பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

உயர் கல்வித் துறை பாகம் - 1

உயர் கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு (2017 - 2018) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

இளைஞர்களுக்கு தரமான கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தி இந்தியாவிலுள்ள முன்னேறிய மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு திகழ்கிறது. தேசிய மொத்த மாணவர் சேர்க்கை விகிதமான 24.5 சதவிகிதத்தை விட அதிகமாக தமிழக மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) 44.3 சதவிகிதமாக உள்ளது. மனித வளர்ச்சி குறியீட்டினை உயர்த்தவும், மாநிலத்திலுள்ள அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் குறிப்பிடத்தக்க அளவில் புதிய உயர்கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தொலைநோக்கு திட்டம் 2023 வழிவகை செய்கிறது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி (Inclusive) சம வாய்ப்பளிக்க (Access) உயர்கல்வித்துறை விழைகிறது.

இதனைச் செயலாக்க, 21 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், 16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 4 அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் 24 பல்கலைக்கழக உறுப்புக் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கடந்த 6 ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தேசிய உயர்கல்வி நிறுவனங்களின் பல்கலைக்கழக தரவரிசை 2017-இல், உயர்நிலையில் உள்ள 100 பல்கலைக்கழகங்களில் இத்துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள எட்டு மாநில பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. இப்பல்கலைக் கழகங்கள் தரத்தில் மேம்பட்டிருப்பதுடன், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட ஐந்து அம்ச வரையறைகளான

(a) கற்பித்தல், கற்றல் சார்ந்த வளங்கள் (teaching, learning and resources),

(b) ஆராய்ச்சி மற்றும் தொழில்சார் பயிற்சி (research and professional practice),

(C) பட்டமளிப்பின் விளைவுகள் (graduation outcomes),

(d) எல்லை உள்ளடக்கல் தன்மை (outreach and inclusivity) மற்றும்

(e) வெளியுலகத்தின் கருத்து (கல்வி நிறுவனத்தைப் பற்றிய) (perception)

ஆகியவற்றினை எட்டியுள்ளன. மேலும், அவ்வமைச்சகத்தின் கல்லூரிகளுக்கான NIRF தரவரிசை 2017ல், உயர்நிலையில் உள்ள 100 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 37 கல்லூரிகள் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

உயர்கல்வித் துறையில் பின்வரும் துறைகள் /நிறுவனங்கள் உள்ளன:

* தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

* கல்லூரிக் கல்வி இயக்ககம்

* தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சித்துறை

* தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம்

* தேசிய உயர்கல்வித் திட்டத்திற்கான (RUSA) மாநில இயக்குநரகம்

* அறிவியல் நகரம்

* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

* தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்

* தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம்

* தமிழ்நாடு மாநில உருது கழகம்.

மேலும், பின்வரும் கல்வி நிலையங்கள் உயர்கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன:

மாநில பல்கலைக்கழகங்கள் –

10 கலை மற்றும் அறிவியல்,

1 தொழில்நுட்பம்,

1 ஆசிரியர் கல்வியியல்,

1 திறந்தநிலை

13

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - கீழ்திசைக் கல்லூரிகள், சமூகப் பணிக் கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள், உறுப்புக் கல்லூரிகள் உள்பட

772

கல்வியியல் கல்லூரிகள்

734

பொறியியல் கல்லூரிகள்

584

பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்

518


உயர்கல்வி பயில விரும்பும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டணச் சலுகை, பொறியியல் கல்லூரிகளில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான கல்விச் சலுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உயர்கல்வித் துறை செயல்படுத்தி வருகிறது. இச்சலுகைகள் பொருளாதாரத் தடைகளை நீக்கி, உயர்கல்வி பயில வாய்ப்பு நல்குவதுடன், மாணவர் சேர்க்கை விகிதத்தில் நிலையான முன்னேற்றத்திற்கு ஏதுவாக உள்ளன.

உயர்கல்வித் துறை மேற்கொண்டுள்ள பின்வரும் நடவடிக்கைகள் உயர்கல்வித் தரம் மேம்பட வித்திடுகின்றன:

* கல்விசார் பாடத்திட்ட மேம்பாட்டு பிரிவுகள் தோற்றுவித்தல்

* காணொலி காட்சி வசதியுடன் கூடிய திறன் வகுப்பறைகளை ஏற்படுத்துதல் (smart classrooms)

* அயல்மொழி சோதனைக் கூடங்களை ஏற்படுத்துதல்

* தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தின் மூலம் கற்பித்தல் / கற்றலை மேம்படுத்துதல்

* மென்திறன் மையங்களை உருவாக்குதல்

* காப்புரிமை (Patent) பதிவு செய்ய அறிவுசார்

* சொத்துரிமைப் பிரிவு (IPR Cells) நிறுவுதல்

* ஆராய்ச்சி திறன் மேம்படுத்துதல்

* கருத்துத் திருட்டினைத் தடுத்தல்

* வெளிநாட்டு கூட்டிணைவுகளின் மூலம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியை ஊக்குவித்தல்

* வளர்ந்துவரும் நவீனத் துறைகளில் தனிச்சிறப்பு மையங்கள் நிறுவுதல்

* கல்வி நிறுவனங்கள் தொழில்துறையுடன் ஒருங்கிணைந்து செயல்பட வழிவகுத்தல்

* மாநிலத்திலுள்ள உயர்கல்வி வளங்களை எண்ணியலாக்குதல்.

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் நினைவாக அறிவியல், மானுடவியல் வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் அல்லது மாணாக்கர்களின் நலனுக்காக பாடுபட்டவர்களுக்கு உயர்கல்வித் துறை 2015 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் விருதினை வழங்கி வருகிறது. இவ்விருது, சான்றிதழ், ரொக்கப்பரிசு ரூ. 5 இலட்சம் மற்றும் 8 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம் கொண்டதாகும்.

உயர்கல்வித் துறை, பல செறிவான செயல்திறன் நுட்பங்களால், வளர்ச்சிப் பாதையில் செம்மையுற்று, உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்படத் தூண்டும் வகையில், அயராது செயல்பட விழைகிறது.

நிதி ஒதுக்கீடு 2017 - 18

மானியக் கோரிக்கை எண்.20, உயர்கல்வித் துறை என்ற தலைப்பின் கீழ் ரூ. 3680.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வ.

எண்

துறை தலைமையின் பெயர்

வரவு செலவு ஒதுக்கீடு ரூபாய் (கோடியில்)

1.

உயர்கல்வித்துறை, தலைமைச் செயலகம்

4.71

2.

கல்லூரிக் கல்வி இயக்ககம்

2125.79

3.

தொழில்நுட்பக் கல்வி இயக்ககம்

1115.80

4.

பல்கலைக்கழகங்கள்

321.78

5.

ஆவணக் காப்பகம் மற்றும் வரலாற்று ஆராய்ச்சி ஆணையரகம்

10.05

6.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம்

1.95

7.

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம்

4.55

8.

அறிவியல் நகரம், சென்னை

1.24

9.

தமிழ்நாடு மாநில உயர் கல்வி மன்றம்

94.34

10.

தமிழ்நாடு மாநில தொழில்நுட்பக் கல்வி மன்றம்

0.18

மொத்தம்

3680.39

தொழில்நுட்பக் கல்வி

21 தமிழ்நாடு மாநிலம் தோற்றுவிக்கப்பட்ட பிறகு, தொழில்நுட்பக் கல்வி பயிலகங்களை நிறுவுதல் மற்றும் கண்காணித்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, 1957 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உருவாக்கப்பட்டது. இவ்வியக்ககம், புதிய பாடப்பிரிவுகளை உருவாக்குவதற்கும், பாடத்திட்டங்களை வகுக்கவும், தொழில்நுட்பக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்கான பணிகளை செய்வதிலும் முக்கிய பொறுப்பு வகிக்கிறது. தமிழக அரசு, தொழில்நுட்பக் கல்வியில் பொறியியல் பட்டம் மற்றும் பட்டய நிலையில் தொழில்நுட்பக் கல்வியை மேம்பாடு அடைய செய்வதற்கான புதிய கொள்கைகளை வகுத்து வருகிறது. கீழ்க்கண்ட விவரப்படி, தற்போது தமிழ்நாட்டில் 584 பொறியியல் கல்லூரிகளும், 518 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன:

சாதனைகள் மற்றும் முயற்சிகள் (2011 - 12 முதல் 2016 - 17 வரை)

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், (IIT), ஸ்ரீரங்கம்

இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் திருச்சிராப்பள்ளியில், பொது மற்றும் தனியார் கூட்டமைப்பு திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மாநில அரசு மற்றும் தொழில் நிறுவன பங்குதாரர்களுடன், ரூ. 128 கோடி மதிப்பீட்டில் இலாப நோக்கமற்ற பொது நிறுவனமாக துவங்கப்பட்டுள்ளது. இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் 12-2-2014 அன்று துவக்கி வைக்கப்பட்டது.

4 அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்குதல்

2012 - 13 மற்றும் 2013 - 14ஆம் ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. இக்கல்லூரிகளுக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 244.60 கோடியும் மற்றும் தொடராச் செலவினங்களுக்கு ரூ. 26.91 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 4 அரசு பொறியியற் கல்லூரிகளுக்கும் 776 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்குதல்

2013 - 14ஆம் ஆண்டில் 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 282.48 கோடி மற்றும் தொடராச் செலவினங்களுக்கு ரூ. 52.08 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் 1,245 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

மேலும், 2016 - 17 ஆம் ஆண்டில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் (சென்னை மாவட்டம்), கடத்தூர் (தருமபுரி மாவட்டம்), வலங்கைமான் (திருவாரூர் மாவட்டம்), ரெகுநாதபுரம் (தஞ்சாவூர் மாவட்டம்) மற்றும் கெலமங்கலம் (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகிய இடங்களில் 5 புதிய அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன.

மேற்கண்ட 5 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கும் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ. 128.30 கோடி மற்றும் முதலாம் கல்வியாண்டு 2016 - 17-க்கு தேவையான உபகரணங்கள், கணினிகள், அறைகலன்கள், நூலக புத்தகங்கள் மற்றும் மின்னிதழ்கள் கொள்முதல் செய்வதற்கு தொடராச் செலவினமாக ரூ. 2.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 5 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு புதிதாக 305 ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.

இதன்மூலம், குறுகிய 6 ஆண்டு காலத்தில், தமிழகத்தில் அரசினர் பொறியியற் கல்லூரிகளின் எண்ணிக்கை 6 லிருந்து 10 ஆகவும், அரசினர் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் எண்ணிக்கை 30 லிருந்து 46 ஆகவும் உயர்ந்துள்ளது.

இலவச பாடப் புத்தகங்கள் வழங்குதல்:

மாணாக்கர்கள் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்து பயில்வதை ஊக்கப்படுத்தும் விதமாக, அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் அனைத்து முதலாமாண்டு மாணாக்கர்களுக்கும் பாடநூல்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஆங்கிலம், பொறியியல் இயற்பியல், பொறியியல் வேதியியல் மற்றும் பொறியியல் கணிதம் ஆகிய பாடங்களுக்கு தேவையான பாடநூல்கள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. 2012 -13 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை ரூ. 68.06 இலட்சம் செலவில் 52,649 மாணாக்கர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்களுக்கு நிதியுதவி அளித்தல்

பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணாக்கர்கள் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளை தொடர்ந்து பயில்வதற்கு ஏதுவாக, மாணாக்கர் ஒருவருக்கு ரூ. 25,000 வீதம் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது. 2012 - 13 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை 73 மாணாக்கர்களுக்கு ரூ. 18,25,000 முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது.

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு (Tuition Fee Waiver) மற்றும் பேருந்து கட்டணச் சலுகை வழங்குதல்

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு கல்வி கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு மற்றும் கட்டணமில்லா பேருந்து பயணச்சலுகை

ஆகியவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை 2,41,635 மாணாக்கர்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்றுள்ளனர்.

விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் கணினி அறிவுத் திறனை மேம்படுத்தவும் மற்றும் மாணாக்கர்களுக்கிடையேயான எண்ணியல் ஏற்ற இறக்க இடைவெளியை குறைக்கும் பொருட்டும், விலையில்லா மடிக்கணினி திட்டம் தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பொறியியல் / பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் 1,84,519 மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் தொழில்நுட்பக் கல்வித் துறையின் மூலம் வழங்கப்பட்டுள்ளன. 2016 - 17 ஆம் ஆண்டில் மட்டும் 11,348 விலையில்லா மடிக்கணினிகள் பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஒற்றைச் சாளர முறையில் பொறியியல் கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கை

பன்னிரெண்டாம் வகுப்பு வாரியத் தேர்வில், மாணாக்கர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில், பொறியியல் கல்லூரிகளில் இளநிலை பொறியியல் பட்ட வகுப்புகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மூலம் ஒற்றைச் சாளர் முறையில் மாணாக்கர் சேர்க்கை இடங்கள் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பின்வருமாறு வழங்கப்பட்டு வருகின்றது :-

வ.எண்

பிரிவு

சதவிகிதம்

1

அரசு பொறியியல் கல்லூரிகள்

100

2

அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள்

அரசு உதவி பெறும் பாடப்பிரிவு

100

சுயநிதி பாடப் பிரிவு

70

3

சுயநிதி பொறியியல் கல்லூரிகள்

சிறுபான்மை அல்லாத பிரிவு

65

சிறுபான்மை பிரிவு

50

ஒற்றை சாளர முறையில் மாணாக்கர் சேர்க்கைக்கான இணையவழியான (On-line) பதிவு 2016 - 17 ஆம் ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டுத் திட்டம் நிலை - II (TEQIP - Phase II)

தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டுத் திட்டம் - II (TEQIP-II), மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் மாநில அரசு ஆகியவைகளால் இணைந்து செயல்படுத்தப்படும் திட்டமாகும். இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ. 142.10 கோடி ஆகும். இத்திட்டம் 31-3-2017 ஆம் நாளுடன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு, மத்திய, மாநில அரசுகளின் பங்கீட்டுத் தொகை முறையே 75% மற்றும் 25% என 2014 - 15ஆம் ஆண்டு வரை இருந்து வந்தது. 2015 - 16 ஆம் ஆண்டிலிருந்து பங்கீட்டுத் தொகை சமமாக வழங்கப்பட்டுவந்தது.

தமிழ்நாட்டில், 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு நிதி உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், திருச்சிராப்பள்ளியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் கணினிப் பொறியியல் துறை ஆகியவை இத்திட்டத்தில் பங்குபெற்றன. தொழில்நுட்பக் கல்வி தர மேம்பாட்டு திட்டம் - II (TEQIP-II) இல் பங்கு பெற்ற 23 மாநிலங்களில், தமிழகம் சிறப்பாகச் செயல்பட்டதை முன்னிட்டு ரூ. 40 கோடி கூடுதலாக ஒப்பளிப்பு செய்யப்பட்டது (மத்திய அரசின் பங்கு ரூ. 20 கோடி மற்றும் மாநில அரசின் பங்கு ரூ. 20 கோடி).

இத்திட்டத்தின் மூலம் அடைந்த சில முக்கிய சாதனைகள் பின்வருமாறு:

* ஆய்வகங்கள், நூலகங்கள் மற்றும் பட்டறைகள் நவீனமயமாக்கல்

* 3,786 முதுநிலை மாணாக்கர்களுக்கு நிதியுதவி

* 417 முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணாக்கர்களுக்கு நிதியுதவி

* 5,761 ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் 143 புத்தகங்கள் பதிப்பு

* 56 காப்புரிமை தாக்கல்

• 17 காப்புரிமைகள் பெறப்பட்டது

*பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவால் 7 கல்லூரிகளுக்கு தன்னாட்சி நிலை வழங்கப்பட்டது.

*தேசிய தர மதிப்பீட்டு அங்கீகார வாரியத்தால் 50 பாடப்பிரிவுகளுக்கு தர அங்கீகாரம் வழங்கப்பட்டது.

*ஆசிரியர்களுக்கு 1,165 உள் வளாக பயிற்சிகள் நடத்தப்பட்டன.

*ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 90 உள் வளாக பயிற்சிகள் நடத்தப்பட்டன.

இந்தியா முழுவதிலும் உள்ள IITs, NITS, NITTTR, IIMs பயிலகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களில் நடைபெற்ற 4,230 பயிற்சிகளில் 1,743 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுள்ளனர்.

போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும்திட்டம்

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து, ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், சுயநிதி கல்வி நிறுவனங்களில் (சிறுபான்மை பயிலகங்கள் உட்பட) அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற்ற மேற்குறிப்பிட்ட மாணாக்கர்களுக்கு, கட்டண நிர்ணயக் குழுவால் நிர்ணயம் செய்யப்பட்ட கட்டாய மற்றும் திருப்பியளிக்க இயலாத கட்டணங்கள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் கல்லூரிகள்

இத்திட்டத்தின் கீழ் 2013 - 14, 2014 - 15 மற்றும் 2015 - 16 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ. 435.07 கோடி, ரூ. 580.42 கோடி மற்றும் ரூ. 739.06 கோடி கல்விக் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மேற்கண்ட ஆண்டுகளில் முறையே 80,715, 97,668 மற்றும் 1,14,859 பொறியியல் கல்லூரி மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள்

இத்திட்டத்தின் கீழ் 2013 - 14, 2014 - 15 மற்றும் 2015 - 16 ஆம் ஆண்டுகளில் முறையே ரூ. 66.95 கோடி, ரூ. 80.10 கோடி மற்றும் ரூ. 134.32 கோடி கல்விக் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், மேற்கண்ட ஆண்டுகளில் முறையே 44,555, 51,248 மற்றும் 60,600 பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரி மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச்சலுகை

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை பெற்ற முதல் தலைமுறை பட்டதாரி மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணச்சலுகை (Tuition Fee Concession) வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ், 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை, முறையே ரூ. 299.28 கோடி, ரூ. 478.06 கோடி, ரூ. 547.87 கோடி, ரூ. 541.11 கோடி, ரூ. 514.53 கோடி மற்றும் ரூ. 459.03 கோடி கல்விக்கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேற்கண்ட ஆண்டுகளில் முறையே 1,57,176, 2,49,563, 2,87,021, 2,83,379, 2,69,522 மற்றும் 2,42,112 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

இலங்கை தமிழ் அகதிகளின் குழந்தைகளுக்கு கல்விக் கட்டண சலுகை நீட்டிப்பு

2011 - 12 ஆம் ஆண்டு முதல், தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழ் அகதி மாணாக்கர்கள், பி.இ. / பி.டெக். முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை மற்றும் எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. / எம்.ஈ. / எம்.டெக். போன்ற முதுநிலை கல்வி பயில ஏதுவாக, ஒற்றைச் சாளர கலந்தாய்வில் கலந்து கொண்டு சேர்க்கை பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், ஒற்றைச் சாளர முறை கலந்தாய்வின் மூலம், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டண சலுகை, இலங்கை தமிழ் அகதி மாணாக்கர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தினால், 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை, 160 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

அரசு பொறியியல் / பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் நியமனம்

அரசு பொறியியல் கல்லூரிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 2016 - 17 ஆம் ஆண்டில், 187 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், 1,065 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை வழங்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மிகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை பணிநிரவல் செய்தல்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மிகை ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்களை இனம் காணுமாறு அரசு அறிவுறுத்தியது. அதற்கிணங்க, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் 337 மிகை ஆசிரியர் பணியாளர்கள் அரசு பொறியியல் மற்றும் பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும், 376 மிகை ஆசிரியரல்லா பணியிடங்கள் அரசு பொறியியல் / பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் பொதுப்பணித் துறை தொழில்நுட்ப வட்டம் | கோட்டங்களுக்கும் 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் (agreement basis) அரசாணையின்படி பணிநிரவல் செய்யப்பட்டனர்.

கல்லூரிக் கல்வித் துறை

கல்லூரிக் கல்வித் துறையை தனியாக நிர்வகிக்கும் பொருட்டு முன்னர் இருந்த பொதுக் கல்வி இயக்ககத்திலிருந்து 1965 ஆம் ஆண்டு கல்லூரிக் கல்வி இயக்ககம் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வியக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளின் விவரம் பின்வருமாறு:

கல்லூரிகளின் விவரம்

கல்லூரியின் வகை

அரசு கல்லூரிகள்

அரசு உதவி பெறும் கல்லூரிகள்

சுயநிதி கல்லூரிகள்

மொத்தம்

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்

83

139

496

718

உடற்பயிற்சிக் கல்லூரிகள்

0

3

8

11

கீழ்த் திசைக் கல்லூரிகள்

0

4

0

4

சமூகப் பணி கல்லூரிகள்

0

2

0

2

கல்வியியல் கல்லூரிகள்

7

14

713

734

பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்

37

0

0

37

மொத்தம்

127

162

1217

1506

புதிய அரசு கல்லூரிகள் தொடங்குதல்

அரசு, 2013 - 14 ஆம் கல்வியாண்டு முதல் 2015 - 16 ஆம் கல்வியாண்டு வரை புதியதாக 18 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்க அனுமதியளிக்கப்பட்டு கல்லூரிகள் நடைபெற்று வருகின்றன. காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் 2016 - 17 ஆம் கல்வியாண்டில் இரு புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. மேலும் ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் 2017 - 18 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்பட்டுள்ளது.

அரசு கலைக் கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள் தொடங்குதல்

அரசு கல்லூரிகளில் மாணாக்கர்கள் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்வதைக் கருத்தில் கொண்டு, 2011 - 12 ஆம் கல்வியாண்டு முதல் 2016 - 17ஆம் கல்வியாண்டு வரை 961 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கி அதற்கென 1934 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

புதிய பாடப்பிரிவுகளின் விவரங்கள்

வ. எண்

கல்வியாண்டு

பாடப் பிரிவுகள் எண்ணிக்கை

மொத்தக் கல்லூரிகள்

ஒப்பளிப்பு செய்யப்பட்ட பணியிடங்கள்

1

2011-12

101

34

143

2

2012-13

298

51

833

3

2013-14

397

51

822

4

2015-16

163

34

124

5

2016-17

2

1

12

மொத்தம்

961

171

1934

அரசு கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் காலிப்பணியிட நியமனம் /பணி நிரவல்

அரசு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உள்ள மிகை ஆசிரியர்களைக் கண்டறியும் பணியினை மேற்கொண்டது. ஜனவரி 2016 இல், 369 அண்ணாமலை பல்கலைக்கழக மிகை ஆசிரியர்களை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில், ஒப்பந்த அடிப்படையில், பணியமர்த்தியுள்ளது. மேலும், மே 2017 இல், 208 உதவி பேராசிரியர் பணியிடங்கள் அண்ணாமலை பல்கலைக்கழக மிகை ஆசிரியர்களைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளது. தற்போது, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள காலிப்பணியிடங்களில், 1,966 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அரசு கல்லூரிகளில் கெளரவ விரிவுரையாளர்கள்

அரசு கல்லூரிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகளை அதிகபட்சம் பயன்படுத்தும் விதத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தும் முறை ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2016 - 17 ஆம் கல்வியாண்டில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முறையான உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்பும் வரையில், சுழற்சி-I முறையில் 1,683 கெளரவ விரிவுரையாளர்கள் நியமனத்திற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சுழற்சி - II முறையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில், 1,661 கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யப்படுவதற்கு அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசு, கெளரவ விரிவுரையாளர்களுக்கான ஊதியத்தை பிப்ரவரி 2016 முதல் ரூ. 10,000 லிருந்து ரூ. 15,000 ஆக உயர்த்தியுள்ளது.

இலவசக் கல்வி

2016 - 17 ஆம் கல்வியாண்டில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், இளநிலையில் பயிலும் 4,63,063 மாணாக்கர்களும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், முதுநிலையில் பயிலும் 30,403 மாணாக்கர்களும் என மொத்தம் 4,93,466 மாணாக்கர்கள் கல்விக் கட்டண ரத்து திட்டத்தின் வாயிலாக பயனடைந்துள்ளனர்.

கல்லூரி மாணாக்கர்களுக்கான இலவச பேருந்து அட்டை

கல்லூரி மாணாக்கர்களுக்கான இலவச பேருந்து அட்டை வழங்கும் திட்டம் ஒவ்வொரு ஆண்டும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2011 - 12 ஆம் ஆண்டு முதல் 2016 - 17 ஆம் ஆண்டு வரை, அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயின்ற 8,51,542 மாணாக்கர்களுக்கு இலவச பேருந்து அட்டை வழங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 2016 - 17 ஆம் ஆண்டில் 1,88,256 மாணாக்கர்கள் பயன்பெற்றுள்ளனர்.

இலவச குடிமைப் பணி பயிற்சி

அகில இந்திய குடிமைப் பணித் தேர்வுகளில் தமிழகத்தைச் சார்ந்த மகளிர் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளனர். அகில இந்திய குடிமைப்பணித் தேர்வுகளை எழுதும் மாணவிகளை ஊக்குவிக்கவும் தகுதிப்படுத்தும் பொருட்டும், 2001 – 02 ஆம் ஆண்டு முதல், சென்னை மாவட்டம், இராணிமேரி கல்லூரி மற்றும் மதுரை மாவட்டம், அருள்மிகு மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி ஆகியவற்றில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இத்திட்டத்திற்கென ஒவ்வொரு ஆண்டும் ரூ. 10 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இத்திட்டம் 2017 - 18 ஆம் ஆண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலை வாய்ப்பு முகாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணாக்கர்களின் நலனுக்காக வேலைப் பணி அமர்த்துதல் பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2015 - 16 ஆம் ஆண்டில் 4,758 மாணாக்கர்கள் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்தனர். 2016 - 17 ஆம் ஆண்டில், 6,633 மாணாக்கர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர்.

தமிழ் வழி பயிலும் மாணாக்கர்களுக்கு ஊக்கத் தொகை

தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணாக்கர்களை ஊக்கப்படுத்தும் பொருட்டு, 1971 - 72 ஆம் ஆண்டு முதல் படிப்பு உதவித் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது, இத்திட்டத்தின் மூலம் தமிழ் வழி பயிலும் மாணாக்கர் ஒவ்வொருவருக்கும் ரூ. 400 படிப்புதவித்தொகை வழங்கப்படுகிறது. 2016 - 17 ஆம் நிதியாண்டில் ரூ. 227.86 இலட்சம் அரசால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு மொத்தம் 56,965 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

அரசு கல்லூரிகளில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த மாணாக்கர்களில், குறிப்பாக ஊரகப்பகுதியில் உள்ள மாணாக்கர்கள், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை கற்பதற்கு துவக்கத்தில் சில சமயங்களில் சிரமங்களை சந்திக்கிறார்கள். அவர்களிடம் உள்ள அச்சத்தை போக்கி தன்னம்பிக்கையை உயர்த்தும் விதத்தில் அம்மாணாக்கர்களுக்கு, முறையான வகுப்புகள் முடிந்த பின்னர் மற்றும் விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகின்றது. இத்திட்டம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016 - 17 ஆம் ஆண்டில் 8,447 மாணாக்கர்கள் பயனடைந்துள்ளனர்.

ஆராய்ச்சி படிப்பு (பி.எச்டி.) பயிலும் மாணாக்கர்களுக்கான உதவித்தொகை திட்டம்

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளில், முழு நேர ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணாக்கர்களுக்கு ஆராய்ச்சி காலத்தில் ஒரு வருடத்திற்கு ரூ. 36,000 ஊக்கத் தொகையாக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2016 - 17 ஆம் ஆண்டில், 171 ஆராய்ச்சி மாணாக்கர்கள் புதிய மற்றும் புதுப்பித்தல்) தெரிவு செய்யப்பட்டு பயன்பெற்றுள்ளனர். இதற்கென அவர்களுக்கு ரூ. 61.56 இலட்சம் ஊக்கத்தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

அரசு கல்லூரிகளில், அடிப்படை வசதிகள், தளவாடங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல் / மேம்படுத்துதல்

62 அரசு கலை அறிவியல் கல்லூரிகள், 7 கல்வியியல் கல்லூரிகள் மற்றும் 24 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு தளவாடங்கள், உபகரணங்கள் வழங்குதல், அடிப்படை வசதிகள் செய்து தருதல் ஆகியவற்றிற்கு ரூ. 100 கோடி அரசால் வழங்கப்பட்டது. இதனால் மாணாக்கர்கள் உகந்த கல்விச் சூழலில் உயர்கல்வி பயில வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போஸ்ட் மெட்ரிக் படிப்புதவித் தொகை திட்டத்தின்கீழ் ஆதி திராவிடர்/ பழங்குடியினர் கிருத்துவ மதம் மாறிய ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டணம் திரும்ப வழங்கும் திட்டம்

அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணாக்கர்களுக்கு கல்விக் கட்டண தொகையை திரும்ப வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் படிக்கும் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மதம் மாறிய கிருத்துவ ஆதி திராவிடர் மாணாக்கர்கள் சார்பாக அரசால் கல்விக் கட்டணம் நேரடியாக கல்லூரிகளுக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணாக்கர்கள் எண்ணிக்கை மற்றும் ஒப்பளிப்பு செய்யப்பட்ட தொகை விவரம் பின்வருமாறு :

பயனடைந்த மாணாக்கர்களின் விவரம்

ஆண்டு

அரசு உதவி பெறும் கல்லூரிகள்

சுய நிதி கல்லூரிகள்

மாணாக்கர்கள் எண்ணிக்கை

தொகை

(ரூபாய்)

மாணாக்கர்கள் எண்ணிக்கை

தொகை (ரூபாய்)

2013-14

1,38,327

57,52,26,046

1,09,310

168,27,85,925

2014-15

1,45,026

59,33,99,916

1,06,246

175,97,64,007

2015-16

1,47,029

60,22,72,102

1,07,922

174,59,26,403

விளையாட்டு

தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விளையாட்டு என்பது கல்வியின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. மாணாக்கர்கள் விளையாட்டில் சிறப்பு நிலை பெற்று, தேசிய மற்றும் சர்வதேச அளவில் பரிசுகள் மற்றும் கேடயங்கள் வென்றுள்ளார்கள். அரசு / அரசு உதவி பெறும் / சுயநிதி கல்லூரி மாணவர்கள், வாள்சண்டை , கபடி, வாலிபால், தடை தாண்டுதல், தொடர் ஓட்டம், சதுரங்கம், ஹாக்கி, எடை தூக்குதல், பளு தூக்குதல், ஓட்டப்பந்தயம், நீச்சல் மற்றும் கைப்பந்து ஆகிய விளையாட்டுகளில் அகில இந்திய பல்கலைக்கழகங்கள், மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பு நிலையை அடைந்துள்ளனர்.

மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டடம் கட்டுதல்

திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்களுக்கு ரூ. 4.59 கோடி செலவில் சொந்த கட்டடம் கட்ட அரசால், நிதி ஒப்பளிப்பு வழங்கப்பட்டது. கட்டிடப்பணிகள் முடிக்கப்பட்டு, 05.08.2016 அன்று மாண்புமிகு முன்னாள் தமிழக முதலமைச்சர் அவர்களால் திறக்கப்பட்டன.

புதிதாக தொடங்கப்பட்ட அரசு கல்லூரிகளுக்கு சொந்த கட்டடம் கட்டுதல்

அரசு, 2013 - 14 ஆம் ஆண்டு முதல் 2017 - 18 ஆம் ஆண்டு வரை, 21 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தொடங்கியுள்ளது, இவைகளில், ஓசூர், குமாரபாளையம், காங்கேயம், உத்திரமேரூர், பேராவூரணி, சிவகாசி, காரிமங்கலம், கோவில்பட்டி, கறம்பக்குடி, வேப்பந்தட்டை மற்றும் மணல்மேடு ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சொந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

சென்னை, டாக்டர். இராதாகிருஷ்ணன் நகர் மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு சொந்த கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. கடலாடி, முதுகுளத்துார், திருவாடானை மற்றும் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான சொந்த கட்டடப் பணிகள் முடியும் நிலையில் உள்ளன. வீரபாண்டியில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு சொந்த கட்டடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாக்கம், மேட்டுப்பாளையம் மற்றும் அவினாசியில் தொடங்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கட்டடப்பணிகளுக்காக அரசு, ரூ. 23.20 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

நாட்டு நலப்பணித் திட்டம்

நாட்டு நலப்பணித்திட்டம், தமிழகத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் செப்டம்பர், 1969 முதல் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது, 3,90,700 மாணவத் தொண்டர்களுடன் இத்திட்டம் தமிழகத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களில் செயல்பட்டு வருகிறது. 2016 - 17 ஆம் ஆண்டில் ரூ. 13.43 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பல்வேறு தொழில்நுட்பப் பயிலகங்களில், இத்திட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : கல்வித்துறை, தமிழ்நாடு அரசு

3.07407407407
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top