பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: கருத்து ஆய்வில் உள்ளது

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை 2018-19

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு ( 2018 - 2019 ) பற்றிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

முன்னுரை:

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், "அனைத்துத்தரப்பு மக்களின் நலன் கருதி, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா வழியில் நடைபெறும் இந்த அரசு பல புதிய திட்டங்களை வகுத்து அதனை விரைந்து செயல்படுத்துவதிலும், திட்டப் பலன்கள் பயனாளிகளுக்கு விரைந்து முழுமையாக சென்றடைவதைக் கண்காணிப்பதிலும் அதிக அக்கறை எடுத்துக் கொண்டுள்ளது”, என்று 2017-ம் ஆண்டு சுதந்திர தின உரையில் குறிப்பிட்டுள்ளார்கள்.

தமிழகத்தில் வாழ்கின்ற அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சி மற்றும் சமூக நீதியினை உறுதி செய்வதிலும், நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதற்கு ஏற்ற வகையில், அரசின் பல்வேறு முதன்மைத் திட்டங்கள் செயலாக்கப்படுவதை, அனைத்துத் துறைகளுடன் ஒருங்கிணைந்து கண்காணிக்கும் பணிகளை மேற்கொள்வதற்கு, மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் 2011ஆம் ஆண்டு மே திங்களில், உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை சிறப்புடன் செயலாற்றி வருகிறது.

மகளிருக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்கும் திட்டம் மற்றும் மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ஆகிய திட்டங்கள் இத்துறையின் மூலம் நேரடியாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அரசின் முதன்மைத் திட்டங்களான ஏழைகளுக்கு கறவைப்பசு வழங்குதல், வறியவர்களுக்கு விலையில்லா வெள்ளாடுகள்/ செம்மறி ஆடுகள் வழங்குதல், கிராமப்புற வீடில்லா ஏழைகளுக்கு பசுமை வீடுகள் வழங்குதல், திருமண உதவித் தொகையுடன் கூடிய திருமாங்கல்யத்திற்கு 22 காரட்டில் 8 கிராம் விலையில்லா தங்க நாணயம் வழங்குதல், மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் மற்றும் அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தின் மூலம் பணிபுரியும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்குதல் ஆகியவை அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

வேளாண்மை, எரிசக்தி, கல்வி, நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி, தொழில் மற்றும் உட்கட்டமைப்பு போன்ற முக்கிய பிரிவுகளில் நீடித்த மற்றும் சரிசமமான வளர்ச்சியை எய்திட தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு, திட்டங்களின் செயலாக்கத்தை இத்துறை கண்காணித்து வருகிறது.

துறையின் பணிகள் மற்றும் பொறுப்புகள்:

இத்துறையின் பணிகள் மற்றும் பொறுப்புகள் பின்வருமாறு:

> பல்வேறு நிகழ்வுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் விரைவான செயலாக்கம் மற்றும் முன்னேற்றத்தினைத் தொடர்ந்து கண்காணித்தல்.

> அரசின் சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளால் திட்டப் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்றடைவதற்கு தொடர்புடைய துறைகளுடன் ஒருங்கிணைந்து கண்காணித்தல்.

> மாவட்டங்களில் நடைபெறும் பணிகள் குறித்து கள ஆய்வுகள் மேற்கொள்ளுதல், மாவட்ட அளவில் சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உரிய மாவட்ட அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்துதல் மற்றும் திட்டச் செயலாக்கத்தில் உள்ள இடர்ப்பாடுகளைக் நீக்கிட உரிய நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தல்.

> சிறப்புத் திட்டங்களின் தரம் மற்றும் அளவு போன்ற அம்சங்கள் குறித்து அரசுக்குத் தேவையான செயற்குறிப்புகள் மற்றும் உரிய தீர்வுகளுக்கான ஆலோசனைசனைகளை வழங்குதல்.

> மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை மேலாய்வு செய்யும் மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்களின் கள் ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், திட்டங்கள் குறித்து கொள்கை அளவில் மாற்றங்கள் தேவைப்படுமாயின் அதன் விவரங்களை முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்திற்கு தலைமைச் செயலாளர் மூலம் அறிக்கையாக சமர்ப்பித்தல்.

> சிறப்புத் திட்டங்களின் பயன்கள் உரிய பயனாளிகளுக்கு சென்று சேர்ந்திடவும் பல்வேறு சேவைகளின் தரத்தினை உயர்த்திடவும் பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து, திட்டங்களின் வழிகாட்டி நெறிமுறைகளில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைத்தல்.

> பொருளாதார, சமுதாய மற்றும் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கருத்திற்கொண்டு, திட்டங்களின் செயல்பாடுகளை பகுப்பாய்வு செய்து திட்ட நடைமுறைகளை எளிமைப்படுத்துவதன் மூலம் அரசு நிறுவனங்களுக்கும் பொது மக்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பதற்கான மேற்கொள்ளுதல். வழிமுறைகளை

> அரசுக்குத் தேவையான சிறப்பு அறிக்கைகளைத் தயாரித்து அளித்தல்.

அரசின் சிறப்புத் திட்டங்கள் சீரிய முறையில் நிறைவேற்றப்படுவதை மேலாய்வு செய்திட விழிப்புடன் கூடிய ஆய்வு மற்றும் கண்காணிப்பு அமைப்பினை தலைமைச் செயலகத்தில் அரசு ஏற்படுத்தியுள்ளது. அரசுச் செயலாளர்களால் அனைத்து அறிவிப்புகள் நிறைவேற்றப்படுதலைக் இத்துறை கண்காணிக்கிறது. துறை தலைவர்களிடமிருந்து முதன்மைத் திட்டங்களின் செயலாக்கம் குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை பெற்று காலமுறை ஆய்வு செய்து கண்காணிப்புப் பணி மேற்கொள்ளப்படுகின்றது.

பல்வேறு சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதை முதன்மைப் பணியாகக் கொண்டு இத்துறை உருவாக்கப்பட்டுள்ளதால், அனுபவம் வாய்ந்த பொருளியல் (ம) புள்ளியியல் துறை, ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித் துறை, வருவாய்த் துறை மற்றும் தலைமைச் செயலக அலுவலர்களைக் கொண்டு இத்துறை இயங்கி வருகிறது.

கண்காணிப்பு:

திட்டங்களின் பயன்கள் பயனாளிகளுக்கு உரிய காலத்தில் சென்றடைவதை உறுதி செய்வதற்கு கண்காணிப்பு முறை அவசியமானது. அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் நிறைவேற்றப்படுவதைச் சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை கண்காணிக்கின்றது.

கண்காணிப்பு

முறைகள் :

அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்க நிலை தொடர்பான விவரங்களை துறைகளிடமிருந்து பெற்று மென்பொருளில் பதிவு செய்து இத்திட்டங்களின் செயலாக்கம் மற்றும் நிதிச் செலவினம் ஆகியவற்றின் நிலைகள் குறித்து உரிய விவரங்களை பல்வேறு கால இடைவெளிகளில் அரசுக்கு இத்துறை அளித்து வருகின்றது.

திட்ட பயன்கள் உரிய மக்களுக்குச் சென்றடைகின்றனவா என்பதை உறுதி செய்வதுடன், கள் அளவில் நிலவிவரும் பல்வேறு இடர்பாடுகளைக் கண்டறிவதற்கான விவரங்களையும் அளிக்கின்றது. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் பல்வேறு திட்டங்களின் முன்னேற்றம் குறித்த நிலையினை மதிப்பீடு செய்வதற்கும் உரிய விவரங்களைப் பெற்று பகுப்பாய்வு செய்வதற்கும் தொடர் கண்காணிப்பு வழிவகை செய்கின்றது.

அரசின் திட்டங்கள், திட்டமிட்டப்படி செயல்படுத்தப் படுகின்றனவா என்பதையும் திட்ட செயலாக்கத்தில் உள்ள பிரச்சினைகளைக் கண்டறிந்து செயலாக்கத்தினை விரைவுபடுத்திட கண்காணிப்பு வழிவகை செய்கின்றது. சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலையினை கண்காணிப்பதுடன், அரசின் சிறப்புத் திட்டங்களின் மீது தனிக் கவனம் செலுத்தி, அவை நடைமுறைப் படுத்தப்படுவதையும் கண்காணிக்கின்றது.

உடன்நிகழ் (On-line) முறையில் சிறப்புத் திட்டங்களைக் கண்காணித்தல்:

சமூகப் பொருளாதார வளர்ச்சிக்காகவும் மக்களின் நீண்டநாள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றது.

அரசின் திட்டங்களைச் செயல்படுத்தும் சம்பந்தப்பட்ட துறைகள், தமது திட்டங்களின் செயலாக்க நிலை குறித்த தகவலை, உரிய தகவல் தொழில்நுட்பங்களைக் கொண்டு பதிவு செய்திடும் வகையில் உடன்நிகழ் (on-line) முறையினை இத்துறை உருவாக்கி உள்ளது.

செயல்திறன்மிக்க கண்காணிப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட நுட்பங்கள்:

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை திறமையான கண்காணிப்பினை உறுதி செய்வதற்கு பின்வரும் நுட்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

(அ) அறிவிப்புகளைக் கண்காணித்தல்:

சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு ஆளுநர் உரையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அறிவிப்புகள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள், மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மற்றும் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் சட்டமன்றப் பேரவையில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் செயல்பாட்டினைக் கண்காணிக்கும் பொறுப்பினை இத்துறை மேற்கொள்கிறது.

பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்க நிலை குறித்த முன்னேற்றத்தினை தொடர்புடைய துறைகளிடமிருந்து உரிய விவரங்கள் இத்துறையால் சேகரிக்கப்படுகின்றன. தலைமைச் செயலாளர் தலைமையில் நடத்தப்படும் அனைத்துச் துறைச் செயலர்களின் மாதாந்திர ஆய்வு கூட்டத்திற்கு தேவையான விவரங்களை இத்துறை தொகுத்து வழங்குகிறது. முதலமைச்சர் அவர்களின் அலுவலகத்திற்கும் இத்திட்டங்களின் முன்னேற்ற அறிக்கை மாதம் இரு முறை சமர்ப்பிக்கப்படுகின்றது. அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த விவரங்களை சம்பந்தப்பட்ட துறையினர் உடன்நிகழ்வு முறையில் இத்துறைக்கு வழங்கிட ஏதுவாக வலைப்பக்கங்கள் இத்துறையால் ஏற்படுத்தப்பட்டு தலைமைச் செயலக உள்வளையதளத்தில் (Intranet) நிறுவப்பட்டுள்ளது. மேலும், பலவிதமான அறிக்கைகளைத் தயாரிப்பதற்கு ஏதுவாக பிரத்யேக உள்உறைவிட (In-house) மென்பொருள் வடிவமைக்கப்பட்டு இத்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

செயலகத்துறைகளின் கீழ் இயங்கும் துறைத் தலைவர்களை ஒருங்கிணைப்பதற்கும், அறிவிப்புகளின் தற்போதைய நிலையினை பதிவு செய்வதற்கும் அரசின் அனைத்துத் துறைகளிலும் தொடர்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு துறைகளிடமிருந்து பெறப்பட்ட அறிக்கைகள் மூலம் அறிவிப்புகளின் முன்னேற்ற நிலைகள் வகைப்படுத்தப்பட்டு, காலமுறை அறிக்கையாக இத்துறையால் அரசுக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது. இவ்வாறு தொகுக்கப்பட்ட அறிக்கைகள், அரசின் உயர்நிலை ஆய்வுக் கூட்டங்களில் பயன்படுத்தப் படுகின்றன.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்புப் பணியின் மூலம், திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டினை அதிகப்படுத்தவும், திட்டங்களை விரிவுபடுத்தவும் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதற்கும் தேவையான முக்கிய விவரங்கள் வழங்கப்படுகின்றன.

(ஆ) அரசின் முதன்மைத் திட்டங்களைக் கண்காணித்தல்:

ஏழை மக்களின் வருமானத்தை உயர்த்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட கறவைப்பசு, வெள்ளாடு/செம்மறி ஆடுகள் வழங்குதல், தகவல் தொழில்நுட்பத்திறன் இடைவெளியைக் குறைப்பதற்காக மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல், ஏழைகளுக்கு நல் ஆரோக்கியம் ஏற்படுத்திட முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், கருவுற்ற பெண்களுக்கு பேறுகால நிதி உதவியாக டாக்டர். முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், ஏழை மற்றும் நலிவடைந்த மகளிருக்கு பல்வேறு திருமண உதவித் திட்டங்களின் கீழ் நிதியுதவியுடன் கூடிய திருமாங்கல்யத்திற்கு 22 காரட்டில் 8 கிராம் தங்க நாணயம் வழங்குதல், முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம் மற்றும் அம்மா இருசக்கர வாகனத் திட்டம் போன்ற முதன்மைத் திட்டங்கள் அரசால் செயல்படுத்தப்படுகின்றன. பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படுகின்ற மேற்கண்ட திட்டங்களின் செயலாக்கத்தை இணைந்து கண்காணிக்கும் பணி சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையிடம்

ஒப்படைக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்த அறிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து பெறப்பட்டு, தொகுக்கப்பட்ட முன்னேற்ற அறிக்கைகள் அரசின் ஆய்வுக் கூட்டங்களுக்கு தேவையான அடிப்படை விவரங்களாக பயன்படுத்தப்படுகிறது.

இ) உயர்நிலை கண்காணிப்புக் குழு:

அரசின் சிறப்புத் திட்டங்களை ஆய்வு செய்வதற்காகவும், கண்காணிப்பதற்காகவும் மாநில அளவில் உயர்நிலை கண்காணிப்புக் குழு அரசால் பின்வருமாறு அமைக்கப்பட்டுள்ளது:

வ. எண்

அலுவலரின் பதவி

நிலை

1

அரசு தலைமைச் செயலாளர்

தலைவர்

2

அரசு முதன்மைச் செயலாளர், நிதித்துறை

உறுப்பினர்

3

அரசு முதன்மைச் செயலாளர், சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

உறுப்பினர் – செயலர்

4

தொடர்புடைய துறைகளின் அரசு முதன்மைச் செயலாளர்கள்/ செயலாளர்கள்

உறுப்பினர்கள்

இந்த உயர்நிலை கண்காணிப்புக் குழுக் கூட்டங்களில் அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தின் தற்போதைய நிலை, செயல்படுத்துவதில் உள்ள சவால்கள் மற்றும் திட்ட செயல்பாடுகளில் ஏற்படும் இடர்ப்பாடுகள் குறித்து விவாதிக்கப்படுவதுடன், அதற்கான தீர்வுகள் குறித்தும் முடிவு செய்யப்படுகின்றது. மாவட்டக் கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் துறை அலுவலர்களின் கருத்துக்களின் அடிப்படையில் கொள்கை அளவிலான மாற்றங்கள் மற்றும் சிறப்புத் திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகள் இக்கூட்டத்தில் நடைபெறும் விவாதங்களின் மூலம் மேம்படுத்தப்படுகின்றன.

(ஈ) மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள்:

மாவட்ட அளவில் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களின் செயல்பாட்டினைக் கண்காணிப்பதற்கென மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் போன்ற உயர் அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரால் ஒருங்கிணைப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து பணியாற்றுவதுடன், திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெற்று, தேவையான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றனர்.

இத்துறையின் அலுவலர்கள், கள ஆய்வு மேற்கொள்ளும்போது மாவட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் ஆய்வுப்பணிக்கு தேவையான விவரங்களை வழங்குகின்றனர்.

(உ) கள ஆய்வுகள்:

மாவட்ட அளவில் பல்வேறு துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் செயல்திறன்கள் குறித்து இத்துறையின் அலுவலர்களால் கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கைகளை அரசுக்கு சமர்ப்பித்து உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

(ஊ) மண்டல ஆய்வுக் கூட்டங்கள்:

அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டங்கள், மண்டல அளவில் மாவட்ட ஆட்சியர்களுடன் நடத்தப்படுகின்றன. இதுபோன்ற மண்டல ஆய்வுக் கூட்டங்களில் தொடர்புடைய துறைகளின் உயர் அலுவலர்கள்

திட்டங்கள் செயல்படுத்தப்படும் நடைமுறைகள் குறித்த விரிவான கலந்துரையாடல்களில் கலந்துகொண்டு பயன்பெறுகின்றனர். வழங்கப்படும் சேவையின் தரத்தினை உயர்த்தும் பொருட்டு நடத்தப்பெறும் இத்தகைய ஆய்வுக் கூட்டங்கள், கள் அளவில் கண்டறியப்படும் இடர்ப்பாடுகள்! திட்டங்களில் தேவைப்படும் மாறுதல்கள் / பணிநிலை முன்னேற்றங்கள் குறித்து மாவட்ட அலுவலர்கள் எடுத்துரைப்பதற்கு வாய்ப்பாக அமைகிறது.

கண்காணிப்பு அலுவலர்கள்:

அரசுச் செயலாளர்கள் முதன்மைச் செயலாளர்கள்/ கூடுதல் தலைமைச் செயலாளர்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது. மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் மாதந்தோறும் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, பல்வேறு திட்டங்கள் குறிப்பாக சிறப்பு திட்டங்கள் குறித்து கள் ஆய்வு மேற்கொண்டு, திட்டங்களை விரைவாக செயல்படுத்திட தக்க ஆலோசனைகளையும், தீர்வுகளையும் மாவட்ட ஆட்சி தலைவர் மற்றும் மாவட்ட நிலையிலான அலுவலர்களுக்கு வழங்குகின்றனர்.

மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள், துறைகளுக்கிடையேயான பிரச்சினைகளைக் களைவதற்கு ஏதுவாக துறைத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதோடு, நடைமுறையில் உள்ள பல்வேறு திட்டங்களின் வழிகாட்டு நெறிமுறைகளின் சிறப்புத் தன்மைகளை மதிப்பிடுதல் மற்றும் அரசளவில் மேற்கொள்ளப்பட வேண்டிய கொள்கை மாற்றங்கள் குறித்தும் பரிந்துரைகள் அளிக்கின்றனர். திட்டங்களில் கவனிக்கப்பட வேண்டிய இனங்கள், முக்கியமான கருத்துக்கள், எடுக்கப்பட வேண்டிய தொடர் நடவடிக்கைகள், திட்டத்தின் மேம்பாடு மற்றும் மாற்றங்கள் ஆகியவை குறித்த பரிந்துரைகளை கண்காணிப்பு அலுவலர்கள் அரசுக்கு அளிக்கின்றனர். இப்பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு, தலைமைச் செயலாளர் வழியாக முதலமைச்சர் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்றன.

சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின்

திட்டங்கள்:

அரசின் சிறப்புத் திட்டங்களைக் கண்காணிப்பதுடன் பின்வரும் இரண்டு முதன்மைத் திட்டங்களை நேரடியாக செயல்படுத்தும் பொறுப்பும் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களால் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறைக்கு, துறை துவங்கிய நாளிலேயே அளிக்கப்பட்டது.

* மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் * மகளிருக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்குதல்

மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி

வழங்குதல்:

இந்திய மாநிலங்களிலேயே, மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்வதுடன், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த முதலீட்டில் உலகளவில் விரும்பப்படும் மாநிலமாக திகழ்ந்து வருகின்றது. கணினிக் கல்வியை ஊக்குவிப்பதிலும் கணினி சார்ந்த அரசு சேவைகளை வழங்குவதிலும் தனியார் துறைக்கு ஊக்கமளிப்பதிலும் தமிழகம் முக்கிய பங்கு வகிப்பது குறிப்பிடத்தக்கது. கணினிக் கல்வியறிவை மேம்படுத்தப்படுவதன் வாயிலாக உலக வேலைவாய்ப்புச் சந்தையில் பல்வேறு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, எதிர்வரும் உலக சமூகப் பொருளாதார முன்னேற்றத்திற்கு இது திறவுகோலாக அமைகிறது. ஊரக மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் முன்னேறியவர்களுக்கும் இடையே உள்ள தகவல் தொழில்நுட்ப இடைவெளியை சமன் செய்து இணைக்கும் பாலமாக தமிழக அரசு, தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முன்னோடித் திட்டத்தினை 2011-12ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. கணினி அறிவைப் போதிக்கும் தனிச்சிறப்பு வாய்ந்த திட்டமான மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம், மாநிலம் முழுவதிலும் உள்ள ஏழைக் குடும்பங்களைச் சார்ந்த மாணக்கர்களுக்கு உயர் கல்வியை அடைய உதவும் உன்னத நோக்கத்துடன் தொடங்கப்பட்டு உயர்கல்வியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாணாக்கர்கள், தொழில்நுட்பத்தின் சமீபத்திய நுட்பங்களை அறிந்துகொண்டு, கணினித்திறன் இணைந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கு வழி அமைப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டம், மாநில அரசின் கல்விக் கொள்கையின் முக்கிய அம்சங்களான "அணுகுதல், பங்கேற்பு, வெற்றிபெறல்” ஆகியவற்றை அடைந்திடுவதற்கு உறுதுணையாய் உள்ளது.

2011-12 (ம) 2012-13 ஆம் ஆண்டுகளில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்ற மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. 2013-14 ஆம் ஆண்டிலிருந்து, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பல்தொழில்நுட்பக்

கல்லூரிகளில் முதலாம் ஆண்டு பயிலும் மாணாக்கர்கள், இத்திட்டத்தின் கீழ் பயன் அடைகின்றனர்.

ஆண்டுவாரியாக கல்வி நிறுவனங்கள் வாரியாக மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்குதல்

ஆண்டு

 

பள்ளிகள்

 

கலை / அறிவியல் கல்லூரிகள்

பொறியியல் கல்லூரிகள்

பல்தொழில்

நுட்பக் கல்லூரிகள்

2011-12

12-ம் வகுப்பு

முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு

இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு

முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு

2012-13

12-ம் வகுப்பு

மூன்றாம் ஆண்டு

இரண்டாம் மற்றும் நான்காம் ஆண்டு

முதல் மற்றும் மூன்றாம் ஆண்டு

2013-14 முதல்

12-ம் வகுப்பு

--

--

முதலாம் ஆண்டு

மடிக்கணினி கொள்முதல் செய்யும் பணியினை மேற்கொள்வதற்கு கொள்முதல் முகமையாக "தமிழ்நாடு மின்னணு நிறுவனம்” (ELCOT), செயல்பட சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையால் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மடிக்கணினிகளை கொள்முதல் செய்வதற்கான நிர்வாக ஒப்புதல் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் வழங்கப்படுகிறது. இதற்குத் தேவையான நிதி தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையால் மாநில திட்ட நிதியிலிருந்து பெற்று வழங்கி வருகிறது.

பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககங்கள் மூலமாக 2011-12 மற்றும் 2012-13 ஆகிய ஆண்டுகளிலும் 2013-14 ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வி இயக்ககம் மற்றும் தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற மடிக்கணினிகள் “Windows 10 pro” தேசிய கல்வி பதிப்பு மற்றும் மேம்பட்ட கணினி பயன்பாடு வளர்ச்சி மையத்தின் BOSS | LINUX ஆகிய இரட்டை தொடக்க வசதி உடையதாகவும், வைரஸ் எதிர்ப்பு மென்பொருளுடனும், தமிழ் இணைய தொடக்கக் கல்விக் கழகம் மற்றும் கல்வித் துறைகளின் பாடத்திட்டங்களை உள்ளடக்கியும், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துக்களுடன் நாணயக் குறியீட்டுடன் கூடிய தரமான விசைப்பலகையும் ஒருங்கிணைந்த தொடு தளமும் (Touch Pad) வழங்கப்பட்டுள்ளது. பார்வைத் திறன் அற்ற மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினிகளில் அவர்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பு மென்பொருள் நிறுவப்பட்டுள்ளது. மேலும், மடிக்கணினியின் பாதுகாப்பிற்காக தோள் பை (Back Pack) வழங்கப்படுகிறது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் வாயிலாக, பரவுத்தாள் (Spread Sheet), விளக்கக் காட்சி (Power Point Presentation) மற்றும் சொற்செயலி (Word Processing) ஆகிய தொழில்நுட்ப அறிவுத் திறன்களை மாணாக்கர்கள் ஆர்வமுடனும் விரைவாகவும் கற்க இயலுகிறது.

மடிக்கணினிகள் மற்றும் மின்கலன்களுக்கும் ஓராண்டு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளன. மடிக்கணினிகள் நன்கு செயல்படுவதற்கான தொடர் பராமரிப்பிற்காக அனைத்து மாவட்டங்களிலும் மடிக்கணினி வழங்கும் நிறுவனங்களின் சேவை மையங்கள் செயல்படுவது குறித்த தகவல்கள் மாணாக்கர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இத்திட்டமானது, தற்போதைய தலைமுறை மாணாக்கர்களுக்கு முழு அறிவுசார் வாய்ப்புகளுக்கான வழிவகைகளை ஏற்படுத்துகிறது. மாணாக்கர்கள் வேலை தேடத் துவங்கும் காலத்திலேயே, நவீன தொழில்நுட்பங்களை அறிந்து பயனடையும் வாய்ப்பினை இத்திட்டத்தின் வாயிலாக அரசு வழங்குகிறது.

மாணாக்கர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டம் ஒரு வெற்றிகரமான திட்டமாகும். இத்திட்டத்தின்கீழ் பயனடைந்த மாணாக்கர்கள் கணினியின் பல்வேறு பயன்பாடுகளைக் கண்டறிந்து அதனை உபயோகித்துக்கொள்ள முடிகிறது. குடும்பத்தில் உள்ள பிற உறுப்பினர்கள், குறிப்பாக இளம் தலைமுறையினர் கணினி குறித்த தொழில்நுட்பத்தை அறிந்துகொள்வதற்கும், இயக்குவதற்கும் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த வளர்ச்சியானது எதிர்காலத் தலைமுறையினர் கணினி தொழில்நுட்ப கல்வியறிவிற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், கணினி தொழில்நுட்ப உலகின் அபரிமிதமான வாய்ப்புகள் வாயிலாக சிறந்து விளங்கவும் வழிவகை செய்கிறது. குடும்பத்தின் இளம் தலைமுறையினர் இதன்மீது கொண்டுள்ள ஆர்வம், சமூகத்தில் நிகழவிருக்கும் ஒரு மாற்றத்தின் அறிகுறியினை வெளிக்கொணர்கிறது. மொத்தத்தில், மாணாக்கர்கள் மடிக்கணினியை ஒரு கருவியாக மட்டும் பார்க்காமல், ஏற்றமிகு எதிர்காலத்திற்கான சாளரமாகவும், சமூக நிலையில் உயர்ந்து விளங்க ஓர் ஏணியாகவும் கருதுகின்றனர்.

இந்த திட்டம், மாணாக்கர்களின் திறன் மதிப்பை கூடுதலாக்கி, அவர்களின் படைப்புத் திறனை உயர்த்திடும் தூண்டுகோலாய்த் திகழ்கிறது. காலப்போக்கில் இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் மாற்றமானது, மாணாக்கர் சமுதாயத்தின் நிறைவான வெற்றியின் அடையாளமாகத் திகழும்.

தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் விலையில்லா மடிக்கணினி திட்டம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு 2011-12 ஆண்டு முதற்கொண்டு மடிக்கணினிகள் தொடர்ந்து வழங்கி வருவது சாதனையாகும்.

இத்திட்டத்தின் கீழ் 2011-12 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை ரூ. 5520.49 கோடி மதிப்பில் 37.29 இலட்சம் மடிக்கணினிகள், மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2017-18 ஆம் ஆண்டில் 5.43 இலட்சம் மடிக்கணினிகள் ரூ. 758 கோடி மதிப்பீட்டில் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 0.42 இலட்சம் மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் இதுவரை வழங்கப்பட்டு இப்பணி முன்னேற்றத்தில் உள்ளது. 2011-12 முதல் நாளது வரையில் ரூ. 5574.37 கோடி மதிப்பில் 37.71 இலட்சம் மடிக்கணினிகள், மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 2018-19 ஆம் ஆண்டில் உத்தேசமாக 5.50 இலட்சம் மடிக்கணினிகள் வழங்க ரூ.758 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி

மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் :

சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை மூலம் விலையில்லா மின்விசிறி, மிக்சி மற்றும் கிரைண்டர் வழங்கும் திட்டம் இத்துறையால் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கமானது, மகளிருக்கு சிரமமான அன்றாட வீட்டுவேலைகளை எளிதாக்கிட உரிய கருவிகள் அளிப்பதாகும். 1.75 கோடி குடும்பங்களில் உள்ள மகளிருக்கு இச்சாதனங்கள் ரூ.7,686.21 கோடியில் 2011-12ஆம் ஆண்டு முதல் 2015-16ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளன.

நிறுவன வளத் திட்டமிடல் (Enterprise Resource Planning - ERP):

சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறையால் செயல்படுத்தப்படும் "மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின்'' கீழ், மடிக்கணினிகள் மாணாக்கர்களுக்கு சென்றடைவதைக் கண்காணிக்க, நிறுவன வளத் திட்டமிடல் குறித்த ஒரு உயரிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மேலாண்மை மென்பொருள், நிறுவனத்தின் அனைத்து பணிகளையும் ஒருங்கே நிர்வகிக்க உதவுகின்றது. இந்த நிறுவன வளத் திட்டமிடல் மென்பொருள், பொருட்கள் வாங்குதல், வழங்குதல் மற்றும் விநியோகித்தல் போன்ற அனைத்து அம்சங்களையும் ஒருங்கே உள்ளடக்கிய ஒன்றாகும். இம் மென்பொருள் மடிக்கணினிகளை தமிழ்நாடு மின்னணு நிறுவனம் வழங்குநர்களிடமிருந்து வாங்குவது முதற்கொண்டு மாணாக்கர்களுக்கு வழங்குதல் வரையிலான பின்வரும் பணிகளை தன்னகத்தே கொண்டுள்ளது.

* ஒப்பந்தப்புள்ளி மற்றும் விலை விவரங்களை பதிவு செய்தல்

* மடிக்கணினி வழங்குநரின் விவரங்களை பதிவு செய்தல்

* மடிக்கணினிகளை வழங்குநர்களுக்கு ஒதுக்கீடு செய்தல்

* வழங்கப்பட்ட மடிக்கணினிகளை மூன்றாம் நபர் ஆய்வு செய்த விவரங்களை பதிவிடுதல்

* கல்வி நிறுவனங்களின் விவரங்களை பதிவு செய்தல்

• மாணாக்கர்களின் தேவைப்பட்டியலை உருவாக்குதல்

* வழங்குநர்களுக்கான கல்வி நிறுவனங்களை ஒதுக்கீடு செய்தல்

* வழங்குதல் மற்றும் விநியோகம்

* கல்வி நிறுவனங்களில் களஆய்வு

* பயனாளிகளின் விவரங்களை பதிவிடுதல்

* மாணாக்கர்களின் பெயர் விவரங்களோடு அவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை இணைத்தல்

* மடிக்கணினி வழங்குநர்களுக்கு பணத் தீர்வு செய்த விவரங்களை பதிவிடுதல்

* வழங்கப்படாமல் நிலுவையிலுள்ள மடிக்கணினிகளை மாவட்ட தலைமையகத்தில் ஒப்படைக்கும் விவரங்களை பதிவு செய்தல்

* மாணாக்கர்களுக்கு மடிக்கணினிகளை மறு ஒதுக்கீடு செய்தல்

* அறிக்கைகள் தயாரித்தல்

இந்நிறுவன வளத் திட்டமிடல் மென்பொருள், விலையில்லா மடிக்கணினிகள் மாணாக்கர்களுக்கு வழங்குவதை கண்காணிக்க பெரிதும் உதவுகிறது.

முடிவுரை:

சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட அரசின் சிறப்புத் திட்டங்களின் செயலாக்கத்தினால் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. கருவுற்ற தாய்மார்கள் ஆரோக்கியமான மகவை பெற்றிடுவதை உறுதி செய்தல், மாணாக்கர்கள் திறன் மற்றும் வேலைவாய்ப்பினை அதிகப்படுத்துதல், ஏழை எளியோருக்கான வாழ்வாதாரங்களை மேம்படுத்தி அவர்களின் வருமானத்தைப் பெருக்குதல், ஊரக ஏழை எளிய மக்களுக்கு சுற்றுச்சூழலுக்குத் தகுந்த பசுமை வீடுகள் வழங்குதல், சமுதாயத்தில் கைம்பெண்கள் மற்றும் நலிவடைந்தோருக்கு உதவுதல், தேவையுள்ள அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்குதல் மற்றும் பணிபுரியும் மகளிருக்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனங்கள் வழங்குதல் போன்ற நலத்திட்டங்களின் மூலம் நற்பயன்களை தமிழக மக்கள் அடைந்து வருகின்றனர்.

அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் செயலாக்கத்தைக் கண்காணிப்பதற்காக சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை எளிய மற்றும் பயன்படுத்த வசதியான உள்வலையதள மென்பொருளினை வடிவமைத்துள்ளது. இந்த மென்பொருளை பயன்படுத்தி தொடர்ச்சியாக கண்காணித்து அரசுத் திட்டங்கள் சிறப்பாக செயல்படுவதை உறுதி செய்கின்றது. இத்துறை அனைத்து வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்துவதற்கான முறையான வழிகளை கண்டறிந்து திட்ட செயல்பாட்டின் திறனை மேம்படுத்தியும், எளிமைப்படுத்தியும், நிர்வாகத் திறன் தரத்தை உயர்த்திடவும் வழிவகுக்கிறது.

தமிழக அரசு பல்வேறு தரப்பு மக்களின் நன்மைக்காகவும், செழிப்பான வாழ்விற்காகவும் அறிவித்த புதுமையான சிறப்புத் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்திட சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மேற்கொண்டு வரும் கண்காணிப்பு பணியானது இம்மாநில முன்னேற்றத்தில் ஓர் முக்கிய அங்கமாகும்.

எஸ். பி. வேலுமணி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி

மற்றும் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை அமைச்சர்

ஆதாரம் - தமிழ்நாடு அரசு  சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை

2.66666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top