பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் -1

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை

ஐக்கிய நாடுகளின் பொதுப் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட நீட்டித்த வளர்ச்சிக் குறிக்கோள்களின் (Sustainable Development Goals) அடிப்படையில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நிலையை எய்துவதும், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் சமநிலை அடையவும் குழந்தைகளின் நல் ஊட்டச்சத்தினை எய்தவும் தமிழக அரசு குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தினை அடைந்துள்ளது. மகளிர், குழந்தைகள், மூத்த குடிமக்கள், வயதானோர் மற்றும் மூன்றாம் பாலினரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களைச் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மூலம் செயல்படுத்தி வருவதில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான நலத்திட்டங்கள்

துயருறும் சூழலில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்திட ஒழுக்க நெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம், 1956 (Immoral Traffic (Prevention) Act, 1956) மற்றும் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015) ஆகியன சமூக பாதுகாப்புத் துறையின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகள் மற்றும் சட்டத்திற்கு முரணாகச் செயல்பட்டதாகக் கருதப்படும் குழந்தைகள் ஆகியோருக்கு தேவைப்படும் நிறுவனப் பராமரிப்பினை குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள் (Observation Homes), சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்கள் (After Care Organisations) மற்றும் துன்புறும் துயருறும் சூழலில் உள்ள பெண்களின் மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பிற்காக மகளிர் காப்பகங்கள், பாதுகாப்பு இல்லங்கள், ஸ்வதார் மற்றும் உஜ்ஜவாலா திட்டங்களின் கீழ் குறுகிய கால தங்கும் இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றது.

பெண்களுக்கு அதிகாரமளிக்கும் நடவடிக்கையாக, குறிப்பாக பெண் குழந்தைகளுக்காக, பெண் குழந்தைகள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தவும் பெற்றோர் பெண் குழந்தைகளைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளவும் வழிவகை செய்யும் முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. பெண் சிசுக்கொலை என்னும் தீமையைத் தடுப்பதையும், கைவிடப்பட்ட குழந்தைகள் தத்து கொடுக்கப்படும் வரை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பதை உறுதி செய்யும் ஒரு தன்னிகரற்ற திட்டமாக தொட்டில் குழந்தைத் திட்டம் திகழ்கிறது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006 நன்முறையில் செயல்படுத்தப்படுவதால் பெண் குழந்தையின் சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவற்றை வளரச் செய்வதுடன் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் கருத்தரிக்கும் அபாயத்தைத் தடுக்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் முறையே 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. பள்ளிக் குழந்தைகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்களில் மசாலா கலந்த முட்டையுடன் 13 வகையான கலவை சாதம் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளுக்கு 3 முட்டை வழங்கும் திட்டத்தால் அவர்களது ஊட்டச்சத்து அளவு மற்றும் உணவு ஆற்றலளவு உயர்த்தப்பட்டது, மத்திய அரசால் பாராட்டப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஊட்டச்சத்து, முன்பருவக்கல்வி, சுகாதாரம் மற்றும் குழந்தைகளின் தன்சுத்தம், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கிய வழிகாட்டித் திட்டமாக செயல்படுகிறது இத்திட்டம் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துதல், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம் பேணுதல், வளரிளம் பெண்களின் மேம்பாடு மற்றும் சமச்சீரான வளர்ச்சியினை அடைதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் பிறந்தது முதல் ஆறு வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இணை உணவு, சூடான சமைத்த உணவு வழங்குதல், சுகாதாரம் பேணுதல் மற்றும் முன்பருவக் கல்வி வழங்குதல், பெண்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவு வழங்குதல் போன்ற விரிவான நலப் பணிகளை வழங்குகிறது.

உடல் நலம், கல்வி விழிப்புணர்வு மற்றும் அறிவுத் திறனை மேம்படுத்துவதுடன் வளரிளம் பெண்கள், கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு இணை உணவும் வழங்கப்படுகிறது. மறுசீரமைக்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்படி, அங்கன்வாடி மையங்கள், "எழுச்சிமிகு முன்பருவக் கல்வி வளர்ச்சி மையங்களாக” செயல்பட்டு வருகின்றன. இம்மையங்கள் கற்றல், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து வழங்குதல் போன்ற சேவைகளை வழங்கும் முதல்நிலை மையங்களாக செயல்பட ஏதுவாக கூடுதல் மனிதவளம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இத்துறை மகளிரின் பாதுகாப்பிற்கும், சமூக பொருளாதார அதிகார பகிர்விற்கும் முதலிடத்தை அளிப்பதுடன், பண்பாட்டுத் தேவையினை அங்கீகரிக்கும் விதமாக முக்கிய திட்டங்களாக ஐந்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துகின்றது. இதனால் பெண்கள் மற்றும் ஏழைப் பெற்றோர்களின் கண்ணியமான நிலையினை உறுதி செய்வதுடன் பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிக்கின்றது.

10ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த பெண்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்கு 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ. 25,000 மற்றும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்த பெண்களுக்கு 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் ரூ.50,000 நிதியுதவியாக அரசால் வழங்கப்பட்டு வந்தது. இதனால், இத்திட்டத்தின் மூலம் 55 சதவிகித பெண்கள் ஆர்வத்துடன் உயர்கல்வி கற்பது ஊக்குவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டங்கள் குறிப்பாக ஏழ்மை நிலையிலுள்ள பெற்றோர்களின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், கலப்புத் திருமணம் புரிந்த தம்பதியர், விதவையரின் மகள் மற்றும் மறுமணம் புரியும் விதவையர் ஆகியோருக்காக செயல்படுத்தப்படுகிறது. 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு வழங்கப்படும் தங்க நாணயத்தின் அளவானது 8 கிராமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினரின் வாழ்வாதாரத்திற்காக நிதியுதவி வழங்குவது உட்பட பல்வேறு நடவடிக்கைகள் இவ்வரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையால் நடத்தப்படும் சேவை இல்லத்தில் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் பாதுகாப்புடன் தங்க இயலும். அதே சமயத்தில் அவர்கள் கல்வி மற்றும் தொழிற்பயிற்சியைத் தொடரலாம். குறைந்த வருவாயை ஈட்டும் பணிபுரியும் பெண்களுக்கு, அவர்களால் இயன்ற வாடகையில் பாதுகாப்பாக தங்குவதற்கு பணிபுரியும் மகளிருக்கான அரசு தங்கும் விடுதிகளும் இத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளும் வகையில், தமிழக அரசு இலவச தையல் இயந்திரங்களை வழங்கி வருகிறது. இம்மாநிலத்தில் மதிய உணவு உட்கொள்ளும் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக நான்கு இணை பள்ளிச் சீருடைகளை தைக்கும் பணிகளில் 98 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்களின் கீழ், 75,807 பெண் உறுப்பினர்கள் தங்களது வீட்டிலிருந்தபடியே தொழிலில் ஈடுபட்டு வருவதன் மூலம் தேவையான வருமானத்தை ஈட்டுகின்றனர்.

வருவாய் நிருவாக ஆணையரகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு முகமையாக இத்துறைச் செயல்பட்டு வருகிறது. பெண்கள் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மிகப்பெரிய சாதனைகள் புரிந்திருந்தாலும் சமூகத்தில் அவர்களுக்கு எதிராக தற்போதும் நிலவி வரும் பாகுபாட்டின் பிரதிபலிப்பே பாலின அடிப்படையிலான வன்கொடுமை ஆகும். வளர்ச்சியில் பெண்கள் முழுமையாக பங்கேற்பதற்கு, வன்முறை மற்றும் வன்முறையால் ஏற்படும் அச்சம் போன்ற காரணகிள் தடையாக உள்ளன. மேற்படி காரணிகளைக் கருத்திற்கொண்டு, பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்காக அரசு பெண்களை பாதுகாக்கும் சட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கிறது.

ஒழுக்க நெறி பிறழ்தல் (தடுப்பு) சட்டம், 1956, வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம், 2006, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம், 2007, பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம், 2012, பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் தடுப்பு, விலக்கு மற்றும் சீர்படுத்தும்) சட்டம், 2013, தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழங்கு முறைப்படுத்தும்) சட்டம், 2014 மற்றும் இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 போன்ற பல்வேறு சட்டங்கள் இத்துறையால் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறாக சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை வாழ்க்கையின் அனைத்து தரப்பு மக்கள் குறிப்பாக ஏழை ஒடுக்கப்பட்ட மக்களுக்காக செயல்படுகிறது. ஆண்டுகளாக பல்வேறு நலத் திட்டங்களைத் திறம்பட செயல்படுத்துவதன் மூலம் நமது மாநிலத்தில் மனிதவள மேம்பாட்டில் இத்துறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

பெண் குழந்தைகள் நலம்

தமிழக அரசு சமூக நலனுக்காக குறிப்பாக மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக பல திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றைப் பொறுத்தே ஒரு நாட்டின் எதிர்காலம் அமைகிறது. தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தும் போது குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பினை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது. சமூகத்தில் பெண் குழந்தைகள் சமநிலையை அடைவதற்காக பெண் குழந்தைகள் குறித்த பிரச்சனைகள் மீது அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.

தமிழ்நாட்டில் பெண் சிசுக் கொலையை முற்றிலும் ஒழித்திடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட தன்னிகரில்லாத் திட்டமான தொட்டில் குழந்தைத் திட்டம் மற்றும் பெண்குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட "பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் பெண் குழந்தைகளின் அனைத்து நலன்களையும் உறுதி செய்யும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெண் கல்வியை மேம்படுத்தவும், பெண் சிசுக் கொலையை அறவே ஒழிக்கவும், ஆண் குழந்தைகளை விரும்பும் மனப்போக்கை மட்டுப்படுத்தவும், சிறு குடும்ப நெறிமுறையை ஊக்குவிக்கவும் 1992 ஆம் ஆண்டு, அப்போதைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் பெண்குழந்தை பாதுகாப்புத் திட்டம் துவக்கப்பட்டது.

குழந்தைகளின் மிக அத்தியாவசிய தேவைகளான ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் கல்வி போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திட்டங்கள் வகுக்கப்படுவதன் மூலம் அவர்கள் ஆரோக்கியமாகவும், உரிய மதிப்புடன் வளர்வதற்கு தக்க வாய்ப்புகளையும் ஏராளமான வசதிகளையும் அரசு உருவாக்கி தந்துள்ளது. இத்திட்டம் பெண் கல்வியினை முன்னிறுத்தி செயல்படுத்தப்படுவதால், 2001 ஆம் ஆண்டு 64.43% இருந்த பெண் கல்வி விகிதம் மேன்மை அடைந்து, 2011 ஆம் ஆண்டு 73.44% ஆக உயர்ந்துள்ளது. இப்பெண் கல்வி மேலும் முன்னேற்றம் அடையும் வகையில் அரசின் மூலம் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1. தொட்டில் குழந்தைத் திட்டம்

2. பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்

3. பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்

4. குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006

5. பணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள்

6. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் காப்பகங்கள்

தொட்டில் குழந்தைத் திட்டம்

பெண் குழந்தைகளின் நலனுக்காக ஒரு மகத்தான திட்டமான “தொட்டில் குழந்தைத் திட்டம்” 1992-ல் சேலம் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் தமிழ் நாட்டில் ஒரு சில பகுதிகளில் காணப்படும் பெண் சிசுக்கொலை என்னும் கொடிய பழக்கத்தை அறவே ஒழிப்பதும், பெண் குழந்தைகளைப் பாதுகாப்பது மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்துவது குறித்தது ஆகும். இத்திட்டத்தின் மூலம் மீட்கப்பட்ட குழந்தைகளைப் பராமரிக்கும் பொருட்டு அக்குழந்தைகள் அரசிடம் ஒப்படைக்கப்படுவர்.

பெண் சிசுக்கொலையானது, வறுமை காரணமாகவும், ஆண் குழந்தையை விரும்புவதாலும், பெண் குழந்தைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கு குறைவாக உள்ளதாலும், திருமணம் மற்றும் பிற கலாச்சார நடைமுறைகளில் ஏற்படும் செலவுகள், சமூகத்தின் மூலம் எதிர்பார்த்திருக்கும் செலவுகள் மற்றும் உடல் உறுப்பு குறையுடன் பிறக்கும் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமை போன்றவை பெண் சிசுக்கொலைக்கான காரணங்கள் ஆகும். 2001 ஆம் ஆண்டில் இத்திட்டம் மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் பெண் சிசுக்கொலை நடைமுறையில் அதிகமாக இருந்ததால் நீட்டிக்கப்பட்டது. சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் குழந்தைப் பாலின விகிதம் மேற்படி மாவட்டங்களில் உயர்ந்துள்ளது.

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி கடலூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைவாக இருந்ததால் மேற்கண்ட மாவட்டங்களிலும் தொட்டில் குழந்தைத் திட்டம் 2011 ஆம் ஆண்டு முதல் விரிவுபடுத்தப்பட்டது. மேற்கண்ட மாவட்டங்களில் வரவேற்பு மையங்கள் திறக்கப்பட்டன. பல்வேறு சமூக சூழ்நிலைகளின் காரணமாக பெற்றோர்களால் நிராகரிக்கப்படும் பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் கீழ் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குழந்தைகள் இல்லங்கள் மற்றும் காப்பகங்கள் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட தொட்டில்கள் மூலம் பெறப்பட்டன.

தொட்டில் குழந்தைத் திட்டம் தொடங்கியது முதல் மார்ச் 2017 வரை 5,024 குழந்தைகள் (ஆண் - 966, பெண் - 4058) வறுமையில் வாடும் பெற்றோர்கள் மற்றும் ஒற்றை தாய்மார்கள் குழந்தைகளை ஒப்படைத்துள்ளார்கள். 2001-ஆம் ஆண்டு 942/1000 என்றிருந்த பெண் குழந்தைகளின் பாலின விகிதம் தமிழ்நாட்டில் தொட்டில் குழந்தைத் திட்டம் உருவானதன் விளைவாக 2011-ஆம் ஆண்டு 943/1000 ஆக அதிகரித்துள்ளது.

2017-18ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ. 37.52 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம்

1992ஆம் ஆண்டு துவக்கப்பட்ட முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம், பெண் குழந்தைகளின் நலனுக்கான முன்னோடி மற்றும் வழிகாட்டும் திட்டமாகும். முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் நோக்கம் பெண் குழந்தை பாலின பாகுபாட்டைத் தடுத்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக அரசால் நேரடியாக உதவி புரிவதாகும்.

திட்டத்தின் நோக்கங்கள்

* பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரித்தல், அவர்களுக்கு குறைந்த பட்சம் 10ஆம் வகுப்பு வரை கல்வியைப் பயிலுவதற்கு ஊக்குவித்தல்.

* 18 வயதுக்கு பிறகே திருமணம் செய்து கொள்ளும் கருத்தினை பெண் குழந்தைகளிடம் ஊக்குவித்தல்.

* இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தவுடன் குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள வேண்டும் என்று பெற்றோர்களிடம் ஊக்குவித்தல்.

* பெண் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சமூக மற்றும் நிதி நிலையில் அதிகாரத்தினை வழங்குதல்.

* பெண் குழந்தைகளின் நிலையை மேம்படுத்த குடும்பத்தின் பங்கினை பலப்படுத்துதல்.

இத்திட்டத்தின் கீழ் வைப்புத் தொகை வழங்கப்படும் முறை

திட்டம் - 1

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்து குடும்பத்தில் ஒரே பெண் குழந்தை மட்டும் இருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையாக ரூ.50,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது.

திட்டம் – 2

இத்திட்டத்தின் கீழ் 01.08.2011 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்து, குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே இருப்பின், ஒவ்வொரு பெண் குழந்தையின் பெயரிலும் நிலையான வைப்புத் தொகையாக தலா ரூ.25,000/- தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது. இந்த வைப்புத் தொகையின் இரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. மேற்படி வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்தாண்டு முடிவிலும் புதுப்பிக்கப்பட்டு 18 வயது நிறைவடைந்ததும் திரண்ட வட்டி விகிதத்துடன் கூடிய வைப்புத் தொகையின் முதிர்வுத் தொகை, அப்பெண் குழந்தைக்கு வழங்கப்படுகிறது. இப்பயனை அடைய பெண் குழந்தை பத்தாம் வகுப்பு வரை படித்து, பொதுத் தேர்வு எழுதியிருத்தல் வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் முதிர்வுத் தொகை அப்பெண் குழந்தைக்கு உயர்கல்வி பயில உதவுகிறது.

முதிர்வுத் தொகை விவரம்

வ. எண்.

திட்டங்கள்

ஆரம்ப வைப்பீட்டுத்தொகை ரூ

18 வயது நிறைவடையும் போது முதிர்வுத் தொகை ரூ. 1,800ஊக்கத்தொகை உட்பட தோராயமாக

1

திட்டம்-1

50,000

3,00,232

2

திட்டம்-2

25,000 (ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)

1,50,117 (ஒவ்வொரு பெண் குழந்தைக்கும்)

வைப்பீடு செய்யப்பட்ட ஆறாவது ஆண்டிலிருந்து கல்விச் செலவுக்காக ஆண்டுதோறும் ஊக்கத்தொகையாக ரூ1,800 வழங்கப்பட்டு வருகிறது. 2013-14 ஆம் நிதியாண்டு முதல் திருமண நிதி உதவித் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் பயன்கள், பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 1992 முதல் 1995 ஆம் ஆண்டு வரை பதிவு செய்த பயனாளிகளுக்கும் விரிவு படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் உள்ள இரண்டு திட்டங்களுக்கும் ஆண்டு வருமான உச்சவரம்பு 14.10.2014 முதல் ரூ 24,000/- லிருந்து ரூ72,000/-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் சாதனைகள்

தமிழ்நாட்டில் பெண் கல்வியின் முன்னேற்றம் 2001 ஆம் ஆண்டில் 64.43 சதவிகிதத்தில் இருந்து 2011-ஆம் ஆண்டில் 73.44 சதவிகிதமாக உயர்ந்துள்ளதற்கும், பள்ளிக்கு சென்ற பெண் குழந்தைகளின் இடைநிறுத்தல் குறைந்ததற்கும் இத்திட்டம் முக்கிய காரணியாக உள்ளது. 1997-2017 வரை 8,68,218 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளனர். ரூ1,259.32 கோடி வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ14,013 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்

பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியினை உறுதி செய்யவும் “பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம்” (Beti Bachao Beti Padhao) என்ற திட்டம் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் நாள் முதன்முதலாக அரியானா மாநிலம், பானிப்பட்டில் மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இத்திட்டத்தினைச் செயல்படுத்தும் ஒருங்கிணைப்பு அமைச்சகமாக செயல்படுகிறது.

2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளி விவரத்தின்படி குழந்தைப் பாலின விகிதம் (Child Sex Ratio) மிகவும் குறைந்து காணப்பட்டு தேசிய அளவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகளே உள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதன் காரணமாக குழந்தைப் பாலின விகிதம் குறைவாக உள்ள 100 மாவட்டங்கள் கண்டறியப்பட்டு அதில் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் மாநில அளவில் குறைந்தது ஒரு மாவட்டம் முன்னோடி மாவட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்த தேர்தெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், "பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்” என்ற திட்டத்தைச் செயல்படுத்த குழந்தைப் பாலின விகிதம் மிகவும் குறைவாக உள்ள கடலூர் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய அளவில் உள்ள 919/1000 குழந்தை பாலின விகிதத்தைவிட தமிழ்நாட்டில் 943/1000 என சற்று உயர்வாகவே உள்ளது. கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா குழந்தை பாலின விகிதம் கீழ்கண்டவாறு:-

 

கணக்கெடுப்பு 2001

கணக்கெடுப்பு 2011

இந்தியா

927

919

தமிழ்நாடு

942

943

கடலூர்

957

896

இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

• கருவில் இருக்கும் குழந்தைப் பாலினத்தை கண்டறிவதை முற்றிலும் அகற்றுதல்

• பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புடன் கூடிய நல்வாழ்வினை உறுதி செய்தல்.

* பெண் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதை உறுதிப்படுத்துதல்.

மாவட்ட ஆட்சித் தலைவர் திட்டத்தினை செயல்படுத்தும் தலைவர் ஆவர்.

திட்டத்தின் சாதனைகள்

1. கடலூர் மாவட்டத்தில் குழந்தைப் பாலின விகிதம் 2015-ல் 886 ஆக இருந்தது 2016-ல் 895 ஆக உயர்ந்துள்ளது.

2. உயர் தொடக்கப் பள்ளி (மாணவிகள்) இடை நிறுத்தம் செய்வது 2015ல் 1.5 சதவிகிதமாக இருந்தது 2016ல் 1.௦ சதவிகிதமாக குறைந்துள்ளது.

3. இடை நிலைப் பள்ளி (மாணவிகள்) இடைநிறுத்தம் செய்வது 2015ல் 3.26 சதவிகிதமாக இருந்தது 2016ல் 1.5 சதவிகிதமாக குறைந்துள்ளது.

4. சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் 59,491 குழந்தைகளுக்கு வங்கிக் கணக்கு துவக்கப்பட்டுள்ளது.

5. பள்ளிகளில் ஒட்டுமொத்த கட்டமைப்பு வசதிகள், அதாவது உறைவிட பள்ளி, கழிப்பறை, தண்ணீர் வசதிகள் மற்றும் எரியூட்டிகள் அமைத்தல் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

விருது

கடலுார் மாவட்டம் சிறந்த மாவட்டமாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியதற்கு தேர்வு செய்யப்பட்டு “சிறந்த சமூக ஈடுபாட்டிற்காக” டெல்லியில் 24 ஜனவரி 2017 அன்று நடைபெற்ற தேசிய பெண் குழந்தைகள் தின விழாவில் மாண்புமிகு அமைச்சர், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு அவர்களால் தேசிய விருது வழங்கப்பட்டது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006

இந்திய சட்டத்தின்படி 18 வயதிற்கும் கீழ் உள்ள பெண் குழந்தைக்கும், 21 வயதிற்கும் குறைவாக உள்ள ஆண் குழந்தைக்கும் நடைபெறும் திருமணம் குழந்தைத் திருமணம் ஆகும். பெரும்பாலான குழந்தைத் திருமணங்கள் சமூக மற்றும் பொருளாதார வசதி குறைவு மற்றும் குழந்தைத் திருமணத்தின் தீய விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ள குடும்பங்களில் நடைபெறுகிறது.

அரசு மற்றும் சமுதாயத்தால் இதனை ஒழிப்பதற்காக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டபோதிலும், இந்தியாவில் குழந்தைத் திருமணம் இன்னும் ஒரு பொதுவான நிகழ்வாகவே இருந்து வருகிறது. சமூகத்தில் நடைபெற்றுவரும் குழந்தைத் திருமணத்தை அறவே ஒழிப்பதற்காக, மத்திய அரசால் 1929-ல் இயற்றப்பட்ட குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006ஆம் ஆண்டில் இயற்றப்பட்டது.

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்கும் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் நிவாரணம் வழங்குவதற்கும் மற்றும் இச்சட்டத்தை மீறி அத்தகைய திருமணங்கள் நடத்துபவர்கள், நடத்துவதற்கு ஏற்பாடு செய்பவர்கள் மீது தகுந்த தண்டனையை அளிப்பதற்கு இச்சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தைச் செயல்படுத்துதல்

குழந்தைத் திருமண தடைச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தமிழக அரசால் மாநில விதிகளை வகுத்து அதனை 30.12.2009 அன்று அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது. இச்சட்டத்தை சிறந்த முறையில் செயல்படுத்திட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர்கள் குழந்தைத் திருமணத் தடுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

குழந்தைத் திருமண தடுப்பு அலுவலருக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில் அவர்கள் குழந்தைத் திருமணம் நடைபெறுவது குறித்த ஏதேனும் தகவல் எவ்வகையில் கிடைக்கப் பெற்றாலும், புகாரினை ஏற்று, அத்தகைய குழந்தைத் திருமணத்தினை இரத்து செய்திட மாவட்ட நீதிமன்றத்தில் புகாரினை பதிவு செய்வதோடு மற்றும் குழந்தைத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பெற்று வழங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். குழந்தைத் திருமணங்களைத் தடுக்கவும், அது குறித்து தெரிவித்திடவும், ஊராட்சித் தலைவர் அவர்களின் தலைமையில், ஊராட்சி அளவிலான குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணத்தைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள்

1.பொம்மலாட்டம், தெருக்கூத்து, ஊர்வலம் மற்றும் கருத்தரங்கம் போன்ற பல்வேறு முறைகளில் குழந்தைத் திருமணம் தொடர்பான விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படுகிறது.

2.குழந்தைத் திருமணம் என்னும் கொடுமையிலிருந்து பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்காக, குழந்தைத் திருமணம் தொடர்பான விளம்பரப்படம் தயாரிக்கப்பட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. மத்திய அரசால் இவ்விளம்பரப் படம் தொலைக்காட்சியில் ஆங்கில துணைத் தலைப்புடன் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

3. பெண் குழந்தைகளின் கல்வியை மையமாக கொண்டு தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. குழந்தைத் திருமணத்தை அடியோடு ஒழித்திடும் நோக்கத்தில் திருமண நிதியுதவித் திட்டங்கள் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடையும் போது பயனடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

4. 13 மாவட்டங்களில் யுனிசெப் (UNICEF) நிதி உதவியுடன் குழந்தைத் திருமணத்தை எதிர்த்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

5. குழந்தைத் திருமணத் தடைச்சட்டம் மற்றும் விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சட்டமும் விதிகளும் தமிழ் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டன. 2008ஆம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் சுமார் 5,037 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.

பணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கான காப்பகங்கள்

பெற்றோர்கள் தங்களின் வேலை நிமித்தமாக குழந்தைகளைப் பராமரிக்க இயலாத நிலையில் பகல் நேரங்களில் பாதுகாப்பாக பராமரிக்கப்படும் இடம் குழந்தைகள் காப்பகம் ஆகும். தமிழ்நாட்டில் பணிபுரியும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களின் குழந்தைகளுக்கு உதவிட குழந்தைகள் காப்பகங்கள் அரசால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ள பெற்றோர்களின் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இக்காப்பகங்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு இணை உணவுடன் கல்வியும் இக்காப்பகங்களில் வழங்கப்படுகிறது. பணிபுரியும் தாய்மார்களுக்கு மட்டுமல்லாது, நோய் வாய்ப்பட்ட மற்றும் ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தில் உள்ள தாய்மார்கள் வீட்டிலும், வெளியிலும் பல்வேறு பணிகளுக்கிடையில் குழந்தையைப் பராமரிப்பதில் சிரமப்படுவதால், அவர்களுக்கு உதவிடும் வகையில், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் பகல் நேர பராமரிப்பு சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது மாநில அரசு மானியத்துடன் 6 குழந்தைகள் காப்பகங்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் கன்னியாகுமரி, சிவகங்கை, திருநெல்வேலி மற்றும் வேலுார் ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகின்றன. 25 குழந்தைகளுடன் இயங்கும் ஒரு காப்பகத்திற்கு, அரசு மானியமாக ஆண்டொன்றிற்கு ரூ25,410 வழங்கப்படுகிறது.

2017 - 18 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கு ரூ3.82 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான காப்பகங்கள்

இத்துறையின் மூலம் சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காக 4 இல்லங்கள் கீழ்காணும் மாவட்டங்களில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

1. பிரேமவாசம், காஞ்சிபுரம்

2. ஸ்ரீஅருணோதயம் டிரஸ்ட், சென்னை

3. குழந்தைகளுக்கான குடும்பங்கள், கோயம்புத்துார்

4. கம்யூனிட்டி ஹெல்த் எஜுகேஷன் சொசைட்டி (CHES), திருவள்ளூர்

தற்போது இல்வில்லங்களில் 137 குழந்தைகளுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பராமரிப்பிற்காக ஒரு குழந்தைக்கு நாளொன்றுக்கு ரூ120 வீதம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கப்படுகிறது. 2017 - 2018 ஆம் ஆண்டின் வரவு - செலவுத் திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்காக ரூ37.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை

2.64285714286
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top