண்காணிக்க தகுந்த கருவியாகத் திட்ட மதிப்பீட்டிற்கான வரைவு ஆவணத்தை (RFD) முன்னிறுத்துகிறது. RFD பின்வரும் செயல்திறன் குறியீடுகளை உள்ளடக்கியது.

சேர்க்கை

இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி நிலையில் பள்ளிச் சேர்க்கையானது வயது வேறுபாடின்றிச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மொத்தச்சேர்க்கை விகிதம்

இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி நிலைகளில் பள்ளிச் சேர்க்கையில் உள்ள மாணாக்கர்களின் எண்ணிக்கையினை அவர்களின் வயது நிலையில் உள்ள மொத்த மக்கள் தொகையோடு ஒப்பிட்டுச் சேர்க்கை விகிதத்தினை அறிய உதவுகிறது.

மொத்தச்சேக்கை விகிதம் =

குறித்த நிலையில் சேர்க்கை

---------------------------------------------------------------------------------------X100

அந்நிலையில் அவ்வயதுடைய மக்கள் தொகை

பாலினச் சமநிலைக்குறியீடு

இடைநிலை மற்றும் மேல்நிலைக்கல்வி நிலைகளில் பள்ளிச் சேர்க்கையில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையினை, மாணவிகளின் எண்ணிக்கையோடு ஒப்பீடு செய்து, பாலின வாரியாகச் சேர்க்கை விகிதத்தினை அறிய இக்குறியீடு பயன்படுகிறது.

மாணவியர் சேர்க்கை எண்ணிக்கை

பாலினச் சமநிலைக்குறியீடு = --------------------------------------------

மாணவர் சேர்க்கை எண்ணிக்கை

பாலினச் சமத்துவக்குறியீடு

பள்ளிச் சேர்க்கையில் பாலினச் சமத்துவத்தினை அறிய இக்குறியீடு வழிகாட்டுகிறது.

பாலினச் சமத்துவக் குறியீடு =

குறித்த நிலையில் பெண்களின் சேர்க்கை பங்கு

------------------------------------------------------------------------------

அந்நிலையில் அவ்வயதுடைய பெண்களின் பங்கு

சமூக சமத்துவக்குறியீடு

சமூக சமுத்துவம் என்பது குறிப்பிட்ட சமுதாயத்தினர் அல்லது தனிப்பட்ட குழுவிலுள்ள அனைவருக்குமான சமூக உரிமைகள், பேச்சுரிமை, சொத்துரிமை, மேலும் சமூகப் பொருள்களையும் சேவைகளையும் சமமாகப் பெறுவதனைக் குறிக்கும். சமூகப் பிரிவுகளில் இத்தகைய சமத்துவத்தைப் பெறாத மக்களையும் கல்வி சென்று சேர வேண்டும் என்பதே இக்குறியீடுகாட்டுகிறது.

சமூக சமத்துவகுறியீடு - பட்டியல் இனப்பிரிவினர் =

சேர்க்கையில் பட்டியல் இனப்பிரிவினரின் பங்கு

-------------------------------------------------------------------------------------------

14 - 15 வயதுடைய பட்டியல் இனப்பிரிவினரின் பங்கு

சமூக சமத்துவகுறியீடு - பட்டியல் இனப்பிரிவினர் =

சேர்க்கையில் பழங்குடியினரின் பங்கு

--------------------------------------------------------------------

14-15 வயதுடைய பழங்குடியினரின் பங்கு

இடைநிலைக்கல்வி அடைவுவிகிதம்

நம் கல்வி முறையின் உள்ளார்ந்த ஆற்றல் மேம்பாட்டை வெளிக்காட்டும் அளவுகோலாக இக்குறியீடு திகழ்கிறது.

இடைநிலைக்கல்வி அடைவு விகிதம் =

10 ஆம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணாக்கர்கள் எண்ணிக்கை

--------------------------------------------------------------------------------------------------------

முந்தைய ஆண்டில் 9 ஆம் வகுப்பில் சேர்ந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை

இந்தச் செயல்திறன் குறியீடுகள் சார்ந்து மாநிலத்தின் முன்னேற்றமானது கீழ்க்காணும் அட்டவணையில் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

குறியீடுகள் இடைநிலை

குறியீடு

2017-18

சேர்க்கை

22,54,862

சேர்க்கை - மாணவியர்

11,09,448

சேர்க்கை-பட்டியல் இனத்தினர்

5,40,280

சேர்க்கை - பழங்குடியினர்

24,997

மொத்தச்சேர்க்கை விகிதம்

92.78

மொத்தச் சேர்க்கை விகிதம் - மாணவியர்

94.14

மொத்தச் சேர்க்கை விகிதம் - பட்டியல் இனத்தினர்

99.89

மொத்தச் சேர்க்கை விகிதம் - பழங்குடியினர்

71.76

பாலினச் சமநிலைக் குறியீடு

1.06

பாலினச் சமத்துவக் குறியீடு

1.03

பட்டியல் இனத்தோர் சமூக சமத்துவக் குறியீடு

1.09

பழங்குடியினர்-சமூக சமத்துவக் குறியீடு

0.90

இடைநிலைக்கல்வி அடைவுவிகிதம்

98.58

குறியீடுகள் மேல்நிலை

- குறியீடு

2017-18

சேர்க்கை

18,10,212

சேர்க்கை -மாணவியர்

9,58,412

சேர்க்கை - பட்டியல் இனத்தினர்

4,06,286

சேர்க்கை - பழங்குடியினர்

16,793

மொத்தச்சேர்க்கை விகிதம்

74.66

மொத்தச்சேர்க்கை விகிதம் - மாணவர்

68.02

மொத்தச்சேர்க்கை விகிதம் - மாணவியர்

81.74

மொத்தச்சேர்க்கை விகிதம் - பட்டியல் இனத்தினர்

74.81

மொத்தச்சேர்க்கை விகிதம் – பழங்குடியினர்

50.83

இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம்

மாநிலத்தில் செயற்படுத்தப்படும் மாணாக்கர் நலன் சார்ந்த விரிவான திட்டங்களின் விளைவாக, இடைநிலைக் கல்வியில் இடைநிற்றல் விகிதம் பெருமளவில் குறைந்துள்ளதை கீழ்க்காண் அட்டவணை தெளிவுபடுத்துகிறது.

இடைநிற்றல் விகிதம்

கல்விஆண்டு

மாணவர்

மாணவியர்

சராசரி

2011-12

11.07

11.34

11.21

2017-18

4.38

284

361

இடைநிலைக் கல்வியில் தக்கவைப்பு விகிதம்

புதுமையான கற்றல் கற்பித்தல் திட்டங்கள் மற்றும் பிற கல்விசார் முனைப்புகள் ஆகியவற்றின் மூலம் பள்ளிகளின் செயல்திறனை ஊக்குவித்து நடைமுறைப்படுத்தியதன் விளைவாக இடைநிலைக் கல்வியில் தக்கவைப்பு விகிதமானது குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது.

தக்கவைப்பு விகிதம்

கல்வி ஆண்டு

மாணவர்

மாணவியர்

சராசரி

2011-12

88.99

88.60

88.75

2017-18

95.62

97.16

96.39

மாற்றல் விகிதம்

பள்ளிக் கல்வியின் உயர்நிலையில் புதிதாக உள்நுழையும் மாணாக்கர்களின் எண்ணிக்கையினை, அதற்கு முந்தைய நிலையில் பயின்ற மாணாக்கர்களின் எண்ணிக்கையுடன் கொடுக்கப்பட்டுள்ள ஆண்டுடன் ஒப்பிட்டு கல்வி நிலைசார் மாற்றல் விகிதத்தினை இக்குறியீடு உணர்த்துகிறது.

மாற்றல் விகிதம்

கல்வி ஆண்டு

இடைநிலை (6ஆம் வகுப்பிலிருந்து 9ஆம் வகுப்பு வரை)

மேல்நிலை (10ஆம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரை)

மாணவர்

மாணவியர்

சராசரி

மாணவர்

மாணவியர்

சராசரி

2017-18

95.62

97.16

96.39

77.60

88.90

83.17

மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம்

பள்ளிகளில் இடைநிலைக் கல்வி பயிலும் மாணாக்கர்களின் தரத்தினை மேம்படுத்தும் நோக்கோடு முன்னெப்போதும் இல்லாத அளவில் ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு நிரப்பப்பட்டுள்ளன. அதன் விளைவாகத் தமிழ் நாட்டில் இடைநிலைக் கல்வியில் தற்போதைய மாணவர் ஆசிரியர் விகிதாச்சாரம் 261 ஆகும். இது மத்திய அரசின் மாணவர் ஆசிரியர் விகிதாச்சார நிர்ணயமான 401 ஐ விட சிறந்ததாகும். இவ்விகிதாச்சாரம் மாநில அளவில் இடைநிலைக் கல்வித் தரத்தை உயர்த்த உதவியுள்ளது.

கல்வித் தரமேம்பாட்டு முனைப்புகள்

ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர் நியமனம்

பள்ளிக் கல்வித்துறையில் போதிய எண்ணிக்கையில் தகுதியான பாடவாரி ஆசிரியர்களையும், ஆசிரியரல்லாப் பணியாளர்களையும் நியமிப்பதற்குத் தமிழக அரசு முன்னுரிமை அளிக்கிறது. பள்ளிக்கல்வித் துறையில் அவ்வப்போது எழும் காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு, எவ்விதச் சுணக்கமுமின்றி அவற்றை உடனுக்குடன் நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசின் தொடர் முயற்சிகளின் காரணமாக, 2017-18 ஆம் ஆண்டிலும் கீழ்க்காண் அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வ எண்

பதவி

பணி நியமன முறை

நிரப்பப்பட்ட பணியிடங்களின்

1

உதவியாளர்நேரடி

தமிழ்நாடு அரசுப் பணியாளர்

40

2

உதவியாளர்

 

54

3

இளநிலை உதவியாளர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்

203

4

தட்டச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்

125

5

பட்டதாரி ஆசிரியர் (தமிழ்

ஆசிரியர்தேர்வு வாரியம்

197

6

பட்டதாரி ஆசிரியர்

ஆசிரியர்தேர்வு வாரியம்

8

7

சிறப்பு பயிற்சி பட்டதாரி

ஆசிரியர்தேர்வு வாரியம்

59

8

முதுகலை ஆசிரியர்

ஆசிரியர்தேர்வு வாரியம் மற்றும்

1,574

பயிற்சி

ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி

ஆசிரியர்களின் கற்பித்தல் மற்றும் உளவியல் சார் வழிகாட்டுதல் திறன்களைச் செம்மைப்படுத்தும் நோக்கில் பணியிடைப் பயிற்சியானது இரண்டு நிலைகளில் தனித்தனியாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

நிலை 1

முதல்நிலைப் பயிற்சியானது பாடம் சார் கற்றல்/கற்பித்தல் நோக்கங்களை மையமாகக் கொண்டது.

*கற்றல் கற்பித்தலில் முன்னெடுக்கப்படும் நவீனத் தொழிநுட்ப உத்திகளை ஆசிரியர்களிடம் அறிமுகப்படுத்துதல்

*பாடம்சார் கருத்துப்புரிதலை மேம்படுத்தி, அன்றாடப் பாடப்பிரிவுகளுக்கான, கற்பித்தலை எளிமைப்படுத்தும் கருத்து வரைபடங்களை ஆசிரியர்கள் தாங்களாகவே தயாரிக்கும் உத்திகளை அறிமுகம் செய்தல்

*வழக்கமான வகுப்பறைக் கற்பித்தலை வளப்படுத்த, வலைத்தளங்களில் பெருகியிருக்கும் பாடவாரி மின்னணு வளங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்தி, அவற்றின் அன்றாட பயன்பாடு குறித்த நடைமுறைகளைக் கற்பித்தல்

நிலை 2

ஆசிரியர் பணியிடைப் பயிற்சியின் இரண்டாம்நிலை, பின்வரும் நோக்கங்களைக் மையமாகக் கொண்டு ஐந்து நாள் நடைபெற்றது.

*தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் பயிற்சி - ஆசிரியர்களின் கணினிசார் திறன்மேம்பாடு குறித்த பயிற்சியானது வழங்கப்படுகிறது

*மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களுக்கான அனைத்தையும் உள்ளடக்கிய இடைநிலைக் கல்வித்திட்டம் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப கற்பித்தல் உத்திகள் மற்றும் உளவியல் வழிகாட்டுத் திறன்களை ஆசிரியர்கள் அடைய உதவுவதன் மூலம், அக்குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல் சூழல் அன்றாட வகுப்பறைகளில் நிலவுதலை உறுதிசெய்தல்

*பாலினச்சமன்பாடு-பள்ளிகளில் பாலினச்சார்பற்ற வகுப்பறைகளை உருவாக்குதல் மற்றும் அன்றாட வகுப்பறைச் செயல்பாடுகளில் பாலினச் சமத்துவத்தை மேம்படுத்துதல்

2017-18 ஆம் ஆண்டில், 37,360 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.1,128.90 இலட்சம் செலவில், இப்பயிற்சியானது சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.

பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சி

தலைமை ஆசிரியர்களுக்கான பயிற்சி

பள்ளித் தலைமை ஆசிரியர்களிடையே தலைமைப் பண்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஒவ்வோராண்டும் பள்ளித் தலைமைப் பண்பு மேம்பாட்டுப் பயிற்சிக்கு அரசு ஏற்பாடு செய்கிறது. 2017-18 ஆம் ஆண்டில் 250 பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ரூ.12 இலட்சம் செலவில் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாகப் பள்ளித் தலைமை மற்றும் மேலாண்மை குறித்த

சிறப்புப் பயிற்சி ஒன்றினைத் தேசியக் கல்வித் திட்டமிடல் மற்றும் மேலாண்மைப் பல்கலைக்கழகம் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தியுள்ளது. கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற ஒரு மாத சான்றிதழ் பயிற்சியில் 15 தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றுப் பயனடைந்துள்ளனர்.

பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

அரசுப் பள்ளிகளின் அன்றாடச் செயல்பாடு மற்றும் வளர்ச்சியில் சமூகப் பங்களிப்பை ஊக்குவிக்கும் நோக்கில், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு உறுப்பினர்களுக்கு ஒவ்வோராண்டும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு உறுப்பினர்கள் 29,540 பேருக்கு ஒரு நாள் பயிற்சியானது அனைத்து மாவட்டங்களிலுள்ள ஒன்றியங்களில் ரூ.88.62 இலட்சம் செலவில் அளிக்கப்பட்டது. பள்ளியின் நீண்டகால வளர்ச்சி இலக்குகளை மையப்படுத்திய, வளர்ச்சித்திட்ட வரைவு தயாரித்தல் மற்றும் குறுகிய கால அடிப்படை வளர்ச்சி சார்ந்த திட்டமிடுதல் ஆகியன இப்பயிற்சியின் முக்கியமான கருப்பொருள்கள் ஆகும்.

நிருவாக அலுவலர்களுக்கான பயிற்சி

நிருவாக அலுவலர்களுக்கான ஒரு வாரப் பயிற்சியானது, அனைவருக்கும் இடைநிலை கல்வி ஆண்டுத் திட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகும். 2017-18 ஆம் ஆண்டு, மதுரை பில்லர் மையத்தில் ஐந்து நாள் பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சியில் 149 மாநில மற்றும் மாவட்ட நிருவாக அலுவலர்கள் பங்கு பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்

இப்பயிற்சியானது, நிருவாக அலுவலர்களுக்குப் புத்தாக்கத்திற்கான ஒரு வாய்ப்பாகவும், கல்விசார் விவாதங்களுக்கான பயனுள்ள தளமாகவும் அமைந்தது. இப்பயிற்சியில் கல்வி, வளரிளம் பருவ உளவியல், தனிமனித மற்றும் சமூகநலம் பேணுதல் முதலிய முக்கியத் தலைப்புகளில் வல்லுநர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

அப்பயிற்சியின் விவரம் வருமாறு:

ஆண்டு

பயிற்சி

பயிற்சி பெற்ற நபர்களின் எண்ணிக்கை

 

2017-18

பாட ஆசிரியர்களுக்கான பயிற்சி

37,360

தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி

250

பள்ளி மேலாண்மை வளர்ச்சி குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி

29,540

நிருவாக அலுவலர்களுக்கான பயிற்சி

149

தற்காப்புக்கலைப் பயிற்சி

பெண்களுக்கு ஆளுமைத்திறன் வளர்த்தல் நோக்கில் ஒரு முன்முயற்சியாக, தமிழகத்தில் கல்வியில் பின்தங்கியுள்ள 13 மாவட்டங்களில் 44 ஒன்றியங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்குத் தற்காப்புக் கலைப் பயிற்சித் திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. முதற்கண், மாநிலத்தில் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேற்பட்ட பட்டியலின மற்றும்

பழங்குடியின பிரிவு மாணவியர்களின் எண்ணிக்கையைக் கொண்ட 242 பள்ளிகளில் இத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் அனுபவமிக்கப் பெண் தற்காப்புக்கலைப் பயிற்சியாளர்களைக் கொண்டு தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் இடைநிலை வகுப்புகளில் பயிலும் மாணவியருக்கு, கராத்தே, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ முதலிய தற்காப்புக் கலைகளில் பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வாரத்திற்கு இரு நாள் என, மூன்று மாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கென ரூ.21.78 இலட்சம் செலவிடப்பட்டது.

பள்ளிகளில் தகவல் மற்றும் தொலைத் தொடர்புத் தொழில்நுட்பம்

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள், 110 விதியின்கீழ் சட்டசபையில் அறிவித்ததற்கிணங்க, மாநிலத்தில் உள்ள 3,090 உயர்நிலை மற்றும் 2,939 மேல்நிலைப்பள்ளிகளில் அதிநவீன ஆய்வகக்கூடங்கள் நிறுவப்படும் என அறிவித்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துதலுக்கான பணிகள் இறுதி நிலையை அடைந்துள்ளன. ரூ. 462.60 கோடி ரூபாய் செலவில், ஒளிப்பட வீழ்த்திகள், அச்சுப்பொறிகள், தடையில்லா மின் வழங்கி, இணைய நிழற்படக்கருவிகள் மற்றும் அதிவேக அலைவரிசை கொண்ட இணைய இணைப்பு ஆகிய வசதிகளை உள்ளடக்கிய அதிநவீன ஆய்வகக்கூடங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான கலைத்திறன் திருவிழா கலா உத்சவ்

மாணாக்கர்களின் கலைத்திறனை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவிலான "கலைத்திறன் திருவிழா” (கலாஉத்சவ்) ஒவ்வோராண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மாணாக்கர் திறனறிப் போட்டிகள் பள்ளி, வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் நடத்தப்பட்டுத் தெரிவு செய்யப்படும் குழுக்கள், தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்கின்றன. இந்நிகழ்வு மாநிலத்தின் கலை மற்றும் கலாச்சாரத்தைத் தேசியஅளவில் வெளிப்படுத்துவதற்கான ஓர் அரிய களமாக அமைகிறது. இக்கலைத்திறன் திருவிழா வாயிலாக நடனம், இசை, திரையரங்கு மற்றும் காட்சிக்கலைகளைப் புரிந்து கொள்ளவும், வெளிப்படுத்தவும் மாணாக்கர்கள் அறிந்துகொள்கிறார்கள்.

வ எண்

கலையின் பெயர்

பங்கேற்ற மாணாக்கர் எண்ணிக்கை

மாவட்ட அளவில்

மாநில அளவில்

1

இசை

1,793

171

2

நடனம்

2143

196

3

திரையரங்குக் கலை

1,335

180

4

காட்சிக்கலை

1,206

86

2017-18 ஆம் ஆண்டில் தமிழகத்தின் திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களைச் சார்ந்த குழுக்கள், போபாலில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றதுடன், நாகப்பட்டினம் மாவட்ட மாணாக்கர்குழு இசைப்பிரிவில் தேசிய அளவில் இரண்டாமிடம் பெற்றுப் பெருமை சேர்த்துள்ளது. இந்த விருதானது வெள்ளி கோப்பை, வெள்ளி பதக்கம் மற்றும் ரூ.75000 ரொக்கப் பரிசு கொண்டதாகும். இத்திட்டத்திற்காக 2017-18 ஆம் ஆண்டில் ரூ.11 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பள்ளிகளில் திறன் தேடல்

திறன்தேடல் என்பது சிறப்பான கல்வித் திறமை பெற்ற கிராமப்புற மாணாக்கர்களை அடையாளம் காணும் தமிழக அரசின் தனித்துவமான ஒரு திட்டமாகும். மாநிலம் முழுவதும், கல்வி மாவட்ட அளவில் 134 மையங்களில் இத்திட்டமானது செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கியக் குறிக்கோள் கிராமப்புற மாணாக்கர்களின் கல்விசார் திறன்களை மேம்படுத்துதலின் வழியாக அவர்கள், அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க ஊக்குவிப்பதாகும். இந்த மையங்களில் போட்டித்தேர்வு முன்னேற்பாட்டு வகுப்புகள் வார இறுதி நாளிலும் மற்றும் காலாண்டு, அரையாண்டு விடுமுறை நாட்களிலும் நடத்தப்படுகின்றன.ல் வழியைத் தெரிவுசெய்ய உதவும், வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு திட்டங்கள் இந்த மையங்களின் வழக்கமான செயல்பாடுகளின் ஓர் அங்கமாகிறது.

இப்பயிற்சி மையங்களின் மூலம் 10235 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளார்கள். இத்திட்டத்தின் விளைவாக, 6573 மாணாக்கர்கள் TRUST தேர்வில் பங்கேற்க ஊக்கப்படுத்தப்பட்டதோடு, அவர்களுள் 3387 மாணாக்கர்கள் TRUST உதவித்தொகை பெறுவதற்குத் தகுதி பெற்றுள்ளார்கள். 2017-18 ஆம் ஆண்டில், இத்திட்டச் செயல்பாடுகளுக்கென ரூ112 இலட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது.

திறன் குறைந்த மாணாக்கர்களின் சாதனை அடைவு

திறன் குறைந்த மாணாக்கர்களின் சாதனை அடைவு என்பது கற்றல் அடைவுகளில் பின்தங்கியுள்ள மாணாக்கர்கள் அரசுப் பொதுத்தேர்வுகளில் எளிதில் வெற்றி பெற நடைமுறைப்படுத்தப்பட்ட சிறப்புத் திட்டமாகும். இத்திட்டமானது, சிறப்புக் கவன ஈர்ப்பு மாவட்டங்களான திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஆய்வு நோக்கில் செயல்படுத்தப்பட்டது.

2017-18 ஆம் ஆண்டில், இத்திட்டப் பணிகளுக்கென ரூ.35:16இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.

படைப்புசார் கற்றல் IMPART)

படைப்புசார் கற்றல் என்பது இடைநிலைக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றலைக் குறைத்து, அவர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தும் சிறப்புத் திட்டமாகும். இத்திட்டமானது கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நீலகிரி, பெரம்பலூர், திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், படைப்புசார் கற்றல்நோக்கோடு, ஆசிரியர்களின் உதவியுடன், படைப்புகளை உருவாக்க மாணாக்கர் குழுக்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. சிறந்த படைப்புகள் மாவட்ட அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுப் பரிசுகள் வழங்கப்பட்டன. 2017-18 ஆம் ஆண்டில் இத்திட்டப்பணிகளுக்கு ரூ.32.20 இலட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.

பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு

பள்ளித் தரநிலை மற்றும் மதிப்பீடு என்பது NUEPA முன்மொழியும் தரநிலைகளின் அடிப்படையில், தலைமையாசிரியர் பள்ளியின் நிலையை தன்மதிப்பீடு செய்து, பள்ளி முன்னேற்றத்திற்கான ஆண்டுவாரியான திட்டத்தினை வரையறுக்க வழிகோலுவதாகும். 2017-18 ஆம் ஆண்டில், இத்திட்டச் செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல் பயிற்சியானது, அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தில் மாவட்டங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நடத்தப் பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, 2017-18 இல் ரூ.32.20 இலட்சம் செலவில் மாநிலத்தின் 5,908 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சிப் பணிமனை நடைபெற்றது.

தொழிற்கல்வி

இடைநிலை/மேல்நிலைக் கல்வியில் மாணாக்கர்களுக்குத் தொழிற்கல்வி வழங்குதல் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டக்கூறுகளில் முதன்மையானதாகும். இதற்கென ரூ.383.72 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2017-18 ஆம் ஆண்டில், இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த 67 மேல்நிலைப் பள்ளிகள் தெரிவு செய்யப்பட்டு, அவற்றின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் வழிகாட்டுப் பயிற்சியானது 29.01.2018 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை மாநிலத்தில் சிறப்பாக நடைமுறைப்படுத்த விரிவான ஒரு திட்ட வரைவு தயார் செய்து, திட்ட அமலாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அறிவியல் கண்காட்சி

மாணாக்கர்களிடையே அறிவியல் மனநிலையை வளர்க்கும் திட்டங்களைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை ஆர்வமாக உள்ளது. அறிவியல் கண்காட்சியானது விஞ்ஞானம், புதுமை மற்றும் படைப்பாற்றல் ஆகியவை சார்ந்த தங்கள் தேடலை வெளிப்படுத்த மாணாக்கர்களுக்குத் தேவைப்படும் சிறந்த ஒரு களமாக அமைகிறது. ஒவ்வோர் ஆண்டும் அறிவியல் கண்காட்சிகள் கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நடத்தப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில், "நீடித்த மேம்பாட்டிற்கான புதுமைகள்" என்ற தலைப்பில் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி கரூர் மாவட்டத்தில் நடைபெற்றது. தெலுங்கானாவில் நடைபெற்ற தென்னிந்திய விஞ்ஞானக் கண்காட்சியில் மாநில அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகள் காட்சிப்படுத்தப் பட்டன. இதேபோல், தென்னிந்திய அளவிலான சிறந்த படைப்புகள் புது டெல்லியில் நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அடல்டிங்கரிங் ஆய்வகம்

மாணாக்கர்களிடையே தகவமைப்புக் கற்றல், கணினியினைப் பயன்படுத்துதல், விரைவான கணக்கீடுகள் செய்தல் முதலிய அறிவியல் சார்ந்த திறன்கள், 3D அச்சுப்பொறிகள், மின்னணுக் கருவிகள் மற்றும் முன்மாதிரி உபகரணங்களைக் கொண்ட நவீன ஆய்வகங்களின் துணை கொண்டு வளர்த்தல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள் ஆகும். மாநிலத்தின் 44 பின்தங்கிய ஒன்றியங்களில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 44அடல்டிங்கரிங் ஆய்வகங்கள் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் புதுமைக்கூறு நிதி உதவியுடன் நிறுவப்படவுள்ளன.

தொடுவானம்

தமிழ்நாடு முழுவதும், தேசிய அளவிலான போட்டிப் தேர்வுகளுக்கான 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், கணினி, VSAT வலை, LCD ஒளிப்படவீழ்த்திகள், தடையில்லா மின்சாரம் ஆகிய நவீன உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கள் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளையும் எதிர்கொண்டு எளிதில் வெற்றி பெற உதவும் விதமாக, சிறந்த பாட வல்லுநர்களைக்கொண்டு வார இறுதி நாட்கள் மற்றும் பள்ளி விடுமுறை நாளில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. SPEED அறக்கட்டளை, சைதன்யா கல்வி நிறுவனக் குழுமம் மற்றும் ALLEN முதலிய தன்னார்வ நிறுவனங்களுடன் இணைந்து ஆசிரியர்களின் திறன் மேம்பாடு மற்றும் மாணாக்கர்களைப் போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்துதல் என ஆக்கப்பூர்வ பணிகளைப் பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்கிறது. இம்மையங்களில், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் அனைத்துப் பாடங்களுக்கான கட்டகங்கள், மின்னணுப் பாடப்பொருள் கொண்ட மடிக்கணினிகள் மற்றும் இதர உதவிகள் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டு கல்விச் சுற்றுலா

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அறிவியல், தொழில்நுட்பம், கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் மிகச்சிறப்பாக செயல்பட்ட 25 மாணாக்கர்கள் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலாவிற்குத் தேர்வு செய்யப்பட்டார்கள். இக்குழுவானது அங்கு உள்ள கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், அறிவியல் ஆய்வகங்கள் ஆகியவற்றைப் பார்வையிடுவதோடு, அந்நாட்டு அறிஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுடன் கலந்துரையாடி தங்களது அறிவாற்றலை வளர்த்துக் கொள்வார்கள்.

பெருந்தலைவர் காமராசர்விருது

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட உள்ளது. கலை, விளையாட்டு, அறிவியல் மற்றும் பாட இணைச் செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கக் கூடிய மாணாக்கர்கள் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்படுவார்கள். 32 மாவட்டங்களில், 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் இருந்து வகுப்பிற்கு 15 மாணாக்கர்கள் என ஒவ்வொரு மாவட்டத்திற்கு 30 மாணாக்கர்கள் வீதம் மாநிலத்தில் மொத்தம் 960 மாணாக்கர்கள் தேர்வுசெய்யப்பட்டு இவ்விருது வழங்கப்படும். இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ145.30 இலட்சம் ஆகும்.

கனவு ஆசிரியர் விருது

தமிழகத்தின் அனைத்துவகை அரசுப்பள்ளிகளில் பணியாற்றக் கூடிய ஆசிரியர்களுக்குக் 'கனவு ஆசிரியர் விருது வழங்கப்பட உள்ளது. பள்ளிகளில் கணினி வசதிகளுடன் பாடங்களைக் கையாளும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் பள்ளியின் நலன்களுக்காக சமூக உறுப்பினர்களோடு ஒருங்கிணைந்து செயல்படுகின்ற ஆசிரியர்கள், மாணாக்கர் சேர்க்கையினை அதிகப்படுத்துதல் மற்றும் கல்வி இணைச் செயல்பாடுகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கக் கூடிய ஆசிரியர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் 192 ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழுடன் ரூ.10,000 ரொக்க பரிசும் கூடிய இந்த விருது வழங்கப்படும்.

புதுமைப் பள்ளி விருது

மாணாக்கர் சேர்க்கையினை மேம்படுத்துதல், கற்றல் கற்பித்தலில் புதிய உத்திகளை நடைமுறைப்படுத்துதல், பரிந்துரைக்கப்பட்ட உட்கட்டமைப்பு தேவைகளை நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு மற்றும் பெற்றோருடன் இணைந்து செயல்படுதல் எனச் சிறந்து விளங்கக்கூடிய பள்ளிகளுக்குப் 'புதுமைப்பள்ளி” விருது வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஒரு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஒரு மேல்நிலைப் பள்ளி என நான்கு அரசு பள்ளிகள் வீதம் ஊராட்சி ஒன்றியத் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் பரிசுத் தொகை ஒரு இலட்சம் ரூபாய் மற்றும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் ஒவ்வொன்றிற்கும் பரிசுத் தொகை இரண்டு இலட்சம் ரூபாய் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு மொத்தம் 128 பள்ளிகள் தேர்வு செய்யப்படும். இப்பரிசுத் தொகையானது பள்ளியினை மேலும் வலுப்படுத்தி ஒரு மாதிரி பள்ளியாக உருமாற்ற வழிவகை செய்யும். இதற்காக ரூ.192 இலட்சம் 2017-18 ஆம் நிதி ஆண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

திறமையை வெளிக்கொணரும் சுற்றுலா

மாணாக்கர்களின் கல்வி அறிவை மேம்படுத்துவதோடு அவர்களுக்குக் கள் அனுபவத்தை வழங்கும் நோக்கில் தமிழக அரசால் மாணாக்கர்களுக்கு ஒவ்வோராண்டும் கல்விச் சுற்றுலாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தினால் 2017-18 ஆம் ஆண்டில் 67 கல்வி மாவட்டங்களில் உள்ள 6,700 மாணாக்கர்கள் கேரளாவில் தும்பாவில் உள்ள 'விக்ரம் சாராபாய் வானியல் ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுப் பயனடைந்துள்ளார்கள். இப்பயணம் மாணாக்கர்கள் விண்வெளி அறிவைக் கற்றுக் கொள்ளவும், உணர்வுபூர்வமான மற்றும் அறிவார்ந்த உள்ளீடுகள் மூலம் வலுப்பெறவும் உதவியது. மேலும், இப்பயணமானது அண்டை மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் மரபுகளை வெளிப்படுத்த மாணாக்கர்களுக்கு உதவியது. இத்திட்டப் பணிக்கென 2017-18 ஆம் ஆண்டில் ரூ 134 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாநில அளவிலான அரசுப் பொதுத் தேர்வு சீரமைத்தல்

அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் மாணாக்கர்கள் சிறந்து விளங்குவதற்கு ஏதுவாக மேல்நிலைப் பொதுத் தேர்வில் 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

அவை பின்வருமாறு:

*மேல்நிலை முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு மாநில அளவில் அரசுப் பொதுத் தேர்வுகள் அறிமுகம்

*மேல்நிலை முதலாம் ஆண்டும், இரண்டாம் ஆண்டும் என இரண்டு ஆண்டுகளுக்கும் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டு 1200 மதிப்பெண்கள் வழங்குதல்

*மேல்நிலை முதலாம் ஆண்டுப் பொதுத் தேர்வில் பாடங்கள் சிலவற்றில் தோல்வியுறும் மாணாக்கர்கள் ஆண்டு விரையமின்றி இரண்டாம் ஆண்டிற்குச் சென்று, தோல்வியுற்ற பாடங்களை உடனடித் தேர்வு ஜூன்/ ஜூலை மாதத்திலோ அல்லது இரண்டாம் ஆண்டுத் தேர்விலோ சேர்த்து எழுத வழிவகை செய்தல்

*அனைத்துப் பாடங்களிலும் அகமதிப்பீட்டிற்கென 10 மதிப்பெண்கள் அளித்தல்

*பொதுத்தேர்வின் கால அளவை 3 மணியிலிருந்து 2மணி 30 நிமிடங்களாகக் குறைத்தல்

*மேல்நிலை முதல் மற்றும் இரண்டாம் ஆண்டுத் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல்

நன்னெறிக் கல்வி

பள்ளிகளில் நன்னெறிக் கல்வியைக் கற்பித்து மாணாக்கர்களின் நல்லொழுக்கத்தை மேம்படுத்துதல் வேண்டும். அதற்கெனத் திருக்குறளில் உள்ள அறத்துப்பால் மற்றும் பொருட்பாலிலிருந்து 1050 குறட்பாக்களைத் தேர்வு செய்து 6 வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைக்குமான புதிய பாடத் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வகுப்பு தோறும் 150 குறட்பாக்களை முழுமையாக உணர்ந்து கற்பதனால், இவ்வகுப்பு மாணாக்கர்கள் திருக்குறள் அறநெறிகளால் வாழ்க்கையில் பெரும் பயனடைவார்கள்.

உட்கட்டமைப்பு

கூடுதல் வகுப்பறைகள், தளவாடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கழிப்பறைகள், குடிநீர்வசதி மற்றும் சுற்றுச்சுவர் போன்ற உட்கட்டமைப்பு வசதிகளைத் தேவைக்கேற்ப அரசுப் பள்ளிகளுக்கு, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி மற்றும் நபார்டு நிதி உதவியின் மூலம் அரசு வழங்குகிறது.

அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் கட்டுமானப்பணிகள்

தற்போதுள்ள அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துவது அனைவருக்கும் இடைநிலைக் கல்வி முதன்மைத் திட்டக்கூறுகளில் ஒன்றாகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட வரைவில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை அனைத்து அரசுப்பள்ளிகளிலும் நிறுவுதலே இதன் முக்கியமான இலக்காகும். அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் இதுவரை பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமானப் பணிகளின் தற்போதைய நிலையினைப் பின்வரும் அட்டவணை தெளிவுபடுத்துகிறது:

வ எண்

இனம்

எண்ணிக்கை

நிதி ஒதுக்கீடு (ரூ கோடியில்)

1

புதிய பள்ளிகள் 2016-17

19

24.85

2

பள்ளியின் உட்கட்டமைப்பு பலப்படுத்துதல் 2016-17

54

45.34

3

பள்ளியின் உட்கட்டமைப்பு பலப்படுத்துதல் 2017-18

36

39.01

நபார்டு நிதியுதவியின் கீழ் கட்டுமானப்பணிகள்

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம் படுத்துவதற்குப் பெருமளவிலான பொருள் உதவியை நபார்டு வங்கி வழங்குகிறது. தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் நபார்டுத் திட்டக் கட்டுமான பணிகளின் பிரிவு நிலையினைப் பின்வரும் அட்டவணை விவரிக்கிறது:

நபார்டு நிதியுதவியின் கீழ் கட்டுமானப்பணிகள்

வ. எண்

திட்ட எண் மற்றும் ஆண்டு

பணிகளின் எண்ணிக்கை

ஒதுக்கப்பட்டதொகை ரூபாய் இலட்சத்தில்

1

RIDFXVIII (கட்ட ம் XI) (2012-13)

131

16,401.55

2

RIDF XIX (கட்ட ம் XII) (2014-15)

210

24,93060

3

RIDF XX (கட்டம் XIII) (2014-15)

155

20,870.97

4

RIDF XX கட்டம் XIII) T&டவ் (2015-16)

416

4,157,96

5

RIDFXXIகட்டம் XIV) (2015-16)

228

35,557.27

6

RIDFXXII கட்டம் XV) (2016-17)

149

24,000.19

மொத்தம்

1289

125,918.54

சமூகச் சமத்துவக் குறுக்கீடுகள்

மாதிரிப் பள்ளிகள்

அனைவருக்கும் இடைநிலைக் கல்வியின் மூலமாக கல்வியில் பின்தங்கியுள்ள 44 ஒன்றியங்களில், இடைநிலைக் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் கல்வி அடைவினை மேம்படுத்தும் வகையிலும் 44 மாதிரிப்பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன. இப்பள்ளிகளில் அகலமான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள், கூட்ட அரங்குகள், நூலகம் ஆண், பெண் இருபாலருக்குமான தனித்தனி நவீன கழிவறைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் போன்றவைகள் உள்ளடக்கிய மிகச் சிறந்த அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகைய மாதிரிப்பள்ளிகள் மிகச் சிறந்த செயல்திறன் கொண்ட பள்ளிகளாக மாறிவருவதால், ஒவ்வோர் ஆண்டும் இப்பள்ளிகளில் சேர்வதற்கான ஆர்வம் அதிகரித்து வருவதால், இடம் கிடைப்பதே அரிது என்ற நிலையை எட்டியுள்ளது. இப்பள்ளிகளில் 560 மாணாக்கர்களும் 17 ஆசிரியர்களும் 7 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் உள்ளனர். 2017-18 ஆம் கல்வியாண்டில், இந்த 44 மாதிரிப்பள்ளிகளிலும் 10,190 மாணவர்களும் 9,014 மாணவியர்களும் ஆக மொத்தம் 19,204மாணாக்கர் பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசியத் திறன் மற்றும் வருவாய் உதவித்தொகை

தேசியத் திறன் மற்றும் வருவாய் உதவித் தொகைத் திட்டமானது பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள, தகுதிவாய்ந்த மாணாக்கர்களுக்கு இடைநிலைப் படிப்பைத் தொடர ஊக்குவிக்கும் வகையில் உதவித்தொகை வழங்குவதற்கான இந்திய அரசின் முன்னோடித் திட்டமாகும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 8 ஆம் வகுப்பில் குறைந்தபட்சம் 55% மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியுறும் மாணாக்கர்கள், மாநில அரசு நடத்தும் தகுதித்தேர்வின் மூலம் இவ்வுதவித்தொகைக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு, 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு முறையே ரூ.6,000/- வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இவ்வுதவித் தொகையானது காலாண்டு அடிப்படையில் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில், 6,247 மாணாக்கர்கள் தேசியத் திறன் மற்றும் வருவாய் தேர்வில் பங்கேற்றனர்.

பெண்கள் ஊக்கத்தொகைக்கான தேசியத் திட்டம்

பெண்கள் ஊக்கத்தொகைக்கான தேசியத் திட்டமானது இடைநிலைக் கல்வியில் பயிலும் மாணவியர்களின் தக்கவைத்தல் விகிதத்தை உயர்த்தும் நோக்கில் 2008-09 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்ட தேசிய அளவிலான திட்டம் ஆகும். அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 9 ஆம் வகுப்புப் பயிலும் தகுதியுள்ள மாணவியர் இந்தத் திட்டத்தின் பயனாளிகள் ஆவர். இத்திட்டத்தின் மூலம் தெரிவுசெய்யப்பட்ட மாணவியரின் பெயரில் ரூ. 3,000/- வைப்பு நிதியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. பயனாளிகள் தங்களது 18 ஆம் அகவையினை நிறைவுசெய்யும்போது, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறும் போதும் இந்தத் தொகையினை வட்டியோடு சேர்த்து வங்கிக் கணக்கிலிருந்து மீளப்பெற்றுக் கொள்ளலாம். தமிழகப் பள்ளிகளிலிருந்து, 2017-18 ஆம் ஆண்டில், உதவித்தொகைக்குத் தகுதிவாய்ந்த 82,378 விண்ணப்பங்கள், தேசிய உதவித்தொகை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

மாணவியர் விடுதி

இடைநிலைக் கல்வியில், இரு பாலருக்கும் இடையே நிலவும் சேர்க்கைச் சதவிகித வேறுபாட்டைக் களையவும், கல்வியில் பின்தங்கிய 44 ஒன்றியங்களில் பெண் கல்வியினை ஊக்கப்படுத்தவும், கல்வியில் பின்தங்கிய ஒன்றியம் ஒவ்வொன்றிலும் 100 படுக்கை வசதி கொண்ட மாணவியர் விடுதிகள், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் நிறுவப்பட்டு சிறப்புறச் செயல்பட்டு வருகின்றன. 9 முதல் 12 ஆம் வகுப்புகள் வரை பயிலும் 14 முதல் 18 வயதிற்கு உட்பட்ட அரசுப் பள்ளி மாணவியர், அதிலும் குறிப்பாக, பட்டியல் இன மற்றும் பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மைச் சமூகங்களைச் சார்ந்த மாணவியர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணவியர் பயனடைய வழிகோலுவதே இத்திட்டத்தின் இலக்காகும். இந்த விடுதிகளில் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் பயின்ற மாணவியருக்குச் சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில், 44 மாணவியர் விடுதிகளில் 3950 மாணவியர்கள் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்திற்கான மொத்தம் 891,88 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூகவாரியாகப் பயனடைந்த பயனாளிகளின் விவரங்கள் கீழேபட்டியலிடப்பட்டுள்ளன:

 

பயனடைந்த மாணவியர் எண்ணிக்கை

 

மாணவியர் விடுதிகள்

மொத்தம்

பட்டியல் இனத்தவர்

பழங்குடியினர்

ஸ்லாமியர்

கிறஸ்தவர்

சிறப்புப்பணம் தேவைப்படுபவர்கள்

KGBV-யிலிருந்து பயனடைந்தவர்கள்

44

3,950

1,055

500

10

15

35

687

சதவீதம்

 

26.71

12.66

0.25

0.38

0.89

17.39

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலைக்கல்வி

மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய இடைநிலைக் கல்வியானது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுள், உடற்குறைபாடு உடையோருக்கான சட்டம் (1995) மற்றும் தேசிய அறக்கட்டளைச் சட்டம் (1999). இன் படி, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குறைபாடுகளைக் கொண்ட அனைத்து மாணாக்கர்களுக்கும் பொதுவானதாகும். இடைநிலைக் கல்வியில், மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்களின் பங்களிப்பை மேம்படுத்த, பின்வரும் சிறப்புத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன :

• சிறப்பு ஆசிரியர்கள் பணிநியமனம்

*மாற்றுத்திறன்மாணவியருக்கான ஊக்கத்தொகை

*மருத்துவ முகாம்கள்

*புத்தாக்கம் மற்றும் சூழல் கட்டமைப்பு முகாம்கள்

*திறன்சார் உதவி உபகரணங்கள் வழங்குதல்

*பாதுகாவலர் மற்றும் போக்குவரத்து படி

*உதவியாளர் படி

*வாசிப்பு உதவியாளர் படி

*சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான தனித்துவமான வளமையம்

2017-18 ஆம் ஆண்டில், 6,972 மாற்றுத்திறன் மாணவியருக்கு 139.44 இலட்சம் செலவில் கல்வி ஊக்கத்தொகையானது வழங்கப்பட்டுள்ளது. 1181.53 இலட்சம் ரூபாய் 2017-18 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டினைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட, மேற்குறிப்பிடப் பட்டுள்ள ஆக்கபூர்வ செயல்பாடுகள் மூலம், 14,469 மாற்றுத்திறன் கொண்ட மாணாக்கர்கள் பயனடைந்து உள்ளார்கள்.

மாற்றுத் திறன்வகை

மாணவர்

மாணவியர்

மொத்தம்

பார்வையின்மை

443

367

810

குறை பார்வை

1,402

1,642

3,044

செவித்திறன் குறைபாடு

1,184

1,112

2,296

இயக்கக் குறைபாடு

1,888

1,430

3,318

மனவளர்ச்சியின்மை

2,111

1,351

3,462

பல்வகைக் குறைபாடு

177

203

380

மன இறுக்கம்

22

16

38

பெருமூளை வாதம்

189

147

336

பேச்சுக் குறைபாடு

509

276

785

மொத்தம்

7,925

6,544

14,469

சதவீதம்

54.77

45.23

 

கல்வி இணைச்செயல்பாடுகள்

மாநில மற்றும் தேசிய அளவில் போட்டிகள்

குடியரசு தின மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வோராண்டும் பள்ளிக் கல்வித் துறையில் 26விளையாட்டு பிரிவுகளில் 11 முதல்17 வயதிற்குட்பட்ட 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணாக்கர்களுக்காக நடத்தப்பட்டு வருகின்றன. தேசியப் பள்ளி விளையாட்டுக் கூட்டமைப்பின்கீழ், ஒவ்வோராண்டும் தேசிய அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான போட்டிகளில் 77 தங்கம், 58 வெள்ளி மற்றும் 69 வெண்கலப் பதக்கங்களுடன் தமிழகம் தரவரிசையில் 6ஆம் இடம் பெற்றுள்ளது. வெவ்வேறு நிலைகளில் போட்டிகளை நடத்திட ஒவ்வோராண்டும் தொடரும் செலவினமாக அரசு ரூ.10 கோடி நிதி ஒப்பளிப்பு செய்கிறது.

சதுரங்க விளையாட்டு

இந்தியாவில் சதுரங்க விளையாட்டினை மாணாக்கர்களிடையே ஊக்கப்படுத்தி, வளர்ப்பதில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. சதுரங்க விளையாட்டில் மாணாக்கர்களின் திறனை மேம்படுத்துவதற்காக சதுரங்க விளையாட்டு அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. பள்ளி அளவில் 7 முதல் 17 வயதுவரை உள்ள மாணாக்கர்களுக்குச் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2017-18 ஆம் ஆண்டில் நடைபெற்ற மாநில அளவிலான சதுரங்கப் போட்டிகளில் 24 மாணாக்கர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். 2017-18 ஆம் ஆண்டில், பல்வேறு நிலைகளில் இப்போட்டிகளை நடத்த ஏதுவாகத் தொடர் செலவினமாக ரூ.22 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

யோகா

யோகா என்பது மனம், உடல் மற்றும் ஆன்மா ஆகியவற்றின் சங்கமமாகத் திகழ்வதோடு குழந்தைகளின் கற்றல் வெளிபாடுகளில் முன்னேற்றம் காண வழிவகுக்கிறது. யோகா பள்ளிகளின் அன்றாடச் செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது. 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் யோகா பயிற்சிகள் பள்ளிகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

நாட்டு நலப்பணித்திட்டம்

சுகாதார முகாம்கள், இரத்ததான முகாம்கள் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகள் முதலிய சமூக சேவைத் திட்டங்களில் தன்னார்வ நோக்கோடு பணியாற்ற மாணாக்கர்களை ஊக்குவிப்பதன்மூலம் மாணாக்கர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு வித்திடுவதனை நாட்டு நலப்பணித் திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இயங்கும் 1,953 நாட்டு நலப்பணி திட்ட அலகுகளில், 97,650 மாணவ மாணவியர் தன்னார்வ நோக்கோடு செயலாற்றி வருகின்றனர். ஒவ்வோராண்டும் இந்தத் திட்டத்தின் தொடர் செயல்பாடுகளுக்கென ரூ.244 இலட்சமும், சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கு ரூ.219 இலட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில், வட்டார அளவில் 1,953 அதிகாரிகளுக்கு புத்தாக்கப் பயிற்சி ஒரு நாள் முகாம் நடத்தப்பட்டது.

சாரண சாரணியர் இயக்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் சாரண சாரணியர் இயக்கம் செயல்பட்டு வருகின்றது. சாரணர் பணிகளாக முக்கியமான இடங்கள் மற்றும் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் ஆகியவற்றைச் சுத்தம் செய்தல், மரங்களை நடுதல், பொது சுகாதாரம் மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வைப் பொதுமக்களிடம் ஏற்படுத்துதல், அவ்வப்போது ஏற்படும் போக்குவரத்து நெரிசலை நெறிப்படுத்துதல் மற்றும் முதலுதவிக்கான பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் முக்கிய செயல்பாடுகள் ஆகும். தமிழ்நாடு சாரண சாரணியர் இயக்கத்தின் மாநில மற்றும் மாவட்டத் தலைமை அலுவலகங்களைப் பேணுவதற்காகவும் ஊழியர்களின் ஊதியத்திற்காகவும் ஒவ்வோராண்டும் தொடர் செலவினமாக ரூ.7 இலட்சம் ஒதுக்கப்படுகிறது. சிறந்த சாரண சாரணியர்களுக்கு "இராஜ்ய புரஷ்கார் விருது” மாண்புமிகு தமிழக ஆளுநரால் ஒவ்வோராண்டும் ரூ.5 இலட்சம் செலவில் வழங்கப்படுகின்றது.

இளம் செஞ்சிலுவைச் சங்கம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 3,19,850 மாணாக்கர்களுடன் கூடிய 6,397 இளம் செஞ்சிலுவைச் சங்க அலகுகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்ட ஆட்சியர் இளம் செஞ்சிலுவைச் சங்கத்தின் காப்பாளர் ஆவார். இம்மன்றச் செயல்பாடுகளில், ஆசிரியர்கள் உளவியல் ஆலோசகர்களாகவும், முழு ஈடுபாடுள்ள மாணாக்கர்கள் தன்னார்வலர்களாகவும் செயல்பட ஊக்கமளிக்கப்படுகிறது. குழந்தைகளிடம் மனித நேய மதிப்பீடுகளைத் தூண்டுவதோடு மட்டுமல்லாது, திறனை மெருகேற்றவும் இளம் செஞ்சிலுவைச் சங்கம் செயல்பட்டு வருகின்றது.

கலைத் திருவிழா

மாநிலத்தில் உள்ள தொன்மை வாய்ந்த பல்வேறு கலைகளை அழிவிலிருந்து பாதுகாத்து, அவற்றை உயிர்ப்பிக்கும் விதமாகத் தமிழக அரசானது கலைத் திருவிழாவினைத் தமிழகத்தில் உள்ள அனைத்துவகை அரசுப் பள்ளிகளிலும் நடத்துகிறது. மாணாக்கர்கள், தங்கள் உள்ளார்ந்த திறமைகளையும் மற்றும் தனித்துவமான கலைத் திறன்களையும் வளர்க்க இந்நிகழ்வு உதவுகின்றது. 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணாக்கர்களுக்காகத் தொடக்க, உயர்தொடக்க, இடைநிலை மற்றும் மேல்நிலைப் பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. பள்ளி, ஒன்றிய, கல்வி மாவட்ட மற்றும் வருவாய் மாவட்ட அளவில் கலைத் திருவிழாப் போட்டிகள் ரூ.4 கோடி செலவில் நடத்தப்பட்டுள்ளன. 2018 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான போட்டிகள் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்விற்குப்பின்னர் நடத்தப்படும்.

சுற்றுச்சூழல் மன்றம்

பள்ளி மாணாக்கர்களிடையே சுற்றுப்புறத் தூய்மை சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே "சுற்றுச்சூழல் மன்றத்தின்” முக்கிய நோக்கமாகும். தமிழகத்தில், 11,460 அரசுப் பள்ளிகளில் இம்மன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மன்றங்களைப் பேணுவதற்காக ஒவ்வோராண்டும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் வாயிலாக மன்றம் ஒன்றுக்கு ரூ.5,000 வழங்கப்படுகிறது. மரம் நடுதல், தோட்டப் பராமரிப்பு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான செயல்பாடுகளை இம்மன்றங்கள் மேற்கொள்கின்றன.

வழிகாட்டல் மற்றும் ஆலோசனை

மாணாக்கர்களுக்கான நடமாடும் ஆலோசனை மையங்கள்

வளரிளம் பருவத்தில் மாணாக்கர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களைத் திறம்படக் கையாள வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் இன்றியமையாத் தேவையாகும். பள்ளியில் பயிலும் வளரிளம் பருவ மாணவ, மாணவியரின் தவிர்க்க இயலா உளவியல் தேவையினை மனத்திற்கொண்டு, மாநிலத்தின் 32 மாவட்டங்கள் 17 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, இங்குள்ள பள்ளி மாணாக்கர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்க முழுமையான, நவீன வசதிகளைக்கொண்ட 17 ஊர்திகளில் நடமாடும் ஆலோசனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவ்வூர்திகளில் புதிய தொழில்நுட்பக் கருவிகளான தொலைக்காட்சி மற்றும் தொழில்நுட்பக் கருவிகள் அமைக்கப்பட்டுள்ளன. 2017-18 ஆம் கல்வியாண்டில் மாநிலத்தில் உள்ள ஏறத்தாழ 1,240 பள்ளிகளில் பயிலும் 216592 மாணாக்கர்கள் இம்மையங்கள் வழி உளவியல் ஆலோசனைப் பெற்றுப் பயனடைந்துள்ளார்கள்.

பிரிவு

ஆண்

பெண்

மொத்தம்

குழு ஆலோசனை

99160

105696

204856

தனிநபர் ஆலோசனை

5672

6064

11736

மொத்தம்

104832

111760

216592

கட்டணமில்லா உதவி எண் - 14417

14417 என்ற 24x7 கட்டணமில்லா ஆலோசனை உதவி எண்ணானது 01.03.2018 அன்று நடைமுறைப் படுத்தப்பட்டது. இது அரசின் ஒரு முன்னோடி முயற்சியாகும். இத்திட்டத்தின் வாயிலாகத் மாணவர், ஆசிரியர் மற்றும் பெற்றோர், குறிப்பாக, கிராமப்புற மற்றும் பழங்குடி மக்கள் வாழ்பகுதி பள்ளி மாணாக்கர்களுக்கான, நலத்திட்டங்களைப் பற்றிய பயனுள்ள தகவல்கள், பாடத்திட்டம் மற்றும் தேர்வு குறித்த தெளிவு, வளரிளம் பருவ மாணாக்கர்களுக்கான உளவியல் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்புத் தகவல்களை எளிதில் பெற இயலும். 2017-18 ஆம் ஆண்டில், இத்திட்ட நடைமுறைப்படுத்துதலுக்கு ரூ.1,98 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

பிற திட்டங்கள்

பெற்றோர் ஆசிரியர் கழகம்

பெற்றோர் ஆசிரியர் கழகமானது பள்ளிகளுக்கும், சார்ந்த சமூகத்திற்கும் இடையேயான ஓர் உறவுப் பாலமாக அமைகிறது. பள்ளி நிருவாகம் திறம்படச் செயல்படத் தேவையான வளங்களை ஒருங்கிணைப்பதற்குப் பெற்றோர் ஆசிரியர் கழகமானது உதவுகிறது. மேலும், இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வெளிவரும், பெற்றோர் ஆசிரியர் கழகச் செய்தி இதழில், மாணாக்கர்களின் தனித்திறன்களுக்கு இடமளிக்கப்படுகிறது.

உயர்கல்விக் கடன் முகாம்கள்

"மேல்நிலைப் பள்ளி வரை கட்டணமில்லாக் கல்வி” என்பது அரசின் முன்னோடி சாதனைத் திட்டமாகும். இருப்பினும், பொருளாதார நிலைகளில் பின்தங்கியுள்ள மாணாக்கர்கள், உயர்கல்வியைத் தொடர்வது சாத்தியமற்றதாகிறது. எனவே, இவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்கும் நோக்கில், வங்கிக்கடன் முகாம்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்களிப்போடு, மாவட்ட அளவில் நடத்தப்பட்டன. மேலும், 2018-19 ஆம் ஆண்டில் ஒன்றிய அளவில் முகாம்கள் நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்படி, தகுதிவாய்ந்த மாணாக்கர்கள், தங்கள் உயர்கல்வியினைத் தொடர், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நிறுவியுள்ள சிறப்பு இணையத்தளம், www.vidyalakshmi.co .இந்த மூலம் விண்ணப்பிக்க இயலும். மாவட்ட ஆட்சியரின் தலைமையில், ஊரக வளச்சி மேம்பாட்டு முகமைத் திட்ட அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர், முன்னோடி வங்கி மேலாளர், பொறியியல் கல்லூரி முதல்வர்கள், மருத்துவ மட்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்கள் அடங்கிய குழுவினரின் வாயிலாகத் தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களுக்குக் கடன் தொகை விரைவாக அளிக்கப்படுகிறது. மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுத் தகுதியான மாணாக்கர்களுக்கு வங்கிக்கடனுதவி உடனே கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறையினைக் கைவிடல்

அரசு பொதுத் தேர்வுகளில் வழங்கப்பட்டு வந்த தரவரிசை முறை மாணாக்கர்களிடையே மனச்சுமையை ஏற்படுத்தி வந்தது. மாநில, மாவட்ட அளவிலான தரங்களை எப்படியாவது பெற வேண்டும் என்று மனஅழுத்தத்திற்கு ஆளானார்கள். மாணாக்கர்களிடம் காணப்படும் இம்மனச்சுமையை நன்கு அறிந்த அரசு 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகளில் இதுவரை பின்பற்றி வந்த தரவரிசை முறை 2017-18 ஆம் ஆண்டிலிருந்து முற்றிலுமாக கைவிடப்பட்டது. அரசின் இம்முடிவானது மாணாக்கர்கள் பெற்றோர்கள் கல்வியாளர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இம்முறையானது கல்வி நிறுவனங்களுக்கிடையே நிலவி வரும் ஆரோக்கியமற்ற போட்டியையும் முற்றிலும் தவிர்க்கும் வண்ணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

எளியூட்டுக் கருவிகள் மற்றும் அலமாரிகள்

பள்ளிகளில் பயிலும் வளரிளம் பருவ மாணவியர்களின் மாதவிடாய் சுகாதாரத்தினை உறுதி செய்தலில் அரசு தனிக்கவனம் செலுத்துகிறது. எனவே, மாணவியர் பயிலும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அப்புறப்படுத்த உதவியாக மின்மயமாக்கப்பட்ட ரியூட்டுக் கருவிகள் 3,334பெண்கள் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன. 2017-18 ஆம் ஆண்டில், இத்திட்டத்திற்கென ரூ.112.41 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. அவ்வாறே, மாணவியர்களுக்கு வழங்கப்படும் நாப்கின்களைப் பள்ளிகளில் பாதுகாப்பாகச் சேமிப்பதற்குத் தேவையான அலமாரிகளை, பள்ளி அளவில் கொள்முதல் செய்ய ரூ.64.01 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்விரு பணிகளையும் மேற்கொள்ள ரூ.88கோடி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவன சமூக பொறுப்பாண்மை நிதி

தமிழகப் பள்ளிக் கல்வித்துறையில் ஒரு மாற்றம் காண, தமிழக அரசும், இந்திய தொழில்முனைவோர் கூட்டமைப்பும் கைகோர்த்துள்ளன. பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பின்கீழ் நிகழும் கல்விசார் திட்டங்களை ஒருங்கிணைத்து, ஊக்குவிக்கும் நோக்கோடு ஒரு கூட்டுப் பணிக்குழுவானது நிறுவப்பட்டுள்ளது. இக்கூட்டுப் பணிக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகள் வரையறுக்கப்பட்டு வருகிறது. இதைப்போன்று பெருநிறுவனங்களின் சமூகப் பங்களிப்பின் வழி பல்வகையான, கல்வி நலன் சார் திட்டங்களைத் தமிழகப் பள்ளிக் கல்வித்துறை முன்னெடுத்து செய்து வருகிறது.

ஊடகத்தின் வாயிலாக மாணாக்கர்களுக்கான தேர்வுசார்ந்த ஆலோசனைகள்

தமிழக அரசு, THE LEDE என்ற நிறுவனத்துடன் இணைந்து போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களுக்குத் தேர்வு குறித்து எழும் மனஅழுத்தம், கவலை, பயம் மற்றும் குழப்பங்கள் ஆகியவற்றை நீக்க விழிப்புணர்வுப் பரப்புரைக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பரப்புரை மாணாக்கர்களின் மன அழுத்தம், கவலை, பயம் மற்றும் உளவியல் மனச்சோர்வு ஆகியவற்றை முற்றிலுமாகப் போக்க உதவும். இதற்கென மனநல ஆலோசகர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள் தயார் நிலையிலும் உள்ளார்கள். மாணாக்கர்களுக்கு மேலும் உதவும் வகையில் ஒரு தனிப்பட்ட புலனம் (whatsapp) எண், ஒரு முகநூல் (face book), ஒரு கீச்சகக் கணக்கு (Twitter) மற்றும் ஒரு மின்னஞ்சல் வலை தள முகவரி (e-mail id address) ஆகியவை தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகளின் (TANII) கீழ், கீழ்க்காண் திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன:

கழிவு - உயிர் சிதைத்துருவாக்கி (EODGST கழிப்பறைகள் சிதைவுறா மனித கழிவுப்பொருள்களை அகற்றல் குறித்த சிக்கலுக்குரிய தீர்வாக, மனிதக் கழிவுகளைப் பயன்படுத்தக் கூடிய நீர் மற்றும் வாயுவாக மாற்ற வழிவகை செய்யும், நவீன சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு ஏற்ற கழிவு உயிர் சிதைத்துருவாக்கி (BIO-DIGEST) கழிப்பறைகள் ரூ.55.06 இலட்சம் செலவில் மாநிலத்தில் உள்ள 44 மாதிரிப் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன. ஒவ்வோராண்டும் இந்த 44 கழிப்பறை அலகுகளின் ஒவ்வொன்றுக்கும் ஆண்டுப் பராமரிப்புச் செலவிற்கென ரூ.7,000 ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

மின்சாம்பல் ஆக்கிகள்

பதின்மவயது மாணவியருக்கு வழங்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை மின்சாம்பலாக்கி மூலம் ளித்து, ஆரோக்கியமான சூழலை உறுதி செய்வதற்காக மின்சாம்பலாக்கிகள் 100 தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பெண்கள் பள்ளிகளில் நிறுவப்பட்டுள்ளன. சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழலை மாணவியருக்கு உறுதி செய்து நடைமுறைப்படுத்த ரூ.46.60 இலட்சம் செலவில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புதிய கல்வி மாவட்டம்

திறமையான நிர்வாகத்திற்கென ஏற்கனவே உள்ள தருமபுரி கல்வி மாவாட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு அரூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அரூர் கல்வி மாவட்டத்தில் 117 அரசுப் பள்ளிகளும் எஞ்சிய 170 அரசுப் பள்ளிகள் தருமபுரி கல்வி மாவட்டத்தில் செயல்பட்டுவருகின்றன.

நிர்வாக அமைப்பினை மறுசீரமைப்பு செய்தல்

பள்ளிகளில் முறையான ஆய்வு மற்றும் கண்காணிப்பினை திறம்பட செய்திட, கள் அளவிலான நிர்வாக அமைப்பிற்கு அதிகாரம் பகிர்ந்தளிப்பு செய்து மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான மறுசீரமைப்பில், வருவாய் மாவட்டங்களில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளையும் முதன்மை கல்வி அலுவலர்கள் நிர்வகிப்பார்கள்; கல்வி மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளின் விவகாரங்களையும் மாவட்ட கல்வி அலுவலர்கள் நிர்வாகம் செய்வார்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் கண்காணித்து முறைப்படுத்துவார்கள். இவ்வகையில் மூன்றடுக்கு நிர்வாக அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நிர்வாகம்

பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கி வரும் 58,474 பள்ளிகளில் 1.23 கோடி மாணாக்கர்கள் கல்வி பயில்கின்றனர், 5.74 இலட்சம் ஆசிரியர்கள் கல்வி பணியில் ஈடுபட்டுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையின் கீழ் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் மாவட்ட அளவில் 32 முதன்மைக் கல்வி அலுவலர்களையும், 120 மாவட்ட கல்வி அலுவலர்களையும் மற்றும் 836 வட்டாரக் கல்வி அலுவலர்களையும் கொண்டு சீரியமுறையில் நிர்வகிக்கப்படுகின்றன.

நிதி ஒதுக்கீடு

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்விக்கென 2018-19 ஆம் ஆண்டிற்கு ரூ13,164,33 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

2.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top