பொருளடக்கத்திற்கு தாண்டவும் | Skip to navigation

Vikaspedia

பகிருங்கள்
கருத்துக்கள்
  • நிலை: திருத்தம் செய்யலாம்

தொடக்கக்கல்வி - 2018 - 19

தொடக்கக்கல்வி - 2018 - 19 கொள்கை விளக்கக் குறிப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளன

முன்னுரை

குழந்தைகளிடையே அடிப்படை அறிவு, நன்னெறி, மற்றும் திறன் உருவாவதற்கு தொடக்கக் கல்வி அடித்தளமாக விளங்குகிறது. 6 முதல் 14 வயதுடைய அனைத்துக் குழந்தைகளுக்கும் சாதி, மத, பொருளாதார பாகுபாடின்றித் தரமானக் கல்வியை வழங்குவதே குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன் உள்ளார்ந்த நோக்கம் ஆகும். இதற்கெனத் அரசு பல்வேறு நலத்திட்டங்களையும் புத்தாக்கத் திட்டங்களையும் அறிமுகப் படுத்தியுள்ளது. தொடக்கக் கல்வியில் தமிழகம், இந்திய அளவில் ஓர் ஒளி விளக்காகத் திகழ இத்திட்டங்களும் புதுமைகளும் உதவுகின்றன. தரமான கல்வியை அவரவர் இருப்பிடத்திற்கு அருகாமையில் வழங்குவதற்குத் அயராது பாடுபட்டு வருகிறது.

நோக்கங்கள்

* 6 முதல் 14 வயதுடைய குழந்தைகள் அனைவரையும் 100 விழுக்காடு பள்ளியில் சேர்த்தல் மற்றும் தக்க வைத்தலை உறுதி செய்தல்

* குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ஐ நடைமுறைப்படுத்துதல்

* அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குதல்

* புதிய தொடக்கப் பள்ளிகளைத் தொடங்குதல்

* தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல்

* மக்கள் தொகை குறைவாக உள்ள பகுதிகளில் உண்டு உறைவிடப் பள்ளிகளைத் தொடங்குதல்

* பள்ளிகள் தொடங்க சாத்தியமில்லாத பகுதிகளில், குறிப்பாக, அடர்ந்த வனப்பகுதிகளிலும் தொலை துார மலைப்பிரதேசங்களிலும் வசிக்கும் பள்ளி வயதுக் குழந்தைகளுக்குப் பாதுகாவலருடன் கூடிய போக்குவரத்து வசதியை அமைத்துக் கொடுத்தல்

* சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள், நலிவடைந்த பிரிவைச் சார்ந்த குழந்தைகள் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவைச் சார்ந்த குழந்தைகளுக்கு ஏற்ற உள்ளடக்கிய சூழலைப் பள்ளிகளில் அமைத்தல்

* குழந்தைகளிடம் கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் மற்றும் கணிதத் திறனை மேம்படுத்துதல்

* மாணாக்கர்களிடத்தில் கல்வி மற்றும் கல்விசார் திறன்களை மேம்படுத்துதல்

அனைவருக்கும் தொடக்கக் கல்வி வழங்குவதற்கான சிறப்பு முயற்சிகள்

அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளுக்கும் தரமான தொடக்கக் கல்வியை வழங்குவதற்குக் கீழ்க்காணும் சிறப்பு முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

பள்ளி வசதி

குழந்தைகள் எளிதில் அணுகும் தொலைவில் பள்ளிகள் அமைவது மாணாக்கர்களின் வருகையை அதிகரிக்கச் செய்யும் என அரசு கருதுகிறது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, குடியிருப்புகளின் அருகாமையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அமைப்பதற்கான நெறிமுறைகள் வகுத்துள்ளது. ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் தொடக்கப்பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் தொலைவிற்குள் நடுநிலைப் பள்ளியும் அமைய வேண்டும் என்று தமிழக அரசின் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011இல் நிர்ணயக்கப்பட்ட விதிமுறைகளின்படி, ஓர் அறிவியல்பூர்வமான புவியியல் தகவல் வரைபட முறைமை உருவாக்கப்பட்டு தொடக்கக் கல்வி அளிப்பதற்கான வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கலைத் திட்டம், பாடத் திட்டம், பாட நுால்கள் ஆகியவற்றை மாற்றியமைப்பதுடன் ஒவ்வொரு வகுப்பறையிலும் தகவல் தொடர்புத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வி வழங்கிட அரசு பெருமுயற்சி எடுத்து வருகிறது. ஒவ்வொரு வகுப்பறையிலும் முறையான வகையில், தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு செய்வதன் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வியை வழங்குவது உறுதி செய்யப்படுகிறது.

புவியியல் தகவல் முறைமை விவரத் தொகுப்பு 2017-18

புவியியல் தகவல் முறைமையில் பள்ளிசார் விவரங்களை அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 2012-13ஆம் ஆண்டு முதல் இணைத்துப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இத்தகவல் முறைமையில் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகள், மாணாக்கர்களின் எண்ணிக்கை மற்றும் இடம் சார்ந்த விவரங்களைப் பயன்படுத்தி, பள்ளி வசதியை மேம்படுத்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது. புவியியல் தகவல் முறைமை, துறையினர் மற்றும் பொதுப் பயன்பாட்டிற்கான வலைத்தள மையமாகவும் பயனாளிகள் எளிதாகப் பயன் படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 58,033 பள்ளிகள் மற்றும் 92,234 குடியிருப்புகள் புவியியல் தகவல் முறைமைக்குள் உட்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவல் முறைமையில் உள்ள இடம்சார் தகவலில் பள்ளிகளின் பல்வேறு நிர்வாகம் மற்றும் வகைகளை எளிதில் அடையாளம் காணத் தனிப்பட்ட வண்ணங்கள் மற்றும் வடிவங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011இல் கூறியுள்ள உத்திகளின்படி, பள்ளி வசதி இல்லாத குடியிருப்புகளில் உள்ள குழந்தைகள், அருகாமையில் உள்ள பள்ளிகளுக்குப் பாதுகாப்பாகச் சென்று கல்வி பயில்வதற்கான வசதி ஏற்படுத்திட பள்ளிவரைபடத்தகவல் சேகரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 92,234 குடியிருப்புகள் உள்ளன. இவற்றில் 89,958 குடியிருப்புகளில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் அமைந்துள்ளன. நடுநிலை அளவில் 9,040 குடியிருப்புகளில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள் அமைந்துள்ளன.

போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதிகள்

பள்ளிகள் அமையப் பெறாத குடியிருப்புப் பகுதிகளிலிருந்து குறிப்பாக வனம் மற்றும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்குப் போக்குவரத்து மற்றும் பாதுகாவலர் வசதி 2012-13ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

உண்டு உறைவிடப்பள்ளிகள்

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன் படி, 6 முதல் 14 வயதுடைய ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்ப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளி வயதுக் குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து பயில்வதை உறுதி செய்வதற்கு, மக்கள் தொகை குறைவாக உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் வசிக்கும் குழந்தைகள், நகரப்பகுதிகளில் உள்ள வாய்ப்பு மறுக்கப்பட்ட தெருவோரக் குழந்தைகள் மற்றும் பெரியோர் பாதுகாப்பின்றி வாழும் குழந்தைகள் ஆகியோர் பயன் பெறும் வகையில் உண்டு உறைவிடப் பள்ளிகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இவ்வரசு 11 உண்டு உறைவிடப் பள்ளிகளை நிறுவியுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் 877 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

உட்கட்டமைப்பு வசதிகள்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வாயிலாக 2011ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டுவரை ரூ.1,072.70 கோடி செலவில் புதிய பள்ளிக் கட்டடங்கள், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள் மற்றும் குடிநீர் வசதி ஆகியவை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பள்ளிகளுக்கு 100 விழுக்காடு வருகை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்குதல்

பள்ளிக்கு விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகை புரியும் மாணாக்கர்களையும் ஆசிரியர்களையும் பாராட்டும் விதமாகப் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

கல்வி சார் குறியீடுகள்

அனைத்துச் செயல்பாடுகளின் விளைவுகளையும் கல்வி சார் குறியீடுகள் மூலமாக எளிதில் மதிப்பிட இயலும். கல்வி முறை சார்ந்த இலக்கினை நோக்கிச் செல்வதில் உள்ள தற்போதைய நிலையினை அல்லது மாற்றத்தை அளவீடு செய்வதற்குக் கல்விசார் குறியீடு பயன்படுகிறது. சில கல்வி சார் குறியீடுகளின் பொருள் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நிகர மாணவர் சேர்க்கை விகிதம்

தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் வகுப்புக்கேற்ற வயதுடைய மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும், மக்கள் தொகையில் 6+ முதல் 10+ வயதுடைய பள்ளி வயது குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் ஆகும்.

மொத்த மாணவர் சேர்க்கை விகிதம்

தொடக்கப்பள்ளிகளில் வயதுவரம்பின்றி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கைக்கும், 6 முதல் 10 வயதுக்கு மேற்பட்ட பள்ளி குழந்தைகளின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் ஆகும்.

தக்க வைத்தல் விகிதம் (தொடக்கநிலை)

தொடக்க நிலையில் தக்க வைத்தல் விகிதம் என்பது 5 ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கைக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன்பான 1 ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கைக்கும் உள்ள விகிதமாகும்.

தக்க வைத்தல் விகிதம் (நடுநிலை)

நடுநிலையில் தக்க வைத்தல் விகிதம் என்பது 8 ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கைக்கும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பான 6 ஆம் வகுப்பு மாணாக்கர் சேர்க்கைக்கும் உள்ள விகிதம் ஆகும்.

இடை நிற்றல் விகிதம்

மொத்த மாணாக்கர் சேர்க்கைக்கும், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் அந்தத் தொடர் நிகழ்வாண்டில் கல்வியைத் தொடர இயலாத மாணாக்கர்களுக்கும் உள்ள விகிதம் ஆகும்.

மாற்ற விகிதம் (5-6)

தொடக்க நிலையில் 5 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கும், அதே ஆண்டில் 6 ஆம் வகுப்பில் சேர்ந்த மொத்த மாணாக்கர் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதம் என்பது மாற்ற விகிதம் ஆகும்.

சேர்க்கையில் சம வாய்ப்பு

பள்ளி வசதியும், சம வாய்ப்பு சூழ்நிலையும் ஒருங்கிணையும் போதுதான் அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது உறுதி செய்யப்படுகிறது. பால், இன வேறுபாடின்றி மாணாக்கர்களைத் தொடக்கப் பள்ளியில் சேர்க்கவும், இடைநிற்றலின்றி மாணாக்கர்களைப் பள்ளியில் தக்க வைத்து, கற்றல் விளைவுகளை முழுமையாக அடைவதற்கும் சிறப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு முயற்சிகள் மற்றும் உத்திகளின் மூலம் பெண் குழந்தைகள், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினக் குழந்தைகள், சிறப்புக் கவனம் தேவைப்படும் குழந்தைகள், நகர்ப்புற வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள், சிறுபான்மை வகுப்பினர் குழந்தைகள் மற்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் என அனைவரும் தொடக்கக் கல்வியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

குழந்தை மையக் கல்வி முறையில் புத்தாக்க முயற்சிகள்

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் குழந்தை மையக் கல்வியை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் ஓர் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அரசின் இத்தகைய முயற்சிகளினால் கற்றல் முறைமை குழந்தை நேயமுள்ளதாகவும் ஒரு இனிமை நிகழ்வாகவும் அமைந்துள்ளது.

எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை

எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றல் என்பது குழந்தை மையக் கல்வி முறையாகும். தற்போது குழந்தை மையக் கல்வியின் தொடர்ச்சியாகத் தொழில் நுட்பங்களை இணைத்து இப்புதிய அணுகு முறையில் 1 முதல் 3 ஆம் வகுப்பு வரை செயல்படுத்தப்பட உள்ளது. வகுப்பறையில் ஆசிரியர் மாணாக்கர் இடையேயான தொடர்பு, ஒத்த குழுவினர் இடையேயான பரிமாற்றம், தனியார் கல்வி மற்றும் மதிப்பீடு ஆகிய 4 நிலைக் கற்றல் முறைகள் பின்பற்றப்பட்டு மாணாக்கர்களிடத்தில் கற்றல் விளைவுகள் மேம்படும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளது. இப்புதிய கற்றல் முறையில் சிந்திக்கவும், கலந்துரையாடவும், வினாக்கள் கேட்கவும், பயம் மற்றும் தயக்கமின்றி மதிப்பீடுகளை எதிர்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இக்கற்றல் முறை மாணாக்கர்களிடையே ஒத்துழைப்பு மற்றும் குழு மனப்பான்மை அதிகரிக்க உதவும் வகையிலும், கற்றல் மற்றும் கற்பித்தல் நிகழ்வில் ஈடுபடுபவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரவும் வாய்ப்பளிக்கிறது.

எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்விமுறை

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை 4 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறையையும், படைப்பாற்றல் கல்வி முறையையும் இணைத்து உருவாக்கப்பட்ட கல்வி முறையே எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை ஆகும். குழந்தைகள் 6 ஆம் வகுப்பு முதல் படைப்பாற்றல் கல்வியை நிலையாக மேற்கொள்ள ஊக்குவிக்கும் பொருட்டு செயல் வழி கற்றல் முறையையும், படைப்பாற்றல் கல்வி முறையையும் இணைத்து எளிமைப்படுத்தப்பட்ட படைப்பாற்றல் கல்வி முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழிகாட்டுதலின்படி ஒவ்வொரு குழந்தையும் நேரடியாக கற்றல் நிகழ்வில் பங்கேற்க இக்கல்வி முறை வாய்ப்பளிக்கிறது.

படைப்பாற்றல் கல்வி

படைப்பாற்றல் கல்வி முறை நேரடியாகவும், செயல்திறனோடும் கற்றலில் ஈடுபட கற்போர் மையக் கல்வி முறைமையாகத் திகழ்கிறது. கற்போர் கற்றலைக் கற்பதே இப்படைப்பாற்றல் கல்வியின் முதன்மையான நோக்கமாகும். கற்றல் சூழல் உகந்ததாக இருக்கும் பொழுது கற்போர் தங்கள் அறிவைத் தாங்களாகவே வளர்த்துக் கொள்ள முடியும். இக்கல்வி முறையில் ஆசிரியர்கள் செயலாக்குநராக செயல்பட்டு ஒவ்வொரு மாணாக்கரும் தாம் கற்ற விவரங்களை அறிவார்ந்த திறனாக மாற்றிட முயற்சித்தல் வேண்டும். படைப்பாற்றல் கல்வி முறையில், மாணாக்கர் சிந்திக்கவும், கலந்துரையாடவும், வினாக்கள் கேட்கவும், வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சிறு குழுக்களாக செயல்படும் வகையில் வகுப்பறைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மாணாக்கரின் தனித் திறமையை அறிந்துகொள்வதுடன் மாணாக்கர்களின் படைப்பாற்றல், புரிதல் திறனை எளிதாக ஆசிரியர் அறிந்து கொள்ள மனவரைபடம் எனும் பகுதி இம்முறையில் பயனுள்ளதாக அமைந்துள்ளது.

* கற்போர் மையக் கல்வி மாணாக்கர்களின் கற்கும் திறனை வெகுவாக அதிகரிக்கும்

* பயம், மன அழுத்தம் மற்றும் தயக்கமின்றி கற்பதற்கு உதவும்

* கருத்துகளை உணர்ந்து புரிந்து கொண்டு கற்க உதவியாக இருக்கும்

* தேர்வுகளை எதிர்கொள்வதற்கான தன்னம்பிக்கையை வழங்கும்

* புதுமையான முறையில் சிந்திப்பதற்கும் மனவரைபடத்தை வரைவதற்கும் உரிய திறனை வழங்குகிறது

* மாணாக்கர்கள் தாங்கள் கற்றுணர்ந்ததை வெளிப்படுத்தும் திறனை வளர்க்கும்

செயல்திட்டம் வழியான கற்றல்

செயல்திட்ட வழிக் கற்றல், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளில் ஏற்படும் இடர்பாடுகளைக் களைவதற்கும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் சூழலைத் தெரிந்து, மாணாக்கர்கள் புதிய அறிவுத் திறனைப் பெறுவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும் 6 ஆசிரியர்களுக்கு செயல்திட்ட வழிக் கற்றல் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தங்கள் பள்ளி மாணாக்கர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்திட்டங்களைத் தயாரிக்க ஊக்கம் மற்றும் ழிகாட்டுதலை வழங்குகிறார்கள். ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் மாணாக்கர்களால் தயாரிக்கப்பட்ட 2,178 செயல்திட்டங்கள், மாணாக்கர்கள் தாங்களாகவே பொருளுணர்ந்து கற்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 2017-18ஆம் ஆண்டில் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த 3 செயல் திட்டங்களுக்குப் பரிசுத் தொகை, சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

செயல்திட்டம் வழியான கற்றல்

ஆங்கில வழிக் கல்வி

தங்கள் குழந்தைகள், ஆங்கில வழிக் கல்வி முறையில் பயில பெரிதும் விரும்புகின்ற பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 2012-13 ஆம் ஆண்டு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்விப் பிரிவுகள் அறிமுகப்படுத்த அரசால் தீர்மானிக்கப்பட்டது. 2012-13ஆம் கல்வியாண்டில் தொடக்கக்கல்வியின் கீழ் செயல்படும் சில குறிப்பிட்ட பள்ளிகளில் ஆங்கில வழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன. இம்முயற்சி பெற்றோர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. ஆங்கிலவழிக் கல்விப் பிரிவுகளில் சேர்க்கை குறிப்பிடத்தக்க அளவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

முப்பருவமுறை

2012-13 ஆம் கல்வியாண்டு முதல் அனைத்துப் பள்ளிகளிலும் முப்பருவமுறை அறிமுகப்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் 26.08.2011 அன்று அன்றைய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து அனைத்துப் பள்ளிகளிலும் 1முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் புத்தகப் பையின் சுமையைக் குறைக்க முப்பருவக் கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டது. முப்பருவக் கல்வி முறையில், ஒரு கல்வியாண்டிற்கான முழுப் பாடப்பொருள் மற்றும் கற்றல் திறன்களில் எவ்வித குறைபாடுமின்றி மூன்று பருவங்களுக்கும் வண்ணமயமான பாடப்புத்தகங்கள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு மாணாக்கர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம், மாணாக்கர்களுக்குப் புத்தகச் சுமை பெருமளவில் குறைந்து கற்றல் நிகழ்வுகள் மகிழ்ச்சி அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது.

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு

தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு முறை 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு, 2012-13 ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. இப்புதிய மதிப்பீடு முறை, கற்றலை மனப்பாடம் செய்வதிலிருந்து மாற்றி படைப்பாற்றலின் பாதையில் பயணிக்க வைக்கிறது. இம்மதிப்பீடு முறை ஆண்டு முழுவதும் ஒவ்வொரு குழந்தையின் கல்விச்செயல்பாடுகள் மற்றும் கல்வி இணை செயல்பாடுகளின் பரிமாணங்களை தொடர்ந்து மதிப்பீடு செய்யப் பயன்படுகிறது. குழந்தையின் தனிப்பட்ட மதிப்பீட்டுத் தேவைக்கேற்ப நெகிழ்வான முறையில் அமைந்துள்ளது.

தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைத்தல்

தகவல் தொழில்நுட்ப பயன்பாட்டின் யுகமாகத் திகழும் 21ஆம் நுாற்றாண்டில், கல்வி முறையிலும் தகவல் தொழில்நுட்ப விவரங்களை ஒருங்கிணைப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது. தொழில் நுட்பத்துடன் கூடிய பாடப்புத்தகங்கள், பயிற்சி ஏடுகள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட கையேடு வழங்குவதில் தமிழகம் முன்னோடியாகத் திகழ்கிறது. தகவல் வழங்கும் விரைவுக் குறியீடுகள் மின் பாடப்புத்தகத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. தகவல் வழங்கும் விரைவுக் குறியீடுகளைப் பயன்படுத்தி ஆசிரியர்களும் மாணாக்கர்களும் பாடப்பொருள் சார்ந்த விளக்கங்களை எளிதாகப் பெற முடியும். இப்புதிய முன்மாதிரி முயற்சி சென்னை , காஞ்சிபுரம் மற்றும் கோயம்புத்துார் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 16 பள்ளிகளில் முன்னோடியாக செயல்படுத்தப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கற்றல் செயல்பாட்டில் 1 ஆம் வகுப்பு மாணாக்கர்கள் கூட சிறப்பாகச் செயல்பட்டது தெரிய வந்துள்ளது. தற்போது இப்புதிய அணுகுமுறை மேலும் 1 மாவட்டங்களில் உள்ள 173 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கான பணியிடைப்பயிற்சி

மாற்றி அமைக்கப்பட்ட கலைத்திட்டத்தின்படி உருவாக்கப்பட்ட புதிய பாடத்திட்டங்கள், கற்பித்தல், ஒருங்கிணைந்த தொழில் நுட்பம், கணிதம், அறிவியல் மற்றும் மொழித்திறனுக்கான வடிவமைக்கப்பட்ட உபகரணப் பெட்டிகளைப் பயன்படுத்துதல் குறித்த பயிற்சியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். தலைமையாசிரியர்களின் தலைமைப் பண்புகளை மேம்படுத்த தேசிய கல்வி மேலாண்மை மற்றும் திட்டமிடல் பல்க லைக்கழகத்துடன் (National University of Educational Planning and Administration - NUEPA) இணைந்து பயிற்சி வழங்கப்படும். வட்டார அளவில் பணியாற்றி வருகின்ற ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு தனித்திறன் மற்றும் பாடம் சார்ந்து செறிவூட்டல் பயிற்சி வழங்கப்படும். சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்படுவதற்காக சிறப்பு ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும்.

தேசிய அளவிலான அடைவு ஆய்வு

தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட கற்றல் விளைவுகளில் மாணாக்கர் அடைவினை மதிப்பிட்டு அறிவதற்கு, தேசிய அளவிலான அடைவு ஆய்வு முதல் முறையாக தமிழகத்தில் 1312017 அன்று அனைத்து ஒன்றியங்களிலும் தெரிவு செய்யப்பட்ட பள்ளிகளில் 3, 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் உரிய தீர்வு காணும் பொருட்டு குறுகிய மற்றும் நீண்ட கால செயல்திட்டங்கள் / செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டு அடுத்த கல்வியாண்டில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. கற்றல் கற்பித்தல் முறையில் கலைத்திட்டத்தின் எதிர்பார்ப்புகளும், மாணாக்கர்களிடம் எதிர்பார்க்கும் கற்றல் விளைவுகளும் ஒருங்கிணைக்கப் பட்டுள்ளது. 2018-19 ஆம் கல்வியாண்டில் புதிய கலைத் திட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டுள்ள பாடநுால்கள் அறிமுகப்படுத்தப்பட்டவுடன்

ஆசிரியர்களுக்குத் தேவையான உள்ளீடுகள் வழங்கப்படவுள்ளது. சர்வதேச அளவில் மாணாக்கர்களை மதிப்பிடுவதற்கான திட்டத்தில் பங்கு பெறுவதற்குத் தேவையான கூடுதல் உள்ளீடுகளை மாணாக்கர்களுக்கு வழங்குவதற்கு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

சமூக பங்கேற்பு நிகழ்ச்சிகள்

பள்ளி மேலாண்மைக்குழு

கல்வி ஆளுமையை அடித்தளம் வரை பரவலாக்க சமுதாய பங்கேற்பு ஒரு முக்கிய கூறாக கருதப்படுகிறது. குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன் படி குழந்தைகளுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளைப் பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளானது பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் உள்ளூர் நிர்வாகத்தைச் சார்ந்தே அமையும். தற்பொழுது அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 42,167 பள்ளி மேலாண்மைக் குழு செயல்பட்டு வருகின்றது. இக்குழுவின் முதன்மை நோக்கம் பள்ளி வளர்ச்சித் திட்டங்களை உருவாக்கவும், பள்ளிக் கட்டமைப்பு வசதி ஏற்படுத்தவும், மாணாக்கரின் கற்றலை மேம்படுத்தவும் பள்ளிக்கும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் உறுதுணையாக இருந்து பள்ளியை குழந்தைகளுக்கான இலவசமற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009க்கு உட்பட்ட பள்ளியாக மாற்றுவதே ஆகும்.

2018-19 ஆம் கல்வியாண்டில் ஒவ்வொரு பள்ளியிலும் பெற்றோர் - ஆசிரியர். மாணாக்கர் கூட்டத்தினை ஒரு குறிப்பிட்ட நாளில் ஏற்பாடு செய்து மாணாக்கர்களின் கல்வி மற்றும் கல்விசார் அடைவுத்திறன் குறித்துத் தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படும். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 இன் கீழ் மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள்,

அதை உறுதி செய்ய வேண்டிய பள்ளி மேலாண்மைக் குழுக்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் உள்பட அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மாணாக்கர்சேர்க்கை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

அரசுப் பள்ளிகளில் மாணாக்கர்கள் சேர்க்கையை அதிகரிக்க 2017 ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை தமிழகத்தில் உள்ள 413 வட்டாரங்களிலும் மாணாக்கர் சேர்க்கைப் பேரணி, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்தல் போன்றவை நடைபெற்றன. மேலும் வாகனங்கள் மூலமாகவும், விளம்பரப் பலகைகள் வைத்தும், பதாகைகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தும் பெற்றோர்கள் மற்றும் மாணாக்கர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்காக 2017-18 ஆம் கல்வி ஆண்டில் ரூ.33.04இலட்சம் செலவிடப்பட்டுள்ளது.


விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

பள்ளிமாணாக்கர்களுக்கான போட்டிகள்

2017-18 ஆம் கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009இன் உள்ளார்ந்த நோக்கங்களைப் புரிந்து கொள்வதற்கும், பெண்கல்வியின் முக்கியத்துவம், சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம் ஆகியவை பற்றிய விழிப்புணர்வை மாணாக்கர்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும் 32,004 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ரூ.89.73 இலட்சம் செலவில் நடத்தப்பட்டன.

போட்டிகள்

சுவர் சித்திரங்கள்

பள்ளி வளாகத்தைக் கண்ணைக் கவரும் வகையிலும், அறிவார்ந்த வகையிலும் மாற்றுவதற்காகவும் 2017-18ஆம் கல்வியாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஒன்றியத்திலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட 2,184 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கற்றலை வலுப்படுத்தும் வண்ணமயமான சுவர் சித்திரங்கள் மற்றும் ஆங்கில உச்சரிப்பு ஒலிகளைக் கற்றுக் கொள்வதற்கு உதவும் எழுத்துருக்கள் வகுப்பறைகளின் உட்புறம் ரூ.3.28 கோடி செலவில் வரையப்பட்டுள்ளன.

சுவர் சித்திரங்கள்

அறிவியல் கண்காட்சி

மாணாக்கர்களிடையே அறிவியல் மனப் பான்மையை ஏற்படுத்தவும், இளம் விஞ்ஞானிகளின் திறன்களை வெளிக் கொணரவும், அன்றாட வாழ்வியல் நிகழ்வுகளுடன் அறிவியல் பாடக்கருத்துகளை ஒப்பிட்டு அறியும் வகையில் அறிவியல் கண்காட்சி 2016-17 ஆம் ஆண்டு முதல் குறுவள மைய அளவில் நடத்தப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டு நிலையான முன்னேற்றத்திற்கான புதுமைக் கண்டுபிடிப்புகள்” எனும் தலைப்பின் கீழ் ரூ.558.40 இலட்சம் செலவில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. முதல் மூன்று சிறந்த கண்டுபிடிப்புகளுக்கான இளம் விஞ்ஞானிகளுக்குப் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்து விளங்கிய பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது.


அறிவியல் கண்காட்சி பரிசு பெற்றவர்

தற்காப்புப்பயிற்சி

2017-18 ஆம் ஆண்டில்7 மற்றும் 8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 2,000 மாணவிகள் வீதம் 60,000 மாணவிகளுக்கு ரூ.180.00 இலட்சம் செலவில் தற்காப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பாளிஆண்டு விழா

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 7,295 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2017-18 ஆம் ஆண்டில் ரூ.5.6 கோடி செலவில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டதுபள்ளி ஆண்டுவிழா

கல்வி மேலாண்மைத் தகவல் முறைமை

கல்வி மேலாண்மைத் தகவல் முறைமையானது ஆசிரியர்கள், மாணாக்கர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் பற்றிய முழுத்தகவல்களை உள்ளடக்கியது. தரமான கல்வியை மேம்படுத்தவும் கல்வி தொடர்பான முக்கிய கொள்கைச் செயல்பாட்டில் பங்கு வகிக்கும் அனைவருக்கும் இம்முறைமை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. EMIS மற்றும் UDISE இரண்டையும் ஒருங்கிணைத்து மத்திய மனிதவளத் துறை நிர்வகிப்பதால் மாநிலங்களுக்கான ஆண்டுத் திட்டங்களைத் திட்டமிட மனிதவள மேம்பாட்டுத் துறைக்கு இத்தகவல் தொகுப்பு உதவியாக உள்ளது.

தகவல் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்ப வழிக்கல்வி

கணினிவழிக் கல்வி

தற்போதைய தகவல் தொடர்பு யுகத்தில், கணினியைக் கையாளும் அடிப்படைக் கல்வியானது மாணாக்கர்கள் கணினி சார்ந்த அறிவு பெற உதவுகிறது.


கணினிவழிக் கல்வி

ஆசிரியர்களுக்கான தகவல் மற்றும் தொலைத் தொடர்புத்தொழில்நுட்ப பயிற்சி

ஆசிரியர்களுக்கு கணினியைக் கையாளுவதற்கான பயிற்சி தொடர்ச்சியாக வழங்கப்படுகிறது. கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளிலும், காட்சி-கேள்வி மற்றும் எண்ணியல் தொடர்பான பாடச் செயல்பாடுகளிலும் கணினியைப் பயன்படுத்துவதற்கு உரிய பயிற்சியும் வழங்கப்படுகிறது. “மைக்ரோ சாப்ட்” நிறுவனத்துடன் இணைந்து 500 முதன்மைக் கருத்தாளர்களுக்கு நுணுக்கமான பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் நுட்ப பயிற்சி

மாணாக்கர்களுக்கான கணினித் தொழில்நுட்ப மண்றபோட்டிகள்

2017-18ஆம் ஆண்டின் தகவல் தொழில் நுட்பத்தினை மிகச் சரியான முறையில் பயன்படுத்துதலை மேம்படுத்திடும் வகையில் கணினித் தொழில்நுட்பமன்றம், நடுநிலைப் பிரிவு உள்ள பள்ளிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு "தகவல் தொழில் நுட்பத்தின் ஒருங்கிணைந்த பயன்” எனும் தலைப்பின் கீழ் ரூ.54.36 இலட்சம் செலவில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணாக்கர்களுக்கு பரிசுத் தொகை, சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டுள்ளன.

.

சிறந்த மாணவருக்கான பரிசு

தேசிய அளவிலான ஆசிரியர்தளம்

தேசிய அளவிலான ஆசிரியர் தளம், கற்றல் கற்பித்தலுக்குரிய ஆதார வளங்களின் முழுமையான தொகுப்பாக அமையும். இத்தளம் ஆசிரியர், மாணாக்கர் மட்டுமின்றி பெற்றோரும் கட்டணம் ஏதுமின்றிப் பயன்படுத்தும் விதத்தில் அமைக்கப்படும். ஆசிரியர்கள் தங்கள் தொழில்சார் வளங்களை உருவாக்கி வெளிப்படுத்தவும், பிற ஆசிரியர்களின் கற்பித்தல் உத்திகள் மற்றும் செயல்திட்டங்களை அறிந்து செயல்படவும் உதவியாக இருக்கும். ஆசிரியர்களுக்குப் பயன்படும் இத்தளம் தலைசிறந்த ஆதார வளங்களைக் கொண்டதாகவும் மதிப்பீட்டிற்கு வழிவகுக்கும் தளமாகவும் அமையும். இத்தளம் கலைத்திட்டம் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கியுள்ளதால் ஆசிரியர்களுக்கு தேவையான தகவல்களைப் பெற முடியும். தரமான பணியிடைப் பயிற்சிகளை எந்நேரத்திலும் எவ்விடத்திலும் ஆசிரியர்களுக்கு வழங்குவதற்கு இத்தளம் துணை நிற்கும். மாணாக்கர்களின் கற்றல் அனுபவத்தை விரிவு செய்யவும் தரமான கல்வியை உறுதி செய்யவும் இத்தளம் பயன்படுவதுடன் மாணாக்கர்களே நேரடியாக இத்தளத்தினைப் பயன்படுத்தவும் இயலும். இத்தளம் கல்வித் தரத்தை மேம்படுத்திட முழுமையாக இணைக்கப்படும்.

கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கல்வியில் பின் தங்கிய 44 ஒன்றியங்களில் 61 கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பள்ளிகள் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளிசெல்லா பெண் குழந்தைகள் கல்வி பெறுவதற்காக உண்டு உறைவிடப்பள்ளிகளாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. பெண் குழந்தைகளுக்குத் தரமான கல்வி வழங்கத் தகுதியான பயிற்சி பெற்றுள்ள 329 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இம்மையங்களில் தங்கிப்பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.100/- உதவித்தொகை வழங்கப்படுவதுடன் குழுக்காப்பீட்டுத் திட்டமும் செய்து தரப்பட்டுள்ளது.

பள்ளிகள் மற்றும் சிறப்பு பயிற்சி மையங்களில் மாணாக்கர்சேர்க்கை

தமிழகத்தில் 2017-18 ஆம் ஆண்டில் 1,36,134 சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் கண்டறியப்பட்டு, அவர்களில் 127,864 குழந்தைகளுக்கு பள்ளிகளிலும் மற்றும் 8,270 குழந்தைகளுக்கு வீட்டிற்குச் சென்றும் கல்வி வழங்கப்பட்டது. 6 முதல் 18 வயது வரையிலான 8,162 குழந்தைகளுக்கு 427 பள்ளி ஆயத்த மையங்களில், சிறப்பு பயிற்சி மற்றும் அவர்களது குறைபாடுகளுக்கேற்ப சிகிச்சை அளிக்கப்படுகின்றன. சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டது. 2017-18 ஆம் ஆண்டில் சென்னையிலுள்ள மாநில ஆதார வள மையத்தில் 43 சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்குச் சிறப்புக் கல்வியும் அவர்களது குறைபாடுகளுக்கேற்ப சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

தொடக்க நிலை பயிற்சி மையங்கள்

பிறந்தது முதல்6வயது வரையிலான சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்காகத் தமிழகம் முழுவதும் 85 தொடக்கநிலை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 2017-18 இல் மட்டும் 1,467 சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகள் சிறப்புக் கல்வியும் மற்றும் குறைபாடுகளுக்கேற்ப சிகிச்சையும் பெற்று பயனடைந்துள்ளனர்.

பள்ளிசெல்லாக் குழந்தைகள்

பள்ளி செல்லாக் குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகளினால் கடந்த 7 ஆண்டுகளில் பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளது. 2011-12 ஆம் ஆண்டில் 63,178 என கண்டறியப்பட்ட பள்ளி செல்லாக் குழந்தைகளின் எண்ணிக்கை 2017-18 ஆம் ஆண்டில் 36,930 ஆகக் குறைந்துள்ளது.

இராமநாதபுரம், திருவாடணைகடற்கரை பகுதியில் கணக்கெடுப்பு

கள ஆய்வு செய்து கண்டறியப்பட்ட 36,930 குழந்தைகளில் 35,537 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். சிறப்புப் பயிற்சி மையங்களில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லாக் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பயிற்சி மையத்தில் முறைப்படுத்தப்பட்ட மாணாக்கர்களைத் தக்கவைக்க உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது. 2017-18 ஆம் ஆண்டில் 5,332 மாணாக்கர்கள் இச்சிறப்பு பயிற்சி மையங்களில் பயின்று 8 ஆம் வகுப்பை நிறைவு செய்துள்ளனர்.


உத்திரமேரூரில் கற்றல் செயல்பாடுகள்

புலம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி

2017-18 ஆம் ஆண்டில் மாநிலத்திற்கு உள்ளும், மாநிலத்திற்கு வெளியிலும் 4,178 புலம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகள் கண்டறியப்பட்டு அதில் 4,103 மாணாக்கர்கள் அவர்களின் வயதுக்கேற்ற வகுப்புகளில் பயிலும் வகையில் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலத்திற்குள் புலம் பெயர்ந்த 2,285 மாணாக்கர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு தெலுங்கு, இந்தி, வங்காளம் மற்றும் ஒடியா மொழிகளைச் சார்ந்த 100 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்களது தாய்மொழியிலேயே பாடப்புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. புலம்பெயரும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் சில மாதங்கள் பணிபுரிந்து மீண்டும் அவரது சொந்த இருப்பிடத்திற்குச் செல்பவர்கள் ஆவர். இவ்வாறு புலம்பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு இரு மொழிகளில் மாற்றுச் சான்றிதழ்கள் வழங்கப்படுவதனால், அவர்கள் எவ்விடத்திலும் எந்தத் தடையுமின்றி தொடர்ந்து கல்வி கற்றிட முடியும்.


புலம் பெயரும் தொழிலாளர்களின் குழந்தைகள்

புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்காக இதுவரை ரூ.85 இலட்சம் நிதி செலவிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வியை ஒருங்கிணைத்தல்

மத்திய அரசு அனைவருக்கும் கல்வி இயக்கம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் மற்றும் ஆசிரியர் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் (Samagra Shiksha Abhiyan) என ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி இயக்கமானது

14 வயது வரை உள்ள குழந்தைகள் அனைவருக்கும் தரமான கல்வியை வழங்கும் நோக்குடன் செயல்பட்டு வருகிறது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வியானது 14-16 வயதுடைய 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தரமான, எளிதாக அணுகும் முறையில் இடைநிலைக் கல்வி கிடைத்திட உறுதுணை செய்கிறது. இவ்விரு இயக்கங்களின் கல்வி வளங்களும், முயற்சிகளும் இரட்டிப்பு பணியாக அமைந்துள்ளது. எனவே, இவ்விரு நிர்வாக கட்டமைப்புகளை இணைப்பதன் மூலம் மாறி வரும் புதிய தொழில்நுட்பக் கல்வியை முழுமையாகப் பயன்படுத்தி, குறிக்கோளுடன் எழுச்சி மிக்க செயல்பாட்டுடன் தரமான கல்வியை வழங்குதலை உறுதி செய்ய முடியும். மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் ஆசிரியர் கல்விக்கான உட்கூறுகள் செயல்படுத்தப்படும்.

தமிழ்நாடு புத்தாக்க முயற்சிகள்

பயன்பாட்டில் உள்ள பள்ளிக் கழிப்பறைகளை குழந்தைகள் எளிமையாக அணுகும் வகையில் மாற்றியமைத்தல்

189 பள்ளிகளில் தற்போது பயன்பாட்டில் உள்ள கழிப்பறைகளை குழந்தைகள்நேய கழிப்பறைகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ப, கைகளுக்கு எட்டும் வகையில் கைப்பிடியுடன் கூடிய கதவு, மாணாக்கர்களைக் கவரும் வண்ணச் சுவர்ச் சித்திரங்கள், கழிப்பறையைச் சுற்றியுள்ள வெளிப்புறங்களில் தோட்டம் அமைத்தல், கழிப்பறைகளைப் பயன்படுத்திய பின்னர் கை கழுவுவதற்கான குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற வகையிலான தொட்டி, கண்ணாடி, சிறிய துண்டு, சோப்பு மற்றும் குவளை போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக ரூ.59.00 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பள்ளிகளில் கதை மையங்கள் மூலம் நற்பண்புகளை வலுப்படுத்துதல்

மாணாக்கர்களிடத்தில் கதைகள் கூறுதல் மற்றும் கதைகள் கேட்டல் மூலம் நற்பண்புகளை வலுப்படுத்துவதற்கு முன்னோட்டமாக 160 பள்ளிகளில் ரூ121.75 இலட்சம் செலவில் கதை மையங்கள் அமைக்கப்படவுள்ளன. மேலும் கதை கூறும் முறைகளும், உத்திகளும் அடங்கிய பயிற்சி 555 ஆசிரியர்களுக்கு விரைவில் வழங்கப்பட உள்ளது.

புத்தாக்க முயற்சிகள் 2017 - 18

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 3,000 திறன்வகுப்பறைகள் அமைத்தல்

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ரூ.60.00 கோடி செலவில் திறன் வகுப்பறைகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இவ்வகுப்பறைகள் அமைப்பதற்கு தேவையான பணிகள் நடைபெற்று வருகின்றது.

நாளிதழ் மற்றும் சிறுவர் மலர்வழங்குதல்

மாணாக்கர்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ளவும், மொழித்திறனை வளப்படுத்தவும் அரசுப் பள்ளிகளில் நாளிதழ் மற்றும் சிறுவர் மலர்கள் விநியோகிக்கும் திட்டம் 2017-18 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 31,322 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் பயனடைந்து வருகின்றனர்.

திறனறி தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி

அரசு பள்ளிகளில், தமிழ்நாடு ஊரக மாணவர்கள் திறனறி தேர்வு (Tamil Nadu Rural Students Talent Search Examination), தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு (National Means - Cum - Merit Scholarship Examination), தேசிய அளவிலான திறனறித் தேர்வு (National Talent Search Examination), மத்திய அரசின் இளம் அறிவியல் அறிஞர் ஊக்கத் தொகை திட்டம் (Kishore Vaigyanik Protsa han Yojana) ஆகிய திறனறித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு சிறப்புப் பயிற்சி இக்கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது. ரூ.2.93 கோடி செலவில் 7,219 நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 3,75 இலட்சம் மாணாக்கர்கள் இதன் மூலம் பயன்பெறுவர்.

அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சி

மாணாக்கர்களின் படித்தல் திறனை மேம்படுத்தவும், பாடத்திட்டம் தாண்டிய பொது அறிவுத் தேடலை ஊக்குவிப்பதற்கும் புதிய புத்தக உலகத்திற்கு அவர்களை அறிமுகப்படுத்துவதற்காகவும் நடமாடும் புத்தகக் கண்காட்சி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதன் முறையாகப் புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் முழு ஒத்துழைப்புடன் சுழற்சி முறையில் அரசுப் பள்ளிகளில் நடமாடும் புத்தகக் கண்காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆதாரம் : தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை

2.16666666667
கருத்தைச் சேர்

(மேற்கண்ட தகவலில் உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள்/ஆலோசனைகள் இருந்தால், இங்கே பதிவு செய்யவும்)

Enter the word
நெவிகடிஒன்
Back to top