பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

முகப்பு பக்கம் / சமூக நலம் / மத்திய - மாநில அரசு திட்டங்கள் / கொள்கை விளக்கக் குறிப்பு / சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 5
பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை பாகம் - 5

சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரம்

எடை கண்காணித்தல்

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பிறந்த மாதம் முதல் 60 மாதம் வரையிலுள்ள குழந்தைகளின் எடை எடுக்கப்பட்டு, அவை உலக சுகாதார நிறுவன வளர்ச்சி பதிவேட்டில் பதியப்பட்டு, வளர்ச்சி வளைவின் அடிப்படையில் அவர்களின் ஊட்டச்சத்து நிலை கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்துக் குறைபாட்டினை குறைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அங்கன்வாடி மையங்களுக்கு எடைக் கருவிகள் வழங்குதல்

அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடி குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் எடையைக் கண்காணிக்க, வயதிற்கு ஏற்ற எடைக் கருவிகள், குழந்தைகள் எடைக்கருவிகள், பார் (Bar) எடைக்கருவிகள் மற்றும் பெரியவர்களுக்கான எடைக்கருவி போன்றவை வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பழுதடைந்த 15 சதவீத எடைக்கருவிகளை மாற்றி, வேறு எடைக்கருவிகள் வழங்கப்படுகிறது.

இரத்த சோகை

குழந்தைகள் மற்றும் பெண்களிடையே காணப்படும் மிக முக்கியமான பொது சுகாதார பிரச்சனைகளில் இரத்த சோகையும் ஒன்று. ஊட்டச்சத்துக் குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையின் கடுமையான பாதிப்புள்ள பச்சிளம் குழந்தைகள், முன்பருவக் கல்வி குழந்தைகள், வளரிளம் பெண்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இரும்புச்சத்து மாத்திரை/சிரப் வழங்கப்படுகிறது. மேலும், இரத்த சோகை நோயினைச் சமாளிக்க, இரும்புச் சத்து அதிகமான மற்றும் இரும்புச்சத்து செறிவூட்டப்பட்ட உணவின் முக்கியத்துவம் மற்றும் நன்மைகள் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் மருந்து பெட்டிகள் வழங்குதல்

அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் பாரசிடமால் மாத்திரை/சிரப், வாய்வழி கரைசல் பொட்டலங்கள், பொவிடோன் அயோடின் களிம்பு, பாண்டேஜ் துணி, பஞ்சு, இரும்புச் சத்து சிரப், குடற்புழு நீக்க சிரப், மல்டி வைட்டமின் சொட்டு மருந்து, ஜிங்க் (துத்தநாகம்) சத்து மாத்திரைகள் மற்றும் பொவிடோன் அயோடின் கரைசல் ஆகியவை அடங்கிய மருந்துப் பெட்டிகள் வழங்கப்படுகின்றன. இவை பொதுவான உடல் உபாதைகளான ஜூரம், பேதி, காயத்திற்கு மருந்து கட்டுவதற்கும், தோல் தொற்றுகளை குணப்படுத்தவும் உதவுகிறது. இம்மருந்துகள் மாநில பொது சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்கப்படுகின்றன. மருந்தை கையாளும் விதம், திறன், அறிவு, காலாவதியாகும் தேதி அதாவது மருந்தை வீணாக்குதல் தவறாக பயன்படுத்துதல், அளவு, பாதகமான விளைவுகள், குழந்தைகளுக்கு எட்டாத நிலையில் மருந்துகளை பாதுகாப்பாக வைத்தல், போன்ற தகுந்த வழிமுறைகள் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மூலம் மருந்துகள் பெறப்பட்டு அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. உயர் சிகிச்சை தேவைப்படும் குழந்தைகள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் / அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

தடுப்பூசித் திட்டம்

ஒரு நபர் தொற்றுநோயால் பாதிக்கப்படும்பொழுது, அத்தொற்றினை தடுப்பதற்கு தடுப்பூசி போடப்படுகிறது. இத்தடுப்பூசி அடுத்தடுத்த தொற்றுகள் அல்லது நோய்களுக்கு எதிராக அந்த நபரை பாதுகாப்பதற்கும், உடலிலுள்ள நோய் எதிர்ப்பு அமைப்பினை தூண்டுகிறது. துணை சுகாதார நிலையத்தில் உள்ள கிராம சுகாதார செவிலியர் மற்றும் அங்கன்வாடி பணியாளர் இருவரும் இணைந்து கர்ப்பகால பராமரிப்பு மற்றும் தடுப்பூசிப் பணிகள் போன்றவற்றில் பயனாளிகளை திரட்டி ஊக்கமளித்து வருகின்றனர். மேலும் அங்கன்வாடி பணியாளர் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து, கிராம சுகாதார செவிலியருக்கு துணையாக உதவி செய்து வருகிறார். கிராமப்புற மக்களுக்கு அடிப்படை சுகாதார சேவைகள் கிடைக்க செய்வதில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் மிகவும் பங்கு வகிக்கிறது.

குழந்தை பிறந்தவுடன் அல்லது குழந்தைக்கு ஒரு வயது ஆவதற்கு முன்பு காசநோய் தடுப்பூசி (BCG) வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி குழந்தைகளுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி, மஞ்சள்காமாலை-பி, ஹிமோபிளஸ் இன்புளுயன்ஸா-B (நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல்) ஆகிய ஐந்து கொடிய நோய்களைத் தடுக்கும் வகையில் ஒரே தடுப்பூசி 21.12.2011 முதல் அறிமுகப் படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. தட்டம்மை மற்றும் ரூபெல்லா நிகழ்வுகளை குறைப்பதற்கென, தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி முகாம் சுகாதாரத் துறையினருடன் இணைந்து நடத்தப்பட்டு வருகிறது. அங்கன்வாடி மைய பயனாளிகள் 100 சதவிகிதம் பயன்பெறும் வகையில், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஊக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்குதல்

அங்கன்வாடி மையங்களில் முறைசாரா மற்றும் விளையாட்டு மூலமாக 2 முதல் 5 வரையுள்ள குழந்தைகளுக்கு மழலையர் கல்வி அளிக்கப்படுகின்றது. இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளின் உடல், மொழி, அறிவு, சமூக மன எழுச்சி மற்றும் அழகுணர்வைப் பாராட்டுதல் ஆகியவற்றினை மேம்படுத்துவதற்கு ஏற்ற கற்றல் சூழலை வழங்குவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து மையங்களுக்கும் முன்பருவக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இக்கல்வி உபகரணங்களைக் கையாள்வது பற்றி அங்கன்வாடி பணியாளர்களுக்கு உரிய பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய முன்பருவக் கல்வி குழந்தைப் பராமரிப்புக் கொள்கை, 2013-இன் படி அங்கன்வாடி மையங்களை "எழுச்சிமிகு முன்பருவ குழந்தை வளர்ச்சி மையங்களாக" மாற்றுவதற்கான செயல்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அங்கன்வாடி குழந்தைகளுக்கு வண்ணச் சீருடைகள் வழங்குதல்

அங்கன்வாடி மையங்களுக்கு வருகை புரியும் 2 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளை மேலும் ஊக்கப்படுத்தும் பொருட்டும், ஊட்டச்சத்து அளித்து, முன் பருவ கல்வி மற்றும் முறைசாரா கல்வி ஆகியவற்றினை வழங்குவது மட்டுமல்லாமல், அக்குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு தவறாது அனுப்பிட ஊக்கப்படுத்தும் வகையிலும், 2012-2013 ஆம் ஆண்டு, முன்னோடித் திட்டமாக மைய குழந்தைகளுக்கு ஒரு இணை வண்ணச் சீருடை ரூ125 செலவில் இரண்டு இணை வண்ணச் சீருடைகள் சென்னை, வேலூர், தேனி, திருச்சி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் வண்ணச் சீருடை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்திட்டம் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டதன் அடிப்படையில், விழுப்புரம், பெரம்பலுார், அரியலுார், நாகப்பட்டினம், மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களுக்கும் கூடுதலாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 3,74,243 குழந்தைகள் பயனடையும் வகையில் முழுமையான தமிழக அரசு நிதியாக ரூ9.36 கோடி ஒப்பளிக்கப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்

அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல்

அங்கன்வாடி மையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2011-2012 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் 15,313 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டடங்கள் பல்வேறு நிதி ஆதாரங்கள் மூலம் படிப்படியாக கட்டப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரூராட்சி துறை ஆகிய துறைகளின் வாயிலாக இதுவரை 8,092 மையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2016-2017ஆம் ஆண்டில் 1,000 அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மையத்திற்கு ரூ7.00 இலட்சம் வீதம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் புதிய கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் ஒருங்கிணைப்பு மூலம் 1,000 அங்கன்வாடி மையங்களுக்கு ஒரு மையத்திற்கு ரூ7.00 இலட்சம் வீதம் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளது.

அங்கன்வாடி மையம் மற்றும் மழலையர் பராமரிப்பகம் தோற்றுவித்தல்

பணிக்குச் செல்லும் தாய்மார்களின் 5 வயது வரையுள்ள குழந்தைகளைப் பராமரிப்பதற்கென "211 அங்கன்வாடி மற்றும் மழலையர் பராமரிப்பகங்கள்” 2014-2015 ஆம் ஆண்டில் சென்னை , திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், பெரம்பலூர், சேலம், திண்டுக்கல், கோயம்புத்துார், புதுக்கோட்டை, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 13 மாவட்டங்களில் ரூ2.31 கோடி செலவில் தொடங்கப்பட்டுள்ளன. இதுவரை 3,125 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

அங்கன்வாடி மையங்களை நவீனமயமாக்குதல்

அங்கன்வாடி மையங்களில் சமைக்கும் நேரத்தை சேமிக்கவும், சத்தான உணவு சமைக்கவும், புகையில்லாமல் சுற்று சூழலைப் பாதுகாக்கவும் ஒவ்வொரு மையத்திற்கும் எரிவாயு இணைப்புடன் அடுப்பு, பிரஷர் குக்கர் மற்றும் சமையல் மேடை அமைத்தல் ஆகிய பணிகளுக்காக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 54,439 மையங்களில், இதுநாள் வரையில் 50,201 அங்கன்வாடி மையங்கள் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 4,238 மையங்களையும் படிப்படியாக நவீன மயமாக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வளரிளம் பெண்களுக்கான திட்டங்கள்

கிஷோரி சக்தி யோஜனா

இத்திட்டம் 23 மாவட்டங்களை உள்ளடக்கிய 295 வட்டாரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 11 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லா வளரிளம் பெண்களின் வாழ்க்கைத்தரம், தொழிற்திறன் மற்றும் ஆளுமைத் திறனை மேம்படுத்துவதற்காகவும், தன்சுத்தம், சுகாதாரம், ஊட்டச்சத்து, சட்ட உரிமைகள், குடும்ப நலன் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகிய தகவல்கள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதை நோக்கமாகவும் கொண்டுள்ளது. 16 முதல் 18 வயதான வளரிளம் பெண்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மூலம் ஆடை வடிவமைப்பு, ஜர்தௌசி வேலைப்பாடு, செயற்கை ஆபரணங்கள் தயாரிப்பு, கோழி வளர்ப்பு, அலைபேசி பழுது நீக்கச் சேவை, அலங்கார மீன்கள் வளர்ப்பு, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் பழுதுநீக்கம் மற்றும் அடிப்படை மின்சார சேவைகள் போன்ற துறைகளில் தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், அடிப்படை பயிற்சிக்கான செலவுத் தொகை, பயணப்படி தொகை, தங்கும் வசதி மற்றும் உணவிற்கான செலவுத் தொகை, ஆய்விற்கான செலவினம் போன்றவை, இத்திட்டத் தொகையுடன் சேர்த்து, கூடுதலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மேற்கொள்ளப்படுகிறது. கிஷோரி சக்தி யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு ரூ1.60 கோடி மத்திய அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வளரிளம் பெண்களுக்கான திட்டம் (சப்லா)

வளரிளம் பெண்களின் பல்வேறு பரிமாணங்களில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணும் நோக்கில் இத்திட்டம் 2011-2012-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை, கோயம்புத்தூர், கடலூர், இராமநாதபுரம், திருவண்ணாமலை மதுரை, சேலம், கன்னியாகுமரி மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 139 வட்டாரங்களில் முன்னோடித் திட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், இணை உணவு வழங்குதல் மற்றும் இணை உணவு அல்லாத பிற பணிகள் என இரண்டு பிரிவுகளின் கீழ் நலப்பணிகள் அளிக்கப்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்யப்பட்ட 11 முதல் 18 வயதான பள்ளி செல்லாத வளரிளம் பெண்கள் மற்றும் 15 முதல் 18 வயதான பள்ளி செல்லும் அனைத்து வளரிளம் பெண்களுக்கும் இணை உணவு, வீட்டுக்கு எடுத்து சென்று பயன்படுத்தும் வகையில் வருடத்தில் 300 நாட்களுக்கு, தலா ஒரு நபருக்கு நாளொன்றுக்கு ரூ8.30 செலவில் வழங்கப்படுகிறது.

இதற்கான 50 சதவிகித நிதியினை மாநில அரசு அளிக்கிறது. இணை உணவிற்கென 2016-2017ஆம் வருடத்திற்கு ரூ95.44 கோடி செலவினம் மேற்கொள்ளப்பட்டு, இத்திட்டத்தின் மூலம் 4.12 இலட்சம் வளரிளம் பெண்கள் பயனடைந்துள்ளனர். வளரிளம் பெண்களுக்கான இணை உணவு அல்லாத பிற பணிகளின் கீழ், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமில மாத்திரை வழங்குதல், வாழ்க்கைத் திறன் கல்வி, ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரக்கல்வி அளித்தல், வளரிளம் பெண்களை கல்வி பயில ஊக்குவித்தல், ஆலோசனை வழங்குதல், உடல் பரிசோதனை செய்தல், தொழிற்பயிற்சி அளித்தல் போன்ற நலப்பணிகள் அளிக்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் 16 முதல் 18 வயதுடைய வளரிளம் பெண்களுக்கு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட பயிற்சி நிலையங்கள் மூலமாகவும், அழகுக்கலைப் பயிற்சி, கணினி பயிற்சி, தையற்பயிற்சி, வீட்டு உபயோகப்பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி, அடிப்படை மின்சாரப் பணிகள் பயிற்சி, கைவினைப் பொருட்கள் செய்யும் பயிற்சி என பல பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இப்பயிற்சிகளின் மூலம் வளரிளம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதால் அவர்களின் பொருளாதார நிலை மேம்பாடு அடைகிறது.

மகப்பேறு நிதியுதவித் திட்டம் (Matritva Sahyog Yojana - MSY)

மத்திய அரசு 2011-2012ஆம் ஆண்டில் மகப்பேறு நல உதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் வாயிலாக தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முலம் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்துடன் இணைந்து முன்னோடி திட்டமாக கடலூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நல உதவியாக ரூ4,000-ஐ வழங்கி வந்தது.

பின்னர் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி, 2013-ஆம் ஆண்டு, ஜீலை மாதம் முதல் கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு வழங்கப்பட்டு வந்த பணப்பயன் ரூ6,000 ஆக உயர்த்தப்பட்டு நிபந்தனைகளுக்குட்பட்ட மாநில அரசின் 60:40 என்ற விகித நிதிப்பகிர்வின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது, இந்த மகப்பேறு நல நிதியுதவித் திட்டம் நிபந்தனைகளுக்குட்பட்டு பயனாளி ஒருவருக்கு ரூ6,000 என மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் 01.01.2017 முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இவ்விரிவுபடுத்தப்பட்ட மகப்பேறு நல உதவித் திட்டம் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முலம் செயல்படுத்தப்பட்டு வரும் டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு உதவித் திட்டத்தில் வழங்கப்பட்டு வரும் உதவித் தொகை ரூ18,000-த்துடன் இணைந்து வழங்கப்பட்டு வருகிறது.

பயிற்சி

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பயிற்சி என்பது முக்கிய அடிப்படை அம்சமாக உள்ளது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட சேவைகளைத் திறமையாகவும், தரமாகவும், மேம்படுத்தப்பட்ட வகையிலும் வழங்கி திட்டப்பணிகளின் நோக்கத்தை அடைவது என்பது திட்டத்தினை களத்தில் முன்னெடுத்து செல்லும் களப்பணியாளர்களின் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. சமுதாயத்தில் அனைத்து தகுதி பெற்ற பயனாளிகளுக்கும் திட்ட சேவைகளை வழங்குவதிலும், திட்டப் பணியாளர்களின் செயல்பாடுகளின் தரத்தினை உறுதி செய்வதிலும், அதைத் தக்க வைப்பதிலும் அவர்களுக்கான திறன்வளர்ப்பு முயற்சிகள் முக்கிய அம்சமாக விளங்குகின்றன. மேலும், சமுதாய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டில் மக்களை ஒருங்கிணைத்து செல்லும் பற்பல உத்திகளை திறமையாக கையாள், நன்கு பயிற்சி பெற்ற களப்பணியாளர்களே மிகுந்த திறன் பெற்றிருப்பார்கள். அதற்கேற்ப, அனைத்து கடைநிலை திட்டப் பணியாளர்களுக்கும், தெளிவான அறிவு (ம) திறன் மேம்பாடு பெறத்தக்க வகையில் பயிற்சித் திட்டம் உருவாக்கப்படுகிறது.

இதன் மூலம் அவர்கள் திட்டப் பயன்களை திறம்பட கொண்டு செல்பவர்களாக இருப்பதுடன், சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரிடையே நல்ல பழக்க வழக்கங்கள் மற்றும் மனமாற்றங்களை ஏற்படுத்தும் “சமூக முகவர்களாகவும் “மாற்று” முகவர்களாகவும் செயல்படுவர். தமிழ்நாட்டில் மட்டுமே பரவலாக்கப்பட்ட, தனித்துவம் வாய்ந்த, மூன்றடுக்கு பயிற்சி முறை அனைத்து நிலை களப்பணியாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. திறன் மிக்க, செலவு குறைவான, பொருளாதார பயன் நிரம்பிய, இப்பயிற்சி முறை பல தரப்பாலும் சிறப்பாக பாராட்டப்படும் முறையாக உள்ளது. அது மட்டுமின்றி பயிற்சிகள் அளிக்கப்படும் போதும், மேற்பார்வையாளர்களின் களப்பணியின் போதும், பயிற்சி மதிப்பீடு உடனுக்குடன் செய்யப்பட்டு தேவையான உரிய வழிகாட்டுதல்கள் களத்தில் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு திட்டப் பகுதியிலும் களப்பணியாளர்களுக்கு பணிப்பயிற்சி மற்றும் புத்தாக்கப் பயிற்சி அளிப்பதற்கு ஒரு பயிற்றுனர் பணிபுரிந்து வருகிறார்.

மாநில அளவில், இடைநிலை அளவில் மற்றும் திட்ட அளவில், பல்வகை பணியாளர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் விபரம்:

வ. எண்.

பயிற்சி நடைபெறும் இடம்

பயிற்சியின் பெயர்

பயிற்சியின் பெயர்

1

மாநில பயிற்சி மையம், தரமணி, சென்னை -113

பணிப்பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சி

குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்

2

பணிப்பயிற்சி புத்தறிவுப் பயிற்சி (ம) புத்தாக்கப்பயிற்சி

அங்கன்வாடி பயிற்சி. மைய பயிற்றுநர்கள் (மேற்பார்வையாளர்கள் நிலை -1)

3

இடைநிலை பணிப் பயிற்சி மையம், இந்திய குழந்தைகள் நலச்சங்கம், சென்னை .

பணிப் பயிற்சி/ புத்தாக்கப்பயிற்சி

மேற்பார்வையாளர் நிலை –,,

4

மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களில், திட்ட அளவிலான பயிற்சி

பணி மற்றும் புத்தாக்கப்பயிற்சி

அங்கன்வாடி பணியாளர்கள்

5

பணிப் பயிற்சி புத்தறிவுப் பயிற்சி மற்றும் புத்தாக்கப்பயிற்சி

அங்கன்வாடி உதவியாளர்கள்

மேற்கண்ட வழக்கமான பயிற்சிகள் தவிர “பிற பயிற்சி” என்கிற பிரிவின் கீழ் மாநில அளவில் தேவைக்கேற்ப குறிப்பிட்ட தலைப்புகளில், பயிற்சித் திட்டங்களைக் கண்டறிந்து, வடிவமைத்து பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. திட்டப்பகுதிகளில் சூழ்நிலைக்கேற்ப புதிய முயற்சிகளை கையாளுதல், வாழ்க்கை-வேலை இரண்டிற்கும் இடையே சமநிலையை உறுதி செய்தல் போன்றவற்றில் திறன் மிக்கவர்களாக களப்பணியாளர்களை உருவாக்கிட உளவியல் முன்னேற்றம், மன அழுத்தத்தைக் கையாளுதல், யோகா போன்ற பயிற்சிகள் களப் பணியாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. இவற்றைத் தவிர, மாநில அளவில் முறையான பயிற்சி திட்டங்களின் கீழ் வழங்கப்படும் பயிற்சி பாடத்திட்டத்தில் 25% தேவைக்கேற்ப மாற்றம் செய்து கொள்ள அனுமதிக்கப் பட்டுள்ளதால், அதிக கவனம் தேவைப்படும் முக்கியத்துவம் நிறைந்த, புதிய பாடத் தலைப்புகளும் பயிற்சியின் போது, பரிசீலிக்கப்பட்டு, பயிற்சி வழங்கப்படுகிறது. சமுதாயத்தில் குழந்தைப் பராமரிப்பு முறைகளை அவர்களின் பங்களிப்புடன் மேம்படுத்துதல், பிறதுறையினருடன் ஒருங்கிணைந்து செயல்படுத்துதல் போன்றவற்றில் களப்பணியாளர்களின் செயல்திறன்களைப் பொறுத்தே, திட்டத்தின் நோக்கமும் இலக்குகளும் அடைய வேண்டிய சாதனைகளை எளிதில் அடையும் என்பதால், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தில் பயிற்சி என்பது மிகவும் முக்கியமான பிரிவாக உள்ளது.

தகவல், கல்வி, தொடர்பு மற்றும் விழிப்புணர்வு பணிகள்

வளரிளம் பெண்கள், கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான பராமரிப்பு, சரியான ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரப் பழக்க வழக்கங்கள் போன்றவை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், திட்டப் பணிகளைச் செயல்படுத்துவதில் சமுதாயப் பங்கேற்பை அதிகப்படுத்தவும் பல்வேறு தகவல், கல்வி மற்றும் தொடர்பு பணிகள் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. “சமுதாய வளைகாப்பு”, “பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள், ஊட்டச்சத்து வார விழா, தாய்ப்பால் வார விழா, வானொலி மற்றும் தொலைக்காட்சியில் திட்டம் பற்றி விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறான தகவல் தொடர்புப் பணிகள் திட்டமிடப்பட்டு, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான கவனம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரம் தொடர்பான பழக்கவழக்கங்களில் சமுதாய பங்கேற்பினை ஊக்குவிக்க செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சுகாதாரம், ஊட்டச்சத்து, குழந்தை வளர்ச்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான சுவரொட்டி, தொங்கும் அட்டைகள், புத்தகங்கள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் அச்சிடப்பட்டு அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும், சுகாதார நிலையங்களுக்கும், குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. திட்டம் குறித்த புதியத் தகவல்கள் மக்களையும் பணியாளர்களையும் சென்றடைய "சிட்டுக்குருவி சேதி தெரியுமா?" என்ற இதழ் இருமாதங்களுக்கொருமுறை அச்சிடப்பட்டு அனைத்து அங்கன்வாடி மையங்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன. “பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள்” குறித்து பல்வேறான தகவல் தொடர்பு முனைப்பு இயக்கங்கள் மாவட்டம் மற்றும் வட்டார அளவில் நடத்தப்பட உள்ளன.

கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல்

திட்டம் தொடர்பான கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை என்பது அத்திட்டம் சிறந்த முறையில் செயல்படுவதற்கு மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோலின்படி திட்டத்தின் அளவிடப்பட்ட உள்ளீடுகள், செயல்பாடுகள், வெளியீடுகள் மற்றும் விளைவுகளைக் கண்காணிக்கவும், மேம்படுத்தவும் மாநில, மாவட்ட, வட்டார மற்றும் மத்திய அளவில் துணைபுரியவும், உதவி அளிக்க கூடிய வகையில் கண்காணிப்பு அமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அங்கன்வாடி மைய ஊழியர்களின் நலன்

தமிழகத்தில் உள்ள 54,439 அங்கன்வாடி மையங்களில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படுகிறது. இது தவிர அகவிலைப்படி, வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, மருத்துவப்படி, மலைவாழ்படி மற்றும் குளிர்காலப்படி மற்றும் ஆண்டொன்றிற்கு 3 சதவீதம் ஊதிய உயர்வும் வழங்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும் போது, ஒட்டுமொத்த ஓய்வுத் தொகையாக முதன்மை மற்றும் குறு அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு ரூ60,000மும், அங்கன்வாடி உதவியாளர்களுக்கு ரூ25,000மும் 01.02.2016 முதல் வழங்கப்படுகிறது. அங்கன்வாடி ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பின் சிறப்பு ஓய்வூதியமாக மாதந்தோறும் ரூ1,500 01.02.2016 முதல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இரண்டு புடவைகள் சீருடையாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் சிறப்பாக பணிபுரியும் 98 அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாநில விருதாக தலா ரூ5,000 ரொக்கப்பரிசும், பாராட்டுச்சான்றிதழும் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட குழுமம், ஊட்டச்சத்து மற்றும் சுகாதாரத்தில் பலவீனமான குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான ஒரு நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சமுதாயத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியறிவை மேம்பட செய்கிறது. இந்த குழுமம் இலக்கை எய்துகையில் முன்னேற்றமடையும் சமுதாயத்தை உருவாக்கி அதன் மூலம் மாநிலத்தின் சமூக பொருளாதாரக் குறியீட்டினை உயர்த்தும் என்பது திண்ணம்.

ஆதாரம் : சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை

2.85
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top