பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 2

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

மகளிர் நலம்

பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளைக் களையும் உடன்படிக்கை (Convention on Elimination of all forms of Discrimination Against Women), நீட்டித்த வளர்ச்சிக்கான இலக்குகள் (Sustainable Development Goals), தேசிய பெண்கள் மேம்பாட்டுக் கொள்கை மற்றும் மாநிலத்தின் இலக்கு 2023 ஆகியவற்றிற்கேற்ப மாநிலத்தில் உள்ள பெண் குழந்தைகள், பெண்கள், முதியோர்கள் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களுக்கு அதிகாரமளித்திட பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டங்களை உருவாக்குவதில் நாட்டில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள், உதவி தேவைப்படும் முதியோர்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ளவர்களான மூன்றாம் பாலினர் ஆகியோர் சமூக சமநிலையை அடைந்திடவும் போதுமான சமூகப் பாதுகாப்பினை வழங்குவதற்கும் கவனம் அளிக்கப்படுகிறது. வாழ்வாதாரம் அற்றவர்களுக்கு உணவு, உறைவிடம், மருத்துவ வசதி மற்றும் கல்வி ஆகியன சேவை இல்லங்கள் மற்றும் முதியோர் இல்லங்கள் மூலமாக வழங்கப்படுகின்றன. இதனால் மாநிலத்தில் நலிவுற்ற சமூகத்தினரது சுகாதாரம், ஊட்டச்சத்து, கல்வி அறிவு ஆகியவற்றிற்கான குறியீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், பெண்கள் நலம் மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல், மாநிலத்தின் வளர்ச்சித் திட்டத்தில் முன்னுரிமை பெற்று இருக்கின்றது. திருமண நிதியுதவித் திட்டங்கள், பெண்கள் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்பதுடன் திருமணத்தின் போது பெண்களது பெற்றோர்களுக்கு நிதியுதவியும் வழங்குகிறது. தமிழ்நாட்டில், பெண் கல்வியை மேம்படுத்தி பெண் குழந்தைகளின் பள்ளி இடைநிறுத்தல் விகிதத்தினை குறைப்பதிலும் இத்திட்டங்கள் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன.

ஏழை பெண்களின் திருமணத்திற்காக முன்னோடி திட்டமான திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் பட்டதாரி அல்லாதவர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ25,000மும், பட்டதாரி மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கு திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்துடன் நிதியுதவியாக ரூ50,000மும் 17.05.2011 முதல் 22.05.2016 வரை வழங்கப்பட்டு வந்தது.

23.05.2016 முதல் ஐந்து திருமண நிதியுதவித் திட்டங்களின் கீழ் திருமாங்கல்யம் செய்திட வழங்கப்பட்டு வந்த 4 கிராம் (22 காரட்) தங்க நாணயத்தின் எடையை உயர்த்தி 8 கிராம் (22 காரட்) தங்க நாணயமாக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஏழ்மை நிலையிலுள்ள குடும்பத்தினர் அதிக அளவில் இத்திட்டத்தின் கீழ் பயன் பெற்றிட அவர்களது ஆண்டு வருமானமானது ரூ24,000லிருந்து (ரூ72,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சமூகத்தில் ஆதரவற்ற பெண்கள் அவர்களின் குழந்தைகளுடன் பாதுகாப்பான சூழலில் வசிப்பதையும், அவர்களின் வாழ்க்கைக்குத் தேவையான கல்வி மற்றும் திறன்களை மேம்படுத்திக் கொள்வதையும் உறுதி செய்யும் வகையில், அரசால் சேவை இல்லங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சேவை இல்லங்களில் ஆதரவற்ற பெண்கள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண்கள் போன்றவர்களுக்கு, உறைவிடம், உணவு, கல்வி, திறன் மேம்பாட்டு பயிற்சி போன்றவை வழங்கப்படுவதால் அவர்கள் சமூகத்தில் நம்பிக்கையுடனும், கண்ணியத்துடனும் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக வாழ்க்கையை எதிர்நோக்க உதவிகரமாக உள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய மிகவும் நலிவடைந்த நிலையிலுள்ள பெண்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, வருவாயைப் பெருக்கும் வகையில், தொழிற்கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக அவர்கள் சேர்க்கப்பட்டு உகந்த பயிற்சிகள் அளிப்பதன் மூலம், பள்ளி குழந்தைகளுக்கான நான்கு இணை சீருடைகள் தைக்கும் பணி வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சமூதாயத்தில் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட நிலையிலுள்ள மூன்றாம் பாலினத்தவரின் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு நலத் திட்டங்களை அரசு நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்காகவும், பெண்களின் உரிமையைப் பாதுகாக்கவும், பல்வேறு சமூக சட்டங்கள் இத்துறையின் வாயிலாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

அவை வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் (தடுப்பு, விலக்கு மற்றும் சீர்படுத்தும்) சட்டம், 2013, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம், 2014. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த புகார்கள் மற்றும் பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் மீதான நடவடிக்கைக்கு பெண்களுக்கான மாநில மகளிர் ஆணையம் 1993 முதல் அமைக்கப்பட்டு செயலாற்றி வருகிறது.

திருமண நிதி உதவித் திட்டங்கள்

தமிழகத்தில் பல்வேறு சமூகத்தினரால் மணப் பெண்ணிற்கு திருமணத்தின் போது தங்கத்தினால் திருமாங்கல்யம் அணிவிப்பது என்பது கலாச்சார பழக்க வழக்கமாகும். திருமணத்தில் ஏனைய செலவுகளுடன் தங்கத்தின் விலை பெற்றோர்களுக்கு ஒரு சுமையாகவே உள்ளது. எனவே, ஏழை பெற்றோர்களுக்கு உதவும் பொருட்டும், அவர்கள் தங்களது பெண்களை உரிய வயதில் படிக்க வைப்பதை ஊக்குவிக்கும் பொருட்டும் திருமண நிதி உதவி திட்டங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஏழைப் பெற்றோரின் மகள், ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்து கொள்ளும் விதவையர், விதவையரின் மகள், கலப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதியர் ஆகியோருக்கு உதவிடும் வகையில் தமிழக அரசால் ஐந்து வகையான திருமண நிதி உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

2011-12-ல் 28% ஆக இருந்த பட்டதாரி பயனாளிகளின் எண்ணிக்கை 2016-2017ஆம் ஆண்டில் 60% ஆக அதிகரித்துள்ளது.

2016-2017-ஆம் நிதியாண்டில் ஐந்து வகையான திருமண நிதி உதவித் திட்டங்களின் கீழ் 1,52,500 பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதி உதவித் திட்டம்

18 வயது பூர்த்தி அடைந்த ஏழைப் பெண்களின் திருமணத்தின் போது, திருமண நிதியுதவி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற பெண்கள் 10-ஆம் வகுப்பும், பழங்குடி இனத்தவராக இருந்தால் 5 ஆம் வகுப்பு வரையும் படித்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பட்டதாரியல்லாதோருக்கு ரூ25,000 நிதியுதவியும், பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ50,000 நிதியுதவியும் வழங்குவதுடன் திருமாங்கல்யம் செய்வதற்காக 23.05.2016 முதல் 1 சவரன் (8கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

பெற்றோர்கள் இறந்து விட்ட நிலையில் மகளுக்கு நேரடியாக இந்நிதியுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் அடைவதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ72,000 க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ67,078.50 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம்

பெண்களுக்கான மேம்பாடு மற்றும் உரிமைகளை ஏற்படுத்துவதற்கான புதிய ஆரம்பமாக விதவைகள் மறுமணம் செய்து கொள்வதால், இளம் விதவைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை கொண்டு வருகிறது. இளம் விதவைகளுக்கு சமூகத்தில் சமூக ஏற்பு மற்றும் கௌரவத்தையும் அளிக்கும் பொருட்டு தமிழக அரசால் டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதி உதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், பட்டதாரியல்லாதோருக்கு ரூ 25,000 நிதியுதவியில் ரூ15,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ10,000 தேசிய சேமிப்புப் பத்திரமாகவும், பட்டம் / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ 50,000 நிதியுதவியில் ரூ30,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ20,000 தேசிய சேமிப்புப் பத்திரமாக வழங்குவதுடன் 23.05.2016 முதல் 1 சவரன் (8கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு வருமான வரம்பு மற்றும் கல்வித் தகுதி ஏதும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ76.25 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம்

ஏழை விதவை தாய்மார்களுக்கு அவர்களது மகளின் திருமணத்திற்கு உதவிடும் வகையில் ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதி உதவித் திட்டம் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் விதவையர் தம் மகளுக்கு திருமணம் செய்ய உதவிடும் வகையில் பட்டதாரியல்லாதோருக்கு ரூ25,000மும், பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ50,000மும், அத்துடன் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் (ரூ72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென 3,771.09 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம்

ஆதரவற்ற ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி புரியும் பொருட்டு அரசால் அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பட்டதாரியல்லாத பெண்களுக்கு ரூ25,000மும், பட்டப் படிப்பு / பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ50,000மும், திருமண நிதியுதவியாக வழங்கப்படுவதுடன் 23.05.2016 முதல் திருமாங்கல்யம் செய்வதற்கு 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு வருமான வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ373.75 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம்

சாதி அடிப்படையிலான வேறுபாடுகளைக் களையவும் சமுதாயத்தினரிடையே சமூக சமத்துவத்தை ஊக்குவிக்கும் பொருட்டு அரசால் கலப்புத் திருமண நிதி உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கலப்புத் திருமணம் செய்யும் தம்பதியரில் பட்டதாரியல்லாதோருக்கு வழங்கப்படும் ரூ25,000 நிதி உதவித்தொகையில் ரூ15,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும், பட்டம் | பட்டயப் படிப்பு படித்த பெண்களுக்கு ரூ50,000 நிதி உதவித் தொகையில், ரூ30,000 மின்னணு பரிமாற்ற சேவை வாயிலாகவும், ரூ20,000 தேசிய சேமிப்பு பத்திரமாக வழங்குவதுடன் 23.05.2016 முதல் 1 சவரன் (8 கிராம்) 22 காரட் தங்க நாணயமும் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் பயன் பெற கல்வித் தகுதி மற்றும் வருமான வரம்பு எதுவும் தேவையில்லை .

கலப்புத் திருமணத்தின் வகைகள்

திட்டம் - 1

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கலப்புத் திருமண தம்பதியரில் ஒருவர் ஆதி திராவிடர் அல்லது பழங்குடியினர் இனத்தவராகவும், மற்றொருவர் பிற இனத்தை சேர்ந்தவராகவும் இருத்தல் வேண்டும்.

திட்டம் - II

இத்திட்டத்தின் கீழ் பயன் பெற கலப்புத் திருமணம் செய்பவர்களில் ஒருவர் முற்பட்ட அல்லது இதர வகுப்பினராகவும், மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பு / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகவும் இருத்தல் வேண்டும்.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ1,10041 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசு சேவை இல்லங்கள்

கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், விதவைகள், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பெண்கள் மற்றும் குழந்தைத் திருமணத்திலிருந்து மீட்கப்பட்டு, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு, பராமரிப்பு அளிக்கும் வகையில் தமிழக அரசால் அரசு சேவை இல்லங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னை , சேலம், கடலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, சிவகங்கை, கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒன்று என தமிழகத்தில் 9 அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.

பல்வேறு சூழல்களால் பள்ளிப்படிப்பை இடைநிறுத்தம் செய்த பெண்கள் அவ்விடத்திலேயே குழந்தைகளுடன் தங்கி தொடர்ந்து கல்வி பயில ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்த சேவை இல்லங்கள், இல்ல உறைவாளர்களுக்கு தங்குமிடம், உணவு, சுகாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஆகியவற்றை அளிக்கின்றன. இவர்களில் பெண் குழந்தையாக இருந்தால் 12ம் வகுப்பு வரையிலும், ஆண் குழந்தையாக இருந்தால் 5 ஆம் வகுப்பு வரையிலும் சேவை இல்லங்களிலேயே தங்கி கல்வி பயிலலாம். உள்ளுறைவோர்களது திறமையை மேம்படுத்துவதற்காக தொழிற்கல்வி அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஆங்கிலம் பேசும் திறன், கணினி பயிற்சி, எதிர்காலத்தில் உயர் கல்வி படிப்பது, வாழ்க்கைத் திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து வழிகாட்டுதல் தொடர்பான ஆலோசனைகளும் இவ்வில்லங்களில் தங்கியுள்ள பெண்களுக்கு வழங்கப்படுகின்றன. அரசு சேவை இல்லங்களில் தங்கியுள்ள மகளிர் மற்றும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் ஏழைப் பெண்கள் அதிகளவில் பயனடையும் வகையில் ஆண்டு வருமானம் ரூ24,000லிருந்து (ரூ72,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ524.43 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கான உயர்கல்வித் திட்டம்

அரசு சேவை இல்லங்களில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்து முடித்த பெண் குழந்தைகள் உயர்கல்வி பயின்றிட ஊக்கப்படுத்துவதோடு தொழிற்சார் கல்வி பயின்றிட ரூ50,000 மற்றும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு படித்திட ரூ30,000 என்று நிதியுதவி அரசால் வழங்கப்படுகின்றது.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ33.78 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம்

அரசு சேவை இல்லங்கள் மற்றும் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேல்நிலைப் படிப்பு முடித்த மாணவிகள், அவர்களின் வாழ்க்கை தர உயர்வு மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு தயார்படுத்தும் வகையில் தாம்பரத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் சேர்க்கப்படுகின்றனர்.

இந்த இல்லத்தில் ஒவ்வொரு ஆண்டும் 40 மாணவிகள் இரண்டு ஆண்டு ஆசிரியர் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆசிரியர் பயிற்சி மாணவிகளை கல்வி சுற்றுலா, அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள், அருங்காட்சியகங்கள், அறிவியல் கண்காட்சிகள், உயிரியல் பூங்காக்கள், கேளிக்கைப் பூங்காக்கள் போன்ற இடங்களை பார்வையிட வாய்ப்பு ஏற்படுகிறது.

சேவை இல்லத்தில் தங்கி கல்வி பயிலும் பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக இடவசதி ஏற்படுத்த புதிய துயிற்கூடம் உள்ளுறைவோர்கள் தங்கும் பொருட்டு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு ரூ1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ9.23 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள்

நகரம் மற்றும் பேரூர்களில் இளம் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளதால் அவர்கள் தங்களுடைய பணி நிமித்தமாக தங்கள் வீட்டை விட்டு வெளியே தங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

அதனால், நகரங்களில் அவர்களுக்கு தங்களால் இயன்ற வாடகையில் அச்சமில்லாமல் பாதுகாப்பான சூழலில் உள்ள தங்கும் விடுதி தேவைப்படுகிறது. மாநிலத்தில், 18 மாவட்டங்களில், 28 பணிபுரியும் மகளிருக்கான அரசு விடுதிகள் நடத்தப்படுகின்றன.

சென்னையில் மாதம் ரூ25,000 வரை பொருளீட்டும் பணிபுரியும் மகளிரும், பிற இடங்களில் ரூ15,000 வரை பொருளீட்டும் மகளிரும் இவ்விடுதிகளில் தங்கி பயன்பெற தகுதியுடையவராவர். சென்னையில் உள்ள விடுதிகளில் தங்கிட ரூ300ம் பிற இடங்களில் உள்ள விடுதிகளில் தங்கிட (ரூ200ம் மாத வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உணவுக் கட்டணம், மின் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் போன்ற செலவினங்கள் பகிர்ந்தளித்தல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கான ஊதியம் அரசால் வழங்கப்படுகிறது.

2017 - 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ117.46 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிரின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள்

தமிழ்நாடு அரசு மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் பல்வேறு சமூக பொருளாதார திட்டங்களை, கூட்டுறவு சங்கங்களின் மூலம் செயல்படுத்தி வருகிறது.

மகளிருக்கு அதிகார பகிர்வு அளிப்பு என்பது அவர்களுடைய பொருளாதார தேவையினைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்காக அவர்களது திறன் மற்றும் அறிவினை மேம்படுத்துவதன் மூலம் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும்.

பெண்களின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு 98 மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் சமூக நல இயக்குநரின் நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகின்றது.

இவற்றில் 80 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ / மாணவியர்களுக்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பயிலும் பள்ளிக் குழந்தைகளுக்கும் மற்றும் இதர பள்ளிக் குழந்தைகளுக்கும் 4 இணை சீருடைகள் தைத்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதர 18 சங்கங்கள், அலுவலகத்திற்கு தேவையான பதிவேடுகள், ஆவணங்கள், சாக்குகட்டிகள் மற்றும் கயிறு தயாரித்தல் போன்ற பணிகளோடு சீருடைகள் தயாரிக்கும் பணிகளையும் கூடுதலாக செய்து வருகின்றன.

25 இணை உணவு தயாரிக்கும் மகளிர் தொழில் கூட்டுறவு சங்கங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் இயக்குநர் மற்றும் குழும இயக்குநர் நிர்வாக கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

கூட்டுறவு சங்கங்கள் மற்றும் அதில் பதிவான உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு:-

வ எண்

கூட்டுறவு சங்கங்களின் வகைகள்

கூட்டுறவு சங்கங்களின் எண்ணிக்கை

உறுப்பினர்களின் எண்ணிக்கை

1

மகளிர் தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்கள்

80

73,047

2

மகளிர் எழுதுபொருள் தொழிற் கூட்டுறவு சங்கங்கள்

15

1,017

3

இணை உணவு தயாரிக்கும் பெண்கள் தொழிற் கூட்டுறவு சங்கங்கள்

25

1,450

4

இதர தொழிற் கூட்டுறவு சங்கங்கள்

3

1,743

மொத்தம்

123

77,257

தொழிற்கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக ஆவதற்கு சமுதாயத்தில் உள்ள நலிவுற்ற பிரிவினர், 18 வயதிற்கு மேற்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், விதவை பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்டவர்கள், தையல் தொழில் தெரிந்தவர்கள் தகுதி உடையவர்களாவர். தொழிற் கூட்டுறவு சங்க உறுப்பினர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்டு முழுவதற்கும் நிலையான வருவாயை ஈட்டித்தரும் வகையில் வேலை வாய்ப்பினை அளிக்க இத்திட்டம் உறுதுணையாகஉள்ளது.

தமிழக அரசு 2012-13 ஆம் ஆண்டு முதல் 4 இணை சீருடைகள் வழங்க ஆணை பிறப்பித்ததைத் தொடர்ந்து, 2016-17ஆம் கல்வியாண்டில் ரூ43.00 இலட்சம் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட 4 இணை சீருடைகள் இம்மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலமாக தைத்து வழங்கப்பட்டுள்ளது. சீருடை தைப்பதற்கான தையல் கூலி 2011-12ஆம் ஆண்டு முதல் இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் சீருடைகள் தைப்பதற்கென ரூ90 கோடி பள்ளிக் கல்வித் துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

தையல் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் பெண் உறுப்பினர்கள் மேற்கொள்ளும் சீருடை தைத்தல் மற்றும் வழங்குதல் பணியானது அவர்களுக்கு நிலையான கணிசமான வருவாயை ஈட்டித் தர வழிவகுத்துள்ளது. 10% அரசு மானியத்துடன் 15,500 நவீன ரக தையல் இயந்திரங்கள் மகளிர் தையல் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. மேற்படி நவீன ரக தையல் இயந்திரங்கள் மூலம் சங்க உறுப்பினர்களின் தைக்கும் திறன் மற்றும் உற்பத்தி திறன் அதிகரித்து வருகிறது.

இந்த சங்கங்கள் மகளிரின் சமூக நிலையை மேம்படுத்தும் மற்றும் நலிவுற்ற நிலையில் உள்ள மகளிரின் பொருளாதார நிலையை உயர்த்தும் சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சேலம் மற்றும் திருவண்ணாமலையில் பழங்குடியின பெண்களுக்கென செயல்படும் தையல் பயிற்சி மையத்தின் மூலம் ஆண்டுதோறும் 35 பழங்குடியினப் பெண்கள் தையல் பயிற்சி பெற்று வருகின்றனர்.

சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்

விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள், ஆண் / பெண் மாற்றுத் திறனாளிகள், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆகியோர் சுயமாக தொழில் செய்து தங்களது வருவாயைப் பெருக்கிக் கொள்வதற்கு உதவிடும் வகையில் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையின் மூலம், சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் மோட்டார் பொருத்தப்பட்ட கூடுதல் வசதிகள் பொருந்திய தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் ஏழை மக்கள் பயன் பெறுவதற்கு ஏதுவாக ஆண்டு வருமான உச்ச வரம்பு (ரூ24,000லிருந்து ரூ72,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

2017-18ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட மதிப்பீட்டில் இத்திட்டத்திற்கென ரூ135.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம்

பெண்களுக்கு எதிரான குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கவும் பெண்களுக்கான உரிமைகளைப் பாதுகாத்திடவும் சட்ட ரீதியான அமைப்பான (Statutory Body) தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் 1993-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

மனுதாரர்களுக்கு உடனடியாக தீர்வு வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் பெண்களுக்கான குறிப்பிட்ட இடர்பாடுகளை விசாரணை செய்திடும் வகையிலும் இவ்வாணையரகத்திற்கு தலைவி மற்றும் 9 உறுப்பினர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாணையம் பெண்கள் தொடர்பான பிரச்சனைகளை ஆராய்ந்து உரிய மாற்றங்கள் மேற்கொள்ளுமாறு அரசுக்கு பரிந்துரை செய்திடும்.

பணிபுரியும் இடம் மற்றும் குடும்பத்தில் எதிர்கொள்ளும் அனைத்து வன்கொடுமைகளிலிருந்து பெண்களைப் பாதுகாத்திடவும், பாலின சமத்துவத்தை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும் இவ்வாணையமானது வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961, குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005, பணிபுரியும் இடங்களில் ஏற்படும் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் (தடுப்பு, விலக்கு மற்றும் சீர்படுத்தும்) சட்டம், 2013, ஆகியவை செயல்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.

மகளிர் ஆணையத்தின் செயல்பாடுகள்

1. இந்திய அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சட்ட பிரிவுகள், பாதுகாப்புகள் மற்றும் பெண்களுக்கான சட்டங்கள் குறித்தான விவரங்களைக் கவனித்தல்.

2. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் பல்வேறு நிறுவனங்கள் மூலம் முறையாக செயல்படுத்தப்படாத போது அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லுதல்.

3. பெண்களுக்கு நீதி கிடைக்க தவறும் பட்சத்தில் தேவையான நீதியைப் பெறுவதற்கு உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரை செய்தல்.

4. பெண்களின் உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் மீது நடவடிக்கை மேற்கொண்டு உரிய அதிகாரம் பெற்ற அலுவலர்கள் மூலம் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதுகாப்பிற்கான உத்திரவாதம் வழங்கப்படாத நிலையிலும், பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலும், பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மகளிர் ஆணையத்தை நேரிடையாக அணுகலாம். தேசிய மகளிர் ஆணையம் மூலமாக பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் ஒருங்கிணைத்து நடத்துகிறது.

தமிழ்நாடு சமூக நல வாரியம்

தமிழ்நாட்டில் 1954-ஆம் ஆண்டில் துவக்கப்பட்ட தமிழ்நாடு சமூகநல வாரியம், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மகளிர் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக பின்வரும் நோக்கங்களுடன் செயல்பட்டு வருகிறது:-

1. மகளிர் மற்றும் குழந்தைகள் தொடர்பான தன்னார்வ

முயற்சிகளை ஊக்குவித்து மேம்படுத்துதல்.

2. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதியுதவி அளித்து அவற்றின் சேவைகளின் தரத்தையும் மதிப்பையும் உயர்த்துதல்.

3. மாநில மற்றும் மத்திய சமூகநல வாரியங்களின் திட்டங்களையும் மாநில அரசின் திட்டங்களையும் நன்முறையில் செயல்படுத்துவதைக் கண்காணித்தல்.

தமிழ்நாடு சமூகநல வாரியம் ஒரு தலைவரையும் 30 அலுவல் சாரா உறுப்பினர்களையும் கொண்டுள்ளது. கல்வி மற்றும் பயிற்சி மூலமாக பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், கூட்டு முயற்சி, விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் வாழ்வாதாரத்திற்கு வருவாய் பெருக்கும் நடவடிக்கைகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை தனது சேவைகளின் மூலம் தமிழ்நாடு சமூக நல வாரியம் ஊக்கப்படுத்தி உதவி செய்கிறது.

தமிழ்நாடு சமூகநல வாரியத்தின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு தமிழக அரசால் வழங்கப்படும் மானியம்

மகளிர் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற பணியில் ஈடுபட்டுள்ள, சங்கங்கள் பதிவுச் சட்டம் அல்லது பொது அறக்கட்டளை சட்டத்தின் கீழ் பதிவு செய்து, குறைந்தபட்சம் 3 வருடங்கள் சிறப்பாக செயல்படும் 200 தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு மானியம் வழங்குவதற்கு தமிழ்நாடு சமூக நல வாரியத்திற்கு ரூ10.00 இலட்சம் வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திற்கும் மாநில அரசின் 50% பங்காக ரூ5,000 மானியமாக வழங்கப்படுகிறது.

இத்திட்டத்திற்கென 2017-18ஆம் நிதியாண்டிற்கு ரூ10.00 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடும்ப ஆலோசனை மையம் (மாநில அரசின் நிதி உதவி)

குடும்பங்களில் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிய நேரிடும் தம்பதிகளுக்கு ஆலோசனை வழங்கவும், தம்பதிகள் இருவரும் இணைந்து வாழ்வதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்கவும் குடும்ப ஆலோசனை மையம் என்ற திட்டம் உருவாக்கப்பட்டது.

இம்மையம் வரதட்சணை கொடுமை, தம்பதிகளுக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகள், குடிப்பழக்கத்தால் ஏற்படும் குடும்ப பிரச்சனைகள் மற்றும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு தகுந்த ஆலோசனையும் வழங்கி வருகின்றது.

தற்போது 6 குடும்ப ஆலோசனை மையங்கள், சென்னை , திருவள்ளூர், விழுப்புரம், திருவாரூர், திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் ஆண்டிற்கு ரூ4.80 இலட்சம் மாநில அரசால் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மத்திய மற்றும் மாநில அரசு நிதியுதவி மூலம் நடத்தப்படும் 3 குடும்ப ஆலோசனை மையங்கள் அனைத்து மகளிர் காவல் நிலையங்களைப் பயன்படுத்தி, அதன் மூலம் குடிப்பழக்கம், போதை பழக்கம், வரதட்சணைக் கொடுமை மற்றும் இதர குடும்ப பிரச்சனைகளுக்கு முறையான ஆலோசனை மூலம் சுமூகமாக தீர்க்கப்படுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தில் உரிய மதிப்போடு வாழ்வதற்கு ஏதுவாக ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. இதற்காக குடும்ப ஆலோசகர்களுக்கு கூடுதல் மதிப்பூதியமாக ஆலோசகர் ஒருவருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ3,500/- வீதம் மாநில அரசால் வழங்கப்படுகிறது.

மத்திய அரசு நிதியுதவி மூலம் நடைபெறும் திட்டங்கள்

தமிழ்நாட்டில் குடும்ப ஆலோசனை மையம் 1984 முதல் மத்திய அரசால் மத்திய சமூக நல வாரியம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் 62 மையங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2016-17ல் ரூ198.40 இலட்சம் நிதியுதவி பெறப்பட்டு 59,520 பயனாளிகள் இத்திட்டத்தின் கீழ் பயனடைந்துள்ளார்கள்.

62 மையங்களில் 2 மையங்கள் சென்னை (புழல்) மற்றும் வேலுாரில் உள்ள மத்திய பெண்கள் சிறைச்சாலையில் செயல்பட்டு வருகிறது, 3 மையங்கள் முறையே காவல் துறை ஆணையரகம், ஆயிரம் விளக்கு மற்றும் பூக்கடையில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் மூலம் 2016 - ம் ஆண்டில் வழங்கப்பட்ட நிதியுதவி விவரம்

தொண்டு நிறுவனங்களின்

எண்ணிக்கை

மொத்த அலகுகள் எண்ணிக்கை

மொத்த நிதி ஒதுக்கீடு

(இலட்சம்)

பயனாளிகள் எண்ணிக்கை

மாநில அரசு

207

209

17.32

8,840

மத்திய அரசு

267

954

1,434.55

82,170

இராஜீவ் காந்தி தேசிய குழந்தைகள் காப்பகத் திட்டம் (தமிழ்நாடு சமூக நல வாரியம் மற்றும் இந்திய குழந்தைகள் நலச் சங்கம் மூலம் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டம்) பணிக்குச் செல்லும் மற்றும் நோய்வாய்ப்பட்ட தாய்மார்களுக்கு உதவும் வகையில் அவர்களின் குழந்தைகள் பயனடையும் வகையில் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. 6 மாதம் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் வெளியிலிருக்கும் போது காலை முதல் மாலை வரை பயிற்சி பெற்ற 2 பணியாளர்களால் கவனிப்பும் பராமரிப்புடுகிறது.

குழந்தைகளுக்கு மூன்று வேளை உணவு, பொழுதுபோக்கு மற்றும் கல்வி வசதிகள் அவர்களின் உடல் மற்றும் அறிவு வளர்ச்சிக்காக வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2016-2017 ஆம் ஆண்டில் 892 குழந்தைகள் காப்பகங்களிலுள்ள 22,650 குழந்தைகள் பயனடையும் வகையில் மத்திய அரசரூ1,236.15 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்துள்ளது.

தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நல வாரியம்

மூன்றாம் பாலினரின் நலனைக் கருத்திற்கொண்டு, அவர்களை சமூக வாழ்வின் அனைத்து நிலைகளிலும் ஒன்றிணைப்பதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகைளை எடுத்துள்ளது. மூன்றாம் பாலினரின் பிரச்சனைகளைப் பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் தீர்வு செய்வதற்காக அரசு, மூன்றாம் பாலினருக்கான நல வாரியத்தை அமைத்துள்ளது. தமிழ்நாடு மூன்றாம் பாலினர் நலவாரியம் மாண்புமிகு அமைச்சர் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டம் அவர்களைத் தலைவராகக் கொண்டு, அவர் உட்பட 11 அலுவல் சார் உறுப்பினர்கள் மற்றும் 9 அலுவல் சாரா உறுப்பினர்களைக் (மூன்றாம் பாலினர்) கொண்டது.

மூன்றாம் பாலினர் தங்களது வாழ்வாதாரத்திற்காக ஒழுக்கமும் மதிப்புமிக்க வகையில் தொழில் ஒன்றை அமைத்துக் கொள்வதே அவர்கள் எதிர்நோக்கும் சிக்கல்களில் முதன்மையானதாகும். மூன்றாம் பாலினர் தங்களது வாழ்வாதாரத்தை, பொருளாதார ரீதியாக உயர்த்திக் கொள்ளும் பொருட்டு வருவாய் ஈட்டும் நடவடிக்கைகள் மேற்கொள்ள அவர்களின் சுய உதவிக்குழுக்களுக்கு 25 சதவிகித மானியத்துடன் ரூ15.00 இலட்சம் வரை வங்கிக் கடன் அளிக்கப்படுகிறது.

மளிகை கடை அமைத்தல், கறவை மாடுகள் வளர்த்தல், சிற்றுண்டி உணவகம் அமைத்தல், சோப்பு உற்பத்தி செய்தல், அணை ஆடை உற்பத்தி செய்தல், பால் பொருட்களை உற்பத்தி செய்தல், பயணிகள் ஆட்டோ, சரக்கு ஆட்டோ ஓட்டுதல் மற்றும் துணி வியாபாரம், அரிசி வியாபாரம் போன்ற பல்வேறு பொருளாதார செயல்பாடுகளை மூன்றாம் பாலினர் சுய உதவிக் குழுக்கள் மூலம் செய்து வருகின்றனர். பல்வேறு திட்டங்களுக்காக, 442 உறுப்பினர்களைக் கொண்ட 51 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ2.20 கோடி மொத்த உதவித் தொகையில் 25 சதவிகித மானியமாக ரூ55.00 இலட்சமும், வங்கிக் கடனாக ரூ1.65 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழக அரசு, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற மூன்றாம் பாலினர்களுக்கு உதவிடும் வகையில், மாதாந்திர ஓய்வூதியம் ரூ1000 வழங்கும் திட்டத்தைத் தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் தற்போது 1,000 மூன்றாம் பாலினர் மாதந்திர ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். பிறப்புச் சான்றிதழ், கல்விச் சான்றிதழ், சாதிச்சான்றிதழ் மற்றும் பிற முக்கிய ஆளறி அட்டைகளான குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற ஆவணங்கள் மற்றும் வீட்டு வசதிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட துறைகளின் மூலம் மூன்றாம் பாலினருக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றாம் பாலினரின் நலத் திட்டத்திற்காக 2017 - 2018 ஆம் நிதியாண்டில் ரூ220.00 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்கான நலச் சட்டங்கள்

மகளிரின் பாதுகாப்பிற்காக கீழ்க்காணும் சமூக நலச் சட்டங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையை முகமையாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன –

1. வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961

2. குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005 மற்றும் அதன் விதிகள், 2006

3. பணிபுரியும் இடங்களில் பாலியல் வன்முறைகளிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் (தடுப்பு, விலக்கு மற்றும் சீர்படுத்தும்) சட்டம், 2013

4. தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம், 2014 மற்றும் தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) விதிகள், 2015

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005

  • இச்சட்டம் சமுதாயத்தில் வன்முறை இல்லாத குடும்பத்தில் பெண்கள் வசிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் சிறப்பு அம்சங்களை உள்ளடக்கிய சட்டமாகும்.
  • இச்சட்டம் பெண்கள் புகுந்த வீட்டில் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறது. மேலும் இச்சட்டம் உரிமையியல் மற்றும் குற்றவியல் பிரிவுகளைக் கொண்டுள்ளது.
  • பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளித்த 60 நாட்களுக்குள் தீர்வு பெற முடியும். இச்சட்டத்தின் கீழ் குடும்ப வன்முறையினால் பாதிக்கப்பட்ட பெண்கள் தனது கணவர் மற்றும் கணவரைச் சார்ந்த உறவினர்கள் மீதும் வழக்கு தொடருவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • இச்சட்டம் குடும்பத்திற்குள் ஏற்படும் வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்குகிறது.

இச்சட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

* பிரிவு 17ன் கீழ் பெண்கள் தனது புகுந்த வீட்டில் வசிப்பதற்கான உரிமையை உறுதி செய்தல்.

* எதிர் மனுதாரர் குடும்ப வன்முறை புரிவதிலிருந்து தடுத்திடும் பாதுகாப்பு ஆணை.

* பராமாரிப்புச் செலவினத்திற்கான நிதியுதவி வழங்குதல்.

* வார்த்தைகள் மற்றும் மனரீதியான கொடுமைகளை கண்டறிதல்.

• பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளைத் தற்காலிகமாக தன்னுடன் வைத்துக் கொள்வதற்கான பாதுகாப்பு வழங்குதல்.

* உணர்வுப் பூர்வமான துன்பங்கள் மன உளைச்சல் மற்றும் காயங்களுக்கு இழப்பீடு வழங்குவதை உறுதி செய்தல்.

* வழக்கு பதிவு செய்த 60 நாட்களுக்குள் இடைக்கால ஆணை மற்றும் நீதிமன்ற தீர்ப்பினை பெற்று வழங்குதல்.

* ஒரே வழக்கில் பல தீர்ப்புகளை பெற இச்சட்டம் வழிவகை செய்துள்ளது.

* பாதிக்கப்பட்ட நபர்களுக்கிடையே மற்ற வழக்கு விசாரணைகள் நிலுவையிலிருந்த போதிலும் குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005ன் கீழ் வழக்குகளை பதிவு செய்யலாம்.

* குற்றவியல் அமர்வு நீதிமன்றத்தின் ஆணையினை எதிர்த்து 30 நாட்களுக்குள் மனுதாரர் மற்றும் எதிர் மனுதாரர் மேல் முறையீடு செய்யலாம்.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் கீழ் கிடைக்கும் நிவாரணங்கள் பின்வருமாறு:-

பிரிவு 18 - பாதுகாப்பு ஆணை

பிரிவு 19 - கணவர் வீட்டில் தங்குவதற்கான வசிப்பிட ஆணை

பிரிவு 20- பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர் தம் குழந்தைகளைப் பராமரிப்பதற்கான பொருள் உதவி ஆணை

பிரிவு 21 - குழந்தைகளைத் தற்காலிகமாக வைத்துக் கொள்வது

பிரிவு 22 – வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான இழப்பீட்டு ஆணை

பாதுகாப்பு அலுவலர்கள்

மனுதாரருடன் உறவு முறையில் உள்ள எதிர் மனுதாரரால் இழைக்கப்பட்ட குடும்ப வன்முறையினை எதிர்த்து வழக்கு பதிவு செய்திட, பாதுகாப்பு அலுவலர்கள் அரசால் நியமிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் நீதிமன்றத்தை நாடிட பாதுகாப்பு அலுவலர் உதவி புரிவார். இவர் உரிய நீதிமன்றத்தின் மூலம் தேவையான நிவாரணம் பெறுவதற்கு சட்ட உதவியை மனுதாரருக்கு அளிப்பதை உறுதி செய்வார்.

மேலும் நீதிமன்றத்தினால் வழங்கப்படும் ஆணைகளை காவல்துறையின் உதவியோடு செயல்படுத்துவதற்கு உறுதுணையாக இருப்பார். ஒவ்வாரு மாவட்டத்திலும் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர்கள் இருப்பார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இச்சட்டத்தின் கீழ் நேரடியாக நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திலோ அல்லது சேவை அளிக்கும் நிறுவனத்திலோ அல்லது அருகிலுள்ள காவல் துறையிலோ புகார் மனு அளிக்கலாம்.

சேவை அளிப்பவர்கள்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், 2005-ன் கீழ் அறிவிப்பு செய்யப்பட்டுள்ள தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த நபர்கள் சேவை அளிப்பவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இச்சட்டத்துடன் தொடர்புடைய அரசு அலுவலர்களுடன் இணைந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், நிவாரணமும் பெற்றுத்தர உதவி செய்கின்றனர்.

பாதிக்கப்பட்ட பெண்களுக்கு குடும்ப நிகழ்வு அறிக்கை பதிவு செய்வதில் உதவுதல், தங்களது குழந்தைகளுடன் தங்குவதற்கு பாதுகாப்பான குறுகிய கால உறைவிடம் பெற்றுத் தருதல், ஆலோசனை மற்றும் தேவையெனில் மருத்துவ வசதி வழங்குதல் போன்ற உதவிகளை செய்கின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் சுயமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏதுவாக தொழிற்பயிற்சி பெறவும் உதவி செய்கின்றனர். ஒரு மாவட்டத்திற்கு ஒருவர் என்றும் சென்னை மாவட்டத்திற்கு இரு சேவை அளிப்பவர்கள் என்று மொத்தம் 33 சேவை அளிப்பவர்கள் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு இல்லங்கள் மற்றும் மருத்துவ வசதிகள்

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம், 2005-ஐ செயல்படுத்திட அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் படி தமிழகத்தில் 98 பாதுகாப்பு இல்லங்கள் அறிவிக்கை செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிடும் வகையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், தொழிலாளர் காப்பீட்டு நிறுவன மருந்தகங்கள் போன்றவற்றை சேர்த்து மொத்தம் 1,849 மருத்துவமனைகள் மருத்துவ வசதி மையங்களாக அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன.

வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961

1961ஆம் ஆண்டு வரதட்சணை தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டதுடன் தமிழ்நாடு வரதட்சணை தடுப்பு விதிகள், 2004ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. வரதட்சணை தடுப்பு விதிகள், 2004ன் படி மாவட்ட சமூக நல அலுவலர்கள், வரதட்சணை தடுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டு, அவர்கள் மூலம் இச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது. இச்சட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்த அனைத்து மாவட்ட சமூக நல அலுவலர்களுக்கும் தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரதட்சணை தொடர்பாக மாவட்ட சமூக நல அலுவலர்களால் நேரடியாக பெறப்படும் புகார் மனுக்கள் மற்றும் காவல் துறையின் மூலம் பெறப்படும் புகார் மனுக்கள் ஆகியவை வரதட்சனை தடுப்பு அலுவலர்களால் விசாரிக்கப்படுகின்றன. புகாரின் உண்மைத் தன்மை மாவட்ட சமூக நல அலுவலர்களால் கண்டறியப்பட்டு, அதன் அடிப்படையில் வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961ன் கீழ் உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறைக்கு / நீதிமன்றத்திற்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படுகிறது. ஆண்டுதோறும் நவம்பர் 26-ஆம் நாள் வரதட்சனை தடுப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அன்றைய தினம், மாவட்ட சமூக நல அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து வரதட்சணை தடுப்புச் சட்டம், 1961 பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் ஒழுங்கு முறைப்படுத்தும்) சட்டம், 2014

வீட்டை விட்டு வெளியில் தங்கியுள்ள குழந்தைகள், பெண்கள், பணிபுரியும் மகளிர் ஆகியோர்களின் பாதுகாப்பினை அதிகப்படுத்தவும், அவர்களுக்கு எதிரான வன்முறை செயல்களை தடுக்கவும், குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லங்கள், விடுதிகள் மற்றும் ஏனைய பிற தங்கும் இடங்களின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்காக, தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) சட்டம், 2014 அரசால் இயற்றப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாடு மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான விடுதிகள் மற்றும் காப்பகங்கள் (ஒழுங்குமுறைப்படுத்தும்) விதிகள், 2015, தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இது போன்ற இல்லங்கள் மற்றும் விடுதிகளை பதிவு செய்யும் அதிகாரி மாவட்ட ஆட்சியரே ஆவார். தேவையின்றி குழந்தைகளை இல்லத்தில் வைத்திருப்பதை குறைப்பதும், விடுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதும் இச்சட்டத்தின் நோக்கமாகும்.

மாநில பெண்கள் வள மையம் (SRCW)

பெண்களின் ஒட்டுமொத்த திறன் மேம்பாட்டினை முதன்மை நோக்கமாக கொண்டு, தேசிய பெண்கள் மேம்பாட்டிற்கான குழுமம் விழிப்புணர்வு உருவாக்கும் நிகழ்ச்சிகள் வழியாக பெண்களை மையமாக கொண்ட பிற திட்டங்களை ஒருங்கிணைத்து மாநில பெண்கள் வள மையத்தினை சமூக நல இயக்ககத்தில் செயல்படுத்தி வருகிறது.

மாநில பெண்கள் வள மையம் இந்திய அரசின் கீழ்க்காணும் பல்வேறு திட்டங்களை 2012 முதல் நடைமுறைப்படுத்தி வருகிறது:-

சகி - (ஒன் ஸ்டாப் சென்டர்) Sakhi - (One Stop Centre)

தனியார் மற்றும் பொது இடங்களில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த அவசர மற்றும் அவசரம் அல்லாத உதவிகளான மருத்துவம், சட்டம், மன நல மேம்பாடு மற்றும் கலந்தாய்வு ஆகியவற்றை பெற்றுத் தருவது இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.

அரசால் முன்னோடி திட்டமாக சென்னையில் சகி தொடங்கப்பட்டுள்ளது. இம்மையம் துயருறும் சூழலில் உள்ள பெண்களுக்கு ஆலோசனை, மருத்துவம், சட்ட உதவி மற்றும் குறுகிய கால தங்கும் வசதிகள் ஆகியவற்றை வழங்குகிறது.

பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவித் திட்டம் (Women Help Line)

உதவி மற்றும் தகவல் தேவைப்படும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 24 மணி நேர இலவச கட்டணமில்லா தொலைபேசி சேவை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இத்திட்டம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி மற்றும் நெருக்கடி அல்லாத நிகழ்வுகளில் உரிய முகமைகளான காவல் துறை / மருத்துவம்/ விரைவு ஊர்தி சேவை மாவட்ட சட்ட ஆணைக்குழு | பாதுகாப்பு அலுவலர் ஆகியோர் எளிதில் அணுகுவதற்கு வழிவகை செய்கிறது. இவ்வாண்டில் சென்னையில் சகி (ஒன் ஸ்டாப் சென்டர்) பெண்களுக்கான கட்டணமில்லா தொலைபேசி உதவித் திட்டத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.

கிராம் ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகளை எளிதாக்கும் திட்டம் (VCFS)

மாநிலத்தில் அனைத்து துறைகளிலும் மகளிருக்கு முழுமையாக அதிகாரமளிப்பதற்கு பாடுபடுவது இதன் முக்கிய இத்திட்டத்தின் நோக்கம் ஆகும். இது, மகளிருக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்களை முனைப்புடன் ஒருங்கிணைப்பதன் வாயிலாக பாலின உணர்வு குறித்த திட்டங்கள், சட்டங்கள் மற்றும் திட்டங்களை செயல்படுத்துவதற்கு, மகளிருக்கு அதிகாரமளிக்கும் விவகாரங்களில் ஈடுபடும் அரசுக்கும், ஏனைய பொறுப்பாளர்களுக்கும் உதவுகிறது. தமிழ்நாட்டில் கிராம ஒருங்கிணைப்பு மற்றும் சேவைகளை எளிதாக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு கடலூர் மாவட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

பூர்ண சக்தி கேந்திரா (Poorna Sakthi Kendra)

அடித்தட்டு அளவில் உள்ள பெண்களுக்கு சேவைகளை வழங்குவதும், தரத்தினை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். மத்திய அரசில் தேசிய பெண்கள் மேம்பாட்டுக் குழுமத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் 10 கிராம பஞ்சாயத்துகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் உள்ள கிராம் மற்றும் வட்டார அளவில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் ஒருங்கிணைப்பு சேவைகள் மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து வழங்கப்பட்டு வருகின்றன.

வதார் கிரஹ்

'சுவதார் திட்டம்' மற்றும் குறுகிய கால தங்கும் இல்லங்கள்' ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து 'சுவதார் கிரஹ்' என்ற புதிய திட்டம் மத்திய அரசால் 2016-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி தமிழ்நாடு சமூக நல வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்ட 26 குறுகிய கால தங்கும் இல்லங்களும் சமூகப் பாதுகாப்பு இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த 12 சுவதார் இல்லங்களும் இணைக்கப்பட்டு சமூக நல இயக்ககத்தின் கீழ் சுவதார் கிரஹ் இல்லங்களாக செயல்பட்டு வருகின்றன.

தற்போது மாநிலத்தில் 38 சுவதார் கிரஹ் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் துயருறும் சூழ்நிலையில் உள்ள பெண்களுக்கு தங்குமிடம் மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு இல்லமும் 30 பெண்களின் தேவைகைளைப் பூர்த்தி செய்கிறது. இத்திட்டம் தன்னார்வத் தொண்டு நிறுவனம் மூலம் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கிடையே 60:30:10 என்ற நிதி பங்களிப்பின் அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மாநில விருதுகள்

பெண்களுக்காக உலகம் முழுவதும் மார்ச் 8 ஆம் தேதியை உலக மகளிர் தினமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சமூக சீர்திருத்தம், மகளிர் மேம்பாடு, மதநல்லிணக்கம், மொழித் தொண்டு, கலை, அறிவியல், பண்பாடு, கலாச்சாரம், பத்திரிகை, நிருவாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொண்டாற்றும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில், இத்துறைகளில் சிறப்புடன் பணியாற்றும் பெண்களில் ஒருவரை தேர்ந்தெடுத்து, அவ்வையார் விருது எனும் உயரிய விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

இவ்விருது பெறுபவருக்கு 8 கிராம் (22 காரட்) எடையுள்ள தங்கப்பதக்கம், ரூ1.00 இலட்சம் காசோலை, சால்வை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகிறது. பெண்களுக்காக சிறப்பாக பணியாற்றிய சிறந்த சமூக சேவகி மற்றும் பெண்களுக்காக சிறப்பாக தொண்டாற்றிய சிறந்த நிறுவனத்திற்கு சுதந்திர தின விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. சிறந்த சேவகிக்கு 10 கிராம் எடையுள்ள 22 காரட் தங்கப்பதக்கம், சால்வை மற்றும் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படுகின்றன. சிறந்த நிறுவனத்திற்கு ரூ50,000 ரொக்கப் பரிசுடன் சால்வை மற்றும் தங்கப்பதக்கம் வழங்கப்படுகின்றன.

ஆதாரம் : சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை

3.38461538462
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top